இதுகாறும் கைக்கெட்டாதிருந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டது. கடந்த ஓரிரு வாரங்களாக எதிர்பார்ப்புகளை எகிறவிட்டிருந்த இந்திய மகளிரின் இறுதி வெற்றியினால், பெருமையோ பெருமை நாட்டிற்கு. நாட்டிலும், அயல்நாடுகளிலும் உள்ள எண்ணற்ற இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் புகழ் போதையில் தள்…ளாடி…க்கொண்டிருக்கிறார்கள்!
நேற்று (02/11/25) நவி மும்பையில் நடந்த மகளிர் ஒரு-நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை(2025)-க்கான இறுதிப்போட்டியில், போராடிய தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. 2017-ல் நடந்த உலகக்கோப்பை ஃபைனலில் 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று, பெரும் வேதனை, மன அழுத்தத்திற்கு இந்தியா உள்ளானது நினைவில் நிற்கிறது. மேலும் எட்டுவருஷம் பிடித்திருக்கிறது, எட்டாக்கனியைக் கைப்பற்றுவதற்கு. Better late, than never !
நேற்றிரவு டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வொல்வார்ட், இந்தியாவை முதலில் பேட் செய்யச் சொன்னார் – கோப்பைக்கான இலக்கைத் துரத்தி வெல்வது தங்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில். காயத்தினால் விலகிவிட்ட ப்ரதிகா ராவலுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றிருக்கும் 21-வயது ஷெஃபாலி வர்மாவும், இந்திய மகளிர் கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான, துணைக் கேப்டன் ஸ்ம்ருதி மந்தனாவும் இந்திய இன்னிங்ஸைத் துவக்கினார்கள். இருவரும் நிதானமாக ஆரம்பித்து 104 ரன்கள் எனத் துவக்க பார்ட்னர்ஷிப் கொடுத்தது சிறப்பு. ஸ்ம்ருதி 45 ரன்னெடுத்திருக்கையில் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் க்ளோ ட்ரையோனால் (Chloe Tryon) வீழ்த்தப்பட்டார். அடுத்துவந்த ஜெமிமாவுடன் மட்டையைத் தொடர்ந்து சுழற்றினார் ஷெஃபாலி. தென்னாப்பிரிக்காவின் வேகம் மற்றும் சுழலை திறம்பட சந்தித்தார்கள் இருவரும். சதம் அடித்துவிடுவார்போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றிய நேரத்தில், திடீரென அயபோங்கா காகாவிடம் (Ayabonga Khaka)அகப்பட்டு அவுட்டாகிவிட்டார் ஷெஃபாலி. ஹர்மன்ப்ரீத் களத்தில் இறங்க, ஜெமிமாவுடன் கூட்டு சேர்ந்து கொஞ்சம் ரன் ஏற்றுவாரோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தனர். 223 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என 40-ஆவது ஓவரில் தடுமாறியது இந்தியா. ஸ்கோர் 300 ஐத் தாண்டினால்தான் தென்னாப்பிரிக்காவிற்கு அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். ஆல்ரவுண்டர்கள் தீப்தி ஷர்மாவும், அமன்ஜோத் கௌரும் களத்தில். அமன்ஜோத் அதிக நேரம் நிற்கும் மூடிலில்லை. போய்விட, ரிச்சா கோஷ் வந்து இறங்கினார். பௌண்டரிகள், சிக்ஸர்களும் வந்திறங்கின. தீப்தி 58, ரிச்சா 34 என விளாசியதால் இந்திய ஸ்கோர் இறுதியில் 298 ஐத் தொட்டது. கோப்பைக்காக தென்னாப்பிரிக்காவுக்கான இலக்கு 299 என நிர்ணயம். தென்னாப்பிரிக்கத் தரப்பில் அயபோங்கா காகா சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒரே விக்கெட்தான் எடுத்தார் என்றாலும், ரன் அதிகம் கொடுக்காமல் தன் 10 ஓவர் கோட்டாவைப் பூர்த்தி செய்தார், தென்னாப்பிரிக்காவின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர், வெள்ளைத்தலை கருப்பழகி நொன்குலுலேகோ மலாபா !


Ayabonga Khaka
இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுதும் சீராகவும், சிறப்பாகவும் ஒரு வீராங்கனை ஆடினார் எனச் சொல்லலாமெனில், அவர் தென்னாப்பிரிக்கக் கேப்டன் லாரா வொல்வார்ட்(Laura Wolvaardt) ஆவார். நேற்றிரவு இந்திய வேகத்தை முனை மழுங்கச் செய்தவரும் அவர்தான். வேகப்பந்துவீச்சாளர்களின் வேகாத பருப்பைக் கண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத், இந்திய ஸ்பின்னர்களை முழுசாக நம்பி செயல்பட்டார். தீப்தி, ஸ்ரீசரணி, ராதா யாதவ் ஆகியோரிடம் பந்து மாறி மாறிச் சென்றது. அவர்களும் இறுக்கமாகப் பந்துவீசி மெல்ல ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். இருந்தும் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் ரன் சேர்த்தல் ஒரு நேர்கோட்டில் செல்வதுபோல் தோன்றியது. ராதா ரன்களை அதிகமாகக் கொடுப்பதை கவனித்த ஹர்மன்ப்ரீத், தூரத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷெஃபாலியை அழைத்தார். ஷெஃபாலிக்கு இன்று நல்ல நாள் போல் தெரிகிறதே.. ஒருவேளை, தன் பார்ட்-டைம் ஸ்பின்னினால் விக்கெட் எடுத்துக்கொடுப்பாரோ.. என அவர் மனதில் தோன்றியதாம். போடும்மா.. நீயும் கொஞ்சம்..! – என்று பந்துவீசச் சொன்னார். ஆஃப் ஸ்பின் போட்டு, தன் இரண்டாவது பந்திலேயே தென்னாப்பிரிக்க மிடில் ஆர்டர் பேட்டர் ஸுனே லூஸை (Sune Luus) காட்&பௌல்ட் செய்துவிட்டார் ஷெஃபாலி.அட! போராடும் குணம்கொண்ட ஆல்ரவுண்டர் மரிஸான் காப்பையும் (Marizanne Kaap) அடுத்த ஓவரில் வீட்டுக்கு அனுப்பி, இந்தியாவின் அழுத்தத்தைக் குறைத்துவைத்தார்.
இப்படி ஒவ்வொன்றாக விக்கெட்டுகள் பறிபோக, பிரமாத ஆடிவந்த கேப்டன் வொல்வார்ட்டும் 101 ரன்னில் அவுட்டாக, தென்னாப்பிரிக்காவுக்கு மூச்சுவாங்கியது. தத்தளித்துத் தடுமாறி இறுதியில் 46-ஆவது ஓவரில் 246-க்கு ஆல் அவுட்டாகித் தோற்றது. இந்தியாவின் கைக்கு முதன்முறையாக உலகக்கோப்பை வந்து சேர்ந்தது. குதூகலம், கொண்டாட்டம், கொடியசைப்பு, வானவேடிக்கை எனத் தூள் பறந்தது நள்ளிரவுக்குப் பின், நவி மும்பையின் DY Patil மைதானத்தில்.

படத்தில்: மேல்வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து -ஸ்ரீசரணி , ஷெஃபாலி வர்மா, ரேணுகா சிங், ராதா யாதவ், ஸ்னேஹ் ரானா, கோப்பையும் கையுமாக ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்ம்ருதி மந்தனா, அருந்ததி ரெட்டி, உமா சேத்ரி, க்ராந்தி கௌட், அமன் ஜோத் கௌர்.
மண்டிபோட்டு உட்கார்ந்தவாறு: இடமிருந்து-ரிச்சா கோஷ், (வாயை ஒரேயடியாகத் திறந்திருக்கும்) ஹர்லீன் தியோல், (தள்ளுவண்டியில் -காயம் காரணமாக) ப்ரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
**
இறுதிப்போட்டியின் நாயகியாக இந்தியாவின் ஷெஃபாலி வர்மா (87 ரன்கள், 2 விக்கெட்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப்போட்டித் தொடரின் நாயகியாக ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா (இறுதிப் போட்டியில் 58 ரன்கள், 5 விக்கெட்டுகள்) தேர்வானார்.
இறுதி ஸ்கோர்: இந்தியா 298/7. தென்னாப்பிரிக்கா: 246
கோப்பைக்கான சிறப்பாட்டத்தைக் கண்டுகளிக்க என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, ஐசிசி சேர்மன் ஜே ஷா, மும்பை இண்டியன்ஸ் அணி உரிமையாளர் நீத்தா அம்பானி ஆகிய பிரமுகர்களும் வந்திருந்தனர். (பாலிவுட் அசடுகள் யாரையும் டிவி காண்பித்ததாக நினைவில்லை!) ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு உறுப்பினருடன் கைகுலுக்கி கோப்பைக்காக உற்சாகப்படுத்தியிருந்தார் டெண்டுல்கர்.
1973-ல் மகளிர் கிரிக்கெட்டுக்கான முதல் உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இங்கிலாந்து அதை வென்றது. இதுவரை உலகக்கோப்பைகளை வென்ற அணிகள்: ஆஸ்திரேலியா 7 தடவை, இங்கிலாந்து 4, நியூஸிலாந்து 1. இப்போது இந்த அரிய, பெரிய பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது. “இது ஆரம்பம்தான். இனிமேல்தான் இருக்கு…!” என்று ஆஸ்திரேலியா போன்ற சவால்விடும் அணிகளை எச்சரித்திருக்கிறார் இந்திய அணியின் வெற்றித் தலைவி ஹர்மன்ப்ரீத் கௌர். வாழ்த்துக்கள் ஹீரோயின் !
கிரிக்கெட் போர்டிலிருந்து சிறப்புப் பரிசுகள் உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு வழங்கப்படலாம். பெருந்தொழில் பிரமுகர்களிடமிருந்தும் உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரலாமோ? இரண்டு நாட்கள் முன்பு குஜராத்திலிருந்து ஒரு பிரபல நகை/வைர வியாபாரி “இந்தியப் பெண்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்டால்….” என்று ஏதோ சொன்னதைப் படித்ததாகவும் ஞாபகம்..!
**
