
“சிவதாண்டவ துதி” இலங்கேஸ்வரன் இராவணனால் இயற்றப்பட்டது. இராவணன் அசுரர் குலத்தில் பிறந்ததால் அசுர குணங்கள் நிரம்பியிருந்தாலும் அறிவும், ஆற்றலும், வீரமும் ஒருங்கே பெற்றவன். சிறந்த சிவ பக்தன்.
ஒருமுறை இராவணன், சிவன் உறையும் கயிலாய மலையைப் பெயர்த்து இலங்கைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது இச்செயல் உண்மையான ஒரு பக்தனுக்குரிய செயலாக கருதப்படாததால் சிவன் இராவணனுக்குப் பாடம் கற்பிக்க தனது காலால் கயிலாய மலையை அழுத்த, இராவணனின் கைகள் அந்த பாரத்தால் நசுங்க, அந்த வலியைப் பொறுக்கமாட்டாமல் தன்னை மன்னிக்கக்கோரி அவன் சிவனின் நாமங்கள் பலவற்றை உரக்க உச்சரிக்கிறான். அது “சிவ தாண்டவ துதி” என வழங்கி துதிக்கப்படுகிறது.

இலங்கேஸ்வரன் இராவணன் இயற்றிய “சிவ தாண்டவ துதி”
“ஓம் கணேசாய நமஹ”
1
அடர்ந்த காடு போன்ற சடை
அதிலிருந்து பொங்கும் நீர்
அந்த நீரால் நனையும் அவன் திருக்கழுத்தில்
ராஜநாகம் மாலைபோல் சுழன்றாட
“டம” “டம” என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி
திருக்கூத்தாடும் சிவன்
அவன் அருள் மழை எங்கும் பொழிக!
2
தளும்பும் புனித கங்கையின் அலைகள்
வரிவரியாய் அலங்கரிக்கும் தலையையும்
திருநெற்றியில் கனல் வீசும் தீயையும்
இளம்பிறையையும்
அணிகலன்களாக அணிந்துள்ள
சிவனை நான் போற்றுகின்றேன்!
3
இப்பரந்த உலக உயிர்களெல்லாம் வாழ
திருவுளம் கொண்டவன்
மலையரசன் மகளுடன் மகிழ்ந்திருப்பவன்
தன் கடைக்கண் பார்வையால் துன்பம் தீர்ப்பவன்
திசைகளை ஆடையாய் அணிந்து திரிபவன்
அந்த சிவனைக்கண்டு உள்ளம் மகிழ்கிறேன்!
4
வாழ்க்கைக்கு ஆதாரமானவன்
கொடி போன்ற நாகத்தின் மாணிக்கம்
எங்கும் ஒளி வீசத் திகழ்பவன்
பல திசைகளும் நிறைந்து
மாதரின் முகங்களில் மாணிக்கக் கதிர்கள்
கோலமிடவும்
மத யானையின் தோல் போர்த்து
அருளொளி வீச அமர்ந்திருக்கும் சிவனைக்கண்டு
என் உள்ளம் ஆனந்தக்கூத்தாடுகிறது!
5
சகோரப்பறவையின் தோழனான
நிலவைத் தலையில் அணிந்தவன்
செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவன்
அரி இந்திராதி தேவர்களின்
தலைகளிலிருந்து விழுந்த மகரந்தத்தால்
சாம்பல் நிறமாகிய திருவடிகளை உடையவன்
அவன் எனக்கு எல்லா வளங்களும் நல்கட்டும்!
6
பிறை நிலா சூடிய அழகன்
காமனை எரித்த நெற்றிக்கண்ணன்
தேவர்கள் துதிக்கும் ஈசன்
அவன் திருச்சடை பணிந்து
எல்லா நலன்களும் பெறுவோம்!
7
முக்கண்ணன்
நெற்றிக்கண் நெருப்பால் காமனை எரித்தவன்
மலையரசன் மகளின் மார்பில்
சந்தனக்குழம்பால் கோலமிட்டு மகிழும்
அந்த ஈசனைப் பணிகின்றேன்!
8
உலகெலாம் தாங்குபவன்
இளைய நிலா அணிந்த அழகன்
பொன்னார் மேனியன்
கங்கையை அணிந்த சடையன்
மேகங்கள் நிறைந்த இரவின்
கருநிறம் கொண்ட கழுத்தன்
அந்த ஈசன் எனக்கு மங்களம் அருள்க!
9
மலர்ந்த நீலத் தாமரைகள் போல் தோன்றும்
நீலகண்டன்
மன்மதனை எரித்தவன்
முப்புரம் எரித்தவன்
பற்றுக்களை அறுப்பவன்
தக்கனின் வேள்வியை அழித்தவன்
அந்தகனை வதைத்தவன்
கயாசுரனை அழித்தவன்
எமனை உதைத்தவன்
அந்த ஈசனைப் பணிகின்றேன்!
10
வண்டுகள் மொய்க்கும்
கடம்ப மலர்களைச் சூடியவன்
மன்மதனையும் ,முப்புரத்தையும் எரித்தவன்
அந்தகனையும்,எமனையும்,
கயாசுரனையும் ஒழித்தவன்
அந்த ஈசனைப் பணிகின்றேன்!
11
“திமி” “திமி” என மிருதங்கம் ஒலிக்க
அந்த மங்கள இசைக்கேற்ப ஆடும் சிவன்
நெற்றிக்கண்ணில் நெருப்பைக் கொண்டவன்
தீ கக்கும் மூச்சைக்கொண்ட நாகம்
அவன் கழுத்தில் சீறத் திகழ்கின்றான்!
12
மக்களையும் மன்னனையும் நான்
சமமாக எண்ணுவதெப்போ?
வெற்று விழிகளையும்
தாமரைக் கண்களையும் நான்
சமமாகப் பார்ப்பதெப்போ?
நண்பனையும் எதிரியையும் நான்
ஒன்றாக எண்ணுவதெப்போ?
மதிப்பு மிக்க மணியும் மண்ணும்
ஒன்றெனச் சொல்வதெப்போ ?
மாலையையும் பாம்பையும்
ஒன்றென அணிவதெப்போ?
சொல் என் இறைவா!
13
கங்கைக்கரை குகையில்
நான் வாழ்வதெப்போ?
எந்நேரமும் தலைமேல் கை தூக்கி
என் கொடுங்குணங்கள் கரைந்தோட
உன் நாமங்கள் உச்சரித்து
நான் மகிழ்வதெப்போ?
நெற்றிக்கண்ணனே சொல்வாய்!
14
மேலான இத்துதியைப் பாடுவோர்
ஞானகுரு சிவனின் அருளும்
அவனது புனிதமும் பெறுவர்
அறியாமை விலகி
சங்கரன் அருள்பெற
இதைவிட எளிதான வழியொன்றில்லை!
15
தினமும் மாலையில்
பிரதோஷ வேளையில்
பூசையின் முடிவில்
இராவணன் பாடிய இத் துதியைப் பாடி
ஈசனைத் தியானிப்போர்
திருமகளும் நாற்படையும் சூழ
வளம் பெற்று விளங்குவர்!
திருச்சிற்றம்பலம்
