நீ என்ன செய்துவிட்டாய்..
நான் ஏன் மயங்குகிறேன்..!
இப்படி ஆரம்பிக்கும் பழைய திரைப்பாடலொன்று நேற்றிரவு ஞாபகத்துக்கு வந்தது! உலகக்கோப்பை செமி ஃபைனலில் நமது கிரிக்கெட் வீராங்கனைகள் நேற்று ஒரே போடாகப் போட்டு எதிரணியைச் சாய்த்ததே காரணம். சாதாரண கிரிக்கெட் வெற்றியா இது!
நேற்றிரவு (30-10-25) திருச்சியின் ரெட் ஃபாக்ஸ் ஹோட்டல் ரூமில் அமர்ந்து டிவியில் மகளிர் உலகக்கோப்பைக்கான இந்திய-ஆஸ்திரேலியா செமிஃபைனல் மேட்ச்சைப் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர, நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோற்றுப்போகும் என்று ஒருபோதும் நம்பவில்லை. இந்தியா கொஞ்சம் போராடும். கடைசியில் தோற்று வெளியேறும். நாமும் கொஞ்சம் பார்த்துவைப்போம் என்றுதான் நினைத்து டிவி முன் அமர்ந்திருந்தேன்.
ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி, 339 என்கிற ஹிமாலய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. ஃபீபி லிட்ச்ஃபீல்ட் (Phoebe Litchfield) 119, எலிஸ் பெர்ரி (Elyse Perry) 77, ஆஷ்லே கார்ட்னர்(Ashley Gardner) 63 முக்கிய ஸ்கோர்கள். இலக்கு நோக்கி, இந்தியா தன் பேட்டிங்கைத் தொடங்கியதும், ஸ்டார் பேட்டர் ஸ்ம்ருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் ஆஸ்திரேலிய சீற்றத்தில் ஆரம்பத்திலேயே விழுந்துவிட்டனர். ஜெமிமா ரோட்ரிக்ஸும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் இறங்கி, எதிரணியின்பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ஆடினார்கள். ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். சரி, இந்த ரெண்டுபேரும் 50-60 எடுத்து அவுட் ஆகிவிடுவார்கள். அடுத்து, ரிச்சா கோஷ் கொஞ்சம் வானவேடிக்கைக் காண்பித்து ரசிகர்களை அநியாயத்துக்கு உசுப்பேற்றுவார். அவரும் தன் கணக்குக்கு நாற்பதோ ஐம்பதோ எடுத்துவிட்டு ஓடிவிடுவார். மற்றவர்களால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாது. எப்படியும் 339 என்கிற இலக்கெல்லாம் இந்திய மகளிருக்கு எட்டாக் கனிதான். 70-80 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்கும் என்கிற அனுமானத்தோடும், அவநம்பிக்கையோடும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
கதை நேற்றிரவு வித்தியாசமாக விரிந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் 89 ரன்னில் வீழ்ந்துவிட்டார். ஆஸ்திரேலிய முகங்களில் மினுமினுப்பு! ஆனால் ஜெமிமா மசியவில்லை. அடுத்துவந்த ரிச்சா கோஷுடன் (Richa Ghosh) ஆட்டத்தின் போக்கு குறித்து அடிக்கடி பேசிக்கொண்டும், ரன்களை வேகவேகமாக ஏற்றியவாறும் பரபரப்பு காட்டினார். தடாலென்று இரண்டு சிக்ஸர்களைத் தூக்கிய ரிச்சா, ஆஸ்திரேலிய ரத்த அழுத்தத்தை ஏற்றிவிடுவார் எனத் தோன்றியது. இருவரின் ஆட்டமும் இந்திய ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்றது. வியர்க்க விறுவிறுக்க போராடிக்கொண்டிருந்த ஜெமிமா நைஸாக தன் சதத்தையும் எட்டிவிட்டார். தன் முதல் உலகக்கோப்பை சதத்தைக் கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை. தரப்பட்ட பணியை முடித்துவிட்டுத்தான் மற்றதெல்லாம் என மனம் சொல்லியிருக்கும். ரிச்சாவுடன் வேகமாக ஓடி, ஓடி சிங்கிள்கள், அவ்வப்போது பௌண்டரி என ஒரே முனைப்பிலிருந்தார் ஜெமி.

(படம்) ஜெமிமா ரோட்ரிக்ஸ் !
இந்த நேரத்தில் பாய்ண்ட் திசையில் ஒரு பந்தை தூக்கியடிக்க முற்பட்ட ரிச்சாவை கேட்ச் பிடித்து ஆஸ்திரேலியர்கள் வெளியேற்றிவிட்டார்கள். தங்கள் முதுகில் தாங்களே தட்டிக்கொண்டு ரிச்சா என்கிற ரூபத்தில் சூழ்ந்திருந்த ஆபத்துமேகம் விலகிவிட்டது எனக் கொஞ்சம் கொண்டாடினார்கள். அடுத்தாற்போல் இறங்கிய அமன்ஜோத் கௌர் நெருக்கடி நேரத்தில் ரிச்சாவைப்போல் அதிரடி காட்டி ஆடக்கூடியவரல்ல. ஜெமிமாவின் முகத்தில் கவலையின் இருள். ஜெமிமா வெகுவாகக் களைத்திருக்கிறார். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழல். அமன்ஜோத் எந்த நேரத்திலும் அவுட்டாகலாம். அடுத்து ஆட வரவிருக்கும் வீராங்கனைகளுக்கு மட்டையைப் பிடித்து சரியாக நிற்கக்கூட முடியாது. ‘இந்தியாவின் கதை ..ஐயோ பாவம்..இன்னும் சில ஓவர்களில் முடிந்துவிடும்’ என்ற இறுமாப்பில் வலிமையான ஆஸ்திரேலிய அணி ஆவேசமாகப் பந்து வீசியும், ஃபீல்டிங் செய்தவாறும் இருந்தது.
ஏற்கனவே ஒல்லிக்குச்சி. தன் மீது அணியினருக்கும், ரசிகர்களுக்கும் எகிறியிருந்த எதிர்பார்ப்பின் அழுத்தம். வியர்வை, புழுக்கம்வேறு என எல்லாமாகக் கூட்டணிபோட்டு ஜெமிமாவைப் பாதியாக உருக்கிவிட்டிருந்தது. ஆனால் அந்த இளம் வீராங்கனை அசரவில்லை. அவருக்குள் ஏதோ ஒரு பூதம் புகுந்துகொண்டு ஆட்டிவைப்பதுபோல் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெமி. இவரும் அமன்ஜோத்தும் சிங்கிள்களுக்கிடையில் எதிர்பாரா பௌண்டரிகளையும் கொளுத்திப்போட்டனர். பயக் களை ஆஸ்திரேலிய முகங்களில் தெரிய ஆரம்பித்தது. 49- ஆவது ஓவரிலேயே திறன் காட்டிய ஜெமிமாவும், சமயோஜிதமாகத் துணையாட்டம் ஆடிய அமன்ஜோத் கௌரும் இலக்கை வெற்றிகரமாகக் கடந்தனர். இந்தியாவை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரவேசிக்கவைத்தனர். இரண்டாவது ஓவரிலேயே ஆடவந்திருந்த ஜெமிமா 127 ரன் எடுத்து அவுட்டாகாது நின்றார். (ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 26 எடுத்தார். அமன்ஜோத் 8 பந்துகளில் 15 ரன்! பந்துவீச்சில், ஸ்ரீசரணியும், தீப்தி ஷர்மாவும் தலா 2 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.)
முக்கிய விக்கெட்டுகளை இந்தியா தடதடவென இழந்த இலையில், ஜெமிமா இன்று காண்பித்த. ஆட்ட சாதுர்யம், திறன், இலக்கை நோக்கிய விடாமுயற்சி, தனி ஒருவளாய் நின்று சாதித்துக் கொடுத்தது என எப்படி வேண்டுமானாலும் அவரது பங்களிப்பைப் புகழலாம் கிரிக்கெட் உலகம். தான் பாராட்டப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இண்டர்வியூவின்போது ஜெமிமா வெகுவாகக் கண்கலங்கித் தடுமாறுவதைப் பார்க்கையில், நமக்கே கண்களில் ஈரம் தட்டியதை உணர முடிந்தது.
ஞாயிறன்று நம்மை உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சந்திக்கத் தயாராயிருக்கிறது, இங்கிலாந்தை ஓட,ஓட விரட்டிவிட்ட தென்னாப்பிரிக்க அணி. இந்தியாவோ, தென்னாப்பிரிக்காவோ – எது வென்றாலும்- அதன் கையில் உலகக்கோப்பை சிக்குவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
ஹர்மன்ப்ரீத் கௌருக்கு அந்த யோகம் உண்டோ ..!
Scores:
Aus 338 all out
Ind 341/5




