என்னைப் பற்றி

புதன், டிசம்பர் 31, 2008

ஆண்டிறுதி

டிசம்பர் 31, 2008. ஆண்டின் கடைசி நாள். நேரம் அதிகாலை 2 மணி. நீண்ட நாட்களுக்குப் பிறகு உறக்கம் பிடிக்காமல் ஒரு மணிக்கு விழித்து, எழுந்து உட்கார்ந்திருக்கிறேன். மாலையில் சாப்பிடுவதைத் தவிர்த்த பிறகு இந்தத் தொல்லை போய் விட்டிருந்தது. எட்டு மணிக்கு இரண்டு சப்பாத்திகளை உள்ளே தள்ளி விட்டால், 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருக்கிறது.

நேற்றைக்கு நிறையவே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். காலையில் எழுந்து பார்த்தால் வீட்டுத் தரையெல்லாம் தூசி படிந்து இருப்பதை உணர்ந்து அதற்கு வழி செய்ய முனைந்தேன். கையோடு அலமாரிகளில் விரித்திருந்த நாளிதழ் தாள்களை மாற்றி துணிகளை, பாத்திரங்கள், மற்ற பொருள்களை அடுக்கி வைப்பதும் எடுத்துக் கொண்டேன். முடிக்கும் முன்னரே நாளிதழ் வந்து விழுந்தது. வெளியில் போய் குடிக்கத் தண்ணீரும் எடுத்துக் கொண்டேன்.

தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு, ஓட்சும் காய்ச்சி வைத்தேன். கடை திறந்திருந்தால், தேங்காய் வாங்கிக் கொள்ளலாம். கடைக்குப் போய் பப்பாளிப் பழம், தேங்காய், சர்க்கரையைத் தவிர்க்கலாம் என்று தேன், டாபர் தேன் -39 ரூபாய். பொரிகடலை, தேங்காய், தேன் கலந்து ஒரு கிண்ணத்தில், ஓட்சு கஞ்சி ஒரு கிண்ணத்தில், பப்பாளிப் பழத்தை வெட்டி ஒரு தட்டில். பழத்தை முதலில் சாப்பிட்டு முடித்து விட்டேன். குளித்து விட்டு மற்ற இரண்டையும் உள்ளே தள்ளி விட்டுக் கிளம்பினேன்.

வயிறும் மனமும் நிறைந்திருக்கவில்லை. முற்பகலில் வெளியில் போய் சாப்பிடுவதற்குப் பதிலாக இப்போதே சாப்பிட்டு விடலாம் என்று ஹாட் சிப்சு உணவகத்தில் பூரி. அலுவலகத்திற்குப் போய் வேலைகள். பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் வெட்டிய கேக்கில் ஒரு துண்டு 11 மணிக்கு. மதியம் அலுவலக உணவு விடுத்து, 2 மணிக்கு மேல் டாடா உடுப்பியில் போய் பரோட்டா.

திரும்பி வந்து நண்பருடன் போய் தேநீர் விடுதியில் இனிப்புத் திண்பண்டமும் தேநீரும். அடுத்து ஒரு முறை தேநீர் கடைக்குப் போகும் போது எதுவும் சாப்பிடாமல் தவிர்த்துக் கொண்டேன். வயிறு சுருங்கி விட்டது போலிருக்கிறது. இவ்வளவுக்கும் அடைத்தது போல ஆகி விட்டது. மாலையில் எட்டு மணி வாக்கில் வளசை சுபாவில் சப்பாத்திகள். ஒரு இட்லி.

தூக்கத்தில் வரிசையான கனவுகள், ஆழமில்லாத தூக்கம். 1 மணிக்கு எழுப்பி விட்டது. புரண்டு படுத்துப் பார்த்து விட்டு எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

அரிசிப் பொருட்களை சாப்பிடுவதை குறைத்த பிறகு கிடைத்த மாற்றங்களும், நிம்மதிகளும் ஏராளம். சாப்பிட்டு ஓரிரு மணி நேரங்களில் மெலிதான பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது. பகலில் எந்த நேரமும், மந்தமாக கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கலாம் என்று உணர்வே ஏற்படுவதில்லை. நெஞ்சில் எரியும் செரிக்காத தொல்லையே போய் விட்டது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் உணர்ந்து கொள்வது நாளில் சில முறை நடக்குமளவுக்கான விழிப்புணர்வு இருக்கிறது.

சனிக்கிழமை மதியத்துக்கெல்லாம் பிடித்திருந்த சளி தொண்டையையும், தலையையும் நிரப்பி, தொண்டை வலி, மண்டைக் கனம் என்று முடக்கிக் கொண்டிருந்தது. எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டு, இரண்டு விரிப்புகளை விரித்து படுத்து விட்டேன். கனமும் அழுத்தமும் இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. காலையில் எழுந்திருக்கவேவில்லை. இழுத்து மூடிக் கொண்டு படுத்து விட்டேன். நாளிதழ் வந்ததும் அதை எடுத்துப் படித்து விட்டு தூக்கத்தைத் தொடர்ந்தேன். மதியத்துக்கு மேல் கொஞ்சம் தெளிந்ததும் தொலைபேசியில் பேச வேண்டியவர்களிடம் பேசிக் கொண்டேன். வெளியில் எட்டியே பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். முந்தைய நாள் கடையில் வாங்கி வைத்திருந்த பிரெட் துண்டுகளை வாட்டிச் சாப்பிட்டுக் கொண்டேன். வறுத்த கடலையும், பாகற்காய் வறுவலும் கூடவே.

ஞாயிறு இரவும் அதே அடைப்பைத் தொடர்ந்து விட்டுக் காலையில் எழுந்திருக்கும் போது இரண்டு நாட்கள் முன்பு 'ஒரு வாரம் படுக்கையில் தள்ளி விடுமோ' என்று மிரட்டிய சளிக் கட்டல் விலகிப் போயிருந்தது. 9 மணிக்கு அலுவகம் போய் விட்டேன். அதிகமாக வெயிலில் காற்றில் அலையாமல் தவிர்த்து விட திங்களும் இதமாகவே போய் விட்டது. காலையில் எழுந்ததும், காதைச் சுற்றி ஒரு துண்டைப் போட்டுக் கொண்டால் குளிரின் தாக்கத்தை தடுத்து விட முடிந்தது.

பிடித்த சளி வெளியேறும் விதமாக தும்மல்களும், மூக்கு அடைப்புகளும் எட்டிப் பார்த்தாலும், பிடித்து ஆட்டும் சோர்வு இல்லாமலேயே இந்த சளிப் பிடித்த படலம் ஓடிக் கொண்டிருக்கிறது. வளமையான ஒரு வார ஓட்டத்தோடு போய் விட வேண்டும்.

மருந்துகளை சாப்பிட்டு நோயிலிருந்து நிவாரணம் தேடிக் கொள்வது உடலின் எதிர்ப்பு சக்தியையும் மனதின் ஒழுக்கத்தையும் கெடுத்து விடுகிறது என்று மகாத்மா குறிப்பிடுகிறார். 'எனது உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஒன்றை நான் செய்து விட்டேன். நோய் பீடிக்கிறது. அந்தக் காரணத்தை உணர்ந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொண்டு, செய்து விட்ட ஒன்றை சரி செய்து கொள்ளும் படி உடலின் மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் அடுத்த தடவை அதே செயலை செய்யாமல் தவிர்த்து விடும் மன ஒழுக்கம் கிடைத்து விடும். உடலுக்கும் எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கும்.

மாறாக, உடனடித் தீர்வாக ஏதாவது மருந்தை உள்ளே தள்ளிக் கொண்டால், நோயின் விளைவுகளிலிருந்து எனக்கு உடனடி விடுதலை கிடைத்து விட, நோய் முதல் நாடும் முயற்சிக்கே நேரமும் வாய்ப்புக் இல்லாமல் போய் விடும். அடுத்த தடவை அதே செயலை செய்து, இதே நோயை வாங்கிக் கட்டிக் கொண்டு, அதே மருந்தை இன்னும் அதிகமாக சாப்பிட்டு மருந்துக்கு அடிமைகளாக வாழத் தொடங்கி விடுகிறோம்.' ஒருவருக்கு நாலைந்து பிணிகள் வருகின்றன என்றும் ஏழெட்டு மருந்துகளைச் சாப்பிடுகிறார் என்றும் வைத்துக் கொண்டால் உடலும் மனமும் எவ்வளவு குறைபாடுகளை குவித்துக் கொண்டு விடுகின்றன.

நாமெல்லாம் நேரமில்லை நிறைய வேலை என்று சலித்துக் கொள்கிறோம். எண்பத்தைந்து வயது முதியவர், கலைஞர் எப்படி உழைக்கிறார். தினத்தந்தி நாளிதழைப் படித்தால் ஒரு நாளைக்கு இரண்டு அறிக்கைகள், ஒரு கூட்டத்தில் உரை ஆற்றுதல் என்று கலைஞரின் கருத்து வெளிப்பாடுகள் இரண்டு மூன்றுக்குக் குறையாமல் காணக் கிடைக்கின்றன. அதற்கான வாசிப்புகள், தயாரிப்புகள் என்று ஒரு நாளைக்கு பத்துப் பதினைந்து மணி நேரங்களுக்குக் குறையாத உழைப்பு அவரிடம் இருக்கிறது.

அவரது வயதில் பாதி கூட இல்லாத நமக்கு 'அதிகம் வேலை செய்து விட்டோம், அதனால் எழுதுவதைத் தவிர்த்து விட்டோம். காலையில் எழுந்திருக்கவில்லை, அதனால் இன்ன வேலையைச் செய்யவில்லை' என்று ஆயிரம் காரணங்கள். சின்னச் சின்னப் பொறுப்புகளைக் கூட நிறைவேற்ற முடியாத சுணக்கம்.

2008 ஓடி விடை பெறப் போகிறது. என்ன ஒரு ஆண்டு! போன டிசம்பர் 29 அன்று அலுவல நண்பர்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்து பல குழு நிகழ்ச்சிகள் நடந்தது. 31ம் தேதி சிங்கப்பூரிலிருந்து வந்த அப்பா அம்மாவை விமான நிலையத்தில் போய் சந்தித்து விட்டு வந்தது, மாலையில் குடியிருக்கும் இடத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி எல்லாம் குறித்து எழுதியிருக்கிறேன். அப்படியே போன ஆண்டுக்கான நாட்குறிப்புகளை எடுத்துப் பார்க்க ஆரம்பிக்கிறேன். 5ம் தேதி அன்று கடந்து வந்த கட்டங்களைக் குறித்த ஒரு பறவைப் பார்வை பார்த்து எழுதியிருக்கிறேன்.

துவைக்க வேண்டிய துணிகள் குவிந்திருக்கின்றன. தரையெல்லாம் தூசி படிந்து கொண்டே இருக்கிறது. ஒரு முறை துடைக்கலாம். இதை எழுதும் போதே இமைகளில் தூக்கக் கனம் தெரிய ஆரம்பிக்கிறது. படுக்கலாம் என்று உடலின் கெஞ்சல்.

வெள்ளி, டிசம்பர் 19, 2008

ஏழு வயது குழந்தை

இந்தக் குழந்தைக்கு வயது ஏழு ஆகி விட்டது. 2001ம் ஆண்டில் டிசம்பரில்தான் இந்தப் பணித்திட்டத்தில் தீவிரமாக இறங்கி நடைமுறைப்படுத்துவதை ஆரம்பித்தேன்.

இப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கருக் கொண்டது 2001ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் இருக்கலாம். பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக செய்து வந்த பணிகள் ஓய்ந்து கொண்டிருந்த சமயம். நிரல் உருவாக்கத்திலும், தமிழ் டாட் நெட் தொடர்ந்த எறும்புகள் குழுமத்திலும் ஆர்வமாக பணி செய்து கொண்டிருந்த சமயம்.

2001 டிசம்பரில் ஆரம்பிக்கும் போது, பெற்றெடுக்க உதவியாக இருந்தது கல்லூரி நண்பன். சீனாவிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இடம் பிடித்து வாழ்க்கையை அமைப்பதற்கு ஓரிரு மாதம் பிடித்தது. செயிண்ட் தாமசு மலைக்கருகில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அருகிலேயே இருந்த அவனுக்கு தொலைபேசி விபரம் சொன்னேன். இங்கே தங்கினால் நிறைய செலவாகும். இன்னொரு நண்பனின் வீட்டில் இப்போது இடம் இருக்கிறது, என்று அவன்தான் ஆலோசனை சொன்னான்.

அடையாறில் வீட்டில் இருந்து கொண்டே வாடகைக்கு வீடு தேடினேன். இந்து பத்திரிகையில் அகர வரிசையில் முதலில் வருவது அண்ணா நகர். வழக்கமான தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளை விட்டு விட்டு தேடினேன். அண்ணா நகரில் இரண்டு வீடுகள் அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை பார்க்கக் கிளம்பினோம். முதல் வீடு புத்தம் புதிதாக வீட்டுக் காரர் ஆர்வமே இல்லாமல் காட்டினார். இரண்டாவது வீடு அமைந்து விட்டது.

நிறுவனம் தொடர்பாக நிரல் உருவாக்க வேண்டும். எறும்புகள் சந்திப்பு ஒன்றுக்குப் போனோம். அடையாறில் இருந்த ஒரு எறும்புகள் உறுப்பினரின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு ஒருவர். தோல் துறை தொடர்பான பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம்.

வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு அல்லது போரூரில் இருக்கும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம் என்றார். ஒரு நல்ல நாளில் என்னை அடையாறிலிருந்து இரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வளசரவாக்கம் நோக்கி அழைத்துச் சென்றான். கிளம்பும் போதே தாமதமாகி விட்டிருந்தது. எனக்கு நேரம் தவறி விடுமோ என்று எரிச்சல். நான்கு முறை தொலைபேசி தாமதமாக வருவதாகச் சொல்லி விட்டேன். 'அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால்தான் இப்படி நேரம் பற்றிக் குறிப்பாக இருக்கிறார்' என்று அப்புறமாகச் சொன்னார்.

அவரது அலுவலகம் ஒரு வீட்டுக்குள் இருந்தது. புதியத் திட்டப் பணிக்காக ஒரு நிறுவனம் உருவாக்கி அதில் 50க்கு 50 என்று பொறுப்பும் உரிமையும் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.

அவர்கள் நிரல் எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை விளக்கினேன். அங்கு நிரல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் விளக்கச் சொன்னார். முதலில் பயனர் மேலாண்மை பகுதியைச் செய்து விடலாம் என்று உடனேயே உறுதி அளித்தார்கள். வளசரவாக்கத்தில் இருந்த ஒரு விடுதியில் மதிய உணவும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

திட்டப்படி, தோல் செய்யும் நிறுவனங்களுக்கு தோல் தேவையை அனுப்பும் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இணையத்தில் இணைந்து நமது பயன்பாடு மூலம் உள்ளிடுவார்கள். தோல் நிறுவனம் உள்நுழையும் போது புதிதாக வந்திருக்கும் தேவை விபரங்களைத் தெரிந்து கொள்வார்கள். அந்தத் தேவைகளை உற்பத்திக்கு எடுத்து, தயாரான பிறகு வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விபரங்களையும் இதே பயன்பாட்டில் போட்டு வைப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் எத்தனை தேவைகள் அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு உற்பத்தியில் இருக்கிறது, எந்தத் தேவைக்கு எவ்வளவு தோல் அனுப்பியிருக்கிறார்கள், எவ்வளவு மீதி இருக்கிறது போன்ற விபரங்களை இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு 10 வாடிக்கையாளர்கள் இருந்தால், தோல் நிறுவனம் எல்லா வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களையும் பயன்பாட்டில் உள்ளிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது தேவை விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும். பயனரைப் பொறுத்து விபரங்களை மட்டுப் படுத்த வேண்டும்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு இதை விற்று விட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அவர் இந்தப் பயன்பாட்டில் மனம் மகிழ்ந்து தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் இதே போல லெதர்லிங்க் பயன்பாட்டின் மூலமாக தனது தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வழி செய்யுமாறு வற்புறுத்துவார். அப்படி அவரது மற்ற விற்பனையாளர்களும் லெதர்லிங்கிலிருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடிக்கையாளருக்கு விபரங்கள் பார்க்க வழி செய்வார்கள்.

ஒரு வாடிக்கையாளருக்கு பல விற்பனையாளர்கள் லெதர்லிங்க் பயன்பாடு மூலம் தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வசதி கிடைத்திருந்தால், எல்லா விற்பனையாளர்களின் விபரங்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியும் படி வசதி செய்து கொடுத்து விட வேண்டும். லெதர்லிங்குக்கான பணம் விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். வாங்குபவர்கள் கட்டணமின்றி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிக உறுதியான திட்டம். பயன்பாட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் நல்ல வாடிக்கையாளர் சேவை அளித்து தமது தொழிலை பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சேவையால் மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் தாமே முன் வந்து மற்றவர்களுக்கு நமது பயன்பாட்டை பரிந்துரை செய்வார்கள்.

அப்படிப் பரிந்துரை செய்வதற்கான வசதிகளையும் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஆட்கள் கிடைத்து விட்டார்கள், வேலையை ஆரம்பித்து விடலாம் என்றுதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு நகருக்குள் சுற்றி வர ஒரு வண்டியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா நகரின் 9வது பிராதானச் சாலையில் முதல் மாடியில் இருந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து குடிபுகுந்து விட்டேன். மூன்று அறைகள், ஒரு பெரிய முன்னறை, சமையலறை. ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் வீதம், நான்கு தளங்கள் இருந்தன. அண்டை அயலாருடன் பழகும் இயல்பு எனக்கு கிடையாது.

அண்ணா நகரின் டிவிஎஸ் விற்பனை நிலையத்துக்குப் போய் வண்டிகளைப் பார்த்தோம். அங்கிருந்த விற்பனையாளர் சரியாகப் பேசிக் கவனிக்கவில்லை. விலையை காசோலையாகக் கொடுத்தால், காசோலை பணமாக மாறிய பிறகுதான் வண்டியை எடுத்துப் போக முடியும் என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்து வெளியில் வந்து விட்டேன்.

நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்த சுசுகி சமுராய் வண்டியை வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். 2001ம் ஆண்டில் அந்த தயாரிப்பையே ஓய்த்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக நான்கு சுழற்சி முறையிலான டிவிஎஃச் விக்டர் அறிமுகப்படுத்த இருந்தார்கள். கடைசியில் நங்கநல்லூரில் இருந்த புளூ பைக் நிறுவனத்தில் வண்டியை வாங்க பதிவு செய்து கொண்டோம். அவர்கள் வண்டி உரிமத்துக்கு ஏற்பாடு செய்ய 2 நாட்கள் பிடிக்க, 2 நாட்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுத்துக் கொண்டேன். அவர்களும் உடனடியாக வண்டியைக் கொடுத்து விடவில்லைதான்.

வண்டி வாங்கியாச்சு, ஓட்டப் படிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். கற்றுக் கொடுத்தலில் ஒரே நாளில் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வேக மாற்றிகளைக் கையாளுதல் போன்ற புதிய விபரங்களில் தேர்ச்சி பெற வேண்டும். உரிமம் பெறுவதற்காக ஆலந்தூரில் இருந்த போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் உரிமம் வாங்கிக் கொண்டேன்.

அதை வைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் குழுவினர் எழுதும் நிரல், மென்பொருள் நிறைவளிக்கவில்லை. அவர்களுக்கு பரிநிரல் பயன்பாடுகளைப் பயன்படுத்த விருப்பமில்லை. மைஎசுகியூஎல் வேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். போசுடுஎசுகியூஎல் பயன்படுத்தலாம் என்றால் அவர்களுக்கு அதில் தேர்ச்சியில்லை. போகும் போது ஏற்கனவே செய்து வைத்த சில இடைமுகங்களைக் காட்டினார்கள். நமது பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாமல் பொதுவாக பயனர் மேலாண்மை என்று இருந்தது. இடையில் வீட்டுக்குக் கூட்டிப் போய் மதிய உணவெல்லாம் கொடுத்தார்.

வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்பி ஒரு ஆண்டு முடியும் காலமாகியிருந்தது. அவன் வேலை ஒன்றில் சேர முடிவு செய்து, மைலாப்பூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். நான் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.

தமிழ்க் குழுக்களின் மூலம் அறிமுகமாயிருந்த பேராசிரியர் தனது உறவினரின் மென்பொருள் நிறுவனம் வேளச்சேரியில் இருப்பதாகவும், அவர்கள் பரிநிரல் பயன்படுத்தி மென்பொருள் செய்வதாகவும் சொன்னார். அவரிடம் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசினேன். விபரங்களைக் கேட்டு விட்டு 17000 ரூபாய்கள் கொடுத்தால் முடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்கள்.

வேளச்சேரியில் சுடாலினின் வீட்டுக்கு அருகிலேயே புரொபசனல் அல்காரிதம்சு என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். போசுடுகிரசுஎசுகியூஎல், பிஎச்பி என்று பேசினார்கள். தலைமையில் வேலை நடக்கும் என்றார்கள். எனக்கு என்ன தேவை என்பதை எழுதிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள்.

நான் எச்டிஎம்எல்லில் எந்த மாதிரி இடைமுகங்கள், அறிக்கைகள் வர வேண்டும் என்று செய்து அதற்குள் நான் வாடகைக்கு எடுத்திருந்த இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். லெதர்லிங்க் டாட் நெட் என்ற முகவரியை பதிவு செய்து கொடுத்திருந்தார். போகசு இந்தியா என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 5000 ரூபாய் செலவில் இணைய வழங்கியில் இடம் வாங்கியிருந்தேன். அவர்கள் அதில் போசுடுகிரெசுஎசுகியூஎல்லும் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.

அந்தத் தளத்தில் போய் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது. முதல் தவணை பணத்தைக் கொடுத்து விட்டேன். மளமளவென்று நிரல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி முதல் வாரம் தோல் கண்காட்சிக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். ஒரு மாதத்தில் முடித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.

ஒரு மாதத்தில் எதுவுமே முடிந்திருக்கவில்லை, முடித்திருக்கவும் முடியாது. ஏதோ சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் கொடுத்த பணத்துக்கு முழு பயன்பாட்டுக்கான அடிப்படை நிரல்கள் கிடைத்து விட்டன. கொஞ்சம் சண்டை போட்டு விட்டு நிரலை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

குழந்தை கண்களை இறுக மூடிக் கொண்டு குட்டியாக கையில் இருந்தது. வீட்டில் ஒரு அறையில் இரண்டு கணினிகள், ஒரு மடிக்கணினி என்று போட்டு வைத்திருந்தேன். வேலையைத் தொடர சித்தப்பா பையன் தம்பி நண்பனின் தம்பி சேர்த்துக் கொண்டேன். இரண்டு பேரும் கணினிவியலில் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருந்தார்கள். அவரவர் வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம்.

இதற்குள் சமாதானக் கொடி காட்டி அவளையும் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டிருந்தேன். தோல் கண்காட்சியில் அறிமுகத்தின் மூலம் ஒரு தோல் நிறுவன உரிமையாளரைச் சந்தித்து நமது பயன்பாட்டைப் பற்றி விளக்கியிருந்தேன். குரோம்பேட்டை நாகல்கேணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து அது வரை செய்து வைத்திருந்த பயன்பாட்டைப் பற்றிச் சொன்னேன். அவர் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், பயன்படுத்திப் பார்த்தால் போதும் என்று பேசிக் கொண்டேன்.

அவருக்கு எனது சீனத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணம் இருந்திருக்கும். சீனாவில் தோல்களை விற்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ளச் சொல்லலாம் என்று விபரங்களைக் கொடுத்தேன். எனக்கு அதில் ஆர்வமில்லை. பிற்காலத்தில் வளர்த்தபடி செய்யும் திட்டம் எட்டிப் பார்க்கவே இல்லை. தோல் விற்பதில் எனது திறமை பொருந்தாது என்று ஏற்கனவே சலித்திருந்தது.

ஆரம்ப கால வாடிக்கையாளர்கள் எல்லோருமே சீனத் தொடர்பின் அடிப்படையில்தான் கிடைத்தார்கள்.

தொழில்நுட்ப முகப்பில் இணையத்தில் தீவிரமாக படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஈடுபட்டிருந்தேன். ஸ்லாஷ்டாட், போசுடுகிரெசுகியூஎல், பிஎச்பி என்று ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன். பயன்பாட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள், புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் நானே புரிந்து கொள்ள முயற்சி செய்து வெற்றியும் கண்டு கொண்டிருந்தேன். பயன்பாட்டில் இருந்த தரவுத்தள வடிவமைப்பு, நிரல் அமைப்பு அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ராணிப்பேட்டையில் போய் பேசி விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு தகவல் மேலாண்மைக்கு உதவி செய்யலாம் என்று திட்டம். ராணிப்பேட்டையில் இணைய இணைப்பு சொதப்பலாக இருந்தது. இணையத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பாண்டிச்சேரியில் நிறுவனம் நடத்தி வரும் நண்பனிடமும் தொடர்பு கொண்டிருந்தேன். வேலை பார்க்கும் கல்லூரித் தோழியின் மூலம் அவர்களையும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.

வேலை தேட ஆரம்பித்திருந்தாள். நிறுவனத்துக்குப் போய் உரிமையாளரைச் சந்தித்த போது என்னைப் பற்றிச் சொல்ல என்னுடைய பயன்பாட்டைப் பார்க்க அழைத்திருந்தார். அங்கும் விற்பனைக்கான சாத்தியங்கள் தெரிந்தன.

நிரல் உருவாக்கத் தரப்பில் மனம் சலித்து வேறு வழி பார்த்து போயிருந்தார்கள். தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க அவரது கல்லூரியில் மாணவர்களான இரண்டு பேரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அப்படி வந்து சேர்ந்தார்கள் இரண்டு பேர். 5000 ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்கிறோம் ஆளுக்கு 2500 கொடுத்து விடுங்கள் என்று சேர்ந்து கொண்டார்கள்.

வீட்டில் அந்த அறையிலேயே சுவற்றில் பொருத்தும்படியாக ஒரு மேசை உருவாக்கி அவர்களும் உட்கார்ந்து பணி புரியும்படியான சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் சூழலோ மோசமாகவே இருந்து வந்தது. உரசல்கள், வழக்கம் போல வெடிப்புகளாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு முறை பணி புரிய வந்தவர்களும் அதைப் பார்க்க நேரிட்டது.

டாடா நிறுவனத்தில் ஓட்டுனராக இருந்தவர் தனது உறவினர் என்று ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் எப்படிக் கற்றுக் கொள்கிறார் என்று பார்த்து விட்டு முடிவு செய்தவாகச் சொல்லியிருந்தேன். அவரை சும்மாவே அனுப்பி வைத்து விட்டேன்.

நிரல் உருவாக்கத்தை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு இடத்துக்கும் போய் அவர்களைப் பயன்படுத்த வைத்தோம். நமது பயன்பாட்டில் வாடிக்கையாளர் தேவைகளை உள்ளிடவும் ஆரம்பித்தார்கள். கொஞ்சம் காசு கூட வாங்கிக் கொண்டோம்.

கையில் இருந்த சேமிப்புகள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டு வாடகை, வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது - சோபா, தரை விரிப்புக் கம்பளம், துணி துவைக்கும் எந்திரம், தொலைக்காட்சி, குளிர்பதன கருவி என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கி முடித்தோம். வெளியில் சுற்றுவது, சாப்பிடுவது என்றும் குறையில்லை. இதோ ஓரிரு மாதங்களில் நிறுவனத்திலிருந்து பணமாகக் கொட்டப் போகிறது. அதனால் எந்தக் கவலையும் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. இணைய இணைப்பு சரியில்லாமல் பயன்படுத்துவது சரியில்லாமல் எதுவும் வெளிப்பாடு வரவில்லை. ஆனால் நடைமுறைத் தகவல்களை உள்ளிட முயற்சிக்கும் போது பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது தெரிந்து செய்து முடித்தோம்.

தொழில் நுட்பப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்தேன். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க வேண்டுமானால் சொந்தமாக வழங்கி இருக்க வேண்டும் என்று நெட்பார் இந்தியாவில் நமது வழங்கியை வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். மாதா மாதம் அதற்கு 7000 ரூபாய் செலவாகி வந்தது.

அந்த 7000, வீட்டு வாடகையில் நிறுவனத்தின் பங்காக 3000, சம்பளம் 5000 என்று 15000 ரூபாய்கள் செலவாகி வந்தது. இது போக தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவுகள் என்று மாதம் 20000 தாண்டியது. வீட்டுச் செலவுகளாக வாடகையில் பங்கு 4000, சாப்பாட்டுச் செலவுகள் 5000, வெளியில் போய் வரும் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று 20000 தொட்டுக் கொண்டிருந்தது. மொத்தச் சேமிப்பு சில லட்சங்கள்தான் இருந்தது. டிசம்பர் வரும் போது எல்லாமே வறண்டு போயிருந்தது.

வியாழன், டிசம்பர் 18, 2008

பயணங்கள் தொடருகின்றன

பெங்களூரு செல்லும் ரயில் வண்டியில். காலை மணி எட்டு. ஒரு மணி நேரம் எழுதிப் பார்க்க அவகாசம். ஆறு மணி நேரப் பயணம் முடிந்து மதியத்துக்கு மேல்தான் போய்ச் சேரும்.

ஒரு வாரம் பெங்களூரில் தங்கி பணி புரியலாம் என்று திட்டம். இனி வரும் ஆண்டுக்கான திட்டங்களை வகுக்கவும், இது வரை போன காலத்தின் பலன்களை அலசவும் ஓய்வும், இடைவெளியும், தூரமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நிறுவனத்தின் தினசரி மேலாண்மை பொறுப்புகளை ஒப்படைத்து விட முடிவு செய்தேன்.

போன வாரம் நாகர்கோவில் போய் வந்தது, அங்கு எடுத்த முடிவுகள் திடமான பலன்களைத் தர ஆரம்பித்திருக்கின்றன.

போன வெள்ளிக் கிழமை ராணிப்பேட்டையில் குட்லெதரில் இருக்கும் போது ஒரு அழைப்பு.

'வேலையெல்லாம் முடிச்சாச்சா?',
'என்ன வேலை?'
'ராணிப்பேட்டையில்தானே இருக்கிறாய்? எப்போ பணிகள் முடிந்து புறப்படுவாய்?'
'நானா, ஆறு ஆறரை மணி தாண்டி விடும்'
சரி என்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டேன்.

என் பேச்சில் இருந்த விடுபட்ட தன்மை புரிந்திருக்கும். உரையாடலின் ஆரம்பத்தில் குரலில் இருந்த துள்ளல் சில விநாடிகளில் முடியும் போது வடிந்து போயிருந்தது. அத்தோடு நேற்றைக்கு மீண்டும் ஒரு முறை அழைப்பு. எண்ணை சேமித்து வைத்திருந்த பெயரை நீக்கியிருந்தேன். அழைப்பு வந்தால் பெயர் எதுவும் இல்லாமல் எண்ணாகத்தான் தெரிகிறது.

குரலில் கொஞ்சம் கொஞ்சல், ஏதாவது காயப்படுத்தும்படி சொல்லி விடுவேனோ என்ற அச்சம்.

'பக்கத்து வீட்டுப் பையன் வந்திருக்கிறான், உன்னிடம் பேச வேண்டுமாம்'
'கொடு'

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலைகளுக்குப் போய் வேலை செய்ய விருப்பம் இல்லாமல், இரவில் பணி புரியும் பிபிஓ நிறுவனத்தில் சேர்ந்த பையன்.

'உங்க நிறுவனத்தில் ஏதாவது வேலை இருக்குமா? பிபிஓவில் போகிறேன். இரவில் போக வேண்டியிருக்கிறது. ஏதாவது மென்பொருள் துறையில் கிடைத்தால் நன்றாக இருக்கும்'

'எங்க அலுவகத்தில் எதுவும் வேலை இருக்காது. வேண்டுமானால், தொழிற்சாலைகளில் பொறுப்பு எடுத்து செய்யும்படி பார்க்கலாம்.'

'தொழிற்சாலை என்றால் எங்கே?'

'வேலூர் மாவட்டத்தில். ஒரு வாரம் நான் ஊரில் இல்லை. அடுத்த வாரம் தொலைபேசி விட்டு அலுவலகத்துக்கு வாங்க. பேசலாம்'

காலங்கள் மாறி வருகின்றன.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு.

'உனக்கு ஒண்ணுமில்லையே!'

'நல்லாதான் இருக்கேன். ஏன்?'

'இல்ல, காலையில் மூணரை மணிக்கு என்னை ஏன் எழுப்பி விட்டாய். திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். என்னை நினைத்தாயா?'

சமாதானப்படுத்தும், அணுகும் முயற்சி.

'அப்படியா! நான் நல்ல்ல்லாத்தான் இருக்கேன். நீயும் நல்லா இருக்கே அல்லவா, பார்த்துக்கோ'

உரையாடலை முடித்துக் கொண்டேன்.

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதை எல்லாம் நம்பாதே என்று இருவர் திரைப்படத்தில் ஒரு பாட்டு வரும். நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டே இருப்பவர்களிடம், திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பரிவு காட்டத் தெரியாதவர்களிடம் கேட்டு வாங்க வேண்டும், அல்லது கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும், இனிமேலும் கிடைக்காது என்று தெரிவித்து விட வேண்டும்.

அப்படி கேட்க, நிறுத்தி விட, தெரிவித்து விட ஆரம்பித்ததும் எதிர்வினைகள் பொங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களிடம் காசு கேட்கப் படித்து விட்டேன். 'இன்ன வேலை செய்திருக்கிறேன், அதனால் உங்களுக்கு இன்ன பலன் கிடைத்திருக்கிறது, எங்களுக்கு இத்தனை பணம் வேண்டும்' என்று கண்களைப் பார்த்துக் கேட்கப் படித்துக் கொண்டேன்.

உணர்ச்சிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, நம்மை மருட்டி, அதட்டி, பயமுறுத்தி, அல்லது திசை திருப்பி தம் வேலையை சாதித்துக் கொள்ள முயற்சிக்கும் நேரங்களில் உணர்ச்சிகளை வடிகட்டி விட்டு சொல்லப்படும் பொருளை மட்டும் கருத்தில் எடுத்து பொருத்தமான விடை கொடுத்து வேலையை சாதித்துக் கொள்ள முடிகிறது.

திங்கள் கிழமை நாள் முழுவதும் ஒரு வாடிக்கையாளருடன் சந்தித்து விவாதம். காலையில் ஆரம்பித்து உணவு இடைவேளை வரை போன சந்திப்பு மதியத்துக்கு மேலும் தொடர்ந்தது. நாம் தயாரித்துக் கொண்டு போன விபரங்கள், சொல்ல விரும்பிய கருத்துக்களை எல்லாம் அவர் மனதில் பதியும் படி வெளிப்படுத்தி விட முடிந்தது. அதற்கான எதிர்வினையாக நமக்குத் தேவையான, நமக்கு சாதகமான விளைவுகளையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் ஒரு சந்திப்பு. அங்கு நிலைமை கொஞ்சம் நோஞ்சானாக இருந்தது. எடுத்துக் கொண்ட வேலையின் அளவுக்கு ஏற்ற வருமானம் இல்லாத நிலைமை. அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், நமது முயற்சிகளுக்கும் பெரிய இடைவெளி உண்டு. அங்கும் உணர்வுகளை எல்லாம் உறிஞ்சிக் கொண்டு உண்மைகளை மனதில் உறைக்கும்படி பேசி விட்டுப் புறப்பட முடிந்தது.

நேற்றைக்கு இன்னொரு நிறுவன உரிமையாளருடன் சந்திப்பு. இது வரை செய்த பணிகளிலேயே மிகச் சிறப்பாக மிகப் பலனுள்ளதாக முடிந்து வரும் இடம். நிறுவனத் தலைவரின் உறுதி, வழிகாட்டல், திட்டப்பணித் தலைவரின் ஆர்வம், கடும் உழைப்பு, கடுமை ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் மேலாளர்களின் ஒத்துழைப்பு, நமது குழுவினரின் திறமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து ஐந்து மாதங்களில் முழுமையான செயல்பாடு வந்து விட்டது.

ஒரு பிரிவின் சுணக்கத்தால் தலைவர் எதிர்பார்த்த விளைவுகள் ஆரம்பிக்கவில்லை. அதை வைத்து நம்மைக் குறை சொல்லி ஆரம்பித்தார். அதற்கான விளக்கங்களை திடமாக எடுத்து வைக்கவும், தாமதத்துக்குப் பொறுப்பு பாதி அவர்கள், பாதி நாங்கள் என்று அவரே ஒத்துக் கொண்டார். இப்போது எஞ்சியிருக்கும் பணிகளை முடித்து விட்டால் மீதிப் பணத்தை முழுவதுமாக வாங்கிக் கொள்வதோடு, இன்னொரு நிறுவனத்துக்கான பணிகளையும் ஜனவரியிலிருந்து ஆரம்பித்து விடலாம் என்ற உறுதிமொழியை கொடுத்து விட்டார்.

இன்னொரு மாற்றம் அரிசியைத் தவிர்ப்பது. வெளியில் போகும் போது முழுமையாகத் தவிர்ப்பது நடக்காமல் இருக்கிறது. போன வெள்ளிக் கிழமை ராணிப்பேட்டைக்குப் போயிருக்கும் போது வாடிக்கையாளர் உணவுக் கூடத்தில் சிறிதளவு சோறு சாப்பிட வேண்டியிருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை எதுவும் சோதனை இல்லை. திங்கள் கிழமை ராணிப்பேட்டை போகும் போது காலையில் மூர்த்தீஸ் கபேயில் பொங்கல், மதியம் வாடிக்கையாளர் உணவுக் கூடத்தில் சிறிதளவு சோறு. செவ்வாய்க் கிழமை எதுவும் பிரச்சனையில்லை.

நேற்றைக்கு மீண்டும் வாடிக்கையாளருடன் உணவு உண்ண சோறு.

மொத்தத்தில், நானாக சமைத்தோ, நாடிச் சென்றோ அரிசி உணவு சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொண்டு விட்டேன். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், தட்டை, சீடை, முறுக்கு எல்லாம் நின்று போய் விட்டன. தவிர்க்க முடியாத நேரங்களில் சோறு மட்டும் மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டாம் என்று சாப்பிட்டுக் கொள்கிறேன்.

சோறு சாப்பிடாததால் மனதளவில் சோர்வு ஏற்படுவதை உணர முடிகிறது. அதற்கு ஈடாக மற்றப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும் நடந்து விடுகிறது. குறிப்பாக பரோட்டா, பூரி, வடை போன்றவை மீண்டும் உணவில் நுழைந்திருக்கின்றன. இந்த மூன்றையும் தவிர்த்து விடுவது நன்றாகத்தான் இருக்கும். பழங்கள் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுப் பழக்க மாற்றத்தினால் மட்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியா விட்டாலும், அரிசியை தவிர்க்க ஆரம்பித்த பிறகு செய்யும் பணிகளில் இருக்கும் உணர்வு பூர்வமான பிடிப்பு தளர்ந்து, வேலைக்கான ஆர்வம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

ஆசையே துன்பத்துக்கு காரணம். ஆசையை ஒழித்து விட்டால், துன்பத்தை தொலைத்து விடலாம் என்று புத்தரின் போதனை.

1980ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரசு கூட்டணி தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று விட, அதிமுக - ஜனதா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து மாநில சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்தது இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய அரசு.

காங்கிரசும் திமுகவும் பாதிக்குப் பாதி தொகுதிகளில் போட்டியிட்டன. கூட்டணி வெற்றி பெற்றால், கருணாநிதிதான் முதலமைச்சர் என்றும் அறிவித்திருந்தார்கள்.

'நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். சட்ட மன்றத் தேர்தலிலும் எமது கூட்டணி பெரு வெற்றி பெற்று நான் ஆட்சி அமைப்பேன்.' என்று இறுமாந்து, தேர்தல் முடியும் முன்னரே யாருக்கு என்ன துறை என்று அமைச்சர் பதவிகளைக் கூட தீர்மானித்து வைத்திருந்தாராம் கருணாநிதி.

'உங்களை நம்பி அரசியலுக்கு வந்தேன். வெற்றி பெற்றால் ஆட்சியமைப்பேன். இல்லை என்றால் அரசியலை விட்டு திரைப்படத் துறைக்குத் திரும்பி விடுவேன்' என்று எதிரணியில் நின்றாராம் எம்ஜிஆர்.

அப்படி பற்றற்று போட்டியிடும் போது நமது சொல்லும் செயலும் நடவடிக்கைகளும் மற்றவர்களை சாதகமாக பாதித்து நமக்கு சாதகமான விளைவுகள் கிடைத்து விடும். மேலே சொன்ன தேர்தலிலும் அதுதான் நடந்தது. அதிமுக தனிக்கட்சியாகவே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

காசு கேட்டால் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்களோ என்று பயந்து பணியாற்றினால், அவர்களும் அந்தப் பயத்தைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். எங்கள் பணியால் உங்களுக்குக் கிடைக்கும் நலன்களில் எமக்கு உரிய பங்கை தாருங்கள் என்று உரிமையுடன் கேட்க ஆரம்பித்தால், அதைக் கொடுத்து பணி ஏவ ஆரம்பித்து விடுகிறார்கள்.

கொடுக்கல் வாங்கலின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் பார்த்து விட முடியாதுதான். நம்முடைய வழிகாட்டி என்றும் மாறி விடாத நன்னெறிகளாக வைத்துக் கொள்ளலாம்.

நேர்மை, இருபக்கத்துக்கும் நியாயமான பரிமாற்றம், தனிமனித உரிமைகள், பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், எல்லோருக்கும் சம வாய்ப்புகள் என்ற காரணிகள் என்றைக்கும் சமூக அமைப்புக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள். அவற்றை மட்டும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த ஒரு வாரம் பெங்களூருவில். அலுவலகப்பணிகளின் சின்னச்சின்ன விபரங்களில் நம்மைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் என்ன நடந்து கொண்டிருக்கிறது. குழுவினர் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள 2 மணி நேரம் ஒரு நாளைக்குச் செலவழிக்கலாம்.

அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் வகுப்பதில் 2 மணி நேரம். வாடிக்கையாளர்கள், குழுவினர், முதலீட்டாளர்களுடன் தகவல் தொடர்பு கொள்ள 1 மணி நேரம்.

மென்பொருள் உருவாக்கப் பணிகளில் 4 மணி நேரம். வாடிக்கையாளர் சேவைப் பணிகளில் 2 மணி நேரம். 1 மணி நேரம். 2 மணி நேரம். தன் முன்னேற்ற, நாட்குறிப்பு, எழுதுதல், உலாவி வருதல், போன்றவற்றில் 4 மணி நேரம். தூக்க்ம 6 மணி நேரம். சரியாக 24 மணி நேரங்கள் கணக்கு கிடைத்து விட்டது.

இதை முடித்ததும் கணினியை மூடி வைத்து விடலாம். இந்து நாளிதழ், எகனாமிக் டைம்சு நாளிதழ், பிசினஃச் இந்தியா பத்திரிகை படிப்பதில் 2 மணி நேரம் செலவிடலாம். பசித்தால் பசித்த பிறகு வாங்கி பையில் வைத்திருக்கும் ரொட்டி வகைகளைச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

மதியம் 2 மணிக்கு பெங்களூரு போய்ச் சேரும் என்று நினைவு. வீட்டுக்குப் போய் முதலில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். முடிந்த வரை வெளியில் போவதைத் தவிர்த்து பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜெயமோகனின் மத்தகம் என்று குறுநாவலை ஞாயிற்றுக் கிழமை இரவு படித்தேன். சர்க்கரைப் பாகில் விழுந்த ஈயைப் போல உள்ளேயே கட்டுண்டு போனது போலிருந்தது. மாயச்சுழலாக, கதைக்களத்தை கண் முன்னே கொண்டு வந்து, அந்த நாளைய வாழ்க்கையை படம் பிடித்துக் காண்பிக்கிறார். ஊமைச் செந்நாய் கதையைப் போலவே இதிலும், வன்செயல்கள், பாலியல் ஆதிக்கம் மையம் கொண்டிருந்தன. மனிதனின் அடிப்படை இயல்புகளை ஊதிப் பெரிதாக்கி நாடகமாகக் காட்டும் வித்தகர்கள்தான் கதை சொல்லுவதில் வெற்றி பெறுகிறார்கள். இவரும் அதே பாணியில்தான் போகிறார்.

சுஜதாவின் எழுத்துக்களிலும் பாலில் வெண்ணெய் போல பாலியல் திரண்டு கொண்டே இருக்கும். பாலகுமாரனின் எழுத்துக்களில் அதற்கு சற்று மேற்பட்ட உணர்வுகள்.

கல்கி மனித காரணிகளை உதிர்த்து விட்டு எழுதுகிறார். அவரது கதை மாந்தர்கள், சாப்பிடுவதோ, தூங்குவதோ அரிதாகவே இடம் பெறும். தும்முவது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது, உடலுறவு கொள்வது போன்றவற்றை அவர்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதே முடியாது. குந்தவையும் வந்தியத் தேவரும் குடும்பம் நடத்திக் குழந்தை பெற்றுக் கொள்வதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா!

டால்ஸ்டாய், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துக்களிலும் இதே அடிப்படை பண்புகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாத போக்கு தென்படும். அன்னா கரனீனாவில் முறைக்கு வெளியான பாலியல் தொடர்பைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும். எந்த ஒரு கட்டத்திலும் வாசகரைத் தூண்டி விடாமல் எழுதியிருப்பார். நேனோ தொழில் நுட்பம் குறித்து எழுதும் போது கூட 'கிளின்டன் மோனிகா லுவின்சுகியை மோப்பம் பிடிப்பதை' எடுத்துக்காட்டாக எழுதுவார் சுஜாதா.

ஞாயிறு, டிசம்பர் 14, 2008

சுயம்

திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாளாக ராணிப்பேட்டைக்குக் கிளம்ப வேண்டும். ராமாபுரம் வந்து நகரப் பேருந்து. ராணிப்பேட்டையில் ஒரு வேலை, வேலூரில் ஒரு வேலை. பேருந்தில் போய்க் கொண்டிருக்கும் போதே தொலைபேசி உறுதி செய்து கொண்டு ராணிப்பேட்டையில் முதலில் இறங்கிக் கொண்டேன். சொல்லியிருந்த 11 மணிக்குப் போய்ச் சேர்ந்தால், 1 மணி வரைக் காத்திருந்தும் சந்திக்க முடியவில்லை. போய் விட்டு மூன்றரை மணிக்கு வாருங்கள் என்றார்கள். சரி என்று வேலூர் கிளம்பினேன்.

பேருந்தைப் பிடிக்க வேண்டும். ஒன்றரை கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தத்துக்குப் போனேன். அருகிலேயே ஒரு தேநீர் விடுதியில் கேக்குகள், தேநீர் சாப்பிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு ஆற்காடு பேருந்தில் ஏறினேன். அங்கிருந்து வேலூர் பேருந்தில் ஏறி வேலூர் வள்ளலார் பள்ளி நிறுத்தத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். போக வேண்டிய நிறுவனம் இருக்கும் கிராமத்தைத் தாண்டிப் போனாலும் அங்கு நிறுத்த மாட்டார்கள்.

கடையில் பெட்டியில் அடைத்த பழச் சாறு வாங்கிக் குடித்து விட்டு சாலையைக் கடந்து எதிர் புறத்தில் நகரப் பேருந்துக்குக் காத்திருக்கும் போது அதே நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் பேருந்தைப் பிடிக்க வந்து சேர்ந்தார். 2 ரூபாய் கட்டணத்தில் அந்தக் கிராமத்தில் இறங்கிக் கொண்டோம். பல மாதங்கள் கழித்து வந்தாலும், வாசலில் பாதுகாப்புக் குழுவினரிலிருந்து அலுவலகத்தில் பணி செய்பவர்கள் எல்லோரும் நினைவு வைத்திருந்தார்கள். நிறுவனத் தலைவர் குழுமத் தலைவர் வந்து விட்டதால் வேலையில் இருந்தார். 3 மணி வரை பார்த்து விட்டு கிளம்பி விட்டேன். வாலாஜா போகும், இந்தக் கிராமத்தில் நின்று போகும் பேருந்தில் ஏறினால் அது எல்லா கிராமங்களுக்கும் போய் நின்று ராணிப்பேட்டை கொண்டு விட்டார்கள்.

சப்போட்டா பழங்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் தொழிற்சாலை. அங்கும் நிறுவனத் தலைவர் கிளம்பி விட்டிருந்தார். நான் பேச வந்த பொருளை பேசி விட்டதாகவும், இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வேலை முடிந்து விடும் என்று அவரது உதவியாளர் சொன்னார். அங்கிருந்து இரு சக்கர வண்டியில் வாலாஜா நிறுத்தத்தில் விட்டு விட்டார்கள். கர்நாடக போக்குவரத்துத் துறையின் பெங்களூருவிலிருந்து வரும் பேருந்தில் பூந்தமல்லி வரை போக ஏறிக் கொண்டேன். 76 ரூபாய்கள் கட்டணம். அலுக்காமல், குலுக்காமல் வழியில் எங்கும் தாமதம் செய்யாமல் பூந்தமல்லியில் இறக்கி விட்டார்கள்.

பூந்தமல்லியில் வெளியூர் பேருந்துகளை ஒரு வழிப்பாதை பின்பற்றும்படி செய்திருந்தார்கள். நகரப் பேருந்து ஒன்றை புறவழிப்பாதையின் விளிம்பில் பிடித்துக் கொண்டேன். நேராக ராமாபுரம் சீட்டு எடுத்து இறங்கி நடந்து விட்டேன்.

செவ்வாய்க் கிழமை அலுவலகத்தில். புதன் கிழமை மாலை அம்பத்தூருக்கு உறவினர் வீட்டுக்குப் புறப்பட்டேன். நாகர்கோவிலிலிருந்து வரும் போதே செவ்வாய் புதன் கிழமைக்குள் போய் அவர்களைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று அப்பாவிடம் வாக்கு கொடுத்திருந்தேன். உண்மையிலேயே உதவி தேவைப்படும் நிலைமையில் இருப்பவர்கள். எனக்குள்ளும் போக வேண்டும் என்ற தீர்வு முளைத்திருந்தது.

அந்தப் பக்கமாக போகும் நண்பருடன் இரு சக்கர வண்டியில் ஏறிக் கொண்டு திருமங்கலத்தில் இறங்கி பேருந்து பிடிக்கலாம் என்று திட்டம் போட்டேன். அவர் புறப்படுவதற்கு ஏழரை மணிக்கு மேல் ஆகி விட்டது. வேறு நண்பர் வண்டியைக் கொடுத்து அதில் போய் வந்தால் சரியாக இருக்கும் என்று வற்புறுத்த அதை எடுத்துக் கொண்டேன்.

தேய்க்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கி வைத்திருந்தேன். இன்னொரு மூட்டை ராமாபுரத்திலேயே தேய்க்கக் கொடுத்திருந்தேன். மடிக்கணினியையும் அலுவலகத்தில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும். மூடிய காலணியை மாற்றி செருப்புப் போட வேண்டும். இதற்கெல்லாம் சேர்த்து வீட்டுக்குப் போய் விட்டு கிளம்பலாம் என்று முடிவு. நண்பரை அவரது வீடு போகும் இடத்தில் இறக்கி விட்டு, துணிகளை வீட்டில் சேர்த்து விட்டு செருப்பு போட்டுக் கிளம்பினேன். வருவதாகச் சொல்லியிருந்த எட்டரை மணிக்குத்தான் புறப்படவே செய்தேன்.

அவர்களிடம் தொலைபேசி இணைப்பும் இல்லை. வழி சரியாகத் தெரியாது. திருமங்கலம் இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டேன். அங்கிருந்து முகப்பேர் சாலையில் நீளமாக ஓட்டி அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் திரும்பி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வந்து விட்டேன். அதுதான் அம்பத்தூர் என்று அதுவரை புரிந்திருந்தது. அம்பத்தூர் ஓடி என்று பேருந்துகள் பார்த்திருந்தாலும் போனதில்லை.

தொழிற்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகு வட்டாரத்தில் சிறிது நேரம் சுற்றி விட்டு சரியான வழி பிடித்து ஓடி பேருந்து நிலையம் நோக்கிப் பயணித்தேன். தொலைபேசி, விசாரித்து, குழம்பி வீடு போய் சேரும் போது 10 மணி நெருங்கி விட்டிருந்தது. அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு 2 தோசைகள், பக்கோடா, தேநீர் சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போது 11 மணி தாண்டி விட்டிருந்தது. வீட்டுக்கு வந்து தூங்கும் போது நள்ளிரவு தாண்டியிருந்தது.

வியாழனன்று காலையில் அந்தச் சடைவில் ஆறு மணிக்குப் பிறகு எழுந்திருந்து நிதானமாகப் புறப்பட்டுப் போனேன். மாலையில் பெரியமேட்டுக்குப் போக வேண்டிய அழைப்பு. 'வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்' என்ற கட்டளைக்கு உட்பட்டு புறப்பட்டுப் போனோம். 'என்னப்பா ஊருக்குப் போய் விட்டாய் என்று போன தடவை வரவில்லை' என்று வரவேற்றார். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு தன்னுடைய மனவள மேம்பாட்டு முயற்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

அவரது வளமை போல எல்லாம் பேசி விட்டு கடைசி நிமிடங்களில் வியாபார பேச்சை முடித்து விட்டுக் கிளம்ப முயன்றார்.

வெள்ளிக் கிழமை ராணிப்பேட்டையில் பணி செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஏழு மணிக்கு போரூரில் சந்தித்து பேருந்து பிடிப்பதாக திட்டமிட்டிருந்தோம். நண்பர் ஆறரைக்கே போய் விட்டதாக தொலைபேசினார். நான் ஏழு மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். இன்னும் இரண்டு பேர் வருவதற்கு ஏழரை ஆகி விட்டது. சித்தூர் போகும் பேருந்தில் ஏறி விட வண்டியும் இழுத்து இழுத்து ஓட்டி, காஞ்சிபுரத்துக்கு சற்று முன்பு சாப்பிடும் விடுதியில் நிறுத்தி விட்டார்கள். அங்கேயே சாப்பிட்டு விட்டு வாலாஜாவில் இறங்கி ஆட்டோ பிடித்து பணியிடத்துக்குப் போய் விட்டோம்.

திட்டமிட்ட பணிகளை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே போனது. கூட வந்தவருக்கும் பணிகளை விளக்கி ஒரு பணியை செய்யக் கொடுத்திருந்தேன். அந்த நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்தவருக்கும் கற்றுக் கொடுப்பதில் நேரம் போனது.

புதன், டிசம்பர் 10, 2008

சாரல்கள்

மரக் குரங்கு என்று ஒரு விளையாட்டு உண்டு. நான் மேலே ஏறி ஏதாவது கிளையில் பதுங்கி உட்கார்ந்து கொள்வேன். துரத்தும் தோட்டக் காரனாக விளையாடுபவன் மேலே ஏறி வர ஆரம்பித்தால், ஓடுவதுதான் ஒரே வழி. அப்படி மேலே ஏறி வர விடாமல் செய்ய கீழே குதித்து வட்டத்துக்குள் கிடக்கும் கம்பை வெளியில் எறிய வேண்டும். அந்தக் கம்பு வட்டத்துக்குள் இல்லா விட்டால் மேலே ஏறி குரங்குகளைப் பிடிக்க தோட்டக்காரனால் முடியாமல் போய் விடும்.

திறமையான நண்பர்கள், கிளையிலிருந்து கிளை தாவி மறு பக்கம் சென்று கீழே குதிப்பார்கள். கிளையிலிருந்து கிளை தாவுவதற்கு ஒரு கிளையில் இரண்டு கைகளால் தொங்கியவாறு ஒரு கையை அடுத்த கிளை அடுத்த கிளையைப் பிடிக்க நகர்த்தி அந்தப் பிடி திடமானதும் முந்தைய கையை அதற்கடுத்த கிளையைப்பிடிக்க நகர்த்த வேண்டும்.

இப்படி ஒரு கிளையை விட்டு அடுத்த கிளையைப் பிடிக்க முயற்சிப்பவர்கள்தான் நினைத்த இடத்துக்குப் போக முடியும். நல்ல இடத்தில் ஏறி உட்கார்ந்து விட்டோம், பிடிபடாதது வரை கொண்டாட்டம்தான் என்று நினைத்து உட்கார்ந்து விட்டால் அடுத்தவர்கள் தயவில்தான் பிடிபடாமல் இருக்க முடியும். ஏதாவது ஒரு கட்டத்தில் பிடிபடும் நிலை வந்து குரங்கு பதவி போய் தோட்டக்காரனாக காவல் காக்க வேண்டியதாகி விடும்.

கிளை தாவுவதில் அபாயம் எதுவும் இல்லையா? நிறைய உண்டு. பெரிய அண்ணன்கள் தாவுவதைப் பார்த்திருக்குள் என் வயதொத்த நண்பர்களில் ஒருவன் ஒரு நாள் துணிச்சலாக கிளை தாவ ஆரம்பித்தான். அடுத்த கிளையைப் பிடித்த கை நழுவ, பிடித்திருக்கும் கையில் பாரம் அதிகமாகி கீழே விழுந்தான். விழுந்தவன் கையை தரையின் ஊன்ற கை முறிந்து போனது. அதற்கு கட்டு போட்டு சரியாக ஓரிரு மாதங்கள் பிடித்தன.

எம் ஜி ஆர் படங்களில் சண்டைக்காட்சிகளில் அல்லது துரத்தும் காட்சிகளில் அவர் மரக் கிளைகளைத் தாவித் தாவி பயணிப்பார். நம் நாடு என்றபடத்தில் வில்லன்களைத் துரத்த வெகு தூரம் மரக் கிளைகளில் தாவியே போவதாகக் காட்டுவார்கள். அவர் ஒரு கிளையை விடும் போது அடுத்த மரத்தின் கிளை வாகாக இருக்கும். அது ஆலமர விழுதுகளாக இருப்பதால் தூரம் கடப்பது சாத்தியமாகி விடுகிறது.

அதே போலத்தான் மலை ஏறுபவர்களும். செங்குத்தாக கைகளால் பற்றிக் கொண்டு ஏற வேண்டுமானால் இதே முறைதான், இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு ஒரு அடி நகர்ந்து விட்டு, பிடித்த கையை விட்டால்தான் அடுத்த நிலைக்கு போக முடியும்.

வாழ்க்கையிலும் அப்படித்தான். இப்போது இருக்கும் நிலைதான் சொர்க்கம் என்று இருந்து விடலாம். காலமும் அதன் ஓட்டமும் அந்த நிலையிலிருந்து எழுப்பி விட அடித்துச் செல்ல வந்தே தீரும். காலத்தின் கருணையில்தான் அப்படி இருக்க முடியும். பிடித்திருக்கும் கிளைகளிலிருந்து கையை விட்டு அடுத்த கிளைக்கு எட்டிப் பிடித்தால்தான் மேலே மேலே அல்லது முன்னே முன்னே போக முடியும்.

தனி மனிதர்களாக நம்மைப் பிணைத்திருக்கு தளைகள் ஏராளம். பிறந்த இடம், மொழி, உணவுப் பழக்கங்கள், தினசரி நடைமுறைகள் இப்படி பிறவியிலிருந்தே நம்மை வரையறுக்கும் அடையாளங்கள் ஏராளம். இந்த வரையறைகளைத் தாண்டி வளருவதற்கு அவற்றை உடைத்து வெளியில் வந்தால்தான் முடியும். பிறந்த மண்ணை விட்டு சில ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருபவர்களின் எண்ணப் போக்கில் வாழ்க்கை முறையில் ஒரு வகையான முதிர்ச்சியும் கட்டுக்களை உடைத்த விடுதலையும் தெரியும்.

நாகர்கோவிலை விட்டு சென்னைக்கு வந்தது பி டெக் சேர்ந்தவுடன். வீட்டில் இருந்த பழக்கங்கள் பல உடைய வேண்டியிருந்தது. பல இழப்புகளாகப் பட்டன. சில வசதிகளாகப் பட்டன. சொந்தப் பொறுப்பில் நாளை நடத்த வேண்டியிருந்தது.

அடுத்ததாக தமிழகத்தையே விட்டு இந்தூரில் வசித்து, தேவாசில் வேலை பார்க்க வேண்டிய சூழல். நான்கு ஆண்டுகளில் நான் என்று வரையறுத்து வைத்திருந்த பலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் தகருவதற்கு அப்படி இல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தைப் பார்ப்பது உதவியாக இருந்தது.

அடுத்த கட்டமாக இந்தியச் சூழலையும் விட்டு, ஆங்கில மொழி கூடப் பேசப் படாத சீனாவில், சாங்காயில் 4 ஆண்டுகளுக்கு மேல் கழிக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட உறையும் தண்ணீரில் போடப்பட்டது போன்ற சூழல். பல நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போகும் கட்டங்கள். பல மனத் தடைகள், மன பிம்பங்கள் உடைக்கப்பட்டன. சாப்பாட்டுப் பழக்கங்களிலிருந்து, இலக்கிய வாசிப்புகள், மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப வரையறைகள் என்று பலவற்றில் அதிரடியான மாற்றங்கள் கிடைத்தன.

இதெல்லாம் இருந்தாலும் வீட்டுக்குள் ஒரு தொடர்ச்சி இருந்தால் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கலாம். அதற்கும் பெரிய மாற்றங்கள் வந்தன. அடுத்த 10 ஆண்டுகளில் எதையெல்லாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேனோ அதை எல்லாம் விட்டு விட வேண்டிய சூழல்கள். சில நேரத்தில் விட்ட கிளைக்கு மாற்றாக உயரத்தில் இருக்கும் இன்னொரு கிளையைப் பிடித்துக் கொள்ள முடிந்தது. பல நேரங்களில் பிடி நழுவி கீழே விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்ள அல்லது சிராய்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அந்த உடைசல்கள், காயங்கள் எல்லாம் ஆறிய பிறகு பார்த்தால் கட்டுண்டிருந்த தளைகளில் பல உடைந்து போயிருக்கின்றன. எல்லாம் முடிந்து போனதா என்றால் இல்லை. இன்னும் பெரிய பெரிய பிடிமானங்கள் மட்டுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

நான் யார் என்று கேட்கும் படி ரமணரின் ஆன்ம விசாரம். மழைத் துளி விழுந்ததும் இலைகளையும் கிளைகளையும் வெட்டி தண்டை மட்டும் விட்டு வைப்பார்கள், புதிதாக துளிர்ப்பதற்கு. அப்படி எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டே வந்தால் கடைசியில் எஞ்சுவதுதான் உண்மையான நான். கடைசியில் என்ன எஞ்சும்!

மரம் என்பது கிளைகளும் இல்லை, இலைகளும் இல்லை, கனிகளும் இல்லை. எல்லாம் சேர்ந்ததுதான் மரம். கிளை ஒன்றை வெட்டுவதால் மரம் இல்லாமல் போய் விடுகிறதா? இலை ஒன்று உதிர்வதால் மரம் மறைந்து போய் விடுமா? அடிமரத்தை வெட்டிப் போட்டதோடு மரத்தின் கதை முடிந்து விடுமா? மரம் உண்மையில் எங்கு இருக்கிறது? எது மரம்?

சனிக் கிழமை மாலையில் கன்னியாகுமரி விரைவு வண்டி வந்து கிளம்பும் போது மழைக் கால இருட்டு சூழ ஆரம்பித்திருந்தது. கொஞ்ச தூரத்திலேயே கட்டிக் கொண்டு வந்திருந்த சப்பாத்திகளை சாப்பிட்டு முடித்து விட்டேன். ஆர் ஏ சியில்தான் முன்பதிவு நிலவரம் இருந்தது. பரிசோதகர் வரும் போது இதே பெட்டியில் ஒருவர் வராமல் இருந்த படுக்கையை எடுத்துக்கொள்ளுமாறு எண் போட்டுக் கொடுத்து விட்டார்.

அங்கு இரண்டு பேர் கீழ் இருக்கையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் மேல் படுக்கை எனக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லி விட்டு இங்கு வந்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். திருநெல்வேலி தாண்டியதும் அங்கு போய் பைகளை வைத்து விட்டு உட்கார்ந்தேன். மறுபக்கம் இருந்த ஒருவர் வந்து இதை அவர்கள் குழுவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு இரண்டு பெட்டி தாண்டி இருக்கும் படுக்கையை எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்க ஒத்துக் கொண்டேன்.

பையை எடுத்துக் கொண்டு நடந்த திசை எதிர்த்திசை. வண்டியிலிருந்து இறங்கி சரியான திசையில் போய் S8 பெட்டியில் குறிப்பிட்டிருந்த எண்ணில் போய் ஏறிக் கொண்டேன். பக்கவாட்டு படுக்கை. நீளம் முழுவதும் அடங்காது. கால்களை மடக்கிக் கொள்ள வேண்டும், அல்லது வெளியில் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டும். எப்படியானாலும் சரியான தூக்கம் கிடைக்காது.

பத்தரை மணிக்கெல்லாம் விழிப்பு வரும் போது எதிர்ப் புறம் இருந்த நீள இருக்கையில் உட்கார்ந்திருந்தவர்கள் காரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள. 'ஆயுதம் எடுத்துப் போராடுபவர்கள் அதன் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்கத்தான் வேண்டும். அமைதி வழியில் போராடியிருந்தால் அமைதி வழியில் தீர்வு கிடைத்திருக்கும்' என்று தன் கட்சியை ஒரு இளம்பெண் உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நடுத்தர வயது குண்டான மனிதர், 'இது போல சண்டை நடக்கப் போகிறது, எல்லோரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து தொடர்பில்லாத அப்பாவி மக்கள் இறப்பதை தவிர்த்திருக்கலாமே என்பதுதான் என்னுடைய ஒரே ஆதங்கம். அதைக் குற்றம் என்று சொல்லி விடாதீர்கள்' என்று சொல்லி முடித்து வைக்கும் வரை வெகு நேரம் விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஓரளவு நன்றாகவே தூங்க முடிந்தது. நாலரை மணிக்கு விழுப்புரம் என்று சொன்னார்கள். ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பல் தேய்த்து விட்டு உட்கார்ந்திருந்தேன். முந்தைய இரவு விவாதித்துக் கொண்டிருந்தவர் முதலில், தொடர்ந்து அந்தப் பெண், அவரது கணவர், குழந்தைகள் என்று எல்லோரும் எழுந்து விட வசதியாக உட்கார இடம் கிடைத்தது. வண்டி அரை மணி நேரம் தாமதமாகப் போய்ச் சேரும் என்று பட்டது. அதிகாலை காட்சிகள் வெளியில்.

செங்கல்பட்டு வரும் போது ஏரியில் காலைக் கதிரவனின் கோட்டு ஓவியம். அம்மா பெண்ணை அழைத்துக் காட்டினார். யாரும் அதிகம் பேசாமல் அமைதியாகவே இருந்தது. தாம்பரத்தில் இறங்கி விட்டார்கள். மாம்பலம் வந்ததும் இறங்கி படிஏறி மேற்கு மாம்பலம் பக்கத்தில் வந்தேன்.

ஆரிய கவுடா சாலை வரை நடந்து வந்து பேருந்து நிலையம். 11H கிடைத்தது. ஏறி உட்கார்ந்தால் அரை மணி நேரத்தில் வளசரவாக்கத்தில் விட்டு விட்டார்கள். எட்டரை மணி தாண்டி விட்டது. ஒன்பது மணிக்கு நாளின் திட்டப்படி பணி ஆரம்பிக்க வேண்டும். அலுவலகத்தில் இரண்டு பேர் ஏற்கனவே வந்து விட்டிருந்தார்கள்.

குளியலறைக்குள் போய் கை கழுவும் போது நெற்றியில் நீட்டிக் கொண்டிருந்த குழாய் கம்பி ஒன்று இடித்து விட்டது. ஆழமாகப் பதிந்து போய் ரத்தம் வரும் அளவுக்கு பட்டிருந்தது. பஞ்சால் துடைத்து பர்னால் போட்டுக் கொண்டேன். ரத்தம் வருவது நிற்கவில்லை. அரை மணி நேரத்தில் கோடாக ரத்தம் வழிய ஆரம்பித்ததை பார்த்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துப் போக, துடைத்து ஒட்டுப் போட்டு உலோக நச்சுக்கான ஊசியையும் போட்டு விட்டார்கள். போட்ட ஊசி நெற்றிக் காயத்தை விட அதிகமாக வலித்தது. டிடி அப்படித்தான் வலிக்கும் என்று சமாதானம்.

நெற்றியில் விழுப்புண் ஒட்டோடு எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. 12 மணி வாக்கில் வீட்டில் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம் என்று தொலைபேசியில் அழைத்தார்கள். அங்கும் போய் விசாரிப்புகளுக்கு உட்பட்டேன். அந்தக் கூட்டம் முடிந்ததும், ஒட்டை பிய்த்துப் போட்டு விட்டேன். ரத்தம் வருவது உறைந்து போய் விட்டிருந்தது. முன் முடியால் மறைத்து விட்டால் யாருக்கும் தெரியாமல் ஆகி விடும். அலுவலகம் வந்து விட்டேன்.

மதிய உணவு டாட்டா உடுப்பி ஓட்டலில். பிறந்த நாள் கொண்டாடும் நண்பர். சப்பாத்தி, உருளைக் கிழங்கு, இன்னொருவருக்கு வந்த சூப்பு என்று நிறைய சாப்பிட்டுக் கொண்டேன். மாலையில் வளசை சுபாவில் பூரிகள். திங்கள் கிழமை ராணிப்பேட்டை போக வேண்டும். செவ்வாய் புதன் கிழமைகளில் பக்ரீத் விடுமுறை வர இருப்பதால் திங்கள் கிழமையே சந்திக்க வேண்டும் என்று அழைத்திருந்தார்கள்.

நிதானமாக நன்கு தூங்கி எழுந்து புறப்பட்டு போகலாம் என்று முடிவு. ஆறு மணிக்கு எழுந்து, நாளிதழ்கள், துணிகளை ஒதுங்க வைத்து ஏழரை மணிக்குக் கிளம்பினேன்.

செவ்வாய், டிசம்பர் 09, 2008

புனிதப் பசுக்கள்

பொதுவாக எழுதி விட்டு பதிவு செய்யும் போதுதான் தலைப்பு கொடுப்பது வளமையாக இருந்து வருகிறது. அடுத்தது என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. முதலில் தோன்றிய தலைப்பு விட்டு விடுதலையாகி, அடுத்ததாக புனிதப் பசுக்கள். இரண்டுமே பொருத்தமானவைதான்.

அரிசி சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்கு நல்ல சோதனை வந்து சேர்ந்தது. 4ம் தேதி ஒரு திருமணத்துக்குப் போக வேண்டும். 3ம் தேதி இரவில் ரயில் பிடித்து விட்டேன். தாம்பரத்திலிருந்து பொதிகை விரைவு வண்டி. ரயில் நிலையத்தின் உணவு துறை ஊழியர்கள் விற்றுக் கொண்டிருந்த பரோட்டா சாப்பிட்டு விட்டு ரயில் ஏறி விட்டேன்.

காலையில் ஏதோ சிக்கலால் 3 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள் ரயிலை. மதுரையில் சமோசாக்கள் மூன்று சாப்பிட்டு விட்டு கடலை மிட்டாய் பொதி ஒன்றையும் உள்ளே தள்ளினேன். திருமண விருந்தில் சோறு தவிர்க்க விரும்பவில்லை. முதல் முறை மட்டும் ஒரு அகப்பை வாங்கி காய்களையும் சாம்பார், ரசம் இவற்றையும் பெரிதும் சாப்பிட்டுக் கொண்டேன். ஒரு டம்ளரில் மோர்.

அதன் பிறகு விடை பெற்றுக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் திருநெல்வேலி போகும் பேருந்து கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டு ஒரு விடுதியில் மீண்டும் பரோட்டா. அப்பாவுக்குப் பிடித்தமான திருநெல்வேலி அல்வாவை சாந்தி ஸ்வீட்ஸ் என்ற கடையில் வாங்கிக் கொண்டு புதிய பேருந்து நிலையம் போகும் பேருந்தைப் பிடித்தேன்.

மதுரையிலிருந்து வரும் பேருந்து நாகர்கோவிலுக்குப் போக. 25 ரூபாய்தான் கட்டணம். அவித்த வேர்க்கடலை விற்ற ஒருவரிடம் ஒரு பொதி வாங்கிக் கொண்டேன். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டை நோக்கி நடக்க முடிவு. காலையிலிருந்தே நிறைய சாப்பிட்டு குறைவாக வேலை செய்த மந்தத்தை குறைக்க வேண்டும்.

வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து பெண்கள் கிருத்துவக் கல்லூரி பக்கமாக வெளியில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஏறும் சாலையில் நடந்தேன். செங்குத்தாக ஏறும் சாலை. மூச்சு வாங்கியது வெட்கமாக இருந்தது. இதற்குக் கூட மூச்சு வாங்கும் நிலையில்தான் உடலை வைத்திருக்கிறோம்.

ஆட்சி அலுவலர் முன்பாக நடந்து அடுத்து மாவட்ட சிறைச்சாலை. சிறைக் கைதிகள் எங்கு இருக்கிறார்கள்? பக்கத்திலேயே ஆட்சியர் அலுவலகம், அந்தப் பக்கம் அரசு பயணியர் விடுதி. சின்னச் சிறையாகவே இருக்கும். முன்பு துணைச் சிறைச்சாலை என்று போட்டிருப்பார்கள். பாளையங்கோட்டையில்தான் பெரிய சிறைச்சாலை. இப்போது இங்கும் முழுச் சிறைச்சாலை அமைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

மத்தியாசு மருத்துவமனை நிறுத்தம் தாண்டி பிசப் வீட்டின் முன்பாக நடை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஒரு பிசப் வீடு இருக்கிறதே! ஒரு வேளை அது வீடு, இது பணியிடமாக இருக்கலாமோ! அப்புறம் கேட்டால் அது சிஎஸ்ஐ பிசப்பின் இல்லமாம், இது ஆர் சி பிசப்பின் இல்லம். நேசமணி நகர் என்று பெயர்ப்பலகை வைத்திருக்கும் இடத்தில் திரும்பும் சந்தில் போகும் போது மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. எங்கும் கும்மிருட்டு.

எனக்கு முன்னால் ஒரு குழுவினர் விளக்கு பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். கிருத்துமசு பாடகர்கள் என்று புரிந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தைத் தாண்டியதும் எதிரில் வந்த வண்டிகளின் விளக்குகள். வீட்டுக்குத் தொலைபேசி அம்மாவிடம் தகவல் சொல்லி விட்டேன். இன்னும் ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வீட்டிலும் மின்னிணைப்பு இல்லையாம்.

ஐஎஃச் ஆர் ஓ குடியிருப்பில் விளக்குகள் எரிந்தன. மின்உற்பத்தி எந்திரத்தை இயக்கி மின் தடை ஏற்பட்டாலும் விளக்குகள் போட்டுக் கொள்கிறார்கள். வீட்டிலும் அப்பா மின்கலன் நிறுவியிருப்பதால், விளக்குகளும், மின்விசிறிகளும் இயங்கிக் கொண்டிருந்தன. வானத்தில் நிலவின் அருகில் வியாழனும் வெள்ளியும் தெரிந்து கொண்டிருந்தன. வீட்டில் போய் அம்மாவுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தால், அம்மாவும் நான் வந்து சேரும் போது அந்தத் திசையில்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நன்றாக தெளிவாகவே தெரிந்தது.

'இரவு சாப்பாட்டுக்கு புளிக்காத தோசைதான்' என்று ஒரு சமாதானம். எனக்கு தோசை சாப்பிடவே வேண்டாம். அரிசியை முழுதும் ஒதுக்குகிறேன் என்றால் பெரிய மனக்கவலையாகப் போய் விடும். காலையில் செய்து வைத்திருந்த கொழுக்கட்டைகள் (அரிசியில் செய்தவைதான்), இரண்டு ஒரு பாத்திரத்தில் இருந்தன. அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டேன். அப்பா அம்மாவுக்கு தோசை சுட்டுக் கொடுத்தேன். தோசை சாப்பிடாமல் தவிர்த்துக் கொண்டேன்.

காலையில் எழுந்திருக்கும் போது நாக்கும் வாயும் வறண்டு போயிருந்தது. நாகர் கோவில் வந்தால் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஆறரை மணி வரை எழுந்திருக்கவில்லை. அப்பா பொறுக்க முடியாமல் சன்னல் கதவுகளை திறக்க ஆரம்பித்த பிறகுதான் எழுந்திருந்தேன். ஓட்சு காய்ச்சி கொடுத்ததை ஒரு டம்ளர் குடித்துக் கொண்டேன்.

இட்லியும் சட்டினியும் செய்து விட்டார்கள். குளித்து விட்டுச் சாப்பிட உட்கார்ந்தேன். மரச்சீனிக் கிழங்கை வெட்டி அவித்து தாளித்து வைத்திருந்தார்கள். அதன் துணையுடன் இட்லியின் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திக் கொண்டேன். அப்படியும் நான்கைந்து உள்ளே போய் விட்டது. இன்னும் அதிகமோ!

காலை உணவுக்குப் பிறகு நாற்காலியில் இருந்தபடியே தூக்கம் வேறு. மதியச் சாப்பாட்டுக்கு சோறு, அவியல், ரசம்,கூட்டுக் கறி. இப்போதும் சோற்றை ஒரே ஒரு அகப்பைக்கு மட்டுப் படுத்திக் கொண்டு காய்களை அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டேன்.

திரிபுரசுந்தரி என்ற லட்சுமி எழுதிய கதை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அம்மாவுக்கு அவரின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய பல கதைகளை வீட்டில் படிக்கலாம். அதில் பெண்ணுக்கு அநீதி இழைக்கும் ஆண்களைப் பற்றி எழுதி கடைசியில் நல்ல தீர்வு கொடுத்து வைப்பார். உண்மை வாழ்க்கையில் அந்த நல்ல முடிவு மட்டும் நடந்திருக்காது என்று எங்கோ குறிப்பிட்டிருந்தார்.

அதைப் படித்து முடித்ததும் வெளியில் போய் வருவதாக அம்மாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். வெயிலாக இருக்கிறதே, சாயங்காலம் போகலாமே என்று தடுத்துப் பார்த்தார்கள். எங்கு போவது என்று முடிவு செய்திருக்கவில்லை.

குடியிருப்பிலிருந்து வெளியில் போகும் தெருக்களில் நடந்து கொண்டிருக்கும் போது சங்குத் துறை கடற்கரைக்குப் போகலாம் என்று தோன்றியது. பள்ளியில் படிக்கும் போது அண்ணனுடன், பிற நண்பர்களுடனும் மிதிவண்டியில் போனோம். அண்ணனின் மிதிவண்டியில் ஏதோ கோளாறு வந்து தள்ளிக் கொண்டே திரும்பினோம். மிக நீளமான வழி என்பது மட்டும் பதிந்திருந்தது.

சற்குண வீதி தாண்டி இந்து கல்லூரியின் பின் வாசல் வழியாக வந்து கடற்கரைச் சாலைக்கு வந்து சேர்ந்தேன். சங்குத் துறை கடற்கரைக்கு இன்னும் 7 கிலோமீட்டர். 1 மணி நேரம் நடக்கத் திட்டமிட்டிருந்தேன். ஏற்கனவே அரை மணி நேரம் ஓடி விட்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் 7 கிலோமீட்டர் போய் விடலாமா!

முடியவில்லை. வழியில் நிறைய மைல் கற்கள் இல்லாததால் இதோ வந்து விடும் என்று சொல்லிக் கொண்டே ஒரு மணி நேரம் தாண்டியும் நடந்து கொண்டே இருந்தேன். அரசு ஊழியர் குடியிருப்பு வருவதற்கே வெகு தூரம் நடக்க வேண்டியிருந்தது. செருப்பு பாதத்தைக் கடித்து புண்படுத்தியிருந்தது. நடந்து கொண்டே இருந்தால் வலி தெரியாதுதான்.

வழியில் தொலைபேசி உரையாடல்கள். திடமாக உறுதியாக பேசிக் கொண்டேன். எல்லோருக்கும் மிதியடியாக இருந்து இருந்து பட்டது போதும். நமது நலன்களை, நமது திறமைகளை, நமது பணிகளை உறுதியாக நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். அது ஆரம்பிக்க வேண்டியது தனி வாழ்க்கையிலிருந்து.

என்னை மோசமான முறையில் பயன்படுத்தி சக்கையாக துப்பி விட்ட இனிமேலும் எந்த இடமும் கொடுக்கக் கூடாது என்று எண்ணம் வலுப்பட்டுக் கொண்டே வந்தது. உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பி விடத் துடித்தது. அவசரப் பட வேண்டாம், கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து ஒரு மணி நேரம் உட்கார்ந்து பிறகும் அதே கருத்து இருந்தால் தொடர்பு கொள்ளலாம்.

மேலகிருட்டிணன் புதூர் என்ற ஊரின் நெடுஞ்சாலை இந்த கடற்கரைச் சாலையை வெட்டிச் சென்றது. சாலையோரம் ஒரு இளநீர், ஒரு பொதியில் பொரிகடலை. மொத்தம் 20 ரூபாய்கள். பொரிகடலை கொரித்துக் கொண்டே கடற்கரை போய்ச் சேர்ந்து விட்டேன். மணி மாலை நாலே கால். கடற்கரையில் கூட்டமே இல்லை. வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

வெயிலைப் பொருட்படுத்தாமல், கடலின் அருகில் மணலில், அலை தீண்டாத விளிம்பில் உட்கார்ந்து கொண்டேன். நண்டுகள் மணலில் ஏற்படுத்தியிருந்து துளைகளின் உள்ளே வெளியே போய் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தன. நான் உட்கார்ந்திருந்த நேரத்தில் இரண்டு குழுவினர் வந்து குளித்து விட்டுப் போனார்கள்.

தொலைபேசியில் அழைத்தேன். அதன் பிறகு வேறு நண்பர்களிடமும் பேசிக் கொண்டிருந்து விட்டு கடல் நீரில் காலை நனைத்துக் கொண்டேன். காலணி ஒன்றை நழுவ விட்டு, அலையில் திரும்பி வரும் போது பிடித்துக் கொண்டேன்.

குறுஞ்செய்தி தயார் செய்து கொண்டேன். ஆனாலும் தொலைபேசியில்தான் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

ஆதவன் மேற்கில் மறையும் காட்சியைப் பார்க்கலாம் என்று காத்திருந்தேன். தொடுவானத்துக்கு அருகில் வருவதற்கு சற்று முன்பு மேகத்துக்குள் மறைந்தது. ஏமாற்றத்தில் எழுந்தால் சில நிமிடங்களில் மேக மூட்டத்திலிருந்து வெளியில் வந்தது. சிவப்புப் பந்தாக, கண்களைக் கூச வைக்காத சிவப்புப் பந்தாக மெதுவாக இறங்கி அடிவானத்திற்கு சற்று மேலே கருக்கலான இடத்தில் மூழ்குவதை மனம் நிறையப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன். இருட்டு கவிய ஆரம்பித்திருந்தது.

கூப்பிட்டிருந்தற்கு பதிலாக மறு அழைப்பு. குறுஞ்செய்தியை குரல் தகவலாகச் சொன்னேன். எதுவும் பதில் சொல்லாமல் துண்டித்து விட்டு, குறுஞ்செய்தியையும் அனுப்பி விட்டேன். அதற்குப் பிறகு அழைத்த போது இரண்டு முறை எடுக்காமல் சில நிமிடங்கள் கழித்து நானே அழைத்தேன். பொரிதலைக் கேட்க விருப்பமின்றி பேசி ஓயும் வரை விட்டு விட்டேன்.

நடைமுறையில் செத்துப் போன இந்த உறவை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது மடத்தனம். பல முறை கேட்டும் நான்தான் புனிதப்பசுவை போற்றும் விதமாக மறுத்துக் கொண்டிருந்தேன். அதைச் சொல்லி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதற்கும் மறுமொழியாக வீட்டுக்குப் போன பிறகு அழைத்து பேசிக் கொண்டிருந்தேன். அதையும் கேட்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

பேரளவுக்கு வெற்றுப் பட்டத்தைச் சுமந்து கொண்டு வாழ்வது அற்பமாகப் பட்டது. தேவைப்படும் போது என்னைப் பயன்படுத்திக் கொள்வது அந்த எல்லா தேவைகளும் இல்லாததால் அதன் பிறகு முறுக்கிக் கொள்வது.

எப்படியோ இருக்கட்டும். எனக்கு இந்த பந்தம் தேவையில்லை. மழை வெள்ளத்தில் நகரமே மிதக்கும் போது, காலில் விழுந்து கெஞ்சித்தான் பார்க்கக் கூட முடியும் என்ற உறவு எனக்குத் தேவையில்லை. இதிலிருந்து விட்டு விடுதலையாக வேண்டும். மனதளவில் வெள்ளிக் கிழமை மாலையில் அறுத்துக் கொண்டு விட்டேன்.

கொண்ட உறவும் இந்தப் பிறவியில் துண்டிக்க முடியாதவைதான். ஆனால், இனிமேலாவது, நானாக விரும்பி செய்வது மட்டுமே உறவாக இருந்தால் போதும். தேவைக்கு மட்டும் என்னால் ஆட முடியாது.

எப்படியாவது மறுப்பது என்ற ஆத்திரம் அவளுக்கு. 'உன்னைப் பார்க்க நானும் வர மாட்டேன், குழந்தைகளும் வர மாட்டார்கள்' என்று சவால். அளவுக்கதிகாமாக ஏக்தா கபூர் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பவர்களுக்கு வரும் மன நோய் தீவிரமாகப் பீடித்திருக்கிறது .

அம்மாவிடம் முதலிலும், தொடர்ந்து அப்பாவிடமும் கோடி காட்டி விட்டேன். என்னை நன்கு புரிந்திருக்கிறது. நான் வெள்ளை உடை உடுத்த துறவியாகத்தான் வாழப் போகிறேன்.

நெருங்கிய உறவுகளில் நமது அன்பை சொம்பில் ஆற்று வெள்ளமாக அடக்கி வைப்பது எனக்குக் கட்டி வராது என்றே படுகிறது. யாராயிருந்தாலும் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கொள்ளலாம். இடைவெளிகள் குறையும் போது உரசல்களும் அதிகமாக விடுகின்றன.

அப்படியும் சொல்லி விட முடியாது. எவ்வளவு பேர் நெருக்கமாக பாச மழை பொழிகிறார்கள்! பேச்சில் தெரியும் கனிவு உள்ளத்தை உருக்கிப் போட்டு விடுகிறது.

இரவில் சாப்பிட மதியத்திலிருந்து அம்மா மீத்து வைத்திருந்த சோறு, ரசம், அவியல். மீண்டும் தோசையை மறுத்துக் கொண்டேன். நாளைக்குக் காலையில் புட்டு என்று ஆரம்பித்ததை வெற்றிகரமாக மறுத்து கஞ்சியாக நிறுத்திக் கொண்டேன்.

காலையில் நான்கரைக்கு எழுந்து மீண்டும் படுத்துத் தூங்கி ஆறரைக்கு எழுந்தேன். என்ன தோன்றியதோ தெரியவில்லை, திற்பரப்பு அருவிக்குப் போகலாம் என்று ஆரம்பித்தார்கள். என் பெயரைத் துணைக்கு அழைத்து அப்பாவிடம் சொல்ல, உடனே இரண்டு பேரும் முடிவு செய்து விட்டார்கள். எனக்கு வீட்டிலேயே இருந்தால் போர் அடிக்குமாம். என் மனதில் ஏற்பட்ட பாரத்தைக் குறைக்க மருந்து.

கஞ்சி குடித்து விட்டு 9 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பால் பண்ணை வரை போய் பேருந்து பிடிக்க வேண்டும். அம்மாவால் முழுவதும் நடக்க முடியாது நேசமணி நகர் பெயர்ப்பலகை அருகில் போய் ஒரு மூன்று சக்கர வண்டியை அழைத்து வந்து பாதி வழியில் அப்பா அம்மாவை ஏற்றிக் கொண்டு பால் பண்ணை அருகில் இறங்கினோம். 20 ரூபாய்கள்.

தக்கலை போகும் பேருந்தில் ஏற வேண்டும். உட்காரவே இடம் கிடைத்தது. 4 ரூபாய் சீட்டு. அரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விட்டோம். அங்கிருந்து குலசேகரம் போனால் திற்பரப்புக்கு அருகில் இறங்கலாம் என்று தகவல் கிடைத்தது. 'இதுக்குத்தான் வண்டி ஏதாவது எடுத்துக்கிட்டு வரணும்' இது அம்மா.

குலசேகரம் போகும் பேருந்தில் 5 ரூபாய் சீட்டு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணித்து குலசேகரம் என்ற ஊரில் கான்வென்ட் நிறுத்தத்தில் இறங்கினோம். அருகில் பிசுமி விடுதியில் தேநீர் அருந்த நுழைந்தார்கள் அப்பா. என் தேர்வில் உளுந்த வடை, அம்மாவுக்கு பருப்பு வடை, அப்பா செய்தித் தாளில் பிழிந்து உளுந்த வடை. எனக்கு ஏத்தம்பழ அப்பமும் சாப்பிட ஆசை. வேன் ஒன்று வந்து விட்டதாக வெளியில் ஓடி வந்தால் உள்ளே போகக் கூட இடமில்லை. அப்பமும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் காத்திருந்த ஏறிய வேனிலும் உட்கார இடம் கிடைக்கவில்லை. பாதி தூரம் போன பிறகு உட்கார முடிந்தது. மூன்றரை ரூபாய் கட்டணத்தில் திற்பரப்பு கிராமத்தில் இறக்கி விட்டார்கள். இங்கிருந்தும் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டுமாம். ஆட்டோ ஒன்றில் 15 ரூபாயில் போய் இறங்கினோம்.

அருவி பகுதிக்குள் போக 2 ரூபாய் கட்டணம். படகில் போக தனிக்கட்டணம். அணையில் தேக்கிய நீரைத் திறந்து விட்டு அருவியாகச் செய்திருக்கிறார்கள் என்றார் அப்பா. அருவியைப் பார்த்ததும் ஆர்வம் எட்டிப் பார்த்தது.

பயணியர் உடை மாற்றும் மண்டபத்தில் போய் உடைகளைக் களைந்து துண்டு கட்டிக் கொண்டு அருவிக்குள் நுழைந்தேன். முதலில் வேகமாக விழும் இடத்திற்கும் போக தயக்கமாக இருந்தது. மேல் பகுதிக்குப் போய் தலையை நனைத்துக் கொண்டு கொஞ்சம் அடி வாங்கிக் கொண்டு, பிறகு நடுப்பகுதிக்கு வந்து விட்டேன்.

உடம்பைப் புண்ணாக்கும் வேகத்துடன் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அரை மணி நேரத்துக்கு மேல் குளித்துக் கொண்டிருந்தேன். முதுகிலும் தலையிலும், தோள்களிலும், மார்பிலும் தொப் தொப் என்று அறைந்த நீரின் வேகத்தைத் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நின்றிருப்பேன்.

குளித்து வெளியில் வந்து துணிகளை கொஞ்ச நேரம் காய வைத்து விட்டு மெதுவாக மேலே வந்து ஆட்டோ பிடித்து பேருந்தில் அழகிய மண்டபம். கிட்டத்தட்ட 1 மணி நேரப் பயணம். மதிய உணவு விடுதியில். சோறு ஒரே ஒரு முறை வாங்கிக் கொண்டேன். மாலையில் ஐந்தே முக்காலுக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். வெளியூர் பேருந்து ஒன்றில் ஏறி பால் பண்ணை அருகில் இறங்கி, ஆட்டோ பிடித்து வீடு. பையில் காசும் கரைந்து போய் 20 ரூபாய்களுக்கு வந்திருந்தது.

வீட்டில் வந்தது அடுத்த நாள் தேர்வுக்கான வினாத்தாளை தயாரித்து அனுப்பினேன். இட்லி வேண்டாம் என்று சொல்லி சப்பாத்தி அப்பா மாவு விரவி போட அம்மா தக்காளி தொடுகறி வைக்க, நான் சப்பாத்தி சுட்டு பொதிந்து கொண்டேன். அப்பா ஐந்து மணிக்கு வண்டியில் ஏற்றி நிலையத்தில் விட்டார்கள். வெளியிலேயே விடை பெற்றுக் கொண்டவர்கள், நான் உள்ளே உட்கார்ந்திருக்கும் போது திரும்பவும் வந்து ரயில் வரும் வரை இருந்து ஏற்றி விட்டார்கள்.

என்னில் ஏதோ பெரிய மாற்றங்கள் நடப்பதாக உணர்ந்திருக்கலாம். இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து விட்டதாக உணர்வு. நிறுவன பணிகளிலும் என்னுடைய பங்களிப்பை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

திங்கள், டிசம்பர் 01, 2008

நம்பிக்கைகள்

டிசம்பர் பிறந்து விட்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் சில சில மாற்றங்கள். அரிசி உணவு சாப்பிடப் போவதில்லை என்று விரதம் மேற்கொண்டு ஒரு வாரம் ஆகியிருக்கிறது. 25ம் தேதி அந்த விரதம் எடுத்துக் கொண்டேன்.

செவ்வாய்க் கிழமை பகல் முழுவதும் சாப்பிடவில்லை. மாலையில் பிட்சா ஒரு துண்டு, வீட்டுக்கு வந்து அவித்து வைத்திருந்த கடலைகள், பயறுகள்ஒரு கிண்ணம் நிறைய. புதன் கிழமை, சாப்பிடுவதை பெரிதும் தவிர்த்துக் கொண்டேன். மதியம் சோறு எடுத்துக் கொள்ளாமல், வெறும் கூட்டும் காய்கறியும் சாப்பிட்டேன். இரவில் சாப்பிட்டதாக நினைவில்லை.

வியாழக்கிழமை காலையில் ராணிப்பேட்டை போகும் போது காலை உணவாக பூரியும், காபியும். மதியம் சோறும், சாம்பாரும், மோரும். மாலையில் கற்பகம் விடுதியில் சப்பாத்தியும் தேநீரும். வெள்ளிக் கிழமை காலையில் எதுவும் சாப்பிடவில்லை. மதியம் எல்லோரும் ஆந்திரா விடுதியில் சாப்பிடப் போனபோது நான் வளசை சுபாவுக்குப் போய் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டேன். மாலையில் கடைக்குப் போய் பழங்கள், பிஸ்கட்டுகள், பழங்கள் வாங்கி வந்தேன். என் பங்காக இரண்டு பழங்கள், இரண்டு பிசுகட்டுகள், ஒரு பிடி கடலை கிடைத்தது. இரவில் அப்படியே தூங்கி விட்டேன்.

சனிக்கிழமை காலையில் அண்ணன் கடையில் பூரியும் வடையும். வடையை தவிர்க்க வேண்டும். உளுந்த வடை சமைக்கப்பட்ட விதம் வேண்டாத விளைவுகளைத் தூண்டுவதாகத்தான் இருக்கிறது. மதியம் டாடா உடுப்பி விடுதியில் சப்பாத்தி சாப்பிட்டேன். அதன் கூட வந்த குருமா, சட்டினியையும் அலந்து போய் உள்ளே தள்ளினேன். கடைசியில் ஒரு காப்பி. மதியத்துக்கு மேல் கடைக்குப் போய் எலுமிச்சம் பழமும், பட்டாணிக் கடலையும் வாங்கி வந்து ஒரு கோப்பை எலுமிச்சம் பழச் சாறும், இரண்டு பிடி கடலையும் சாப்பிட்டேன்.

நேற்று மதியம் எலுமிச்சை சாறாக இரண்டு கோப்பைகள் குடித்தேன். காலையிலிருந்தே தண்ணீர் நிறைய குடித்தேன். சாப்பிட்டு விடும் அறிவுரைகளைக் கேட்டு வீட்டுக்கு வந்து கோதுமை தோசை சாப்பிட்டேன். அத்தோடு நிறுத்த மனமில்லாமல், மேகி நூடுல்சு வேக வைத்து அதையும் உள்ளே தள்ளினேன்.

போன செவ்வாய்க் கிழமையிலிருந்து இன்றைக்கு ஏழாவது நாள். ஆறு நாட்களில் ஒரே ஒரு முறைதான் அரிசி உணவு சிறிதளவு சாப்பிட்டேன். மற்ற நாட்களிலெல்லாம் வெற்றிகரமாகத் தவிர்த்து விட்டேன். காலை உணவுக்காக கடையில் சாப்பிடப் போனால், இட்லி, பொங்கல், தோசை தவிர்த்து வடை, பூரிதான் கிடைக்கின்றன. வடை, பூரி இரண்டுமே தீவிரமாக தவிர்க்கப்பட வேண்டியவை. அப்படி தவிர்க்க முடியாமல் யாருடனாவது போக வேண்டியிருந்தால், ஒரு பொங்கலோடு நிறுத்திக் கொள்ளலாம். வடை பூரி உறுதியாக ஒதுக்கி விட வேண்டும்.

மதிய உணவை விட்டு விடலாம். அரிசிச் சோறை தவிர்த்து விட்டு காய்கள், கூட்டு சாப்பிடலாம். மாலையில் ஆறு மணிக்கு மேல் சாப்பிடுவதையும் தவிர்த்து விட வேண்டும்.

ஒரு வாரம் இன்னும் முடியவில்லை. இதைப் போல 51 வாரங்கள் ஓட்ட வேண்டும். உடம்பில் ஏறியிருக்கும் அரிசி ஆணவங்களை எல்லாம் களைந்து போட வேண்டும்.

அன்றிலிருந்துதான் மழையும் கூட. செவ்வாய், புதன் ஆரம்பித்த மழை நேற்றைக்குத்தான் ஓய்ந்தது. ராமாபுரத்தின் தெற்குத் திசையில் சாலை தடைபட்டு விட்டது. மவுண்டு பூந்தமல்லி சாலையிலிருந்து ராமாபுரம் வருவது முடியாது. இந்தப் பக்கம் அவ்வளவு மோசமில்லை. ஆற்காடு சாலை வரை போய் வர முடிந்தது.

அலுவலகத்தில் வெளியே போகும் தெருக்களில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியிருந்தது. அலுவலகத்துக்கு முன்னால் எதுவும் இல்லை. அலுவலகம் முதல் மாடியில் இருப்பதால் வேலை செய்வதில் பாதிப்பு இல்லை.

இதற்கு முன்பு இருந்த நாலாவது குறுக்குத் தெருவில் தண்ணீர் நிரம்பி விட்டிருந்தது. 2005ல் இருந்ததை விட அதிகமாக தண்ணீர் புகுந்திருக்கும் என்று நினைக்கிறேன். நேற்றைக்குக் காலையில் அந்தப் பகுதியிலிருந்து கூட்டமாக பலர் காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து வந்து முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

வியாழக் கிழமை பிற்பகலில் நல்ல மழை பெய்திருக்கிறது. போரூர் ஏரி அன்றுதான் திறந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வியாழன் இரவிலும், வெள்ளிக் கிழமையும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. வெள்ளிக் கிழமை காலையில் நடந்து அலுவலகத்துக்கும் போனேன். சனி காலையில் காரை எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் நிறுத்தியிருந்தேன். மதியம் கிளம்ப மறுத்தது. ஆறாம் தேதி சென்னை வருவதாக தகவல். இன்றைக்கு காரின் மின்கலனை சரி செய்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வர வேண்டும். நாளைக்குக் காலையில் பராமரிப்புக்கு விட்டு விட வேண்டும். புதன் கிழமை தயாராகி விட்டால் நன்றாக இருக்கும்.

வெள்ளிக் கிழமை மாலையில் ஆலப்பாக்கம் ஏரி திறந்திருக்கிறார்கள். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் ஹோலி கிராஸ் பள்ளியில் வந்து தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிப்பு செய்து கொண்டு போனார்கள் வெள்ளிக் கிழமை மாலையில். சனிக்கிழமை காலையிலிருந்தே மின் இணைப்பை துண்டித்து விட்டார்கள். மதியத்துக்கு மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தூக்கி உயரத்தில் வைத்து விட்டார்கள். இப்படித்தான் மனித வழிபாடு ஆரம்பித்து விடுகிறது. இப்போது வருபவர்களுக்கு பயன்பாட்டின் எல்லா பகுதிக்கும் நான்தான் படைப்பாளி என்ற பிரமிப்பு.

இதை கவனமாக ஒவ்வொன்றாக எடுத்து சிக்கு பிரித்து விட வேண்டும். மர்மங்கள் எதுவும் இல்லாமல் என்னுடைய அறிவும், திறமையும் மட்டுமே என் பலமாக வைத்து செயல்பட வேண்டும். பழைய விஷயங்களைத் தெரிந்ததால் எனக்கு எந்த வித ஆதாயமும் இருக்கக் கூடாது. அதற்கான பணிகளை ஆரம்பித்து விட வேண்டும்.

நியாயமான வழியில் சம்பாதித்து சாப்பிட மட்டும் வழி இருக்க வேண்டும். இது என் பிரார்த்தனை, நம்பிக்கை, என் வேண்டுகோள். இருவரையும் சேர்த்து வைத்த கடவுளுக்கு அந்த சேர்க்கையை சரியான வழியில் செலுத்தும் பொறுப்பு உண்டு.

தாமதமாவதைக் குறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும். நாள் கேட்டு மின்னஞ்சல். பணம் கேட்டு குறுஞ்செய்திகள். நாளைக்குச் சந்திப்பதற்கு நேரம் கேட்டு மின்னஞ்சல்.

இதை முடிக்கும் போது ஏழரை மணி ஆகியிருக்கும். முகம் மழிப்பதற்கு 10 நிமிடங்கள். துணி துவைப்பதற்கு அரை மணி நேரம். குளிப்பதற்கு 20 நிமிடங்கள். 8.30 ஆகியிருக்கும். தியானம் 20 நிமிடங்கள். 9 மணிக்குத்தான் அலுவலகம் கிளம்ப முடியும். ஒன்பதரைக்குப் போய்ச் சேரலாம்.

நேற்றைக்குக் காலையில் போகும் போது ஆற்காடு சாலை வரை நடந்து போய் விட்டு அதன் பிறகு பகிர்வூர்தி. மாலையில் வண்டியில் ஏறிக் கொண்டு விடக் கேட்டுக் கொண்டேன். சனிக்கிழமை காலையில் கார், மாலையில் நடை. வெள்ளிக் கிழமை காலையிலும் மாலையிலும் நடந்தே வந்தேன். இன்றைக்குப் போகும் போது நடந்து அல்லது ஏதாவது ஊர்தி கிடைத்தால் தொற்றிக் கொள்ள வேண்டும்.

பணிகளை இன்றைக்கு மும்முரமாகக் கவனிக்க வேண்டும். இன்னும் 7 நிமிடங்கள் இருக்கின்றன. இடையில் நாளிதழ் படிக்கப் போனது, நாளைத் திட்டமிட நேரம் செலவழித்தது, குடிதண்ணீர் பிடிக்கப் போனது என்றும் நேரம் செலவழிந்திருக்கிறது. இப்படி ஒரு மணி நேரம் எழுத முயற்சிக்காமல், 20 நிமிடங்கள் என்று வைத்துக் கொள்ளலாமா என்று ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது. முடிந்தால் ஒரு மணி நேரம், இல்லா விட்டால் குறைந்தது 20 நிமிடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அதனால் குறைவாக நேரம் கிடைக்கும் போதும் எழுதுவதற்கு மனம் கிடைக்கும். 1031 சொற்கள்தான் எழுதியிருக்கிறேன்.

2008ம் ஆண்டுக்கான தனி அடைவு ஒன்றை உருவாக்கி இந்த ஆண்டுக்கான கோப்புகளை நகர்த்தி விட்டேன். இதுதானே ஆண்டின் கடைசி மாதம். 2009க்கும் தனி அடைவு உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். 2009 ஆரம்பித்ததும் அதில் போகும் கோப்புகள். என்ன ஒரு நம்பிக்கை. 2009ம் ஆண்டு பிறக்கும் வரை நாம் இருப்போம், இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து கொண்டு இருப்போம் என்று! நம்பிக்கைதான் மனிதனின் ஆதாரம்.

சனி, நவம்பர் 29, 2008

இழுத்து...

11 மணி பதினைந்து நிமிடங்கள். இரவு. இந்த நேரத்தில் என்ன எழுத்துக் கூத்து. தேவை இருக்கிறது. எழுத வேண்டிய நேரங்களிலெல்லாம் சோம்பலில் தூங்குவதும், கண்டதைப் படிப்பதுமாகக் கழித்து விட்டால் இந்த நேரத்தில்தான் எழுத முடியும்.

ஒரு மனிதனுக்கு வரும் சோதனைகள்தான் இவை. கொம்பு எதுவும் முளைத்து விடவில்லை, ஒவ்வொரு நாளும் போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு எல்லாம் எளிதாகிப் போய் விடும் என்பது நடக்கப் போவதில்லை.

ஆனால் ஒழுக்கம் தவறாமல் இருந்த போது எளிதாகத்தான் இருந்தது. அதிகாலையில் எழுந்திருத்தல், எழுதுதல், வீட்டைத் தூய்மை செய்தல், வெளியே உலாவப் போதல், துணிகளைத் துவைத்தல், தவறு நடப்பதைத் தட்டிக் கேட்டல், சமூகப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுதல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத குப்பைகளில் வாய் வைக்க இடமில்லாமல் இருந்தது. இன்றைக்கு அதிஷா எழுதிய கதையில் படம் பிடித்த குழந்தைகளைப் போன்றவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் செய்ய வேண்டியது எவ்வளவு இருக்கிறது? அதை விட்டு விட்டு ஏதோ வெட்டிப் பொழுது போக்குவது என்ன நியாயம்?

சறுக்குதல் மனிதனாக இயல்பு என்பதை உணர்ந்து கொண்டு, உயர்வு மனப்பான்மை கொண்டு விடாமல், ஒவ்வொரு படியிலும் நமது குறைகளைப் புரிந்து கொண்டு, குறைகளை உணர்ந்தவனாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் நாம் சொல்வதை மதிப்புடன் கேட்கிறார்கள் என்றால் அது நமது குழுவினர் செய்த நற்பணியினால்தான். அதனால் நமது தற்பெருமை வீங்கி விடக் கூடாது. குழுவினர் நான் சொல்வதை செவி மடுக்கிறார்கள் என்றால் மரத்தின் மீது ஏறி வழி காட்டுபவனுக்கு இருக்கும் செவி மடுப்புதான் அது. மரத்தின் மீது ஏற முடிந்ததாலே, தரையில் பல விதமான பணிகளை அளித்துக் கொண்டு போகிறவர்களை விட நான் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை. மரமேறி வழி பார்த்து சொல்வதும் குழுவுக்குத் தேவையான ஒரு பணி அவ்வளவுதான்.

இதை நன்கு உணர்ந்து கொண்டு தற்பெருமை மனதை குழப்பி விடாமல் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரையும் பார்க்கும் போதும், அவர்கள் நம்மை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களோ, எந்த விதத்திலும் மேம்பட்டவர்களோ இல்லை, நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான் என்பதை தெளிவாக உணர்ந்து உறவாட வேண்டும். பதவியால் கிடைக்கும் மரியாதைகளை நமக்குக் கிடைக்கும் மரியாதையாக நினைத்து இறுமாந்து விடக் கூடாது.

இன்று காலையில் எழுந்திருக்கும் போது ஆறு மணி தாண்டி விட்டது. நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்தும், எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கினேன். ஏழரை மணிக்கு அலுவலகத்தில் சந்திப்பு. கழிவறையில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருக்க நீண்ட நேரம் ஆகி விட்டது. பல் தேய்த்து, குளித்து விட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும். எல்லாம் அழுக்காகி விட்டன. துவைக்கவும் ஊற வைக்கவில்லை. வெள்ளிக் கிழமை அலுவலகத்துக்குப் போட்டுக் கொண்டு போன அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு அதற்கு மேல் முழுக்கால் சட்டையைப் போட்டுக் கொள்ளலாம் என்று திட்டம். போட்டுக் கொள்ளச் மேல் சட்டையும் துவைத்து தேய்த்தது இல்லை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு தடவை போட்டுக் கழற்றி வைத்திருந்த டி சட்டையை போட்டுக் கொண்டு போகலாம். இதற்குள் மழை தூற ஆரம்பித்திருந்தது. இரவு முழுவதும் மழை நின்று அமைதியாக இருந்தது. காலையில் திரும்பவும் ஆரம்பித்து விட்டதா என்று மலைப்பாக இருந்தது. மழை பெய்தாலும், போகும் வழியில் தண்ணீர் வடிந்திருந்ததைப் பார்த்திருந்த நினைவில் காரை எடுத்துக் கொண்டு போக முடிவு செய்தேன். குடையை எடுத்துக் கொண்டு போய் தெருவில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலவரம் பார்க்க முடிவு செய்தேன்.

மழை குறித்து பொதுவான பேச்சு பேசி விட்டு எட்டிப் பார்த்தேன். 'நம்ம கட்டிடத்துக்கு மட்டும் பேப்பர் காரன் வருவதை நிறுத்தி விட்டான்' என்று ஆதங்கத்துடன் சொன்னார். காலையில் நாளிதழ் படிக்காமல் பைத்தியம் பிடித்து விடும் பழக்கம் இருக்கும் போலிருக்கிறது. எனக்கும் கிட்டத்தட்ட அது போலத்தான்.

நாளிதழ் கொண்டு கதவருகே போடும் சத்தம் காதில் விழுந்து விடுகிறது. அலுவலகத்தில் யாருடைய செல்பேசி அடித்தாலும் கேட்டு விடுகிறது.

எழுத ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. தூக்கம் கண்களைத் தழுவப் பார்க்கிறது. அதிகமான தூக்கமும், அதிகமான பசியும் இருப்பது அனுபவத்தில் உணர்ந்து உண்மை. அந்த பிணைப்பை உடைக்க வெகு நேரம் கண்விழித்து பணி செய்வதும் உதவியாக இருக்கலாம்.

நாம் செய்யும் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் முறைமைகள் முரட்டுத்தனமாக இருக்கின்றதோ? ஏதாவது நல்ல குருவை அண்டி அவரிடம் கற்றுக் கொண்டு சரியான பாதையில் போனால் இது போன்ற சறுக்கல்களைத் தவிர்த்து விடலாமோ?

கண்களை மூடினால் செயசேகரன் மருத்துவமனையில் பணம் கட்டப் போன இடம் மனத்திரையில் வருகிறது. எதை எப்போது இழுத்துக் கொண்டு வருகிறது என்பது விந்தையாகத்தான் இருக்கிறது. இவ்வளவு தேவையான, தவிர்க்க முடியாத நினைவுகளே அளவற்று இருக்கும் போது, தேவையில்லாத குப்பைகளையும் கொண்டு திணிக்காமல் இருக்கலாம். நினைவுகள், திட்டங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தகவிறக்கம் செய்து திட்டப்படி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.

24 நிமிடங்கள்தான் ஆகியிருக்கின்றன. இன்னும் 36 நிமிடங்கள் இருக்கின்றன. பாதியில் நிறுத்தி விடக் கூடாது.

காரை எடுக்கும் போது முன்னால் போய் திரும்பி நேர் திசையிலேயே வெளியில் வந்து விடலாம் என்று நினைத்தேன். திருப்புவதற்கு இடம் போதவில்லை. பின் நோக்கியே எடுத்துப் போய் வீட்டுக்கு வெளியில் வந்து விட்டேன். காவல்காரர் மழைக்கு ஒதுங்கியிருந்தார். ரேடியோ மிர்ச்சி கேட்டுக் கொண்டே கிளப்பினேன். மழை பலத்து வலுத்தது. எஸ் ஆர் எம் கல்லூரி போகும் சாலையைத் தோண்டிப் போட்டிருந்தார்கள். நேராகப் போய் ஆற்காடு சாலையில் வளசரவாக்கம் தாண்டி மசூதி தெருவில் திரும்பிக் கொண்டேன். காரை நிறுத்தி விட்டு இடது புற இருக்கை தாண்டி அந்தப் பக்க கதவு வெளியில் வந்தேன். வலது பக்கம் தண்ணீர் தேங்கியிருந்தது.

அலுவலகத்தில் யாருமே வந்திருக்கவில்லை. மின்அளவு மானி பெட்டியில் சாவியை வைத்து விட்டுப் போயிருந்தார். திறந்து உள்ளே போய் கணினியை இயக்கி முதலில் செய்திகளைத்தான் படிக்கப் புகுந்தேன். மும்பையில் தீவிரவாதிகளுடனான போர் இன்னும் முடியவில்லையாம். காலை வரை தாச் ஓட்டலில் அப்போதும் சண்டை நடந்து கொண்டுதான் இருந்தது. மாலையில்தான் ஓய்ந்ததாம். நாரிமன் கட்டிடத்தில் 4 இசுரேலியர்களும் கொல்லப்பட்டார்களாம். அது யூதர்களின் வழிபாட்டு இடமாம்.

புதன், நவம்பர் 26, 2008

இதுதான் வாழ்க்கையா!

மணி ஐந்து நாற்பத்தி ஐந்து ஆகிறது. நேற்றைக்கு நல்ல சோதனை வந்தது. பிறந்த நாள் என்று கேக்கு வாங்கி வந்திருந்தார்கள். அதை வெட்டியதும் என் கையில் ஒரு துண்டை கொடுத்து விட்டார். அதன் பிறகு மதிய உணவுக்கு அழைக்க ஆரம்பித்தார். அவரிடம் பாதி விபரங்களைச் சொல்லி, ஒரு ஆண்டுக்கு அரிசி சாப்பிடப் போவதில்லை என்று முடிவை தெரிவித்தேன்.

மாலையில் பிறந்தநாள் விருந்தாக பிட்சா வரவழைத்திருந்தார். அவர் கொண்டு வந்து கொடுத்த பெரியதொரு துண்டிலிருந்து ஒரு கிள்ளல் எடுத்துக் கொண்டு திருப்பி அனுப்பி விட்டேன். ஒரு தட்டில் இரண்டு துண்டுகள் கொண்டு வந்து சாப்பிட வற்புறுத்தினார். வாயில் வைத்தது ஒரு மிளகாயை. காரத்தில் அலறி, தண்ணீரும் குடித்துக் கொண்டேன். அந்த பிட்சா துண்டை நன்கு மென்று சாப்பிட்டு விட்டு தண்ணீரும் குடித்து நிறுத்திக் கொண்டேன்.

திங்கள் கிழமை இரவிலேயே ஊற வைத்திருந்த கடலை, பயறு, பெரும்பயறு மூன்றையும் நேற்றுக் காலையில் அவித்து தாளித்து ஒரு சம்படத்தில் போட்டு வைத்திருந்தேன். மறந்து விட்டுப் போய் விட்டேன். வீட்டுக்குத் திரும்பியதும் அந்த சம்புடத்தைத் திறந்து சாப்பிட்டு முடித்தேன்.

மழை அடைத்து வைத்து பெய்கிறது. கார்த்திகை மாதம் பிறந்த பிறகுதான் மழை சூடு பிடித்திருக்கிறது.

நேற்றைக்குக் காலையில் எழுந்து தரை தூக்கவும் துடைக்கவும் முடிவு செய்தேன். துணி ஒன்றை நனைத்து அடுக்களை மேடையை துடைத்து விட்டேன். பாத்திரங்களை ஒதுக்கி கழுவும் குழியில் போட்டு விட்டு தூத்து வாரினேன். சாப்பிட வேண்டாம் என்று முடிவுக்கு பங்கம் வேண்டாம் என்று வாங்கி வைத்திருந்த வாழைப் பழங்களை அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.

தரை துடைப்பதற்கு உள் அறையிலிருந்து ஆரம்பித்து, அடுக்களை, முன்னறை, நான் இப்போது தூங்கும் அறை என்று துடைத்து முடித்தேன். முன்னறையில் அழுக்கும் காலடித் தடங்களும் அதிகமாக இருந்தன. துடைத்துக் கொண்டிருக்கும் போது தொலைபேசி. அவர்கள் நிறுவனத்தின் நிலவரம். நான் புண்படுத்துவது போல பேசியதாக சொன்னார்களாம். பார்க்கலாம்.

தூத்து துடைத்து முடித்ததும், குளியல். முகம் மளிக்க வேண்டாம் என்று முடிவு. எகனாமிக் டைம்சு நாளிதழில் சிட்டி குழுமத்துக்கு 20 பில்லியன் டாலர்கள் அரசு நிதி உதவி அளிக்கப்படுவதாக செய்தி. காரணம் இல்லாமல் பலர் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அல்லது மிகச் சின்ன அர்த்தமில்லாத காரணங்கள்.

'நன்கு தூங்க வேண்டும்' என்று சேவாக் சொன்னதாகப் படித்ததிலிருந்து அவர் மீது வெறுப்பு. அதுவும் தில்லியைச் சேர்ந்தவராக இருப்பதால் கூடுதல் வெறுப்பு. யுவராச்சிங் மீது வெறுப்பு. அவர் பஞ்சாபை சேர்ந்ததால் இன்னும் கொஞ்சம் கடுப்பு.

எழுதித் திட்டியவர் என்று பிரகாசு ராச் மீது வெறுப்பு.

இந்துத்துவா அரசியல் செய்வதாக அத்வானி, மோதி, நிதீஷ் குமார், எடியூரப்பா, இல கணேசன் போன்றவர்கள் மீது வெறுப்பு. குடும்ப அரசியல் செய்வதாக கருணாநிதி மீது வெறுப்பு. தமிழர்களை அழிக்க நினைப்பதற்காக சிங்களவர்கள் மீது வெறுப்பு. பாலசுதீனியர்களை ஒடுக்க நினைப்பதற்காக இசுரேலியர்கள் மீது வெறுப்பு.

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, இன்ஃபோசிசு, சிட்டி வங்கி, கட்டுமான நிறுவனங்கள், அம்பானி சகோதரர்கள் என்று நான் நேசிப்பவர்களை விட வெறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. யாரை எடுத்தாலும் ஏதாவது காரணத்துக்காக குறை கண்டுபிடித்து குற்றம் சாட்டுவது இயல்பாகப் போய் விட்டிருக்கிறது.

குளித்து தியானம் முடித்து விட்டு உட்கார்ந்து நாட்குறிப்பு எழுத ஆரம்பித்தேன். செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல், புதிய விரதங்களின் விபரங்கள் எழுதி விட்டுத் தொடர்ந்து திங்கள் கிழமை நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பதிய ஆரம்பித்தேன். நுணுக்கமாக எல்லாம் நினைவில் வந்தன.

எழுதி முடிக்கும் போது ஒன்பது மணி தாண்டியது. உடை மாட்டிக் கொண்டு, கணினியை மடித்து வைத்து விட்டுக் கிளம்பி விட்டேன். அலுவலகத்தில் எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள். நான்தான் கடைசி. மதியத்துக்கு மேல் வருபவர்கள் மட்டும் வந்திருக்கவில்லை. திட்டமிட்டபடி வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். முதலில் திருத்தங்களை முடித்து விட்டு ஒரு சுற்று சுற்றி வரலானேன்.

வேலை செய்யும் பணியிடத்தை மாற்றிக் கொண்டேன். நேரெதிராக வட்ட மேசையில் உட்கார்ந்து கொண்டேன்.

4 மணிக்கு ஒரு கூட்டம்.

நிறுவனத்தின் சின்னத்தை உருவாக்குவதற்காக ஒரு கணினிவரைபடக் கலைஞரிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் 2000 ரூபாய் முன்பணம் கொடுத்தால்தான் வேலையை ஆரம்பிப்போம் என்றார்கள். அதற்கான வரைவு ஆவணத்தை அனுப்பச் சொன்னால், ஏனா தானோவென்று அனுப்பியிருந்தார். தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்டதில் மிரண்டு விட்டார். நான் இப்படி சேவை வழங்குபவர்களை இழுத்தடிப்பதை குறை சொன்னார். முதலில் கணினி பராமரிப்பு குழுவினர், இப்போது இவர்கள். என் கையில் மாட்டியவர்கள் யாரும் உருப்படியாக வேலை முடிக்க முடியாது.

இது போன்ற ஒரு முறைக்கான பணிகளை மற்றவர்கள் கையில் கொடுத்து விடலாம். நாம் தலையிடாமல் வேலை முடிந்து இறுதி முடிவை மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தேவையில்லாமல் நமது கனத்தை சுமத்த வேண்டாம்.

மாலையில் கடையநல்லூர் போவதற்கு முன்பதிவு செய்து கொண்டேன். பொதிகை விரைவு வண்டியில் கடையநல்லூர் போவதற்கே வசதி இருந்தது. காத்திருப்போர் பட்டியலில்தான் இடம் கிடைத்தது. 3ம் தேதி புதன் கிழமை மாலை புறப்பட்டுப் போய் விட்டு வியாழக் கிழமை கல்யாணத்துக்குப் போய் விட்டு, வியாழன் மாலையில் நாகர்கோவிலுக்குப் போய் விட வேண்டும். வெள்ளி, சனி அங்கு இருந்து விட்டு, சனிக்கிழமை மாலை, கன்னியாகுமரி விரைவு வண்டியில் கிளம்பி ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்னை திரும்பி விடலாம்.

குற்றாலம் எல்லாம் சுற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நேரம்தான் எவ்வளவு குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஒரு நாளில் 24 மணி நேரங்கள் போதவில்லை. நமக்காவது வீட்டுக்கு வந்து விட்டால் மனதை அழுத்தும் பணிகள் கண்ணில் படுவதில்லை.

35 நிமிடங்களில் 807 சொற்கள். இன்னொரு பயன்பாட்டில் அறிக்கை ஒன்று ஓட விட்டுக் கொண்டிருக்கிறேன். இதே போல வேதிப் பொருள் சரக்கு கண்காணிக்கும் அறிக்கையையும் சீர்செய்ய வேண்டும்.

செவ்வாய், நவம்பர் 25, 2008

சீறும் பந்துகள்

பதினாறாம் தேதி உறுதி இரண்டு நாட்கள் கூட நீடிக்காமல் உடைந்து போனது. இன்றைக்குக் காலையில் மீண்டும் அதே உறுதி மொழி. அதற்குக் கூடுதல் தூண்டுதல், ஞாயிறு அன்று காலையில்.

ஒரு ஆண்டுக்கு அரிசி, அரிசியால் செய்யப்பட்ட எல்லா வித உணவு வகைகளையும் நீக்கி வைக்கவும் முடிவு செய்தேன். நமக்கு மிகவும் பிடித்தமான, அது இல்லாமல் வாழவே முடியாது என்று இருக்கும் பொருட்களைத் துறப்பதில் வெகுவாக மேம்படுத்தும்.

அலுவலகத்தில் உட்காரும் இடத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் சரக்கு சரி பார்த்தல், வேதிப் பொருள் திட்டமிடல், முடிக்கும் தேதி திட்டமிடல், தோல் சரக்கு திட்டமிடல் என்று எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும்.

மென்பொருளை இயக்கிப் பார்க்க வேண்டும். தோல் மற்றும் பிற பொருட்களின் குறியூட்டு முறையை முடிவு செய்து செயல்படுத்த வைக்க வேண்டும்.

தோல் சரக்கு மற்றும் வேதிப் பொருள் பயன்பாட்டு அறிக்கைகளைச் சரிபார்த்து இன்றைக்குக் கொடுத்து விடச் சொல்ல வேண்டும்.

நிறுவனத்திற்கு இருக்கும் சிக்கல்களை சரி செய்து கொடுத்து அவரிடம் தகவல் அனுப்ப வேண்டும். சந்திப்புக்கு தயாரித்துக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு பணித் திட்டம் முடிவு செய்ய முயற்சிக்க வேண்டும். தொலைபேசி விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பணி நிலவரங்களையும் சந்திப்புக்கான திட்டமிடல்களையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் வியாழக் கிழமை ராணிப்பேட்டை பயணம் என்பதை மாற்றி வெள்ளிக் கிழமை என்று திட்டமிட்டுக் கொள்ளலாம். மூன்று பேருக்கும் தெரிவிக்க வேண்டியிருக்கும். இன்றைக்கும் நாளைக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டும்.

சரக்கு மதிப்புக்கான நிரல்கள், சரக்கு சரிபார்ப்பதற்கான மாற்றங்கள், நிபந்தனைக்குட்பட்டு கூட்டல் போடும் முறை, சமன்பாடுகளுடன் கூட்டல் போடும் முறை இவற்றை ஆவணப்படுத்தி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தரவுத்தள பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான நுணுக்கங்களை ஆவணப்படுத்தி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

பயன்பாட்டில் என்னென்ன வசதிகள் இருக்கின்றனவோ அவற்றை வரிசையாக கண்காணிக்கச் சொல்ல வேண்டும். அறிவிப்பு அஞ்சல்களை சரி பார்த்து மேம்படுத்தச் சொல்ல வேண்டும்.

நம்முடைய முயற்சிகளை எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி பொதுவில் அறிவித்து விட வேண்டும். சோம்பல், தீனிப் பிரியம், குப்பைகளில் மனத்தை அலைய விடுவது இவற்றையும் களைந்து விட்டால் இன்னும் மேலே மேலே போகலாம். இல்லா விட்டால் இந்த இடத்திலேயே மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டியதுதான்.

அரிசி ஒதுக்க வேண்டும் என்றால், சமைத்த சோறு, இட்லி, தோசை, இடியாப்பம், பொங்கல், தட்டை, சீடை, கஞ்சி எல்லாம் ஒதுங்கி விட வேண்டும். கோதுமையில் செய்த உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொள்ளலாம். பால் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், அசைவ உணவு வகைகள், எண்ணையில் பொரித்த உணவு வகைகள் இவற்றையும் தொடர்ந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை, அவித்த பயறு, பருப்பு வகைகள், கோதுமை நூடுல்ஸ், காய்கறிகள், பழங்கள், நிலக்கடலை, கடலை மிட்டாய்கள், எலுமிச்சம் பழச் சாறு என்று சாப்பிடும் பெரும்பாலான உணவு வகைகளை உண்டு உயிர் வாழ்ந்து கொள்ளலாம். குவித்து வைத்து சோறும், இட்லி, தோசையும் நிறுத்தி விட வேண்டியிருக்கும்.

எட்டே காலுக்கு ராமாபுரம் அருகில் இருப்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தேன். ஞாயிறு மாலையில் அய்யப்ப வழிபாடு. அதில் இட்லி, பொங்கல், சர்க்கரை பொங்கல், இடியாப்பம், வடை என்று சாப்பிட்டு விட்டுக் காலையில் சாப்பிடுவதற்கு இடியாப்பங்களையும் வாங்கி வைத்து விட்டுத் தாமதமாகத்தான் தூங்கினேன். 5 மணிக்குப் பிறகுதான் விழிப்பு வந்தது.

முந்தைய நாள் வாங்கியிருந்த ஆனந்த விகடனை படித்துக் கொண்டே முடித்து விட்டுப் பல் தேய்த்தேன். ஞாயிறு மாலையில்தான் பயணம் முடிவானது. காலணி அலுவலகத்தில் இருந்தது. போட்டுக் கொண்டு போக துவைத்துத் தேய்த்த சட்டைகள் எதுவும் இல்லை. அலுவலகத்துக்குப் போய் தேய்க்கும் கடையில் சட்டை வாங்கி மாற்றிக் கொண்டு காலணியையும் மாட்டிக் கொண்டுதான் போக முடியும்.

உலாவி விட்டு வரலாம் என்று ஐந்து நாற்பதுக்கு வெளியில் புறப்பட்டேன். மழை பெய்து தரை எல்லாம் ஈரமாக சேறாகி இருந்தது. வழக்கமாக தென்படும் அதிகாலை நடையாளர்களில் பலரைக் காணவில்லை. நேராக நடந்து வலது புறம் திரும்பும், விமலா கான்வென்ட் இருக்கும் சாலை கும்மிருட்டாக இருந்தது. கோயில் முன்பு உரத்த ஓசையில் பாட்டை ஒலிக்க விட்டுக் கொண்டு ஒரு சீருந்து. வேகமாகக் கிளப்பி மைதானத்தில் ஒரு வட்டம் அடித்து புறப்பட்டுப் போனார். அப்படியே திருவள்ளுவர் சாலைக்கு வந்து திறந்து கொண்டிருக்கும் தேநீர் கடைகளைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

நேற்று தண்ணீர் வரும் நாள். வெளியில் எட்டிப் பார்த்தால் தண்ணீர் வருவதாகத் தெரியவில்லை. குளித்து விடலாம் என்று குளித்து முடித்து விட்டேன். அதன் பிறகு போய் தண்ணீர் பிடித்து வந்தேன். போகும் போது அம்மா இரண்டு குடங்களுடன் குழாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவர் ஒரு குடம் பிடித்த பிறகு நான். அதன் பிறகு அடுத்த கட்டிடத்திலிருந்து ஒரு அம்மா. அதிகாலையிலேயே முகப் பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு வந்திருந்தார். உள்ளிருந்து வந்த மாமி வாசல் அருகிலேயே நின்றிருந்தார். மழையில் சேறாகிக் கிடந்து குழாயருகில் கவனமாக வழுக்கி விடாமல் தண்ணீர் பிடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டில் முதலில் குடிக்க வெந்நீர் அடுப்பில் எடுத்து வைத்தேன். இன்னொரு அடுப்பில் சின்னப் பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ். இரண்டையும் வைத்து விட்டு தியானம் செய்ய உட்கார்ந்தேன். பாதியில் எழுந்து பார்த்தால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்திருந்தது. நூடுல்சும் இளக ஆரம்பித்திருந்தது. ஒரு முறை கிண்டி கொடுத்து விட்டுத் திரும்ப உட்கார்ந்தேன். 20 நிமிடங்களை முழுவதுமாக முடிக்காமல் 15 நிமிடங்களிலேயே எழுந்து கொண்டேன். வெந்நீர் பாத்திரத்து அடுப்பை மூடி விட்டு, நூடுல்சை பார்த்தால் அதுவும் வெந்து விட்டிருந்தது. இடியாப்பத்தின் மீது வெந்நீரை தெளித்து விட்டு இன்னொரு டம்ளரில் ஆர்லிக்சு கலக்க எடுத்துக் கொண்டேன்.

முதலில் இடியாப்பங்கள். கொஞ்சம் புளித்துப் போன சுவை, வீணாக்க முடியாதல்லவா? தொடர்ந்து நூடுல்சு, இடையிடையே ஆர்லிக்சு. ஆர்லிக்சு நீர்த்துப் போய் நீராகத் தெரிந்தது. ஆனாலும் இனிப்புச் சுவை இருக்கத்தான் செய்தது.

துவைத்துக் காய்ந்திருந்த சட்டைகளையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். தேய்க்கும் கடையில் இந்தத் துணிகளை கொடுத்து விட்டு ஏற்கனவே கொடுத்திருந்த சட்டைகளைக் கேட்டால், தேய்த்து வைத்திருந்தார்கள். மூன்று சட்டைகளுக்கு 10 ரூபாய்கள் கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டேன். அலுவலகத்தில் கீழே சுகூட்டி தெரிந்தது. மேலிருந்து கீழே இறங்கி வந்தார். அவர்தான் வண்டியை எடுத்துப் போயிருந்தாராம். வண்டியை திரும்பக் கொண்டு வைத்து விட்டுப் போகிறார். ராணிப்பேட்டைக்குப் புறப்படுகிறாராம்.

கணினியை இணைத்துக் கொண்டேன். போட்டுக் கொண்டிருந்த சட்டையை மாற்றி தேய்த்த சட்டை போட்டுக் கொண்டேன. தோல் கண்காட்சி தொடர்பான வேலைகளை அழகாக திட்டம் போட்டுக் கொடுத்திருந்தார். அதற்கான செலவினங்களையும் பட்டியல் போட்டு எனக்கு அனுப்பியிருந்தார். வாரா வாரம் குழுக் கூட்டம் நடத்தி வேலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருந்தார்.

சரக்கு அறிக்கைக்கான மாற்றங்களையும் முயற்சிக்கலானேன். அதற்குள் 8 மணி ஆகி விடவே புறப்பட்டு விட்டேன். பையில் கணினியை எடுத்துக் கொண்டு கீழிறங்கினேன். கார் மீண்டும் மின்கலன் மின்னூட்டம் இறங்கி விடக் கூடாதே என்று ஓரிரு நிமிடங்கள் அதனை இயக்கி விட்டு சாலைக்கு வந்தேன். சாலையின் ஓரத்தில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. நடு சாலையில் நடந்தால் வாகனங்கள் எங்கு போகும். கவனமாக நடந்து பேருந்து நிறுத்தம் வந்தேன்.

முதலில் வந்த சொகுசுப் பேருந்து ஒன்று நிற்காமல் போனது. குன்றத்தூர் போகும் பேருந்து நின்றது. 3 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால் சில்லறை இல்லையாம். கடைசியில் 5 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு விட்டார். போரூர் சாலை நிறுத்தத்தில் இறங்கும் போது இன்னொரு பெண்ணும் இறங்க எழுந்தார். 'வளசரவாக்கம் சீட்டு வாங்கி விட்டு போரூரில் இறங்கினா என்ன அர்த்தம்' என்று அவருக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார் அந்த நடத்துனர். அதைத் தட்டிக் கேட்டிருக்கலாம். நமக்குக் கூடத்தான் அவர் 2 ரூபாயைத் தராமல் அமுக்கிக் கொண்டாரே!.

குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சாலையைக் கடக்கலானேன். ஆற்காடு சாலையைக் கடந்து மவுண்ட் - பூந்தமல்லி சாலையின் ஒரு பாதியைக் கடந்து நடுவில் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பக்கம் சிவப்பு விழுந்ததும் பெரிய கூட்டமே சாலையைக் கடந்தது. மறுபுறத்தில் கடையில் டைம்சு ஆஃப் இந்தியா நாளிதழ் வாங்கிக் கொண்டேன். 2 ரூபாய்கள். பேருந்துக்குக் காத்திருப்பவர்களை பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் போகுமாறு செய்வதற்கு ஒரு பெரிய காவலர் படையே இருந்தது. வெற்றிகரமாக எல்லோரையும் சாலை நிறுத்தத்திலிருந்து தள்ளியிருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் போகச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாம் காருக்குக் காத்திருந்தாலும் அங்கு நிற்கக் கூடாதுதான். குறுஞ்செய்தியிலேயே பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் நிற்பதாகச் சொல்லியிருந்தேன். நாளிதழைப் படித்துக் கொண்டே வாகனங்கள் வரும் போக்கை அவதானித்துக் கொண்டிருந்தேன். வெளியூர் பேருந்துகள் கொத்துக் கொத்தாக வந்து நின்று போய்க் கொண்டிருந்தன. நான் நிற்பதைப் பார்த்து விட்டதாகவும், பேருந்து நிறுத்தம் தாண்டி வந்து விடுமாறும் தொலைபேசியில் சொன்னார்.

இறங்கி வழி விட நான் பின்பக்கம் இருக்கும் இருக்கைக்குப் போய்க் கொண்டேன். கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. வெள்ளிக் கிழமை நான் போகாததை அவரிடம் தெரிவிக்காதது, அவர் கேட்ட ஒளிப்படக் கருவிக்கான மின்னூட்டி வாங்குவதைக் குறித்து எந்த உதவியும் செய்யாதது என்று கொஞ்சம் கடுப்பாகியிருக்கலாம். வார இறுதி எப்படிப் போனது என்று கேட்டேன். மகாபலிபுரம் போனார்களாம், வழியில் பிசர்மேன் கோவ், முதலைப்பண்ணை எல்லாம் பார்த்தார்களாம். மழையில் நனைந்தும் போனார்களாம்.

வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத் தூங்கிய களைப்பு. பாதி வழி தூங்கி வழிந்து கொண்டே வந்தேன். இடையிடையே தொலைபேசி அழைப்புகள். புறவழிச் சாலையில் போய் கே எச் அருகில் திரும்பினார்கள்.

ஆய்வு நடப்பது பணி அறைக்கு உள்ளே இருக்கும் அறை. அதில் போய் உட்கார்ந்து கொண்டோம். குடிக்க காபி சொன்னார்கள். சர்க்கரை போடாமல் காபி வந்தது. அதைக் குடித்து விட்டு டேனரியை சுற்றிப் பார்க்க புறப்பட்டோம். மென்பொருள் பணிக்காக மேலோட்டமாக பார்த்த இடங்களையும் பணிகளையும் தொழில் நுட்பக் கோணத்தில் பார்க்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தார்கள். பின்பக்கம் இருந்த தோல்களை பெற்று தரம் பிரித்து சேமித்து வைக்கும் பகுதி, தோல்களை தடிமன் குறைக்கும் இயந்திரங்கள், அவற்றுக்கான பணியிடங்கள் என்று பார்த்துக் கொண்டே வந்தோம். தமது தணிக்கை ஆய்வுக்கான குறிப்புகளை சரிபார்த்துக் கொண்டே வந்தது புரிந்தது. கற்றுக் கொண்ட அடிப்படையில் சுவர்களிலும் தரைகளிலும் மாற்றங்களைச் செய்திருந்தார்கள்.

முதிர்ச்சி இல்லாத இளைஞர் குழுவாக பணியாற்றுகிறார்கள். சொல்வதை செய்கிறார்கள். தாமே முனைப்பெடுத்து மெருகேற்றுவது நடக்க மாட்டேன் என்கிறது.

மணி 8.55 ஆகியிருக்கிறது. இன்னும் 12 நிமிடங்கள் இருக்கின்றன. ஒன்பது மணி தாண்டி 7 நிமிடங்களில் எழுத்து முடியும். ஒன்பதேகாலுக்குப் புறப்பட்டால் ஒன்பதரைக்கு அலுவலகம் போய்ச் சேரலாம். மாலை 6 முதல் 10 வரை மின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எட்டரை மணிக்கு வேலை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தது பிசுபிசுத்து போய் விட்டது. இது போன்று சரியாக சீர்தூக்காமல் புதிய முயற்சிகளை ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும்.

இது வரை 1394 சொற்கள் ஆகியிருக்கின்றன. 50 நிமிடங்களில் 1500 சொற்கள் எழுதினால் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வீதம் வருகிறது. இன்னும் வேகம் அதிகரிக்க வேண்டும்.

அங்கிருந்து இரண்டாவது பணிமனைக்குப் புறப்பட்டு சென்றோம். நகரின் மறுமுனையில் சிப்காட்டில் இருக்கிறது. அங்கும் பெரிதாக முயற்சி செய்தி பல மாறுதல்களைச் செய்திருந்தார்கள். குறை கண்டுபிடிக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. அங்கிருந்து திரும்பி வந்து கேள்வி பதில் ஆரம்பித்தது.

அதே கேள்விகள். கொஞ்சம் போரடித்தது. மதிய உணவுக்கு 2 மணி தாண்டிய பிறகுதான் நகர்ந்தார்கள். கோழிக் கறி கொண்டு வந்தார்கள். வேண்டாம். முதலில் உப்பு அதிகமாகப் போட்ட ஒரு சூப்பு. காய்கறிகள், பழங்கள் கலந்து ஒரு கலவை அதில் கார்ன் பிளேக்சும் போட்டிருந்தார்கள். சப்பாத்தி. தொட்டுக் கொள்ள காய். கடைசியில் தட்டு நிறைய சோறு போட்டு விட்டார். அதைத் தள்ளித் தள்ளிச் சாப்பிட்டு முடித்தேன். அதன் விளைவு கண்கள் சொக்கிக் கொண்டு வந்தன.

மூன்று மணிக்கு மேல் ஆரம்பித்த அடுத்த சுற்று நாலரை மணிக்கெல்லாம் வேகம் குறைந்தது. இன்னும் ஓரிரு பிரிவுகளை முடித்து விட்டு ஐந்தரைக்கு மேல் கிளம்பினோம். நானும் அவர்களுடனேயே கிளம்பி விட்டேன். இப்போது தூங்கிக் கொண்டிருக்காமல், பேச்சில் நேரம் போனது.

1561 சொற்கள் ஆகியிருக்கின்றன. இன்னும் 3-4 நிமிடங்களில் 1700 சொற்களை தொட்டு விடலாம். மேலே போய் 1740 ஆகி விட்டால் நிமிடத்துக்கு 29 சொற்கள் என்ற வீதத்தில் எழுதி முடித்திருப்பேன்.

போரூரில் இறங்கி பேருந்தில் ஏறிக் கொண்டேன். லட்சுமி நகர் அருகில் பேருந்து வேகம் குறைந்ததும் இறங்கிக் கொண்டேன். வழியில் இருந்த பெட்டிக் கடையில் நான்கு கடலை மிட்டாய்கள். அலுவலகத்துக்குப் போய் ஒரு மணி நேரம் தரவு சரி செய்தலில் நேரம் போனது. எட்டரைக்கு மேல் புறப்பட்டேன். கதைப் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டேன். துர்கா விடுதியில் 6 இட்லிகள், வீட்டுக்கு வந்து பிசுகெட்டுகள், ஆர்லிக்சு, பழங்கள் என்று நிரம்ப சாப்பிட்டுக் கொண்டேன். பசுமைக் கடையில் பிசுகெட்டு குளிக்கும் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, பிசுகெட்டு, பழங்கள் வாங்கி வந்திருந்தேன். கூடவே மேகி நூடுல்சும்.

தூங்குவதற்கு முன்பு நிரல்களை சரி பார்த்து விடலாம் என்று உட்கார்ந்து 11 மணி வரை வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு தியானத்தில் உட்கார முயற்சித்து 12 மணிக்கு தூங்கி விட்டேன். பலவிதமான கனவுகள். அதிகாலை நான்கு மணி வாக்கில் விழிப்பு வந்தும் 6 மணிக்குத்தான் எழுந்திருந்தேன்.

1687 சொற்கள், நேரம் முடியப் போகிறது. நிமிடத்துக்கு 28 சொற்கள்.

ஞாயிறு, நவம்பர் 23, 2008

இன்னொரு ஞாயிற்றுக் கிழமை

இருபத்தி மூன்றாம் தேதி ஆகி விட்டது.

இன்றிலிருந்து தினமும் முயற்சி எடுக்க வேண்டும். நேற்றைய தொலைபேசி உரையாடலைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று அனுப்ப வேண்டும். செவ்வாய்க் கிழமை ஒரு நினைவூட்டல். அவர்களது வேலைகளை முடித்து விட வேண்டும்.

அறிக்கை தயாரித்துக் கொள்ள வேண்டும். மூன்று பணிமனைகளிலும் தகவல் உள்ளிட்டு அறிக்கை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல வேலை முடித்துக் கொள்ள வேண்டும். முடுக்கி விட்டுக் கொள்ள வேண்டும்.

நாளைக்கு தொலைபேச வேண்டும். பேசி கொஞ்சம் நிலவரத்தை தெரிவித்து விட வேண்டும். அறிக்கைகளை சரி பார்த்து எடுக்க வழி செய்து விட வேண்டும்.

இந்த வாரத்துக்குள் திரட்ட வேண்டும். இந்தக் கணக்கிற்கேற்ப வேலையையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பெரிய தொகை என்று வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், மற்ற சின்னத் தொகைகள் வருவதும் நின்று போய் விடும். நேரத்தை நியாயமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

மணி ஏழே கால் ஆகியிருக்கிறது. செல்பேசியில் எழுதுவதற்கான நேரத்தை உள்ளிட்டு செயல்படுத்தாமல் விட்டிருந்தேன். இப்போதுதான் பார்த்து செயல்படுத்தி விட்டேன். எட்டே கால் வரை எழுத வேண்டும். உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்து விட வேண்டும்.

நேற்றைக்குக் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விட்டேன். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மடிக்கணினியில் அறிக்கையை ஓட விட்டு விட்டு காலை பணிகளை செய்து கொண்டிருந்தேன். நேற்று முழுவதும் முயற்சித்து 15 நிமிடங்கள் வரை ஆகக் கூடிய அந்த அறிக்கையை ஓரிரு நிமிடங்களில் வரும்படி செய்து முடித்தேன். அதில்தான் நாள் முழுவதும் போனது. இப்படி இருந்தால் நாம் எப்படிப் பிழைப்பது?

சந்திப்புக்கு வர முடியாது என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மழை சிணுங்கிக் கொண்டே இருந்ததால், கார் இருந்தது வசதியாகப் போய் விட்டது. வெள்ளிக் கிழமை மாலையிலும் மழை பெய்து கொண்டிருந்ததால் காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தேன்.

வெள்ளி மாலை புறப்படும் போது சொன்னது ஆழமாகப் பாதித்து விட்டது. அதுதான் அதிகாலையில் எழுப்பி நிறுத்தி விட்டது. காரிலும் மடிக்கணினியை அணைக்காமல் வைத்திருந்தேன்.

மேலே போய்ப் பார்த்தால் யாரும் வந்திருக்கவில்லை. கதவை நானே திறந்து கொண்டேன். அதிகாலை பணி நேரத்துக்கு வருபவர்கள் கூட வந்திருக்கவில்லை. உட்கார்ந்து பணம் தரச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினேன் முதலில்.

ஒன்பது மணிக்கு மேல் ஒரு சின்ன விவாதம் என்று கூடினோம். இனிமேல் காசு கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். அந்த முடிவு முற்பகலில் மாறி விடும் என்று அப்போது தோன்றவில்லை. இப்போதெல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துகள் ஏராளமாக வர ஆரம்பித்திருக்கின்றன, அவற்றை சுமுகமாக ஏற்றுக் கொள்ளவும் செய்கிறேன். முன்பெல்லாம் யாராவது மாற்றிக் கருத்துச் சொன்னால் உடனேயே படபடவென வந்து விடும்.

கார்த்திகை மாதம் கல்யாண காலம். அவர் செய்து கொடுத்திருக்கும் தமிழ் 99 ஒட்டிகளை சரியாகப் பயன்படுத்தவும் இல்லை. இதிலிருந்து எப்படியே தாவித் தாவி வங்கி முறைமைக்கு மனம் தாவியிருந்தது. நேற்றைக்கு விளக்கும் போது முழுவதும் சரியாக எடுத்துச் சொல்ல முடியவில்லை.

தொழிலுக்கு பெருத்த அடி கிடைக்கும். சின்னச் சின்ன வியாபாரிகள் தொழிலை விட்டுப் போக ஆரம்பிப்பார்கள். நன்கு தோல் செய்து கொடுப்பவர்களுக்க நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதனால் சிறு முகவர்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

பணமும் நிலமும் நகைகளும் கூட்டி வருவதுதான் வாழ்க்கை என்றால் எல்லாமே எளிதாகப் போய் விடும். எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்தால்தான் தெரியும் என்றதற்கு அப்படி எல்லாம் ஆகாது, எப்படியாவது தனக்கு வேண்டியதைத் தேடிக் கொண்டு விடுவார்கள் என்று அப்பா சொன்னார்கள்.

இப்போது சோர்வு கண்களை அழுத்துகிறது. கண்டதைத் தின்றதன் சோர்வு. காலையில் எழுந்ததும் சும்மா இருக்க முடியாமல் ஆறேழு தட்டைகள், இடியாப்பம் விற்றவரிடம் 10 இடியாப்பம் வாங்கி சர்க்கரையுடம் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டேன். நேற்று மாலை சாப்பிட நினைத்து சுப்ரபாவிற்கு உள்ளே போனால் உட்காரும் இடம் எல்லாம் நிரம்பி வழிந்தது. அதனால் தட்டையும் மூன்று கேக்குகளும் மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

வீட்டில் குடிதண்ணீர் இல்லை என்ற எண்ணத்தில்தான் வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்று நினைத்திருந்தேன். துர்கா பவன் திறந்திருக்கவில்லை. சனி. ஞாயிறு விடுமுறை என்று திட்டமான நடைமுறையில் நடக்கிறது அவர்களது தொழில்.

மணி ஏழரை ஆகிறது. இன்னும் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள். கனவில் யாரோ கல்லூரி மாணவனா என்று கேட்பதாக வந்தது. சில நாட்களாகவே தூங்குவதற்கு முன்பு தியானம் செய்வது நின்று போயிருக்கிறது. பழக்கங்களை ஆண்டுகள் கடந்து தொடர்வது எவ்வளவு சிரமமாக இருக்கிறது. இப்போது கூட எழுதுவதை வலுக்கட்டாயமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

அடுத்தவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்து எழுதினாலே எழுத்தின் போக்கும் உள்ளடக்கமும் பெரிதும் மாறி விடத்தான் செய்கிறது.

வலைப்பதிவின் மூலம் மனதைக் கொட்டி வைத்து விட, பலரின் மனதைத் தொட்டு விட முடிகிறது. அதிகம் சந்தித்திராத பலர் நெடுநாள் நெருக்கத்துடன் பேசும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எழுத்துக் குறிப்புகளைப் படித்தார்களா என்று எனக்குத் தெரிவதில்லை. ஆனால் அவர்களுக்கு மன நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது.

இன்னொரு கனவில் வீட்டு வேலைகள் செய்வது போலவும், மாட்டி வைத்து விட்டீங்களே என்று புலம்புவதும் தெரிகிறது. பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசி விட்டுத் தன் வீட்டில் இப்படி ஆணாதிக்கத்தை செயல்படுத்துவது என்ன நியாயம் என்று சண்டை போடுகிறேன். வீடு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். பெருசா கவிதை மட்டும்தான் எழுத முடிகிறது என்று சொல்லி முடிக்கிறேன்.

பெண்கள் அப்படி இருப்பதைத்தான் விரும்புகிறார்கள், அவர்களுக்கு எது நல்லது என்று அவர்களுக்குத் தெரியாதா என்றும் ஒரு வாதம் மனதில் முளைத்தது. வீட்டுக்கு ராணி, சமையலறைக்கு தலைவி, வெளியில் போய்ப் பழகத் தெரியாத மென்மை நிறைந்தவள் என்று போற்றிப் பாதுகாத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும். அதுதான் நியாயமான முறையா? பெண்மை என்பது வீட்டுக்குள் ஒடுங்கி இருப்பதாகத்தான் விளங்க வேண்டுமா?

முன்னறையில் உட்கார்ந்து கொண்டு மனைவியை பஜ்ஜியும் காபியும் போட்டுக் கொண்டு வர அதிகாரம் செய்து கொண்டிருப்பதுதான் ஆண்மையா? வேண்டுமென்றால் தனிமையில் தாஜா செய்து கொண்டு விடலாம். அப்படி வீட்டில் எலி வெளியில் புலி என்று இரட்டை வாழ்க்கைதான் மனிதமா!

உண்மையிலேயே தெரியவில்லை. மனதுக்குச் சரி என்று பட்ட வழியில் தொடர்ந்து போய்க் கொண்டே இருப்போம். அதனால் பல தொல்லைகள் வரலாம். ஆனால் அதற்காக தருமத்தைக் கைவிட்டு விடக் கூடாது.

எனக்கு எது நல்லதாக நன்மையாக இருக்கிறதோ அது பொருந்தத்தான் செய்யும். அளவுக்கு மிஞ்சிய பணம் கைவசம் வரும் போது, உழைக்காமல் பணம் கைவசம் வரும் போது ஏற்படும் பாவ எண்ணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். சாங்காயில் இருக்கும் போது மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பளத்தொகை வங்கியில் சேர்க்கப்பட்டு விடும். பணம் இல்லை என்று என்றைக்கும் உணர்ந்ததே இல்லை. சொல்லப் போனால், யாருக்கோ கண்களைக் கட்டித்தான் எனக்கு அந்த வாய்ப்பே கிடைத்தது.

இடையில் இருந்த பூசலுக்கு நடுவே நான் சாங்காய் போய்ச் சேர்ந்தேன். அங்கு போனதும் எதுவும் செய்யாமல் இருந்தாலும் 2 ஆண்டுகள் ஓட்டி அடைக்க முடிந்தது. அதைக் காட்டி வேலை பெற்று அடுத்த 2 ஆண்டுகள் ஓட்டினேன்.

அந்தக் கடன்களை எப்போது திரும்பி அடைக்கப் போகிறேன். பெய்ஜிங் பார்க்க வேண்டும் என்று அலுவலகப் பயணத்தையும் பெய்ஜிங் பயணத்தையும் சேர்த்து ஏற்பாடு செய்தேன். என்னுடைய நன்னடத்தைகளில் பெருமளவை பலி கொடுத்து சீரழிந்து கொண்டேன்.

சீனாவின் மூலை முடுக்குளுக்கெல்லாம் போய் வந்திருக்கிறேன். உறுப்பினர்களாக தோல் நிறுவனங்களைச் சேர்ப்பதற்காக தென் சீனாவிலும், வட சீனாவிலும், கிழக்கு சீனாவிலும் காலணி தேய அலைந்திருக்கிறேன். தோல் விற்க வென்சோ முதலான இடங்களில் ஓடி அலைந்திருக்கிறேன். அப்படி முயற்சி என்ற வகையில் பார்த்தால் கொடுத்த பணத்தில் பாதிக்கு வேலை பார்த்திருப்பேன். ஆனால் விளைவுகள் என்று பார்த்தால் எதுவும் உருப்படியாக இல்லைதான்.

இன்னும் 24 நிமிடங்கள் இருக்கின்றன. அப்படியே சரிந்து தூங்கி விடலாம் என்று உந்துதல். அப்படியே உட்கார்ந்த வாக்கில் கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டேன். சாப்பிடும் பொருளில்தான் என்னுடைய இயக்க உந்துதல் இருக்கிறது. கண்டதை திணித்துக் கொண்டிருந்தால் கண்டபடிதான் வாழ்க்கையும் ஓடும்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் நேரம் அமைத்துக் கொண்டும் இப்போது 1200 சொற்கள்தான் வந்திருக்கின்றன. வியாழக்கிழமை காலையில் ராணிப்பேட்டைக்கு. இரண்டு பேர் சுற்றுப் புறசூழல் குறித்து தணிக்கை செய்ய வந்திருந்தார்கள். இறுக்கம் தளர்ந்தது மட்டும்தான் ஒரே பலன்.

அந்த ஆவணத்தில் முத்திரை நன்றாகவே தெரிந்தது. நான் சேரும் போது முதன் முதலில் பார்க்கும் போதே சரியா எடை போட்டிருப்பான். உள் அரசியலுக்காக, தன் பக்கம் சேர்த்துக் கொள்வதற்காக என்னை ஆதரித்திருப்பான். இரண்டு ஆண்டுகளில் செலவு வைத்து விட்டு நான் என்னுடைய பணியை முடித்துக் கொண்டிருந்தேன்.

இதை முடித்து விட்டு வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும். 1318 சொற்கள் ஆகி விட்டன. இன்னும் ஏழெட்டு நிமிடங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இன்னும் 5 நிமிடங்கள் இருக்கின்றன.

இனிமேலாவது கொஞ்சம் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டே வேலைகளில் இறங்க வேண்டும். காலையில் தினத்தந்தியும் எகனாமிக் டைம்சும் வருவது மோசமான சேர்க்கையாக இருக்கிறது. காலைப் பொழுதை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டு விடுகின்றன. தினத்தந்தியின் செய்திகளை செரித்துக் கொள்ளும் திறன் எனக்கு இல்லையோ!

பக்கத்து கட்டிடத்தில் முதல் மாடியில் அடம் பிடிக்குப் பெண் குழந்தையின் குரல் கேட்கிறது. பல நாட்களாக காணவில்லை. அப்படித்தான் அடம் பிடிப்பாள். திட்டும், அடியும் வாங்கி அதை விட்டு ஒழித்தாள். அதை எல்லாம் ஆழப்புதைத்து விட்டு இப்போது மென்மையும் நளினமும் நிறைந்த பெண்ணாகி விட்டிருக்கிறாள்.

ஞாயிறு, நவம்பர் 16, 2008

மீண்டும் தட்டுத் தடுமாறி எழுந்து....

நேற்று இரவு வீட்டுக்குத் திரும்பும் போது நல்ல மழை. மழையில் நனைந்து கொண்டே வரும் போது சோர்வு கலக்காத உறுதி காட்டும் புலம்பல்கள். குளிர் உடலை நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்து குளிர்ந்த தண்ணீரில் குளித்து முடித்தேன். தூக்கத்தைக் குறைக்க வேண்டும், உணவைக் குறைக்க வேண்டும்.

நேற்றுக் காலையில் வீட்டில் பிசுகட்டுகள், ஆர்லிக்சு. அலுவலகத்தில் சந்திப்பு முடிந்த பிறகு டாடா உடுப்பி விடுதியில் இட்லிகளும் பூரியும். மற்றவர்கள் எல்லாம் இட்லியோடு நிறுத்துக் கொண்டாலும் எனக்குப் பூரியும் வேண்டியிருந்தது. மதியம் காலை உணவாக வந்த சேமியா உப்புமாவுடன் கொஞ்சம் சாம்பார் சோறு.

மாலை தாம்பரத்துக்குப் போகும் வழியில் 10 ரூபாய்க்கு லிட்டில் ஆர்ட்சு பிசுகட்டுகள், தாம்பரத்திலிருந்து திரும்பும் போது முறுக்குப் பொதி ஒன்று வாங்கி நொறுக்கி முடித்தேன். நூடுல் கிங் என்ற விடுதியில் காய்கறி சூப்பு, நூடுல்ஸ் சாப்பிட்டிருந்தேன். அவருடனேயே பேருந்தில் ஏறி வடபழனியில் இறங்கி காபி. கூட எதுவும் சாப்பிட ஆரம்பித்து விடாதது மறுப்பினால்தான். அங்கிருந்து கோயம்பேடு போகும் பேருந்தில் ஏற்றி விட்டு விட்டு, நான் 37G பிடித்து வளசரவாக்கத்தில் இறங்கிக் கொண்டேன். மழை தூறிக் கொண்டே இருந்தது.

பல நல்ல பழக்கங்களை வேலை மும்முரத்தில் கைவிட்டிருக்கிறேன். ஆரம்பிக்க வேண்டும். வழக்கமாகச் செய்யும் அலுவலக வேலைகளைத் தவிர்த்து வாரத் திட்டமிடலில் மற்ற நடவடிக்கைகளுக்கும் தவறாமல் நேரம் ஒதுக்க வேண்டும்.

காலைப் பொழுது: (மொத்தம் வாரத்துக்கு 6 மணி நேரம்)
1. உலாவப் போதல் - 20 நிமிடங்கள், வாரத்துக்குக் குறைந்தது 3 நாட்கள் - மொத்தம் 1 மணி நேரம்
2. வீட்டை ஒதுங்க வைத்தல் - 20 நிமிடங்கள் வாரத்துக்கு 6 முறை - மொத்தம் - 2 மணி நேரம்
3. நாட்குறிப்பு எழுதுதல் - 20 நிமிடங்கள் வாரத்துக்குக் குறைந்தது 9 முறை. ஒரே நாளில் 1 மணி நேரம் எழுதி விட்டால் 3 தவணைகள் முடிந்து விடும். - மொத்தம் - 3 மணி நேரம்

இணையம் (வாரத்துக்கு மொத்தம் 19 மணி நேரம்)
1. மடற்குழுக்களின் மடல்களைப் படித்தல் - வாரத்துக்கு 10 மணிநேரம்
2. விவாதக் குழுக்களில் எழுதுதல் - வாரத்துக்கு 3 மணி நேரம்
3. வலைப்பதிவுகளில் எழுதுதல் - வாரத்துக்கு 3+3 மணி நேரம்

கணினி (வாரத்துக்கு மொத்தம் 10 மணி நேரம்)
1. புதிய தொழில் நுட்பங்களை முயற்சித்தல் - வாரத்துக்கு 10 மணி நேரம்

பணி (வாரத்துக்கு மொத்தம் 20 மணி நேரம்)
1. வாடிக்கையாளர் அறிக்கைகளைப் பார்வையிடல் - ஒரு வாடிக்கையாளருக்கு வாரம் 2 மணி நேரம் - மொத்தம் 14 மணி நேரங்கள்
2. ஒன்றுக்கொன்று பேசுவது - வாரத்துக்கு 3 மணி நேரம்
3. முதலீட்டாளர்கள் தொடர்பு - வாரத்துக்கு 3 மணி நேரம்.

இவ்வளவும் செய்வதற்கு வாரத்துக்கு 45 மணி நேரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன்? வாடிக்கையாளர்களை சந்திக்கப் போவது கூட்டங்களில் கலந்து கொள்வது இவற்குக் 30 மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்துக்கு 168 மணி நேரங்கள் இருக்கின்றன. நேரு ஒரு கட்டத்தில் நாளைக்கு 2 மணி நேரம் கூடத் தூங்காமல் பயணம் செய்து மக்களை சந்தித்துக் கொண்டிருந்தாராம். நாமெல்லாம் எவ்வளவு பெரிய சோம்பேறிகளாக இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூக்கம். இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை போதும். வாரத்துக்கு 28 மணி நேரங்கள் அதில் போய் விட 140 மணி நேரங்கள் எஞ்சியிருக்கும்.

அதில் மேலே குறிப்பிட்ட முக்கியமான ஆனால் அவசரமில்லாத வேலைகளைச் செய்ய 45 மணி நேரங்களைக் கழித்துக் கொள்ளலாம். 95 மணி நேரங்கள் எஞ்சியிருக்கின்றன. வாடிக்கையாளர் சேவைக்கான நேரம் 30 மணி நேரம் 65 மணி இருக்கின்றது. அதில் காலைக்கடன்கள், குளித்தல், துணி துவைத்தல் என்று ஒரு நாளைக்கு 3 மணி நேரம் எடுத்துக் கொண்டாலும் 44 மணி நேரங்கள் மிஞ்சியிருக்கின்றன. இவற்றில் அவசர வேலைகள், நண்பர்கள் உறவினர்களின் வேலைகள் என்று முடித்து விடலாம்.

ஒரு நாளைக் கூட இப்படிப் பிரித்துக் கொள்ளலாம். அடிப்படைத் தேவைகளுக்கான பணிகள், தூக்கம், வாடிக்கையாளர் சேவை, வருங்கால முன்னேற்றப் பணிகள் என்று நான்காகப் பிரித்து நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வேலையை இன்னொரு வேலை நெருக்கி வெளியேற்றி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கமும் வேண்டும், உடற்பயிற்சியும் வேண்டும், துணிகளை துவைப்பதும் வேண்டும்.

இப்போது கூட சோர்வு கண்களைத் தழுவுகிறது. தூங்கி எழுந்த பாயின் மேலேயே தலையணையில் சாய்ந்து கொண்டு கணினியில் எழுதிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?

நேற்றைக்கு பேசிக் கொண்டிருக்கும் போது நாம் எவ்வளவு செய்யாமல் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது உறைக்க ஆரம்பித்தது. நான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முழு நேரமும் உழைத்துக் கொண்டிராமல், கொஞ்சம் எதிர்கால சிந்தனையையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

நேற்று சந்திப்பில் பணம் இல்லை, சம்பளம் கிடைக்கவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போது குறைந்தது அணியில் பாதிப் பேரை மில்லியனர்களாக மாற்றுவேன் என்று எழுதியது கொஞ்சம் நகைப்பிற்கிடமாகத்தான் போனது. ஆனால், எல்லோருக்கும் அது மனதில் புகுந்திருக்கும். நாளைக்குக் காலையில் சந்திப்பின் போது கொஞ்சம் அந்தத் திசையில் தயாரித்தத் திட்டங்களை விளக்க முயற்சிக்க வேண்டும். எல்லோரும் தத்தமது திட்டங்களை விளக்கி முடித்த பிறகு நாம் களத்தில் இறங்க வேண்டும்.

நேற்று மாலையில் தொலைபேசியில் சண்டை போட்டுக் கொண்டே பலவற்றைக் கோட்டை விட்டேன். அப்பாவை வழியனுப்ப நேரத்துக்குப் போய்ச் சேர முடியாமல் தவற விட்டேன். மின்னஞ்சல் அனுப்பாமல் இருந்து விட்டேன். பணம் கேட்டு நினைவூட்டல் அனுப்பாமல் இருந்து விட்டேன்.

தொலைபேசிய போது அவர் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி அதன் பிறகு அழைப்பு வரவேவில்லை. வாடிக்கையாளர் சேவைக்காக பயணிக்கும் திட்டத்தை மற்றவர்கள் தயாரிக்கா விட்டால் நாமே தயாரித்து அனுப்ப வேண்டும்.

நீ பார்க்க விரும்பும் மாற்றமாக மாறு என்ற அண்ணல் காந்தியின் வாக்கியங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். யார் யாரிடம் என்னென்ன செய்யச் சொல்லியிருக்கிறேனோ, அந்த பணியின் அடிப்படை சுமையையும், அடித்தளம் போடும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நேற்றைக்கு இவ்வளவு காலமாக சரியா திட்டமிடாமல் பணி புரிந்தோமா என்று கேட்ட வுடன் எனக்கும் கோபம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்துதானே சொதப்பினோம் என்று சூடாக பதிலளிக்க ஆரம்பித்ததை, அமைதிப் படுத்தினார். எனது பலவீனம் வெளிப்பட்ட தருணம் அது.

காசு இருக்கும் கொழுப்பில் டாடா உடுப்பி ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டோம். சின்ன விடுதிகளில் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அவர் பேரைச் சொல்லி ஆறு பேரையும் டாடா உடுப்பி ஓட்டலுக்குள் இழுத்து விட்டேன். 6 பேருக்கு 154 ரூபாய்கள்தான் கட்டணம் வந்தது. ஆளுக்கு 25 ரூபாய்கள்.

இன்றைக்கு தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கி விட வேண்டும். ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்ல எவ்வளவு சுமைகளைத் தாங்க வேண்டியிருக்கிறது. அந்தச் சுமைகளைத் தாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்மால் கொடுக்கப்படும் சேவையை செவ்வனே வழங்கி சுமை இறக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக் கிழமை சாப்பிடாமல் இருக்கலாம் என்ற முடிவு பாதியில் முடிந்து போனது. காலையில் 2 தோசைகள், மதியம் சந்திக்கக் காத்திருக்கும் போது டவுட்டன் கபேயில் மதிய உணவு. அதன் நிர்வாகிகள் மலையாளிகள். ஏதோ வட இந்தியர்களாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். இரவு வீடு திரும்பும் வழியில் துர்கா விடுதியில் இட்லிகள் - 8 இட்லிகள். ஆர்லிக்சு, பிசுகட்டுகள் வாங்கி அவற்றையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

நேற்றைக்கு அளவுக்கு மீறிய உறக்கம். நிறைய சாப்பிடவும், தூங்கவும் உந்துதல் இருக்கும். அவற்றை எதிர்த்து நீச்சல் போட்டால் உந்துதல் குறைந்து போகும்.

காரில் வந்து பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் ஏற்றிக் கொண்டார்கள். சாப்பாட்டை எவ்வளவு முதன்மையாக வைத்துச் சாப்பிட்டார்கள் இரண்டு பேரும். எனக்கும் வாய்க்கு ருசியான உணவை அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.

எழுத ஆரம்பித்து 1 மணி நேரம் ஆகி விடவில்லைதான். 927 சொற்கள்தான் ஆகியிருக்கின்றன. கணினியை இயக்கி 53 நிமிடங்கள்தான் ஆகியிருக்கின்றன. கணினி இயங்கத் தொடங்கி சிறிது நேரம் கழித்துதான் எழுத ஆரம்பித்தேன். இடையில் வாரத் திட்டமிடல் தாளையும் நிரப்பிக் கொண்டிருந்தேன். இப்போது 7.41 ஆகிறது. 8 மணி வரை எழுதினால் சரியாக இருக்கும்.

இதை முடித்து விட்டு படுக்கையை மடித்து வைத்தல், செய்தித் தாள்களை அடுக்கி வைத்தல், பாத்திரங்களை தேய்த்து வைத்தல் முடித்து விட்டு 20 நிமிடங்கள் உலாவப் போக வேண்டும். திரும்பி வந்து குளித்து, தியானம் செய்து விட்டு அலுவலகத்துக்குப் போக வேண்டும்.

காரின் மின்கலனை செப்பனிடக் கொடுக்க வேண்டும். சுகூட்டியை பராமரிப்பு சேவைக்குக் கொடுக்க வேண்டும். சமுராயையும் பராமரிப்புச் சேவைக்குக் கொடுக்க வேண்டும். காரின் உபரிச் சக்கரத்தை மாற்ற வேண்டும். முன்பக்கம் இடிபட்டதை நிமிர்த்த வேண்டும். சுகூட்டி, சமுராய், கார் மூன்றுக்கும் காப்பீடு ஏற்பாடு செய்ய வேண்டும். கார் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. பொறுப்புகள் இல்லாமல் இருக்கும் என்னிடம் சமூகக் கடமைகள் நிறைய இருக்க வேண்டும்.

தூக்கமும் சோர்வும் தழுவத் துடிக்கின்றன. வெளியில் பாய் விற்பவரின் அழைப்பு தெருவில் கேட்கிறது. இப்போது உரக்கவே கேட்கிறது. படுத்து அப்படியே தூங்கி விடலாமா என்று துடிக்கிறது. தவிர்த்து விட வேண்டும். அதிகமாகத் தூங்கத் தூங்க களைப்புதான் அதிகமாகும். நேற்றைக்கு இரவே தூங்காமல் நாட்குறிப்பு எழுதி விட்டுத்தான் படுக்க வேண்டும் என்று நினைத்திருந்து விட்டு தியானம் முடித்தவுடன் தூங்கி விட்டேன். 4 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு விட்டு விழிப்பு வந்தும் ஆறரை மணி வரை தூங்கிக் கொண்டிருந்தேன். நமது தீர்மானங்களை நாமே மதிக்காமல் இருந்தால் எப்படி?

இப்போது 8 மணி வரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தபடி எழுத வேண்டும். எங்கோ அரவை எந்திரம் அடம் பிடிக்கும் ஓசையுடன் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ பளு அதிகமான பொருளை அரைக்கிறார்கள். அரிசி போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி அரைப்பது போலப் படுகிறது. மின்கலனில் மின்னூட்டமும் இறங்கியிருக்கிறது.

காதல் பறவைகளின் கிச் கிச் சத்தம் காலையில் எழுந்தது முதலே ஆரம்பித்து விடுகிறது. அரைப்பு நின்றிருக்கிறது. முழுவதும் முடிந்து விட்டதா என்று உறுதி இல்லை.

உலாவப் போகும் போது வேப்பங் குச்சியால் பல் துலக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதையும் விட்டு விட்டிருக்கிறேன். அரவை எந்திரம் மீண்டும் ஆரம்பித்து விட்டது. நின்றும் போய் விட்டது. ஈர அரவை எந்திரத்தில் இவ்வளவு ஓசை எழும்புவதில்லை.

நிறுவனம் தொடங்கிய துடிதுடிப்பில் இருக்கிறார். 90000 ரூபாய் வரும் வேலையை விட்டு விட்டு மாதா மாதம் 20000 ரூபாய் கூட கிடைக்காத முயற்சியில் இறங்கியிருக்கிறார். 2 லட்சம் ரூபாய் வருமானம் வந்தால், தனக்கு 1 லட்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார். செய்தும் காட்டி விடுவார்.

தமிழுக்கு தமிழர்களுக்கு என்று வணிகத் தொடர்பு தளம் ஒன்றை அமைக்கலாமே என்று கேட்டுக் கொண்டேன். நீண்ட கால நோக்கில் எந்த வழியில் போகப் போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். இன்றைக்கு உலகத் தமிழர் தொழில் கூட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்து விடலாம். பிஎச்பி, போஸ்ட்கிரெஸ்குயெல் பயன்படுத்தி வேலையை ஆரம்பித்து விட வேண்டியதுதான். வடிவமைப்பு தமிழரின் மனப்பாங்குக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். தமிழரின் தொழில் முனைவை தளமாகப் பயன்படுத்தி பொருள் ஈட்டும் முயற்சியாக இருக்க வேண்டும். பயிர் திட்டத்தைப் போல நடைமுறைக்கு ஒவ்வாத மொழிப்பற்றை விடுத்து நடைமுறையில் என்ன சாத்தியம் என்பதை மட்டும் பார்த்து செய்ய வேண்டும்.

நேரமும் முடியப் போகிறது. எழுந்து பணிகளை பார்க்க ஆரம்பிக்கலாம். 1325 சொற்கள் முடிந்திருக்கின்றன.