Saturday, May 17, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 5 2025) – 11

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May

()()()

நண்பர் மூலம் அறிமுகமாகியிருந்த அய்யரிடம் முதல் நாளே என் விருப்பங்களைச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் செய்ய வேண்டியது என்ன? என்பதனை விரிவாக விளக்கியிருந்தேன். அய்யர் என் மனநிலைக்கு ஒத்துப் போக வேண்டும். என் விருப்பத்தின் அடிப்படையில் பூஜை செய்ய வேண்டும். அவசரமின்றி நிதானமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இறையருளால் நண்பர் மூலம் நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல மனிதர் அறிமுகம் ஆனார்.

Image



Image


முதல் நாள் மாலை நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு அதிகாலையில் நீங்கள் எழும் போது இரண்டு மணிக்கே என்னை எழுப்பி விடுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார். நான் இராமேஸ்வரம் சென்று இறங்கிய நாள் முதல் ஒரு நாள் கூட இரவு முழுமையாகத் தூங்கவே இல்லை. அந்த நேரங்களை உள்ளே சுற்றிப் பார்க்கப் பார்க்க பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அத்தனை விதமாகவும் பயன்படுத்திக் கொண்டேன். காரணம் மீண்டும் இதே போல வாய்ப்பு அமையுமா? என்பது நான் அறியேன். மனம் இனி உறுத்தாது.

மே 4 இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்றேன். சரியாக ஒரு மணிக்கு எழுந்து விட்டேன். நமது உடல் செயல் இயக்கம் சரியாகச் செயல்பட்டால் நம் மனம் சொல்வதை உடம்பு கேட்கும். அலாரம் தேவைப்படாது. அடுத்த ஒரு மணிநேரத்தில் காலைக் கடமைகளை முடித்து விட்டு கீழே வரவேற்பரை வந்து அமர்ந்து கொண்டேன். சரியாக மழை பெய்யத் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக வெயிலால் வாட்டி வதக்கிக் கொண்டு இருந்த சூழல் மாறி முதல் முறையாக மழை பெய்யத் தொடங்கியது.

அம்மாவுக்கு மற்றும் இறந்த முன்னோர்கள் அனைவருக்கும் பூஜைகள் செய்யக் கிளம்பத் தயார் ஆன போது மழை பெய்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே நின்று விடும் என்றே நினைத்தேன். வெளுத்து வாங்கத் துவங்கியது.

தங்கியிருந்த இடத்தில் இருந்து கடற்ரையை ஒட்டியிருந்த காஞ்சி மடம் என்பது ஐந்து நிமிடம் நடக்கும் தூரத்தில் இருந்தது. நான் அந்தச் சமயத்தில் அய்யரை அழைத்த போது அவர் நேரத்தைப் பார்த்து விட்டு இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அழைத்து இருக்கலாமே? என்று சொன்னார். நான் தயாராகி இருக்கின்றேன் என்று சொன்ன போது ஆச்சரியப்பட்டார். தூங்கவே இல்லையா என்றார். ஒரு மணி நேரம் கழித்து அய்யர் எனக்கு ஒரு குடையை எடுத்துக் கொண்டு விடுதி வர இருவரும் இடைவிடாமல் பெய்து கொண்டு இருந்த மழையில் நனைந்து கொண்டே மடத்தின் வாசலுக்குச் சென்றோம். அவர் மழை பெய்தது குறித்து சில சகுனம் சார்ந்த நல்ல விசயங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.
Image

Image

Image

Image



இந்தப் பயணத்தில் இராமேஸ்வரம் என்ற தீவு மற்றும் இராமநாத சுவாமி கோவில் என்பது அதிகாலை. காலை. மதியம். மாலை. இரவு. நள்ளிரவு என்று ஒவ்வொரு நேரத்திலும் எப்படி இயங்குகின்றது என்பதனை நான் முழுமையாகப் பார்த்தேன். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் எல்லா இடங்களுக்கும் நடந்து  சென்றேன்.

அந்தப் பகுதியில் மழை காரணமாக மின்சாரம் தடைபட்டு இருந்தது. இருட்டில் கடலைப் பார்த்தேன். வானத்திலிருந்து வந்து கொண்டு இருந்த மழையைப் பார்த்தேன். அம்மா மற்றும் அப்பா வகையில் உள்ள அனைவரின் புகைப்படங்களையும் முதல் முறையாக எடுத்துச் சென்று இருந்தேன். மடத்திற்குள் கோசாலை போல மாடுகளை வைத்து பராமரிக்கும் இடம் ஒன்று இதற்கென்று உள்ளே தனியாக உள்ளது.

முக்கால் மணி நேரத்தில் பூஜை முடிந்தது. மணி அதிகாலை நான்கு. கடலில் 36 முறை பிண்டங்களைக் கரைத்து மூழ்கி எழ வேண்டும் என்று அய்யர் சொன்னார். அத்துடன் குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கே சென்று விடுங்க. நீங்க விரும்புவது போலக் கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்றார். நான்காவது வளைவு பக்கம் சென்று இருள் புலராத அதிகாலையில் சூரியன் வராத நேரத்தில் பிரம்ப முகூர்த்தத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, காற்று, ஆகாயம், நீர், நிலம், நெருப்பு என்று ஐந்து பூதங்கள் சாட்சியாக, என் கண்களுக்குத் தெரிந்து வாழ்ந்த முன்னோர்கள், தெரியாமல் அதற்கு முன்னால் வாழ்ந்த பாட்டன்களை, பூட்டன்களையும் பெயர் சொல்லி உணர்வு பூர்வமாக உள் அர்த்தமாக 36 முறை கடலின் உள்ளே மூழ்கி பூஜை செய்து தட்டில் கொண்டு போயிருந்தவற்றை கடலில் கரைத்தேன்.
Image

Image

Image

Image

Image

Image

Image



நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சொன்னது போல மொட்டை அடிக்கும் இடத்தில் உருவான மாற்றங்கள் என்பது காலை ஐந்தே முக்கால் மணிக்குத்தான் அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள். முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். திரும்பி அறைக்கு வந்து அருகே இருந்த பேருந்து வழியாகப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். 

இராமேஸ்வரம் பேருந்து நிலையம் என்பது கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைத்து இருந்தார்கள். ஊருக்குள்ளே வரும் இடத்தில், நுழைவு இடத்தில் உருவாக்கப்பட்டு இருந்த பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது காலை ஏழு மணி. நேரிடையாகப் பேருந்து இல்லை. மதுரைக்குத் தான் அதிகப் பேருந்துகள் இருந்து. திருச்சிக்கு ஒன்பது மணிக்கு தான் கிளம்பும் என்றார்கள். யோசிக்கவில்லை. காரணம் திருச்சி ரயில் நிலையத்திற்க மாலை நான்கு மணிக்குள் இருக்க வேண்டும் என்ற அவசரம் இருந்தது.

பரமக்குடி, இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை என்று மாறி கடந்து வந்து திருச்சி வந்து சேர்ந்தேன். மதியம் மூன்று மணி. ஏற்கனவே கும்பகோணம் கோவை ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவு செய்து இருந்தேன். திருப்பூர் வந்து சேர்ந்த போது இரவு எட்டு மணி. வீட்டுக்குள் நுழைந்த போது எட்டே முக்கால் ஆகியிருந்தது. நீண்ட நாளைக்குப் பிறகு முழுமையாக ஐந்து நாட்கள் கோவிலுக்காக, அம்மாவுக்காக என்னை முழுமையாக மாற்றிக் கொண்டது இந்த முறை தான்.
Image



வீட்டுக்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களில் மகள்கள் இருவரும் அவரவர் தரப்பில் இருந்து சில நல்ல செய்திகளைச் சொன்னார்கள். அதனை நான் ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். மே 5 காலையில் தான் அவர்களுக்கு அந்தச் செய்தி வந்து சேர்ந்து இருந்தது. நான் பூஜை முடித்து வெளியே பயணம் செய்து கொண்டு இருப்பேன் என்று நினைத்துச் சொல்லாமல் இருந்தோம் என்றார்கள்.அந்தச் சமயத்தில் அதாவது நான் வந்து இறங்கிய நாளில் என் காதுக்கு வந்தது அம்மாவின் ஆசிர்வாதம் என்றே எனக்குத் தோன்றியது.

இது குறித்து இன்னும் சில விசயங்களைப் பற்றித் தனியாக மீண்டும் எழுதுவேன். இந்தத் தொடரின் மூலம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய சில தகவல்கள் உள்ளது.

மனதோடு தொடர்புடைய ஆன்மீகம் உங்கள் குலத்தைக் காக்கும். 
போலித்தனத்தை விரும்பாதீர்கள். 
கோவில் தலங்களில் பணம் இருக்கின்றது என்பதற்காக உங்கள் விஜபி தனத்தைக் காட்டாதீர்கள். 
சாமிக்கு உங்களைப் பற்றி மட்டும் உள்ள உங்கள் பரம்பரையைப் பற்றியும் தெரியும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கட்டும்.
சரியான பிரார்த்தனை என்பது உங்கள் குடும்பத்தை வழிநடத்தும். நீங்கள் செல்லக்கூடிய பாதையில் வழிகாட்டியாக இருக்கும்.
ஆன்மீகம் என்பது வெறுமனே கடவுளிடம் சென்று முறையிடுவது மட்டுமல்ல. 
உங்களால் முடிந்த அளவுக்குச் சக மனிதர்களுக்கு உதவ வாய்ப்பு அமையும் போது உதவுங்கள். 
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கிரகங்களே.

அரசாங்கத்தைக் குறை சொல்வது இருக்கட்டும். 
அரசியல்வாதிகள் மேல் எரிச்சலடைவது ஒரு புறம் இருக்கட்டும். 
ஆனால் ஜனநாயகம் என்பது நல்ல சுதந்திரத்தை தரும். 

அதைப் பயன்படுத்துவதும் நாசமாக்குவதும் சக மனிதர்கள் தான். நிச்சயம் நேரிடையாகவே மறைமுகமாகவே அதனைத் தட்டிக் கேளுங்கள். 

மனு அனுப்பினால் நிச்சயம் நடவடிகக்கை எடுக்கின்றார்கள்.

நான் கடந்த மூன்று வருடங்கள் என் வீட்டைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் முதல் இராமேஸ்வரத்தில் நான் பார்த்த மோசமான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு எழுதி அனுப்பிச் சாதித்துள்ளேன். தலைமை அலுவகம் சிவகங்கையில் இருந்து நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று ஆணையர் கையொப்பமிட்டு எனக்குக் கடிதம் எழுதியதை நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

இன்று வரையிலும் ஆரோக்கியம் தான் எங்கள் குடும்பச் சொத்தாக உள்ளது. என் கையில் எதுவுமில்லை.

யாரோ எங்கிருந்தோ ஆட்டுவிக்கின்றார்கள். 
நாம் ஆடுகின்றோம். 

நமது திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு, உத்வேகம், தன்னம்பிக்கை போன்ற அனைத்தையும் நம்புங்கள். 

கூடவே நம் அறிவை அழிவு சக்திகளுக்குப் பயன்படுத்தி விடக்கூடாது. அதற்காக உள்ளூற ஒரு பயம் இருக்க வேண்டும்., 

அதற்காகவாவது ஆன்மீக நம்பிக்கையை நாம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும் இனிமேலாவது வளர்த்துக் கொள்ளுங்கள்.


உடன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அன்பு. வாழ்த்துகள். வணங்குகின்றேன்.

ஜோதிஜி திருப்பூர்
17.05.2025




Sivapuranam | சிவபுராணம் | S.P.Balasubramaniyam |  S.P.பாலசுப்ரமண்யம்


 

Friday, May 16, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 4 2025) – 10

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May

 ()()()

இராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தில் நடந்த நிகழ்வுகளை, மாற்றங்களை உங்களுடன் இந்தச் சமயத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். பொதுவாக நான் எழுதப் போகின்ற விசயங்களை எவரும் வெளிப்படையாக எழுத விரும்ப மாட்டார்கள். ஆன்மீகம், பக்தி, புனிதம் என்பதோடு சமூக அறிவியல் குறித்துப் பேச விரும்ப மாட்டார்கள். ஆனால் நாம் பேசித் தான் ஆக வேண்டும். ஏன் என்பது முழுமையாக வாசித்து முடிக்கும் போது உங்களுக்கே புரியும்.

பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக்கிய போராட்டத்தின் காரணமாக அரசியலில் வன்னியர் சாதிக்கென்று தனித்த அடையாளம் உருவானது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்தப் போராட்டங்கள் நடந்தாலும் அது கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இதற்குத் தீர்வு காணப்பட்டது. 

Image


வன்னியர் சாதிக்கென்று தனித்த இட ஒதுக்கீடு வழங்காமல் கருணாநிதி அவர்கள் அத்துடன் மொத்தமாக 108 சாதிகள் மிகவும் பிற்பட்ட வகுப்பு (எம்பிசி) என்ற பிரிவில் கொண்டு வந்தார்.

இதனால் சமூகத்தில் மாற்றங்கள் உருவானது உண்மை. என்னுடன் கல்லூரியில் படித்த பல நண்பர்கள் அரசுப் பணியில் சேர்ந்தார்கள். உதாரணமாக இன்று மருத்துவர் என்று அழைக்கப்படும் நாவிதர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்று அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களாக பணிபுரிகின்றார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பெற்றார்கள். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் இதனை மாற்ற முடியவில்லை. கருணாநிதி அவர்கள் செய்த காரியம் தமிழச் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

• MBC (Most Backward Classes): 41 castes are included in this category.

• DNC (Denotified Communities): 68 castes are included under this category, which were formerly considered nomadic or criminal tribes

68 சாதிகளில் பிறந்தவர்கள் ஆண்டாண்டு காலமாக அடிமையாகக் கூலியாகப் பிரிட்டிஷ் அரசின் பார்வையில் கொலைகாரராக, கொள்ளைகாரராகத் தெரிந்தவர்கள்.

Image

Image

Image

Image

Image

Image


இதற்கும் கீழே வருபவர்கள் பட்டியலின வகுப்பு. நாம் எஸ்சி என்கிறோம். அதற்குக் கீழே எஸ்டி (பழங்குடியினர்) பிரிவில் உள்ளவர்கள் வருகின்றார்கள்.  நாயக்கர் என்றால் பிற்பட்ட வகுப்பு.  காட்டு நாயக்கர் என்றால் எஸ்டி பிரிவு.

எம்பிசி, எஸ்சி, எஸ்டி இந்த பிரிவுகளை நிரப்பிய பின்பு தான் பிற்பட்ட வகுப்பில் வரக்கூடிய மாணவர்களை தேர்தேடுப்பார்கள். அரசுப் பணி என்றாலும் இதே நிலை தான். இந்திய அளவில் இதனை ஓபிசி என்கிறார்கள். தமிழக அளவில் பிசி என்று அழைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள அரசியல் காரணமாகப் பிராமணர்கள், ரெட்டியார்கள், முதலியார்கள் போன்ற சில சாதிகளைத் தவிர்த்து பெரும்பாலான அனைத்து பிரிவுகளையும் பிற்பட்ட சாதிகளாக மாற்றிவிட்டனர். 

ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். 1980 வாக்கில் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்புண்டு. அந்தச் சமயத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் என்பது பிற்பட்ட வகுப்பில் இல்லை. இன்று அது பிற்பட்ட வகுப்பு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் பேரங்களில் 90 சதவிகித சாதிகள் பிற்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்ட காரணங்களால் கல்லூரி முதல் உயர் கல்வி வரைக்கும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்கள் உச்சத்தை எட்டிப் பிடிக்கக் காரணமாகவும் இருந்தது.

இன்று நீங்கள் பட்டியலின பிரிவில் உள்ள எந்த சாதியைச் சேர்ந்தவர்களையும் ஒரு வார்த்தை கூடப் பேசிவிட முடியாது. பிசிஆர் சட்டம் உங்களை வீடு தேடி வந்து தூக்கிச் கொண்டு சென்று விடும். இன்று இந்தியாவில் எவ்வளவு பெரிய உயர் கல்வி நிறுவனமாக இருக்கட்டும், ஆராய்ச்சி படிப்பாக இருக்கட்டும் எஸ்டி பிரிவினருக்கு 100 சதவிகிதம் அனைத்தும் இலவசம். நீங்கள் உள்ளே வந்தால் போதும் என்கிற அளவுக்குத்தான் வைத்து உள்ளார்கள். ஆனாலும் அவர்களுக்கு இன்னமும் முழுமையாக விழிப்புணர்வு ஊட்ட அந்தந்த சமூகங்களில் ஆட்கள் இல்லை. இருப்பவர்களுக்குத் தன் நலம் சார்ந்து தான் செயல்படுகின்றார்கள்.

Image

Image

Image

Image

Image

Image

Image

Image


இதே போலப் பிற்பட்ட வகுப்பு என்று பிரித்தாலும் அதற்குள்ளும் சமூகம் உருவாக்கிய பிரிவினைகள் ஏராளமாக உள்ளது. முக்குலத்தோர் என்று கடந்த முப்பது வருடங்களாக மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களை அழைக்கின்றார்கள். அதில் உள்ள கள்ளர் என்றால் அதற்குள் பல பிரிவுகள் உள்ளது. மறவர் என்றாலும் அப்படித்தான். கடைசியில் அகமுடையார் என்பதிலும் ஊர் சார்ந்து பல பிரிவுகள் உள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன் இந்த மூன்று பிரிவுகளும் உள்ளே உள்ள உட்பிரிவுகளும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்தார்கள். ஒவ்வொரு சாதியின் பெயரையும் இப்போது அரசாங்கம் நாகரிகப் பெயராக மாற்றியும் விட்டது. தமிழ்ச் சமூகம் முடிதிருத்துபவர்களை அம்பட்டையன் போன்ற பல பெயர்களில் அழைத்து வந்ததும். இன்று அதன் பெயர் மருத்துவர். காரணம் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மருத்துவத்திலும் கொடி கட்டி பறந்தார்கள். வலையர் என்ற சமூகம் தற்போது பெயர் மாறியுள்ளது. அதாவது எதையும் சாதி அடிப்படையில், அதன் பெயரின் அடிப்படையில் இங்கே எவரும் சக மனிதர்களைக் கேவலப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அரசு பார்த்துப் பார்த்து செய்தது

இன்று இது போன்ற சாதிகளில் பிறந்தவர்கள் பலநிலைகளில் உயர்ந்துள்ளார்கள். வெளிநாடுகள் வரைக்கும் சென்று சாதித்து உள்ளனர். சாதித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

இன்று வரையிலும் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் இந்த இரண்டும் பிராமண எதிர்ப்பு என்பதனை இந்து மத எதிர்ப்பாக வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கி உள்ளனர். நான் மேலே சொன்ன சாதிகள் எந்த அளவுக்கு கோவிலுக்குள் வந்து சேர்ந்துள்ளார்கள் என்பதனை இராமேஸ்வரம் கோவிலுக்குள்ளும் வெளியேயும் பார்த்தேன்.

Image

Image

Image


ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் சாதாரண அரசு பணியில் சேர்ந்து படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று மேலேறி வந்து விடுகின்றார்கள்.  பதவி உயர்விலும் இவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. அவர்கள் இருக்கக்கூடிய துறைகளில் உச்சக் கட்ட பதவியாக கருதப்படும் (கன்பர்டு ஐஏஎஸ்) செயலாளர் என்கிற அளவுக்கு வருகின்றார்கள். இன்று தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் தான்.

ஒரு சில குறிப்பிட்ட சாதிகள் 100 ஆண்டுகளுக்கு "முன் உள்ளே வராதே", "செருப்பு போடாதே", "துண்டு தோளில் போடாதே" என்று பல சட்டங்கள் போட்டு இழிவு படுத்தியிருந்தவர்களின் கல்வித் தகுதி என்பது ஒரு மாநிலத்தையே நிர்வாகம் செய்யும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளது.

இராமேஸ்வரம் கோவிலில் இணைஆணையராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனை அங்குள்ள நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். இதை ஏன் தெரிந்து கொண்டேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.

"ஸ்படிகலிங்கம்" என்பது இராமேஸ்வரத்தில் அதிகாலையில் செய்யக்கூடிய சிறப்புப் பூஜை. அதாவது காலை நான்கு முதல் ஆறு மணிக்கு அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் கர்ப்ப கிரகத்தில் எப்போதும் இருக்கும் சிவலிங்கம் முன்னால் சிறிய அளவில் இருக்கும் ஸ்படிக லிங்கத்தை வைத்து எப்போதும் செய்யக்கூடிய பூஜைகளை அய்யர் செய்வார். இந்த பூஜையை தரிசிக்கச் சிறப்புக் கட்டணம் உண்டு. வட இந்தியர்கள் இதற்கென்று கூடுதல் கவனம் செலுத்தி காலை மூன்று மணிக்கு வந்து வரிசையில் நிற்பார்கள்.

நான் அங்கே சென்ற பிறகு அங்குள்ள நண்பர் சொன்னார். நான் அதிகாலை மூன்றேகால் மணிக்கு வரிசையில் போய் நின்றேன். அப்போதே முப்பது பேர்களுக்கு மேல் வட இந்தியர்கள் இருந்தார்கள். ஆனால் தரிசன டிக்கட் வழங்கிய நேரம் காலை ஐந்து மணி. ஆறு மணிக்கும் ஸ்படிக லிங்க பூஜையைத் தரிசனம் செய்து விட்டு என் அறைக்கு வந்து விட்டேன். மாலை அங்குள்ள நண்பரைச் சந்தித்தேன். அவரிடம் காலையில் நேர மாறுதல் குறித்துத் தெரியப்படுத்தினேன்.

அப்போது அவர் சொன்ன தகவல் தான் ஆச்சரியத்தை உருவாக்கியது.

ஏற்கனவே (இணை ஆணையர்) இருந்தவர் அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கச் சொன்னார். கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். ஆனால் இப்போது வந்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வந்து மதம் மாறி கிறிஸ்துவராக இருப்பதால் இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் விமர்சனத்துக்கு உரியதாக உள்ளது. எவராலும் ஒன்றும் கேட்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு நாள் காலையிலும் இவ்வளவு கூட்டம் வந்தால் தான் ஸ்படிக லிங்க பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார் என்று சொன்னார்.

இங்கு ஏன் மதம் குறித்துப் பேசுவதற்கு முக்கியக் காரணம் அவர்களின் உள்ளார்ந்து மனதிறகுள் இருக்க வேண்டிய மத நம்பிக்கைகள் சார்ந்த எண்ணங்கள் இங்கே நிர்வாகம் சார்ந்த விசயங்களில் வெளிப்படுகின்றது. 

அவரை அணுகக்கூடியவர்கள் பலவிதமான விமர்சனங்களை வைக்கின்றார்கள் என்று சொன்னார்.  தொடக்கத்தில் இந்து மதம் என்று சொல்லி தன் சாதி குறித்த இட ஒதுக்கீடு பெற்று அதன் மூலம் பதவியை அடைந்த பின்பு பெந்தகோஸ்து க்கு மாறி தங்கள் சாதிய இழிவுகளை துடைத்து விட்டதாக நம்புகின்றார்கள். இது சட்டப்படி தவறு. ஆனாலும் இங்கே இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தான் எதார்த்தம்.

மேலே சொன்ன பட்டியலினம் மற்றும் அது சார்ந்த உள்ளார்ந்த பிரிவுகளில் அருந்ததியினர் எதிலும் நுழைய முடியாமல் தவித்துக் கொண்டு மலம் அள்ளுவதையே தலைமுறை தலைமுறையாகச் செய்து கொண்டு இருந்தார்கள். கருணாநிதி அவர்கள் அவர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கியதும் ஒரு மறுமலர்ச்சிக்குரிய காலகட்டமாக மாறியது.

ஆனால் மேலே சொன்ன அனைத்து பிரிவுகளும் இராமேஸ்வரம் கோவிலில் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றார்கள். பிரகாரத்தைச் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றார்கள். பல இளைஞர்களை காவலர்கள் என்ற நிலையில் இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உள்ளது.

மூன்று லட்சம், ஐந்து லட்சம் கொடுத்துத் தங்கள் பணியை வாங்கி உள்ளனர். தங்கள் சாதி சார்ந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் வந்த போதிலும் திமுக வில் உள்ள அமைச்சருக்கு, துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தண்டம் அழுது பல இளைஞர்கள் இந்தப் பணியில் வந்து சேர்ந்து உள்ளனர். நிரந்தரமாக்கப்படுவோம் என்று நம்பிக்கையில் வேலை செய்து வருகின்றார்கள். எட்டு மணி நேரம் பணி. தரிசன டிக்கெட் வாங்கி வருபவர்களைச் சோதித்து அந்த டிக்கெட்களை ஸ்கேன் கருவியில் காட்டி உள்ளே வரிசையாக அனுப்ப வேண்டும். இதில் முக்கிய இடங்கள் முக்கியமற்ற இடங்கள் உள்ளது.

அதன் அடிப்படையில் வரக்கூடிய பக்தர்களிடம் பணம் வசூலிக்க முடியும். வசூலித்துக் கொண்டு இருக்கின்றார்கள். விசேட தினங்களில் மிகப் பெரிய வருமானம். மொத்தமாக ஒரு ஷிப்ட் ல் கூட்டணி அமைத்து வசூலிக்கும் பணத்தை ஒன்றாகச் சேர்த்துப் பிரித்துக் கொள்கின்றார்கள். இதற்குத் தலைமை பொறுப்பு என்று பிரிவுகள் வைத்துள்ளார்கள்.

கர்ப்பகிரகம் அருகே ஒருவர் நிற்கின்றார். குறிப்பிட்ட நேரத்தில் அடுத்தவர் வந்த அங்கே நிற்கின்றார்.இவர்களின் வேலை என்னவெனில் 50,100,200 டிக்கெட் வாங்கி வந்தாலும் கர்ப்பகிரகம் அருகே வரக்கூடியவர்களை எவ்வளவு நேரம் அங்கே நிறுத்துவது என்பது இவர்கள் பொறுப்பில் உள்ளது. திருப்பதியில் சொல்வது போல ஜருகண்டி ஜருகண்டி என்பது போல விரட்டிக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் கையில் வட இந்தியர்கள் கொஞ்சம் பணத்தைத் திணிக்கின்றர்கள். அல்லது வேறொரு நபர் வாங்கியிருப்பதை இவரிடம் தெரியப்படுத்தத் தாராளமாக நின்று தரிசிக்க அவரே ஏற்பாடு செய்வதுடன் பிரசாதம், திருநீறு வழங்கு குளிரக் குளிர அனுப்பி வைக்கின்றார். அவர் கையில் ஒவ்வொரு விரலுக்குள்ளும் அடிக்கி வைத்திருந்த பணத்தைப் பார்த்தேன். உத்தேசமாக ஐந்தாயிரம் இருக்கக்கூடும்.அடுத்த சில மணி நேரத்தில் வேறொருவர் வந்து பொறுப்பு எடுத்துக் கொள்கின்றார். இவர் வேறொரு பகுதிக்குச் செல்கின்றார்.

கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளது. புண்ணியம் புனிதம் என்று சொல்லி அதில் நீராடி வருவதைப் பக்தர்கள் முக்கியக் கடமையாக வைத்துள்ளார்கள். இதற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் இருபத்தி ஐந்து. வாங்கிக் கொண்டு தீர்த்தங்கள் அருகே சென்றால் மொத்தமாக வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு தெளிப்பார்கள் அல்லது மொத்தமாக விசிறியடிப்பார்கள். நம் உடம்பில் தண்ணீர் பட்டது என்ற திருப்தியில் நகர்ந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும். காரணம் நாம் நிற்க முடியாது. பின்னால் உள்ள கூட்டம் நம்மை நகர்த்திக் கொண்டேயிருக்கும். அடுத்தடுத்த தீர்த்தங்களில் ஒவ்வொரு நபரும் கிணற்றில் மேல் கையில் வாளியை கையில் வைத்துக் கொண்டு நிற்பார்கள். நொடிப் பொழுதியில் வாளியில் கட்டியுள்ள கயிற்சை சரேலென்று உள்ளே விட்டுப் பாதித் தண்ணீர் அந்த வாளியில் இருக்கும். அதன் அப்படி விசிறியடிப்பார். போங்க போங்க என்று அனுப்பிக் கொண்டேயிருப்பார். ஆனால் இதில் பல பிரிவுகள் உள்ளது.

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 4 2025) – 9

குறைந்தபட்சம் நான் பார்த்த வரையில் இந்தத் தீர்த்தம் என்பதனை வைத்துக் கொண்டு நூறு பேர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். அரசு டிக்கெட் எடுத்து வந்தாலும் வரக்கூடிய வட இந்தியர்களிடம் பேசுகின்றார்கள். பத்துப் பேர்கள் ஒரு பேக்கேஜ் போல உள்ளே தீர்த்தங்களுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். சிறப்புக் கவனிப்பு. இவர்களுக்கு மட்டும் அவர்கள் கையில் கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் கேனில் அந்தத் தீர்த்தத்தை ஊற்றிக் கொடுக்கின்றார்கள். (இந்த கேன் மிகப் பெரிய தொழில். விதம் விதமாக உள்ளது)22 தீர்த்தங்களுக்கு ஆள் மாறி அடுத்தடுத்து அழைத்துச் சென்று கடைசியில் வெளியே கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு நபருக்கு ரூபாய் நூறு வாங்குகின்றார்கள். இதில் உள்ளவர்கள் பெரும்பாலும் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை புரிந்து கொண்டேன். அவர்களைத் தவிர வேறு எவரையும் அனுமதிப்பார்களா? என்பதும் சந்தேகமே. பத்துக்கு மேற்பட்ட பிரிவாக இருக்கின்றார்கள் என்றாலும் வசூலிப்பதை ஆட்கள் கணக்கு வைத்து இறுதியில் பிரித்துக் கொள்கின்றார்கள். 

24 மணிநேரமும் வாளியும் கையுமாக இயங்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். இது தான் அவர்கள் தொழில்.

இது தவிர மற்ற சில விசயங்களை அங்கே கவனித்தேன்.

தர்ப்பணம் கொடுக்கும் போது அதற்கு முன்னாலும் பின்னாலும் பல தொழில்கள் உள்ளது.

உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

தானம் வாங்கிக் கொடுங்கள் என்ற ஒரு டேபிளின் மேலே பாக்ஸ் பாக்ஸ் ஆக அடுக்கி வைத்து சாப்பாட்டு வகைகளைப் பலரும் விற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை அங்கே உள்ள சாமியர்களுக்கு நீங்கள் வாங்கிக் கொண்டு கொடுத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அதே சாப்பாடு பாக்ஸ் விற்றவரிடம் வந்து சேர்ந்து விடும். குறிப்பிட்ட பணம் சாமியாருக்கு.

தர்ப்பணம் செய்ய வாங்கிக் கொடுக்கும் காய்கறிகள், மளிகைச் சாமான்கள், மற்ற பூஜை சாமான்கள், அப்பா அம்மா என்றால் விரும்பி அணிவார்கள் என்று ஆசை ஆசையாக வாங்கிய வேஷ்டி சேலை ( அய்யர் கட்டாயம் வாங்கி வந்து விடுங்கள் என்பார்) என்று அனைத்தும் அடுத்த நாள் வாங்கிய கடைக்கே சென்று விடுகின்றது. பூஜையின் போது அதிகச் சேதாரம் இல்லாமல் அப்படியே அலுங்காமல் குலுங்காமல் அதை பூஜை செய்யபவர்கள் எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றார்கள் என்பதனை ஆதி முதல் அந்தம் வரைக்கும் பார்த்தேன். அதுவொரு தனிக்கலை.

எத்தனை முறைகள் இவை அனைத்தும் சுற்றிச் சுற்றி வரும் என்பதனை என்னால் யூகிக்க முடியவில்லை.

கோவில் கர்ப்பகிரகம் முதல் உள்ளே உள்ள பல இடங்களைத் தொடர்ந்து சுத்தம் செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் பல ஊழியர்கள் ஆண்கள் பெண்கள் பணிபுரிகின்றார்கள். 

ஒப்பந்தம் எடுத்தவர் மலையாளி என்பதனை அங்குள்ள பெண்மணியிடம் கேட்டு ஆச்சரியப் பட்டேன். அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் மட்டும் முக்கிய காரணம். கட்சிக்காரன் என்பது இரண்டாம் பட்சம் என்றார்கள்.

எட்டு மணி நேர வேலை. வந்து கொண்டு இருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்துவது, அங்கங்கே அமர விடாமல் தடுப்பது, உடனே வெளியே அனுப்புவது. கூட்டம் இல்லாத நேரங்கள் ஒவ்வொரு இடங்களையும் சுத்தம் செய்வது என்று அனைத்து இடங்களிலும் எளிய சாதாரணக் குடும்பத்துப் பின்புலங்களில் இருந்து வந்தவர்கள் தான் பணிபுரிகின்றார்கள். அதாவது கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஒரு காலத்தில் தடுக்கப்பட்ட அனைவரும் கோவிலுக்குள்ளே 24 மணி நேரமும் இருக்கும் அளவுக்கு காலச் சூழல் மாறியுள்ளது. இடஒதுக்கீடு காரணமாக மாற்றப் பட்டு உள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டில் தான் புண்ணியம் தேடி வந்து போகின்றவர்கள் இருக்கின்றார்கள். இது போன்ற பல விசயங்களை சாமி தரிசனம் செய்யச் சென்ற போது வரிசையில் நின்று கொண்டு இருந்த போது யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

தொடக்கத்தில் சாதி சார்ந்த விசயங்களை விரிவாகச் சொல்லி வந்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. நான் நான்கு நாட்கள் இராமநாத சுவாமியை அம்பாளை தரிசனம் செய்தேன். இரண்டு இடங்களிலும் மொத்தம் இரண்டு பேர் அய்யர்கள் மட்டும் இருந்தார்கள். 

அவர்கள் இருவரும் கர்ப்பகிரகத்திற்குள் சென்று பூசை செய்கின்றார்கள். மற்றபடி கோவிலின் உள்ளே வெளியே அனைத்துக் கட்டுபாடுகளும், வருமானங்களும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின இளைஞர்கள், நபர்கள் கட்டுப்பாட்டில் தான் இராமேஸ்வரம் கோவில் உள்ளது. அதாவது அங்கே அய்யர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இருப்பது போல யாருக்கும் தெரியாது. 

இந்தத் தீவில் வாழக்கூடியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு உழைப்புக்கு ஏற்ப பணம் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. ஒரு குடம் பத்து ரூபாய் பல சமயம் இருபது ரூபாய் விலைக்கு வாங்கித்தான் வாழ்கின்றார்கள். கோவில் மூலம் வரக்கூடிய மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு மடங்கு அரசாங்கத்தில் சென்றால் ஆச்சரியமே. யார் யாரோ பைக்குச் சென்று கொண்டு இருக்கின்றது. புனிதம் என்ற பெயரில் வந்து போகக்கூடிய எந்தப் பக்தர்களும் இருக்கக்கூடிய அனைத்து குறைகளைக் கண்டும் காணாமல் சென்று கொண்டேயிருக்கின்றார்கள்.

(அடுத்தப் பதிவோடு பயணம் முடிவடைகின்றது)

Thursday, May 15, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 4 2025) – 9

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May

 ()()()

இராமேஸ்வரம் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். எத்தனை நாட்கள் அங்கே தங்கப் போகின்றீர்கள்? என்ன வாடகைக்குள் இருக்க வேண்டும்? இந்த இரண்டிலும் கவனமாக இருக்கவும்.

பணம் அதிகமாக உள்ளது. எனக்கு வசதிகள் தான் முக்கியம். கடவுளைக் கூட நான் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கித் தான் தரிசனம் செய்ய விரும்புவேன் என்பவர்கள் கவலைப்படத் தேவை இல்லை. உங்களுக்கு தினசரி வாடகை ரூபாய் இருபதாயிரம் என்கிற அளவுக்கு சிறப்பான விடுதிகள் உள்ளது.

நடுத்தரவர்க்கம் மற்றும் நடுத்தரவர்க்கத்திற்கு கீழே இருப்பவர்களின் பர்ஸ் பழுத்து விடக்கூடாது. இணையம் வழியே அதில் கொடுத்துள்ள படங்கள், செயற்கையாக வழங்கப்பட்ட ஸ்டார் ரேட்டிங், புகழ்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் பார்த்து இது சரியான விடுதியாக இருக்கும் என்று மயங்கி விடாதீர்கள்.  நான் பார்த்தவரைக்கும் என்பது சதவிகிதம் பணம் பறிக்கும் கும்பல் கையில் தான் விடுதிகள் உள்ளது.  அடிப்படை மனிதாபிமானம் என்பது துளியும் இல்லாமல் தான் இந்த தொழிலை அங்கே இருப்பவர்கள் நடத்துகின்றார்கள்.  குறுகிய காலத்திற்குள் ஒவ்வொருவரும் அள்ளிக் குவிக்கின்றார்கள். ஒருவரைப் பார்த்து அடுத்தவர் என்று இது நகர்ந்து கொண்டே போகின்றது. 

Image

Image

Image

Image

Image


காரணம் இங்கே இரண்டு சென்ட் இடம் இருந்தாலும் அதில் ஒவ்வொருவரும் கட்டி வைத்துள்ள விடுதிகள் என்ற பெயரில் உள்ள குடோன்கள் பார்க்க சகிக்காது. வெளியே ஆடம்பர அலங்காரம் இருக்கும். உள்ளே சென்றால் வேறு விதமாக இருக்கும்.


உங்கள் நட்பு வட்டாரம் இருந்தால் ஒரு முறைக்கு இரு முறை நன்றாகக் கேட்டு அதன் பிறகு முடிவெடுங்கள். சுற்றுலா மனோநிலையில் செல்கின்றீர்களா? அல்லது ஆன்மீக மனநிலையில் செல்கின்றீர்களா என்பதனை வைத்து உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். அங்கே சுற்றுலா என்பதற்குப் பெரியதாக ஒன்றுமில்லை. தனுஷ்கோடி என்றாலும் கடைசி வரைக்கும் மத்திய அரசாங்கம் சாலை போட்டு இலங்கை அருகே வரைக்கும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றார்கள். அங்கே போய் அமர இடம் இருக்காது. ஓய்வெடுக்க எவ்வித வசதிகளும் உருவாக்கப்படப்வில்லை. நட்ட நடு அத்துவான பொட்ட வெயிலில் வேர்த்து விறுவிறுத்து வெறுத்துப் போய்த் தான் திரும்பி வர வேண்டும். இப்போது தனுஷ்கோடி ரயில் திட்டத்தை மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேலை தொடங்கவுள்ளதாகச் செய்தித்தாளில் படித்தேன்.

மத்திய அரசு காசி போல இந்தத் தலத்தை மிகப் பெரிய சுற்றுலா தலமாக மாற்ற பலவிதங்களில் பல ஆண்டுகளாக மாற்ற முயன்று வருகின்றது. ஆனால் இங்குள்ள மாநில அரசு பல காரணங்களால் அதற்குத் தடையாக உள்ளது அல்லது மெதுவாக நகர்த்துகின்றது. இடம் வழங்குவதைத் தள்ளிப் போடுகின்றது. ஒப்புதல் வழங்குவதில்லை. முக்கியக் காரணம் நாம் புனித தலம் என்று அழைத்தாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடத்தப்பட்டு வருகின்ற கடத்தல் அனைத்தும் இந்தப் பாதை வழியே தான் அதிகம் நடக்கின்றது. அது திருச்சி விமான நிலையம் வரைக்கும் தொடர்கின்றது. பல சமயங்களில் இங்கேயிருந்து தொடங்குகின்றது. சமீப காலங்களில் திருச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வையாபுரி கோபால்சாமி (வைகோ மகன்) திருச்சி விமான நிலைய அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்றார். வந்து போகின்ற இஸ்லாமியர்களை அதிக அளவு சோதனை செய்யக்கூடாது என்பதில் தொடங்கி இன்னும் பல கட்டளைகளை அதிகாரிகளுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுக் கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டு விட்டால் அதனை எடுத்து வர குறிப்பிட்ட நபர்கள் இருக்கின்றார்கள். இந்திய ராணுவ கப்பல் படை சார்ந்த ரோந்து கப்பல்கள் இருந்தாலும் இன்று வரையிலும் இங்கே பாதுகாப்பு இல்லை. அரசாங்கததின் கட்டுப்பாட்டிலும் இல்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு இந்தப் பகுதியை ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக மாற்ற நினைக்கின்றது.

கடத்தல் காரியங்களில் ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் தான் பங்கு பெற்று உள்ளார்கள் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடாது. மூன்று மத மனிதர்களும் உள்ளனர். பணம் என்ற மூன்று எழுத்து மூவரையும் ஒன்றிணைக்கின்றது.

சமீப காலமாகப் போதை பொருள் என்பது இந்தப் பாதைகளில் வழியே மிகப் பெரிய அளவுக்குக் கடத்தப்படுவதால் என்ஐஏ என்பது இந்தியாவில் தமிழகத்தைக் குறி வைத்து ஒவ்வொரு முறையும் பலரையும் அள்ளிக் கொண்டு செல்கின்றது. இது போன்ற செய்திகள் வெளியே வராத அளவுக்கு அமுக்கி விடுகின்றார்கள்.

நீங்கள் பயணியாகச் சென்று வரும் போது இது போன்ற இருட்டுப் பக்கங்கள் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தத் தலம் என்பது புனிதமான தலமென்பதை இந்தப் பயணத்தில் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

விரதம் இருந்தது, மனதார நினைத்து, உள்ளும் புறமும் ஒரே மாதிரி யோசித்து இராமநாத சுவாமியை தரிசனம் செய்ய வரக்கூடியவர்களுக்கு நிச்சயம் இங்கே அருமையான ஆன்மீக அனுபவம் கிடைக்கும். நான் கோவிலுக்கு உள்ளே இருந்த தருணங்கள் அனைத்தும் அற்புதமானவை. உடம்பில் அதிர்வு இருந்து கொண்டேயிருந்தது. எனக்கு வேறு எங்கும் கிடைக்காத அனுபவம் இது.

Image
கோவிலுக்கு அருகே உள்ளது. விசேட தினம் இல்லாத நாட்களில் சென்றால் இயல்பான கட்டணம். எளிய வசதிகள் தான் இருக்கும்.
Image

Image

Image

Image

Image

Image


காரைக்குடி நகரத்தார் மடம் ஒன்று உள்ளது. செட்டியார்களுக்கு ரூபாய் அறுநூறு (22 மணி நேரம்) மற்றவர்களுக்கு இரண்டு மடங்கு.  இதே போல குளிர்சாதன வசதிகள் என்றால் குறைந்த பட்சம் ரூபாய் 1200.  மற்றவர்களுக்கு வேறு விலை.  காஞ்சி மடம், ஆதினங்களின் மடம், குஜராத்தியர் மடம், வட இந்தியர்கள் சார்பாக தான தர்மத்திற்கு என்று உருவாக்கப்பட்ட மடங்கள் என்று வடக்கு கோவில் வாசல் எதிரே கடலுக்குச் செல்லும் வழியில் வரிசையாக உள்ளது.

எளிய விலை. அருமையான இடம். சாப்பாடு வசதிகள் உள்ளே உள்ளது. நீங்கள் ஆடம்பர பிரியராக இல்லாவிட்டால் நான் மேலே கொடுத்துள்ள அந்தந்த அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு செல்வதற்கு முன்பு பேசிவிட்டு செல்லுங்கள். நான் என் நண்பர்களுக்கு என இதனை ஒவ்வொரு இடமாகச் சென்று பேசி சேகரித்தேன்.  

வட இந்தியர்களாக இருந்தாலும் இங்கே பல வருடங்கள் வாழ்ந்த காரணத்தால் நன்றாக தமிழ் பேசுகின்றார்கள். நம்மவரை விட நம் மேல் அதிக அக்கறை காட்டுவார்கள். நம்பிக்கையுடன் இது போன்ற மடங்களில் தங்கலாம்.  மீண்டும் சொல்கின்றேன். இது போன்ற புனித தலங்களுக்கு வரும் போது எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் வசதிகளை குறைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு உள் மனதை பக்குவடுத்திக் கொண்டு வாருங்கள்.

Image

Image

Image

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 3 2025) – 8

வாழும் போது பல்வேறு காரணங்கள் அடிப்படையில் அப்பா, அம்மாவை, உடன் பிறந்தவர்களை கவனிக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்போம். குற்ற உணர்ச்சி உள்ளே இருந்து கொண்டேயிருக்கும். மன உளைச்சலாக மாறி விடுவதற்குள் இங்கே ஒரு முறை வந்து விட்டுச் செல்லுங்கள்.

இராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தங்கள் குறித்து அடுத்த பதிவில்...


பயணங்கள் தொடரும்...

Wednesday, May 14, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 3 2025) – 8

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May

 ()()()  

ஐந்தாம் தேதி அதிகாலையில் தான் பூஜை என்பதால் கிடைத்த நேரமெல்லாம் இராமேஸ்வரத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்குள்ளும் காலையிலும் மாலையிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருந்தேன்.காலை எட்டு மணிக்கு மேலே வெயிலின் தாக்கம் அதிகம்.  மதிய நேரமெல்லாம் வெயில் நம் உடம்பில் உள்ள தோலை பிய்ச்சி எடுப்பது போல இருக்கும். வினோதமான சிதோஷ்ண நிலையை உணர்ந்தேன். தீவு என்றாலும் மூச்சு முட்ட வைத்தது.

மூன்று நாட்களும் இருபது கிலோ மீட்டர் நடந்தது வந்துருக்கலாம் என்கிற அளவுக்குக் கோவிலுக்கு வெளியே இந்த ஊர் இரவிலும் பகலிலும் எப்படிச் செயல்படுகின்றது என்பதனைப் பார்த்தேன். வணங்க வந்தவர்களையும், இதை வைத்து வாழ்ந்து கொண்டுருந்தவர்களை ரசித்தேன்.

Image

Image

Image


புனிதம், கடமை என்பது இரண்டு தனித் தனி வார்த்தைகள் தான். ஆனால் இவை இரண்டும் உங்களை கட்டுப்படுத்தும். கட்டிப்போடும். இந்தியாவில் கடமை என்கிற இடத்தில் புனிதம் வந்து அமர்ந்து இருக்கும். புனிதம் இருக்கும் இடத்தில் கடமை காணாமல் போய்விடும்.

நான் என் மகனை, மகளை வளர்த்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை என்று பெற்றோர்கள் கதறுவதைப் பார்க்கலாம். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து கவனித்து வளர்த்ததைப் போலக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குப் பின்னால் உள்ள காரணக் காரணிகளை நாம் பார்ப்பதில்லை. வளரும் போதே நாம் குழந்தைகளுக்கு நாம் விரும்புவதைத் தான் கற்றுக் கொடுக்க விரும்புகின்றோம். சமூகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்பதனை எந்த பெற்றோர்களும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இங்கே இருந்து தான் பிரச்சனை தொடங்கின்றது.

Image

Image

Image

Image


என் பிள்ளையை ஒழுக்கமாக வளர்த்து விட்டால் போதும் என்று மட்டும் தான் நம்புகின்றார்கள். ஆனால் நம் பிள்ளை பழகும் மற்றவர்கள் எப்படியிருக்கின்றார்கள்? அவர்களை சமாளிக்க நம் பிள்ளைக்கு என்ன தனித்திறமை உள்ளது? என்பதனை நாம் உணர்வதில்லை.

நம் சாதி, மதம் சொல்லியிருப்பதை வைத்து அவர்களை உருவமாக மாற்ற முயற்சிக்கின்றோம். ஆனால் குழந்தைகள் வளரும் சூழல் வேறு. தொழில் நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேயிருப்பதை வைத்து அவர்களின் மனமும் வாழ்வும் வேறு விதமான பாதைக்குத் தான் செல்கின்றது. அதைப் பெற்றோர்கள் உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் வரக்கூடிய பிரச்சனைகள் அநேகம். 

தங்கள் உறவுகளைப் புனிதம் என்ற வட்டத்திற்குள் வைத்து சீராட்டி பாலூட்டி கண்விழித்துக் கஷ்டப்பட்டு வளர்தேன் என்பது குழந்தைகளின் பார்வையில் கேலிக்குரியதாகக் கிண்டலுக்குரி யதாகவே தெரிகின்றது. மாறிவிடுகின்றது.

Image

Image

Image

Image

Image

Image

Image

Image


இன்று எந்தப் பெண் குழந்தைகளும் நெற்றில் பொட்டு வைப்பதை விரும்புவதில்லை. கஷ்டப்பட்டு வைக்கக் சொன்னாலும் கண்ணுக்கு தெரியாத மாதிரி சின்னதாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள். தினமும் கோவில் செல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதாவது செல்ல வேண்டும் என்று நினைப்பு வராத அளவுக்கு ஒரு குழந்தை பெற்றவர்கள் பொத்தி பொத்தி வளர்க்க கடைசியில் குடும்பத்தில் இருந்து திமிறிக் கொண்டு வெளியேறுவது தான் நடக்கின்றது.

கடவுள் நம்பிக்கை என்பதனை ஒரு தனிப்பட்ட கட்சியுடன் தொடர்பு படுத்தும் அரசியல் விளையாட்டு இவர்கள் பலியாகி கடைசியில் வளரும் குழந்தைகள் தடுமாறி தடம் மாறி சென்று விடுகின்றார்கள். தனியார் பள்ளிகள் ஒழுக்கம் என்ற பெயரில் அடிமைத்தனத்தை புகுத்தி எதைப் பற்றியும் கண்டு கொள்ளத் தேவையில்லை என்கிற பொறுப்பற்ற குடிமகனமாக மாற்றி இந்த சமூகத்திற்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

Image

Image

Image


ஒரு இஸ்லாமியர், கிறிஸ்துவர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் வேறு. ஆனால் இந்து மதம் என்ற எண்ணத்தில் எவரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில்லை. பதிலாகத் தன் சாதி என்கிற வட்டத்திற்குள் வைத்து தான் தங்களுக்குரியதை வைத்துக் கொண்டு வாழ்க்கை வாழ விரும்புகின்றார்கள். மதம், அது சார்ந்த கொள்கைகள், கோட்பாடுகள், பாரம்பரியம், கலாச்சாரம், குடும்ப பெருமைகள், முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்று அனைத்தையும் இன்று அரசியலாக மாற்றியுள்ளனர். அவசியம் இல்லை என்பதாகவும் கருதுகின்றார்கள்.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இயற்கையைப் போற்றுவார்கள். மதிப்பார்கள். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு பெயர். பின்னால் புராண கதைகள். ஆறு, குளம், ஏரி, கண்மாய் என்று தொடங்கிக் கடல் வரைக்கும் அதனை எப்படியெல்லாம் சீரழிக்க முடியும் என்பதனை நம் மக்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். புனிதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு கடமை என்பதனை மறந்து ஆசைக்கும், பேராசையுமாக அலையும் பதர்களாக இருக்கும் நம் மக்களை ஒவ்வொரு ஆன்மீக தலங்களில் வாழும் தெய்வங்களும் அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களும் நிரம்பி வழிகின்றது. ஆன்மீகம் நீக்கமற வளர்ந்துள்ளது என்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆசைகள் பேராசைகளாக மாறி ஆண்டவரை அரசியல்வாதிகள் போல நம் மக்கள் மாற்றி விட்டார்கள். அதை வைத்து கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் நன்றாகச் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

நீ எனக்கு இவையெல்லாம் தந்தாக வேண்டும் என்று சாமியிடம் மிரட்டும் அளவுக்கு மக்களின் மனம் மாறியுள்ளது. சடங்கு, சம்பிராதயம் என்பதெல்லாம் மாறி ஜோசியர் சொன்னார் என்பதற்காகச் சாங்கியம் செய்ய மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர்.

இன்று ஒவ்வொரு கோவிலும் இங்குள்ள சோசியர் மூலம் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்கு இத்தனை வாரம் சென்றால் போதும் என்பதை மக்கள் ஒவ்வொருவரும் வேதவாக்காக நினைத்து பின்பற்றுகின்றார்கள். நடக்குமா? நடக்காதா? நடந்ததா? என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை.

கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த ஊருக்குப் பலவகையில் வருமானம். ஆனால் சுகாதாரத்தை அரசினால் ஓர் அளவுக்கு மேல் பேணிக் காக்க முடிவதில்லை. கோவில் தலங்களைச் சாக்கடை போல மாற்றி விடுகின்றார்கள். அவசரம். எல்லாமே அவசரம் என்கிற ரீதியில் செயல்படுவதால் இன்றைய ஆன்மீகம் என்பது வெறுமனே காட்சிப் பொருளாகவே உள்ளது. உள்ளார்ந்த இறையருள் தேடும் வேட்கை என்பது இல்லவே இல்லை.

 

Image

Image

Image

Image

Image

Image

Image

இராமேஸ்வரத்தில் நான் இருந்த நாட்களில் நாலைந்து முறை கடலில் சென்று குளித்து இருப்பேன். கடலுக்கு வெளியே மற்றும் கடலுக்கு உள்ளே நம் மக்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் எழுத்தில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. மக்கள் வந்து போய்க் கொண்டு இருக்கின்ற புழங்கிக் கொண்டேயிருக்கும் இடங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் செயல்பட வாய்ப்பில்லை. ஊழல் மிகுந்த நம் நாட்டில், ஆட்கள் பற்றாக்குறை உள்ள நம் அதிகாரவர்க்கத்தில் என்ன தான் முயற்சி செய்தாலும் மக்களே திருந்தாத வரைக்கும் எந்த இடத்திலும் பெரிய மாற்றங்களை உங்களால் கொண்டு வரவே முடியாது.

இராமேஸ்வரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருந்தும் வருமானம். கட்சிகளின் பெயர்கள் மட்டும் தான் வேறு. அனைவரும் உள்ளே ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள். அரசாங்கததிற்குச் செல்ல வேண்டிய பணம் அனைத்தும் அங்கே தனி நபர்களின் பைகளுக்குத்தான் அதிகம் செல்வதைப் பார்த்தேன்.

இந்துத்துவா அமைப்புகள் என்று சொல்லக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்றவற்றில் இருப்பவர்களின் தகுதியை இந்த முறை அங்கே சென்று பார்த்தேன். திமுக, அதிமுக எல்லாவகையிலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு வெளுத்துக் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். கட்சி பெயர்களை வைத்துக் கொண்டு புரோக்கர்களாக இருக்கின்றார்கள். புரோக்கர்களாக இருப்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஏதோவொரு கட்சி பின்புலத்தைத் தேவைப்படும் நேரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் பார்த்தேன்.

இராமேஸ்வரம் முழுக்க எங்குத் திரும்பினாலும் குப்பை. கடலுக்கு உள்ளே தலை மூழ்கிப் போகும் அளவுக்கு உள்ளே சென்றாலும் அவரவர் பூஜை முடித்துத் தங்கள் ஆடைகளை அப்படியே கழட்டிப் போட்ட அனைத்தும் காலில் சிக்க நமக்கு ஒரு மாதிரியாக உள்ளது. கடல் மணற்பரப்பில் அதே போலப் பழைய ஆடைகளும் பூஜை செய்து முடித்துத் தூக்கி எறியப்படும் சாமான்களும். அரசாங்கம் அறிவிப்புப் பலகைகள் வைத்து இருந்தாலும் மக்கள் தங்கள் பாவத்தைக் கழித்து விட்டால் போதும் என்கிற அவசரத்தில் தான் இருக்கின்றார்கள்.

கடற்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்யக்கூடிய பிராமணர்கள், பிரமணர்கள் அல்லாதவர்கள் என்று பல பிரிவுகள் உள்ளது. அதே போல மடங்கள் என்று தனியாக அங்கங்கே உள்ளது. அங்கும் பூஜைகள் செய்யப்படுகின்றது. வெவ்வேறு விதமான கட்டணங்கள். எல்லாருக்கும் சங்கம் உள்ளது. கழுத்தில் கட்டாயம் மாலை போல அடையாள அட்டையை மாட்டியிருக்கின்றார்கள். மக்கள் அனைவருக்கும் இறந்த பிறகு தான் பாசம் அதிகம் பொங்கும் போல.

மலை மலையாகப் பழைய ஆடைகள் அங்கங்கே குவிக்கப்பட்டுள்ளது. அதனை வண்டி வண்டியாக எடுத்துக் கொண்டே செல்கின்றார்கள். அதுவொரு சிறந்த தொழில். அதனை மீண்டும் உருவாக்கும் செய்து விற்பனை செய்ய ஒரு குழு தொடர்ந்து இரவு பகலாகச் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. நான் என் ஆடைகளைக் கவனமாக அந்த வண்டியில் இருப்பவர்களிடம் தான் கொண்டு போய்க் கொடுத்தேன்.

ஒரு சங்கின் விலை, ஒரு பாசிமணி விலை பத்து ரூபாய் அடக்க விலை என்றால் அது பத்து மடங்குக்கு மேலே விற்கப்படுகின்றது. ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை. தமிழ் மொழி பேசினால் தவிர்க்கப் பார்க்கின்றார்கள். இந்தி மொழி என்றால் அல்வா போல அழைக்கின்றார்கள்.

அம்மா இறந்து மூன்றாவது நாள் இராமேஸ்வரம் வந்து இறந்த போது கடற்கரையில் அமர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பூஜை செய்து இறுதியில் மொட்டை போட ஒரு கூடத்துக்குச் சென்றோம். அங்கே மொட்டை அடிக்க இலவசம் என்று தமிழக அரசு எழுதியிருந்த வாசகத்தைப் படித்தேன். ஆனால் அங்கே இருந்த ரௌடிக் கும்பல் அதை மதிக்காமல் நான் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்காமல் தங்கள் பிரயோகத்தைக் காட்ட நினைத்தது. சண்டை போடாமல் அமைதியாக வந்து அதிகாரவர்க்கம் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மனு அனுப்பினேன். இப்போது இங்கே ஏதாவது மாறுதல் நடந்து இருக்குமா என்று இந்த முறை மொட்டை அடிக்கச் சென்ற போது மொத்த நிர்வாகத்தையும் மாற்றியிருந்தார்கள். 

நாவிதர்கள் பணம் வாங்கும் சிஸ்டத்தை உருவாக்கியிருந்தார்கள். இடைத்தரகர்கள், ரௌடிக் கும்பல் எவரையும் காணவில்லை. ஒன்றும் தெரியாத மாதிரி அங்கே இருந்த ஒருவரிடம் "போன வருடம் வேறு மாதிரி இருந்ததே? இப்போது ஏன் இப்படி மாறியுள்ளது"? என்று கேட்ட போது அவர் "யாரோ எழுதிப் போட்டு விட்டார்கள். பெரிய அதிகாரி சோதனைக்கு வந்தார். எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள்" என்றார். 

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 2 2025) – 7

என்னைப் போல அம்மா அப்பாவை இழந்தவர்கள் கௌரவமாக மொட்டை அடித்துத் தங்கள் விருப்பப்பட்ட தொகையைக் கொடுத்து விட்டு செல்ல ஒரு பாதையை உருவாக்கியதில் மகிழ்ச்சி. ஆனால் எவருக்கும் தெரியாது.

தங்கும் இடங்கள் குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

பயணம் தொடரும்.