வந்தது புதுசு.. என்றது மனசு!

2026 உள்ளே – நமதுள்ளே.. நுழைந்துவிட்டது. முகத்திலே ஒரு முறுவல் தெரிகிறதே! விஷமமான சிரிப்பா, வெள்ளைமனந்தான் வெளிப்படுகிறதா. போகப்போகத் தெரியும். இந்தப் பூவின் வாசம் புரியும்.. புரியும்…

இப்படித்தான் குதூகலமாக உள்ளே வந்தது 2025. என்ன ஒரு ஆட்டம்போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறது. எத்தனை அபத்தமான, ஆபத்தான போர்வெளிகளை அது காண்பித்து மிரட்டியது. எத்தனை, எத்தனை சிக்கல்களை, இடர்களை அது தெளித்துவிட்டு பயமுறுத்தியது, ஏற்கனவே களைத்துப்போயிருந்த மனித உலகத்தில். இப்படியெல்லாம் நிகழ்ந்திருந்தும்.. என்னேன்னவோ நல்லதுகளும், வெற்றிகளும், சாதனைகளும் கூடவே வெளிப்பட்டனதானே போன வருடத்தில்.

இந்த வருடம் என்பது போன ஆண்டின், மறைந்துவிட்டதுபோலத் தோன்றும் கால விள்ளலின் தொடர்ச்சிதான் என்பதை மறக்கலாகுமா? நேற்றும் முந்தாநாளும் நாம் அசால்ட்டாக விதைத்திருந்தவை, இப்போது முளை காட்டுகின்றனவே.. என்ன என்ன அவைகளிலிருந்து வரப்போகிறதோ.. எதெதையெல்லாம் விதையென ஊன்றிவைத்திருக்கிறோமோ ..ஆண்டவா ! விதை விதைத்தவன் வினையறுப்பான் என்பதெல்லாம் இந்தக் காலைவேளையில் உடனே ஞாபகத்துக்கு வரவேண்டும் என்று யார் கேட்டார்கள்..

சரி. வந்ததை வரவில் வைப்போம்.. சென்றதை செலவில் வைப்போம்.. இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்..நாகூர் ஹனீஃபாவின், டி எம் எஸ்-ன் குரல்களுந்தான்  கூடவே இனிமையாய்க் கேட்கிறது. நம் மனம் ஒன்னும் அவ்வளவு கெட்டுப்போயிடலையோ இன்னும்?

நம்ம நாடு அதிலும் நம்ம ராஜதானி.. டெல்லி எப்படி இருக்கிறது இன்று? இன்றா? இன்னொரு நாள் வந்துவிட்டதா என்பார்கள் டெல்லிவாசிகள். ஹேய்! இன்னொரு வருஷம் வந்திருச்சுப்பா என்றால் முழிப்பார்கள். மாசுமண்டலம், பனிப்படலத்திலிருந்து எல்லாம் வெளியே வந்தால்தானே ஏதாவது தெரிய வரும், 2025 போய்விட்டது என்பது ப்ரக்ஞையில் வரும் அவர்களுக்கு? என்ன செய்ய, அவர்கள் கர்மா அவர்களுக்கு!

இந்த உலகின் பெரும் நிலப்பரப்புகளை தற்போது ஆண்டுவரும் அதிமேதாவி அரசியல்வாதிகள் – ட்ரம்ப், புடின், ஸீ பெங்- போன்ற பிரஹஸ்பதிகளைத்தான் சொல்கிறேன் – கொஞ்சம்  சும்மா கிடப்பார்களா 2026-ல்? இல்லை, எதைத் தூக்கி எவன் மீது வீசலாம் என்று மனமலைவார்களா? வன்ம நெருப்பை இஷ்டம்போல் விசிறியடிப்பார்களா? வெனிஸூலாவின் மதுரோ, யுக்ரேனின் ஸெலன்ஸ்கியெல்லாம் என்ன ஆவார்கள்? ஆடுவார்களா இன்னும்? இல்லை, ஓடிவிடுவார்களா? ஈரானின் அயதொல்லா கமேனி? வண்டி புறப்பட்டுடும்போலத்தான் தெரிகிறது. வடகொரியாவின் கிம் ஜாங் உன்? அதுக்கென்ன, அதுமாட்டுக்கு ஏவுகணை மேல ஏவுகணையா ஏவிகிட்டு, ஜப்பானையும் தென்கொரியாவையும் பாத்து சிரிச்சிகிட்டு இருக்கும். தைவானில் சீனா கையை வைத்தால், எங்கள் ராணுவ சித்தாந்தத்தின்படி நாங்கள் அதை பாதுகாப்பு சவாலாக எதிர்கொள்ளவேண்டிவரும் என முழங்கி, சீன ஸி பெங்குக்கு எரிச்சலூட்டியிருக்கும் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஸனே தகேய்ச்சி, பேச்சோடு நின்றுவிடுவார்தானே… நமது அண்டைப்புறத்தில் முனீர் மாமாவும், (வங்கதேசத்து ஆட்சிக்கு வரப்போகும்) ரஹ்மானும் நரேந்திரனை மனதில் நினைத்து இறுகக் கட்டிப் பிடித்துக்கொள்வார்கள்.. நட்பை வெளிப்படுத்துவார்கள். அதற்கப்புறம் ?

எதற்கு இப்படியெல்லாம் ஆயிரம் கேள்விகள் ஜனவரி காலையில்? என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே… இதெல்லாம் நமக்கு நல்லாப் பழக்கப்பட்டதுதானே! இப்படிப் பாடிப் பாடி.. பார்த்திருப்போம், காலத்தைக் கவனித்திருப்போம்:

நூறுவகைப் பறவை வரும்.. கோடிவகைப் பூ மலரும்..

ஆடிவரும் அத்தனையும்.. ஆண்டவனின் பிள்ளையடா….

**