என்னைப் பற்றி

சனி, ஏப்ரல் 30, 2011

கணிப்புகள்


மாலையில் எழுத வேண்டும் என்று இரவு 9 மணி ஆகி விட்டது.

இன்று காலையில் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்து ஒன்றரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது.

ஒன்றரை மணிக்கு காலைக் கடன்களை முடித்து விட்டு 2 மணியிலிருந்து நினைத்தது போல பணிகளை ஆரம்பித்தேன். வாடிக்கையாளரின் கணினியும் இயக்கத்தில் இருந்தது. அதில் இணைந்து செய்ய வேண்டிய பணிகளை ஒவ்வொன்றாக முடித்தேன். முதலில் எளிதான இரண்டு முடிந்தது. முதலாவதில் அறிக்கையில் கூடுதலாக ஒரு விபரம் சேர்க்க வேண்டியது. இரண்டாவது சரக்கிலிருந்து வெளியில் போகும் ஒரு முறை விட்டுப் போயிருந்ததை சரி செய்வது, அதையும் சரி செய்து ஓட விட்டுப் பார்த்தால் அறிக்கை எதிர்பார்த்தபடி வந்து விட்டது.

மூன்றாவதில் இரண்டு மணி நேரம் இழுத்து விட்டது. அளவுக்கதிகமாக விரிவாகச் செய்ய நினைத்து குழப்படி அதிகமாகி விட்டது. எழுந்து ஒரு இடைவெளி கொடுத்த பிறகு தெளிவாகி தேவையில்லாதவற்றை நீக்கி விட்டேன். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு மீதியிருந்த இன்னொரு பணியை முடித்து விட்டேன்.

நான்கு அறிக்கைகளில் செய்ய வேண்டிய கிட்டத்தட்ட 9 தேவைகளில் மூன்று அறிக்கைகளில் 6 தேவைகள் முடிந்து விட்டன. ஒரு அறிக்கையில் 3 தேவைகள் எஞ்சியிருக்கின்றன. அதிலும் பாதி வேலை முடிந்திருக்கிறது. அறிக்கை நிரல் தொகுப்பில் கூட்டுத் தொகை வரும்படியான அறிக்கை செய்யும் போது பயன்படுத்தும் நிரலை மாற்றி எழுத வேண்டும். அதை முடித்து விட்டால் மற்றவர்களுக்கும் பயன்படும்.

அதன் பிறகு உலாவப் போகவில்லை. வீடு தூத்து, காலையிலேயே ஊற வைத்திருந்த துணிகளைத் துவைத்துக் குளித்த பிறகு நேரம் பார்த்தால் எட்டரை நெருங்கியிருந்தது. குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது. எதிரில் வீட்டு உரிமையாளர் வீட்டுக்குப் பிடிக்கப் போனேன். அவர் முன்னறையில் கீரை ஆய்ந்து கொண்டிருந்தார். நான் கீழ்நிலைத் தொட்டியில் இறங்கி குடத்தை வைத்தேன். தேங்கியிருந்த தண்ணீரை இறைத்திருக்கிறார்கள்.

தண்ணீர் வரும் வேகம் குறைந்திருக்கிறது. ஓரிரு நிமிடங்களில் நிறைந்து விடக் கூடிய குடம் நான்கைந்து நிமிடங்கள் வரை பிடித்தது. வீட்டுக்கார அம்மாவும் இரண்டு குடங்களைக் கொண்டு வந்து கழுவி வைத்தார்கள். அவர்கள் பையன் தண்ணீர் பிடிப்பதற்கு வந்தான். அவன் பேச்சுக் கொடுக்க நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவனது வேலை விபரங்கள் எல்லாம் பேசினோம். அப்படியே எனது இரண்டு குடங்களை நிரப்பிய பிறகு அவரது குடங்களையும் நிரப்ப நானே கீழே நின்று கொண்டேன். அவர் மேலே நின்று குடங்களை வாங்கி வைத்தார். அந்த வகையில் ஒருவருக்கொருவர் உதவிதான்.

அவர் பெங்களூரில் விப்ரோவில் வேலை செய்கிறாராம். டிசிஎஸ்சில் இவர் விப்ரோவில் சேர்ந்த சமயத்தில் சேர்ந்த அவரது நண்பர் இவரை விட இப்போது 12000 அதிகம் சம்பளம் வாங்குகிறாராம் இவருக்கு எதுவும் அதிகமாக மாட்டேன்கிறது.

'நான் தனியாகத்தான் இருக்கிறேனா' என்று கேட்டார். 'நண்பர்கள் யாரும் கூட இல்லையா'.
'ஆமா, நிரல் எழுதும் வேலை நான் மட்டும் தான் செய்கிறேன். அவர் வாடிக்கையாளர் தொடர்பு, விற்பனை வேலைகளை செய்கிறார்' என்று சொன்னேன்.

மின்சாரம் போவதற்கு முன்பு அரைக்க வேண்டிய பணிகளை செய்து கொள்ள வேண்டும். காலையில் உருளைக்கிழங்கு மசால் கறி வைத்து, சப்பாத்தி செய்யலாம் என்று எண்ணம். தேங்காய் இருக்கிறது, தக்காளிகளையும் பயன்படுத்த வேண்டும். இரண்டு நாட்களாக அரிசிச் சோறு நிறைய சாப்பிடுவதால் சப்பாத்திக்கும் ஒரு வாய்ப்பு.

தேங்காயைக் கீறி உலர் அரவையில் பொடியாக்கிக் கொண்டேன், துருவிக் கொண்டால் இன்னும் நல்லது. துருவிய தேங்காயில் தண்ணீர் ஊற்றி பால் பிழிந்து விட்டு சக்கையைப் பயன்படுத்த வேண்டும். அதை மறந்து போய் அப்படியே வறுக்க ஆரம்பித்து விட்டேன். சிறிதளவு எண்ணெயில் பெருஞ்சீரகம் போட்டு தேங்காயும் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இறக்கும் முன்பு மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு சில விநாடிகள் வறுத்து விட்டு இறக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை வேக வைக்கத் தண்ணீரில் மூழ்க வைத்துப் போட்டேன்.

வறுத்தது ஆறிய பிறகு அரைக்க வேண்டும். அது வரை கொதித்துக் கொண்டிருந்தது. வெங்காயமும், தக்காளிகளும் வெட்டிக் கொண்டேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த தேங்காய்க் கலவையை அரைத்துத் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். உருளைக்கிழங்கு வெந்ததை இறக்கிய பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டேன்.

உருளைக்கிழங்கு வெந்த சுடுநீரை ஊற்றி விட்டு குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து ஆறச் செய்து தோல் உரித்து, அவற்றைத் துண்டு துண்டுகளாக வெட்டி கொதிக்க ஆரம்பித்திருந்த குழம்பில் சேர்த்தேன். தேவையான உப்பும் சேர்த்துக் கொண்டேன். உருளைக் கிழங்கு நடுப்பகுதிகளில் கொஞ்சம் வேகாமல் இருந்தது போலத் தோன்றியதால் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டேன்.

கோதுமை மாவை பாத்திரத்தில் எடுத்து, உப்பு சேர்த்து,  தண்ணீர் சேர்த்து சப்பாத்தி போடும் பதத்தில் பிசைந்து வைத்தேன். குழம்பு இறக்கும் நேரத்தில் தக்காளி துண்டுகளைச் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கி விட்டு சப்பாத்தி சுட கல்லைப் போட்டேன். தேங்காய் பால் எடுத்து வைத்திருந்தால் தக்காளிக்கு முன்னதாக அதையும் சேர்த்திருக்கலாம்.

தேங்காயில் பால் எடுப்பதற்குக் காரணம் வறுக்க எளிதாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். கடைசியில் பாலாகச் சேர்ப்பதால் குழம்பு அளவும் அதிகாகவும் செறிவாகவும் இருக்கும் என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்றைக்குச் செய்ததில் குழம்பு எல்லாம் வற்றிப் போய் உருளைக்கிழங்குகளாகத்தான் நின்றது.

சப்பாத்தி போட்டுக் கொண்டே சுட்டு எடுத்தேன். ஆறோ ஏழோ வந்தது. நல்ல பசியும் ஏற்பட்டு விட்டது. நேற்று இரவு சாப்பிடாமல் தூங்கி விட்டதால் கிட்டத்தட்ட மதிய உணவுக்குப் பிறகான உணவு. 9 மணிக்கு மின்சாரம் போகவில்லை. செய்தது எல்லாவற்றையும் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மீதி இருந்தால் அடுத்த வேளை சாப்பிட மனம் இல்லை, கெட்டுப் போய் விடுகிறது என்பதால் செய்தது எல்லாம் உள்ளே போகிறது.

7 சப்பாத்திகளையும் மூன்று உருளைக்கிழங்குகளில் பெரும்பகுதியையும் சாப்பிட்டு முடித்து விட்டேன். உருளைக்கிழங்கு மசால் கறியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு செய்தது. பழகிய சமையல் எதுவும் மறந்து விடவில்லை. வசதிகளும் வாய்ப்பும் மன விருப்பமும் இருக்க செய்வதற்கு கை கூடுகிறது.

சாப்பிட்டு விட்டு அடுத்த 2 மணி நேரம் ஓய்வெடுப்பு. 10 மணிக்கும் மின்சாரம் போகவில்லை. 10-12 மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டியது தள்ளிப் போய் 12 மணிக்கு மேல் ஆரம்பித்தேன். நேற்று இரவே ஆரம்பித்து முதல் 2 பக்கங்கள் முடித்திருந்தேன். நீள நீளமான வாக்கியங்கள், சட்டபூர்வமான சொற்கள் என்று கொஞ்சம் திணறலாகத்தான் இருந்தது.

காலையில் செய்த பணிகளை தொலைபேசி விபரங்கள் சொல்லி விட்டேன். மொழிபெயர்ப்பில் பாதி வரைதான் முடிந்தது. மீதியை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை முதல் வேலையாக முடித்து சரி பார்த்து காலைக்குள் அனுப்பி விட வேண்டும்.  நாளைக்கு உற்பத்தித் திட்டமிடலின் மீதியையும்,  மீதி இருக்கும் பணியையும் முடித்து விட வேண்டும்.

மதிய உணவுக்கு சோறு வைத்தேன். ரசம், உருளைக்கிழங்கையும், பாகற்காயையும் வெட்டி பொரியல், மாங்காயை வெட்டி எண்ணெயில் வதக்கிக் கொண்டேன். காலையில் செய்த உருளைக்கிழங்கும் இருந்தது. பொரியல் செய்யாமல் இருந்திருக்கலாம், பாகற்காய் வாட ஆரம்பித்திருந்தது. தக்காளியும் கெட்டுப் போய் விடும். அதனால் ரசம், பொறியல் இரண்டும் செய்தேன். ரசத்துக்கு பூண்டு தீர்ந்திருந்தது. நல்லதுதான்.

செவ்வாய்க்கிழமை ஊருக்குப் போவதற்கு முன்பு காய்கறிகளை தீர்த்து விட வேண்டும். எல்லாம் தீர்ந்தாகி விட்டது நான்கைந்து தக்காளிகளும் இரண்டு வெங்காயங்களும் மட்டும் இருக்கின்றன. 

ஈழம் தொடர்பான போராட்டங்கள்  தமிழ்நாட்டில் இன்னும் சூடு பிடிக்கவில்லை. இவ்வளவு தூரம் ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டதற்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களின் உழைப்பு மிகவும் முக்கியமானது.

ஆனந்த விகடனை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். திருமாவேலனின் கட்டுரைகள், தமிழ்நதி, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் கணிசமான ஒரு பகுதியினரின் மனதில் ஈழப் பிரச்சனையின் ரணத்தை உயிரோடு வைத்திருந்தது.

அடுத்ததாக சீமானின் பரப்புரை, அவரது இயக்கம், தனிப்பட்ட செயல்முறை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அளவில் ஈழப் பிரச்சனையின் முகமாக செயல்பட்ட அவரது பணி மகத்தானது.

மூன்றாவதாக காங்கிரசை எதிர்த்துக் களப்பணிஆற்றிய தமிழ் உணர்வாளர்களின் பரப்புரை. அப்போதே நினைத்தது போல தேர்தலின் வெற்றி தோல்வியை விட கணிசமான மக்களிடம் ஈழப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அது தனக்குரிய பங்கை ஆற்றியது.

கடைசியாக நெடுமாறன், வைகோ போன்று தொடர்ந்து உறுதியாக உழைக்கும் தலைவர்கள்.

மேலே சொன்ன மூன்று பேரும் கடைசிக் கட்ட போரில் நடந்த அநியாயங்களால் மனம் வெதும்பி செயல்பட்டவர்கள் என்றால் இவர்கள் எந்த கால கட்டத்திலும் மனம் ஊசலாடாமல் உறுதியாக நின்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் நான்காவதாக ஜெயலலிதாவையும் இதில் சேர்க்கலாம். கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துவதாகத் தோன்றினாலும். முந்தைய நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் முக்கியமான கட்டத்தில் பேசி பத்திரிகைகளில் செய்தி இடம் பெறச் செய்த வகையில் அவரது பணி முக்கியமானது.

அவரது நிலைப்பாடுகளை சராசரி தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக பார்க்கலாம். 1989 வரை ஈழ இயக்கங்களுக்கு முழுமையான ஆதரவு. 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது தவறு என்ற குற்ற உணர்வில் கடுமையான ஒதுக்கி வைத்தல், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளதாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்தது.

இறுதிக் கட்டப் போரில் நியாயங்கள், சர்வதேச சட்டங்கள்,  மனிதாபிமானம் மனித உரிமைகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு போருக்குப் பின் மக்களை கேவலமாக நடத்தும் சிங்கள பேரினவாத அரசின் மீது கோபம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.

இது சரி தவறு என்று அவரவர் அரசியல், உணர்வு நிலைப்பாடு பொறுத்து இருக்கலாம். ஆனால் இது ஒரு வகையான விளக்கம்.

இந்தியா டுடேயின் தேர்தலுக்குப் பின்னான கருத்துக் கணிப்பின் திமுக கூட்டணி 115-130 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 105-120 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இதனால் என்ன விளைவு ஏற்படும்?

திமுக உச்ச வரம்பு வெற்றி பெற்றால்

திமுக கூட்டணி - 130 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 25
பாமக - 15
விசி - 5

அதிமுக கூட்டணி - 104 தொகுதிகள்
அதிமுக - 75
தேமுதிக - 15
கம்யூனிஸ்டுகள் - 10
பிறர் - 5

சிறுபான்மை அரசாக இந்த முறை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசுதான் ஏற்படும். அதிமுக, தேமுதிக, காங்கிரசு சேர்ந்து அரசு அமைக்கும் சூழலும் ஏற்படலாம். கம்யூனிஸ்டுகள் எதிரணிக்குப் போய் விடுவார்கள். பாமக அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம். திமுகவின் 2G ஊழலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று காங்கிரசு அதிமுக அணிக்குப் போய் விடலாம்.

இரண்டாவது சூழலில் திமுக கீழ் வரம்பு வெற்றி பெற்றால்,
திமுக கூட்டணி - 115 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 15
பாமக - 7
விசி - 3

அதிமுக கூட்டணி - 120 தொகுதிகள்
அதிமுக - 80
தேமுதிக - 20
கம்யூனிஸ்டுகள் 15
பிறர் - 5

இந்தச் சூழலில் அதிமுக+தேமுதிக+பிறர் ஆட்சி அமைக்க முடியும், கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தரலாம்.

நான் நடத்திய பத்து பதினைந்து பேரிலான கருத்துக் கணிப்பின் அடிப்படையில்
1. அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
2. அரசு உதவி பெறுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் - கூலி வேலை செய்பவர்கள், முதியவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்.
3. 200 ரூபாய் பெரிய தொகையாக கருதுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள்.
4. திமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்

4. சுயதொழில் செய்பவர்கள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.  - வியாபரம், சேவைத் தொழில்கள் (மருத்துவர், வழக்கறிஞர், கணக்காளர்கள்), நிலம் படைத்த விவசாயிகள், மீனவர்கள்
5. நீண்ட கால திமுக ஆதரவாளர்களில் பலர் அதிமுகவுக்கு வாக்களிக்கா விட்டாலும், சுயேச்சை அல்லது 49 O வாக்கு அளித்திருக்கிறார்கள்.
6. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெள்ளைச் சட்டை வர்க்கத்தினர் திமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
7. இளைஞர்களில் பலர் சீமானின் தாக்கத்தால் ஈழப் பிரச்சனை தொடர்பான வெறுப்பில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.

என்னுடைய கணிப்பில் திமுகவின் வாக்கு சதவீதம் 2009 நாடாளுமன்றத் தேர்தலை விடக் குறைந்திருக்க வேண்டும். 2009 மே மாதத்துக்குப் பிறகுதான் ஈழத்துக்குச் செய்த துரோகத்தின் முழு சோகமும் மக்களைத் தாக்கியது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த தமிழ் உணர்வாளர்களில் பலர் இந்த முறை எதிர்த்து  வாக்களித்திருப்பார்கள்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் 2G ஊழல், திரைப்படத் துறை ஆதிக்கம் குறித்த கோபங்கள் வெளியாக ஆரம்பித்தன. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த நடுத்தர மக்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

என்னுடைய கணிப்பின் படி, போட்டி நிலைமை இருந்திருந்தால்
திமுக - 65
காங்கிரசு - 10
பாமக - 15
விசி - 5

அதிமுக - 90
தேமுதிக - 25
கம்யூனிஸ்டுகள் - 20
மமக - 3

ஸ்வீப் என்று இருந்தால் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும். அந்தச் சூழலில்
திமுக - 10
காங்கிரசு - 6
பாமக - 8
விசி - 2

அதிமுக - 140
தேமுதிக - 40
கம்யூனிஸ்டுகள் - 23
மமக - 3

முதல்கணிப்பின் படி முடிவுகள் வந்தால் நன்றாக இருக்கும். கம்யூனிஸ்டுகள்+தேமுதிக கடிவாளங்களுடன் அதிமுக ஆட்சி அமைவது இருப்பதில் நல்ல அமைப்பாக இருக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

சமூக (அ)நீதிகள்


எழுதுவதை மாலை அல்லது இரவு நேரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. நேற்றும் இன்றும் காலையில் எழுந்தவுடனேயே மென்பொருள் பணியில் இறங்கி விட்டேன். சிக்கலான மூளையைக் கசக்க வேண்டிய முடிச்சுகள் அதிகாலை நேரத்தில் சுலபமாக அவிழ்ந்து விடுகின்றன. அந்த நேரத்தில் இது போன்று பெரிதாக சிந்திக்க அவசியமில்லாத வேலையை நீக்கி விட்டு heavy lifting பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

ஓம் சக்தி என்று பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு மாத இதழ் வெளியிட்டார். தமிழ்நாட்டு பழக்கங்களைப் பற்றி கட்டுரைகள் வரும். ஒரு கட்டுரை நம்முடைய சாப்பாடு பற்றி:

சாப்பாட்டுக்கு முன்பு நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடக் கூடாது என்பார்கள். அப்படிச் சாப்பிட்டால் வயிற்றில் மூண்டிருக்கும் செரிமான சக்தி அணைக்கப்பட்டு விடும்.

இலை போட்டவுடன், கையைக் குவித்து நீரை ஊற்றி இலையைச் சுற்றித் தெளித்து விட்டு வாயில் ஒரு சொட்டு போட்டுக் கொள்வார்கள். இலையைச் சுற்றி நீர் அரண் அமைப்பதன் மூலம் எறும்புகள் போன்ற ஊர்வன இலையை அணுக முடியாமல் போகும். எதுவும் சாப்பிடாமல் சுருங்கிப் போயிருக்கும் உணவுப் பாதையை இந்த சொட்டு நீர் ஒரு பைலட் கார் போலப் போய் சிறிதளவு ஈரப்பசை ஊட்டும்.

பரிமாறி முடிப்பது வரை எதையும் எடுத்து வாயில் போடக் கூடாது. ஏனென்றால் எதை முதலில் சாப்பிட வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

முதலில் செரிக்கக் கடினமான பருப்பு சோறு. அதிலும் சில துளிகள் நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடும் போது நெய் தோய்ந்த சோறு உணவுப் பாதையில் சுமுகமாக சென்று வயிற்றை அடைகிறது. தீவிரமாக இருக்கும் செரிமான சுரப்புகள் இந்த கடினமான பொருளை சீரணிக்க ஆரம்பிக்கின்றன.

தொடர்ந்து சாம்பார், ரசம் என்று நீர்த்துக் கொண்டே போகும். கடைசியில் மோர் சோறு.

இப்படிச் சாப்பிட முடிபவர்கள் எத்தனை பேர் என்று சின்ன வயதில் இதைப் படித்த போது தோன்றவில்லை. சாப்பாட்டுப் பிரியனான எனக்கு திருமணங்களில் இப்படி இலை போட்டு பரிமாறுவதை சாப்பிட மிகவும் விருப்பம். அதை நினைத்துக் கொண்டேன்.

ஆனால், பல ஊர்களில் திருமண விருந்து கூட இது போல இருப்பதில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். வறண்ட பகுதிகளில், வசதி குறைந்த அல்லது வசதி மறுக்கப்பட்ட குழுவினர் தங்களுக்குக் கிடைப்பதை வைத்துதான் திருமண விருந்து கூட தயாரித்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

சிவசங்கரி எழுதிய ஒரு சிறுகதையில் காரில் குடும்பத்தினர் பிக்னிக் போகிறார்கள். காலையிலேயே அம்மா, பூரி செய்து பாத்திரத்தில் எடுத்துப் போகிறார். மகனும், மகளும், அப்பாவும் காரில் ஏதேதோ பேசி சச்சரவு போட்டுக் கொண்டு காலை உணவுக்கு நிறுத்தும் போது சாப்பாடு வேண்டாம் என்று அவரவர் மறுத்து விடுகிறார்கள். கொஞ்ச தூரம் உலாவப் போனால் புளியமரத்திலிருந்து இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும் தோல் சுருங்கிப் போன மூதாட்டியைப் பார்க்கிறார்.

'இலையை கொதிக்க வைத்தால் குழம்புக்கு ஆகும்' என்று தகவல் சொல்லும் அந்த பாட்டியம்மாவைப் பார்த்து, 'இல்லாமையையும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கும்' அவருக்கு முன்பு அலட்டிக் கொள்ளும் தன் குடும்பத்தினரை ஒப்பிட்டுப் பார்க்கிறார். பாத்திரத்தில் இருந்த பூரி, உருளைக்கிழங்கு முழுவதையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்.

பள்ளியில் படிக்கும் போது தங்கமிராசு என்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் எங்களுடன் படித்தான். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது சமூக அநீதி என்றால் என்ன என்று புரியாத காலம், அதைச் சொல்லிக் கொடுத்தவர்களும் யாரும் இல்லை. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் தமக்கு வாய்த்த ஆதாயங்களை பயன்படுத்திக் கொண்டு, இந்தக் காலத்தில் அது குறைந்து போகிறதே என்று திட்டிக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பையன் பெயர் தங்கமிராசு.

இப்போதும் அவன் முகம் என் கண் முன் தெரிகிறது. உருண்டையான சிவந்த முகம், குள்ளமான உருவம். எப்போதும் திருத்தமாக தலை சீவி, பவுடர் போட்டுக் கொண்டு வருவான்.

அவனுக்குப் புத்தகங்களும் நோட்டுகளும் அரசே உதவித் திட்டத்தில் வழங்கி விடும். அந்தப் புத்தகங்களுக்கு அழகாக பிரவுன் அட்டை போட்டு கசங்காமல் வைத்திருப்பான். எனது புத்தகங்கள் ஒரு மாதத்துக்குள்ளாகவே பைண்டிங் குலைந்து விளிம்புகள் மடிந்து அலங்கோலமாகியிருக்கும். அதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.

90%க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கா விட்டாலும், 60-70க்கு மேல் தவறாமல் மதிப்பெண் எடுப்பான். மற்றவர்களுடன் அதிகமாக ஒட்ட மாட்டான். இயல்பாக பழகுவான். யாரை விட்டு ஒதுங்குவதும் கிடையாது.

அவனது அம்மா நாகர்கோவில் நகராட்சியில் பணி புரிவதாக ஒரு முறை சொன்னான். அவனது அப்பா குடித்து விட்டு வந்து கலாட்டா செய்வார் என்று இன்னொரு தகவல் சொன்னதாக நினைவு.

பொதுவாக எங்கள் பள்ளியில் வெள்ளாளர்களும், செட்டியாளர்களும், நாடார்களும்தான் அதிகம் படிப்பவர்கள். அதிலும் நாடார் மாணவர்களை சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் திட்டுவார்கள்.

'வந்துட்டானுங்க வட்ட விளை, வடலி விளையிலிருந்து பொத்தகத்தையும் தூக்கிக்கிட்டு, ஒழுங்கா படிக்க முடியாது' . ஆமா சரியா படிக்காததினால்தானே இப்படிச் சொல்கிறார்கள் என்று தோன்றும்.

பள்ளி இருந்தது செட்டித் தெருவின் அருகில், தேசிக விநாயகர் தேவஸ்தானம் என்ற செட்டியார் சமூக நிர்வாகத்தின் கீழ் இருந்த பள்ளி. இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளி. அதனால் அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான்.

செட்டித் தெருவிலிருந்தே வரும் மாணவர்கள், நகரத்தின் அருகாமை இடங்களிலிருந்து வரும் பிற சாதி மாணவர்களுக்கிடையே, வட்டவிளை, வடலி விளை என்பவை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஊர்கள். கொஞ்சம் தூரமும் கூட. அந்த மாணவர்கள் பொதுவாக கறுப்பாக, பருத்தித் துணியில் தைத்த சீருடை அணிந்து, முரட்டுத் தனமாக வருவார்கள். அவர்களைப் பார்த்தால் ஒரு வித ஒதுக்கம் கூட எனக்கு இருந்திருக்கிறது.

இப்போது நினைத்துப் பார்த்தால் எத்தகைய சூழலில் அந்த மாணவர்கள் படித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கொஞ்சம் விழிப்புணர்வு இருந்திருந்தால் நிறைய வேறுபாடுகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்து சமூகத்தில் ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும், அடுத்த நான்கைந்து தலைமுறைகளுக்கு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சேவை செய்வதுதான் நமது கடமை (வேண்டுமென்றால் பகவத்கீதை சொல்லும் கடமை என்று வைத்துக் கொள்ளலாம்) என்று உணர்ந்து வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டால்தான் நமது சமூகம் உயர்வதற்கு வழி பிறக்கும்.

பல நூற்றாண்டுகளாக சக மனிதர்களை ஒடுக்கி, கல்வி மறுத்து, கொடுமைப்படுத்தி வைத்திருந்த குற்றங்களுக்கு வேறு என்னதான் பரிகாரம் இருக்க முடியும்? நம்முடைய தாத்தாக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வளவு பேரை நசுக்கிப் பிழிந்திருப்பார்கள். தாத்தாக்களின் சொத்துக்களையும், மரபணு இயல்புகளையும் பெற்றிருக்கிறோம் என்றால் அவர்களின் தவறுகளுக்கும் நாம்தானே பொறுப்பேற்க வேண்டும்.

என் வீடு, என் குடும்பம், என் சுகம் என்பதை குறைந்பட்ச தேவைகளாக சுருக்கிக் கொண்டு, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைப்பதுதான் ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும். இன்றைக்கும் கிராமங்களில் 'காலனி'களில் ஒதுக்கி வாழும், தேநீர்க் கடைகளில் தனி குவளையில் தண்ணீர் குடிக்கும், கோவில்களில் வெளி நிறுத்தப்படும் ஒவ்வொரு மனிதரின் மனக்காயமும் ஒவ்வொருவருக்கும் வலிக்க வேண்டும்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டது. நாளின் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது. இந்த சாதிக் கொடுமைகளில் இந்தக் கால சந்ததியினரின் பொறுப்பு பற்றி சில நாட்களாகவே யோசித்து வந்தேன். அது நேரம் பார்த்து வெளி வந்து விட்டது.

அதிகம் கடினமான பணிகளை சிந்தனை சக்தி அதிகமாக இருக்கும் காலைப் பொழுதில் செய்யவும், இலகுவாக செய்து போகிற நாட்குறிப்பு எழுதுதல் போன்றவற்றை மாலையிலும் செய்யலாம் என்று முடிவு.

நேற்று காலையில் 5 மணிக்கு எழுந்து உடனேயே உற்பத்தித் திட்டமிடல் பணியை ஆரம்பித்து விட்டேன். நான்கைந்து மணி நேரத்தில் முடித்து விடலாம் என்று ஆரம்பித்தது தொடர்ந்து தொடர்ந்து மாலை இரவு தூங்கப் போகும் வரை தொடர்ந்து இன்று காலை 3 மணிக்கு எழுந்தும் 7 மணி வரை நீண்டது.

மிகவும் சிக்கலான, பல டசன் காரணிகளைக் கொண்ட உற்பத்தித் திட்டமிடல். வாடிக்கையாளரிடம் பேசும் போதே திட்டமிடலின் எல்லையை குறுகலாக வரையறுத்துக் கொண்டாலும், ஏழெட்டு காரணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றும் திட்டமாக இல்லாமல் குத்துமதிப்பான அளவீடுகள்.

அதாவது ஒரு டிரம்மில் கறுப்பு நிற தோலும் உற்பத்தி செய்யலாம், பிரவுன் நிற தோலும் உற்பத்தி செய்யலாம், இன்னொரு டிரம்மில் பிரவுன் மட்டும், மூன்றாவதில் எல்லா நிறங்களும், நான்காவதில் இளம் நிறங்கள் மட்டும். இப்படியே ஒவ்வொன்றும் இடியாப்பச் சிக்கலாக ஏழெட்டு பற்றிய விபரங்களை சேமித்து வைத்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுவதற்கா நிரல் எழுத வேண்டும்.

தேவை வரையறுப்பு ஏற்கனவே முடிந்திருந்தது. பத்து, பதினைந்து நாட்களாகவே (12ம் தேதியிலிருந்து) எப்படி வடிவமைக்க வேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு வடிவமைப்பில் ஆரம்பித்து அதன் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டே வந்தேன். எங்கெங்கு தவறுகிறதோ அதற்கான சரிசெய்தலை உடனுக்குடன் செய்து விட்டு, தகவல்களை எப்படி சேமிக்க வேண்டும் எப்படி எடுக்க வேண்டும் என்று செயலிகளையும் உருவாக்கிக் கொண்டேன்.

எந்த கோப்பில் எந்தெந்த நிரல்கள் என்று பிரிப்பதும் முக்கியம். ஒன்றில் புதிதாக உருவாக்கும் தரவுத்தள விபரங்கள்  மட்டும், அடுத்ததில் தரவுத்தளத்தில் இயங்கப் போகும் செயலி மட்டும், மூன்றாவதில் ஆரம்பத்தில் சேர்க்க வேண்டிய தரவுகள், நான்காவதில் அறிக்கைக்கான நிரல்கள்.

முதல் மூன்றிலுமே பல மணி நேரம் கழிந்தது குறிப்பாக இரண்டாவதான செயலி எழுதுவது, எழுதி இயக்கிப் பார்த்தால் எதிர்பார்த்த சரியான திட்டமிடல் கிடைக்கவில்லை என்றால் எங்கே ஓட்டை என்று பார்த்து அதை சரி செய்வது என்று தீவிரமான மூளை வேலை.

மாலைக்குள் பெரிய சிக்கல்கள் எல்லாம் அடையாளம் தெரிந்து தீர்க்கப்பட்டு விட்டன. ஒரு இடத்தில் சிக்கி நின்றது. அதற்கு அடிப்படை வடிவமைப்பையே மாற்ற வேண்டும். மூன்று கோப்புகளையும் அப்படியே வைத்து விட்டு அடுத்த பதிப்பாக முதலிலிருந்தே எழுதியதில் எளிதாக உருவாகி விட்டது.

இன்று அதைக் கொண்டு போய் வாடிக்கையாளர் பயன்பாட்டுப் பதிப்பில் இயக்கி அறிக்கையைக் காட்டியாகி விட்டது. அறிக்கையை அவர்கள் தற்போது பயன்படுத்தும் வடிவில் செய்து தரக் கேட்டார்கள். இன்னும் சில விபரங்களைச் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட இன்னும் நான்கைந்து மணி நேர வேலையில் முடித்து விடலாம்.

நேற்றுக் காலையில் முந்தைய நாள் செய்த சோற்றில் நீர் ஊற்றி வைத்தது இருந்தது. கடைக்குப் போய் காய்கறி வாங்கி வந்து மதிய உணவு செய்து கொண்டேன். இரண்டு மூன்று நாட்களாக இன்னும் விளக்கமான சமையல்.

புளிக்கறி என்பது எங்க வீட்டின் ஒரு அடிப்படை குழம்பு. சாம்பார் என்பது வாரத்துக்கு ஒரு முறைதான். புளிக்கறிதான் வாரத்துக்கு மூன்று நாட்கள். எல்லா சமையலிலும் தேங்காய் சேரும் என்பது அடிப்படை. புளிக்கறியிலும் தேங்காய்தான்.

தேங்காய் துருவல், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, நல்ல மிளகு, வெங்காயம் ஒன்றிரண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். புளி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

சேர்க்க வேண்டிய காயை வெட்டி வேக வைத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காய், முருங்கைக்காய், வெள்ளரிக்காய், தடியங்காய், கீரை, வாழைக்காய், வாழைத்தண்டு, மாங்காய் என்று ஏதாவது ஒரு காய்கறிகளைச் சேர்க்கலாம்.

வெந்த காய் துண்டுகளுடன் தேங்காய் அரைத்ததையும், புளிக் கரைசலையும் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க விட்டால் புளிக்கறி தயார். தாளிப்பதற்கு கடுகு, வெந்தயம் மற்றும் வெங்காயம் பொடியாக நறுக்கியது.

சேர்க்கும் காய்க்கு ஏற்ப மற்ற சேர்க்கைகள் மாறும் அந்த விபரங்கள் சரியாக நினைவில்லை. இதிலேயே பருப்பும் சேர்த்து பருப்பு புளிக்கறி என்று சாம்பாருக்கும் புளிக்கறிக்கும் கலவையாக ஒன்று அரிதாக செய்வார்கள்.

அந்த புளிக்கறி புதன் கிழமை செய்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் செய்தது. செய்முறை மறக்கவில்லை, செய்த சுவையும் மாறவில்லை.

தேங்காய் போட்டுதான் தொட்டுக் கொள்ளும் கறிகளும். பொரியல் என்று தேங்காய் இல்லாமல் எண்ணெயில் வதக்கி எடுப்பதைத் தவிர துவரன் என்று சிறுசிறு துண்டுகளாக வெட்டிய பீன்ஸ், சீனி அவரைக்காய், கீரை, வாழைத்தண்டு போன்ற காய்களுடன் தேங்காய்+மிளகாய்ப்பொடி+மஞ்சள் பொடி+சீரகம்+ பூண்டு அரைத்துச் சேர்த்து தாளித்து துவரன் செய்யலாம்.

அல்லது கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி தேங்காய்+மிளகாய்ப் பொடி + மஞ்சள்+சீரகம் சேர்த்து ஒற்றைக் காய் அவியல் என்று செய்யலாம்.

மாங்காய் போட்டு அவியல் செய்து பார்த்தேன், நன்றாகவே இருந்தது.

நேற்றைக்கு தக்காளி போட்டு ரசமும், பாகற்காய் அவியலும். பாகற்காய் எனக்குப் பிடித்தமான ஒரு காய். பொரியலாக வைத்தால் கரிந்து போய் சுவை குன்றி விடும். ஆவியில் வேக வைத்து தேங்காய் சேர்க்கும் அவியலில் கசப்புச் சுவை முழுமையாக, தேங்காயில் ஒளிந்து சாப்பிடக் கிடைக்கும்.

இன்று காலையில் மீதியிருந்த ஒரு கப் அரிசி மாவை வறுத்து, உளுந்து வறுத்துச் சேர்த்து தேங்காயும் சேர்த்து கொழுக்கட்டை செய்து கொண்டேன். மதியத்துக்கு நேற்று மீதியிருந்த சோறில் தண்ணீர் ஊற்றியிருந்ததில் ரசத்தை ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டேன். மாலை உணவை விட்டு விடலாம். நாளைக்கு முடிக்க வேண்டிய பணிகளை அதிகாலை செய்ய வேண்டியிருக்கும். குறைவான வயிற்றுடன் தூங்கினால் சீக்கிரம் எழுந்து சீக்கிரம் பணிகளை முடித்து விடலாம்.

இப்போது மணி மாலை 6.30 நாட்குறிப்பை முடிக்கும் போது 6.45 ஆகியிருக்கும். அதன் பிறகு 7 மணி முதல் 9 மணி வரை ஐநா அறிக்கை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். 9 மணிக்குத் தூங்கி விட்டு நாளைக் காலை 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 2.30 முதல் 6.30 வரை தேவைகளை முடித்து விட வேண்டும். 6.30க்கு உலாவப் போய் விட்டு வந்து வீட்டு வேலைகள், வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும், குடி தண்ணீர் பிடித்து வர வேண்டும்.

சாப்பிட்டு விட்டு மின்சாரம் தடைப்பட்டால், மொழிபெயர்ப்பைத் தொடர வேண்டும். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நாளையும் செய்தால் முடிந்து விடும் என்று தோன்றுகிறது. மதியத்துக்கு மேல் உற்பத்தித் திட்டமிடலின் மேல் பணிகளை முடித்து விட வேண்டும். நாளை மாலை, 2 மணி நேரம் நாட்குறிப்பு, 1 மணி நேரம் மின்னஞ்சல்கள் அனுப்புவது - ஐநா போர்க்குற்ற அறிக்கை குறித்து தொழிலாளர் அமைப்புகளுக்கு அனுப்புவது, 2 மணி நேரம் ஆQ மொழி பெயர்ப்பு.

ஞாயிற்றுக் கிழமை மே தின பேரணிக்கு போக முடியாது என்று தோன்றுகிறது. காலை 4 மணி நேரத்தில் டிரேட் புரோ பணிகளை முடித்து ஆவணம் தயாரித்துக் கொள்ள வேண்டும். முற்பகலில் ஐநா அறிக்கை பற்றிய மின்னஞ்சல் தயாரிப்பது, பிற்பகலில் மீண்டும் டிரேட் புரோ பணிகள். மாலையில் நாட்குறிப்பு, ஆQ மொழி பெயர்ப்பு. திங்கள் கிழமை உற்பத்தித் திட்டமிடலை பயன்பாட்டுக் கணினியில் சேர்த்து விட வேண்டும்.

செவ்வாய்க் கிழமை சென்னைக்குப் போய் டிரேட் புரோ வாடிக்கையாளர் கணினியில் நிறுவிக் கொடுத்து ஆரம்ப அறிமுகம். அன்று மாலையில் நாகர்கோவிலுக்குப் பேருந்தில் போய், நான்கு நாட்கள். அங்கு. ஞாயிற்றுக் கிழமை மாலை ரயிலில் ஏறி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மீண்டும் வேலூர். இதுதான் அடுத்த 10 நாட்களுக்கான வேலைத் திட்டம்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றிய ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதும் தமிழ்நாட்டில் சாதகமான சூழல் உருவானதற்கு சீமான் முதற்கொண்டு தமிழ் தேசிய இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொண்ட பரப்புரைகள் முக்கிய காரணம். பெரும்பான்மை மக்களுக்கு திமுக/அதிமுக சொல்வதுதான் அரசியலாக இருப்பதுதான் நடைமுறை. அவர்களை ஒரு நிலைப்பாடு எடுக்கச் செய்வதுதான் இது போன்ற சிறு இயக்கங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் கம்யூனிச புரட்சி இயக்கங்கள் செயல்படுவது சிரமம். இருக்கும் அமைப்பில் எந்த மேம்பாடும் சாத்தியமில்லை. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு புதிய புரட்சி அரசை உலகெங்கும் அமைப்பதுதான் ஒரே வழி, அதற்காக மக்களைத் தயார்படுத்துவதுதான் நமது பணி என்ற கோட்பாட்டில் செயல்படும் போது, கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பண உதவி செய்வதோ, இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதோ தேவையில்லாத ஒன்று. எல்லா பிரச்சனைகளையும் உலகளாவிய கோணத்தில்தான் பார்க்க முடிகிறது.

புதன், ஏப்ரல் 27, 2011

காற்றடைத்த பை


ஏப்ரல் 27, மணி 3.30 அதிகாலை.

2 மணிக்கு எழுந்து 1 மணி நேரம் நாட்குறிப்பு, 2 மணி நேரம் ஆQ மொழி பெயர்ப்பு என்று தீர்மானித்திருந்ததை செயல்படுத்தும் ஒரு வாய்ப்பு. சீக்கிரம் தூங்கி விட்டதால், வேறு பயணக் களைப்புகள் இல்லாததால் 2 மணிக்கு எழுந்து விட முடிந்தது.

நேற்றுக் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க முடிந்தது. வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். 5 மணிக்கு எழுந்து, மீண்டும் மோசமாக்க வேண்டாம் என்று ஒழுங்குகளை செயல்படுத்த முயற்சித்தேன். பல் தேய்த்து காலைக் கடன்களை முடித்த பிறகு நாட்குறிப்பு. எழுதிக் கொண்டிருக்கும் போதே விட்டுப் போன ஓரிரு பணிகளை செய்து கொண்டேன். எழுதிய பிறகு 6 மணிக்கு வெளியில் உலாவப் புறப்பட்டேன்.

நடைவாசல் பெருக்கிக் கழுவி கோலம் போட்டு விட்டுப் போயிருந்தார்கள். இரவுக் காவலர் அப்போதுதான் எழுந்து உட்கார்கிறார். அந்தப் பக்கமாகவே இறங்கி கோபலபுரம் வழியாக காட்பாடி சாலைக்கு வந்து சாலையைக் கடந்து காந்திநகர் கிழக்கு நெடுஞ்சாலைக்கு வந்தேன். காலையில் நடக்கப் போகிறவர்களின் நேரம் அது. நிறைய பேர் கையில் நாளிதழ்களுடன் கடந்து போகிறார்கள்.

பெண்கள் அதிகாலை நடக்கப் போகும் போதும் திருத்தமாகத்தான் வருகிறார்கள். நான், கலைந்த தலையை சீப்பால் ஒழுங்கு செய்து கொண்டு போவது போல. "காலையில் நடக்கத்தான் போகிறோம், தலை கலைந்தும் முகம் அழுது வடிந்து கொண்டும் இருக்கட்டுமே" என்று யாருமே நினைப்பதில்லைதான், பெண்களை மட்டும் ஏன் குறிப்பாகச் சொல்ல வேண்டும். எதிரில் வருபவர்களுக்கு மரியாதை காட்டுவது போலத்தான்.

ஒரு கால்சட்டையில் பையின் கொக்கி பட்டு பின்பக்கம் சிறிது கிழிந்து விட்டிருக்கிறது. சட்டையை இழுத்து விட்டால் மறைந்து விடும் இடம்தான், அதற்கு கால் சட்டையை இடுப்பில் உயர்த்திப் போட்டு சட்டையை கவனமாக இழுத்து விட வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் ஓட்டை வெளியில் தெரியும். பெரிய ஓட்டை இல்லை, உள்ளாடை தெரியுமளவுக்கு ஓட்டை இல்லை, கிழிந்திருக்கிறது என்று மட்டும் தெரியும் அவ்வளவுதான்.

காலை உலாவப் போவதற்கு அதைப் போட்டுக் கொண்டு போய் விட்டேன். குளிர் காலங்களில் வீட்டில் போடவும் பயன்படுத்தலாம். அதைப் போட்டுக் கொண்டு போகும் போது உள்ளுணர்வில் சட்டை மேலே நகர்ந்து ஓட்டை வெளியில் தெரிகிறதோ என்று உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. பேசாமல் ஊசி நூல் வைத்துத் தைத்து விடலாம்.

முனையில் இருந்த கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். தினமலரும் டெக்கான் குரோனிக்கிளும்தான் வந்திருந்தன. கடைக்காரர் அப்போதுதான் நாளிதழ்கள், பத்திரிகைகளின் வெளி போஸ்டர்களைத் தொங்க விட்டுக் கொண்டிருந்தார். ஒரு ரூபாய் சில்லறையாக இல்லா விட்டால் கேட்பது சிக்கல்தான். வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடந்து அடுத்த பேருந்து நிறுத்தம் வரை போய் விட்டேன். நடுவில் மணி அடித்தது.

அடுத்த நிறுத்தத்தில் சாலைக்கு வந்து சாலையைக் கடந்து நெடுஞ்சாலைத் துறை, தரக்கட்டுப்பாட்டு மையம் அலுவலகத்துக்கு முன்பு நடைபாதையில் ஏறி எதிர்த்திசையில் நடந்தேன். சில்க்மில் நிறுத்தம் தாண்டி நடந்து வந்து கோபால புரம் வழியாக திரும்பி வந்தேன். வழியிலேயே மணி அடித்து விட்டது.

வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் நாளிதழ் படித்து விட்டு, கணினியை இயக்கினேன். பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும் என்று பணிநிர்வாக பயன்பாட்டில் பட்டியலிட்டு விட்டு, அவற்றின் தேவை விபரங்கள், நுட்ப வடிவமைப்பையும் எழுதிக் கொண்டேன். வாடிக்கையாளர் கணினி இயங்கி விட்டால் நேரடியாகச் செயல்படுத்தி விடலாம். சின்னச் சின்ன திருத்தங்கள்தான்.

சீக்கிரம் வந்து இயக்கி விடுவதாகச் சொன்னவருக்கு அதிகாலை தொலைபேசியிருந்தேன். எடுக்கவே இல்லை. 9 மணி வரை கணினிக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. மீண்டும் தொலைபேசி கேட்டால் காலையிலேயே இயக்கியிருப்பார்களே என்கிறார். அவர் போய்தான் கணினி இயங்க ஆரம்பித்திருந்தது.

முதலில் சராசரி விலை காட்டும் அறிக்கையில் சொன்ன குறையைப் பார்த்தேன். சில பொருட்களுக்கு மதிப்பு கணக்கிடப்படாமல் இருந்ததால் அந்த மதிப்பை விட்டு விட்டு ஆனால் அவற்றின் அளவை எடுத்துக் கொண்டதால் விலை குறைவாக இருந்தது. மதிப்பு கணக்கிடும் சூத்திரத்தை மாற்றி சரி செய்தேன். பயன்பாட்டுப் பதிப்பிலும் செய்து விட்டேன்.

இரண்டாவதாக, தரக்குறைவு என்று நிராகரிக்கப்பட்டவற்றுக்கான அறிக்கை வேண்டும் என்று தேவை. அதற்கான கூடுதல் விபரங்களைச் சேர்த்து, இயக்கிப் பார்த்தால் நிறைய தரவுகளில் உள்ளே வரும் எண்ணிக்கை 0 வாக இருந்தது. எங்கோ தவறு இருக்கிறது என்று பார்க்கப் போகும் போது 10 மணி, மின்தடை ஏற்பட்டு விட்டது.

சமையலறையை ஒதுங்க வைத்து பாத்திரங்களைக் கழுவி விட்டுக் குளித்து கொஞ்ச நேரம் தியானம் செய்தேன். இதற்குள் 11 மணி ஆகி விட்டது. பணம் எடுக்கும் மையத்தில் பணம் எடுத்து தொலைபேசி கட்டணம் கட்டி விட்டு, கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வர வேண்டும். வெளியில் இறங்கி நடந்தேன். வலி தீவிரமாக ஆகி விட்டிருக்கிறது. நிற்கும் போதும், நிமிர்ந்து உட்காரும் போதும் உடனேயே வலிக்கிறது. நடக்கும் போது புண்ணாக வலிக்க ஆரம்பித்தது. ஆட்டோ ஏதாவது பிடித்துதான் போக வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.

ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் காந்தி நகர் முனையில் ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி இரண்டின் பணமையங்கள் இருந்தன. அனுக்ரஹா அருகில் இருக்கும் ஸ்டேட் வங்கி வரை போக முடியாது, இங்கேயே எடுக்கலாம் என்று ஆக்சிஸ் வங்கிக்குப் போனால் அங்கு தொடர்பு இல்லை என்று பலகை தொங்கியது. எச்டிஎஃபிசியில் உள்ளே ஒருவர் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளியில் காவலர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

முதல் முறையாக வலிக்க ஆரம்பித்தது திருப்பதி மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது (முதல் முறை அல்லது இரண்டாவது முறை என்று நினைவு). மலை ஏறும் போது உள் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை குணப்படுத்த வேண்டியது ஏழுமலையானின் பொறுப்புதான்.

பணம் எடுப்பவர் இரண்டு மூன்று தடவை எடுத்துக் கொண்டே இருந்தார். அவர் வெளியே வரவும் காவலர் வந்து உள்ளே போனால். 'சீக்கிரம் எடுங்க சார், பணம் வைக்க வண்டி வந்திருக்கிறது' என்றார்.

ஸ்டேட் வங்கி பண எந்திரங்களில் அட்டையை ஒரு முறை நுழைத்து விட்டு வெளியில் எடுத்து விடலாம். பணம் எடுத்த பிறகு பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மற்ற வங்கிகளில், அட்டையை எந்திரம் உள் வாங்கிக் கொள்கிறது. பணம் எடுத்த பிறகு ஞாபகமாக அட்டையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முறை ஆழ்வார்திருநகர் ஆக்சிஸ் வங்கியில் பணம் எடுத்துதான் அட்டை தொலைந்து போனது. அட்டையை எடுக்காமலேயே வெளியில் வந்து விட்டேன். பிறகு போய்க் கேட்டால் 'எந்திரத்தில் இருந்தால் எடுத்து உடைத்துப் போட்டிருப்பார்கள்' என்று காவலர் சொல்லி விட்டார். அட்டை தொலைந்ததால் வேறு சிக்கல் எதுவும் ஏற்படவில்லை.

பணம் எடுத்து விட்டு வெளியில் வந்து சாலைக்குப் போய் பகிர்வூர்தியை நிறுத்தினேன். ஆட்டோ ஏதாவது வந்திருந்தாலும் ஏறி நேராக பிஎஸ்என்எல் அலுவலகம் வரை போகக் கூடத் தயாராக இருந்தேன். அதிகம் செலவாகி விடக் கூடாது என்று இருக்கிறது. 5 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் அலுவலகம் போகும் தெருவின் முனையில் இறங்கி நடந்தேன்.

நல்ல வெயில் அடிக்கிறது. அலுவலகத்தினுள் எதிர்பார்த்தது போலவே நீண்ட வரிசை. பணம் கட்டும் இடத்திலிருந்து வெளியில் வந்ததும், வெயிலில் நிற்காமல் அறைச்சுவரின் வெளிப்பக்கத்தில் போட்டிருந்த இரும்பு பெஞ்சில் வரிசை நீண்டிருந்தது. உண்மையில் இரண்டு இரும்பு நாற்காலிகள் அதற்குப் பிறகு மூன்று பேர் உட்காரும் பெஞ்சு. கடைசி வரை உட்கார்ந்திருந்தார்கள். நான் போய் கடைசியில் கீழே உட்கார்ந்து கொண்டேன். ந

ஒரே ஒரு பெண் மட்டும் வரிசையில். உட்காரவில்லை, நின்று கொண்டிருந்தார். சில நிமிடங்களில் எனக்கும் பெஞ்சில் உட்கார இடம் கிடைத்தது. அந்தப் பெண் விடாப்பிடியாக உட்காரவேவில்லை.

40 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், கொஞ்சம் சதைப்பிடிப்பில் வயது தெரிந்தாலும் முகத்தில் வயது தெரியவில்லை. பளீர் என்ற நிறம். கழுத்தில் தடிமனான சங்கிலிகள், காதில் பட்டையான காதணிகள். கேரளாவைச் சேர்ந்தவராக இருக்கலாம். அப்படியானால் உட்கார தயங்க மாட்டாரே!

நமது முறை வரும் வரை முடிந்த வரை உட்கார்ந்தே இருக்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு காவல் அதிகாரி வந்து உட்கார்ந்திருந்தவர்களைக் கவனிக்காமல் வரிசையில் போனார். இந்த அம்மாவைப் பார்த்ததும் வந்து பேச்சுக் கொடுத்தார்.

அவரை காட்பாடியில் போட்டிருக்கிறார்களாம், குற்றப்பிரிவு.

'ஒரே தொந்தரவு, அடையாள அட்டையைத் தொலைத்து விடுபவர்கள், உணவு அட்டையைத் தொலைத்து விடுபவர்கள் என்று புகார்கள் வருகின்றன. காவல் அதிகாரி அறிக்கை கொடுத்தால்தான் மாற்று அட்டை வாங்க முடியும். சும்மா வேலூரிலிருந்து காட்பாடிக்கு பேருந்தில் வரும் போது தொலைந்து போனது என்று சொன்னால் கொடுத்து விடுவார்களா? இன்ஸ்பெக்டர் சான்றிதழ் கொடுத்தால்தான் தருவார்கள். யாருக்கும் பொறுப்பே இல்லை. எத்தனையோ தடவை சொல்லியாச்சு.'

'வண்டியில் வரும் போது உரிமம் வைத்திருப்பதில்லை, வீட்டில் இருக்கிறது, சொந்தக் காரனிடம் இருக்கிறது என்று காரணம் சொல்கிறார்கள். ஒரு நகல் எடுத்து வண்டியில் வைத்திருக்கத் தெரியவில்லை. கோர்ட்டில் போய் ஃபைன் கட்டுகிறார்கள், நான்கைந்து தடவை. எத்தனை தடவை சொன்னாலும் புரிவதில்லை.'

'போலீஸ்காரனுக்குத் தொப்பியைப் போல இது போன்ற ஆவணங்களை சரியாக பேணுவதை ஒரு பெருமையாக கருத வேண்டாமா. அக்கறை இல்லை' என்று இடைவெளி விடாமல் பேசினார்.

அந்த அம்மா இடையில் தனது கருத்தையும் நுழைக்க முயன்று தோல்வியடைந்தார்.
'என் மகனைப் பாருங்க, பொறுப்பே கிடையாது 37,000 ரூபாய் கொடுத்து வண்டி வாங்கிக் கொடுத்தோம், துடைக்கச் சொன்னா துடைக்க மாட்டாங்கிறான்'.

காதில் விழாதது போலவே பேசிக் கொண்டிருந்தார் காவல் அதிகாரி.

நாம் எங்கெங்கு ஆவணங்களை சரியாக வைத்திருக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் உட்கார்ந்திருந்தவர் வெயிலைப் பற்றியும் நீள வரிசை பற்றியும் குறைபட்டுக் கொண்டிருந்தார். நியாயமான வேகத்தில்தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. அந்த அம்மாவுக்குப் பிறகு ஒருவர் அடுத்தது நான். அந்த அம்மா பணம் கட்டி வெளியில் வந்த பிறகு எழுந்தால் போதும் என்று நினைத்திருந்தேன்.

இதற்குள் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டி இன்னும் பின்னால் ஏழெட்டு பேர் நீண்டு விட்டார்கள். நினைத்திருந்ததற்கு முன்பாகவே எழுந்து உள்ளே போய் விட்டேன். மூன்று பேர் கட்டும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த அம்மாவின் எண்ணைக் கேட்டு பெயரைச் சொன்னார். இசுலாமிய பெயர்களாக அவரது வீட்டுக்காரராக ஒரு ஆண் பெயரும் ஒரு பெண் பெயரையும் சொல்லி சரி பார்த்துக் கொண்டார்.

'ஒரு ஆண்டுக்கு முழுமையாகக் கட்ட வேண்டுமானால் என்ன வழிமுறை' என்று அவர் கேட்டதற்கு அந்த விபரங்களை இங்கு கிடைக்காதும்மா, பக்கத்தில் கேளுங்க என்று அனுப்பினார். அடுத்தவரிடம் 10 ரூபாய் சில்லறை கேட்டு வாங்கினார். அவர் கட்டி ரசீது வாங்கிக் கொண்டு நகர்ந்த பிறகு எனது தொலைபேசி எண்ணைச் சொன்னேன். இந்த மாதமும் பில் வந்திருக்கவில்லை.

பெயர் கேட்டு சரி பார்த்து விட்டு, 993 ரூபாய். 900 ரூபாய் கட்டணம் 10.2% சேவை வரி. 993 ஆகிறது. 1000 ரூபாயாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். 5 ரூபாய் இருந்தா கொடுங்க என்று இழுத்து விட்டு உடனே வேண்டாம் என்று விட்டார். '10கள் குறைவாகத்தான் இருக்கின்றன. அடுத்த மாத பில்லில் அட்ஜஸ்ட் ஆகி விடும்.'

'பில் வருவதே இல்லையே ஏன்' என்று  கேட்டேன். 'ஒரு மாதம் என்றால் விட்டு விடலாம் மூன்று மாதங்கள் ஆகி விட்டன.' இவரிடம் கேட்பது முறைதானா என்ற சந்தேகத்துடனேயே கேட்டேன். எரிச்சல் படாமல் பதில் சொன்னார்.

'நிறைய பேர் அப்படித்தான் கேட்கிறாங்க. பில்லிங் பத்தி எனக்குத் தெரியாதுங்க. நீங்க கொஞ்சம் கூடுதலா கட்டிவிடுங்க, இணைப்புத் துண்டிக்காமல் இருக்கும், இல்லைண்ணா 10ம் தேதிக்கு முன்னால் வந்து விடுங்க, நான் பில் எடுத்துத் தந்து விடுகிறேன்' என்று சொன்னார்.

நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தேன். நடக்கும் போது தாங்க முடியவில்லை. ஆட்டோ எதுவும் வந்தால் ஏறி கொண்டு விடச் சொல்லலாம். வரவில்லை. தானாகக் குறைந்து மெதுவாக நடந்து போனேன். கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி இன்னும் இருந்தது.

வெளியில் கூடையை எடுத்துக் கொண்டு எழுதி வைத்திருந்த பட்டியலின்படி பொருட்களை எடுத்துக் கொண்டேன். 'தரக்குறைவால் நிராகரிப்பு அறிக்கையில் பிராண்ட், சரக்கு உருவான நாள், குறிப்புகள் மூன்றும் வேண்டும்' என்று தொலைபேசி சொன்னார்.

விலை போடும் இடத்துக்கு வந்தால் ஒரே ஒரு ஒல்லிப் பெண் நின்றிருந்தாள். இந்தக் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ஒல்லியாக குள்ளமாகத்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும். இந்தப் பெண் முகம் பாராமலேயே அடுத்த மேசைக்கு கூடையை எடுத்து நகர்த்தி பில் போட ஆரம்பித்தாள். நானும் அங்கு போனேன். இடையில் சீரகம் தரையில் விழுந்தது.

ஒரு அப்பா குண்டான ஒரு பையனுடன் உள்ளே வந்தார். ஓடிப் போய் சாக்லேட் பொதி பெரியதை எடுத்துக் கொண்டான். அப்பா திரும்பி வைக்க சண்டை போட்டார். அப்பா எடுத்த பொருளுக்கு பில் போடும் பெண் இதை பில் போடவில்லை. நான் நின்ற மேசைப்பெண் அவன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு (கிரி), 'இங்கே வா, நான் பில் போடுகிறேன் என்று அழைத்ததும் வந்து விட்டான். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்க்காமல் புறப்பட்டு விட்டேன்.

வெளியில் வந்து சில அடிகளில் பேருந்து நிறுத்தம். காலியாக ஒரு பேருந்து வந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன். நடத்துனர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் அருகில் இருக்கையில் போய் சீட்டு வாங்கினேன்.

'அவர் தூங்கிக் கொண்டிருப்பதால் எழுப்பினாலும் விழிக்க முடியவில்லை' என்றார் அருகில் இருந்த பெரியவர். 'காலையில் சீக்கிரம் எழுந்து விட்டாரோ என்னவோ?' என்று அனுதாபப்பட்டால், 'பெருமைக்குச் சொல்லலீங்க, நான் தூங்கும் போது காலை 3.30 மணி, அஞ்சரை மணிக்கு எழுந்து விட்டேன்.' 'ஓ, அதுக்குப் பிறகும் விழிப்பா இருக்கீங்க' என்று சொல்லி எழுந்து விட்டேன். இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது.

கோபால புரம் வழியாக வீடு வந்து சேர்ந்தேன். மின்சாரம் வந்திருக்கவில்லை. கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருந்தேன். மின்விசிறி இயங்க ஆரம்பித்ததும் எழுந்து  வேலையை ஆரம்பித்தேன்.

தரவுத்தள டேபிள் அமைப்பில் புதிய நெடுவரிசைகளைச் சேர்த்து, அதற்கான செயலியில் மாற்றங்களைச் செய்து, அறிக்கையில் புதிய தேவைகளைச் சேர்த்து, செயலியில் ஒரு வழு சரி செய்து இயக்கிய பிறகு சரியாக வந்தது. பயன்பாட்டுப் பதிப்பிலும் இயக்கி விட்டேன். சரக்கு அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று சரி பார்க்கச் சொன்னார். இந்த அறிக்கையில் உற்பத்தியிலிருந்து நேரடியாக நிராகரிக்கப்பட்டவை காட்டப்படுகின்றன. அந்த அறிக்கையில் உற்பத்தியிலிருந்து சரக்குக்கு மாற்றி பிறகு நிராகரித்தவையும் காட்டப்படுகின்றன. அதையும் இந்த அறிக்கையிலேயே காட்ட வேண்டுமே என்று கேட்டதும், அது முடியாது என்று பதில் சொல்லி விட்டேன்.

காலையிலேயே கண்ணன் தொலைபேசி ஐநா அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டக் குழு அமைத்திருப்பதாகச் சொன்னார். அது பற்றிய விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இணைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியுமா என்று கேட்டார். நிச்சயம் செய்வதாகச் சொல்லி, ஒரு சில நாட்கள் பணி அதிகமாக இருக்கும், அவற்றை முடித்ததும் அதிக நேரம் செலவழிக்க முடியும் என்று சொன்னேன். கண்ணன், சதீஷ், பாலன் மூன்று பேர் எண்களையும் கொடுக்கலாம்.

கூகுள் பஸ்சில், டுவிட்டரில் கனிமொழி, தயாளு அம்மாள் பெரிதும் பேசு பொருளாகவே தொடர்ந்தன. மாற்றி மாற்றி ஏதேதோ படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் தூங்கி விடக் கூடாது என்று கவனமாக இருக்க முயற்சித்தேன்.

உணவுக்காக, பாம்பே ரவையும் கோதுமை மாவும் கலக்க நினைத்து மிஞ்சியிருந்த கோதுமை ரவையையும் சேர்த்துக் கொண்டேன். சீரகம், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொண்டேன். தேங்காய் கீறி துவையல், அதில் மூன்று பல் பூண்டு. ஒரு வெங்காயத்தை முழுமையாக நறுக்கி வைத்துக் கொண்டேன். ஊற வைக்க வேண்டாம் என்று வெளியிலேயே வைத்திருந்தேன். மாலை வேளையில் இவ்வளவு வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் இரவெல்லாம் வாயில் மணக்கும் என்று தோன்றினாலும் வெட்டியதை வீணாக்க மனம் வராமல் சேர்த்துக் கொண்டேன்.

கொசாக் கதையை முடித்து விட்டேன். ரஷ்ய மேட்டுக்குடி மகன், கொசாக் பெண்ணை திருமணம் செய்ய முடியாமலேயே திரும்பிப் போகிறான். ஒன்பதே முக்காலுக்கு பேசி விட்டு தியானம். இன்றைக்குச் செய்ய வேண்டியவற்றை நிச்சயப்படுத்திக் கொண்டு படுத்தேன்.

2 மணிக்கு எழுந்திருப்பு
4 மணி வரை மொழிபெயர்ப்பு
5 மணி வரை எழுத்து
6 மணி உலாவி வருதல்
பயறு கஞ்சி
பணிகள் முடிப்பு
உற்பத்தி திட்டமிடல் முடித்து விட வேண்டும்.

இப்போது 4.25 இன்னும் 2 நிமிடங்கள் இருக்கின்றன. இதை முடித்து விட்டு ஆQ 3வது அத்தியாயத்தை சீர்படுத்தி மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். அதன் பிறகு உலாவப் போகலாம். (5.30க்கு). 6 மணிக்குத் திரும்பி வந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு அலுவலகப் பணியில் இறங்க வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

பணித்திட்டங்கள்


நேரம் 5 மணி, ஏப்ரல் 26, 2011.

நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் போது ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து விடுவது போல நடந்தது நேற்று. நேற்றே முடித்திருக்க வேண்டிய வேலைகள், இன்று முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் தொடங்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன்.

காலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்துக்குக் காத்திருக்கும் போது முதலில் திருப்பதி போகும் குளிர்சாதன பேருந்து - விரைவுப் போக்குவரத்துக் கழகத்தோடு. தொடர்ந்து தெற்கே போகும் பேருந்துகள், காஞ்சிபுரம் பேருந்து ஒன்றிரண்டு நிறைய வந்தன. வேலூர், திருப்பத்தூர், ஓசூர், சேலம், தர்மபுரி, பெங்களூர் என்று எந்த பேருந்தும் ஒரு சிலநிமிடங்களுக்கு வரவில்லை. நேரம் பொருத்தமான நேரம் இல்லை.

பேருந்துகள் வெளிவரும் பாதையிலேயே நடந்து போய் எதிர் கொண்டதில் 102B விரைவுப் பேருந்து திருப்பத்தூர் செல்வது. பேருந்து நவீனமாகத் தெரிந்தது. நின்று கொண்டிருக்க விருப்பமில்லாமல் ஏறி விட்டேன். 3 மணி நேரத்துக்கு மேல் ஆகலாம், ஆகட்டும். தூங்கிக் கொண்டே போய் விடலாம். கடைசி இருக்கைக்கு முந்தைய, மூன்று பேர் இருக்கையில், பின் வாசலுக்கு நேர் எதிரே இருக்கும் இருக்கையில் சன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டேன். கால் வைக்க தாரளமாக இடம் இல்லாவிட்டாலும், காலை முறித்துப் போடும் நெருக்கடியும் இல்லைதான்.

முன்பக்கம் நின்றிருந்த நடத்துனர் வந்து சீட்டு கொடுத்த பிறகு தலையைச் சாய்த்து உறக்கத்தை ஆரம்பித்தேன். பேருந்து ஓடுவதும், நிற்பதும் ஆட்கள் ஏறுவதும் தெரிந்து கொண்டுதான் இருந்தது. மதுரவாயல், வேலப்பன் சாவடி, சவீதா, குமணன் சாவடி வழியாக பூந்தமல்லி. இடையிலேயே ஆங்காங்கே நிறுத்தி பேருந்து நிரம்பிக் கொண்டிருந்தது. நான் உட்கார்ந்திருந்த இருக்கையில் யாரும் உட்காரவில்லை. பூந்தமல்லியில் ஒரு வயதான அம்மாவும், வயது குறைவான அம்மாவும் ஏறி அவர்களை இந்த இருக்கைக்கு அனுப்பினார் நடத்துனர்.

நல்ல வேளையாக இரண்டு பேருமே கொஞ்சம் பருமன் குறைவுதான். எனக்கு உரிய 3ல் ஒரு பங்கு இடம் குறையில்லாமல் கிடைத்தது. தூக்கத்தை விடாமலேயே தொடர்ந்தேன். பேருந்து வேகமாக ஓடியது. இடையில் ஸ்ரீபெரும்புதூர் அல்லது சுங்குவார் சத்திரம் போனதாகத் தெரியவில்லை. 5.30க்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியில் வந்திருக்கலாம்.

7 மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் தாண்டியிருந்தது. வாலாஜா வரும் போது ஏழு இருபதுதான் இருக்கும். வண்டி வெகு வேகமாக ஓடியது. முன்பு ஒரு நடத்துனர் சொன்னது போல வேகக் கட்டுப்பாடு வைக்காத அல்லது வைக்க முடியாத BSIII வண்டியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டும் என்று நினைத்து இறங்கிய பிறகு செய்யவில்லை.

வேலூரில் 8 மணிக்குக் கொண்டு சேர்த்து விட்டார். மொத்தம் இரண்டரை மணி நேரத்துக்குக் குறைவுதான். 145 ரூபாய் கொடுத்து குளிர்சாதன பேருந்தில் கால் இடிக்க வருவதை விட 46 ரூபாயில் இது போன்ற பேருந்தைப் பிடிப்பது புத்திசாலித்தனம்தானோ!

ஆற்காடு போகும் 7ம் எண் பேருந்தில் ஏறிக் கொண்டேன். விருதம்பட்டு, சில்க்மில் தாண்டி நேராக ஓடைப்பிள்ளையார் கோவில், அடுத்தது விஐடி போகும் சாலையில் திரும்பி திருவலம், பொன்னை, ராணிப்பேட்டை வழியாக ஆற்காடு போகும் பேருந்து. பிள்ளையார் கோவில் தாண்டி பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தினார்கள்.

இறங்கி திரும்பி வந்து நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள். கடைக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். (சாப்பாடு என்று சொன்னதும் நேற்று செய்த சோற்றில் தண்ணீர் ஊற்றாமல் இருப்பது நினைவு வந்து போய் கொதித்து ஆறிய நீர் ஊற்றி விட்டு, கெட்டிலில் மீண்டும் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு வந்தேன்). அவரது மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து விட்டு அவர் சாப்பிடும் நேரத்தில் கடையில் உட்கார்ந்திருப்பார் என்று தோன்றுகிறது.

பல் தேய்த்து, காலைக் கடன்களை முடித்து விட்டு இணையம். இணையத்தில் என்ன சொல்கிறார்கள்?
சீன நகைச்சுவைகளை விரும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனைவியிடம் தண்டனை வாங்கும் கணவன் கதைக்கு புத்தகம் கேட்டு கருத்து போட்டிருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு தொலைபேசி கலந்துரையாடலில் கலந்து கொள்ளாதது பற்றி பலர் வருத்தம் தெரிவித்திருந்தார்கள். ஒருவர்தான் சேர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. மாலையில் எனது வருத்தத்தையும் அனுப்பி விட்டேன்.

அருகில் மெஸ்சில் போய் வழக்கமான காலை உணவு, 50 ரூபாய் விலை. திரும்பி வந்து கொஞ்ச நேரத்தில் 9 மணிக்கு மின்சாரம் தடைப்படுமே என்று தோன்றியதும் இளைப்பாற உட்கார்ந்ததும் நல்ல தூக்கம். 10 மணிக்குத்தான் மின்சாரம் தடைப்பட்டது 12.20க்கு வந்தது.

அழைத்து 'பணிகளை இன்று மாலையே முடித்து விடுங்கள்'  முயற்சிக்கலாம். 'எப்போது வருகிறீர்கள்' என்று குறுஞ்செய்தி. பேசி விட்டு இவருக்கு தேதி சொல்லலாம்.

ஆம்பூர் பயண விபரங்களைப் பேசி விட்டு, 'நீங்கள் கடைசி வரை இருந்தீர்களா' என்று கேட்கிறார். அவரது வேலை தொடர்பாக பேசி விடும்படி கேட்டுக் கொண்டார்.

இணைய செய்திகளில் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டிருந்தார். நேற்று நடக்க வேண்டிய இன்னும் இரண்டு நிகழ்வுகள் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை வெளியீடு மற்றும் கனிமொழி 2G அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் சாட்டப்படுதல்.

நாட்குறிப்பு எழுதி விட்டு, வீட்டை ஒதுங்க வைத்து, துணிகளை மடித்து வைத்து விட்டு குளியல், அதன் பிறகு சமையல். அழுத்தக்கலனில் சோறு+பருப்பு. வெங்காயம், மாங்காய் உடன் தேங்காய் அரைத்துச் சேர்த்து மாங்காய் அவியல், பருப்புக்கும் வெங்காயம் பொடியாக நறுக்கி தாளித்து கூடவே தேங்காய் அரைத்துச் சேர்த்து சாப்பாடு தயாராகி விட்டது.

அது முடிவது வரைக்கான இடைக்கால நிவாரணமாக ஓட்சு காய்ச்சிக் கொண்டேன். அதைக் குடித்துக் கொண்டே இணையத்திலும் மேய்ந்து கொண்டிருந்தேன்.  எதையும் ஆரம்பிக்கவில்லை. இதற்கிடையில்  தொலைபேசினால் அவர் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.

பிரயாணத்திட்டத்தை 1 மணி நேரத்தில் சொல்வதாகச் சொன்னேன். நேரடி வேதிப்பொருள் வழங்குவதில் ஏதோ பிரச்சனை என்று சொன்னார்கள். திரும்ப அழைப்பதாகச் சொல்லி சமையல் முடிந்த பிறகு அழைத்தேன். எந்த பிரச்சனையும் இல்லைதான்.

'இன்னும் கணினிக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. அடுத்த திங்கள் கிழமைக்கு திட்டம் போட்டுக் கொள்ளுங்கள்' என்றார். ஊருக்குப் போக வேண்டும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் மூன்று நாட்களும் சென்னையில் இருக்க வேண்டியது வரலாம். 'இடையில் தொலைபேசி உறுதி செய்வதாகச் சொன்னார்'

ஆம்பூருக்கு வியாழக்கிழமை வருவதாகச் சொல்லி விட்டேன்.

பார்த்தால் கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று என்டிடிவியில் சிறுசெய்தி வெளியிட்டிருந்தார்கள். தயாளு அம்மாளை குற்றம் சாட்டவில்லை. கனிமொழி குற்றத்தில் கூட்டுச் சதிகாரராக சேர்க்கப்பட்டிருந்தார். ராஜா மீது லஞ்சம் வாங்கியதாக கூடுதல் குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஒரு பஸ் விட்டுக் கொண்டேன். சீன நகைச்சுவைகளில் இன்னொன்றையும் மொழிபெயர்த்துப் போட்டேன்.

தொலைபேசி சென்னையில் இருந்தால் அவரது தம்பியை வந்து பார்க்கச் சொல்வதாகச் சொன்னார். 5.45க்கு தொலைபேசி முந்தைய ஆண்டு தரவுகளை தனியாக பிரிப்பது குறித்து பேசினார். அடுத்த வாரம் செய்வதாகச் சொன்னேன்.

ஒரு நாள் இரவு விழித்திருந்ததற்கு இவ்வளவு பரிகாரங்களா!.

வங்கியிலிருந்து கணக்கில் மீதம் இருக்கும் தொகை என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. எதுவும் சேர்க்கவோ எடுக்கவோ செய்யவில்லையே? வாராந்திர தகவலாக இருக்கலாம். 11.30க்கு வந்து சேர்வேன் என்று  குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததைப் பார்த்தேன், 8 மணிக்குப் பிறகு பதில் போடவில்லை. 10 மணிக்குப் பிறகு வரவேண்டுமா வேண்டாமா என்று செய்தி அனுப்பியிருக்கிறார். அவருக்கு தொலைபேசி பதில் சொல்ல வேண்டும்.

indianblooddonors.com தளத்திலிருந்து விபரங்களை உறுதி செய்யச் சொல்லி குறுஞ்செய்தி. அதற்கும் இப்போது பதில் போட்டாகி விட்டது.

நேற்று செய்த உணவில் நீர் ஊற்றிய சோறு, கொஞ்சம் பருப்பு, மாங்காய் அவியல் இருக்கின்றன. காலையிலேயே இதைச் சாப்பிட்டால் தூக்கம் தான் வரும்.

இன்றைக்குத் திட்டமிடுதல் செய்து கொள்வோம்.

இதை முடித்ததும் (6 மணி) அரை மணி நேரம் உலாவப் போக வேண்டும். தினசரி ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால்தான் மூளை ஒழுங்காக வேலை செய்யும். 6.30க்குத் திரும்பி வந்து, வேலைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து சீக்கிரம் முடியக்கூடியவற்றை செய்து முடித்து விட வேண்டும். 8 மணி. 8லிருந்து 10 வரை மற்ற பணிகளையும் முடிக்க முயற்சிக்க வேண்டும். 8 மணிக்கு தொலைபேசி அவரது திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் இன்றைக்குத் தள்ளிப் போட்டு வெள்ளிக் கிழமை என்று சொல்லலாம்.

10 மணிக்கு மின்சாரம் தடைப்படும்.

அரை மணி நேரம் பாத்திரங்கள் கழுவி வைத்து விட்டுக் குளித்து தியானம் செய்ய வேண்டும். அதன் பிறகு டிரேட்புரோ வடிவமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் (cpi, cpi(m)), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி, அதை எதிர்த்து மாநில அமைப்புக் கமிட்டி, அதில் பிளவுகள், பிற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள், மக்கள் போர் குழு என்று ஆயுதம் தாங்கிய குழுக்கள் இங்கும் சில டஜன் அமைப்புகள் இருக்கும் என்று தோன்றுகிறது.

அறிவியல் அடிப்படையிலான மார்க்சிச தத்துவத்தின் கீழ் பணியாற்றுவதாகச் சொல்லும் அமைப்புகளிடம் இவ்வளவு பிரிவு இருந்தால் எங்கோ தவறு இருக்கத்தான் செய்கிறது.

ரஷ்யாவில் லெனின் தொடர்ந்து ஸ்டாலின், சீனாவில் மாவோ தொடர்ந்து தெங்ஷியாவ்பிங் என்று அவரவர்க்கு ஏற்ற வகையில் மார்க்சிசக் கொள்கைகளை தமது நாட்டுக்கு ஏற்ப வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பங்களிப்பில் முக்கியமானது கட்சிக் கட்டமைப்பு, உட்கட்சி முடிவெடுக்கும் முறைகள் - இவற்றை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிய போராட்டம், நிலப்பிரபுக்களைக் கொன்றொழிப்பது என்று ஒரு அணுகுமுறை, ஆலைத்தொழிலாளர்களை ஒன்று திரட்டிப் போராடுவது என்று இன்னொரு அணுகுமுறை,
சாதிக் கொடுமைகளை எதிர்க்கும் போராட்டங்கள்.

என்ன செய்வது எப்படிச் செயல்படுவது என்பதை தீர்மானிப்பதற்கு மக்களோடு நெருங்கிப் பழகும், குறிப்பிட்ட இடத்தின் (தமிழ்நாடு) வரலாறு, சமூகம், பொருளாதாரம் பற்றிய ஆழமாகப் படித்த ஒருவர் அல்லது ஒரு குழுவினர் தமக்கு ஏற்ற அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

லெனின் செய்ததும், ஸ்டாலின் செய்ததும், மாவோ செய்ததும் இங்கு பொருந்தப் போவதில்லை. அவற்றை பரிசீலிப்பது கூட நேரம் வீணடிப்பதுதான்.

இலக்கு சமவுடைமை சமூகத்தை உருவாக்குவது.
அதற்குத் தடையாக இருப்பவை நிலப்புரபுத்துவம் போன்ற ஏற்கனவே மிகவும் அழிந்து போன அமைப்புகள்.
வேறு திசையில் செலுத்திக் கொண்டிருப்பவை முதலாளித்துவ நிறுவனங்கள், அமைப்புகள்.

இவற்றை எதிர்த்து திசை திருப்ப வேண்டும். மக்களை பயிற்றுவித்து, மக்களை திரட்டி இவற்றை தூக்கி எறிவது நடக்கப் போவதில்லை. மக்களில் யாரும் உழைக்கும் சூழலில் இருந்து முதலாளியாகும் வசதி இந்த அமைப்பில் இருப்பதால் பெரும்பாலானோர் அந்த கனவை விட்டு விடப் போவதில்லை. மிகவும் துன்பப்பட்டு கோட்டுக்கு வெளியில் வந்து விழுபவர்கள்தான் இது போன்று சிந்திக்கவே ஆரம்பிப்பார்கள்.

தேர்தல் அரசியலைப் புறக்கணிப்பதால் என்ன ஆகப் போகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் மட்டும் கூட்டு சேர்ந்து நின்று, மக்களின் ஆதரவை அளவெடுத்துப் பார்க்கலாம். வெற்றி பெறுவது என்பது நோக்கமாக இல்லாமல் பலத்தை கணிப்பது என்பதை மட்டும் இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

இதன் விளைவாக மக்களிடையே ஊடகங்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படும். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அணுகும் நிலைமை வரக்கூடும். நோக்கங்களை நீர்த்துப் போகச் செய்யும் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் செயல்பட வேண்டும்.

கட்சி உறுப்பினர்களை இன்றைய அமைப்புகளுக்குள் தேர்ச்சி பெற்று போக ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவராகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும் ஆகும் போது முதலாளித்துவத்தை அழிப்பதற்கான செயல்களை உள்ளிருந்தே செய்ய முடியலாம்.

இதே போன்ற அணுகுமுறையை நிச்சயம் ஏற்கனவே விவாதித்து நிராகரித்திருப்பார்கள்.  அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட முடியும்.

சமாதான சகவாழ்வு என்பது குருஷ்சேவின் கொள்கை. அதை எதிர்ப்பது சிபிஎம். சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்-எல்), மாவோயிஸ்டுகள் என்று எல்லா இயக்கங்களும் மற்றவர்கள்  தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் கொடுத்து எங்கள் வழியில் வரட்டும் என்று ஒவ்வொரு அமைப்பும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அமைப்புகளில் இருக்கும் யாருமே கைக்கூலிகளா நிறைய நாள் நீடித்து விட முடியாது. அடிப்படை நேர்மை உடையவர்கள்தான் கட்சிகளில் இருக்கிறார்கள்.

திங்கள், ஏப்ரல் 25, 2011

சந்திப்புகள்


நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வரும் போது ஒன்பதரை மணி தாண்டி விட்டிருந்தது. 9 மணிக்குப் போக வேண்டிய மின்சாரம் இன்னும் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை சிறப்புச் சேவையாக மின்தடை இல்லையோ!

புதிய பேருந்து நிலையம் வந்து நாளிதழ்கள் வாங்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் குளிர்சாதன பேருந்து. பூந்தமல்லியில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன். பூந்தமல்லி வரை கட்டணம் 120 ரூபாய், கோயம்பேடு போனால் 145 ரூபாய். 10.45க்குக் கிளம்பியிருப்பார்கள். 12.45க்கெல்லாம் பூந்தமல்லி.

இங்கிருந்து திநகர் போகும் பேருந்து ஒன்றைப் பிடிக்க வேண்டும். ஆற்காடு சாலை, கே கே நகர், அசோக் நகர், பனகல் பார்க் வழியாக போகும் பேருந்தை விட மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் கிண்டி, சைதாப்பேட்டை வழியாக போவது நேர் வழி, சீக்கிரம் போய் விடலாம். சைதாப்பேட்டை போக 54 தடப் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

சைதாப்பேட்டையில் இறங்கி திநகர் பேருந்துகள் நிற்கும் நிறுத்தத்துக்கு வந்து திநகர் போகும் பேருந்து. 30 ரூபாய் சீட்டு வாங்கிக்கொண்டிருந்தால் நேற்றைக்கு கொஞ்சம் மிச்சப்படுத்தியிருக்கலாம். தாம்பரத்துக்கு ரயிலில் போகலாம் என்று நினைத்திருந்ததால் வாங்கவில்லை.

திநகர் பேருந்து நிலையத்திலிருந்து இணைய மையத்துக்குப் போய் விட்டுத் திரும்பி வருவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆகலாம். வெயிலில் வாடி வதங்கிப் போய் விடலாம். ஒரு ஆட்டோக் காரரிடம் பேசி, அவர் 50 ரூபாய் கேட்க, குறைந்த பட்சக் கட்டணம் 30 ரூபாய் என்று சொல்லி ஏறிக் கொண்டேன். 'போகும் தூரத்தை நீங்களே பார்ப்பீங்க, நான் சொல்வதை விட அதிகமாக இருந்தால் கேளுங்க' என்பதை ஏற்றுக் கொண்டார்.

இணைய மையத்துக்குள் போய் விபரம் சொல்லிக் கேட்டவுடன் கோப்பை தந்து விட்டார்கள். உள்ளே வைத்திருந்த காகிதங்களும் தவறாமல் இருந்தன.  விட்டுப் போயிருந்ததை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். மறுபடியும் பேருந்து நிலையத்துக்கு அருகில் கொண்டு விட்டு விட்டார். 30 ரூபாய்தான்.

பேருந்து நிலையத்துக்குள் போய் தாம்பரம் போகும் பேருந்தைத் தேடினேன். கூடுவாஞ்சேரி போகும் பேருந்து புறப்பட்டு வெளியில் வந்தது. உட்கார இடமும் கிடைத்து விட்டது. தாம்பரம் ரயில் நிலையம் வரை போய்த்தான் இறக்கி விடுவார்கள், இறங்கி தரையடி நடைபாதை வழியாக சாலையைக் கடந்து வந்து முடிச்சூர் ரோடு போகும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். அதனால் குரோம்பேட்டை சீட்டு எடுத்துக் கொண்டேன்.

அங்கிருந்து தாம்பரம் வரை மட்டும் போகும் பேருந்தில் ஏறினால், முடிச்சூர் சாலை வழியாக போகும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

தாம்பரத்தில் இறங்கிப் பார்த்தால் அருகிலேயே A2B - அடையாறு ஆனந்த பவன். முறுக்கு,  போளி வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டேன். வெளியில் இறங்கி வரும் போது வல்லக்கோட்டை போகும் வெளியூர் தடப் பேருந்து. முன்பு கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். வல்லக்கோட்டை அல்லது ஊர்களுக்கு மட்டும்தான் ஆள் ஏற்றுவார்கள். இப்போது குளம், கிருஷ்ணாநகர் என்று எல்லோரையும் கூவி அழைத்து ஏற்றிக் கொண்டார்கள்.

நடத்துனர் வண்டியை நிறுத்திப் போடாமல், முதலில் இறங்குபவர்கள் சீட்டு வாங்குங்கள் என்று எல்லோருக்கும் சீட்டு கொடுத்து முடித்து விட்டார். 2 மணி தாண்டி விட்டிருந்தது.

வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். மே முதல் வாரத்தில் நாகர்கோவிலுக்குப் போய் வருவது பற்றிய திட்டத்தையும் முடிவு செய்து கொண்டோம். 2ம் தேதி மாலைக்கு சீட்டு எடுத்துக் கொள்ளலாம். இப்படியே எழுதும் பழக்கம், தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், திரைப்படங்கள், ERP குறித்து என்று நிறைய பேச வேண்டியிருந்தது. ஆனால் நேரம் சீக்கிரமாக ஓடி விட்டது.

6 மணிக்கு சிஎல்ஆர்ஐயில் இருக்க வேண்டுமானால் 5 மணிக்கு பேருந்தில் ஏற வேண்டும் என்று 4 மணிக்குப் புறப்பட்டு விட்டோம். கேபிஎன் அலுவலகத்திற்கு வந்து சீட்டு பதிவு செய்யப் பார்த்தால் 2ம் தேதி பேருந்தில் இருக்கைகள் நிரம்பி விட்டிருந்தன. வார இறுதிகள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் என்று திங்கள் கிழமை பார்த்தால் அன்றும் ஞாயிறு கிடைக்காமல் ஒரு நாள் தள்ளிப் போட்டவர்களின் பயணத் திட்டங்கள் இருக்கும். 3ம் தேதிக்குப் பதிவு செய்து கொண்டோம்.

காலையிலிருந்தே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படலாம். ஒரு காபி சாப்பிடலாம் என்று வசந்தபவன் அருகில் வரச் சொன்னார். வசந்தபவனுக்குப் போய் இடியாப்பம், இட்லி, காஃபி எல்லாம் சாப்பிட்டு பேசிக் கொண்டே இருந்தோம். 5.15 ஆகி விட்டிருந்தது.

காலையில் சட்டைகளை தேய்க்கும் போது இரண்டு சட்டைகளில் நுண்துளைகளாக நிரம்பி விட்டிருந்ததையும், முழுக்கையில் பட்டன் போடாத படி இறுக்கமாக இருந்ததையும் பார்த்து அவற்றிற்கு ஓய்வு கொடுத்து இன்னும் இரண்டு சட்டைகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். போட்டுக் கொண்டு போயிருந்த சட்டை கசங்கலாகி அழுக்காகி விட்டதாகத் தோன்றவே அங்கேயே வாங்கி மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு துணிக்கடைக்குப் போனோம்.

சட்டை மாற்றி பேருந்து நிலையத்துக்கு வந்து கிண்டி போகும் பேருந்தில் ஏறும் போது 5.45 ஆகி விட்டிருந்தது.

வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போகாமல் இருப்பது, சொன்ன நேரத்துக்குப் போகாமல் தாமதமாகப் போவது, ஒத்துக் கொண்ட பணியை நேரத்தில் முடிக்காமல் இருப்பது அடிக்கடி நடக்கிறது.

ஒரு தடவை சென்னைக்குப் போகும் போது வருவதாக தொலைபேசியில் சொல்லி விட்டு வர வில்லை என்று தகவல் கூடச் சொல்லாமல் போகாமல் இங்கு வந்து விட்டேன். 13ம் தேதி வருவதாக சொல்லி விட்டு தொலைபேசி வரவில்லை என்று கூட தகவல் தெரிவிக்காமல் வேலூரிலேயே இருந்து விட்டேன்.

நேற்று தவிர்த்திருக்கக் கூடிய செயல்களால் கூட்டத்துக்குத் தாமதமாகப் போய்ச் சேர்ந்தேன்.

கிண்டி போகும் போது 6.15. அங்கிருந்து அடையாறு போகும் ஒரு பகிர்வூர்தியில் ஏறி உட்கார்ந்தால் இரண்டு பேருந்துகள் கடந்து போய் விட்டன. அதன் பிறகு இறங்கிக் காத்திருந்து ஆறரைக்குப் பிறகு நகர ஆரம்பித்த பகிர்வூர்தியில் ஏறி சிஎல்ஆர்ஐயில் வெளியே போகும் வாசலில் இறக்கி விட்டார்கள். அங்கு உள்ளே போக முடியாமல் உள்வாயிலுக்கு நடந்து வந்து கூட்ட அறைக்குப் போகும் போது 7 மணி நெருங்கி விட்டிருந்தது.

6 மணிக்கு தேநீர் ஆரம்பித்திருக்கிறார்கள். 6.15-6.20க்கு எல்லாம் கூட்டம் ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். நான் அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதம். வெட்கமாக இருந்தது. கடைசியில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

வருடாந்திர பொதுக்குழு கூட்டம். அதிகமான பேர் வந்திருக்கவில்லை. 20-30 பேர் இருப்பார்கள். தீர்மானங்களை அறிவித்து அதைப் பற்றிக் கருத்துக்கள் சொல்லப்பட்டன. வாழ்நாள் சாதனை விருது என்று திரு மல்லேசம் அவர்களுக்கு கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. அவரைப் பற்றி பிற உறுப்பினர்களின் கருத்து, அவரது ஏற்புரை என்று முடிந்து மீண்டும் மற்ற தீர்மானங்களைப் பற்றிப் பேசி விட்டு கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.

வெளியில் வரும் போது வழக்கமாக காரில் அழைத்தார்.  காரை ஓட்ட ஆரம்பித்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு. இந்தப் பக்கப் பேச்சிலிருந்தும், மெலிதாகக் கேட்ட அவரது குரலிலிருந்தும் புரிந்தது.

பேசி முடித்தவுடன் இவரே இன்னொருவருக்குத் தொலைபேசினார். கிட்டத்தட்ட வடபழனியில் என்னை இறக்கி விடும் வரை பேசிக் கொண்டே ஓட்டினார்.

கவர்னர் மாளிகை தாண்டி வலது புறம் திரும்பி சைதாப்பேட்டை, திநகர் சிஐடி நகர் தரைஅடிப் பாதை, அசோக் நகர் வழியாக வடபழனி வந்தார். மறுமுனையில் இருப்பவருடன் சத்யசாயி பாபா இறந்து விட்டதைப் பற்றிய விபரங்கள், திமுக-கருணாநிதி-கனிமொழி ஊழல் பற்றிய அபிப்பிராயங்கள், ஜெயலலிதாவின் அகங்காரம் குறையாமல் இருப்பது, வைகோவை அவமானப்படுத்தி வெளியேற்றியது என்று புதிதுபுதிதாக நூல் பிடித்து பேச்சை வளர்த்துக் கொண்டே இருந்தார்.

சந்திக்க வந்து கொண்டிருக்கும் நண்பரிடம் பேசி விட்டு நூறடி சாலையில் நடந்து பேருந்து நிறுத்தம் தாண்டி ஆற்காடு சாலையைக் கடந்து மறுபக்கம் காத்திருந்தேன். சிம்ரன் ஆப்பக் கடை என்று பெரிய உணவு விடுதி ஆரம்பித்திருக்கிறார்கள். துபாயில் பிரபலமான கடையாம்.

குளிரூட்டப்பட்டு, பளீர் விளக்குகள் போட்டு, கண்ணாடிக் கதவுகளுடன் உயர் தர உயர் விலை உணவகம். காத்திருக்கும் நேரத்தில் டால்ஸ்டாயின் கோசாக்ஸ் தொடர்ந்தேன். எதிர்த்திசையில் வந்து விட்டு அழைத்தார் சாலையைக் கடந்து காவல் நிலையத்துக்கு எதிரில் நிறுத்தியிருந்த அவரது இரு சக்கர வண்டியில் ஏறிக் கொண்டேன். வளசரவாக்கம் போக வேண்டுமாம்.

'சொல்லியிருந்தால் நேராக அங்கேயே வந்திருப்பேன்'

கேசவர்த்தினி அருகில் தேநீர்க் கடைக்குப் பக்கத்துச் சந்தில் உட்கார்ந்தோம். இன்னொரு நண்பரும் சேர்ந்து கொண்டார். சென்ற தடவை பேசியவற்றுக்குத் தொடர்ச்சியாக கேள்விகளுக்கு பதிலாகவும், பொதுவாக கருத்துக்களாகவும் பேசிக் கொண்டிருந்தோம்.

காந்தியின் அரசியலால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டத் தாக்கம், அவர் திட்டம் போட்டு தீங்கு செய்யாவிட்டாலும், அவர் கட்டிக் காத்த விழுமியங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பயன்படுபவையாகத்தான் இருக்கின்றன என்று பல கருத்துக்களைச் சொன்னார்கள்.

விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்த பட்ச கொள்முதல் விலை இருந்தாலும் அதை விடக் குறைந்த விலைக்கு ஏன் விற்கிறார்கள் என்று கேட்டதற்கு விவசாயப் பின்னணி உடைய நண்பர் விளக்கம் சொன்னார்.

'நெல்லை அறுவடை செய்த பிறகு நிறைய நாட்கள் வைத்திருக்க முடியாது. பூஞ்சை பிடித்து விடும். எவ்வளவு சீக்கிரம் விற்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விற்று விடத்தான் முயற்சிப்பார்கள்.'

'அரசாங்க கொள்முதல் முறை கிட்டத்தட்ட முடக்கப்பட்டு விட்டிருக்கிறது. தானியங்களை சேமிக்க கிடங்குகள் நல்ல நிலையில் இல்லை. கொள்முதல் செய்யும் அதிகாரிகள் நிதானமாக வந்துதான் பார்த்து எடுப்பார்கள். அது வரை காத்திருக்க முடியாத நிலைமை. தமிழ்நாட்டைத் தவிர்த்த பிற மாநிலங்களில் பொதுவினியோக முறையை கிட்டத்தட்ட ஒழித்து விட்டார்கள். அதனால் தனியார் வர்த்தக நிறுவனங்களை நம்பித்தான் விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.'

'மீனவர்களின் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை, பெண்ணியம், தலித்தியம் இவற்றை எல்லாம் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதும் ஒருவகையான பிரித்தாளும் சூழ்ச்சிதான். அவை எல்லாவற்றுக்கும் அடிப்படை பெருநிறுவன முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் தாக்கம்தான். மீனவர்களைக் கொல்வது சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டு மீனவர்களும் சிங்கள மீனவர்களும் நட்பாகத்தான் இருப்பார்கள். பிரச்சனை அங்கு இயங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஆதரவான அரசுகளுக்கும் மீனவர்களுக்கும் இடையேதான்.'

அழகிய பெரியவன் பேசிய விபரங்களைப் பற்றி விவாதித்தோம்.  தலித்துகளின் பிரச்சனை நிலவுடமை இல்லாத பொருளாதாரக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஹாட்சிப்சில் போய் சாப்பிட்டோம். வெளியில் வந்து தேநீர்க்கடையில் தேநீர் பால் குடிக்கும் போது இன்னொரு நண்பரும் வந்து சேர்ந்தார்.

உட்கார்ந்து பேசுவதற்கு  நண்பரின் வீட்டுக்குப் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கல்களையும் பேசினோம்.

'நீங்கள் செய்தது கற்பனாவாத சோஷலிசம், 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒருவர் முயற்சித்துப் பார்த்து தோல்வியடைந்து அமெரிக்காவுக்குப் போய் ஒரு தொழிலாளியாக பணியாற்ற ஆரம்பித்தார்'

'சுற்றியிருக்கும் சமூகத்தை எதிர்த்து நாம் மட்டும் தனியாக மாறுபட்டு இருந்து விடலாம் என்று இருப்பது மூடத்தனம்' என்று நான் ஏற்கனவே புரிந்து வைத்திருந்ததே அவரது கருத்தாகவும் இருந்தது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியின் நிலைமையை விவரித்து அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள், சூர்யா கஷ்டப்பட்டவர் என்று சொல்வது அந்த மாணவர்களை அவமானப்படுத்துவது ஆகாதா!

'உசிரைக் கொடுத்து உலகக் கோப்பை வெற்றி பெற்றது' என்று சொன்னதையும்,  அந்த பயன்பாடு தமது உயிரை இழந்த மீனவர்களை அவமானப்படுத்துவதாக குறிப்பிட்டேன்.

இங்கிருந்து ஆரம்பித்து சீன வரலாறு, சீன கம்யூனிசம் பற்றிய எனது கருத்துக்கள், பொதுவாக பொருளாதார சமூகம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் குறித்துப் பேசினோம்.

1949ல் அரசியல் புரட்சி 1960-70களில் கலாச்சாரப்  புரட்சி. அதன் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி. சந்தைப் பொருளாதாரத்தை முதலாளித்துவம் இல்லாமல் சீனா செயல்படுத்துவது

சீனர்களுக்கு தனி சொத்துடமை அனுமதித்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த ஒரு சீனரும் முகேஷ் அம்பானியாக முடியாது. வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே இழுத்து சீன மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, கூடுதல் உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் முயற்சியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைச் சார்ந்து சீனா இருப்பதை விட சீனாவைச் சார்ந்து அமெரிக்கா இருப்பதுதான் உண்மை.

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் பெருநிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட போது ஏற்பட்ட எதிர்ப்புகள் அதற்கு முந்தைய காலத்தில் சிபிஎம் செய்திருந்த நிலச் சீர்திருத்தங்கள்தான்.

குருஷ்சேவ் சோவியத் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியில் முதலாளித்துவ எதிர்ப்பு நிலையை மாற்றி சகவாழ்வு கொள்கை கொண்டு வந்ததை ஆதரித்து உருவானது இந்திய கம்யூனிசக் கட்சி. அதை எதிர்த்து சீன நிலையை ஆதரித்தவர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு).

தூங்கும் போது 3 மணி ஆகி விட்டது. 5 மணிக்கு எழுந்து புறப்பட்டு விட்டோம். கோயம்பேடு பின்வாசலில் விட்டு காத்திருந்தால் 102B திருப்பத்தூர் பேருந்து வந்தது.

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

பீர் முகமது, அழகிய பெரியவன், யாழன் ஆதி


இப்போதே மணி 5.30 ஆகி விட்டிருக்கிறது. இதை முடித்து விட்டு 2 மணி நேரம் ஆQ மொழிபெயர்ப்புப் பணி முடித்து 3வது அத்தியாயத்தை அனுப்பி வைக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும், துணி தேய்க்க வேண்டும். குளித்து விட்டுப் புறப்பட வேண்டும். இதற்கெல்லாம் 10 மணி ஆகி விடும். அதன் பிறகு சென்னை கிளம்பினால் மதியம் 2 மணி வாக்கில் போய்ச் சேரலாம். 

நேற்றுக் காலையில் எழுந்து நாட்குறிப்பு முடித்த பிறகு மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியில் உலாவப் போவதை ரத்து செய்தேன். தூத்து வாரி விட்டு பாத்திரம் கழுவி விட்டு, குளித்து தியானம் செய்த பிறகுதான் முந்தைய நாளின் நிறை நிகழ்வுகள் ஓரளவு மனதில் அமர்ந்தன. மணி ஆறரை ஆகியிருந்தது.

"8 மணிக்கு பேருந்து வேலூர் வரும்" என்று சொல்லியிருந்தார். தொலைபேசி கேட்டால் திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். "இந்த நேரத்தில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும், 2 மணி நேரம் வரை ஆகலாம்" என்று கணக்குப் போட்டாலும் அவர் அழுத்திச் சொன்ன 8 மணிக் குறிப்பை தவற விட வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன்.

குடிப்பதற்கு தண்ணீர் 2 குடம் பிடித்துக் கொண்டு வந்து விட்டேன்.

ஒரு மணி நேரம் மொழிபெயர்ப்புக்கு செலவிட்டேன். 3வது அத்தியாயம் கடைசி வரை முதல்  முயற்சி முடிந்து விட்டது. ஆQ தனது தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் உத்திகளைத் தொடர்ந்து அப்படி மாற்றிக் கொள்ளக் கூட முடியாத இரண்டு அவமானங்களைச் சந்திரிக்கிறான். அந்த கோபத்தை வழியில் போகும் புத்த பிட்சுணியைச் சீண்டுவதன் மூலம் ஆற்றிக் கொள்கிறான்.

உடை மாட்டிக் கொண்டு பையில் குடிதண்ணீர் பாட்டில், படிக்க டால்ஸ்டாயின் கொசாக்ஸ் கதையைத் தொடர்வதற்காக அந்தப் புத்தகம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். கடையில் டெக்கான் குரோனிக்கிளும் ஜூனியர் விகடனும். ஜூனியர் விகடனில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்ததைப் பற்றி எழுதியிருந்தார்கள். பேருந்து நிறுத்தத்தில் வெளியூரில் இருந்து வரும் தனியார் பேருந்து, ஏற்றிக் கொண்டார்கள். 3 ரூபாய் கட்டணம்.

ஏழே முக்காலுக்கெல்லாம் பேருந்து நிலையம் உள்ளே வந்து விட்டேன். தெற்கிலிருந்து வரும் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு அருகில் போய் பயணிகள் காத்திருக்கும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டேன். பெரிய அறை. 40-50 உட்காரும் சிமென்ட் பெஞ்சுகள். உயரமான கூரை. குப்பை, அழுக்கு இல்லாமல் பராமரித்திருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் ஒன்றிரண்டு பேர்தான் உட்கார்ந்திருப்பார்கள். நேற்றும் அப்படித்தான்.

ஜூனியர் விகடன், தொடர்ந்து டெக்கான் குரோனிக்கிள் இரண்டையும் படித்து முடித்தும் இன்னும் பேருந்து வரும் அறிகுறி தெரியவில்லை. 8 மணிக்குத் தொலை பேசினால் இன்னும் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன் என்று சொன்னார். 8.45 ஆகி விடும் என்று கணக்குத் தெரிந்தது.

வெளியிலும் உள்ளுமாக பொழுதை நகர்த்தினேன். விடுதிக்குப் போய் சாப்பிட்டு விடலாம் என்றால் அவர் வந்த பிறகு அவரும் சாப்பிட வேண்டும். பசி அதிகமாகிக் கொண்டிருந்தது. எட்டரை மணிக்கு வெளியில் பார்த்தால் நாகர்கோவிலிலிருந்து வந்த ஒரு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. பீரின் அடையாளத்தையே காணவில்லை. தொலைபேசினால் வேலூர் கோட்டை அருகில் இருப்பதாகச் சொன்னார். அவர் வரும் பேருந்து இன்னொரு பேருந்து.

அது மார்த்தாண்டத்திலிருந்து வருவது. 8.45க்கு வந்து சேர்ந்தது. அழைத்துக் கொண்டு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டோம். இட்லி+வடை, பூரி அவர் தோசை+இட்லி. 117 ரூபாய். 500 ரூபாய் தாளை மாற்றிக் கொண்டேன்.

ஓசூர் பேருந்துகள் நிற்கும் இடத்துக்குப் போய் புறப்பட்டுக் கொண்டிருந்த பேருந்தில் ஏறிக் கொண்டோம். ஓட்டுனருக்குப் பின் இருக்கை. மூன்று பேர் உட்காரும் இருக்கையில் வெளிப்பக்கம் அமர்ந்து கொண்டோம்.

பஹ்ரைனில் பணி புரிந்து வந்தவர் பீர் முகமது. குமரி மாவட்டத்தின் மணலிக்கரையைச் சேர்ந்தவர். கீழைச் சிந்தனையாளர்கள் ஒரு அறிமுகம் என்று நூல் எழுதியிருக்கிறார். அடையாளம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். நூலின் விமர்சனக் கூட்டம் ஆம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதற்கு வந்திருக்கிறார்.

சென்ற முறை ஊருக்குப் போயிருந்த போது, காங்கிரசு எதிர்ப்புப் பரப்புரையின் போது அறிமுகம் கிடைத்தது. நான் ஆம்பூர், வாணியம்பாடியில் வேலைகளை முடித்து விட்டு மாலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் திட்டம். தமிழக அரசியல், ஈழப் படுகொலைகளுக்கான எதிர்ப்புகள், சமூக நீதி, குஜராத்தின் மோடி அரசில் நிலவும் 'சொர்க்கம்' என்று விடாமல் பேசிக் கொண்டு போனோம்.

'தத்துவம் என்றால் மேற்கத்திய சிந்தனையாளர்கள்தான் என்று ஒரு பொதுப்புத்தி இருக்கிறது. கீழை தேசங்களிலும் சிந்தனாவாதிகள் உண்டு என்று அறிமுகப்படுத்துவதுதான் நூலின் நோக்கம்' என்று குறிப்பிட்டார்.

'சீனாவிலும், இந்தியாவிலும், ஜப்பானிலும் தத்தமது தத்துவங்களை மேற்கத்திய தத்துவங்களை விட பெரிதாகத்தான் கருதிக் கொள்கிறார்கள்?'

புத்தகத்தைப் படிக்கும் போது தெரிந்தது அவர் எழுதியிருப்பது இஸ்லாமிய சிந்தனையாளர்கள், குறிப்பாக நவீன அரபு நாட்டுச் சிந்தனையாளர்களைப் பற்றி. பழங்கால தத்துவங்களைப் பற்றி இல்லாமல் 20ம் நூற்றாண்டில் இன்றும் வசிக்கும் அறிஞர்களைப் பற்றி குறிப்புகளையும், அவர்களது படைப்பு மொழிமாற்றங்களையும், சிலருடன் நேர்காணல்களையும் எழுதியிருக்கிறார்.

வழியில் இன்னொரு பேருந்து பழுதடைந்து ஒதுங்கி நிற்க இன்னும் கொஞ்சம் கூட்டமாக ஏறினார்கள். எங்களுக்கு பின்னார் யாருமே உட்காராத 3 பேர் இருக்கையின் ஜன்னலோர இருக்கையில் உட்காரப் போன ஒரு பெரியவரை சில இசுலாமிய பெண்கள் நாங்கள் இருந்த இருக்கைக்குப் போக வேண்டி அதில் உட்கார்ந்து கொண்டார்கள். இவர் ஜன்னலோர இருக்கையைப் பிடித்துக் கொண்டார். பின் இருக்கையில் இருந்த ஒரு சின்னக் குழந்தை இவர் தலையைத் தட்டி விளையாடுவதில் பெரிய கோபம் வந்து விட்டது அவருக்கு. ஒரு வழியாக சமாதானப்படுத்தினோம். குழந்தைக்குப் புரியவே இல்லை. எதற்காக இந்தத் தாத்தா கோபப்படுகிறார் என்று.

ஆம்பூரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்கள் பீர் முகமதை வரவேற்க வந்திருந்தார்கள். யாழன் ஆதி என்று பின்பு தெரிந்து கொண்ட தோழர் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அறை பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது தொலைபேசி வந்தது. நாகூர் ரூமி அவரது வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று அழைத்திருப்பதாகச் சொல்லி நாகூர் ரூமி வீட்டிற்கு அழைத்துப் போனார்.

வாணியம்பாடி போகும் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டேன். தீயணைப்பு நிலையம் அருகில் கொஞ்ச நேரம் நிறுத்தி விட அங்கேயே இறங்கி நடந்தே தொழிற்சாலை வந்து விட்டேன். அன்று மின்சார இணைப்பு கிடையாதாம். அதனால் விடுமுறை விட்டிருந்தார்கள். இருந்தும் அலுவலக மேலாளர் இருந்தார். கணினிகள் இயங்கிக் கொண்டிருந்தன.

வேதிப் பொருட்களின் எடையை எடை எந்திரத்திலிருந்து நேராக கணிக்குப் பிடிக்கும் நிரலை செயல்படுத்துவது முக்கிய பணி. அதற்கான ஊழியரும் வந்து விட, பழைய குறிப்புகளை வைத்து விட்டு நிரலை இயக்கிப் பார்த்தேன். பார்த்துத் தட்டச்சியதில் தேவையில்லாத இடத்தில் ஒரு கால் புள்ளி சேர்த்ததில் கொஞ்ச நேரம் அலைக்கழித்தது. குறிப்புகளில் கால்புள்ளி இல்லை, ஏதோ ஒரு பழக்கத்தில் அதையும் போட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். பிழை தகவலில், இது பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக குறை சொன்னது. அதனால் என்ன தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

வாணியம்பாடி தொகுதியில் திமுகவின் அப்துல் பாசித் போட்டியிட்டாராம். 'இந்த வாட்டி அதிமுக வந்தால்தான் நல்லா இருக்கும் சார். அந்த அம்மா கொஞ்சம் ஸ்டிரிக்டா இருப்பாங்க' என்றார்.

'சீமான் பேசுவது மிகவும் பிடித்திருக்கிறது' ஈழ இனப்படுகொலை, மீனவர் கொலைகள், தமிழ் தேசீய பிரச்சனைகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார். ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டாலும் மக்கள் கூட்டத்துக்குள் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தகவல் தொடர்பு நீரோட்டத்தில் இது போன்ற மனித உணர்வுகள் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன.

சின்ன வயதில் நாம் விளையாடிய ஏதோ ஒரு குத்துமதிப்பான விளையாட்டு கோயம்புத்தூரிலும் விளையாடப்பட்டிருக்கும், திண்டுக்கல்லிலும் விளையாடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதுக்குமான குழந்தைகளிடையே இப்படிப்பட்ட விளையாட்டுகள் பரவுவதும் அதே நீரோட்டத்தில்தான்.

இன்னும் ஓரிரு வேலைகளை முடித்து விட்டு அவரது இருசக்கர வண்டியிலேயே பேருந்து நிலையத்துக்கு அருகில் இறக்கி விட்டார்.

காஜா விடுதியில் பிரியாணி குஸ்கா சாப்பிட வேண்டும் என்று முடிவு. குஸ்கா கேட்டால் தொட்டுக் கொள்ள ஒரு குழம்பு, வெட்டிய வெங்காயம். வெங்காயம் பச்சையாகச் சாப்பிட்டால் வாயிலிருந்து வயிறு வரை வாடை அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதைத் தொடவே இல்லை. குஸ்கா என்று கேட்டும் கணிசமான அளவில் ஏழெட்டு சின்னத் துண்டுகள் விரவியிருந்தன. மட்டன் குஸ்கா. அவற்றைப் பொறுக்கி வைத்து விட்டு சாப்பிட்டேன். மீன் ஒன்றைப் பொரித்துக் கொடுத்தார்.

ரோசா வசந்தின் படிப்பினையில் மீன் சாப்பிடக் கற்றுக் கொண்டிருக்கிறேன். வஞ்சிரம் இல்லை என்று வேறு ஏதோ ஒரு மீன் பெயர் சொன்னார். எண்ணைய் பிழியப் பிழியக் கொண்டு வந்தாலும் உள்ளே சாப்பிட நன்றாகவே இருந்தது. கொஞ்சம் முட்கள் இருந்தன.

இதை எல்லாவற்றையும் நெறிப்பதற்கு ஒரு பாட்டில் பெப்ஸி.

பீர் முகமதுவுக்குக் கொடுக்கவும், சென்னைக்குக் கொண்டு போகவும் மக்கன் பேடா வாங்கலாம் என்று நினைத்தது செய்யாமலேயே வெளியில் வந்ததும் நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஆம்பூர் போகும் பேருந்து. கல்லூரி மாணவன் ஒருவனும், அவனது தோழியும் கடைசி இருக்கையில் உட்கார்ந்து விட மீதியிருந்த இடத்தை நான் பிடித்தேன். இரண்டரை மணிக்கெல்லாம் ஆம்பூர் போய் விட்டார்கள்.

6 மணி வரை என்ன செய்வது. 5 மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லியிருந்தாலும், சரியான நேரத்தில் தொடங்குமா என்று கேட்டுக் கொண்டேன். 5 மணிக்கே போய் உட்கார்ந்து சலிப்பது தேவையில்லை. ஐந்தரை ஆகி விடலாம் என்றார். 6 மணிக்குப் போனால் போதும்.

பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு திரையரங்கு. என்ன படம் ஓடுகிறதோ அதைப் பார்க்கலாம் என்று போனால், 2.30 மணி காட்சி தொடங்கியிருந்தது. 60 ரூபாய் பால்கனி சீட்டு, குளிரூட்டப்பட்ட அரங்கு, நேராக உள்ளே அனுப்பி விட்டார்கள். படத்தின் பெயரைச் சரியாகப் பார்க்கவில்லை. புதிதாக வெளியாகியிருக்கும் படம். உள்ளே நுழைந்து பால்கனியின் முன் வரிசையில் வசதியாக காலை நீட்டும் படி உட்கார்ந்தேன். இளைஞர்கள் ஆடும் ஒரு பாட்டு நடந்து கொண்டிருந்தது. தொம் தொம் என்று அதிர்வு, எங்கோ கேட்டது போன்ற மெட்டு, துண்டுத் துண்டாக விழும் சொற்கள், தலைவலியைத் தரும் இசை வடிவம்.

எதுவாக இருந்தாலும் அடுத்த 3 மணி நேரத்துக்கு இதுதான் புகல் என்று உட்கார்ந்தால், தேர்தல் பிரச்சாரம், புத்திசாலித்தனமாக நேராகவும் பக்கவாட்டிலும் படம் பிடிக்கும் புகைப்படக் காரன். அவனைச் சுற்றும் இரண்டு பெண்கள் அதே பத்திரிகை அலுவலகத்தில். 'ஸ்டோரி இல்லாமல் ஃபோட்டோவிலேயே அசத்தறான்டி' என்று ஒருத்தி உருக இன்னொருவள் அவளை மிரட்டி அவனுக்குச் சொந்தம் கொண்டாடுகிறாள்.

புகைப்படக் கலைஞர் ஹீரோவாக திரைப்படம் வருவதாக புகைப்படக் கலைஞர்கள் விழா எடுத்ததை செய்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. அந்தப் படமாக இருக்குமோ? புகைப்படக் கலைஞர் ஹீரோவாக ஜீவா. இரண்டு நாயகிகள். உயரமான, நாயகன் காதலிக்கும் நாயகி, துள்ளலான அவனைக் காதலிக்கும் தோழி, இப்படி ஒரு சின்ன முக்கோணம்.

பத்திரிகை அலுவலகம், பத்திரிகாசிரியர், புகைப்பட ஆசிரியர், பத்திரிகை உரிமையாளர் என்று எல்லா பாத்திரங்களையும் நம்பகமாக செதுக்கியிருந்தார்கள். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி, முதலமைச்சர், படித்த இளைஞர்களின் இறகுக் கட்சி என்று தேர்தல் பிரச்சாரத்தில் கலக்குகிறார் புகைப்படக் கலைஞன். எதிர்க்கட்சித் தலைவர் 13 வயது சிறுமியுடன் மந்திர வாதக் கல்யாணம் நடுஇரவில் செய்வதை புகைப்படம் பிடிப்பது, ஆளும் கட்சித் தலைவரின் கோப வெளிப்பாடுகளை புகைப்படம் பிடிப்பது என்று நாளிதழின் பிரபலத்தை அதிகமாக்க உதவுகிறான்.

ஒரு நாளிதழின் வீச்சு, புகைப்படக் கலைஞர்கள் செயல்படும் சூழல்கள், அழுத்தங்கள், துயரங்கள் நடக்கும் போது புகைப்படம் எடுப்பதா ஓடி உதவுவதா என்ற தவிப்பு என்று அழகாக வடிவமைத்திருந்தார்கள்.

எதிர்பாராத திருப்பங்கள், கதையில் பிடித்து வைத்திருந்தாலும், இடையிடையே வந்த பாடல்கள் இடையூறாகவே இருந்தன. வெளிநாடுகளில் ரிச்சாக படம் பிடித்திருந்தாலும் இசையும், மெட்டும், பாடல் வரிகளும் அன்னியமாகத் தெரிந்தன. எல்லா மெட்டுமே எங்கோ ஏற்கனவே கேட்ட நினைவு, இன்னொரு தேவா பாணி இசையமைப்பாளர்?

இடைவேளையில் வெளியில் சுவரொட்டியைப் பார்த்தால். இசையமைப்பாளர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தின் பெயர் கோ. துரத்தி அடித்தல்கள், தேர்தல் வன்முறை, குண்டு வெடிப்பு, உயிரிழப்புகள், தேர்தல் முடிவுகள், முதலமைச்சர், திடுக்கிடும் திருப்பம், நம்பும்படியான சண்டைக்காட்சிகள் என்று நன்கு யோசித்து எடுத்திருக்கும் படம். ஒரு தடவை பார்க்கலாம்.

5.45க்கு வெளியில் வந்தேன். கன்கார்டியா பள்ளிக்குப் போய்ச் சேரும் போது 6 மணி. இன்னும் கூட்டம் ஆரம்பித்திருக்கவில்லை. உள்ளே அறையில் அழகிய பெரியவன் உட்கார்ந்திருந்தார். விகடனில் வந்த சிறுகதை குறித்துப் பேசிய போது நான் குறிப்பிட்ட கதை யாழன் ஆதி எழுதியதாம், அழகிய பெரியவன் எழுதியது தோப்பு. அதுவும் படித்திருந்தேன்.

பேரணாம்பட்டில் வசிப்பவர். 60க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறாராம். அவருடைய சிறுகதை தொகுப்பு விபரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன். பீர் முகமதுவின் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேம். 170 ரூபாய்க்கு 200 ரூபாய் கொடுத்தால் மீதி கிடைக்கவில்லை.

யாழன் ஆதி வரவேற்புரை. உள்ளூர் காய்கனி சங்கத் தலைவர் தலைமை உரை. தொடர்ந்து நாகூர் ரூமி பேசினார்.

கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று அறிமுகம் செய்தார்கள். போரடிக்காமல் பேசினார். வெளிப்படையாகப் பேசுபவன் என்று சொல்லிக் கொண்டார். கவிதை எழுதுவது குறித்து குறிப்புகள் சொன்னார்

கவிதையில் சொல் அடுக்க வேண்டும். அப்போதுதான் நினைவில் நிற்கும்,
கவிதையில் மாற்றுப் பார்வை இருக்க வேண்டும்
கவிதையில் முரண்களைப் பயன்படுத்த வேண்டும்

என்று கூட்டத்தில் இருக்கும் இளம் கவிஞர்களுக்குப் பயன்படும் என்று சொன்னார். எனக்கும் பயன்பட்டது. கவிதை எழுதிவிடப் போவதில்லை என்றாலும் நல்ல கவிதைகள் ஏன் நல்ல கவிதைகள் ஆகின்றன என்று தெரிந்து கொள்ள உதவும். அடுத்ததாக அழகிய பெரியவன் நூல் பற்றிப் பேசினார்.

இந்தியா முழுவதிலும் போற்றப்படுகிற ஒரு சிந்தனையாளர் என்று அறிமுகம் செய்தார்கள். குள்ளமான எளிய தோற்றம், தெருவில் பார்த்தால் கடந்து போய் விடக் கூடிய சாதாரண உருவம். பேச்சு கணீர் என்று இருந்தது. பள்ளியில் பேச்சுப் போட்டிகளில் தெளிவாக கணீர் என்று பேசும் சிறுவராக பயின்றிருப்பார் என்று தோன்றியது.

அவரிடமிருந்து வெளிப்படும் கருத்துக்கள் ஆழமான உலகை   நிராகரிக்கும் கருத்துக்கள்.

தத்துவம் எப்படி ராணுவம், அரசியலை விட நுட்பமாக மக்களை  அடிமைப்படுத்துகிறது என்று பேசினார். 'ஆங்கிலத்தில் பேசுபவன்தான் அறிவாளி, கால்சட்டை போட்டவன்தான் நாகரீகமானவன், வெள்ளைத் தோல்தான் உயர்ந்தது' என்று தத்துவக் கட்டமைப்பின் மூலம் மக்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அரசியல், ராணுவ ஆதிக்கங்களை போராட்டங்கள் மூலம் தகர்த்து விடலாம். தத்துவ ஆதிக்கம் நுண்ணியது, அதை நம்மை அறியாமலேயே நம்மை அடிமைப்படுத்தி விடும்.

தைத்து, பிரித்து தைத்துப் பிரித்து நைந்த யோனிகளைப் போல
எனது மனம்

என்று ஒரு கவிதை சொன்னார்.

இசுலாம் ஆகட்டும், கிருத்துவம் ஆகட்டும், இந்துமதமாகட்டும் பெண்களை அடக்கி வைப்பதில் எல்லா சமூகங்களும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை. ஒரு சமூகத்தில் பெண் பிறந்ததும் அவளது கிளிட்டோரிசை அறுத்து விடுகிறார்களாம், அதிகமாக இன்ப நுகர்ச்சி செய்து விடக்கூடாதாம்.

இன்னொரு சமூகத்தில் பிறந்த உடனையே யோனியை சிறுநீர் கழிக்க மட்டும் சிறிது துளை விட்டு விட்டு தைத்து விடுகிறார்களாம். திருமணம் ஆகும் போது கணவனுடன் உடலுறவு கொள்வதற்கு மட்டும் சிறிதளவு பிரித்து விடுவார்களாம். குழந்தை பெறும் போது முழுவதும் பிரித்து குழந்தை பேறுக்குப் பிறகு மீண்டும் தைத்து விடுவார்களாம்.

அப்படித் தைத்துப் பிரித்து தைத்துப் பிரித்து நைந்து போன யோனிகளைப் போல நைந்து போயிருக்கிறது எனது மனம் என்று சாதீயக் கொடுமைகளைப் பற்றி தான் எழுதியிருந்ததாக பேசினார்.

'வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்யப் போகிறவர்களைப் பொறுத்த வரை வடிவேலுதான் மிகச் சிறந்த கலைஞன், பா விஜய்தான் தலைசிறந்த கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர் ராஜாதான் சிந்தனையாளர். அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் சேர்கிறது. அங்கு கடின உழைப்பில் வாழும் அவர்களது கலாச்சார வெளிப்பாடு அந்த அளவில்தான் இருக்கிறது. அந்தச் சூழலில் இருந்து இப்படி ஒரு நூலை எழுதிய பீர் முகமதுவை வியக்கிறேன் என்று சொன்னார்.

அவரைத் தொடர்ந்து பீர் முகமது நூல் குறித்துப் பேசினார். நூலில் எழுதப்பட்டவர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவரது மேடைப் பேச்சுத் திறன் களை கட்டவில்லை. அவர் முடித்ததும் வரிசையாக 10-20 பேர் கவிதை வாசித்தார்கள். வந்திருந்தவர்கள் எல்லோருமே கவிஞர்களாகத்தான் வந்திருக்கிறார்கள். கொடுமையான கவிதைகள் எல்லாம், தொகுத்தளித்தவர் மட்டும் கொஞ்சம் சுவையாகப் பேசினார். பாதியில் எழுந்து வரக்கூடாது என்ற சுயக்கட்டுப்பாட்டின் காரணமாக ஒன்பதரை வரை உட்கார்ந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு புறப்பட்டு வேலூர் பேருந்து பிடித்தேன்.

வேலூருக்கு 10 கிலோமீட்டர் இருக்கும் போது சாலையோர கிராமத்தில் இறங்குவதற்கு ஒருவர் கதவைத் திறக்க பேருந்து நகர்ந்து விட அவர் கீழே விழுந்து அடி பட்டார். அந்த ஊர் மக்களுக்கு ஒரு நிறுத்தம் வைப்பது தேவை. வேலூர் போய் விட்டுத் திரும்பி வருவதற்கு நகரப் பேருந்துகள் எதுவும் இருக்காது. இப்படி பறந்து கொண்டே ஓட்டுவது தேவையில்லைதான். குறைந்தபட்சம் சாலையோர ஊர்களுக்கு நிறுத்தம் வைத்துக் கொள்ளலாம்.

நல்ல பசியும் தளர்ச்சியும், இந்த நேரத்துக்குப் பிறகு எங்கு சாப்பாடு கிடைக்கும். வீட்டுக்குப் போய் செய்யவும் மனமில்லை. வீட்டுக்கு வந்து இணையத்தில் சிறிது நேரம் உலாவி விட்டுத் தியானம், தூக்கம்.

சனி, ஏப்ரல் 23, 2011

சொதப்பி விட்ட நாள்


இப்போது ஏப்ரல் 23, 2011 காலை 4 மணி தாண்டியிருக்கிறது. என்ன நடந்திருந்தாலும் காலையில் 3 மணிக்கு எழுப்பி நிறுத்தி விட்டது பழக்கம். அந்த நேரத்தில் எட்டிப் பார்த்த சோம்பலை துரத்தி விட்டால் இடையில் ஏற்பட்ட சொதப்பலை சரிக்கட்டி விடலாம்.

நேற்றுக் காலை மிகச் சீக்கிரமாக ஆரம்பித்தது. அதுதான் பகல் வேளை தவறல்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

1 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு ஆQவின் மொழி பெயர்ப்பை ஆரம்பித்தேன். 2 மணி நேரம் தொடர்ந்து. 1 மணி நேரம் மணி அமைத்துக் கொண்டு மணி அடித்தது மீண்டும் இயக்கி விட்டு செய்து கொண்டிருந்தேன். மூன்றாம் அத்தியாயம் நான்கில் மூன்று பகுதி முடித்து விட்டேன். இன்னும் நாள் இரண்டு மணி நேரம் முயற்சித்தால் மீதி இருக்கும் ஒரு பகுதியை முடித்து, சரி பார்த்து, குறிப்புகள் எழுதி முடித்து விடலாம். அந்த நாள் இன்றாக இருந்திருக்க வேண்டும், முடியுமா?

10 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டு ஹார்லிக்ஸ் கலக்கக் குடித்துக் கொண்டேன். கெட்டிலில் தண்ணீர் கொதிக்க வைத்து குடிக்க தண்ணீர் தயாரித்துக் கொள்வது. கொதித்த உடனேயே எடுத்தால் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொள்ளலாம். வெளியில் பயணம் போவதற்கு எடுத்துப் போவதற்கு குடிநீர் ரெடி. அடுத்து நாட்குறிப்பு எழுதுதல்.

4.30 மணிக்கெல்லாம் நாட்குறிப்பு முடித்தாகி விட்டது. திட்டமிட்டபடி 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். அப்போதுதான் 5.35 ரயிலைப் பிடிக்க முடியும். வீட்டைப் பெருக்குவதை ரத்து செய்தேன். பாத்திரங்கள் கழுவி விட்டு, குளித்து தயாராகும் போது 5 மணி நெருங்கிக் கொண்டிருந்தது.

முந்தைய நாள் மதியம் செய்த பருப்பில் ஒரு பகுதி மீதியிருந்தது, சோற்றில் தண்ணீர் ஊற்றி ஒரு கிண்ணத்தில். மாலையில் செய்த தோசையில் ஒன்றும். இவற்றை விட்டு விட்டுப் போனால் சாயங்காலம் வருவதற்கு முன்னால் நிச்சயம் கெட்டுப் போய் விடும். இவ்வளவு காலை நேரத்தில் சாப்பிடுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தது.

குளித்து முடித்த பிறகு வீணாக்காமல் சாப்பிட்டு விட்டே போவது என்று முடிவு. ரயிலுக்குப் போக முடியாவிட்டால். பேருந்து நிலையத்துக்குப் போய்க் கொள்ளலாம். அப்படி தீர்மானித்தும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து தியானம் செய்து கொள்ளவில்லை. நிதானமாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்து விட்டேன். பயணத்துக்குக் கொண்டு போக பையில் தண்ணீர் பாட்டில், அச்செடுக்க காகிதங்களுடன் ஒரு கோப்பு, படிப்பதற்கு ஒரு புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டேன்.

செல்பேசி கட்டணம் செலுத்த இன்றுதான் கடைசி தேதி. அதற்கான காசோலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முந்தைய நாள் நினைத்திருந்தது. எடுக்கத் தவறி விட்டது.

மழை பெய்து குளிர்ந்து போயிருந்தன பூமியும் காற்றும். கோபால புரம் வழியாக மெயின் ரோடுக்கு வந்து பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.

காந்திநகரிலிருந்து திரும்பும் சாலையின் முனையில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் ஏதோ ஒரு பிராணி கொல்லப்பட்டு உடல் சிதைக்கபட்டுக் கிடைந்தது. பெரிய பெருச்சாளியாக இருக்கலாம், முயல் ஆக இருக்க இந்த இடத்தில் வாய்ப்பில்லை. கடைசி நேரம் அதைக் கவனித்து மிதிக்காமல் தவிர்த்துக் கொண்டேன்.

அரசுப் பேருந்து வந்தது. ஏறியதுமே, 2 ரூபாய் சீட்டு என்று கொடுத்து விட்டார் நடத்துனர். பேருந்து நிலையத்தில் இறங்கி, கடையில் நாளிதழ் கேட்டால் ஆங்கிலத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா மட்டுமே இருந்தது. தமிழில் தினமலர், தினத்தந்தி. தினத்தந்தி வாங்கிக் கொண்டேன். கருணாநிதியின் அறிக்கை உட்பக்கங்களுக்குப் போய் விட்டிருந்தது. தலைப்புச் செய்தியாக சாய்பாபாவின் உடல்நிலை. பேருந்து நிலையத்துக்குள் போனால் சென்னை போவதற்கு குளிர்சாதன பேருந்து.

கால் இடிக்கக் கூடாது என்று கடைசி வரிசையில் நடு இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். மற்ற இருக்கைகளில் கால் வைக்கத் தேவையான இடத்தில் பாதிதான் இருக்கும். இதில் காலை நீட்டி உட்கார்ந்து கொள்ளலாம்.

வண்டி எஞ்சினை இயக்கி குளிர்காற்றை ஓட விட்ட பிறகுதான் பார்த்தால் தலைக்கு மேலே பக்கவாட்டில் குளிர் காற்றை விரட்டும் இரண்டு சாளரங்கள் உடைந்திருந்தன. அவற்றை மூடவோ காற்றின் திசை மாற்றவோ, அளவைக் குறைக்கவோ முடியாது. இதற்குள் மற்ற இருக்கைகள் எல்லாம் பெரும்பாலும் நிரம்பி விட்டிருந்தன. பயணம் முழுவதிலும் குளிர்ந்த காற்றாக தலையைக் குளிர்வித்துக் கொண்டே இருந்தது.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்குள் பயணச்சீட்டுக் கொடுத்து முடித்து விட்டார். நேரம் சரியாக 6 மணி. நாளிதழ் படித்து விட்டுகொஞ்ச நேரம் தூங்கலாம், தியானம் செய்து கொள்ளலாம் என்று முயற்சிக்க முடியாத படி குளிர்க்காற்று தாக்குதல். எப்படியானாலும் சமாளிக்கத்தானே வேண்டும். வாலாஜா சுங்கச் சாவடியில் வரும் போது 15 நிமிடங்கள்தான் தாண்டியிருந்தது. எவ்வளவு வேகமாக ஓட்டுகிறார்!

1 மணி நேரம் அப்படியே போனது. 7 மணி நெருங்கும் போது தூக்கக் கலக்கம் போய் விட்டு விழித்துப் பார்த்தால் எங்கோ கிராமங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. காஞ்சிபுரத்துக்கு முந்தைய கிராமங்களா, காஞ்சிபுரம் தாண்டியாச்சா என்று புரியவில்லை. பெரும்புத்தூர் சிப்காட்டுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் நிறைய சாலையை நிறைத்திருந்தன. அதனால் காஞ்சிபுரம் தாண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சாலை ஓர பெயர்ப்பலகைகள் எதையும் பார்க்க முடியவில்லை. பழக்கமான இடங்கள் எதுவும் கண்ணில் படவும் இல்லை.

பேருந்தை வெகு வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுனர். முன்னால் போகும் வாகனங்களை ஏதோ இரு சக்கர வண்டி ஓட்டுவது போல வளைத்து வளைத்து முந்திக் கொண்டிருந்தார். குறுகிய இடைவெளியில் கூட அவ்வளவு பெரிய பேருந்தை நுழைத்து திறமையாக ஓட்டினார். இடது புறம் பார்த்துக் கொண்டு வந்தார் சுங்குவார்ச்சத்திரம் போகும் கிளைச்சாலை தெரிந்தது. வேலூரிலிருந்து 1 மணி நேரத்தில் சுங்குவார்ச் சத்திரம் வந்து விட்டார்.

காரில் வந்தால் கூட சிறிய வேகம் குறைவான வண்டிகளில் இது சாத்தியம் இல்லை. வேகம் அதிகம் போகக் கூடிய கார்களில்தான் இதை விட வேகமாக வர முடியும். புதன் கிழமை வாலாஜாவிலிருந்து பூந்தமல்லி வருவதற்கே ஒரு மணி நேரம் தாண்டி விட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் பூந்தமல்லி போய் விடுவாரா!

சாலையில் வாகன வரிசை அதிகமாயிருந்ததால் வேகமாகப் போகக்கூடிய இடவசதி குறைவாக இருந்தாலும் சளைக்காமல் இடதும் வலதுமாக தடம் மாறி ஓட்டினார். ஏழரை மணிக்கு பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு முன்பு இறக்கி விட்டார்கள். சாலையைக் கடந்து எதிர் புறம் இருந்த நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன்.

பேருந்து நிலையத்தின் நுழைவாயிலின், பேருந்துகள் வெளி வரும் வாயிலின் அருகில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். உட்புறமாக நடந்து வந்து கொண்டிருந்த 25G (37Gயோ) பேருந்தில் ஏறிக் கொண்டேன். வடபழனி கோவில் என்று சீட்டு எடுத்துக் கொண்டேன். வடபழனியில் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து திநகருக்குப் பேருந்து பிடிக்க வேண்டியதுதான்.

வடபழனி பேருந்து நிலையத்தில் இறங்கி அருகில் இருந்த வசந்தபவனில் சாப்பிட்டுக் கொண்டேன். உட்கார்ந்த பிறகுதான் காலையில் ஐந்தரை மணிக்கே ஏதேதோ சாப்பிட்டோமே என்பது நினைவுக்கு வந்தது. இரண்டரை மணி நேரம் தாண்டி விட்டது, அதனால் அடுத்த வேளை உணவு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். அடுத்த வேளை உணவு கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்குப் பிறகுதான் கிடைத்தது என்பது குழப்பங்களின் உச்சம்.

சாப்பிட்டு விட்டு வடபழனி பேருந்து நிலையத்துக்குள் வந்தால் திநகர் போகும் பேருந்துகள் என்னவென்று தெரியவில்லை. பாண்டிபஜார், வள்ளுவர் கோட்டம் வழியாகப் போகும் பேருந்துகள் வந்தன. 49A போன்ற திநகர் போகும் பேருந்துகள் ஆவிச்சி அருகிலேயே திரும்பி விடுவது நினைவுக்கு வந்தது. லிபர்டி அல்லது வள்ளுவர் கோட்டம் போய் அங்கிருந்து இன்னொரு பேருந்து பிடிக்கலாம். நிறுத்தியிருந்த 17M வெட்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். நான் போக நினைக்கும் இடத்துக்கு வெளியிலிருந்து வரும் பேருந்துகள் நிறைய இருக்கும் என்று தோன்றியது.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு 17E ஒன்று காலி இருக்கைகளுடன் வர அதில் ஏறிக் கொண்டேன். நடத்துனரிடம் திநகர் பேருந்து நிலையத்துக்குப் போக எங்கு இறங்கி வேறு பேருந்து பிடிக்க வேண்டும் என்று சீட்டு கேட்கும் போது ஜவஹர்லால் நேரு சாலை தாண்டி வடபழனி கோவில் நிறுத்தத்துக்கு பேருந்து வந்து விட்டிருந்தது. 'இங்கேயே கிடைக்குமே' என்று சொன்ன நடத்துனரிடம் லிபர்ட்டி சீட்டு வாங்கிக் கொண்டேன் 5 ரூபாய். '27M வரும் பாருங்க' என்று தகவல் சொன்னார்.

லிபர்டியில் இறங்கி இறங்கிய இடத்திலேயே அடுத்த பேருந்துக்குக் காத்திருந்தால் பல நிமிடங்களுக்குப் பிறகு திநகர் பேருந்து நிலையம் போகும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்து, தாண்டி வேகமாகப் போனது. பார்த்தால் திநகர் திசையில் திரும்பும் பேருந்துகள் நிற்குமிடம் சில மீட்டர்கள் தூரத்தில் கல்லூரி வாசலில். அங்கு போய் நின்று சிறிது நேரத்தில் இன்னொரு பேருந்து வர திநகர் சீட்டு எடுத்துக் கொண்டேன்.

கோடம்பாக்கம் மேம்பாலத்தைத் தாண்டி இடது புறம் திரும்பி விட்டது பேருந்து. திநகர் போகும் மேம்பாலத்தில் ஏறுவதற்கு முன்பு ஒருவர் இறங்க வண்டியை நிறுத்தும் படி கேட்டார். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று சொல்லி பாலத்தைத் தாண்டிய பிறகுதான் நிறுத்தினார். தெற்கு உஸ்மான் சாலை பாலம் நீஈஈளமாக இருக்கிறது. அதில் ஏறி இறங்கியதும் பேருந்து நிலையத்துக்கு அருகில் வந்து விடுகிறது. சாலை நிறுத்தத்தில் நிறுத்திய போது பலர் இறங்கினார்கள். நாம் அந்தப் பக்கம்தான் எப்படியும் சாலை கடக்க வேண்டும். பேருந்திலேயே இருப்போம் என்று பார்த்தால் நிறுத்தக் காத்திருப்பு கவுண்ட்டவுனில் 90 விநாடிகள் காட்டியது.

இறங்கி சாலையைக் கடந்து நடந்தேன். கண்ணம்மா பேட்டை புதுத்தெருவுக்குப் போக வேண்டும். முன்பு ஓரு முறை கண்ணம்மா பேட்டை வந்த நினைவு இருந்தது. சாகரனின் இறுதிச் சடங்குகளின் போது வந்தது. பேருந்து நிலையத்தைத் தாண்டி முதல் இடது புறம் திரும்ப வேண்டும். ஆனால் மேட்லி சாலை, திநகர் என்றுதான் போட்டிருந்தார்கள். கூட்டம் 10 மணிக்கு என்று சொல்லியிருந்தார்கள். மணி 9தான் ஆகியிருந்தது. முடிந்தால் இணைய மையம் ஒன்றில் ரயில் பயணச்சீட்டு அச்செடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் இன்னும் கடை திறக்கவில்லை.

கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் நடந்த பிறகு இடது புறம் ஒரு பலகை தெரிந்தது. உள்ளே வீடு போலத் தெரிந்தது. வாசலில் உட்கார்ந்திருந்தவரிடம் இணைய மையம் திறந்திருக்கிறதா என்று கேட்டதும் அவரே உள்ளே அழைத்துப் போனார். அவர்தான் உரிமையாளர். உள்ளே நிறையக் கூட்டமாக நான்கைந்து இருக்கைகள் நிரம்பியிருந்தன. 10-12 வயது சிறுவர்கள் பலர் 2 பேர் மூன்று பேராக உட்கார்ந்திருந்தார்கள்.

பென்டிரைவை இணைத்துப் பார்த்தால் அதைக் கணினி அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இணையத்திலிருந்தே எடுத்துக் கொள்ளலாம் என்று இணைத்துக் கொண்டேன். முதலில் பல நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் ஆவணத்தை அச்செடுத்துக் கொண்டேன். அதில் print this view என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் மேல் கால் பகுதி மட்டும் அச்சாகி வந்தது. மீண்டும் ஒரு முறை

அதன் பிறகு ரயில்வே தளத்தைத் திறக்க முயற்சித்தால் திறக்கவேயில்லை. மின்னஞ்சலில் வந்திருந்த தகவல்களை அச்செடுக்கக் கொடுத்து கடைசியில் பார்த்தால் முதல் பக்கத்தில் ஒரு பாதி தகவல்கள்தான் இருந்தன. இன்னும் ஒரு கவனக்குறைவு. மீண்டும் உலாவியை இயக்கி இரண்டாவது பக்கத்தையும் அச்செடுத்தேன்.

இப்படியாக 4 பக்கங்கள் அச்செடுப்பு நடந்து விட்டது. இணையப் பயன்பாட்டுக்கு 10 ரூபாய் (அரை மணி நேரக் கட்டணம்). இப்படியாக 18 ரூபாய் கொடுக்க வேண்டும். 100 ரூபாய்க்கு சில்லறை இல்லை அவரிடம். வெளியில் கடைகளில் கேட்டு வாங்களேன் என்று சொன்னார். பை, அச்செடுத்த காகிதங்களை வைத்த கோப்பு, கணினியில் பென்டிரைவ் மூன்றையும் விட்டு விட்டு வெளியில் போனேன்.

வரிசையாகக் கடைகளில் கேட்டும் அந்தக் காலை நேரத்தில் யாரும் சில்லறை தரத் தயாராக இல்லை. திரும்பித் தேடிப் பார்த்தால் கடை இருந்த இடம் அடையாளம் தெரியவில்லை. நின்று நிதானப்படுத்திக் கொண்டு வீடு போல இருந்ததை நினைவுப் படுத்திக் கொண்டு உள்ளே போனேன்.

இது போன்று எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் நிதானம் தவறி விடுகிறது. இணைய மையக்காரரே வெளியில் போய் சில்லறை வாங்கித்தருவதாகக் கிளம்பினார். பையை எடுப்பதற்கு முன்பு ஞாபகமாக பென்டிரைவை கணினியிலிருந்து உருவிக் கொண்டேன்.

வெளியில் வந்து அதே வளாகத்தில் இருந்த நீர் சுத்தம் செய்யும் கருவி விற்கும் அலுவலகத்தில் 2 ஐம்பது வாங்கி சில்லறை கொடுத்து விட்டார்.

ஒன்பதரை மணி தாண்டி விட்டிருந்தது. அவரிடமே போகிற இடத்துக்கு வழி கேட்டால், 'வெளியில் வந்து வலது புறம் 1, 2, 3 சந்துக்கள் தாண்டி 4வது தெருவில் திரும்புங்கள். அதன் பிறகு கேட்டுப் போகலாம். இப்போதே சொன்னால் குழம்பி விடுவீர்கள்' என்று சொன்னார். சரியாக நான்காவது சந்தில் திரும்பி அதன் வளைவுகளைத் தொடர்ந்து போய் ஒரு இடத்தில் கேட்டால் அந்தத் தெருதான் இடம் என்று சொன்னார் ஒரு இளைஞர்.

வீட்டு எண்ணைத் தேடுவது சுலபமாக இருக்கவில்லை. யாரிடமும் வீட்டு எண்ணைச் சொல்லிக் கேட்டாலும் தகவல் கிடைக்காது. கொஞ்ச தூரம் தேடிப் பார்த்து விட்டு நண்பரை அழைத்தால் அவர் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லி வீட்டுக்குக் கீழே வருவதாகச் சொல்லி வந்து விட்டார். பக்கத்தில் இது சரியான தெருதானே என்று இன்னொரு முறை உறுதிப்படுத்திக் கொண்டேன். கொஞ்ச தூரம் தள்ளியே வந்து விட்டிருந்தேன்.

முதல் மாடியில் இருந்த அவர் வீட்டுக்குப் போனால் கூட்டம் நடக்கும் இடத்தில் அவரும் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார்கள். ஒழுக்கத்துடன் 10 மணிக்கு ஆரம்பித்து விடப் போவதில்லை என்று ஒரு சந்தேகம் உதித்தது. 'நீங்க வேலூரிலிருந்து இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீங்க, எதிர்பார்க்கவில்லை' என்று அவர் சொல்லவும் கிட்டத்தட்ட உறுதியானது. முற்பகலில் இந்தக் கூட்டம் முடிந்து விட்டால், 3.30 மணி வரையிலும் நிதானமாக சென்ட்ரல் போய் விடலாம் என்று திட்டம். கூட்டம் மதியத்துக்குள் முடிந்து விடுமா என்று கேட்டுக் கொண்டேன்.

அவர்கள் இரண்டு பேரும் காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை. என்னையும் சாப்பிட அழைத்தார்கள். நான் சாப்பிட்டு விட்டு வந்ததாகச் சொன்னதும் அவர்களுடன் உள்ளே போய் சாப்பிடும் போது பேசிக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

வேலூரில் நடந்த காங்கிரசுக்கு எதிரான  பரப்புரை பற்றிய மேலாய்வுக் கூட்டம். தீவிரமாக செயல்பட்ட கண்ணன், சதீஷ், பாலா, இன்னொருவர்  நான்கு பேரும் 10 மணிக்கு வந்து விட்டிருந்தார்கள். மொத்தம் எத்தனை பேர் என்று கேட்டார் 10 பேர் இருக்கலாம் என்றார்கள். எதிர்பார்த்தவர்கள் எல்லாம் வந்து சேர கிட்டத்தட்ட அடுத்த 1 மணி நேரம் ஆகி விட்டிருந்தது. இரவு பாடசாலைக்காக என்று சொன்ன நீளமான வெளியறையில், உலோகக் கூரை போடப்பட்டிருந்தது, வசதியாக உட்கார்ந்து கொள்ள முடிந்தது. மதியத்துக்குள் கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல் சேர்ந்திருப்பார்கள்.

குறிப்புகள் எடுக்க வந்த குறிப்பேட்டை நான் வாங்கி எழுதுவதை ஏற்றுக் கொண்டேன்.

வேலூரில் பரப்புரை செய்வது என்று முடிவு எடுத்தது, குறுகிய கால அவகாசமே இருந்தது, வேலூருக்கு முன் தயாரிப்புகளுக்காகப் போனது, எதிர்ப்பு மட்டுமா, யாருக்கும் ஓட்டு கேட்பதா என்று தீர்மானித்தது, உள்ளூர் அமைப்புகளின் உதவி நாடியது, உதவியவர்கள், பரப்புரையின் போது அனுபவங்கள் என்று ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஆரம்பத்தில் சில அடிப்படைக் கேள்விகளாக நான் கேட்கப் போக அந்தத் திசையில் பேச வேண்டாம் என்று நிறுத்தி விட்டார்கள். அதன் பிறகு குறிப்பெடுப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.

சென்னை மயிலாப்பூர், ஆலந்தூர் தொகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட மாணவர்கள், save tamils குழுவினர் என்று பலரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். 20 பேர்களில் கிட்டத்தட்ட 20 அமைப்பு இருந்தது. பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளில் சேர்ந்திருந்தார்கள். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணி புரிபவர், வேலூரில் மருந்துக் கடை வைத்திருப்பவர், கிராமத்தில் தன்னார்வல பணி செய்பவர் என்று பலதரப்பட்டவர்கள்.

இவ்வளவு பேர் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்று கூடி இருப்பதே ஒரு சாதனையாகத் தோன்றியது. தேர்தல் பரப்புரை பற்றிய என்னுடைய அனுபவங்களையும் பொருத்தமான இடங்களில் சொல்லிக் கொண்டேன். இந்த மாதிரிக் கூட்டங்களை திசை திரும்பாமல் மட்டுறுத்தி நடத்துவதற்குக் கொஞ்சம் இரும்புக் கரம் வேண்டும். நிறைய தடவை பெரிய அரசியல் விவாதங்களுக்குத் திரும்பி நேரம் கழிந்தது. சாப்பிடுவதற்கு நொறுக்குத்தீனிகள் வினியோகித்தார்கள். மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார்.

1 மணி வாக்கில் ஓரிருவர் விடை பெற்றுக் கிளம்ப ஆரம்பித்தார்கள். நான் 2.30க்குப் புறப்பட்டு விடுவேன் ஒன்று தகவல் சொன்னேன். பசிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் விவாதங்கள் இன்னும் ஐநா குழுவின் அறிக்கை பற்றிய செயல்திட்டத்துக்கு இன்னும் வந்திருக்கவில்லை.

மதிய உணவுக்குப் பிறகு தொடரலாமா என்று கேட்டவரை நேரம் வீணாக்க வேண்டாம் என்று தொடர்ந்து பேசச் சொன்னார்கள். தமிழ்நாட்டில், தமிழ் பேசும் மண்ணில் வாழ்ந்த மக்கள் குறித்த ஆய்வு செய்யும் பேராசிரியர் வந்து அவரது பணி குறித்தும் ஈழப் போர் குறித்த அவரது அனுபவங்களையும் பேசினார். அறிவியல் ஆய்வாக கடல் கொண்ட தமிழ் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்.

அதில் கணிசமான நேரம் போனது. ஐநா அறிக்கை மீதான நடவடிக்கை மீது பேசுவதை சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, சில கருத்துக்களைச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். இன்னும் சில மணி நேரம் கூட்டம் தொடரும் என்று தோன்றியது.

கீழே இறங்கி மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அந்தத் தெருவழியாகவே போக முடியுமா என்று கேட்டால் இல்லை, பிரதான சாலை போய்த்தான் போக வேண்டும். இன்னும் 1 மணி நேரம் இருக்கிறது 3 மணிக்குள் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி விட்டால் போய் விடலாம். பதட்டம் தொத்திக் கொண்டது. நிதானமாக இருந்திருந்தால் பையில் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்திருக்கலாம்.

கோப்பை இணைய மையத்திலேயே விட்டு விட்டுப் போனது மதியம் 3 மணிக்கு சென்ட்ரல் அருகில்தான் தெரிய வந்தது. நல்ல வேளையாக முக்கிய ஆவணங்கள் எதுவும் இல்லை. அச்செடுக்கத் தாள்களும், அன்று அச்செடுத்தவைகளும், ஒரு பழைய அட்டையும், சில புகைப்படங்களும் இருந்தன.

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சமூக அரசியல்


ஏப்ரல் 22, 2011. காலை 3.20

புதன் கிழமை மாலை சிதம்பரம் பயணத்தின் போது இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள். முதலில் ஆழி பதிப்பகத்தினர் சிதம்பரம் போய்க் கொண்டிருக்கும் வழியில் அழைத்தார்.
'myerp என்ற இணையவழி மென்பொருள் சேவை எப்படி இருக்கிறது, அதற்கு பணம் கட்டி சேரலாமா என்று பார்த்துச் சொல்லுங்கள்.'
'இரண்டாவதாக, ஆQ மொழிபெயர்ப்பு எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.'

ஆQ மொழிபெயர்ப்பு செய்வதாக ஒத்துக் கொண்டு ஒரு மாதம் ஆகப் போகிறது. வாரத்துக்கு ஒரு அத்தியாயமாக முடித்து விடுவதாகத் திட்டமிட்டுச் சொல்லியிருந்தேன். இதுவரை முடித்த ஒரு அத்தியாயம் கூட அனுப்பவில்லை.

வேலையை ஆரம்பித்த நேரத்தில் எழுதும் பழக்கம் பெரிதும் விட்டுப் போயிருந்தது, வலைப்பதிவில் எழுதுவது குறைந்திருந்தது. அதனால் மொழி பெயர்த்ததை எழுதும் போது வார்த்தைகள் வசதியாக வந்து விழுவது சிரமமாக இருந்தது.
சீன மொழி மொழிபெயர்ப்புக் கருவிகளைத் தேடிச் சேர்க்கவும் கொஞ்ச நாள் பிடித்தது.
இந்த வேகத்தில் 'சீன பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஒரு பழைய சீன நாவலையும் படித்து முடித்து விடலாம்' என்று ஹோங்லௌமெங் என்ற செம்மாளிகை கனவு மூன்று பாகங்களையும் படித்து முடித்தேன்.

அதற்குள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதி எழுத்து சரளமும் கைவந்திருந்தது. முதல் அத்தியாயத்தை நான்கு முறை முயற்சித்து மொழி பெயர்த்து முடித்து விட்டிருந்தேன். இரண்டாம் அத்தியாயத்தின் பெரும்பகுதி முடிந்திருந்தது, முதல் முயற்சியாக. இந்த விபரங்களை விளக்கி அடுத்த நாள் இரண்டு அத்தியாயங்களை அனுப்பி விடுவதாகச் சொன்னேன்.

நேற்றைக்கு மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இரண்டாம் அத்தியாயத்தில் மீதியிருந்த இரண்டு பத்திகளை மொழிபெயர்த்து விட்டு, இரண்டு அத்தியாயங்களையும் மீண்டும் ஒரு தடவை படித்து தமிழ் வாக்கியங்களாக சீர்திருத்த வேண்டியதை மாற்றி அமைத்தேன். தேவைப்படும் இடங்களில் சீன பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் குறித்த மேற்குறிப்புகளைச் சேர்த்துக் கொண்டேன்.

திரும்பவும் படித்துப் பார்க்கும் போது திருப்தியாக வந்திருந்தது. ஓரிரு சொற்களுக்கு இன்னும் பொருத்தமான தமிழ் சொற்களை மாற்ற முடிய வேண்டும். மற்றபடி பெரிய குறையாக எதுவும் தென்படவில்லை.

இரண்டு கோப்புகளையும் மின்னஞ்சலில் இணைத்து, 'இதுதான் இன்றைய நிலையில் என்னால் முடிந்த மொழிபெயர்ப்பு. சீன மூலத்தின் உணர்வுகளை தமிழில் அன்னியப்படாமல் கூடிய வரை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்திருக்கிறேன். இது பற்றிய விமர்சனத்தை வெளிப்படையாக சொல்லுங்கள்'

'எதிர்பார்க்கும் தரம் இல்லையென்றால், அரை குறை மொழிபெயர்ப்பை வெளியிடுவது லூஷ்யுன்னின் மேதைமைக்கும் தமிழுக்கும் நாம் செய்யும் துரோகமாகி விடும். ஏற்கனவே பேசியது போல தமிழில் பேசப்படும் அளவுக்கு மொழிபெயர்ப்பாக இது இல்லை என்றால், இப்போதைக்கு முயற்சியைக் கைவிட்டு விட்டு இன்னும் சீன மொழியும், தமிழ் எழுத்தும் கைவந்த பிறகு பின்னர் முயற்சிக்கலாம்'.

'இது ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது என்றால் இரண்டு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற வீதத்தில் மீதி இருக்கும் 7 அத்தியாயங்களையும் அடுத்த 2 வாரங்களுக்குள் முடித்து அனுப்பி விடுகிறேன். மொழிபெயர்க்கும் சரளம் வந்து விட்டது'

மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று சொல்லலாம், அல்லது அவ்வளவாக சரிப்படவில்லை என்றும் சொல்லி விடலாம். இரண்டுக்கும் தயார் படுத்திக் கொண்டேன்.

மாலையில் பதில் போட்டிருந்தார். 'மின்னல் வேகத்தில் படித்து விட்ட'தாகவும், 'லூஷ்யுன்னின் குறும்பு வெளிப்பட்டிருப்பதா'கவும் ஆரம்பித்து, 'சீன வாசனையுடன் இருப்பது மொழிபெயர்ப்பின் தனிச்சிறப்பு, இல்லை என்றால் அது தமிழ் படைப்பாக ஆகி விடும், ஒரு சில இடங்களில் மொழிபெயர்ப்பை மேம்படுத்த முயற்சிக்கலாம். அடிக்குறிப்புகளும் மிகவும் தேவையானவை. தொடர்ந்து செய்து முடித்து விடுங்கள்' என்று எழுதியிருந்தார்.

மின்னஞ்சலை படித்து முடித்து விட்டு நிமிரும் போது தொலைபேசியிலும் அழைத்தார். நம்முடைய பணி ஒருவரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்ற உணர்வு விலை மதிப்பற்றது. அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு மனம் இறக்கை கட்டிப் பறந்தது.

பகலிலேயே சாதகமாக பதில் வந்தால் எப்படி பணி செய்வது என்று திட்டம் போட்டிருந்தேன். காலையில் 2 மணி நேரம் முன்னதாக எழுந்திருந்து, மொழிபெயர்ப்புக்கு இரண்டு மணி நேரம் அதிகாலையில் செலவிடலாம். அப்போதுதான் வேறு திசை திருப்பல்கள் இல்லாமல் ஓடும்.

இன்றிலிருந்து அது ஆரம்பித்தாகி விட்டது. காலையில் ஐந்தரை மணிக்கு சென்னைக்குப் போகும் ரயிலைப் பிடிக்க வேண்டியிருப்பதால், 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும், 4.30க்குக் குளித்து விட வேண்டும், 4 மணிக்கு எழுத்து முடித்து விட வேண்டும் என்று கணக்கு போட்டு 2 மணிக்கு எழுந்தால் 1 மணி நேர மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டேன். மனத்தின் வேகமோ என்னவோ, 1 மணிக்கே விழிப்பு வந்து, மூன்றாவது அத்தியாயத்தில் கணிசமான பகுதியை முடித்து விட்டு இப்போது எழுத்து.

சிதம்பரத்தில் திருமண வரவேற்பில் தவற விட்டது ஒரு அழைப்பு, அழைப்பை பார்த்தும் சத்தத்தில் பேச முடியாதது இன்னொரு அழைப்பு. பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போது மூன்றாவது அழைப்பு.

பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போது அழைத்தவர், 10 நாட்களுக்கு முன் சென்னையில் சந்தித்து பேசியவர். அடுத்து சென்னை பயணம் எப்போது என்று கேட்டு ஞாயிற்றுக் கிழமை வருவதாகச் சொன்னதும், சிஎல்ஆர்ஐயில் சந்திக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டோம்.

அதைத் தொடர்ந்து பேச முடியாமல் விட்டவரை அழைத்தேன்.

வேலூரில் காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்த குழுவினர் செயல்பாடுகளை பகுத்தாய்வு செய்ய கூட்டம் ஏற்பாடு செய்கிறார்களாம். 'வெள்ளிக்கிழமை சென்னையில் இருக்கும்' என்று முன்பே தொலைபேசி சொல்லியிருந்தார். அன்று பேசும் போது 'வெள்ளிக் கிழமை காலையில் 10 மணி முதல் கூட்டம், எழும்பூரில் இருக்கும்' என்று சொல்லியிருந்தார், 'குறுஞ்செய்தியில் விபரம் அனுப்புவ'தாகச் சொன்னார்.

நேற்று மதியம் வந்த குறுஞ்செய்தியில் 10 மணிக்கு திநகரில் கூட்டம் என்று முகவரி வந்திருந்தது.

காட்பாடியிலிருந்து சென்னை போகும் ரயில்களின் பட்டியலை irctc.co.in தளத்தில் பார்த்தேன். அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து கடந்து போகும் விரைவு வண்டிகள் வரிசையாக இருந்தன. 10 மணிக்கு திநகர் போக, 9 மணி போல சென்ட்ரல் போய் விட்டால் போதும். 5.35க்குக் கிளம்பி 8 மணிக்கு சென்னை போகும் ஒரு விரைவு வண்டி இருந்தது. அதை விட்டால் 5.50க்கு வருவது சதாப்தி, அதில் போக முடியாது. அதற்குப் பிறகு 6.40க்கு புறப்பட்டு 9.20க்குப் போயச் சேரும் விரைவு வண்டி, 7.05க்குப் புறப்பட்டு 9.30க்குப் போகும் ஷாலிமார் விரைவு வண்டி, 7.30க்குப் புறப்பட்டு 9.50க்குப் போய்ச் சேரும் இன்னொரு விரைவு வண்டி.

5.35 வண்டியைப் பிடித்து விட்டால் பதட்டமில்லாமல் நேரத்துக்குப் போய்ச் சேரலாம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை slwarcrimes என்று டுவிட்டர் பரப்புரைக்குத் திட்டமிட்டு அழைத்திருந்தார்கள் டிபிசிடி முதலானோர். அதில் சேர்ந்து கொள்வதாக திட்டம். மாலையில் ரயில்களைப் பார்த்து 3.40 லால்பாக் விரைவு வண்டியில் முன்பதிவும் செய்து விட்டேன். ஆறு மணிக்கு முன்பு காட்பாடி வந்து சேர்ந்து விடலாம்.

அடுத்தது தவற விட்ட அழைப்பு. காங்கிரசைத் தோற்கடிக்க குளச்சல் தொகுதியில் பணியாற்றிய நீண்ட காலத்திட்டமிடல் பற்றி பேசினார். 'நாம் இப்படி தேர்தலுக்கு மட்டும் செயல்படாமல், நீண்ட கால நோக்கில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பஞ்சாயத்துக்கு இரண்டு பேர் என்று அடையாளம் காண்போம். 2 பேர் இணையத்தில் செயல்படுபவர்களாக இருந்தால், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழ் தேசிய உணர்வு பற்றி மக்களுடன் பேசும் படியாகக் கேட்டுக் கொள்வோம். ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் குறிப்படும்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.'

மிகவும் சிறப்பான தொலைநோக்குப் பார்வையுடனான சிந்தனை. 'இப்போதைய தலையாய பிரச்சனை ஈழத் தமிழர்களின் வாழ்க்கை. இது போன்று நீண்ட கால நோக்கில் செயல்படும் போது இன்னும் தெளிவாக இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பன்னாட்டு அமைப்புகள் மூலமும் தமிழ் அமைப்புகள் போராட்டங்களின் வழியாகவும் அரசியல் தீர்வு ஏற்பட்டு விட்ட பிறகும் பணி முடிந்து விடாது. அந்த நோக்கில் குறிக்கோள்களை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.'

'அதை நீங்களே செய்து விடுங்கள். எழுதி அனுப்புங்கள்' என்று சொன்னார். கிட்டத்தட்ட திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால. இன்று நீர்த்துப் போய் விட்ட கொள்கைகளாக இருக்க வேண்டும்.

காலத்தால், சூழ்நிலை மாற்றங்களால் நீர்த்துப் போகாத படி அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய கம்யூனிச அமைப்புகளில் அத்தகைய தனிநபர் சாராத, கொள்கைகளை காலத்துக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளும் கட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்டு கட்சியிலும், இந்திய வலது/இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலும் இருக்கும் விவாத அமைப்புகளும், முடிவு எடுக்கும் முறைகளும் பலனுள்ளவை.

1. தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கை நலன் இவற்றைப் பாதுகாக்கும் அரசியல் சூழ்நிலையை பராமரிக்க வேண்டும். பாதகமான செயல்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டும்.

2. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக உலக அரங்கில் குரல் கொடுக்க வேண்டும்.

3. இந்திய துணைக்கண்டத்தின் மற்ற தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

4. சமதர்ம, சமத்துவ, நியாயமான சமூக அமைப்பு உருவாக்கப் பாடுபட வேண்டும்.

இப்படி எல்லாம் வகுத்துக் கொள்ளலாம்.

கூகுள் பஸ்சில் சாக்ரடிஸ் கலைமணி என்பவர் 'உங்கள் ரசிகன் நான், உங்கள் பஸ்களை படிப்பதுதான் என் வேலை' என்று தமிங்கிலீசில் கருத்து இட்டிருந்தார்.  'அவரும் எழுதினால் நன்றாக இருக்கும்' என்று பதில் போட்டேன்.

சென்னைக்குப் போவதாக நாட்குறிப்பில் எழுதி பதிந்திருந்ததைப் பார்த்து நள்ளிரவில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். போன தடவை சென்னை பயணத்தைப் பற்றிப் படித்து விட்டு 'அடுத்த தடவை வரும் போது தவறாமல் சொல்லுங்கள், சந்திக்கலாம்' என்று தொலைபேசியிருந்தார்.

அவர் இருப்பது குரோம்பேட்டையில். இன்று அந்தப் பக்கம் போகும் திட்டம் இல்லைதான். முடிந்தால் அவர் திநகர் அல்லது சென்ட்ரல் வந்து சந்திக்கலாம். இல்லை என்றால் ஞாயிற்றுக் கிழமை தாம்பரம் போகும் போது சந்திப்பதாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

புதன் கிழமை சிதம்பரம் புறப்படும் முன்பு

  • இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். 
  • இலங்கை அரசுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். 
  • இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பன்னாட்டு கட்டுப்பாடு ஏற்படுத்தி மக்களிடையே கருத்துக் கணிப்பு மூலம் புதிய அரசை உருவாக்க வேண்டும் என்று
    உள்துறை அமைச்சருக்கு தமிழிலும், பிரதமமந்திரிக்கு ஆங்கிலத்திலும் எழுதியிருந்தேன். 
அந்த விபரங்களை வலைப்பதிவிலும் பதிந்திருந்தேன். அதைப் பொதுவில் அனைவரும் அனுப்பும்படி செய்யலாமே என்று ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். முடிந்தால் petition ஏற்படுத்தும் தளங்களில் இதற்கான ஒரு விண்ணப்பத்தை உருவாக்க வேண்டும்.

காலை உணவு தூக்கத்தில் தவறிப் போனது. 9 மணியிலிருந்து 12 மணி வரை எழுதிக் கொண்டிருந்து விட்டு சமையல். சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு வேக வைத்து, திருமண வரவேற்பில் பையில் கிடைத்த தேங்காயை உடைத்து பருப்பில் அரைத்துச் சேர்த்துக்  கொண்டேன்.

நாகர்கோவிலில் எல்லா தயாரிப்புகளிலும் தேங்காய் சேருவது பழக்கம். சாம்பாரில் கூட தேங்காய் போட்ட ஒரு வகையான குழம்பு உண்டு. உப்புமாவில் தேங்காய், புட்டு என்பது தேங்காயின் நடுவில் அரிசி மாவு, கஞ்சி வைத்தால் தேங்காய், தேங்காய் சேர்க்காமல் சாம்பார் வைத்தால் தொட்டுக் கொள்ள தேங்காய் துவையல், தீயல் எனப்படும் தேங்காயை வறுத்துச் செய்யப்படும் வத்தககுழம்பு, புளிக்கறி எனப்படும் தேங்காய் குழம்பு, அவியல், அரிசிக் கொழுக்கட்டை என்று எங்கு பார்த்தாலும் தேங்காய் மயம்தான்.

மாலை உணவுக்கு வறுத்து டப்பாவில் அடைத்திருந்த அரிசு மாவுடன் சிறிதளவு ரவை சேர்த்து கலக்கி, தேங்காய் சேர்த்து வைத்து தோசை. நிறைய சாப்பிட்டால் திகட்டும் சுவை. ஆனால் பழகிய சுவை.

மாலையில் வெளியில் போய் சாமான்கள் வாங்கி வரலாம் என்று பார்த்தால் வழியிலேயே மழை ஆரம்பித்து விட்டது. கடையில் ஆனந்த விகடனும் டெக்கான் குரோனிக்கிளும் வாங்கி விட்டு வந்தேன்.

விகடனில் கவிஞர் தாமரையின் நானும் விகடனும். கிட்டத்தட்ட அக்கா வயது இருக்கும்.
என்ன ஒரு உணர்ச்சி பூர்வமான புத்திசாலியானவர்! அவரது திரை பாடல்கள் வரிகளில் முதலில் சந்தித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பேசிய உரை யூடியூபில் பார்த்தது. இப்போது இந்தக் கட்டுரையில் தனது பின்னணிகளை சொல்கிறார். தமிழ் கதை படிக்கும் அம்மா, எஞ்சினியரிங் படிப்பு, விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி!.

தமிழ்நதியின் படைப்பு ஒன்று, முத்துலிங்கத்தின் சிறுகதை ஒன்று. ஈழப் போர் தொடர்பான படைப்புகளைப் படிப்பதற்கு மனத்துணிவு போய் பல காலம் ஆகி விட்டிருக்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பு பரப்புரையின் போதுதான் புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இனிமேல் படிக்கவும் ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு நாட்கள்தான் பலவீனமான மனதோடு இருக்க முடியும். பல்லைக் கடித்துக் கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

போடியில் பன்னீர் செல்வம் தோற்று விடுவதாக வந்த செய்தியை ஜெயலலிதா அவரிடம் விசாரித்ததாகவும், விராலி மலையில் நிறுத்திய வேட்பாளர் நன்கு போட்டி போட்டதாக ஜெயலலிதா மகிழ்ந்ததாகவும் விகடனில் செய்திகள்.

ஆம்பூர் தொகுதியில் மனிதநேயமக்கள் கட்சியின் வேட்பாளருக்குத்தான் முஸ்லீம்கள் ஓட்டு போட்டதாக ஆம்பூர் போயிருந்தபோது கேள்விப்பட்டேன். ராணிப்பேட்டையில் இப்போதைய உறுப்பினர் காந்திக்கு எதிராக இன்னொரு தோல் நிறுவன முதலாளி அதிமுக சார்பாக போட்டியிட்டிருக்கிறார். அவர் ஒரு முஸ்லீம். ராணிப்பேட்டை தொகுதியின் மேல்விஷாரம் முஸ்லீம்களும் அவருக்கு வாக்களித்ததாக தகவல் வந்தது. காந்தி வெற்றி பெறக் கூடியவர் என்றுதான் பொதுக் கருத்து இருந்தது.

இந்த விபரங்களை வைத்துப் பார்க்கும் போது இரண்டு இடங்களிலும் திமுக கூட்டணிக்குப் பின்னடைவுதான்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் கே பி கந்தன் போட்டியிட்டாராம். அவர் பெருங்குடியைச் சேர்ந்தவர். எதிர்த்து நின்ற விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் வெளியூர்க்காரராம். 'கேபி கந்தனுக்கு நல்ல நேரம், தட்டில் வைத்து வெற்றி கிடைக்கப் போகிறது' என்றார்கள்.

'திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது' என்ற கோபம் பலரிடம் தெரிந்தது. ஆனால், 'தங்கள் வாக்குகளைப் பெறும் அளவுக்கு அதிமுக கூட்டணியினர் இல்லை' என்ற சங்கடமும் கூடவே தெரிகிறது. 'வேறு வழியில்லாமல் அவனுங்களுக்குப் போட்டோம்.'

நேர்மையான அரசியல் செய்ய விரும்பும் கட்சியினர் தொடர்ந்து பணி செய்து உறுதியான கட்சி அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால் வாய்ப்புகள் நிறைய இருக்கும்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டில் மூன்று செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து டெக்கான் குரோனிக்கிளில் தலைப்புச் செய்தி. தொலைதொடர்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதி  சார்பில் ஜெயலலிதா மீது மானநஷ்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.