என்னைப் பற்றி

புதன், நவம்பர் 30, 2011

பொருள்தான் அடிப்படை


காலை 4.49

நேற்று மாலை சீக்கிரமாகவே தூங்கி விட்டேன். 7.30க்கு தியானம். 8 மணிக்குள் தூங்கி விட்டதால் காலையில் 2 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. மீண்டும் புரண்டு படுத்து தூங்கி எழுந்திருக்கும் போது நேரம் 4.30.

நேற்று காலையில் நாட்குறிப்பு எழுதிய பிறகு இணையம். மின்னஞ்சல்கள், பதிவுகள், செய்திகள், கூகுள் பஸ் விவாதங்கள்,  கட்டுரைகளுக்கான பின்னூட்டங்கள் என்று ஒரு மணி நேரம் ஆனது. 8.30க்கு உலாவப் போய் விட்டு காலை உணவும் சாப்பிட்டு விட்டு வரலாம் என்று திட்டம்.

அழகர் விடுதிக்குப் போகும் முன்பு நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள். 50 காசுக்கு ஹால்ஸ் மிட்டாய் தருகிறார். 1.50 என்று விலை மாற்றியதால் இதுதான் தொல்லை. பேசாமல் 2 ரூபாய் என்று சொல்லியிருக்கலாம். மாதச்சந்தா கொடுப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். 4 இட்லி+1 தோசை+ 1 காபி. வடை வேண்டாம், பூரியும் வேண்டாம். காலையிலேயே நிறைய பேர் வருகிறார்கள். ஆபிசர்ஸ் லைனிலும் அழகர் என்று ஒரு உணவு விடுதி இருக்கிறது. இந்த ஊரில் பல தொழில் நிறுவனங்கள் ஏதோ பெருந்தலைக்குச் சொந்தமாகவே இருக்கின்றன என்று தோன்றியது.

சாப்பிட்ட பிறகு திரும்பி நடந்து கொண்டிருக்கும் போது  தொலைபேசி. காசோலையை சென்னையிலிருந்து ராணிப்பேட்டைக்கு அனுப்பி விட்டார்களாம். திருப்பி அனுப்பி விடவா என்று கேட்டார். அனுப்பி விடச் சொல்லி, சென்னைக்குப் போய் வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். உடனேயே மீண்டும் தொலைபேசி, நேரில் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டேன். அவரது காசோலையை நேரில் தந்து விடுவதாகச் சொன்னேன். வீட்டுக்கு வந்து குளித்து விட்டுப் புறப்பட வேண்டும். 9.15க்கு இன்னும் 1 மணி நேரத்தில் புறப்படுவேன் என்று சொல்லியிருந்தேன்

வீட்டுக்கு வந்து குளித்து விட்டு உடை மாட்டி 20 நிமிடம் தியானம். அதன் பிறகு கறுப்பு பேன்ட் போட்டுக் கொண்டு பையில் டாடா புத்தகம், தண்ணீர், ஆவணங்கள் வைக்கும் கோப்பு, குடை எடுத்துக் கொண்டேன். மழை இல்லை. ஆனால் மழை பெய்து தெருவெல்லாம் நாஸ்தியாகியிருந்தது. காட்பாடி ரோடுக்கு வந்து ராணிப்பேட்டையிலிருந்து வரும் 10ம் தட பேருந்தில் ஏறிக் கொண்டேன். சில்க்மில்லிலிருந்து 3 ரூபாய் இங்கிருந்து 4 ரூபாய் என்று நடத்துனர் விளக்கினார். ராஜா தியேட்டர் வரை, அதைத் தாண்டியும் 4 ரூபாய்தான் வாங்குகிறார்கள். என்ன கணக்கு என்று புரியவில்லை. சில்க்மில் வரை ஒரு பாய்ண்ட் என்று வைத்திருக்கலாம். முன்பு புதிய பேருந்து நிலையத்துக்கு 2 ரூபாய், பழைய பேருந்து நிலையத்துக்கு 3 ரூபாய் என்று வாங்கினார்கள். இப்போது இரண்டுக்குமே 4 ரூபாய்தான்.

பேருந்து நிலையத்துக்கு உள்ளே போகாமல், நெடுஞ்சாலை பாலத்துக்கு பக்கவாட்டில் போக்குவரத்து காவலர் நிற்கும் இடத்துக்கு வந்தேன். அப்போதுதான் வந்த ஒரு பேருந்துக்கு கை காட்டி ஓடிப் போய் ஏறினேன். வாலாஜாவுக்கு 18 ரூபாய் கட்டணம். 20 ரூபாய் நோட்டு கொடுத்தால் அவர்தான் 2 ரூபாய் சில்லறை தர வேண்டும். டாடா புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கலானேன். மேல்விஷாரம் தாண்டும் போது மூடி வைத்து விட்டு இறங்கத் தயாரானேன். வழியில் எங்கும் இறங்குவதற்கு வேகம் குறையாமல் வாலாஜா பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டேன். சென்னை போகும் பேருந்துதான் இது. எதிரில் வந்தால் நகரப் பேருந்தில் ஏறலாம். திமிரி போகும் பேருந்தில் ஏறி வி சி மோட்டூரில் இறங்கிக் கொண்டேன். இதற்கு 3 ரூபாய்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சும்மா காசோலை வாங்கத்தான் போகிறோம், இதற்காக ஆட்டோவில் போய் 60 ரூபாய் செலவழிக்க முடியுமா? தொலைபேசி சொன்னேன். டேவிட் ஷூ அருகில் வருகிறேன் என்று சொல்லி விட்டுப் பார்த்தால் வெளியில் வந்திருந்தார். காசோலையைக் கொடுத்து விட்டு, இன்னும் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டேன்.மற்றவர்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்த நம்மால் முடியாது. நமது கடன் என்று சொல்லப்படுவதைக் கொடுப்பது மட்டும் செய்யலாம்.

அதைத் தொடர்ந்து தாய்த்தமிழ் பள்ளி பற்றி பேசினோம். அடுத்த வாரம் போகத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னேன். ஆனால், மதியத்துக்கு மேல்  தொலைபேசி கூடங்குளம் திட்டம் ரத்தாகி விடலாம் என்று சொன்னார். பாதி எதிர்பார்த்துதான். 4ம் தேதி கூடங்குளம் போக வேண்டாம் என்றால், 3ஆம் தேதி கல்லூரி வேலை முடிந்ததும், அறைக்கு வந்து பையை எடுத்துக் கொண்டு, கோயம்பேடு போய் வேலூர் வந்து விட வேண்டும். 4ஆம் தேதி வாடகை கொடுப்பது, சம்பளம் கொடுப்பது போன்ற கடமைகளை முடித்து விட்டு அன்று மாலை திருச்சி போகும் பேருந்தை பிடிக்கலாம்.

அங்கிருந்து மதுரை போய் திருமணத்தில் 5ஆம் தேதி கலந்து கொண்டு,   கொடுத்து விட்டு, அங்கிருந்தே ராமநாதபுரம் வந்து கோட்டைபட்டினம் 6ம் தேதி வர வேண்டும். அன்று மதியம் வேதாரண்யம் வந்து பேசி விட்டு இரவு பேருந்து பிடித்து வேலூர் வந்து விட வேண்டும். தொடர்ந்து 7ம் தேதி வகுப்புக்கு சென்னை போகலாம்.

அப்படியே நடந்து போனேன். வாசலில் பார்க்க வேண்டும் என்று சொல்லி என் பெயரையும் சொல்ல வேண்டியிருந்தது. iso 14001-2004 certified company என்று வெளியில் பொறித்திருந்தார்கள். உள்ளே வேலை செய்பவர்கள் எல்லாம் நேர்த்தியான சீருடையில் தெரிந்தார்கள்.

சீருடையில் உட்கார்ந்திருந்தார். அவரது அறையில் போய் உட்கார்ந்தேன். தேநீருக்குச் சொல்ல முயற்சித்தார். அறையில் இருந்தார். எட்டிப் பார்க்க முயற்சி செய்தேன். திரும்பி வந்து காசோலையை வாங்கிக் கொண்டேன். அவர்கள் சொன்னது போலவே பணம் கொடுத்திருந்தார்கள். கடுப்பானது. போகும் போதே 'அப்படி குறைத்துக் கொடுத்திருந்தால் அவர்கள் இன்னும் பெரிய நிறுவனமாக வளர்வதற்கான அறிகுறி, சரியான தொகையைக் கொடுத்திருந்தால் சீக்கிரத்தில் ஊத்தி மூடி விடுவார்கள்' என்று நினைத்திருந்தேன். முன்னதுதான் சரியாகிப் போனது, இன்னும் பெரிதாக வளர்வார்கள்.

அறைக்குள் போய் வணக்கம் சொன்னால், சிறுத்துப் போன முகத்துடன் எல்லாம் நல்லா இருக்கிறதா என்று பேசி முகத்தை வேறு வேலைக்குத் திருப்பிக் கொண்டார். பேச மனம் வரவில்லை. அவ்வளவு பயம், காசு கேட்டு விடுவோமோ என்று. வெளியில் வந்தேன்.

அறைக்குள் உட்கார்ந்து அவரிடம் கருத்துக்களைச் சொன்னேன். தமது வசதிக்கேற்றபடி காரணங்களைச் சொல்லி தமக்கு ஆதாயம் தரும் வழியில் நடப்பதுதான் வெற்றிக்கு ஒரே வழி என்று சொல்ல முயற்சித்தேன். அவருக்கு எவ்வளவு புரிந்ததோ தெரியவில்லை, மீண்டும் விளக்கம் சொல்ல முயற்சித்தார்.

இப்படி நம்மிடமும் நம்மைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களிடமும் அடிக்கும் பணத்தைத்தான் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். நான் புத்திசாலியாக இருந்தால், என்னிடம் வேலை பார்ப்பவர்களை சுரண்ட கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

காசோலையை பையில் வைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். எப்படிப் போவீர்கள் என்று கேட்க நல்ல காலநிலைதான் நடந்தே போய் விடுகிறேன் என்று புறப்பட்டேன். சொல்லி வைத்தது போல மழை ஆரம்பித்தது. குடையை விரித்துக் கொண்டேன். அதற்கும் வேலை கொடுக்க வேண்டுமல்லவா.

பாதி வழியில் வண்டியில் வந்து ஏற்றிக் கொண்டார். அவரையும் இன்றைக்கு நேர்முகத்துக்கு வரச் சொல்லியிருந்திருக்கிறார்கள். அவர் காத்திருந்தார். வேறு வேலையில் பிஸியாக இருந்ததால் இவரை சந்திக்க முடியவில்லை. காத்திருந்து விட்டுப் புறப்படுகிறார்.

அவர்கள்தான் சரியாக செயல்படுகிறார்கள். நாம் தர்மம், நியாயம், என்றெல்லாம் போனால் எந்த விளைவும் இருக்காது.

வி சி மோட்டூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். எந்த திசையில் பேருந்து வருகிறதோ அந்த திசையில் போவதாக முடிவு. முத்துக் கடை போனால் பிரியாணி சாப்பிடலாம், வாலாஜா போனால் ஆரிய பவனில் சாப்பிடலாம். முத்துக் கடை திசையில் நின்று கொண்டேன். முதலில் வந்தது வாலாஜா போகும் வண்டிதான். முன் பக்கமாக ஏறினால் நிறைய கூட்டம். ஏதோ பள்ளி அல்லது கல்லூரி மாணவியர் நிறைந்திருந்தார்கள். நடத்துனர் பின் பக்கம் நின்றிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பின்னால் ஏறி சீட்டு வாங்கலாம் என்று நினைத்திருந்தார் அவரே முன்பக்கம் வந்தார். 3 ரூபாய் சீட்டு.

பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே இறங்கி ஆரிய பவன் போனேன். இருட்டாக இருந்தது. கரண்ட் இல்லை என்று காரணம் சொன்னார்கள். தயிர் சாதம் இல்லை, தக்காளி சாதம் கொடுத்தார்கள். கூடவே ஒரு பொரியலும், வடை கறியும். இந்த வடைகறியை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எப்போது செய்த வடையை எப்போது உடைத்து செய்ததோ என்று. இது பரவாயில்லாமல் இருந்தது, கொண்டைக் கடலை எல்லாம் தென்பட்டது. 20 ரூபாய் விலை.

சாப்பிட்டு விட்டு பேருந்து நிறுத்தம் வந்தால், சென்னையிலிருந்து வந்த பேருந்தே கிடைத்தது. கடைசி இருக்கையில் மீதியிருந்து ஒரு இருக்கையில் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் படிக்க முடிந்தது. பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி நகரப் பேருந்து. தனியார் பேருந்துதான். அதிலும் கல்லூரி மாணவியர் கூட்டம். ஆக்சிலியம் கல்லூரியில் இறங்குபவர்கள். ஆக்சிலியம் வந்ததும் பேருந்தே காலியாகி விட்டது. சில்க் மில் அருகில் உட்காரவும் இடம் கிடைத்தது. நல்ல பாடல்கள்  போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்கு வந்து பார்த்தால் 1.30 ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பத்ரி, பாஜகவின் வானதி, திமுகவின் ஒரு பிரமுகர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அரசியலில் தனிமனிதர் துதியைப் பற்றிப் பேச வேண்டும். கலைஞர் துதி பாடப்படுவதை இவர்கள் குறிப்பிட்டால், பீஷ்மர், இரும்பு மனிதர் என்று வாஜ்பாயி, அத்வானி சொல்லப்படுவதைத் திருப்பிச் சொன்னார் திமுக காரர். 'அப்படி தனி நபரை தூக்கிப் பிடிப்பது தவறு' என்று பத்ரி சொல்ல முயற்சித்தார். கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து யாராவது கலந்து கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் வெளிச்சமாயிருக்கும். மார்க்ஸ், லெனின், மாவோ என்று துதி பாடுகிறீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

கருப்பு பணம் பதிவில் அதியமானுடன் விவாதம். சொல்லும் பதில்களுக்கு பொருத்தமான விடை தர முடியாமல், என்னைப் பற்றி அவருக்குத் தெரிந்த தனிப்பட்ட விபரங்களைச் சொல்லி பேச ஆரம்பித்தார். அதில் நானும் இறங்கிப் போய் விட்டேன். தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சொல்ல வந்த பொருளை ஒட்டியே பேசியதாகத் தோன்றியது. ஊழல் பற்றியோ, சீனா பற்றியோ, நாடுகளின் வளர்ச்சி பற்றியோ அவர் சொன்ன கருத்துக்கு சொன்ன பதில்களை புறக்கணித்துக் கொண்டே போய் விட்டார். மூடிய மனதுடன் விவாதம் புரிபவரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாதுதான்.

இதை முடிக்கும் போது 5.50 ஆகியிருக்கும். உடனேயே getmewell ஆவணம் எழுத வேண்டும். 7 மணிக்குள் அதை முடித்து விட்டு மின்னஞ்சலில் அனுப்பி விட வேண்டும். 7 மணிக்கு fசொன்ன தேவைகளை அலசி குறிப்புகள் எழுதிக் கொள்ள வேண்டும். அது 7.45 வரை. 8 மணிக்கு சீன மொழி கற்றுக் கொள்வதற்கான உரையாடல். ஸ்கைப்பில் இணைந்து பேச வேண்டும். அது 8.30 - 9.00 வரை போகலாம். அதன் பிறகு முகம் மழித்து, குளித்து தயாராக வேண்டும். 20 நிமிடங்கள்  தியானம். 10 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும்.

11.30க்கு ஆம்பூர். 1 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டால், மதியம் அங்கு சாப்பிட்டு விட்டு 3.30 அல்லது 4 மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம். மின்சாரம் இருந்தால் துணி தேய்க்க வேண்டும். இல்லை என்றால் எழுத வேண்டும். 4 மணி முதல் 6 மணி வரை இந்த பணிகளை முடித்து விட்டு பெட்டி கட்டி புறப்பட்டு விட வேண்டும்.  7 மணிக்கு சென்னை பேருந்து பிடித்தால் 9.30க்குள் பூந்தமல்லி, 10 மணிக்கு வளசரவாக்கம், தியானம் செய்து விட்டு படுத்து தூங்கி விட வேண்டும்.

நாளைக்குக் காலையில் எழுந்து கல்லூரிக்குப் போக வேண்டும். மதியம் 3.30க்குப் புறப்பட்டு வீடு திரும்ப வேண்டும்

வெள்ளிக் கிழமை, வங்கிக்குப் போய் பிரைம் காசோலை போட்டு விட்டு,  கூரியர் அனுப்பி விட வேண்டும்.  சனிக்கிழமை கல்லூரிக்குப் போய் விட்டு வந்து வேலூர் திரும்ப வேண்டும். ஞாயிற்றுக் கிழமை காலையில் வாடகை வகையறா கொடுத்து விட்டு அடுத்த திட்டம் இடலாம்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாம் இடையில் புகுந்து ஆலோசனைகளோ கூடுதல் தகவல்களோ சொல்ல வேண்டாம். அவர்களுக்குப் புரிந்தபடி பேசி, விபரம் சேகரித்து வரட்டும். அவர்களுக்கு எப்படிப் படுகிறது என்று பார்க்கலாம்.

கல்லூரியில் கற்றுக் கொடுப்பதும் மாதா மாதம் தொடரும் என்று உறுதி கிடையாது. டிசம்பர், ஜனவரிக்கு உறுதி இருக்கிறது. அதன் பிறகு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

வேலூரில் வாடகை 3,500+வீடு 1,000+தண்ணீர் எடுக்க 100+கேபிள் 100+தொலைபேசி 1,000=5,700 செலவாகிறது.
சென்னையில் வாடகை 2,000+1,000+200=3,200 செலவாகிறது. கூடவே மின்கட்டணம்.

9,000 ரூபாய் வரை மாதா மாதம் செலவு. இதை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியும்? வாடகைக்கு 5,500 ஆவதை 3,000 என்று குறைக்க வேண்டும். இணையத்துக்கு 1,000 செலவாவதை குறைப்பது தேவையில்லை. தண்ணீர் எடுக்க, வீடு ஆகும் செலவுகளை நிறுத்த வேண்டும், மொத்தம் 5,000 என்று அமைத்துக் கொள்ள வேண்டும்.  இதற்கு மேல் சாப்பாடு, பயணம் என்று செலவுகள்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

சென்னை, திருப்பதி, ரமணிசந்திரன்


நவம்பர் 29, 2011. மாதம் முடியப்  போகிறது, இன்னும் 1 நாள்தான் இருக்கிறது.

நேற்று காலையில் நாட்குறிப்பு எழுதி முடித்ததுமே புறப்பட்டு விட முடிவு செய்தேன். தாமதமாகி விட்டால் ஆற்காடு சாலையைக் கடந்து வடபழனி போவதோ, வடபழனியிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் போவதோ, பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து பிடிப்பதோ மூன்றுமே சிக்கலாகி விடக் கூடிய சூழல். மழை பெய்து சாலைகள் உடைந்து, தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பெருமளவு தடை ஏற்பட்டிருக்கிறது. பையில் வைத்திருந்த துணிகளை பையோடு பெட்டிக்குள் வைத்து எடுத்துக் கொண்டு, தோளில் மடிக்கணினி பை. வெளியில் வந்தால் மழை வெறித்திருந்தது. தண்ணீர் தேக்கம் வடிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

ஆற்காடு சாலைக்கு வந்து தேநீர் கடையில் டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ், தேநீர் ஒன்று. தேநீருக்கு 5 ரூபாய்தான் இங்கு. வரிசையாக பேருந்துகள் போய்க் கொண்டிருந்தன. பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் இன்னொரு பேருந்து வந்தது. 17M, ஜெமினி வரை போகும் என்று நடத்துனர் எச்சரித்துக் கொண்டிருந்தார். ஏன் ஜெமினி வரை போகிறார்கள்? ஜெமினி போய்ச் சேரும் போது 6.30 ஆகலாம். அங்கிருந்து புறப்பட்டு அய்யப்பன்தாங்கல் வருவதற்கு 7.30 மணி ஆகலாம். 8 மணிக்கு அய்யப்பன்தாங்கலிலிருந்து பிராட்வே திசையில் போனால், அந்த நேரத்தின் நெரிசலுக்கு உதவியாக இருக்கும் என்று இந்த வெட்டு சேவை என்று நானே காரணம் கற்பித்துக் கொண்டேன்.

காலையில் 6 மணிக்கு முன்பு வருவதால் பேருந்தில் உட்கார இருக்கை கிடைத்து போக முடிந்தது. பேருந்து சாலை பள்ளங்களில் விழுந்து எழுந்து குலுங்கி சித்திரவதை பட்டுக் கொண்டிருந்தது. இந்த வழியாக  போகும் ஒவ்வொரு பேருந்தும் பலத்த சேதத்துக்கு உள்ளாகும் என்றே தோன்றுகிறது. வடபழனி சாலை நிறுத்தம் தாண்டி கோயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். திரும்பவும் சாலையைக் கடந்து கோயம்பேடு திசையில் போகும் பேருந்தை பிடிக்க வேண்டும். ஜவகர்லால் நேரு சாலை தாண்டி வந்தால், சாலை நிறுத்தத்தில் நின்றிருந்து செங்குன்றம் பேருந்தில் ஏறிக் கொண்டேன். அதிலும் உட்கார இடம் கிடைத்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் கொண்டு விட்டு விடுவார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சற்று முன்னர் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பாதி சாலை மூடப்பட்டிருந்தது. கிண்டி அருகில் ஏற்கனவே அப்படி செய்யப்பட்டிருக்கிறது. வெளியூர் பேருந்துகள் வழக்கமாக வெளியில் போகும் வாசலுக்கு மாற்றாக பேருந்து நிலையத்தின் முன் வாசல் வழியாக வெளியில் விடுவது பல நாட்களாக நடந்து வருகிறது. அதனால் பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கு முடிந்தால் புறப்பட்டு வெளியில் வந்து விட்ட பேருந்தில் ஏறிக் கொள்ளலாம். உள்ளே நிற்கும் இடத்தில் போய் ஏறினால் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வெளியில் வருவதற்கு வீணாகி விடும். பேருந்து நிலையத்துக்குள் இறங்கி, குறுக்காக கடந்து பேருந்துகள் வெளியில் வந்து கொண்டிருந்த பாதைக்கு வந்தேன். திருச்சி, கும்பகோணம், என்று தெற்கே போகும் பேருந்துகள் வரிசையாக நின்றிருந்தன. நுழைவாயிலுக்கு அப்பால் திருப்பத்தூர் போகும் தரும்புரி பேருந்து வந்தது. கையை காட்டி ஏறிக் கொண்டேன்.

உட்கார இருக்கை தேர்ந்தெடுக்கும் போது நடுப்பகுதியில் இருவர் உட்காரும் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் புன்னகைத்து உட்கார அழைத்தார். 'நீங்க வருவதை பார்த்தேன், கையை உயர்த்தி நிறுத்தியதும் நான்தான் ஓட்டுனரிடம் சொல்லி நிறுத்தச் சொன்னேன், நீங்க ஏறி சுற்றிப் பார்த்ததும், உட்கார அனுமதி கேட்டதும், உட்காரச் சொன்னேன்' என்று 2 மணி நேரம் பேசிய பிறகு அவர் தெரிவித்தார். நாம் இரண்டு கண்களால் உலகைப் பார்க்க, உலகம் பல ஆயிரம் கண்களால் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்தும் நிகழ்வு பல ஆண்டுகளுக்குப் பிறகு.

'சும்மா உட்கார்ந்து கொண்டு போரடித்து போகும்னு நினைச்சேன்' என்று பேச ஆரம்பித்தார். அவர் பெயர் தமிழ் அரசு என்று சொன்னார்.

அவர் பல்லாவரத்தில் ஒரு கெமிக்கல் நிறுவன முதலாளிக்கு கார் ஓட்டும் வேலை செய்கிறார். திருநீர்மலை சாலையில் தொழிற்சாலை, உரிமையாளரின் வீடு கிழக்கு தாம்பரம் தாண்டி. இவரது வீடு மாதவரத்தில். தினமும் காலையில் மாதவரத்திலிருந்து பேருந்து பிடித்து பல்லாவரம் வந்து, தொழிற்சாலையில் விட்டிருக்கும் காரை எடுத்துக் கொண்டு உரிமையாளர் வீட்டுக்குப் போக வேண்டும். அவர் 9 மணிக்குப் புறப்படுவதற்கு சரியாக போய்ச் சேர வேண்டும். உணவு இடைவேளையின் போதும் விட்டு வர வேண்டும். இடையில் வெளியில் போவதற்காக கார் ஓட்ட வேண்டும். மாலையில் அவரை வீட்டில் விட்டு விட்டு, காரை தொழிற்சாலையில் விட்டு விட்டு வீட்டுக்குப் போகலாம். இரவு 10 மணி ஆகி விடும்.

நிறுவனத்தில் 4 கார்கள் இருக்கின்றன. மற்ற கார்களை மற்ற மேலாளர்களின் பயன்பாட்டில் இருக்கின்றன.

சனிக்கிழமை அரை நாள் வேலை, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. பகல் பொழுதில் தொழிற்சாலைக்குள் வேலை செய்பவர்களுடன், கான்டீன் ஊழியர்களுடன் பேசி பொழுது கழிப்பார். மாதம் 10,000 ரூபாய் சம்பளம். அதுவே செலவுகளுக்கு சரியாகப் போய் விடுகிறது.

சொந்த ஊர் குடியாத்தம். இவருக்கு திருமணம் ஆகி 1 மாத குழந்தை இருக்கிறது. அப்பா அம்மாவுடன்தான் இருக்கிறார்கள், வாடகை வீடுதான். ஒரு தம்பி சென்னையில் இருக்கிறான், 8ம் வகுப்பு படிக்கிறான். இன்னொரு தம்பி யும், நர்சிங் படிக்கும் தங்கையும் குடியாத்தத்தில் ஆயாவுடன் இருக்கிறார்கள். இப்போது அங்குதான் போய்க் கொண்டிருக்கிறார். ஏதோ சொந்தக்காரர் வட்டத்தில் விசேஷமாம். 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு போகிறார்.

அப்பா லாரி ஓட்டுனராக இருந்தார், அதன் பிறகு அந்த வேலை பளு தாங்க முடியாமல், டிராவல்ஸ் பேருந்து ஓட்டும் பணி செய்தார். அதில் ஒரு நாள் போய் விட்டு 2 நாட்களில் திரும்பி வந்து விடலாம், லாரி ஓட்டினால் 15 நாள், 20 நாள் வரை ஆகி விடும். அப்பா வழியில் இவரும் கார் ஓட்டுனர் ஆகியிருக்கிறார்.

7ம் வகுப்பு வரை படித்து நிறுத்தி விட்டாராம். அப்பா புளியங் குச்சியை ஒடித்து விளாசி விடுவாராம். ஆனால் படிக்க ஆர்வமில்லை. படிப்பை நிறுத்தி விட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தாராம். மூட்டை தூக்குவதை, லாரி ஏற்ற இறக்கம் செய்வது என்று ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் பெங்களூருக்குப் போய் வேலைகள் செய்திருக்கிறார். ஆட்டோ ஓட்டியிருக்கிறார். அதில் ஒரு விபத்து நடந்து காலில் பலத்த அடி, மிகப்பெரிய தளும்பு இருக்கிறது. ஒரு பள்ளத்தில் சக்கரம் இறங்கி தலைகீழாக கவிழ்ந்து விட்டது. வண்டி உரிமையாளரும் கூட இருந்தவர்களும் உதவி செய்து காப்பாற்றினார்கள்.

'செய்யும் தொழில்தான் தெய்வம் எனக்கு. கோயிலுக்குப் போவேன் சாமியார்கள் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாது. காஞ்சிபுரத்தில் இருக்கிறானே, மக்களை ஏமாத்திதான் பணம் சம்பாதிக்கிறான். குழந்தை இல்லையா, நான் தருகிறேன் பரிகாரம் என்று 1,500 ரூபாய் வாங்குகிறான் ஒரு சாமியார். இப்படி லட்ச லட்சமாக சம்பாதிக்கிறான். எல்லாம் பகவான் செயல் என்று சொல்கிறான்'

சமஸ்கிருத வாக்கியங்களை கிண்டலாக சொல்கிறார்.

விஜயகாந்துக்கு ஒரு ஓட்டும் ஜெயலலிதாவுக்கு ஒரு ஓட்டும் போட்டாராம். ஓட்டு கண்டிப்பாக போடணும் சார், அப்பதான் இந்தியக் குடிமகன் என்பதற்கு ஒரு நிரூபணம் இருக்கும். நாளைக்கு போலீஸ் வந்து தீவிரவாதி என்று சந்தேகத்தில் பிடித்தால் இது ஒரு வலுவான ஆதாரமாக இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக ஓட்டு போடணும்.

குடியாத்தத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அங்கு பெண்களை வேலைக்கு வைத்து 1800 ரூபாய், 2000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிலும் அந்த மேலாளர் மாசக் கடைசியில், 'நீ இத்தனை நாள் லேட்டா வந்தாய், நீ இத்தனை நாள் லீவு எடுத்தாய்' என்று குறைத்துக் கொடுத்து விடுகிறான். அந்த பெண்கள் நாள் முழுதும் வேலை பார்த்து வேலை போய் விடக் கூடாதே என்று பயந்து நடுங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். அப்படி நடந்து கொள்கிறவன்தான் பணக்காரன் ஆக முடிகிறது.

கட்டிட வேலை செய்பவருக்கு ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பளம், தொழிற்சாலையில் வேலை செய்பவருக்கு 750 ரூபாய், மென்பொருள் வேலை செய்பவருக்கு 1000 ரூபாய், மேனேஜருக்கு 950 ரூபாய், கார் ஓட்டுபவருக்கு 850 ரூபாய் என்று சம்பளம் இருக்கலாம். ஆனா இங்கே கட்டிட வேலை செய்பவருக்கு 300 ரூபாய், தொழிற்சாலையில் பணி புரிபவருக்கு 250 ரூபாய், மென்பொருள் வேலை செய்பவருக்கு 5000 ரூபாய், மேனேஜருக்கு 20000 ரூபாய் என்று வருமானம் வருகிறது. அதனால்தான் இவ்வளவு தொல்லை.

கம்பியூட்டரில் வேலை செய்வது என்றால் சும்மா இல்லை, அதில் ஒரு சின்ன தவறு வந்து விட்டாலும் பலத்த முயற்சிகளுக்குப் பிறகுதான் சரி செய்ய முடியும்.

திடீரென்று பேருந்து கட்டணம் உயர்த்தி விட்டார்கள், முன்பெல்லாம் 50 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு குடியாத்தம் போய் சேர்ந்து விடலாம். இப்போ 100 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்ய முடியும்? எப்படி இந்த முடிவு எடுத்தார்கள்? யார் முடிவு எடுத்தார்கள்? மக்களிடம் கேட்கவே இல்லையே!

சீனாவில் இப்படி எல்லாம் கிடையாது. இந்தியாவை விட மிகவும் ஏழையாக இருந்தது சீனா. இப்போ எவ்வளவு வேகமா வளர்ந்திருக்கிறது. அதைப் போல நம்ம நாட்டில் எல்லாம் நடக்காது.

இப்படியாக 3 மணி நேரமும் பேசிக் கொண்டே வந்தோம். சுமார் 6.30க்கு கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு 9.15க்கு வேலூர் வந்து சேர்ந்து வேலூரில் காலை உணவு சாப்பிடுவது வரை பேச்சு தொடர்ந்தது. 7.05க்கு பூந்தமல்லி வந்திருந்தது. வேறு எந்த ஊருக்குள்ளும் போகாமல் புறவழிச்சாலையிலேயே வந்து விட்டார்கள். சாப்பிடுவதற்கும் வழியில் நிறுத்தவில்லை.

அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நகரப் பேருந்தைப் பிடித்தேன். கூட்டம் நெரியும் நேரம். பெரிய பெட்டியுடன் ஏறுவது கொஞ்சம் தவறான விஷயம்தான். ஒரு ஓரமாக வைத்து விட்டு நின்று கொண்டேன். தனியார் பேருந்துகளில் விரட்டலாகத்தான் பேசுவார்கள். கூட்டம் நெரிந்தது, ஏறுவதும் இறங்குவதுமாக நகர்ந்து கொண்டே இருந்தது.

ஓடைப் பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்ததும், இப்படியே முடி வெட்டிக் கொண்டு போகலாம், எதற்கு வீட்டுக்குப் போய் பைகளை வைத்து விட்டுத் திரும்பி வர வேண்டும் என்று தோன்ற, முடி வெட்டுபவரும் ஓய்வாக இருக்க, உள்ளே போய் விட்டேன். ருத்ராட்ச மாலை போட்டிருந்தார். அய்யப்பன் விரதமா என்று கேட்டதும் பேச ஆரம்பித்தவர் முடிக்கும் போதுதான் நிறுத்தினார்.

வழக்கமாகவே ருத்ராட்ச மாலை போடுவாராம். வேலூர் பகுதியிலும் பலர் அய்யப்பன் கோவிலுக்குப் போகிறார்கள். ஆனால், இவர் திருப்பதிக்குப் போவதுதான் அதிகம். மாதத்துக்கு ஒரு நாள், அல்லது 3 மாதத்துக்கு ஒரு நாள் போய் விடுவார். மலையில் கால்நடையாக ஏறிப் போவார், சில சமயம் பேருந்தில். பேருந்தில் போனால் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லை என்றால், மதியம் புறப்பட்டு மாலை 6 மணி போல சேர்ந்து 10 மணிக்கு குடவுனுக்குள் நுழைந்து விட்டால் 12 மணிக்கு முன்பு சாமியை பார்த்து விட்டு வந்து விடலாம். 2 மணிக்கு வேலூர் பேருந்தில் ஏறினால் அதிகாலை திரும்பி வந்து கடை திறக்க தயாராகி விடலாம். மதியம் 2 மணிக்குப் போய்ச் சேருபவர்களும் அவ்வளவு நேரம் காத்திருக்க நேரிடும்.

எல்லாரும் பெருமாளைப் பார்க்கப் போய் அதைத் தா, இதைத் தா என்று கேட்கத்தான் செய்கிறார்கள். 'நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கிறாய்' என்று பெருமாளிடம் கேட்க யாராவது போகிறார்களா. அவரும் வருபவர்களை எல்லாம் வரவேற்று தரிசனம் தருகிறார். யாரையும் வா என்று அழைப்பதில்லை, நாமதான் போகிறோம். அவர்கிட்ட வேண்டிகிட்டா, கூடவே இருந்து முடிச்சு கொடுத்து விடுகிறார். ஆனால் வேண்டுதலை தவறாமல் நிறைவேற்றி வைக்க வேண்டும். இல்லைன்னா, தவறாமல் திருப்பி வாங்கி விடுவார். உடல் நிலை சரியில்லாமல் போவது, வியாபாரத்தில் கஷ்டம் என்று வாங்காமல் இருப்பதில்லை.

மனதில் இருப்பதை வெளியில் சொன்னால் நிறைய பேசுகிறான் என்கிறார்கள், பேசாமல் இருந்தால் ஒன்னும் தெரியாது என்கிறார்கள். இந்த உலகத்தில் எல்லாம் அறியாமையில்தான் இருக்கிறார்கள். அடுத்தவனைப் பார்த்து பொறாமை, பேராசை, இருப்பதை வைத்து திருப்தி அடைவதில்லை. நான் இவ்வளவு நல்ல காரியங்கள் செய்கிறேன் எனக்கு ஏன் பலனில்லை என்று கேட்கிறான். இந்த பிறவியில் செய்யும் நல்ல செயல்களுக்கு பலன் அடுத்த பிறவியில்தான் கிடைக்கும். ஒருத்தன் இப்போ சொகுசா வாழ்கிறான் என்றால் போன பிறவியில் அவன் நல்ல காரியங்கள் செய்திருக்கிறான்.

முடி வெட்டி மீசை சீர் செய்து அனுப்பினார். 30 ரூபாய்தான் கட்டணம். வீட்டுக்கு வரும் போது மின்னிணைப்பு இல்லை.  10 மணிக்குப் போய் 12 மணிக்குத் திரும்ப வரும். திரும்பவும் மாலை 4 மணிக்குப் போய் 6 மணிக்குத் திரும்புகிறது. உடை மாற்றி, துணிகளை துவைக்க ஊற வைத்து விட்டு மடிக்கணினியை மின்கலத்தில் இயக்கினேன். கூடவே கம்பியில்லா இணைய இணைப்பும். உலகைக் குலுக்கிய 10 நாட்கள் குறிப்புகளை புரட்டி போட்ட புத்தகங்களில் பதிந்தேன். கூகுள் காலண்டரில் டிசம்பர் மாத பணிகளைப் பற்றிய திட்டமிடலை குறித்து பகிர்ந்து கொண்டேன்.

போக வேண்டிய இடங்களுக்குத் தொலைபேசி திட்டமிட்டுக் கொண்டேன். 11.45க்கு துணி துவைக்க ஆரம்பித்தேன். 2 வாளிதான் ஆகிறது என்று சொல்லியிருந்தேன், ஊற வைக்க ஒரு வாளி, அலச 3 வாளி என்று 4 வாளி ஆகிறது. இது சுமார் 20 துணிகளுக்கு. தினமும் துவைத்தால் 2 வாளிகளில் முடித்து விடலாம். குளிப்பதற்கும் ஒன்றரை வாளி வரை ஆகிறது, தண்ணீரைத் திறந்து விட்டுக் கொண்டே குளித்தால் மீண்டும் நிரம்பி விடுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குளித்து விட்டு மீண்டும் இணையத்தில், படிக்க வேண்டிய விபரங்களை சேமித்துக் கொண்டேன். இணையம் இல்லாத இடங்களிலும் படித்துக் கொள்ள முடியும். சாப்பிடுவதற்கு பக்கத்தில் மெஸ்ஸுக்குப் போனேன். அவர் பழைய குழம்புகளை ்பிரிட்ஜில் வைத்து எடுத்து தருகிறார் என்று கேட்டதிலிருந்து அங்கு போகவில்லை. பல வாரங்கள் ஆகி விட்டன. நேற்று சாப்பிட்டதும் இன்னமும் வாய்க்குள் தவிர்ப்பை தருகிறது. வடையை மோர்க்குழம்பில் போட்டு வைத்து விடுவார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தேன். 42 ரூபாய் சாப்பாடு.

2 மணிக்கு மேல் வெளியில் போய் நுறுக்குத் தீனி, இனிப்பு, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் வாங்கி வந்தேன். தின்பண்டங்கள் 92 ரூபாய், ஆரஞ்சு 20 ரூபாய், வாழைப்பழம் 10  ரூபாய். 4 மணிக்கு மின்னிணைப்பு துண்டிக்கும் வரை இணையத்தில்தான் மேய்ந்து கொண்டிருந்தேன். 4 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மாலை ஆக ஆக குளிர் அதிகமானது. ஜன்னல்களை மூடி விட்டேன். சீக்கிரம் இருட்டி விட்டது. 6  மணிக்கு சரியாக மின்சாரம் திரும்பி வந்தது. நல்ல பசி வந்தது, சமோசா, வாழைப்பழம் சாப்பிட்டதில் முறையான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

தனியார் பேருந்தில் ஏறி ஆபிசர்ஸ் லைன் என்று கேட்டால், ராஜா தியேட்டர் என்று 4 ரூபாய் சீட்டு கொடுத்தார். ராஜா தியேட்டர் தாண்டி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன். இதற்கு முன்பும் அப்படி இறங்கி நிறைய அலைந்தேன். ராஜா தியேட்டர் தாண்டி வலது புறம் திரும்பும் ஒரு வழிப்பாதையில் போக வேண்டும். சுமார் 300-400 மீட்டர் நடக்க வேண்டும். நிறைய பளபளக்கும் கடைகள் இருக்கும் இடம்.

சைவ உணவகத்தில் போய் சீரக சோறு, கீரை பருப்பு, பப்படம், இனிப்பு மோர், அவித்த காய்கறிகள் என்று மெனு பார்க்காமலேயே ஆர்டர் சொன்னேன். அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் கொண்டு வந்தார்கள். சுவையும் அளவும் சரியாகவே இருந்தன. சுட்ட பப்படத்தில் இரண்டில் ஒன்று மட்டும் மீந்தது. மீதி எல்லாம் முடிந்து விட்டது.

ரமணி சந்திரன் எழுதிய நாவல் ஒன்றை படிக்க வேண்டும் என்று படிக்க ஆரம்பித்திருந்தேன். கூடவே ஆர் எம் லாலா எழுதிய creation of wealth என்று டாடா குழுமம் பற்றிய புத்தகம். ரமணி சந்திரன் நாவல் நண்பர் சொன்னது போல நம்மையும் மீறி நெஞ்சை அடைக்கும் உணர்வுகளை தூண்டி விடுகிறது. நாயகியின் பார்வையிலிருந்து கதை நகர்கிறது. வெளி உலகில் நடப்பவை எல்லாம் சின்ன விபரம் மட்டும்தான். பெரிய பெரிய நிகழ்வுகளை ஒரே வாக்கியத்தில் தாண்டிப் போய் விடுகிறது கதை. ஆனால் நாயகி தனது மனதுக்குள் உருவாக்கிக் கொள்ளும் உலகத்தினுள் கதை நின்று நிதானித்து, உழன்று நகர்கிறது. நாயகன் ஒரு மர்ம மனிதனாகவே உலாவி வருகிறான். உலகின் மற்ற எல்லோரும் நாயகிக்கு எதிராக செயல்படுவது போல நடுங்குகிறது.

லட்சுமியின் கதைகளின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும். வெளி மனிதர்களிடம் அதிகம் பேசி விடாமல், தனக்குள்ளாகவே உலகைப் படைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் introvertகளுக்குப் பொருந்தும் வாசிப்பு. இளைஞர்கள் ராஜேஷ் குமார் கதையில் துப்பறியும் நிபுணராகவும், சரோஜாதேவி கதைகளில் உடலுறவு கொள்பவராகவும் பொருத்திக் கொண்டு மாய உலகில் வாழ்வது போல, இளம் பெண்கள் ரமணி சந்திரன் கதைகளின் நாயகியுடன் தம்மை பொருத்திக் கொண்டு மாய உலகில் வாழ உதவுகின்றன.

திரும்பி வந்து பல் தேய்த்து, தியானம் செய்து விட்டுத் தூங்கினேன்.

இரவில் கொசுக் கடியும், குளிரும் முரண்பட்டு நின்றன. மின்விசிறி போட்டுக் கொண்டால் மூடாக்கையும் தாண்டி குளிர், மின்விசிறியை நிறுத்தி விட்டால், கொசு ஒன்று ரீங்காரம் இடுகிறது. இரண்டரை மணிக்கு எழுந்து கொசு விரட்டியைத் தேடிப் பொருத்திய பிறகு தூங்க முடிந்தது. 6 மணிக்குப் பிறகுதான் எழுந்திருக்க முடிந்தது.

இதை முடித்த பிறகு அரை மணி நேரம் மின்னஞ்சல், வலைப்பதிவு, பின்னூட்டங்கள். அதில் குறிப்புகளை சேமித்துக் கொள்ள வேண்டும். 8.30க்கு வெளியில் போய் சில்க்மில் வரை நடந்து போய் நாளிதழ் வாங்கிக் கொண்டு அழகர் விடுதியில் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விடலாம்.

திங்கள், நவம்பர் 28, 2011

சென்னையில் மழை நாள்


நவம்பர் 28, 2011. காலை 4.54

இதை முடிக்கும் போது 5.54 ஆகியிருக்கும். பெட்டியில் துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட வேண்டியதுதான். 6.30க்கு பேருந்து ஏறினாலும் 10 மணிக்கு வேலூர் போய் சேர்ந்து விடலாம். 24 மணி நேரமும்  கடமைகளைச் செய்வதற்கான களம். அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

நேற்று காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு புறப்பட வேண்டும். தொலைபேசி 8 மணிக்கு வந்து விடுவதாகச் சொன்னார். மழை பெய்து கொண்டிருக்கிறதே, கூட்டம் இருக்குமா என்று சந்தேகம். தொலைபேசி கேட்டு விடுவதாகச் சொன்னார். கூட்டம் ரத்து இல்லை என்றால் 8 மணிக்கு வந்து விடுவார். நாளிதழ் வாங்கி வரப் புறப்பட்டேன். வெளியில் வந்தால் மழை தூறிக் கொண்டுதான் இருந்தது. திரும்பவும் உள்ளே வந்து குடை எடுத்துக் கொண்டு நடந்தேன். தலையும் சட்டையும் நனையாமல் இருக்கிறதே!

3 ரூபாய் டெக்கான் குரோனிக்கிளுக்கு 10 ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டேன். அந்தக் கடைக்காரர் கொஞ்சம் வாடிக்கையாக என்னைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருக்கிறார். நானும் வழியில் இருக்கும் மற்ற கடைகளை விட்டு விட்டு அவரிடம்தான் போய் வாங்குகிறேன். என்னுடைய காலை நடைப்பயிற்சிக்கும் அதுதான் சரியாக இருக்கிறது.

நாளிதழுடன் திரும்பி வந்து, குளித்து, தியானம் செய்து நேரம் 8 மணி அடிக்கப் போனது. நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாப்பிடப் போக வேண்டும். பூரி அப்போதுதான் சுடச்சுட போட்டு வந்தது, இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு செட் பூரி சொன்னோம். நான் அடுத்ததும் பூரி. வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. பலர் உட்கார்ந்து சாப்பிட நாற்காலிகள் நிரம்பியிருந்தன.

பார்சலுக்குச் சொல்லி விட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தோம். சாப்பிட்டு முடித்து எழுந்த பிறகுதான் பார்சல் கட்டச் சொன்னார். மொத்தம் 9 இட்லி, 3 வடை, 4 செட் பூரி என்று கணக்கு போட்டு 68 ரூபாய். கடைக்கார அம்மா பார்சலுக்கு 26 ரூபாய் என்று சொன்னார்.  சாப்பிடுவதற்கு தனிக்கணக்கு. ஆறு 10 ரூபாய் நோட்டுகளும் 8 ரூபாய் சில்லறையுமாக கொடுத்து விட்டேன்.

தேநீர் குடிக்கப் போனோம். அந்த துரித உணவுக் கடையை தாண்டி டாஸ்மாக்குக்கு நேர் எதிரில் இருக்கும் தேநீர் கடைக்குப் போனோம். அய்யப்பன் மாலை போட்டிருப்பவர் கடைக்காரர்.

அவுட்லுக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் 'ஏன் எல்லோரும் ஊடகங்களை வெறுக்கிறார்கள்' என்று அட்டைப்படக் கட்டுரை. அட்டையிலேயே ஒரு விளம்பர துண்டுச் சீட்டு, உள் அட்டைகளில் அந்த விளம்பரதாரரின் இரண்டு பக்க விளம்பரம். என்ன ஒரு irony!

தெரு முனையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. சாலை பற்றி பேசினோம். குடையை கையில் எடுத்துக் கொண்டேன். பைக்கில் போகும் போது பிடித்துக் கொண்டே போகலாம், மழை பெய்தால்.

கிண்டி நோக்கிப் போகும் பாதையில் வாகனங்கள் நிறைந்திருந்தன. நல்ல வேளையாக இந்த வளைவு வரை அடைத்து விட்டிருக்கவில்லை. ஜிஎஸ்டி சாலைக்கு வந்து வழக்கமான தில்லை கங்கா நகர் தரையடி பாதைக்கு வந்தோம். அதன் கீழ் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் போக முடியாமல் ரிப்பன் கட்டியிருந்தார்கள். திருப்பிக் கொண்டு டிரைடன்ட் அருகில் இருக்கும் பழவந்தாங்கல் தரையடிப் பாதை வழியாக போகலாம் என்று முடிவு செய்தோம். இன்னொரு வழி, பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக போவது.

பழவந்தாங்கல் சப்வேயில் தண்ணீர் இறைத்து விடப்பட்டிருந்தது. இருப்பினும் மேலிருந்து தண்ணீர் உள்ளே பாய்வதும் நடந்து கொண்டிருந்தது. மேலே ஏறி இடது புறம் திரும்பி வழி விசாரித்துக் கொண்டே ஓட்டினோம். அருகில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்த நின்றோம்.

மாலை 8.30 ஆகி விட்டது. கால் டாக்சி யாரும் வரத் தயாராக இல்லை. இரு சக்கர வண்டியில் தேநீர் கடை  அருகில் விட்டார்கள். தேநீருக்கு 20 ரூபாய். அங்கு அருகில் இருந்த உணவு விடுதியில் சப்பாத்தி, மீன் கறி, முட்டை சாப்பிட்டோம். 163 ரூபாய்.

சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து D 70 ஏறினோம். வடபழனியில் இறங்கி 12B யில் பேருந்து நிலையம் வந்து, பகிர்வூர்தியில் கேசவர்த்தினி அருகில் இறங்கிக் கொண்டேன்.

நடந்து வீட்டுக்கு வந்து கைகால் கழுவி விட்டு தியானத்தில் உட்கார்ந்தால் நேரம் வெகு வேகமாக ஓடியது. நிறைய எண்ணங்கள் பதிவாகியிருக்கின்றன. தூங்கி விட்டு நாலரைக்கு எழுந்து விட்டேன்.

இன்னும் 20 நிமிடங்கள் இருக்கின்றன. இதை முடித்ததும் கட்டி வைத்த துணிகளை பெட்டியில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டையும் பேன்டும் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட வேண்டியதுதான். புதிய செய்திகளைப் பற்றிக் குறிப்பெடுப்பது ஏற்கனவே ஏற்றுக் கொண்ட கட்டுரைகளை முடித்த பிறகுதான் செய்ய வேண்டும்.

சமூக நியாயங்கள்


நேரம் 6 மணி. நவம்பர் 27, 2011.

நேற்று காலையில் நாட்குறிப்புக்குப் பிறகு வெளியில் உலாவப் போகவில்லை. நேரம் ஏழரை தாண்டி விட்டிருந்ததால், குளித்து தயாராகி விட்டு அப்படியே கணினியையும் கையில் எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று முடிவு செய்தேன். நாட்குறிப்பு பாதியிலேயே நிறுத்தி விட்டேன். அதாவது அரை மணி நேரத்தில் நாட்குறிப்பு முடித்து விட்டு அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒரு உண்மை மனிதனின் கதை ஆங்கில உரைக் கோப்பை வடிவமைத்துக் கொண்டிருந்தேன். குறுஞ்செய்தி வந்தது, 'சீக்கிரமாக சந்திக்க வேண்டும் என்றாலும் செய்யலாம். அதன் பிறகு வங்கிக்குப் போகலாம் என்று'. பதில் உடனே போடவில்லை.

குளித்து கணினி பையை எடுத்துக் கொண்டேன். கொடுக்க வேண்டிய குறிப்பேட்டை நினைவாக எடுத்து வைத்தேன். ஹாட்சிப்ஸ் போய் சாப்பிட்டு விட்டு அப்படியே போரூர் போய் போகலாம் அல்லது லட்சுமி பவனில் சாப்பிட்டு விட்டுப் ராமாபுரம் போய் போகலாம் என்று ஒப்பிட்டுப் பார்த்து விட்டு கடைசியில் ராமாபுரம் சாலையிலேயே நடந்தேன். வழக்கமாக நாளிதழ் வாங்கும் கடையில் டெக்கான் குரோனிக்கிளும் ஜூனியர் விகடனும் வாங்கினேன். பாரதி பவனில் இன்னமும் காலை உணவு தயாராகியிருக்கவில்லை என்று தோன்றியது.

லட்சுமி பவன் போவதற்கு எப்போதுமே தயக்கம்தான். சிறுவர்களை வேலைக்கு வைத்திருப்பதாக அவர்களுடன் சண்டை போட்டதும் எனக்கும் சரி அவர்களுக்கும் சரி மறந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் சுப்ரபாவின் முன்பு காலை உணவு பலகையைப் பார்த்து அதற்குள் நுழைந்தேன். பொங்கல் வடை, இரண்டு இட்லி, காபி. பூரி, தோசை எல்லாம் இல்லை. இவர்கள் காலையில் கொஞ்சம் சோம்பேறிகள்தான்.

திருவள்ளுவர் சாலை புதிதாய் தார் போட்டிருந்தார்கள். தண்ணீர் தேக்கம் மேடு பள்ளங்கள் எல்லாம் நிரந்து போயிருந்தன. ஓடையில் தண்ணீர் நிரம்பி ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நாம் ஊகிப்பதை எல்லாம் தகவலாக அடுத்தவர்களிடம் பேசக் கூடாது. தெரிந்ததை மட்டும்தான் பேச வேண்டும். எட்டரை மணி ஆகியிருந்தது. மெயின் ரோடுக்கு சற்று முன்பு இருந்த இணைய மையத்தில் அப்போதுதான் திறந்து கொண்டிருந்தார் ஊழியர். முன்பக்கம் படியில் உட்கார்ந்து கணினியில் இருந்து கோப்புகளை பென்டிரைவில் நகல் எடுத்துக் கொண்டேன். இணையம் இணையவில்லை.

மெயின் ரோடுக்கு வந்து சாலையைக் கடந்ததும் சாலை நிறுத்தத்தில் நின்ற பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். வங்கியின் முன்பே போய் இறங்கிக் கொள்ளலாம். பேருந்தில் என்றால் அப்படி முடியாது. முகலிவாக்கம் தாண்டியதும் நல்ல மழை ஆரம்பித்தது. வங்கியின் முன்பு இறங்கிக் கொள்கிறேன் என்று உட்கார்ந்திருந்தேன். காசை முன்பாகவே எடுத்துக் கொடுத்து விட்டு இறங்கினேன். வங்கிக்குள்ளும் கூட்டம் அதிகம் இல்லை. உட்கார்ந்து இரண்டு காசோலைகளுக்கும் படிவம் நிரப்பி பெட்டியில் போட்டு விட்டேன்.

அங்கிருந்து போரூர் சாலை நிறுத்தம் நோக்கியே நடந்து குன்றத்தூர் சாலை முனையில் ஆட்டோ நிறுத்தத்தில் இடம் கேட்டேன். 70 ரூபாய். ஒரு இளைஞர் இரு சக்கர வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியிருந்தார். முழங்கால் அருகில் பேன்ட் கிழிந்து ரத்தகாயமாக இருந்தது. கீழே விழுந்து விட்டாராம்.

அம்மா பகவான் கோவிலுக்கு முன்பு என்று சொல்லிக் கொண்டார்கள். குன்றத்தூர் சாலை வழியாக போய் இடது புறம் திரும்பி மதனந்தபுரம். குன்றத்தூர் சாலையில் போரூர் நிறுத்தம் அருகில் வலது புறம் தண்ணீர் நிரம்பியிருந்தது. இடது புறம் பரவாயில்லை. இந்த சாலை ஒரு ஆண்டுக்குள் போட்டதாக நினைவு. அதற்குள் இப்படி சொதப்பியிருக்கிறது.

முகலிவாக்கம் சாலையிலிருந்து உள்ளே போகும் தெருக்களில் தண்ணீர் நிரம்பியிருந்தது. இது முன்பே தெரிந்திருந்தால் அவர் 100 ரூபாய் கூட கேட்டிருந்திருப்பார். திணறி எடுத்து விட்டு போய்ச் சேர்த்தார்.

70 ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். அடுத்த தடவை இங்கு வரும் போது ரம்யா நகர் அருகில் என்று சொல்லுங்கள். குறுக்குப் பாதையில் வந்து விடலாம் என்று அறிவுரை சொன்னார். கூட 10 ரூபாய் கொடுத்திருந்திருக்கலாம்.

கட்டிடக் காவலரிடம் வீட்டு எண் சொல்லி பதிவு செய்தால் எனக்கு முன்பு நின்றவரும் போகிறார்.

மேலே போனால், சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார். கொஞ்ச நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்தார்.  அவர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கிறார்கள்.  பயோடெக்னாலஜி துறையில் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தவராம்.

பிரிவோம் சந்திப்போம் படத்தில் (ஆனந்த தாண்டவம்) வரும் ராதாகிருஷ்ணன் , அந்தப் படத்தில் தமன்னா நன்றாக நடித்திருப்பார். கதாநாயகனாக நடிக்க நல்ல ஒரு நடிகரை போட்டிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும். அதில் நடித்திருந்தவர் சொதப்பியிருந்தார். ஜெயம் ரவி பொருந்தியிருக்கலாம்.

தொலைபேசி உரையாடல்களிலும் வணக்கம் சொன்னதிலும் ஒரு விதமான நக்கலும் கிண்டலும் தெரிந்தன. அது எதிர்பார்த்ததுதான். ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி இந்த வேலையிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக சொல்ல வேண்டும். முதலில் விவாதித்துப் பார்த்தேன்.

'இது போன்ற ஒரு முயற்சியை எடுப்பதில் ஏற்படும் விரயம், இன்றைய அமைப்பில் அது நிச்சயம் வெற்றி பெற முடியாத ஒன்று, பணத்தை வாங்கியதற்கு பயன்படும்படி ஒரு தயாரிப்பை கொடுத்து விட வேண்டும்' என்றெல்லாம் விளக்கினேன்.

'இது தோல்வியடையப் போகிறது என்று முயற்சித்துப் பார்த்து விட்டு விடுவோமே'

மிகவும் மன வருத்தம்தான். எஞ்சியிருக்கும் பகுதிகளை முடித்து, ஆவணமும் எழுதிக் கொடுத்து விடும்படி சொன்னான்.

அந்த நேரம் தொலைபேசி சிபி-சிஐடி தொடர்பு மின்னஞ்சல், தொலைபேசி எண் கேட்டார். அதை இணையத்தில் எடுத்து அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு அரசியல் பேச ஆரம்பித்தோம்.

கொலவெறி பாட்டைப் பற்றி பேச்சு வந்தது. அதைக் கேட்டிருந்தானாம். நன்றாகத்தானே இருக்கிறது என்றான். யூடியூபில் போட்டுக் காண்பித்தான். மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு, தனுஷ், ஐஸ்வர்யா, சுருதி என்று முகங்களையும், இடங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட காணொளி. பாடல், வேண்டுமென்றே குப்பையான வரிகளுடன். இது தற்செயலாக அமைந்தது என்று பில்ட் அப் கொடுக்கிறார்கள். அது வரை 15 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

நாளிதழில் பார்த்து போய் கேட்டிருக்கிறான். இது திட்டமிட்ட ஒரு பிரபலமாக்கல்தான். கடைசி திரையில் சோனி மியூசிக் என்று விளம்பரம். இந்து, டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா, என்டிடிவி, புதிய தலைமுறை என்று செய்தி ஊடகங்களில் எல்லாம் அதை பேசியிருப்பதுதான் இத்தனை லட்சம் பேர் பார்த்ததற்கு காரணம். மிகவும் கேவலமான ஒரு பொருளை கேவலமான முறையில் சந்தைப்படுத்தும் உத்தி இது.

மழை வலுத்திருந்தது. வெளியில் போக வேண்டுமாம். நானும் ஒரு குடை வாங்க வேண்டும். அவர்கள் போகும் கடையிலேயே போய் வாங்கிக் கொள்ளலாம். கீழே வந்து காரில் ஏறினோம். ஆட்டோக்காரார் 70 ரூபாய் கேட்டார் என்று பேச்சு வந்ததும், 'ஆட்டோக்காரனுங்க எல்லோரும் திருடனுங்கதான்' என்று ஒரு டயலாக். விவரமாக ஒரு ஆட்டோ ஓட்டுனருடன் பேசியதைச் சொன்னேன்.

போரூர் சாலை நிறுத்தத்தில் கார் நீந்தி இடது புறம் திரும்பி இலாஹி வந்தோம். உள்ளே போய் தரையடி தளத்தில் குடை. மூன்றாக மடங்கும் குடை. 196 ரூபாய்க்கு. அதை எடுத்துக் கொண்டு நான் கிளம்பி விட்டேன்.

மேம்பாலம் கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்தியிருந்தார்கள். ஒரு தூணின் அடிப்பகுதி மட்டும் நீட்டிக் கொண்டிருந்தது. சில கோடிகள் செலவழித்து விட்டு மூடுவிழா நடத்தியிருக்கிறார் வெற்றி வீராங்கனை ஜெயலலிதா.

சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். அண்ணா பல்கலை வழியாக போகும் பேருந்தில் ஏறி, கணினியை இயக்கினால் இணையம் வேலை செய்தது. கிண்டியில் இறங்கிக் கொண்டேன்.

அண்ணா நூலகம் இட மாற்றத்தை எதிர்த்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். திமுகவின் ஏதோ அணியின் பெயர் படிவத்தின் அடியில் இருந்தது. திநகர் போகும் பேருந்து நிறுத்தம் வந்தேன். கணினியை இயக்கினேன். இணைய இணைப்பு நன்கு கிடைத்தது.

என் அருகில் இருந்தவரிடம் கையெழுத்து கேட்டார். அவர் போட மறுத்து விட்டார். என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிப் போட்டேன். 'இதற்கு போராடுவதை விட விலைவாசி உயர்வுக்கு போராடுங்க, இதுவும் தேவைதான். ஆனா அதுதான் மக்களை உடனடியா பாதிக்கக் கூடியது. உங்க கட்சியும் உத்தமம் கிடையாது, அவங்க போட்ட ஆட்டத்தில்தான் இந்த அம்மாவுக்கு வாய்ப்பு வந்தது, இவங்க எல்லோரையும் சாகடிக்கிறாங்க.'. 'இல்லங்க, நான் கட்சிக்காரன் கிடையாது.' என்று பதில் சொல்லி நகர்ந்தார்.

பின்னூட்டங்கள் போட்டு விட்டு பேருந்தில் ஏறினேன். திநகர் வரை போகும் பேருந்து. உட்கார இடம் கிடைத்தது. தொலைபேசி தகவல் சொல்லி விட்டேன். நந்தினி ஸ்வீட்ஸ் பக்கம் நிற்கச் சொன்னார்.

பேருந்து சைதாப்பேட்டை கடக்கும் போது பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் என் அருகில் இருந்தவரிடம் 'ஏழாம் அறிவு 25ஆம் நாள் வெற்றி என்ற போஸ்டரில் வள்ளல் சூர்யா என்று போட்டிருக்கிறதே' என்று வியப்பாக கேட்டார். அவருக்கும் பதில் தெரியவில்லை. 'ஒரு அறக்கட்டளை மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறாராராம், அதுதான். ஆனா அந்த அறக்கட்டளைக்கு தொலைபேசி செய்தால் யாரும் எடுப்பதில்லை' என்று தகவல் சொன்னேன். 'ஆமா இவனுங்க பெரிய ஆளுன்னு பில்ட்அப்தான் கொடுக்கிறானுங்க. அவங்க அப்பா என்னவோ தான்தான் பிள்ளை வளர்த்ததா பீத்திக்கிறான்' இளம் வயதுதான் இருக்கும். விஜய் வேலாயுதம் படம் பற்றி பேச்சு வந்தது. 'அந்தப் படம் எல்லாம் ஏன் சார் பார்க்கப் போறீங்க' என்று ஒரு போடு போட்டார்.

பேருந்து நிலையம் அருகில் இறங்கி விசாரித்தால் வந்த சாலையிலேயேதான் நந்தினி. சாலையைக் கடந்து விட்டேன். பார்த்தால் சாலைக்கு இந்த புறம்தான் இருந்தது. மறுபடியும் கடந்து வந்தேன். அவரிடம் நோட்டைக் கொடுத்து விட்டு பார்த்தால் நந்தினியிலேயே மதிய உணவு இருந்தது. மினிமீல்ஸ். அவரையும் அழைத்துக் கொண்டு போனேன். ஏற்கனவே ஒருவர் உட்கார்ந்திருந்த மேசையில் உட்கார்ந்தோம்.

அவருக்கு 45+ வயது இருக்கும். எனக்கு மினிமீல்ஸ். அவர் சாப்பிட்டு விட்டாராம். மினி மீல்சில் சப்பாத்தி, புலாவ், சாம்பார் சாதம், தயிர் சாதம், இனிப்பு, அப்பளம், ஊறுகாய், ஒரு பொரியல் கொடுத்திருந்தார்கள்.

எதிரில் இருந்தவர் கோயம்புத்தூர் காரராம், மருந்துதுறையில் வேலை. ஹைதராபாத்தில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார், அவரது குடும்பம் அங்கே இருக்கிறது, இவர் இங்கு வேலை விஷயமாக தங்கியிருக்கிறார். 'சென்னையை விட ஹைதராபாத் எவ்வளவோ பரவாயில்லை. இங்கு மாற்றம் வாங்கி வந்தது தவறு' என்றார். அவரது மகன் இங்கு வர மறுத்து விட்டானாம். 'நாங்க எப்சி. இங்கே வந்தால் அவனுக்கு வாய்ப்பே இருக்காது' என்று காரணமாம்.

சென்னையில் சாலைகள், ஒரு பெண் திறந்திருந்த சாலை பள்ளத்தில் விழுந்து இறந்தது, வேலை வாய்ப்புகள், கல்லூரிகளில் வேலை திருவிழாக்கள், மாணவர்கள் மீதான அழுத்தம், சத்யபாமா பல்கலை மாணவர் தற்கொலை என்று பேசினோம். பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்து விடைபெற்றுக் கொண்டேன்.

குடையைப் பிடித்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்குள் போனேன். எல்ஐசி வழியாக போகும் பேருந்தில் ஏறி சீட்டு சிம்சன் வாங்கி இறங்கிக் கொள்ளச் சொன்னார். அங்கிருந்து மாறி திருவல்லிக்கேணி. ஆயிரம் விளக்கு இறங்கியும் மாறி 25Gயில் ஏறிக் கொள்ளலாம்.

அருகில் இருந்தவர் காவி வேட்டி உடுத்தி காவி துண்டு போட்டிருந்தார். பேச்சுக் கொடுத்தால் அவர் அய்யப்பன் விரதம் இருக்கிறாராம். ஆடை மொத்த வியாபாரம். சட்டைகள் துணிக்கடைகளுக்கு செய்து கொடுப்பது. நாகர்கோவிலில் ஏடிஎஸ், மார்த்தாண்டம், தக்கலை ஊர்களுக்கும் ஆடைகள் அனுப்புகிறாராம். அவர் நேரில் போவதில்லை, வேறு ஒருவர் கையாளுகிறார்.

அடுத்த மாதம் சபரி மலை போகிறாராம். ரயிலில் எர்ணாகுளம் போய் அங்கிருந்து வேன் பிடித்து எரிமேலி போய் வாவர் சாமி கும்பிட்டு விட்டு பம்பா போய் சிறுவழியில் போவார்களாம். தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இணையத்தில் பதிவு செய்து அச்செடுத்து வைத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் உடனேயே போய் விடலாம். போன தடவை பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

திருப்பதி போல ஆகி விட்டது. திருப்பதிக்கும் சபரி மலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டிலும் கிடைக்கும் பலன் வேறுபடுகிறது. சபரிமலையிலும் இப்போது கூட்டம் அதிகமாகி விட்டது. மூன்று மாதங்களும் முழு அளவுக்கு பக்தர்கள் வருகிறார்கள். ஏப்ரலில் போனால் இவ்வளவு பலன் இருப்பதில்லை.

சிறுவழியில் 11 கிமீ நடக்க வேண்டும். பெருவழிதான் சிரமமானது. ஆனா முன்பு போல இல்லை. பெருவழியில் போக 45 நாட்கள் விரதம் இருந்துதான் போவாங்க, ஷேவ் பண்ணக் கூடாது, செருப்பு போடக் கூடாது, இரண்டு தடவை குளிக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டடுப்பாடு உண்டு. ஆனா, இப்போ எல்லாம் அவ்வளவு கட்டுப்பாடா யாரும் இருப்பதில்லை.

நண்பர் ஒருத்தர் ராணுவத்தில் மாலை போட்டு தாடி எல்லாம் வளர்க்காமலேயே விரதம் இருக்கிறார், கேட்டா விதிகள் அனுமதிக்காதாம். சில பேர் சரியாக திட்டமிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு போவார்கள்.

இவர் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக போய் கடந்த 4 ஆண்டுகளாக போகவில்லையாம். இந்த ஆண்டு மீண்டும் போகிறார். வேலையில் விடுப்பு எடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு சரியாக அமைந்து விட்டது. அழைப்பு கிடைத்திருக்கிறது, போகிறோம்.

பேருந்தில் பயணம் செய்ய மாதாந்திர பாஸ் எடுத்தாராம், கட்டணம் கூட்டிய பிறகு கூடுதல் தொகையைக் கட்டச் சொல்லி விட்டார்களாம். இல்லை என்றால் சீட்டு எடுக்க வேண்டும். அதுவும் டீலக்ஸ் வண்டியில் இந்த பாஸூக்கு மேல் 7 ரூபாய் கொடுக்க வேண்டும். கடையில் வேலை செய்யும் பையன்கள் 7 ரூபாய் தினமும் கொடுக்க முடியாமல் நடந்து வருகிறான்கள். பாஸ் எடுத்துக் கொடுத்தாச்சு. ஆனால் எல்லாமே டீலக்சாத்தான் வருது, என்று நடந்து வருகிறான்கள். நாம எவ்வளவுதான் உதவி செய்ய முடியும்.

அரசாங்கம் கையில் போய் விட்டால் பணம் திரும்ப வராது.

ஆனந்த் தியேட்டர் அருகில் இறங்கி சாலையைக் கடந்து நின்றால் 25G வந்தது. திருவல்லிக்கேணி என்று கேட்டால் நடத்துனருக்கு புரியவில்லை. உரக்கச் சொன்னேன். கண்ணகி சிலை சீட்டு கொடுத்தார். உட்கார இடம் கிடைத்தது, முன் பக்கம். பின்னால் பலர் நின்று கொண்டிருந்தார்கள். வைட்ஸ் ரோடு என்று பெயர் பாதிக்கு மேல் டாக்டர் பெசன்ட் சாலை இந்த விபரத்தை முதல் முறை வரும் போது ஒரு ஆட்டோ ஓட்டுனர் சொல்லிக் கொடுத்தார். குடைக்கு நிறைய வேலை இருந்தது. இறங்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. இறங்கி நடக்கும் போது தொலைபேசினேன். அவர் வந்து விடுவதாகச் சொன்னார்.

சீனா முதலாளித்துவ அமைப்பாக மாறி விட்டது என்று 80களில் தீர்ப்பு சொன்னோம். சீனாவின் நடைமுறைகள் சீன கம்யூனிஸ்டு கட்சியை விட வேறு யாருக்குத் தெரியும். முதலாளித்துவ நாடுகள், கட்சியை ஊடுருவி விட்டார்கள் என்று சொன்னால் அது வேறு விஷயம், நீங்கள் வெளியில் இருந்து கொண்டு பேசுவது எப்படி.

திபெத்தை சீனா பிடித்து வைத்திருப்பது சுரண்டலுக்கா என்று விவாதம். சீனாவும் மற்ற நாடுகளை சுரண்டுகிறது என்று விவாதம் போகப் பார்த்தது.

சனி, நவம்பர் 26, 2011

tyrants

நேரம் 6.10, நவம்பர் 26, 2011.

நேற்று மாலை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஒலிப்பேழை பாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு பாடலிலும் இருக்கும் கருத்துச் செறிவும், பாடுபவர்களின் உணர்வுபூர்வமான ஈடுபாடும் ஈடு இணையற்றவை. பல ஆயிரம் பக்கங்கள் புத்தகங்களின் மூலம் பதிய வைக்கக் கூடியதை ஒரு பாடல் செய்து விடுகிறது. பேசும் போது, சிந்திக்கும் போதும், எழுதும் போதும் அந்த நியாயங்கள் நமது எண்ணங்களில் இயல்பாக எழுகின்றன.

காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு உலாவப் போனேன். நாளிதழ் வாங்கும் கடையில் வெளியில் பால் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆவினின் பச்சை கவர் பால் அல்லது நாலரை பால் அல்லது ஆரோக்கியா பால் 17 ரூபாய் என்று விலை கேட்டு தெரிந்து கொண்டேன். நீல கவர் பால் 15 ரூபாயாம். முன்பு 11 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அரை லிட்டருக்கு 4 ரூபாய் ஏற்றி விட்டார்கள். கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்பு 8.75லிருந்து இப்போது 12 ஆக மாறியிருக்கிறது.

வீட்டுக்கு வந்து நல்ல தண்ணீர் ஏற்றுவதற்கான மோட்டரைப் போடப் போனேன். அதற்காக குழாயைப் பொருத்திக் கொண்டிருக்கும் போது மேல் வீட்டு அம்மா கூடவே உப்புத் தண்ணீர் மோட்டாரையும் போட்டு விடச் சொன்னார்கள். இரண்டையும் போட்டு விட்டு நாளிதழைப் படிக்க ஆரம்பித்தேன். முதல் மாடியில் எதிர் வீட்டு அம்மா வந்து நீங்க பிடிச்ச பிறகு ஒரு குரல் கொடுங்க நான் பிடிக்க வேண்டும் என்று சொல்லி போனார். உப்பு தண்ணீர் மோட்டார் 1 மணி நேரம் ஓடலாமாம், முடிந்த பிறகு நானே அணைத்து விடுகிறேன் என்று சொன்னேன். பிளாஸ்டிக் தொட்டி அரைப் பகுதி வரை நிரம்பிய பிறகு அவர்களிடம் பிடித்துக் கொள்ளச் சொன்னேன்.

குளித்து விட்டு தியானம். 8 மணிக்குச் சாப்பிடப் போனேன். சீக்கிரம் போனால் பூரி கிடைப்பதில்லை. இட்லிகளும் வடைகளும் சாப்பிட்டு 18 ரூபாய் செலவு. வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து செய்தி விபரங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். கடைசியாக வாங்கியிருந்த த வீக், அவுட்லுக் இரண்டையும் இன்னமும் நிறைய படித்திருக்கவில்லை என்று தெரிய பையில் வைத்துக் கொண்டேன். காலையில் பல்லாவரம் போய் விட்டு வர வேண்டும். வங்கிக்குப் போக வேண்டும்.

அவுட்லுக் வினோத் மேத்தாவின் புத்தகம் கேடு கட்ட மஞ்சள் பத்திரிகை வடிவத்தில் இருக்கிறது. அதிலிருந்து எடுத்து வெளியிடப்பட்ட பகுதிகள்,  யார் யாருடன் உறவு வைத்திருந்தார்கள் என்ற விபரங்களையும், அவரது பத்திரிகை வாழ்க்கையில் சந்தித்த அவலங்களையும் மட்டும் பேசுகிறது. இப்படிப்பட்ட ஒரு ____ எடிட் செய்யும் பத்திரிகையை படிப்பது நமது தலையெழுத்துதான். இவர்தான் நாட்டில் நடக்கும் மோசடிகளை வெளிச்சப் போட்டுக் காட்டுகிறாராம். முன்பு ஒரு முறை அட்டைப் படத்தில் விதர்பா விவசாயிகள் தற்கொலை பற்றி படம் போட்டு அது தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்கள். கடைசிப் பக்கத்தில் வினோத் மேத்தாவின் பத்தியில், அவர் குடிக்கும் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி பற்றிய புலம்பல், இவ்வளவு மோசமான இரட்டை வேடதாரி என்று அப்போது வாய் கசந்தது.

9 மணிக்குப் புறப்பட்டேன். கேசவர்த்தினி வரை போக வேண்டும். மழை பெய்து சாலை எங்கும் நீர் தேங்கியிருக்கிறது. பெரும்பாலும் வண்டிகள் வேகத்தைக் குறைத்து தண்ணீரை சிதற அடிக்காமல் ஓட்டுகிறார்கள். அவ்வப்போது ஓரிருவர் தண்ணீரை நடந்து கொண்டிருப்பவர்களின் அடித்து விடுகிறார்கள். அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சாலையின் இரு முனைகளையும் தொட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் சாலையின் ஓடத்தில் தெரியும் விளிம்பில் கால் வைத்துப் போக வேண்டும். ஒரு இடத்தில் அதுதான் குப்பை போடும் இடம். வேறு வழியில்லை.

ஆற்காடு சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தால், பேருந்து நிறுத்தம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிரம்பியிருந்தது. காத்திருப்பவர்கள் அனைவரும் அடுத்த கடை வளாகத்தின் முன்பு நின்றிருந்தார்கள். பேருந்து நிறுத்தத்தின் முன்பு ஒரு வண்டி கடப்பது அளவிலான சாலை மட்டும் முழுகாமல் இருந்தது. எல்லா பேருந்துகளும் கூட்டமாகவே போயின. வடபழனி வரை போகும் பேருந்தில் ஏறி அங்கு இறங்கி G70 அல்லது 18M பிடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அது கூட வரவில்லை. 10 நிமிட காத்திருப்புக்குப் பிறகு 501 ஒன்று வந்தது ஸ்ரீபெரும்புதூர் பேருந்து. வடபழனி வரை மட்டும் போவதால் கூட்டம் குறைவாக இருக்கும், இருக்கை கிடைக்கும் என்று நினைத்தது தவறாகிப் போனது.

கல்லூரி மாணவியர் கூட்டமாக பின் வாசல் அருகே நின்றிருந்தனர். 12 பேராம். வில்லிவாக்கம் போக வேண்டுமாம். எங்கு இறங்க வேண்டும் எப்படிப் போக வேண்டும் என்று தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஆழ்வார் திருநகரில் இறங்கி ஆட்டோ பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். வடபழனி வரை போய் விடலாம் என்று சொன்னதை கேட்டு வடபழனி பேருந்து நிலையத்தில்தான் இறங்கினார்கள், ஆட்டோ 3 எண்ணிக்கையாவது பிடிக்க வேண்டியிருந்திருக்கும்.

வடபழனி பேருந்து நிலையத்துக்குள்ளும் தண்ணீர் நிரம்பியிருந்தது. G70, 18M நிற்கும் இடத்தில் முழங்கால் வரை தண்ணீர், அதில் நீந்திச் சென்றுதான் பேருந்தில் ஏற முடியும். மோட்டர் போட்டிருக்கிறார்கள். வடிந்து விடும் என்று ஒரு பேருந்து ஓட்டுனர் சொன்னார். மாலை வரை அப்படியேதான் இருந்தது. நூறடி சாலைக்குப் போய் விடுவது என்று நடக்க ஆரம்பித்தேன். 170C என்று கோயம்பேடு வணிக வளாகம் - தாம்பரம் பேருந்து வந்தது. கூட்டமே இல்லாமல் பல இருக்கைகள் காலியாக வந்தது. மழை தூற ஆரம்பித்திருந்தது. கையை நீட்டி அவசரமாக ஏறிக் கொண்டேன். நடத்துனர் இளைப்பாறலாக உட்கார்ந்திருந்தார்.

பல்லாவரம், பாண்ட்ஸ் என்று கேட்டால் பல்லாவரமா, பாண்ட்சா என்று சொல்லுங்கள் அதற்கு 9 ரூபாய் இதற்கு 11 ரூபாய் என்றார், 10 ரூபாய் கொடுத்து பின்பு 2 ரூபாய் நாணயம் கொடுத்தேன். உட்கார்ந்த இருக்கையில் இன்னொரு காக்கி சீருடை அணிந்த போக்குவரத்துத் தொழிலாளர். அவரிடம் பேச்சுக் கொடுத்து ஓட்டுனர், நடத்துனருக்குக் கொடுக்கும் ஊக்கத் தொகையை 1000க்கு 25லிருந்து 19ஆக குறைத்து விட்டதாக உறுதிப் படுத்திக் கொண்டேன். 'மக்கள் வயிறெரிந்து போறாங்க' என்று சொல்லி விட்டு நிறுத்திக் கொண்டார். பொதுவாக பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் அதிகமாக பேச்சுக் கொடுப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள். குறிப்பாக நடத்துனர்களுக்கு மனித உரையாடல்கள் மீது ஒரு விடுப்பு வந்திருக்கும்.

பெண்கள் இருக்கை ஒன்றில் ஒரு வயதான, முகம் சுருங்கிய அம்மா இரண்டு பைகளில் செவ்வந்தி பூக்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தார். பல்லாவரத்தில் இறங்கும் போது மாலை நீளமாக வளர்ந்திருந்தது. கோயம்பேடு போய் விட்டு வருவதற்கு 45 ரூபாய் ஆகி விட்டது என்று அங்கலாய்த்துக் கொண்டார், இடையில் ஏறிய பெரியவரிடம். உதிரி பூக்களை கோயம்பேடு போய் வாங்கி வந்து, மாலையாக் கட்டி பல்லாவரத்தில் விற்பது அவரது தொழிலாக இருக்கலாம். தினமும் 100 ரூபாய் வருமானம் என்று வைத்துக் கொண்டால், இந்த பேருந்து கட்டண உயர்வால் செலவு சுமார் 20 ரூபாய் அதிகரித்திருக்கிறது. எப்படி ஈடுகட்ட முடியும்? பூ விலையை உயர்த்தவா முடியும்? பேசாமல் ஒரு நாளைக்கு குடிக்கும் தேநீரில் ஒன்றை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான். தேநீரும் 1 ரூபாய் ஏற்றி விட்டார்கள். மக்களுக்கு துறவறத்தைக் கற்பிப்பதில் இந்த அரசுகளுக்கு என்ன ஆர்வம்!

பாண்ட்ஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்து எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்தேன். 30 ரூபாய் கேட்டார்கள். புறப்படும் போது இன்னும் இரண்டு பேர் ஏற வர ஏற்றிக் கொள்ளும்படி சொன்னேன்.

அன்வர் உணவு விடுதி அருகில் இறங்கி அலுவலகத்துக்குப் போனேன். இங்கு பிஎஸ்என்எல் 3G நன்கு வேலை செய்தது, அதியமான் கருப்பு பண பதிவில் பின்னூட்டங்களுக்கு பதில் போட்டிருந்தார். மதியத்துக்குள் அவருக்கு எனது மறுமொழியை எழுதி விட்டேன். நாட்குறிப்பையும் பதிவு செய்து விட்டேன்.

சரக்கு விலை மாற்றுவதற்கான வசதியை செய்ய வேண்டும். சரக்கு விலை, மதிப்பு அறிக்கையில் சரியாக காண்பிக்கப்பட வேண்டும். இரண்டையும் முடிக்க மதியம் ஆகி விட்டது. மதிய உணவுக்கு பாலாஜி பவன் போகிறேன் என்று  காரில் ஏறிக் கொண்டேன். பாலாஜி பவனில் சாப்பாடு 60 ரூபாய், அவ்வளவு விலைக்கு சிறப்பாக ஒன்றுமில்லை. ஒரு தட்டில் சோறு, சாம்பார், ரசம், காரக் குழம்பு, குருமா, ஒரு பொரியல், கூட்டு, இனிப்பு என்று கிண்ணங்களிலும் ஒரு பப்படமும், தயிரும் தருகிறார்கள். அவ்வளவுதான்.

சாப்பிட்டு விட்டு  தொலைபேசி அடையாறு ஆனந்த பவன் அருகில் நின்று கொண்டேன். அவருடன் திரும்பி வந்து சேர்ந்தேன். அங்கு உட்கார்ந்திருந்தவர் பொருளாதாரம் படித்தவராம்.  ஜெயலலிதாவை தாக்கிப் பேசினேன். சரத்பவாரை அடித்தது போல ஜெயலலிதாவை நடு ரோட்டில் விட்டு செருப்பால் அடிக்கும் போதுதான் நமக்கு விடிவு காலம் வரும். தங்கம் வாங்குவதில் செய்யப்படும் மோசடி, சீட்டு கட்டுவதில், வங்கிக் கணக்கில் என்று பண விவகாரத்தை பேசிக் கொண்டிருந்தோம்.

அடுத்தடுத்து இன்னும் சில பணிகளை முடித்து விட்டு, மாதாந்திர கணக்கியல் ஸ்கிரிப்டு இயக்குவதைக் கற்றுக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன். பாண்ட்ஸ் அருகில் கொண்டு விட்டார்.

தொலைபேசினால் எண் இப்போது இணைக்க முடியவில்லை என்று வந்தது. திரும்பி விட முடிவு செய்தேன். வரிசையாக பேருந்துகள் கடந்து போனாலும் நிற்கவில்லை. 18A திரிசூலம் வரை பேருந்து வந்தது. அதில் ஏறி பல்லாவரம் சீட்டு - 3 ரூபாய்தான். பல்லாவரத்தில் காத்திருந்து திருவேற்காடு போகும் பேருந்து காலியாக வந்ததில் ஏறிக் கொண்டேன். அது சொகுசு பேருந்தாம். வடபழனி வரை 15 ரூபாய் சீட்டு. வடபழனியில் இறங்கி கோயில் தெரு முனையில் நின்றேன். 25G, 37G எல்லாம் கூட்டமாகவே போக, 25G வடபழனி வரை பேருந்தில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். இப்போதும் மழைத் தண்ணீர் வடிந்திருக்கவில்லை.

நம்ம வீடு வசந்தபவனில் பூரியும் பாலும் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தால் 17G வந்தது. முகலிவாக்கம் போவது, நம்ம வீட்டைத் தொட்டு போவது, வீட்டின் முன்பாகவே இறங்கிக் கொள்ளலாம். ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். பேருந்தின் முன்பக்கத்தைத் தொட்டு ஏற வேண்டியிருந்தது. 4 ரூபாய் சீட்டு

மெட்ரோபோலிஸ் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன், நல்ல தூக்கமும் சோர்வும் அழுத்தின. தூங்க ஆரம்பித்தேன்.  அழைத்து அடுத்த நாள் திட்டத்தைப் பேசினான். ஏழரை மணிக்கு கண் விழித்து கணினியில் உட்கார்ந்தேன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மக்கள் கலை இலக்கிய பாடல்கள் ஒலிக்க விட்டேன்.

ஒரு உண்மை மனிதனின் கதை உரைக் கோப்பை எடுத்துப் படிக்கவும் ஒழுங்கு செய்யவும் ஆரம்பித்தேன். வரிகளை இணைத்தல், எழுத்துப் பிழைகளை திருத்துதல் என்று மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அலுக்காத, மனதைத் தொடும் கதை.

வெள்ளி, நவம்பர் 25, 2011

கல்லூரி


நேரம் 4.40, 25/11/2011.

நேற்று காலையில் 4.30க்கு எழுந்து விட்டேன். நாட்குறிப்பு எழுத வேண்டும், பதிவு எழுதி முடிக்க வேண்டும், ஆறரை மணிக்குப் புறப்பட வேண்டும் என்ற திட்டமிடல்கள் மேலும் தூங்குவதை அனுமதிக்கவில்லை. பல் தேய்த்து விட்டு நாட்குறிப்பு. 1 மணி நேரம் சுறுசுறுப்பாகவே ஓடியது. 1800 சொற்களுக்கு மேல் எழுதி முடித்து விட்டேன். அதன் பிறகு வீட்டை தூத்து வார ஆரம்பித்தேன்.

பார்த்தால் தூங்கும் அறைக்குள் இருந்த குளியறைக்குள் நிறைய மண் சேர்ந்திருந்தது, தண்ணீர் போகும் பாதையில் வைக்கப்பட்டிருந்த வட்டு நகர்ந்திருந்தது, எலி அதன் மூலம் வந்து அட்டகாசம் செய்திருக்கிறது என்று புரிந்தது. அந்த வட்டை அதற்குரிய இடத்தில் வைத்து மேலே தண்ணீர் உருளையை நகர்த்தி வைத்தேன்.

அடுக்களையில் இருக்கும் ஓட்டை, இந்த ஓட்டை இரண்டையும் அடைத்தாகி விட்டது. இனிமேல் வேறு ஏதாவது வழியில்தான் வர வேண்டும். வராது என்று நம்பிக்கை. தூத்து முடித்த பிறகு முகம் மழித்தல், இடையிடையே மடிக்கணினியை மூடி பைக்குள் வைத்தல் எடுத்துப் போக வேண்டிய கோப்புகள், புத்தகங்களை ஒழுங்குபடுத்துதல் என்று சிறு வேலைகளையும் செய்து கொண்டேன்.

உப்பு தண்ணீர் வரும் குழாயில் தண்ணீர் வரவில்லை, நல்ல தண்ணீரையே பயன்படுத்த வேண்டியிருந்தது. குளித்த உடை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். பிஎஸ்என்எல் 3G காலை வாரிக் கொண்டுதான் இருந்தது. இரண்டு வாழைப்பழங்களையும் பைக்குள் போட்டுக் கொண்டேன். காலை உணவுக்குப் பிறகு சாப்பிடலாம்.

வெளியில் வரும் போது 6.30. கைபேசியில் நேர கண்காணிப்பு 20 நிமிடங்களில் அமைத்துக் கொண்டேன். முதல் மணி பேருந்து வடபழனி சாலை நிறுத்தத்தை அடையும் போது அடித்தது. கேசவர்த்தினி அருகில் நாளிதழ் வாங்கிக் கொண்டிருக்கும் போது 3 பேருந்துகள் போயின. அதன் பிறகு சிறிது நேரம் காத்திருந்த பிறகு 25G வந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த நிறுத்தங்களில் காலியான இருக்கைகளிலும் மற்றவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். கடைசியில் பேருந்து நிலையத்துக்குள்தான் இடம் கிடைத்தது. சிறிது நேரத்துக்கு உட்கார்ந்து கொண்டேன்.

100 அடி சாலை தாண்டி பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்தினார். சாலையைக் கடந்து வடபழனி நிறுத்தத்துக்கு வந்தேன். தாம்பரம் போகும் பேருந்துகள், வேளச்சேரி போகும் பேருந்துகள் நிறைய வந்தன. கேளம்பாக்கம் போவது 570, திருப்போரூர் போவது 569C. இரண்டிலும் கட்டணம் ஒன்றுதான். முந்தையது வேளச்சேரி போகாமல் மத்திய கைலாஷ் வழியாக போகும். அருகில் இருந்த கடையில் ஆனந்த விகடன் வாங்கினேன். அப்படியே 100 ரூபாய்க்கு சில்லறையும் கிடைத்தது. தேவைப்பட்டது போல 569C வந்தது.

ஏறி படிக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். சீட்டு வாங்கிய பிறகு மடிக்கணினியை  திறந்து இணையத்தில் இணைந்து பார்த்தேன். நன்றாகவே வேலை செய்தது. கட்டுரைகளை திறந்து வைத்துக் கொண்டு துண்டித்துக் கொண்டேன். படிப்பதும், எழுதுவதும் வசதியாக இல்லை. பேருந்து குலுங்கலிலும், உள்ளே நிலவிய மூடிய சூழலிலும். அரை மணி நேரத்துக்குள் மூடி வைத்து விட்டேன். பெரிய அளவில் தடங்கல்கள் இல்லாமல் 8.30க்கெல்லாம் சோழிங்க நல்லூர் தாண்டி விட்டது.

நாவலூரில் இறங்கி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று இறங்கி விட்டேன். சொல்லிக் கொள்ளும்படி கடைகள் எதுவும் இல்லை. ஒரு ரோட்டோரக் கடையில் பொங்கல்+வடை+வட்டு தோசை 2 சாப்பிட்டேன். 22 ரூபாய். விழுப்புரம் கோட்ட பேருந்தில் ஏறி சிறுசேரி இறங்கிக் கொண்டேன். 5 ரூபாய் சீட்டு. ஆட்டோக்கள்  நிற்கும் இடத்துக்கு வந்தால் ஒரு பெண் ஏறியிருந்த ஆட்டோ நின்றிருந்தது. அடுத்தடுத்து மொத்தம் 5 பேர் ஆகும் வரை போக்கு காட்டி விட்டுத்தான் எடுப்பார். அப்படித்தான் எடுத்தார்.

இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். கறுப்புப் பணம் ஏற்றுமதியின் மூலமாக உள்ளே வந்தது என்று சொன்னார். உலக அளவிலான பொருளாதார நெருக்கடியால் இந்தியாவும் பாதிக்கப்படுகிறது என்றார். நமது விலைவீக்கம் வைத்துப் பார்த்தால் 2 ஆண்டுகளில் 20% மதிப்பு குறையத்தான் வேண்டும் என்று காரணம் சொன்னார். எல்லா நாடுகளும், தத்தமது நலன்களைத்தான் பார்த்துக் கொள்கின்றன. காங்கிரசு, மன்மோகன் சிங் அரசு மட்டும் நம் நாட்டு நலன்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாகிஸ்தான் நிலையாக இருக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறார்கள் என்று கடைசியில் ஒரு ரைடர் போட்டு விட்டு எழுந்து போனார்.

9.15க்கு வகுப்புக்குப் புறப்பட்டேன். நகல்கள் எடுப்பதற்கு எனது பட்டப்படிப்பு சான்றிதழ், நிரந்தர கணக்கு எண்ணின் நகல், கொடுப்பதற்கு புகைப்படம் ஒன்று. கூடவே வகுப்பில் எடுக்க வேண்டிய பாடத்திற்காக ஒரு பக்கம் 30 நகல்கள் எடுக்க வேண்டும். முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்குத் தேவை. 30ல் கணிசமான பகுதி மீந்து விட்டது. எதுவும் சாக்கு போக்கு சொல்லாமல் எடுத்துக் கொடுத்து விட்டார்.

முதலாமாண்டு வகுப்பறைக்குள் வந்தால் மட்டும் உட்கார்ந்திருந்தார். முதல் வகுப்பில் அவரை குறி வைத்து எழுந்து படிக்கச் சொன்னது நல்ல பலனை தந்திருக்கிறது. அதன் பிறகு வகுப்பில் மிகவும் அடக்கமாக, வீட்டுப் பாடங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். முதல் அசைன்மென்டில் 9.5 மதிப்பெண் வாங்கியதில் அவரும் ஒருவர்.

கூட்டு சித்திர எழுத்துக்களை ஆய்வு செய்வதன் மூலம் சீன மொழி கற்றுக் கொள்வது என்ற புத்தகத்திலிருந்து எடுத்த பக்கத்தின் நகலை கையில் கொடுத்து அதில் இருந்த கேரக்டர்களை படிக்கச் சொன்னேன். கரும்பலகைக்கு அருகில் நின்று படிக்க வேண்டும். அடையாளம் தெரியாத கேரக்டர்களை எழுத வேண்டும்.

个, 第, 儿, 工 என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும்தான் புதியவை. மற்ற அனைத்தும் ஏற்கனவே கற்றுக்  கொண்டவைதான். அவர் எழுதி முடிக்கும் போதுதான் அடுத்த மாணவர் உள்ளே வந்தார் அவர் கையிலும் நகலைக் கொடுத்து படிக்கச் சொன்னேன்.

நன்கு படித்தார். சுமார் அரை மணி நேரத்துக்குள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். போன வகுப்பிலும் சரியாக 11 மணிக்கு திரைப்படத்தை ஆரம்பித்திருந்தேன். இந்த வகுப்பில் பாடம் 9.15க்கு ஆரம்பித்து விட்டிருந்தது. சரியான நேரத்துக்கு வந்தவர்கள் காத்திருக்கக் கூடாது என்பதை நடைமுறை ஆக்கி விட வேண்டும்.

அவர் வந்த முதல் வகுப்பில் போட்ட போடு நன்கு வேலை செய்கிறது. அவரும் ஒழுங்காக படித்து, எழுதி விட்டு வருகிறார். இரண்டு கறுப்பு ஆடுகள்.  ஒருவர் என்னதான் அட்டகாசம் செய்தாலும் படித்து விடுகிறார், இன்னொருவரை நோக்கி ஒரு அதட்டல் போட வேண்டி வந்தது. வகுப்பு முடிந்த பிறகு அழைத்து பேசினேன். அப்போதும் வெளியில் ஓடுவதில்தான் குறியாக இருந்தார்.

10.45க்கு வகுப்பு முடிந்து, 11.15க்கு அடுத்த வகுப்பு. 10 நாட்கள் வகுப்புக்கு வராதவர் வந்து கேரக்டர்களை எழுதிக் காட்டுமாறு நோட்டைக் கொடுத்தார். உடல்நிலை சரியில்லாததால் வகுப்புகளை தவற விட வேண்டியதாயிற்றாம். எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன்.

11.15க்கு 2ம் ஆண்டு வகுப்புக்கு வந்தேன். வெளியில் நின்றவர்கள் அவசரமாக உள்ளே போனார்கள். மதியம் என்று மாற்றியிருந்தது செயலற்று போயிருக்கிறது.

எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு சீன மொழியில் ஆர்வம் காட்டினார்கள்.   வரிசையாக 35 சித்திர எழுத்துக்களை முடித்துக் கொண்டிருந்தார்கள். புதுப்புது கேரக்டர்களை எடுத்து பயிற்சி செய்திருந்தார்கள். இவர்களிடமும் அதே குரூப் கேரக்டர் அனாலிசிஸ் பாடத்தின் பக்கத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். 3 பேரைத் தவிர மற்றவர்கள் வாசித்து விட்டார்கள். அவர்கள் 3 தடவை எழுதிக் கொண்டு வர வேண்டும். .

அதன் பிறகு புதிய சொற்களுக்கான பயிற்சி நடந்தது. இறுதி தேர்வுக்கு 6 உரையாடல்கள், 4  அறிமுக பாடங்கள், 2 மேல்நிலை பாடங்கள், 35 கேரக்டர்கள் என்று அறிவித்தேன். போன பருவத்துக்கான மதிப்பெண்களை கொடுத்து விட்டார்களாம். பலர் தேர்ச்சி பெறவில்லை. என்னிடம் போய் விசாரிக்கச் சொன்னார். மதிய உணவு நேரத்தின் போது  இருவரின் சுய விபரங்களை பரீசிலித்து மறு அமைப்பு செய்து கொடுத்தேன். கார்பொரேட் சிவிக்கு மாதிரியாக ஆவணத்தைக் கொண்டு வரவில்லை.

நிறுவனங்களில் பட்டியல் தயாராக வேண்டும். 1 மணிக்குச் சாப்பிடக் கிளம்பினோம். முதலில் பேச்சுக் கொடுத்து விட்டு,  'சீனமொழிப்பாடத்தில் பலரை பெயில் செய்து விட்டாயாமே' என்று கேட்டார். சிலர் நன்கு படித்திருந்தார்கள், மற்றவர்களுக்கு திரும்பவும் பயிற்சி அளிக்கலாம் என்று சொன்னேன். என்னுடைய சான்றிதழ்களைக் கேட்டார்கள்.

2.30க்குப் புறப்படும் போது அறைக்குப் போய் மதிப்பெண் பற்றி விசாரித்தேன். யாரிடமும்  காண்பிப்பதில்லை என்ற எச்சரிக்கையுடன் காண்பித்தார். அகநிலை மதிப்பெண் 34.5/35, தேர்வில் 44.5/50
ஏதோ கணக்கின் படி அகநிலை மதிப்பெண் 23 ஆகியிருந்தது. அதுதான் முறை, அதைப்பற்றி யாருக்கும் சொல்லக் கூடாதாம். வெளியில் வந்து  சொன்னேன். 'சப்ஜெக்டில் நன்கு செய்திருக்கிறாய், ஆனால் வருகைப்பதிவு விஷயத்தில் ஏதோ குளறுபடி'. சீக்கிரத்தில் விட்டு விடப் போவதில்லைதான்.

வெளியில் வந்து கொஞ்ச நேரம் காத்திருந்து ஆட்டோவில் ஏறினேன். சோழிங்கநல்லூரில் இருந்து வந்த ஆட்டோ போலத் தெரிந்தது, உண்மைதான். 20 ரூபாய் கட்டணம். சாலையில் இறங்கினால் 570 போனது, இப்போது சிஎல்ஆர்ஐ போக வண்டி வேண்டும். 19Bதான் சரி. 21H இரண்டு வண்டிகள் போயின. தொடர்ந்து 19B குளிர்சாதனப் பேருந்துதான் வந்தது. ஏறி கீழ் இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன். 45 ரூபாய் சீட்டு, ஐஐடி அருகில் இறங்குவதற்கு. வழியில் கண்ணயர்ந்து இளைப்பாறவும் வாய்ப்பு கிடைத்தது.

மத்திய கைலாஷ் அருகில் பேருந்து நின்றது, ஹாட்சிப்ஸ் அருகிலும் நெரிசலில் மாட்டி வேகம் குறைந்தாலும் இறங்க முடியும் அளவுக்கு நிற்கவில்லை. ஐஐடி நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்து சிஎல்ஆர்ஐக்குள் நுழைந்தேன்.

கான்டீனில் போய்ப் பார்த்தால் இன்னும் திறந்திருக்கவில்லை. அப்படியே கிளாட் அருகில் மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து கணினியை இயக்கிப் பார்த்தேன். 3.30 ஆகியிருந்தது.

பயிற்சிகள் கொடுப்பதற்கு பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களிலிருந்து பணம் இருப்பதாக தகவல் வருகிறது ஆனால் எப்படி யாருக்கு பயிற்சி அளிப்பது தெரியவில்லை

'பயிற்சி அளித்தால், ஏதோ தகுதி அதிகமானது போல கூடுதல் சம்பளம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் தொழிலாளர்கள்' என்று அவர்கள் மத்தியில் இருக்கும் தயக்கத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

4.50க்கெல்லாம் மணி பார்க்க ஆரம்பித்து 5 மணிக்கு எழுந்து விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தேன். சிஎல்ஆர்ஐ எதிரில் சாலையைக் கடக்கவே 10 நிமிடங்கள் ஆயின. மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தம் வந்து கடந்து போன ஆட்டோவை பார்த்ததும் நிறுத்திக் கொண்டார்.

வியாழன், நவம்பர் 24, 2011

வாசனை இல்லாத வாடிக்கைகள்


நேரம் 5.40

இன்றைக்கு காலையில் கல்லூரிக்குப் போக வேண்டும். 9.15க்கு முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு. ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். 10 நிமிட நடையில் கேசவர்த்தினி, அங்கிருந்து பேருந்து பிடித்தால் 15 நிமிடங்களில் வடபழனி பேருந்து நிறுத்தம். 7 மணிக்கு கேளம்பாக்கம் அல்லது திருப்போரூர் அல்லது மாமல்லபுரம் போகும் பேருந்தில் ஏறி விட்டால் 8.30, 8.45க்கு சிறுசேரி போய் விடலாம்.

புதன் கிழமை மாலையிலேயே வந்து இரவை சென்னையில் கழித்து விட்டு வகுப்புக்குப் போவது இதுதான் முதல் தடவை. எப்படி நேரத்தில் போய் சேருகிறோமா என்று பார்க்கலாம்!

நேற்று காலையில் தாமதமாக எழுந்து நாட்குறிப்பு முடித்த பிறகு உலாவி வரப் போனேன். அதற்கு முன்பு முந்தைய நாள் துவைத்து காய வைத்திருந்த துணிகளை மடித்து வைத்தேன். வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டிருந்ததால் வெளியில்தான் சாப்பிட வேண்டும். நேரமும் ஏழரை தாண்டியிருந்தது. நாளிதழ் வாங்கி விட்டு அப்படியே அழகர் விடுதியில் சாப்பிட்டு விடலாம் என்று போனேன். வழியில் வீட்டு வேலை செய்யும் அம்மா இன்னொரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து புன்னகைத்தார்கள். குளிர் இன்னமும் சுளீர் என்று குத்தியது. தலையைச் சுற்றி காதை மூடி ஏதாவது போட்டுக் கொண்டுதான் மக்கள் வெளியில் நடமாடுகிறார்கள்.

டெக்கான் குரோனிக்கிள் வாங்க 2 ரூபாய் கொடுத்தால் மீதி 50 பைசா தந்து விட்டார். முந்தைய  நாள் சப்பக் கூடிய மின்ட் மிட்டாய் கொடுத்தார். அழகர் விடுதியில் ஒரே ஒருவர்தான் உட்கார்ந்திருந்தார். பழக்கமாகி விட்ட பரிமாறுபவர் வரும் போது வேகமான, உற்சாகமான ஒரு வணக்கம் வைத்தார். பொங்கல் கேட்டால் வடையுடன் வந்தது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒவ்வொருத்தராக பலர் வந்து இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்திருந்தன. அதை முடித்து விட்டு தோசை சொன்னால் வருவதற்கு சில நிமிடங்கள் பிடித்தன. அடுத்தது காபி, அனைத்துக்குமான பில். கொடுத்து விட்டு திரும்பி நடை.

10 மணிக்கு ராணிப்பேட்டை புறப்படுவதாக திட்டம். மின்சாரம் வெட்டப்படுவதற்கு முன்பு துணிகளை தேய்த்து வைக்க வேண்டும். குளித்து விட வேண்டும். வீட்டுக்கு வரும் போது 8.30. அரை மணி நேரம் இணையத்தில் இணைத்து, மின்னஞ்சல்கள், வலைப்பதிவுகள் பாரத்துக் கொண்டேன். ராணிப்பேட்டையிலிருந்து தொலைபேசி, 11.30 போல வரும்படி சொன்னார். எங்கோ வெளியில் போகிறாராம். நல்லதுதான்.

5 சட்டைகளும், 2 பேன்டுகளும் தேய்க்க வேண்டும். முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆனது. சரியாக 9.30 ஆகியிருக்க தொலைக்காட்சியை போட்டு ஜென்ராம் நடத்தும் புதுப்புது அர்த்தங்கள் வைத்தேன். பாஜகவின் வானதி, இககவின் சி மகேந்திரனும் கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாடாளுமன்ற முடக்கம், ராஜீவ் காந்தியின் உபி சாகசம் என்று பேசினார்கள். 10 மணிக்கு 3 நிமிடங்கள் இருக்கும் போது முடிந்து விட்டது. தேவையில்லாத ஆர்ப்பாட்டம், போலியான உற்சாகம் என்று காட்டாமல் தேவைக்கேற்ற சுருக்கமான தொடக்கம், அதை விட சுருக்கமான முடித்து வைப்பு என்று ஜென்ராம் கச்சிதமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். துல்லியமான கூர்மையான அரசியல் விமர்சனங்களை தானும் முன் வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை 2 மணி நேரம் நடத்தினாலும் பார்க்க அலுப்பு தட்டாதுதான்.

குளித்து விட்டு 20 நிமிடங்கள் தியானம். பையில் கணினி, அச்செடுக்க வேண்டிய ஆவணங்களின் மென்வடிவங்கள் பென்டிரைவில் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். சென்னைக்கு எடுத்துப் போக வேண்டிய புத்தகங்கள் - சீன மொழி புத்தகங்கள், மார்க்சிய புத்தகங்கள், துணி மணிகள், எடுத்து பெட்டியில் அடுக்கிக் கொண்டேன். இதையும் தூக்கிக் கொண்டு போனால் ராணிப்பேட்டையிலிருந்து நேராக சென்னை போய் விடலாம். இந்த சுமையை ஏன் இழுத்துக் கொண்டு திரிய வேண்டும். மதியம் திரும்பி வந்து மாலையில் புறப்படலாம்.

சாலைக்கு வந்து பகிர்வூர்தியில் புதிய பேருந்து நிலையம், 7 ரூபாய் வாங்கினார். பேருந்து நிலையத்துக்குள் போகாமல், சென்னை திசையில் போகும் பேருந்துகள் வெளியில் வந்து சாலையைத் தொடும் இடத்தில் சாலை நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்தத்தில் நின்று கொண்டேன். காஞ்சிபுரம் பேருந்து வந்தது. பல இருக்கைகள் காலியாக இருந்தன. 2 பேர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். 10 ரூபாய் ஆக இருந்த கட்டணம் 18  ரூபாய் ஆகியிருக்கிறது.

சத்துவாச்சாரி தாண்டியும் பெரிய அளவு கூட்டம் ஏறி விடவில்லை. அருகில் யாரும் உட்காரவில்லை. பையைத் திறந்து மடிக்கணினியை இயக்கி, டேடா கார்டை இணைத்தேன். இணைப்பு கிடைத்தது. தொடர்ந்து மேல்விஷாரம் வரை இணையத்தில் படித்துக் கொண்டே போனேன். இணைப்பு துண்டிக்கவேவில்லை. கன்னியாகுமரி மீனவர்களுடன் உரையாடல் பதிவு வினவு தளத்தில் வெளியாகியிருந்தது. மீனவர் வாழ்க்கை, இந்துத்துவா செயல்பாடுகள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்று மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது.

தொலைபேசி வருவதாகச் சொன்னேன். வேண்டுமென்றால் வாலாஜா பேருந்து நிறுத்தம் வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னார். வீண் அலைச்சல் ஏன் என்று மறுத்து விட்டேன். ஆட்டோ பிடித்து போகும் போது அவரிடம் காசோலையை வாங்கிக் கொண்டு போய் விடலாம். பேருந்தை விட்டு இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கும் போது பரிச்சயமான ஆட்டோ ஓட்டுனர் ஒரு வணக்கம் வைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். 60 ரூபாய் வாங்குகிறோம் என்று கட்டண விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வழியில் சில்லறை மாற்றிக் கொள்ள வேண்டும், 1000 ரூபாய்க்கு என்று சொன்னதும் எதிர் பக்கம் கடந்து போய் கடையில் மாற்றிக் கொண்டு வந்து விட்டார். ஒன்பது 100 ரூபாய்கள், இரண்டு 50  ரூபாய்கள்.

தொலைபேசி வந்து கொண்டிருப்பதை தெரிவித்தேன். வாசலுக்கு வந்து விட்டால் அவரிடமிருந்து வாங்கிக் கொள்வதாக சொன்னேன். சரியாக அவர் வாசலில் காத்திருந்தார், உறையை வாங்கிக் கொண்டு முன்பு இறங்கினேன். 100 ரூபாய் தாளைக் கொடுத்து 40 ரூபாய் திரும்பப் பெற்றுக் கொண்டேன்.

வாசலில் கேட்டால் வெளியில் போயிருந்தவர் திரும்பி வந்து விட்டாராம். தொழிற்சாலையில் உள் நுழைவாசலில் நின்றிருந்தார். அலுவலக நுழைவாயிலில் இருந்தே ஒரு வணக்கம் வைத்து விட்டு உள்ளே போனேன். பளபளவென்று ஜொலிக்கிறீங்களே என்று கிண்டல் செய்து விட்டு உட்கார்ந்தேன்.

இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தார். வந்த பிறகும் விவாதம் முடிந்து விடவில்லை. நான் காத்திருந்தேன். 3G டாடா கார்டு மகத்துவங்கள், ஏழாம் அறிவு படத்துடன் master of zenஐ ஒப்பிட்டு பேசினேன். வந்ததும் அவருடன் அதைப்பற்றிப் பேசி அதன் நகலை அவர்களுக்கும் எடுத்துக் கொடுத்து விட்டேன். நகல் செய்து கொண்டார்.

இணையத்தில் இங்கும் டேடா கார்டு இணைந்தது. அவர்களது கம்பியில்லா இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு இணையத்திலும் அவர்கள் வழங்கியிலும் மேய்ந்தேன். வழங்கியில் தேவையில்லாத காப்பு கோப்புகளை அழித்து இடம் ஏற்படுத்தினேன். உடன் பேச வேண்டிய விபரங்களை பகிர்ந்து கொண்டேன். கேட்ட ஒரு மாற்றத்தை செய்து கொடுத்து விட்டேன்.

நிறையவே காத்திருக்க வைக்கிறார். திரும்பவும் போய் கேட்ட பிறகுதான் உள்ளே போக முடிந்தது. என்னென்ன பணிகள் இருக்கின்றன என்று விளக்கினார். அதற்கான கட்டணங்களை பேச ஆரம்பிக்கும் போது அவரை அனுப்பி விட்டார். ஏற்கனவே செய்த வேலைகளுக்கு தந்து விடுங்கள். இனிமேல் செய்யும் இன்று பேசிய வேலைகளுக்கு இன்ன தொகை என்று  ஏற்கனவே கொடுத்திருந்த வேலை-விலை பட்டியலை வைத்து விளக்கினேன். வழக்கமான நடனமாடல் ஆரம்பித்தது, 'இதெல்லாம் முதலிலேயே செய்திருக்க வேண்டும், எ னக்கு விபரம் தெரியவில்லை. நிறைய செலவழிக்கிறோமோ என்று தோன்றுகிறது' என்றெல்லாம் பேசினார். இவ்வளவு கொடுத்து விடுகிறேன் முடித்து விடுங்கள்' என்றார். 'அவ்வளவு குறைக்காதீர்கள் மொத்தம்  வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். இது வரை பல லட்சங்கள் முதலீடு செய்து கடனில் நிற்கிறோம். அந்தக் கடன்களை அடைப்பதுதான் இப்போதைய வேலை.'

'மற்ற இடங்களுக்கு செய்ததுதானே, 2 வாரம் வந்து செய்து கொடுத்து விடுங்கள்' என்றார். 'அவ்வளவு மலிவாக என்னை எடை போடாதீர்கள்' என்று சொல்ல வந்ததைச் சொல்லும் வாய்ப்பு நல்ல வேளையாக ஏற்படவில்லை. கூட்டாக சேர்ந்து செயல்படுவதன் சிக்கல்களை அவரே விவரித்தார். இது போன்ற பணிகளை நான்கைந்து டேனரிகள் சேர்ந்துதான் செய்ய வேண்டும் என்று சொன்னதைத் தொடர்ந்து. லெதர்லிங்க் திட்டமே கூட்டாக எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவான ஒரு மென்பொருளை உருவாக்குவதுதான். அதை ஏற்றுக் கொள்ள யாருக்கும் மனமில்லை, இனிமேலும் மனம் வராது. அடுத்தவரை பிச்சைக்காரராக்கிதான் தான் முன்னேற முடியும் என்று இருக்கும் இந்த அமைப்பில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

'யோசித்துதான் சொல்ல முடியும்' என்றார். 'யோசித்தே சொல்லுங்கள்' என்று எழுந்து விட்டேன். முதல் பணம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டதும் காசோலை போடச் சொல்வதாகச் சொன்னார். சாப்பிடக் கிளம்பியிருந்தவர்  உட்கார்ந்து காசோலை எழுதி விட்டார். பேசிய விபரங்களை அவருக்குச் சொல்லி விட்டேன். "கற்றுக் கொள்வதில் கொஞ்சம் ஸ்லோதான். பிற பணிகள், அடிக்கடி ஊருக்குப் போவது என்று கவனம் சரியாக செலுத்த முடியவில்லை. வேகமாக இல்லா விட்டாலும், இவருக்கு விசுவாசம் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது. தனது குடும்பத்தையும் இங்கு அழைத்து வந்து விட்டார்" என்று நான் சொல்ல

"ஆமா, லீவு நிறைய எடுக்கிறார்தான், ஆனால் பல பணிகளை எடுத்து செய்கிறார் என்ற ஆர்வம் சிறப்பானது. இனிமேல் பார்க்க வேண்டும்"

காசோலை வாங்கிக் கொண்டு, உணவு இடைவேளைக்கு வீட்டுக்குப் போகும் போது நானும் அவருடன் ஏறிக் கொண்டேன். வாலாஜா வங்கிக்கு அருகில் இறங்கிக் கொண்டேன். கையோடு காசோலையை போட்டு விடலாம். உடனேயே கணக்கில் சேர்ந்து விடும். முதல் மாடியில் வணிக வங்கிப் பிரிவில் போட வேண்டும். கூட்டம் இல்லை, படிவத்தை நிரப்பி காசோலையை கொடுக்கப் போகும் போது கையில் வாங்கி தானே கொண்டு கொடுத்தார்.

அவரது அக்கா பையன் வேலை விஷயமாக சொல்லியிருந்தார். அடுத்த வாரம் போய்ப் பார்க்கச் சொன்னேன். அதற்கு முன்பு நானும் பேசி விடுவதாக உறுதி அளித்தேன். அவர்கள் குழுவில் நிரல் எழுதும் திறமையுடன் இவரை எடுத்துக் கொள்ளலாம்.

வெளியில் வந்து அரக்கோணம் போகும் பேருந்தில் ஏறி வாலாஜா பேருந்து நிலையத்துக்குள் இறங்கினேன். அப்போதுதான் வண்டியில் பேருந்து நிலையத்தைக் கடந்து போனார். ரேஷன் அட்டைக்கான கையொப்பத்தை வாங்கி விட்டாராம். பத்திரிகைக் கடையில் ஜூனியர் விகடன் வாங்கிக் கொண்டு எதிரில் இருந்த ஆரிய பவனுக்குப் போனேன். சாப்பாடு சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒரு வயதான ஐயாவும், எதிரில் அம்மாவும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசையில் வெளிப்பக்க இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு தயிர் சாதம், கூடவே ஊறுகாயும், பொரியலும் கொடுத்தார்கள். பல இடங்களில் தயிர் சாதத்துக்கு எந்த காயும் கொடுக்க மாட்டார்கள். நிறைய இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்பு முடித்து விட்ட பெரியவர், நான் எழுந்து விழ விட்டாலும், என்னை தொந்தரவு செய்யாமல் மேசையை சுற்றிக் கொண்டு போனார். குடும்பத்தோடு வந்திருக்கிறார்கள் போலிருந்தது, இன்னொரு நடுத்தர வயது பெண்மணி வந்து இவர்களை அழைத்துப் போனார். இரண்டு பேருமே உழைத்து தளர்ந்த முதியவர்கள்.

சாப்பிட்டு விட்டு பேருந்து நிறுத்தம். காஞ்சிபுரத்திலிருந்து வந்த பேருந்தில் இடம் இருந்தது. ஏறி கடைசி இருக்கையில் உட்கார்ந்தேன். பேருந்து கிளம்பும் போது இரண்டு வயதான தம்பதியினர் இடம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே ஏறினார்கள். என் அருகில் இருந்த இரண்டு மாணவர்களும் எழுந்து இடம் கொடுத்து விட்டார்கள். முதியவர்கள் இருவருக்கும் நடக்கக் கூட தடுமாறும் வயது. சத்துவாச்சாரியில் இறங்கினார்கள்.

பேருந்து நிலையத்தில் இறங்கி அரசு நகரப் பேருந்தில் ஏறினேன். இங்கிருந்து ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு 4 ரூபாய்தான் கட்டணம் என்று உறுதியானது. நடத்துனர் உற்சாகமாக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு வந்தால் எதிர் வீட்டில் வீட்டு உரிமையாளர் தம்பதியினர் அப்போதுதான் உணவு இடைவேளைக்குப் பிறகு அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மின்சாரம் இருந்தது. இணையத்தில் சிறிது நேரம், காசோலை விபரங்களை எழுதிக் கொண்டேன். காசோலைகளை தயாரித்துக் கொண்டேன்.

அனுப்பிய மின்னஞ்சல் போகாமல் திரும்பி விட்டது.  4 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது, கொஞ்ச நேரம் ஓய்வு, அதன் பிறகு கைகால் முகம் கழுவி விட்டு ஞாபகமாக தேவையான பொருட்களை எல்லாம் பெட்டியில் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். 5.30 ஆகி விட்டிருந்தது. குறுஞ்செய்தி அனுப்பி தொலைபேசி எண் கேட்டேன். அனுப்பி விட்டு அழைத்து பேசினார் திருமண அழைப்பிதழ் அனுப்ப முகவரி கேட்க, விபரங்களை குறுஞ்செய்தியில் அனுப்பினால் போதும் என்று சொன்னேன். அனுப்பியும் விட்டார்.

4ம் தேதி கூடங்குளம் போவதாகத் திட்டம். 5ம் தேதி உசிலம்பட்டியில் திருமணம். வெளியில் நடக்கும் போதே தொலைபேசினேன். எடுக்கவில்லை. ஏதோ இன்ஸ்டிடுயூட்டில் பயிற்றுவிப்பாளராக வேலை செய்கிறார் என்று சொல்லியிருந்தார். மாலையில் திரும்ப அழைக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். சாலைக்கு வந்து பகிர்வூர்தியில் ஏறி பேருந்து நிலையம் வெளியில் இறங்கிக் கொண்டேன். 10 ரூபாய் கொடுத்தால் 2 ரூபாய்தான் திரும்பத் தந்தார். பெட்டிக்காக கூடுதல் கட்டணம் என்று நினைக்கிறேன்.

அலங்காருக்குப் போய் செட் தோசை ஒன்று சாப்பிட்டேன். வடை கறி என்பது கொஞ்சம் அபாயகரமான வஸ்துதான், தவிர்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு காபி. வெளியில் வந்து சென்னை பேருந்துகள் வரிசையில் பார்த்தால் ஓசூர்-சென்னை 303 தடம் நின்றிருந்தது. ஏறி உட்கார்ந்தேன். அருகிலேயே குளிர்சாதன பேருந்து.

இரண்டு நாட்களாக கூட்டம் ஏறவில்லையோ என்னவோ, வேலூர்-சென்னை கட்டணம் 160 ரூபாய் என்று முகப்பிலேயே எழுதி ஒட்டியிருந்தார்கள். 15 ரூபாய்தான் ஏறியிருக்கிறது. அதிலேயே போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து இறங்கி ஏறினேன். மடிக்கணினி பயன்படுத்த வசதியாக படியேறியதும் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன்.  இணையத்தில் இணைத்து தொடர்புடைய கட்டுரைகளை திறந்து கொண்டேன். இணையம் நன்றாகவே இணைந்தது. அவற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.

அழைப்பு வந்தது. மிகவும் பாசமாக பேசினார். உங்களைப் பற்றிதான் அடிக்கடி பேசுவேன் என்றார், 4,5,6 தேதிகளில் அவர் ஊருக்கு வருவதாகச் சொன்னேன்.

பூந்தமல்லி வரை 145 ரூபாய் சீட்டு. சாதாரண கட்டணத்தை விட 2 மடங்கு, முன்பு மூன்று மடங்காக இருந்தது.

பூந்தமல்லி தாண்டுவது வரை கிட்டத்தட்ட 2 மணி நேரம் இது நடந்தது. ஒரு வடிவம் வந்து விட்டிருந்தது. பூந்தமல்லியில் இறங்கி 25G வடபழனி வரை பேருந்தில் ஏறினேன். கேசவர்த்தினிக்கு 13 ரூபாய் சீட்டு. கட்டுரையை எப்படி வடிவம் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டே போனேன்.

வீட்டுக்குத் தொலைபேசி அப்பா அம்மாவிடம் பேசினேன்.

கேசவர்த்தினியில் இறங்கி, அருகில் 4 வாழைப்பழங்கள் 10  ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன். ரஸ்தாளி என்று பெயர் சொன்னார். ராமாபுரம் போகும் பாதையில் நடக்கும் போது வந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டேன். 40 ரூபாய் கேட்டார்,30 ரூபாய் என்று சொல்லி ஏறினேன். அவர் வீட்டுக்குப் போய்க் கொண்டுதான் இருக்கிறார். இது கூடுதல் வருமானம்தான். தூரத்துக்கு 20 ரூபாய்தான் சரியான கட்டணம். காலையில் 7 மணிக்கே ஆரம்பித்து விடுவாராம், இப்போது 9 மணி வரை ஓட்டியிருக்கிறார். வீட்டுக்கு முன்பு இறங்கி 50 ரூபாய் தாளை நீட்டினால் சில்லறை இல்லை. அருகில் பேக்கரியில் வாங்கி 30 ரூபாய் கொடுத்தேன்.

உள்ளே வந்து உடை மாற்றி, புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு கட்டுரையைப் பார்த்தேன். 1 மணி நேரம் அமைத்துக் கொண்டிருந்தேன். இணைய இணைப்பு சொதப்பியது. இணைப்பு கிடைத்தாலும், பக்கங்கள் திறக்கவேவில்லை. இருக்கிற தகவல்கள் வைத்து எழுதிக் கொண்டிருந்தேன்.

எலி ஒன்று நடமாடியதைப் பார்த்திருந்ததிலிருந்து எது வழியாக வருகிறது என்று சிந்தனை. சமையலறை பாத்திரம் கழுவும் இடத்திற்கு கீழ் இருக்கும் ஓட்டையை அடைக்க வேண்டும். அதுதான் என்று நிரூபணம் ஆகியிருந்தது. 10 மணிக்குப் போல் மாடிப்பக்கம் போய் முயற்சித்துப் பார்த்தேன். அதன் பிறகு வாசலுக்கு வெளியில் இரண்டு இடங்களிலும் கொஞ்சம் இணைப்பு கிடைத்தது. பெல்கின் கம்பியில்லா இணைப்பும் கிடைத்தது. ஆனால் பலன் இல்லை.

11 மணிக்கு பல் தேய்த்து விட்டு தூங்கப் புறப்பட்டேன். 20 நிமிடம் தியானம். நல்ல தூக்கம். 4 மணிக்கு விழிப்பு வந்தது. நாட்குறிப்பு எழுத வேண்டும், கட்டுரையை முடிக்க வேண்டும், ஆறரை மணிக்குப் புறப்பட வேண்டும் என்று நினைவு வரை 4.20க்கு எழுந்து விட்டேன்.

இதை முடிக்கும் போது 5.40. வீடு தூத்து, முகம் மழித்து, குளித்து புறப்படுவதற்கு 6.30. மதியம் 2.45க்கு வகுப்பு முடிந்ததும் புறப்பட்டு 4 மணி சிஎல்ஆர்ஐ கூட்டத்துக்கு வந்து அங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு வளசரவாக்கம் வர வேண்டும். நாளைக்கு காலையில் பல்லாவரம், மதியம் பிடிக்க வேண்டும்.

புதன், நவம்பர் 23, 2011

சேவையில் சிறந்தது தனியாரா, அரசுத் துறையா?


நேற்று காலை நாட்குறிப்பு எழுதி முடித்த பிறகு காலை நடைபயிற்சிக்குப் போனேன். கோபாலபுரம் வழியாக காட்பாடி ரோடு வந்து சில்க்மில் வரை. டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு திரும்பினேன். துணி துவைக்க சோப்பு வாங்க வேண்டும், வழியில் எந்த கடையும் தென்படவில்லை. அர்ச்சனா மருத்துவமனை மருந்தகத்தில் கேட்கலாம் என்று தோன்றினாலும் சாலையைக் கடந்து போகவில்லை. பிள்ளையார் கோவில் அருகில் சாலையைக் கடந்து நாளிதழ் கடையில் பார்த்தேன், டிடர்ஜன்ட் சோப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே நடந்து சுசீ மோட்டார்ஸ் அருகில் திரும்பினேன்.

கல்யாண மண்டபத்துக்கு அருகில் இருக்கும் மருந்துக் கடையில் கேட்டால், சோப்பு தூள்தான் இருக்கிறது என்றார். தூள் என்னிடமும் இருந்தது. கட்டிதான் வாங்க வேண்டும். வழக்கமாக பொருட்கள் வாங்கும் மளிகைக்கடைக்குப் போனேன். கடை உரிமையாளர் இல்லை. காலை வேளையில் காய் வாங்க சந்தைக்குப் போயிருப்பார். மதிய வேளையில் அவரது மனைவி இருப்பார். இப்போது இன்னொருவர், அவரும் உறவினர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். காய் பகுதியில் ஒரு வயதானவரும் நிற்பார், அப்பா?.

கொஞ்ச நேரம் காத்திருந்து சோப்பு கேட்டேன். என்ன இருக்கிறது? முன்பு ஒரு நாள் கேட்ட போது ரின் மட்டும்தான் இருந்தது. இப்போது அரசன் இருக்கிறது. அரசன் வாங்கிக் கொண்டேன். 13 ரூபாய் பெரிய கட்டி.

வீட்டுக்கு வந்து போட்டிருந்த பேன்ட், உடுத்திருந்த சாரம் இரண்டையும் சேர்த்து சோப்பு போட ஆரம்பித்தேன். நிறைய துணிகள்.  வாரத்துக்கு ஒரு முறை துவைத்தால் இப்படித்தான் ஆகும். பேசாமல் துணி துவைப்பையும் மொபைல் ஆக மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்று மாலை உணவு சமைக்கும் போது கேஸ் தீர்ந்து விட்டது. புதிய சிலிண்டர் வாங்கினால் அதை கொண்டு போவதும் சிரமம். வேலூரை விட்டு நகர்ந்து விடு என்ற முடிவுக்கான தூண்டுதல்கள்.

குடிக்கத் தண்ணீர் 10 நாட்களுக்கு முன்பு எடுத்ததுதான் இருந்தது. அதை குடித்தாலோ, சமைக்கப் பயன்படுத்தினாலோ வயிறு கெட்டு விடும். தண்ணீர் வருகிறதா என்று பார்க்க குடம் எடுத்துச் சென்ற காவலர் இல்லை என்று சொல்லி விட்டார். அவரிடமே காசு கொடுத்து பாட்டில் தண்ணீர் எடுத்து வரச் சொன்னேன். 25 ரூபாய். அதை குடத்தில் ஊற்றி விட்டு பாட்டிலை திருப்பி எடுத்துப் போனார். பழைய தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இன்றைக்கு வெளியில் போகும் போது இரண்டு குடங்களையும் கொடுத்து தண்ணீர் எடுத்துத் தரச் சொல்ல வேண்டியதுதான்.

துணிகளை சோப்பு போட்டு வைத்து விட்டு முகம் மழித்தேன். அதன் பிறகு துணி அலசல். துணிகள் தொங்கிக் கொண்டிருக்க குளிக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் காலை உணவுக்காக ஓட்ஸ் காய்ச்சிக் கொண்டேன். உப்புமா செய்வதற்கு இருந்த வெங்காயத்தை வெட்டி வைத்தேன். குளித்து விட்டு தியானம்.

ரவையை சிறிதளவு வறுத்து விட்டு, வெட்டி வைத்திருந்த பாதி வெங்காயத் துண்டுகளை, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு தாளிப்புடன் வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டேன். இதற்கிடையில் போக வேண்டிய இடங்களுக்கு தொலைபேசி முடிவு செய்து கொண்டேன். இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்கள் பார்த்தேன். சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் பிஎஸ்என்எல் கட்டணம் செலுத்துவது, காசோலையை வங்கியில் போடுவது. வங்கி கணக்கு அட்டை, பிஎஸ்என்எல் பில் துண்டுச் சீட்டு, கட்டணத்துக்கான காசோலை என்று எடுத்துக் கொண்டேன். அவற்றை கோப்பு அட்டைக்குள் வைத்து, பையில் எடுத்தேன். முதலில் வங்கி. வங்கிக்குள் கூட்டம் இல்லை. ஆனால், 'கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை, ஒன்றும் ஆகாது' என்று உட்கார்ந்திருந்த அம்மா அறிவித்தார்கள். 'பரவாயில்லை, எழுதிக் கொடுத்து விட்டுப் போகிறேன். பிறகு கம்ப்யூட்டர் வேலை செய்த பிறகு கணக்கில் சேர்த்து விடுங்கள்' என்று படிவம் வாங்கி நிரப்பினேன். 'கணக்கு இங்கு இருப்பதுதானே' என்று உறுதி செய்து கொண்டார்கள். படிவத்தின் இணைபகுதியை திருப்பி வாங்கிக் கொண்டு கீழே வந்தேன்.

வாணியம்பாடி போவதற்கான திட்டத்தை உறுதிப் படுத்திக் கொள்ள அவர்களை அழைத்தேன். இன்னும் கணினி சரியாகியிருக்கவில்லையாம். போய் பலனில்லை. அது ரத்தானது.

அடுத்தது பிஎஸ்என்எல் கட்டணம் செலுத்துதல். அங்கும் கூட்டம் இல்லை. 2 பேர் வரிசையில் நின்றிருக்க நான் மூன்றாவது. காசோலையையும் பில் சீட்டையும் கொடுத்தால் கணினியில் உள்ளிட்டு ரசீது அச்செடுத்துக் கொடுத்து விட்டார்.

3G டேடா கார்டு பற்றி வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் கேட்டேன். ஒரு தொலைபேசி எண் தருகிறேன் என்று மொபைல் எண் சொன்னார். அவர் பெயர் கிருபாகரன் என்றும் குறித்துக் கொள்ளச் சொன்னார்.

வெளியில் வந்ததும் எண்ணை அழைத்தேன். இளமையான ஒரு குரல் பதில் சொன்னது.

'3G டேடா கார்டு வாங்க வேண்டும். அது பற்றின விபரங்கள் வேண்டும். என்ன செலவாகும்? மாதாந்திர கட்டணம் எவ்வளவு? வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?'

'2,900 ரூபாய் ஆகும் சார், அதிலேயே 1 GB யூசேஜ் சேர்த்து கொடுத்து விடுவோம். கருவியில் விலை 2,100 ரூபாய், ஆக்டிவேசன் சார்ஜ் 110 ரூபாய்' என்று பட்டியலிட்டார். '7.2 mbps வேகத்திலான மோடம் தருவோம். 1 GBக்கு 423 ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் ரோமிங் பிரீ'

'எந்தெந்த ஊரில் பயன்படுத்தலாம். எல்லா ஊரிலும் வருகிறதா?'

'நீங்க எந்தெந்த ஊர்களில் பயன்படுத்துவீர்கள்? இந்தியா முழுவதும் எல்லா இடத்திலும் சேவை உண்டு'

'மெயினா வேலூரிலும் சென்னையிலும் வேண்டும்'

'சென்னையில் எந்தெந்த இடங்கள்?'

'வளசரவாக்கம், போரூர், சோழிங்கநல்லூர். இன்னொரு விஷயம். நான் பயன்படுத்துவது லினக்ஸ் கணினி. அதில் இந்தக் கருவி வேலை செய்யுமா என்று பார்க்க வேண்டும். என்ன மாடல் என்று சொன்னால் தேடிப் பார்ப்பேன்'

'7.2 mbps மோடம், நீங்க லேப்டாப்பை கொண்டு வாங்க, செட் செய்து விடலாம். நீங்க மதியம் 2 மணிக்கு மேல் வாங்க, இப்போ நான் வெளியில் ஒரு பயிற்சியில் இருக்கிறேன். மதியத்துக்கு மேல் வாங்க'

'பணம் செக்காக கொடுக்கலாமா, கேஷ்தான் தர வேண்டுமா?, என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?'

'கேஷ்தான் சார், உங்க ஐடி புரூப், ஒரு போட்டோ அவ்வளவுதான். அதில் இருக்கும் முகவரியையே எடுத்துக் கொள்ளலாம். தலைமை தபால் நிலையம் அருகில் வந்து விடுங்க, பழைய பேருந்து நிலையம் தாண்டி ஊரிஸ் காலேஜ் எல்லாம் போகும் வழியில்'

நினைத்ததை விட வேகமாக நடக்கிறதே என்று வீடு வந்து சேர்ந்தேன். மதிய உணவுக்கு சோறு ஒரு பாத்திரத்திலும், சிறுபயறு இன்னொரு பாத்திரத்திலும் வைத்தேன். வெட்டி வைத்திருந்த இன்னொரு பாதி வெங்காயத்தையும் போட்டு பருப்பை தாளித்துக் கொள்ளலாம்.

அது வெந்து கொண்டிருக்கும் போது இணையத்தில் பிஎஸ்என்எல் 3G அட்டை பற்றி தேடினேன். லினக்சில் எப்படி பயன்படுகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை வட்டத்தில் ஒருவர் ஒரு பக்க வழிகாட்டி இணையத்தில் போட்டிருந்தார், பிஎஸ்என்எல் அதிகாரிதான். கர்நாடகா வட்டத்தில் ஒரு பெரிய கையேடு பிடிஎப் ஆகி வெளியிட்டிருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர இந்தியா பிராட்பேண்ட் பாரம், இன்னொரு வலைப்பதிவில் விபரங்கள் கிடைத்தன. இணைப்பு வேகம் எல்லோருக்கும் நன்றாக கிடைக்கிறது. லினக்சில் இயக்குவதற்கான வழிகளும் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தன. wvdial நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த விபரங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். மதியம் போகும் போது பயன்படலாம்.

வீட்டை தூத்து துடைக்க அம்மா வந்தார்கள். அவர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பற்றிச் சொல்லி விஜய் டிவி தொடர் ஒன்றை வைத்து பார்க்க ஆரம்பித்தார்கள். 'போன வாரம் இப்படித்தான் டிராமா பார்க்கலாம் என்று பார்த்தால், கரண்ட் இல்லை. அப்பதான் கீழே கேட்டேன். 'கட்டணம் கட்டாததால் கரண்ட் கட்டாகி விட்டது. என்னிடம் தருவதாகச் சொன்னார், எனக்கு நேரம் இல்லை என்று செக்யூரிட்டி சொன்னார்.' நான் கட்டியிருப்பேன் அல்லவா, இனிமேல் இப்படி ஏதாவது செய்யணும் என்றால் என்னிடம் சொல்லு' என்றார்.

வயிறு இன்னமும் சமாதானம் ஆகியிருக்கவில்லை. மதிய உணவு சாப்பிட்டு விட்டு உட்காரும் போது 2 மணி. 2 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார் என்று உடனேயே புறப்பட்டு விடவில்லை. 2.30க்கு அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்து விட்டது.

'என்ன சார், வருவதாகச் சொன்னீங்களே, இன்னும் வரவில்லையே'. ஆச்சரியமாயிருந்தது, இவ்வளவு வாடிக்கையாளர் சேவையா!

உடனேயே புறப்பட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. 'உங்க ஐடி புரூபில் இருக்கும் முகவரியை சொல்லுங்க சார்' என்று குறித்துக் கொண்டார். 'நீங்க எப்படி வருவீங்க பைக்கிலா' என்று கேட்டு பேருந்து என்று சொன்னதும், 'ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க, அங்கிருந்து அழைத்தால் நானே வந்து அழைத்துப் போகிறேன்'. இவர் உண்மையிலேயே பிஎஸ்என்எல் ஊழியர்தானா அல்லது வேறு ஏதாவது முகவரா என்று சந்தேகமே வந்து விட்டது.

போவதற்கு முன்பு wvdial நிறுவிக் கொள்வது என்று நிறுவிக் கொண்டேன். மடிக்கணினி, அதற்கான வயர், போட்டோ, காசோலை ஒன்றும் கூட எடுத்துக் கொண்டேன். ஓட்டுனர் உரிமம் நகல் எடுப்பதற்கு வழியில் முடியவில்லை.

பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது 3 பேருந்துகள் நின்று கிளம்பி போயின. கொஞ்ச நேரம் காத்திருந்து தனியார் பேருந்தில் ஏறிக் கொண்டேன். கூட்டம் குறைவான நேரம் எல்லா இடத்திலும் நின்று நின்று ஆள் ஏற்றிப் போனார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விட்டது.

ராஜா தியேட்டர் கட்டணம் 4 ரூபாய். ஓடைப் பிள்ளையார் கோவிலில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும் 4 ரூபாய் பழைய பேருந்து நிலையம் தாண்டியும் 4 ரூபாயா என்று நினைத்துக் கொண்டேன். ஊரிஸ் கல்லூரி தாண்டி இறங்க வேண்டும் என்று எண்ணம்.

பழைய பேருந்து நிலையம் தாண்டிய பிறகு அருகில் வந்த நடத்துனரிடம் ராஜா தியேட்டர் நிறுத்தம் வந்தால் சொல்லும்படி கேட்டால், அடுத்த நிறுத்தம்தான் என்றார். 'ஊரிஸ் கல்லூரி அருகில் என்று சொன்னாங்களே' என்று தெளிவு படுத்திக் கொண்டு இறங்கி, தொலைபேசினால் சரியான இடம்தான்.

எதிரிலேயே பாரத ஸ்டேட் வங்கி, தலைமை தபால் நிலையம் இருந்தன. சாலையைக் கடந்து தபால் நிலையம் வரச் சொன்னார். தபால் நிலையம் அருகில் வந்து திரும்பவும் அழைத்தேன் அவரை எங்கு தேடுவது. தபால் நிலையத்துக்கு பின்புறம் பிஎஸ்என்எல் ஆபீஸ் இருக்கிறது.

கொஞ்சம் பூசியது போன்ற உடல்வாகுடன், உருண்டையான முகத்துடன் சுமார் 40+ வயதுள்ளவர் வந்தார். நேர்த்தியான சீருடை அணிந்திருந்தார். மகிழ்ச்சியாக கை குலுக்கினார். வாடிக்கையாளர் மையத்துக்குப் போய் பதிவு செய்ய வேண்டும், கொஞ்சம் காத்திருங்கள் என்று சொன்னார். அருகிலேயே இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, அடையாள அட்டை நகலுக்கு நகலகத்துக்குப் போய் வந்தேன். காத்திருக்கச் சொன்ன இடத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். அவரது அலுவலகம் அங்குதானாம்.

அந்த இடத்தில் நிறைய குரங்குகள் உலாவிக் கொண்டிருந்தன. 5-10 நிமிடங்களில் வந்தார். 'என்ன சார், இங்கேயே உட்கார்ந்துட்டீங்க' என்று அங்கலாய்த்துக் கொண்டே உள்ளே அழைத்துப் போனார். பெரிய, பழைய கால அலுவலக கட்டிடம். ஒரு அறையை சாவி கொண்டு திறந்தார். உயரமான கூரையுடன் அறை. நடுவில் மேசை, ஒரு தொலைபேசி. சுவர்களில் பிஎஸ்என்எல் போஸ்டர்கள். இப்போது சந்தேகமாக இருந்தது, இவர் உண்மையில் பிஎஸ்என்எல் ஊழியர்தானா?

அவரது நட்பான அணுகுமுறையும் பேச்சும் பிஎஸ்என்எல் பாணியில் இல்லா விட்டாலும், உடை, முகபாவம், அறையின் எளிமை தனியார் நிறுவனமாக இருப்பதை ரூல் அவுட் செய்தது. ஒரு சின்ன அட்டை கவரில் இருந்து கருவியை எடுத்தார். விண்ணப்ப படிவத்தை நிரப்பச் சொன்னார். எனது தொலைபேசியை வாங்கி அதில் சிம்மைப் போட்டு ஆக்டிவேசன் செய்ய ஆரம்பித்தார்.

இந்த சிம்மை தொலைபேசி கருவியில் போட்டு பேசவும் பயன்படுத்தலாம், 3G கருவியில் போட்டு 3G எண்ணாகவும் பயன்படுத்தலாம், கணினியில் டேடா கார்டை போட்ட பிறகு மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றவையும் செய்யலாமாம்.

விண்ணப்ப படிவத்தை நிரப்பி முடிப்பதற்குள் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் நிலவரத்தை குறுஞ்செய்தியாகக் காட்டினார். அதன் பிறகு சிம் அட்டையை எடுத்து கருவியில் போட்டு மடிக்கணினியில் இணைக்கச் சொன்னார். நான் கொண்டு போயிருந்த வழிகாட்டி கோப்புகளின் படி wvdial.conf கோப்பை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். 'அதெல்லாம் வேண்டாம் சார், தானாகவே செட் ஆகி விடும்' என்று சொன்னார்.

'லினக்சுக்கும் அப்படி மென்பொருள் செய்து விட்டார்களா என்ன, பரவாயில்லையே!' என்று சொல்லிக் கொண்டே கருவியை வாங்கி சொருகிறேன். ஓரிரு நிமிடங்களில் நெட்வொர்க் மேனேஜரில் அடையாளம் காணப்பட்டு சின்னம் காட்டியது. அதன் மீது கிளிக்கினால், enable mobile broadband இருந்தது, அதை கிளிக் செய்து விட்டு wvdial ஓட விட்டால் டிவைஸ் இல்லை என்று வந்தது. டிவைஸ் பெயரை மாற்ற வேண்டும்.

ACM என்று டிவைஸ் செட் ஆகியிருந்தது. நெட்வொர் மேனேஜரில் அதைப் பார்த்து wvdial.confல் மாற்றி இயக்கினால் இணைந்து விட்டது.

அருகில் கிருபாகரன் காத்திருந்தார். 'ஒண்ணும் செய்யாதீங்க சார், காத்திருங்க, அதுவே வரும். நான் விளக்கமாகச் சொல்கிறேன்'  என்றார். நான் கூகுள் குரோமை இயக்கி இணையத்தில் இணைத்துக் காட்டியதும் நம்பவே முடியவில்லை. 'எப்படி சார், சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகாம கனெக்ட் ஆகவே செய்யாதே, இது என்னெவென்று புரியவில்லையே' என்றார்.

'அதுதான் நான் முதலிலேயே சொன்னேன். இதில் இருக்கும் சாப்ட்வேர் விண்டோசுக்கு எழுதியிருப்பார்கள், லினக்சின் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நான் இணையத்தில் இருந்து எடுத்து வந்த முறையைப் பயன்படுத்தி இணைத்துக் கொண்டேன்' என்று விளக்கினேன்.

'அந்த சாப்ட்வேர் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்புவது, கணக்கில் மீதி விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?' கர்நாடகா பிஎஸ்என்எல் கொடுத்திருந்த கையேட்டில் லினக்சில் சாப்ட்வேர் நிறுவுவதற்கான வழி கொடுக்கப்பட்டிருந்தது. நான் நிறுவிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

'சிம் கணக்கில் குறைந்த பட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும். அதை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். பிரவுசிங்குக்கு ரீசார்ஜ் செய்யலாம். 1GB - 403 ரூபாய், 0.5 GB - 202 ரூபாய், 25 MB - 101 ரூபாய், 5GB - 751 ரூபாய், 2GB - 716 ரூபாய் எல்லாமே 1 மாத வேலிடிட்டிதான். 5GB கட்டணம் டிசம்பர் 31 வரை ஆபர்தான். அதற்கு பிறகு வேறு ஆபர் வரலாம். சிம் எண 9445040622. ஆரம்ப ஆக்டிவேஷனில் 200 MB பயன்பாடு உள்ளடங்கியிருக்கிறது. அதன் பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.'

'வெளிப்படையாக சொல்லப்போனால், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் உங்களிடம் பேசினேன். இப்போ இணையத்தில் இணைந்தாகி விட்டது. பிஎஸ்என்எல்லில் இப்படி ஒருவரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி.' முகத்தில் உணர்ச்சிகளை அதிகம் காட்டாத மனிதர். கேட்டுக் கொண்டார்.

'எங்களை எப்படியாவது அழித்து விடணும் என்று மேலிடத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் சார். தனியார் நிறுவனத்துக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு நார்ம்ஸ் என்று அதே வசதியை மறுக்கிறார்கள். ஐடியா செல்லுலர் காரன் மைக்ரோவேவ் பயன்படுத்தி இணைப்பு தருகிறான். நாங்கள் அப்படி செய்ய நார்ம்ஸ் அனுமதிக்காது, அது மனித உடலுக்குக் கெடுதியாம். ஆனால் தனியார் செய்தால் கெடுதியை யாரும் கண்டு கொள்வதில்லை. உங்களை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் செய்யணும் சார்'

'நிச்சயம் செய்கிறோம் சார். நானும் நான்கு நண்பர்களுக்கு நிச்சயம் இது பற்றி சொல்வேன்'

அவரது விசிட்டிங் கார்டு தந்தார். 'எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடுங்க சார், கார்டு கொடுத்தாச்சு என்று நாங்கள் பேசாம இருக்க மாட்டோம். ஏதாவது சந்தேகம் இருந்தால் பேசுங்க. உங்களை மாதிரி பெங்களூரில் வேலை பார்க்கும் ஒருத்தர் வாங்ககிக் கிட்டு போனார். நாட்றாம்பள்ளி வரை காரில் இணைப்பு தொடர்ந்து இருந்ததாம். பெங்களூர் போய் பேசினார்' என்று விபரங்கள் சொன்னார்.

புறப்படும் போது 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார். சரி என்று வெளியில் வந்தால், அந்த வளாகத்திலேயே இருந்த ஒரு டீக்கடையில் 2 டீ சொன்னார். நன்றாக இருந்தது. என்னை காசு கொடுக்க மறுத்து விட்டார். 'அவர் வாங்க மாட்டாரே' என்று தானே கொடுத்து விட்டார். இவ்வளவு நல்லவராக இருப்பது உண்மைதானா என்று சந்தேகம்தான் ஏற்படுகிறது. விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

ராஜா தியேட்டர் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறி சிஎம்சி தாண்டி உட்கார இடம் கிடைத்தது. ஓடை பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன். மின்னிணைப்பு இல்லை. டேடா கார்டை இணைத்தால் வேலை செய்தது. இருட்டிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வினவு கருப்பு பண கட்டுரையில் அதியமானுக்கு பதில் போட்டுக் கொண்டிருந்தேன். ஏற்றுமதி வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்பது தவறான தகவல் என்று சுவாமி கட்டுரையில் இருந்தது.

தொலைபேசி கேட்டால் அந்த 80 HHC பிரிவை 8 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்து விட்டார்கள் என்று சொன்னார். 'நாம் எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ, அதில் 33% கட்ட வேண்டியதுதான்' என்றார். 'என்ன சார், பேசி ரொம்ப நாளாச்சு, இங்கதான் இருக்கீங்களா? அல்லது வெளிநாடு ஏதாவது போய் விட்டீங்களா' என்று கேட்டார். 'அடுத்த வேலை சொல்லுங்க சார்' என்று சுமுகமாக முடித்தேன். இன்னொரு டேனரி கட்டியிருக்கிறார்களாம்.

6.15 ஆகியிருந்தது. வேலாயுதம் படம் பார்க்கப் போகலாம் என்று கிளம்பினேன். பாலாஜி தியேட்டரில் ஈ ஆடியது. சீட்டு வாங்குமிடத்தில் படம் எப்போது ஆரம்பித்தது என்று கேட்டால் அந்த நேரத்தையே சொன்னார். நுழை வாசலில் 10 நிமிடம் ஆச்சு என்றார்கள்.

ஜெனிலியாவை துரத்தி முரடர்கள் கொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. துக்கடாக்களால் இணைக்கப்பட்ட திரைப்படம். முதலில் அந்த பயங்கர காட்சி. தொடர்ந்து கிராமத்தில் விஜய், அவரது தங்கைக்கு இடையிலான உறவைப் பற்றிய துண்டுக் காட்சிகள், அதன் பிறகு சென்னைக்கு வந்து வில்லன்களைப் பற்றிய துண்டுகள் என்று எந்த லாஜிக்குகளுக்கும் உட்படாத மொக்கையான படம். கொடுமைப் படுத்தாமல், சகிக்கும்படியாக எடுத்திருப்பதுதான் ஒரே வெற்றி. முஸ்லீம் தீவிரவாதிகள், மந்தை போல பெண்களை அடைத்து கொடுமை செய்வது, கள்ள நோட்டு என்று சுபா கதை போல ஓடியது. சுபாதான் கதை வசனம் என்று நினைக்கிறேன்.

கிராமத்துக்கு திரும்பி வந்து மாமா மகளை கைப்பிடித்து நடனம் ஆடும் போது இதற்கு மேல் தாங்காது என்று எழுந்து வந்து விட்டேன். வழியில் கடையில் ஹார்லிக்ஸ் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தால் கரண்ட் இல்லை. இருட்டில் நூடுல்ஸ் வைத்து விட்டு உட்கார்ந்து இணையத்தில் பார்த்தால் திரும்ப இணைப்பு வந்தது. இதற்கிடையில் கேஸ் தீர்ந்து விட, இரவு உணவுக்கு விழுந்தது மண். ஆரஞ்சு உரித்துச் சாப்பிட்டுக் கொண்டேன். 10 மணிக்கு தியானம், பிறகு தூக்கம். காலையில் 6 மணிக்கு மேல் எழுந்திருத்தல்.

செவ்வாய், நவம்பர் 22, 2011

விலை உயர்வு தாளிப்பு


காலை 5.30, நவம்பர் 22, 2011. வேலூரில்.

நேற்றுக் காலையில் நல்ல தூக்கம். 7 மணிக்குப் பிறகு எழுந்து காலைக் கடன்களை முடித்து நாட்குறிப்பு எழுதிய பிறகு, வெளியில் வந்தேன். 8 மணி பரபரப்பு சாலையை தொற்றியிருந்தது. பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்லும் குழந்தைகள் வேலைக்குப் போகும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்று கொடி கட்டி பறந்தது.

நடந்து ராமாபுரம் அரசமர சந்திப்பு வரை வர வேண்டும். அதற்கு அருகில் ஐடெக்ஸ் என்ற தொழிற்சாலை. அரவிந்த் லெபாரட்டரிஸ் என்று நிறுவனத்தின் பெயர்.  இப்போது கண்மை தயாரிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சாரை சாரையாக பல பெண்கள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.

திரும்பி வந்து குளித்து விட்டு தியானம். வேலூருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய துணிகளை பையில் அடைத்துக் கொண்டேன். துணி துவைத்து காயப் போடுவதற்கான வசதியையும் ஏற்படுத்திக் கொண்டால், இணைய இணைப்புக் கருவி வாங்கிக் கொண்டால் வேலூருக்குப் போவதன் தேவை போய் விடும். வேண்டிய போது போய் தங்கிக் கொள்ளலாம்.

வீட்டு உரிமையாளரிடம் தகவல் சொல்லி விட்டு ஜனவரி 1 வரை என்று திட்டமிட்டுக் கொள்ளலாம். அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களையும் துணிகளையும் வாராவாரம் கொண்டு போக வேண்டும். தேவையில்லாத புத்தகங்களை கோப்புகளை அட்டை பெட்டிகளில் பொதிந்து, மேலே ஏற்றி வைத்து விடலாம். அந்த அட்டைப் பெட்டிகள், கட்டில், 2 மேசைகள், சமையல் பாத்திரங்கள் இவற்றுக்கு ஒரு வண்டி பிடித்துக் கொண்டு போய் விட்டால் முடிந்தது.

சாப்பிடப் போனால் கடையில் உட்கார இடம் இருந்தது. நான் உட்கார்ந்த சிறிது நேரத்தில் நிரம்பி விட்டது. முதலில் 5 இட்லி வடை, தொடர்ந்து 1 செட் பூரி. இட்லியும் வடையும் தலா 2 ரூபாய். பூரி செட் 10 ரூபாய். 22 ரூபாய். புதிதாக வந்தவர்கள் எல்லோரும் பூரி கேட்க கொண்டு வந்திருந்த பூரி வேகமாக தீர்ந்து போனது. காசைக் கொடுத்து விட்டு வந்து முந்தைய நாள் வாங்கி வைத்திருந்த பழங்களில் இரண்டு மீந்திருந்ததை சாப்பிட்டேன். பைகளைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தேன். மணி 10 ஆகப் போகிறது.

தொலைபேசியில் அழைத்து ஒரு கெஸ்ட் லெக்சருக்கு வர முடியுமா என்று கேட்டுக் கொண்டார். சனிக் கிழமை செய்யலாம் என்று சொன்னேன். உறுதிப் படுத்தி மின்னஞ்சல் அனுப்புவதாகவும், வீட்டு முகவரியும் எனது புரொபைலையும் அனுப்பும்படியும் சொன்னார்.

கேசவர்த்தினி நிறுத்தத்துக்கு வந்து இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். அருகில் உட்கார்ந்தவர், 49A அல்லது 11H வந்தால் சொல்லுங்கள்  என்றார். திநகர் போக வேண்டும். வந்த பேருந்துகள் எல்லாம் கூட்டமாகவே வந்தன. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து பேருந்துகளை போக விட்ட பிறகு ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டேன். அதற்கு மேல் ஆட்டோவில் இடமில்லை. வேகமாகப் போகலாம். ஆனால் சாலையில் இடமில்லை. விருகம்பாக்கம் சாலை நிறுத்தம் அருகில் தேங்கிப் போனது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் மெதுவாக நகர்ந்து கடக்க வேண்டியிருந்தது.

ஓட்டுனர் கடுப்பாகிக் கொண்டிருந்தார். இரு சக்கர ஓட்டிகள் வண்டிக்கு அருகில் உரசும் படி நகர, இவர் கவனிக்காமல் ஓட்டினால் அவர்களுக்குத்தான் சேதம். அவர்களை திட்டினார்.

"அவங்களைத் திட்ட என்னங்க ஆகுது, ரோடே அவ்வளவு அகலம்தான், அதில் பாதி பள்ளங்கள், ஒரு மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. இப்படி சாலைகளைக் கூட ஒழுங்கா வைத்திருக்க முடியாத ஊழல் அரசாங்கம். நஷ்டம் என்று சொல்லி மக்கள் மடியில்தான் கை வைக்கிறது."

பக்கத்தில் காத்திருந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுனருடன் இவர் பேசினார்.

'இப்படி நெரிசலில் ஓட்டத்தான் வேண்டியிருக்கிறது. 15 ரூபாய்தான் வாங்க வேண்டும். மற்ற நேரங்களில் 10 ரூபாய் போதும்தான். '

அதிலிருந்து 15 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். பேருந்திலேயே 10 ரூபாய் ஆகி விட்ட பிறகு இவர்கள் அதை விட அதிகம் வசூலிக்கத்தான் செய்வார்கள்.

வாகனங்கள் தேக்கத்தைக் கடந்து போய்ப் பார்த்தால் விருகம்பாக்கம் சிக்னலில் இருந்து பேருந்து நிறுத்தம் வரை இடது புற சாலை மூடப்பட்டு இரு பக்க போக்குவரத்தும் ஒரே சாலையில் போக வைக்கப்பட்டிருந்தது. அதுதான் சிக்கல். இடது புறம் முழுவதும் சாலை உடைந்து தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதை சரி செய்து சாலையை செப்பனிட வண்டிகள் நின்றிருந்தன. எவ்வளவு நேரம் ஆகுமோ!

"ஓ, ரோட்டை சரி செய்றாங்களா? என்ன செய்து என்ன? ஒரு மழையில் எல்லாம் சரியாகப் போய் விடும்."

"10 கோடி ரூபாய் ஒதுக்கினால் அதில் 3 கோடிதான் ரோடு போட கிடைக்கிறது. மீதி எல்லாம் அவனவன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான், எப்படி உருப்படும்" - ஆட்டோ ஓட்டுனர்.

"இதுக்கெல்லாம் மக்கள் போராடணுங்க. 3 நாள் முன்னாடி நாங்கெல்லாம் பனகல் மாளிகை முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நானும் போயிருந்தேன். ஆனா மக்கள் பெருமளவில் திரள வேண்டும். அப்போதான் மாற்ற முடியும்"

"நீங்க போராட்டத்ததை ஆரம்பித்தால் மக்கள் பின்னால் வருவாங்க. இந்த பிரச்சனை தினசரி வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனை, எல்லோரையுமே தொட்டுப் போகும் ஒன்று"

அதன் பிறகு நெரிசல் இல்லாமல் ஓடி வடபழனி பேருந்து நிலையம் ஒரு முறை நிறுத்தி விட்டு சிக்னல் அருகில் பகிர்வூர்தி நிறுத்தம் வரை வந்து விட்டார். எல்லோரும் தாமாகவே 15 ரூபாய் கொடுத்து விட்டு நடந்தார்கள்.

அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர்+மைதாவில் செய்யப்பட்ட இனிப்பில்லாத இனிப்பு பண்டம் சாப்பிட்டேன், 10 ரூபாய். வெளியில் கடையில் அவுட்லுக் பத்திரிகை. இந்தியாவின் மகிழ்ச்சியான நகரங்கள் என்று கருத்துக் கணிப்பு, ஜெய்பூர்தான் மகிழ்ச்சியான நகரமாம், அகமதாபாத் குறைவான மகிழ்ச்சி உள்ள நகரம், இப்படி ஒரு பேத்தலான அட்டைப் படக்கட்டுரை.

நூறடி சாலைக்கு வந்தால் வடபழனி சிக்னலிலேயே கோயம்பேடு பேருந்து நிலையம் போகும் பேருந்து நின்றிருந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன். 7 ரூபாய் சீட்டு. இறங்கி ஆவின் பால் கடையில் ஒரு கப் பால் வாங்கிக் கொண்டு அதற்கு எதிரில் சுவரில் தரப்பட்டிருந்த பேருந்து நிலையம் பற்றிய விபரங்களைப் பார்த்தேன். பேருந்து நிலையம் கட்டிய குழுவினர் பெயர்கள், நிலையம் பற்றிய அளவு, வசதிகள், புகைப்படங்கள் என்று வரிசையாக மாட்டியிருந்தார்கள்.

முடித்து விட்டு பேருந்து நிற்கும் பகுதிக்கு வந்தால், முன்பக்கம் வேலூர் 102 விரைவுப் பேருந்து நிற்க ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார் நீல நிற சீருடை அணிந்த, கண்ணாடி போட்ட கொஞ்சம் வயதான நடத்துனர். இரண்டு பேருந்துகள் தாண்டி குளிர் சாதன பேருந்தும் கண்ணில் பட்டது. கட்டணங்கள் ஏறியிருக்கும் நிலையில் அதில் போவதெல்லாம் கட்டுப்படி ஆகாது.

எனக்கு முன்பு ஒரு குடும்பமாக 102 விரைவு வண்டி நடத்துனரிடம் "எவ்வளவு டிக்கெட்" என்று பெண் ஒருவர் கேட்டார்.

"81 ரூபாய்" - அதிர்ச்சி.

நாளிதழில் 40 ரூபாய் வேலூர் கட்டணம் 68 ரூபாய் என்று போட்டிருந்தது. அது சாதாரண பேருந்தில் இருக்கலாம். அப்படி ஒரு பேருந்து ஓடுவதாகவே தெரியவில்லை. பொதுவாக கிடைப்பது 46 ரூபாய் வாங்கும் விரைவுப் பேருந்துகள்தான். அது இப்போது 81 ஆக்கியிருக்கிறார்கள்.

"இது என்னங்க அநியாயம். இப்படி ஏத்திட்டாங்க"

"என்னம்மா 10 வருஷமா ஏத்தலை, தங்க விலை எவ்வளவு ஏறியிருக்கு, டீசல் விலை எவ்வளவு ஏறியிருக்கு, அதான் இதுவும் ஏறுகிறது"

"உங்களுக்குத் தெரியாததா, போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை ஒழித்தாலே போதும். டயர் வாங்க, உதிரிப் பாகம் வாங்க என்று எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள். பழைய கட்டண வீதத்திலும் தனியார் பேருந்துகள் லாபத்தில்தானே ஓடின. அவங்க கொள்ளை அடிப்பதற்கு மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்"

"இப்படி அநியாயம் பண்றீங்களே!"

"இவங்களை ஒன்னும் சொல்ல முடியாதுங்க, இவங்களும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். மேலே இருக்கிறவங்கதான் கொள்ளை அடிப்பவர்கள்"

பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். வண்டி நகர்ந்து பேருந்து நிலையத்தின் முன் வாசல் வழியாக வெளியில் வந்தது. 81 ரூபாய் கட்டணத்துக்கு 100 ரூபாய் தாளும் 1 ரூபாயும் கொடுத்தேன். வாலாஜா போக 63 ரூபாய் என்று கேட்டது, கிட்டத்தட 2 மடங்கு.

கோயம்பேடு சிக்னல் தாண்டி பார்த்தால் முன்னால் இன்னொரு 102 எக்ஸ்பிரஸ் போய்க் கொண்டிருந்தது. இரண்டுமே பாதி நிறைந்திருந்தன. பூந்தமல்லியில் பெருமளவு நிறைந்து விட்டது. ஸ்ரீபெரும்புதூர் கட்டண சாவடியில் நிறைந்து விட்டது. தொடர்ந்து சுங்குவார் சத்திரம்,  மீனாட்சி மருத்துவமனை என்று ஆட்கள் ஏறி இறங்கினார்கள். காஞ்சிபுரம் மேம்பாலம் தாண்டி வந்து, பாலுசெட்டி சத்திரத்துக்கு முந்தைய சாப்பிடும் விடுதியில் நிறுத்தி விட்டார்கள். மணி 1 அடித்து விட்டிருந்தது.

இறங்கி தயிர் சாதம் இருக்கிறதா என்று கவுண்டரில் கேட்டால் இருக்கிறது என்றார். எலுமிச்சை சாதம்தான் இருந்தது, அதற்கு விலை 40 ரூபாய். சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து பேருந்தில் ஏறாமல் நிழலில் நின்று கொண்டேன். ஏன் வீணாக வெயிலில் காய்கிறோம்! ஓட்டுனர் வண்டியில் ஏறியதும் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

வாலாஜா போய் மீண்டும் புறவழிச் சாலைக்கு வந்து வேலூர். தலைமை அலுவலகம், வள்ளலார், சத்துவாச்சாரி நிறுத்தி, பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கிக் கொண்டேன். ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி விட்டு நின்றிருந்த தனியார் பேருந்தில் ஏறிக் கொண்டேன். பின் வாசல் வழியாக ஏறி முன்புறம் வரை போக வேண்டியிருந்தது. பையை ஓட்டுனரின் இருக்கை அருகே வைத்துக் கொண்டு நின்றேன். சாய்ந்து கொள்ள ஒரு இருக்கை இடைவெளியும் கிடைத்தது. இங்கிருந்து ஓடைப்பிள்ளையார் கோவில் நிறுத்தத்துக்கு 4 ரூபாய் சீட்டு. முன்பு 2 ரூபாய் இருந்தது.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் முகத்தில் அறைந்தது போன்ற நடவடிக்கை. ஒரே அறிவிப்பில் எல்லோரது வெறுப்பையும் பெறுவது என்பது இப்படித்தான் செய்யப்பட வேண்டும். ஜெயலலிதா ஒரு முட்டாள். 3 மாதங்களுக்கு காசுகள் வீதம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்டண ஏற்றத்தை செயல்படுத்தியிருக்கலாம். சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றாகி விட்டது, உள்ளாட்சி தேர்தலும் முடிந்தாகி விட்டது, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் மக்கள் மறந்து விடுவார்கள் என்று கணக்கு.

பெரும்பான்மை மக்கள் தாங்க முடியாத நெருக்கடி. தினமும் வெளியில் போய் வருபவருக்கு மாதம் 1000 ரூபாய் வரை கூடுதல் செலவு வைக்கும் நடவடிக்கை.

ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் இறங்கி கோபால புரம் வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.  எதிர்பார்த்தது போல மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வழக்கமான மின் வெட்டா, நமது இணைப்பைத் துண்டித்திருக்கிறார்களா? பக்கத்து அலுவலகத்தில் மின்சாரம் வருகிறதா என்று கேட்டால், தெரியவில்லை, இன்வெர்டர் இருப்பதால் கவனிப்பதில்லை என்றார். கீழ் அலுவலகத்தில் கேட்டால் இருக்கிறது. நமக்குத்தான் வெட்டப்பட்டிருக்கிறது.

மின் கட்டணம் கட்டும் நேரம் 2.30 மணிக்கு முடிகிறது. அப்போது நேரம் தாண்டி விட்டிருந்தது.

போன மாதம் வரை வீட்டு உரிமையாளரிடம் காசு கொடுத்து அவரே கட்டி வந்தார். இந்த மாதம் வாடகை கொடுக்கும் போது கட்டி விடச் சொன்னார். அடுத்த 20 நாட்களுக்கு அலைந்து கொண்டிருந்ததில் கட்ட விட்டுப் போயிருந்தது. போய் பார்த்து விடலாம் என்று அட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். வழியிலேயே சைக்கிளில் கடந்து போன ஒருவர், 'சீக்கிரம் போங்க, மூடியிருந்தாலும் மூடியிருப்பாங்க' என்று சொல்லி போனார்.

மூன்று கவுண்டர்களில் ஒன்றில் ஒருவர் இருந்தார். அட்டையை காட்டிக் கொண்டிருந்தவரிடம் விவாதம் புரிந்து கொண்டிருந்தார். நான் காத்திருந்தேன். எனக்குப் பின்னால் வந்தவரை விரட்டினார். பக்கத்து சாளரத்துக்கு இன்னொருவர் வந்து என்னை அழைத்தார், ஒரே கார்டுதானே என்ற கேள்வியோடு. அவரது அச்சு எந்திரத்தில் ரிசீது ஒன்று மிஞ்சியிருப்பதை பயன்படுத்த எண்ணம். 55 ரூபாய் என்று அட்டையில் எழுதியிருந்தது. 12 நாள் தாமதத்தினால் 116 ரூபாய் என்று கேட்டார். சில்லறையாக 55 ரூபாய் இருந்தது, 116 ரூபாய்க்கு 1000 ரூபாய் நோட்டும் 16 ரூபாய் சில்லறையும் கொடுத்தேன். கொஞ்சம் அங்கலாய்த்துக் கொண்டே வாங்கினார். 900 ரூபாய் திருப்பிக்கொடுத்தார்.

"முன்னே மாதிரி இல்லைங்க, அடுத்த நாள் பணம் கொண்டு போய் கட்டுவது. இப்போ எல்லாம் ஐசிஐசிஐ பேங்கில இருந்து 3 மணிக்கு வந்து விடுவாங்க, பணத்தை கொண்டு போக, அதுக்குள்ள கணக்கை முடித்து வைக்க வேண்டும்"

மின் இணைப்பு துண்டிப்பு நீக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு உள்ளே போனேன். ஒருவர் பொதி விரித்த உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து மேசையில் இருந்தவர், கோரிக்கையை ஒரு பதிவேட்டில் குறித்துக கொண்டார். இன்றைக்கே ஆகி விடும் என்று உறுதி செய்து கொண்டு வந்தேன். அங்கு எழுதிப் போடப் பட்டிருந்த தொலைபேசி எண்களை குறித்துக் கொள்ளவில்லை.

வீட்டுக்கு வந்து துணிகளை வட்டிலில் போட்டு விட்டு, துவைக்கப்பட்ட துணிகளை எடுத்தேன். மின்சாரம் வரும் வரை இணையம் பயன்படுத்த முடியாது, இந்தியாவில் இடது சாரி போக்கு என்ற நூலை படிக்க ஆரம்பித்தேன். இடையிடையே தூக்கம். 5 மணி வரை மின்னிணைப்பு வரவில்லை என்றால் தொலைபேசி கேட்கலாம் என்று முடிவு.

5.30க்கு கீழே போய்க் கேட்டால் அங்கும் மின்சார இணைப்பு இல்லை, மின் வெட்டு. அப்படியே நடந்து போய் பேருந்து நிறுத்தம் வந்தேன். தனியார் பேருந்து ஊரிலிருந்து வருவதில் ஏறி சில்க் மில் நிறுத்தத்தில் இறங்கினேன்.

துக்ளக் - 'அணு உலை ரகசியங்களை எல்லாம் கேட்கிறார்கள் எவ்வளவு திமிர் இருக்க வேண்டும், இவர்களை துடைத்து எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது' என்று தலையங்கம் எழுதியிருந்தார். முக்காடு போட்டுக் கொள்ளாத பிற்போக்கு முதலாளித்துவத்தின் பிரதிநிதி இவர்.

அய்யனார் உணவகத்தில் 2 இட்லி, ஒரு கிச்சடி, 1 தோசை சாப்பிட்டேன். 48 ரூபாய். எதிரில் இருந்த பழக்கடையில் ஒரு வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு விட்டு நடந்தேன். வீட்டுக்கு வரும் போது மின்னிணைப்பு வந்து மின் விசிறி ஓட ஆரம்பித்திருந்தது.

கணினியை இணைத்து இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்களை பார்த்தேன். மின்னஞ்சல் வந்திருக்கவில்லை.

அதைத் தொடர்ந்து 14ம் தேதி முதல் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகளை உள்ளத்தை எழுதுகிறேன் பதிவில் வெளியிட்டேன். மார்க்சிய மெய்ஞானம் குறிப்புகளையும், தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை குறிப்புகளையும் புரட்டிப் போட்ட புத்தகங்கள் பதிவில் வெளியிட்டேன். இந்த   இரண்டு, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் பதிவுகளின் வடிவமைப்பை புதிய முறைக்கு மாற்றிக் கொண்டேன்.

தொலைக்காட்சியில் புதிய தலைமுறை ஓடிக் கொண்டிருந்தது. அத்வானியின் ரத யாத்திரை, ப சிதம்பரத்தை புறக்கணிக்கப் போவது, கூடங்குளத்தில் மீனவர்கள் நடுக்கடலில் போராடுவது, அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி 24ம் தேதி முடிவு என்று சொல்வது என்று ஓடிக் கொண்டிருந்தது. பேருந்து கட்டண உயர்வு பற்றிய ஒரு விவாதம் 3 பேர் கலந்து கொண்டார்கள். சுபவீ ஒருவர் மட்டும் அடையாளம் தெரிந்தது.

அதன் பிறகு சானல்களை மாற்றிக் கொண்டு வந்தால் சோனி மேக்சில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, இடையில் வந்த விளம்பரத்தில் ஞாயிறு அன்று ரோபோட் 8.30 மணிக்கு என்று அறிவித்தார்கள்.

DDLJ பழகிப் போன சாரூக்கானிசங்களோடு ஓடிக் கொண்டிருந்தது. அதில் சொல்லப்படும் கருத்துக்களும் உணர்ச்சிகளும் பஞ்சாபின் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வருடி விட்டு பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்யும் நோக்கத்திலானவை. இப்போது அவர்களே இதைப் பார்த்தால் சிரிப்பார்கள் எனக்கும் நிறைய சிரிப்புதான் வந்தது. ஒரு காலத்தில் பல முறை பார்த்து கண்ணீர் பெருக்கிய படம்.

படத்தை இறுதிக் காட்சி வரும் முன்னர் நிறுத்தி விட்டு தூங்கத் தயாரானேன். 20 நிமிட தியானம் முடித்து, 12 மணிக்குத் தூக்கம்.

5 மணி வரை தூங்கி எழுந்தேன். துணிகளை ஊற வைத்து விட்டு பல் தேய்த்து நாட்குறிப்பு. இப்போது மணி 6.24. இன்றைக்கு எழுத்து சூடுபிடிக்கவில்லைதான். இதுவரை 1560 சொற்கள்தான் ஆகியிருக்கின்றன. இன்னும் 10 நிமிடங்கள் 300 சொற்கள் எழுதினால் சராசரி வேகத்தை அடைந்திருக்கலாம்.

இதை முடிக்கும் போது 6.35. பேன்டை மாட்டிக் கொண்டு உலாவப் போய் திரும்ப வேண்டும். டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொள்ளலாம். துணி துவைக்கும் சோப்பு வாங்கிக் கொள்ள வேண்டும். நேற்றைய, இன்றைய செய்திகள், அவுட்லுக் இதழ் செய்திகளை குறித்துக் கொள்ள வேண்டும்.

திரும்பி வந்து முதலில் துணி துவைக்க வேண்டும். மின்னஞசல்கள்
இணையம்
வெளி வேலைகள்
1. பிஎஸ்என்எல் கட்டண காசோலை
2. வங்கியில் காசோலை போடுதல்
3. ஏர்டெல் டேடா கார்டு பற்றிக் கேட்பது

வாடிக்கையாளர்கள்

மற்ற பணிகள்

குடிதண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சாப்பிட என்ன வழி? இப்படி எல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

வியாழக்கிழமை கல்லூரி வகுப்பு, மாலையில் கூட்டம், வெள்ளிக் கிழமை காலையில் பல்லாவரம், மதியம் கோடம்பாக்கம், சனிக்கிழமை மதியம் கெஸ்ட் லெக்சர், அண்ணன் வீட்டுக்குப் போக வேண்டும், ஞாயிற்றுக் கிழமை கூட்டம். ஞாயிறு மாலை திரும்பலாம்.