காலையில் காலைக் கடன்களை முடித்து விட்டு ஒரு லெமன் டீ குடித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டேன். கடற்கரைக்குப் போக வேண்டும் என்று திட்டம். திரும்பி வந்து எழுதுவது, உடற்பயிற்சி எல்லாம் வைத்துக் கொள்ளலாம். முதலில் பை எடுக்காமல் புறப்பட்டு பின்னர் திரும்பி வந்து பையில் டேப், தண்ணீர் பாட்டில், பை எடுத்துக் கொண்டேன்.
சிக்னல் அருகில் வரும் போது ஒரு பேருந்து ஜாபர்கான் பேட்டை மெயின் ரோடில் திரும்பிப் போனது. அது 18K ஆக இருந்திருக்கும் என்று பின்னர் அதே நிறுத்தத்துக்கு வந்த அம்மா சொன்னார்கள். கிண்டி திசையிலும் 10 நிமிடங்களுக்கு எந்த பேருந்தும் வரவில்லை. அதன் பிறகு கூட்டமாக M70, D70. அவற்றை விட்டு விட்டு 5E நிறுத்தத்தில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
மன்த்லி ரிவியூ கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். அந்த அம்மா வந்து 5.30-க்குப் பிறகுதான் பேருந்து என்று சொல்லி சில நிமிடங்களுக்குள் ஒரு பச்சை பலகை வண்டி வந்து விட்டது. ரூ 16 டிக்கெட். ஒரு ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டே போனேன்.
கடற்கரைக்குப் போகும் முனையில் இறங்கினால், நியூஸ் பேப்பர் வந்து அடுக்கும் வேலை தொடங்கியிருந்தது. கடற்கரை சாலையை பேரிகேட் வைத்து தடுத்திருந்தார்கள். நான்கு சக்கர வாகனங்கள் நுழைய முடியாது. சாலை முழுவதும் நடப்பவர்கள், ஓடுபவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள். ஸ்கேட்டிங் மைதானத்தில் ஒரு சின்ன குழு கால் முட்டிக்கு இடையே பந்தை வைத்து உடற்பயிற்சி ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அதில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஏழை மக்கள் அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்திருந்தார்கள்.
நடைபாதையில் நடந்து போகும் போதே கடலைத் தொட்டு வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். கிழக்கு திசையில் சூரிய உதயத்தை பார்க்கலாம். கன்னியாகுமரியில்தான் சூரிய உதயத்தையும், மாலையில் சூரியன் மறைவதையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இங்கு கிழக்குக் கடற்கரையில் சூரிய உதயம் தெரியும்.
ஆனால், அடி வானம் முழுவதும் மேக மூட்டமாக இருந்தது. சரி, சூரியன் உதித்தாகி விட்டது, மேகத்துக்குப் பின்னால் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டேன். நேரம் 5.45 தாண்டியிருந்தது. கடற்கரை மணல் பனிப் பொழிவில் ஈரமாக மெத்து மெத்து என்று இருந்தது. செருப்பைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டு நடந்தேன். மணலில் ஏதோ சிறு சிறு நுணுக்கமான தடங்கள் பதிந்திருந்தன. நண்டு தடமா? ஏதோ கொக்கி இழுத்துப் போனதா?
இன்னும் கொஞ்சம் போனால், குப்பைகளை வட்டமிட்ட காகங்களுக்கு அப்பால் ஒரு புறாக் கூட்டம். கவுதாரியா? அவை ஒரு கூட்டமாக ஒரு இடத்தில் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து இரை கொத்துகின்றன. அருகில் போனதும் அவை எழுந்து பறக்க, அந்த இடம் முழுவதும் அவற்றின் நகத்தடங்கள். அந்த இடத்தில் அவற்றின் பாத வெப்பம் சூடாக்கியதை உணர முடிந்தது.
கடலில் கால் நனைக்கவும், குளிக்கவும், விளையாடவும், கடலோரமாக வாக்கிங் போகவும், சும்மா உட்கார்ந்திருக்கவும் காலையிலேயே அவ்வளவு நேரத்துக்கு நல்ல கூட்டம். செருப்பை ஒரு இடத்தில் வைத்து விட்டு பையையும் அதன் மீது நிற்க வைத்து விட்டு அலையை நாடிப் போனேன். பை இருந்த இடம் வரை அலை நனைப்பு தெரியத்தான் செய்தது.
கால்கள் நனைந்தன, பேன்ட் நனைந்தது, பாதங்களுக்குக் கீழே மண்ணைப் பறித்து சென்றது. கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் படகுகளில் மிதந்து கொண்டிருந்தார்கள். வானம் அமைதியாக இருந்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு பைக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். கடலையும் நீரையும் மக்கள் கூட்டத்தையும் வெறித்தபடியே எண்ணங்களை ஓட விட்டேன். திடீரென்று பார்த்தால் அடிவானில் சூரிய கோளம் மேலெழும்பி வருகிறது. சுமார் 6-ல் ஒரு பங்கு ஏற்கனவே ஏறி விட்டது. மேக மூட்டம் என்று நினைத்ததை பீறிட்டுக் கொண்டு சிவப்புக் கோளமாக சாதுவாக தெரிந்தது. ஓரிரு நிமிடங்களில் பூமி சுழன்று சுழன்று முழு கோளமும் கண் பார்வைக்கு வந்து விட்டது. அதன் பிறகு மேகத்துக்குள்தான் போக வேண்டும்.
பலர் கேமராக்களை கிளிக்கினார்கள், மொபைல் கேமராக்கள், இன்னும் தனிச்சிறப்பான கேமராக்கள் என்று உற்சாகமடைந்தார்கள். கடல் நீர்பரப்பில் ஜொலிஜொலிப்பான ஒளி பரவியிருந்தது. மேகத்துக்குள் போய் வெளியே வரும் போது வெயிலாகி விடும் புறப்பட்டு விடலாம் என்று நினைத்திருந்தேன்.
திடீரென்று வலது கைப்பக்கம் ஒரு மஞ்சள் நிற நண்டு. ஒரு இளைஞன் மெலிதான அட்டையால் அதைத் தூக்கி விட்டு கடலுக்குள் செலுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். ஏதாவது அமைப்பில் இருக்கிறானா, அல்லது தனிப்பட்ட ஆர்வமா என்று தெரியவில்லை. அது கடல் அலை விளிம்பைத் தாண்டி போயிருந்திருக்கிறது. அலை விளிம்புக்குள் கொண்டு வந்து, தண்ணீர் ஓடி வரும் இடத்தில் விட்டான். அலை வந்து தொடும்போது அதில் கொஞ்சம் உயிர் தெரிந்தது. மற்றபடி சுறுசுறுப்பாக கடலுக்குள்ளோ வெளியிலோ ஓடுவது போல தெரியவில்லை. கூட இருந்த இன்னும் இரண்டு இளைஞர்கள் போட்டோ எடுத்தார்கள்.
“கடலுக்குள் போக விரும்பவில்லை போல இருக்கிறது" என்று சொன்னேன். அதற்கு முன்பு, “இது மஞ்சளாக இருக்கிறது, மெரீனாவில் சிவப்பு நண்டு பார்த்திருக்கிறேன்" என்று சொன்னதற்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி முடித்து விட்டான்.
சூரியன் ஏறி ஏறி இன்னும் வெளியில் வருவதற்கு முன்பே கிளம்பி விட்டேன்.