என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 31, 2018

ஏறி வந்த படிக்கட்டுகள்

ரு பெரிய விஷயத்தில் மூழ்கும் போது பிறவற்றின் மீது சலிப்பு கொண்டு அவற்றை கைவிடுவது, சோர்ந்து போவது, மனக் குழப்பத்தில் மூழ்குவது என்று தேங்கி போவது எனக்கும் பிரச்சனையாக இருக்கிறது.

டாடாவில் உற்பத்தி தளத்தில் உழைத்தேன். அதில் நிறைய பலன்கள் கிடைத்தன, பலர் அதை அங்கீகரிக்க ஆரம்பித்தனர். உண்மையில் டாடாவில் உற்பத்தி தளத்தில் என்னை அடித்துக் கொள்ள யாரும் இருக்கவில்லை. வர்த்தக பிரிவில் வந்த பிறகுதான் எனது சரிவு ஆரம்பமானது.

ஷாங்காயில் முதல் கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஷாங்காயில் ஏற்றுமதி ஆர்டர் பிடித்து விட்டேன். ஆனால், அதை செயல்படுத்துவதில் உரசல், மோதல் ஆரம்பமானது. அவனது பொறியில் விழுந்தேன். அதுதான் நான் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு.
அதன் பிறகு மெங்னு ரிட்டர்ன், ஷௌவாங் ஆர்டர் பிரச்சனை என்று இழுத்தடித்தது. அதை எல்லாம் பிடித்து தந்தது நிங் ருய் சிய என்ற அடக்கமும் தெளிவும் என்னிடம் இருக்கவில்லை. இரண்டு பக்கமும் கைவிடப்பட்டு வறுப்பில் வாடி வதங்கி போனேன். அந்த நேரம் குழந்தை பிறப்பு என்று தேங்கி போனேன். அதன் பிறகு எதுவும் பிக் அப் ஆகவில்லை. இரண்டாம் தர ஊழியனாக நாற்காலியை தேய்த்து விட்டு வெளியே வந்தேன்.

பி.எல்.சி-யில் என்னை மதிப்புள்ள ஒரு சக்தியாக எடுத்துக் கொண்டாலும் என்னால் அந்த முதலாளித்துவ கலாச்சாரத்துக்குள் பொருந்த முடியாமல் ஒரு misfit ஆகத்தான் இருந்தேன். டாடாவில் பழகிய நடைமுறைகள் அங்கு செல்லுபடியாகவில்லை. இதற்கு நடுவில் shenanigan-களில் சிக்கி, என்று திசை மாறிப் போனேன். பணத்தை இடது, வலது என்று வாரி இறைத்தேன். அசட்டுத்தனமான தன்னம்பிக்கையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன்.

அதன் பிறகு இங்கு வந்து சேர்ந்து லெதர் லிங்க். கடைசி வரை உழைக்கத்தான் செய்தேன். உளமார உழைத்தேன். ஓடி ஓடி உழைத்தேன். வெளியில் நடக்கும் செயல்பாடுகளில் நொந்து போய் வெளியேறினேன். அதில் என்னால் முடிந்ததை செய்தேன். அதில் இன்னும் உழைத்திருக்க முடியுமா என்று கேட்டால் முடியும்தான். ஒரு முதலாளித்துவ ஒழுங்குடன், தொழில்முறை செயல்பாட்டுடன் உழைத்திருக்க முடியுமா என்றால் முடியும்தான். ஒரு முறையில் தோல்வி என்றவுடன் துவண்டு போய் கைவிட்டு விட்டேன்.

ஆனால், பல மாற்றங்களை தொடர்ந்து செய்யத்தான் செய்தேன். ஆன்லைன் மாடல் ஒத்து வரவில்லை என்று சொன்னதும் ஆஃப்லைன் கொடுக்க முன் வந்தேன். சீன மொழி கற்றுக் கொடுத்தல், மொழிபெயர்ப்பு, பத்திரிகைகளுக்கு எழுதுதல், தமிழ்க் கணினி திட்டம் என்று பல்வேறு வழிகளில் ஜல்லி அடித்து நிறுவனத்தை நகர்த்திச் சென்று கொண்டிருந்தேன்.
சரியாக 2002 பொருளாதார தேக்கத்தின் போது தொடங்கி 2005-ல் மறுபடியும் பிக் அப் ஆகும் போது சூடு பிடித்து, 2008-ல் மூக்கடிக்க விழுந்தேன். புறநிலையை புரிந்து கொள்ளாமல் ஒரு கற்பனாவாத தொழில் முயற்சி அது. அது போன்றுதான் இப்போதும் நடக்கிறதா?

எனக்கு முறையான ஒரு அலுவலக வேலை முறை தேவைப்படுகிறது. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

பிப்ரவரி மாதம் டெஹ்ரா டூன் போய் ஒரு வாரம் பாரதியுடன் தங்கினேன். அவளுடன் சேர்ந்து பாடம் படித்தேன். அதன் பிறகு அவள் இங்கு வந்த பிறகு ஜூன் மாதம் 2 நாட்கள் துஷாரிகா அங்கு வரச் சொன்னாள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் பாரதி என்னுடன் சேர்ந்து வேலை செய்ய வர ஆரம்பித்தாள். அதை பின்னர் துஷாரிகா வெட்டி விட்டாள்.
மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய ஆய்வு செய்யலாம் என்று சொல்லியிருந்தேன்.

இந்த வருடம் நாகர்கோவிலுக்கு போகவே இல்லை.

அனுபவை ஒரு முறை கூட பார்க்கவில்லை, பேசவில்லை, எழுதவில்லை. பாரதியை இங்கிருந்து அனுப்பி வைக்கும் போது ஒரு முறை, டெஹ்ராடூனில் ஒரு வாரம், அதன் பிறகு இங்கு திரும்பி வந்த பிறகு ஒரு முறை, பிறந்த நாளை ஒட்டி 2 நாட்கள், அதன் பிறகு சில முறைகள், கடைசியில் இங்கிலாந்துக்கு போவதற்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். அங்கு போன பிறகு வாட்ஸ்-ஆப்-ல் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

அவ்தேஜ் ஜூன் மாதம் அறிமுகமானான். மனதுக்கு மிக நெருக்கமான பையனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனது வாழ்க்கை சிறக்கட்டும். இந்த ஆண்டு அவனை சந்திக்க முயற்சிக்க வேண்டும்.

புதன், டிசம்பர் 26, 2018

யப்பா, என்னா அடி!

The Big Bang Theory-ல் வரும் ஷெல்டன் கூப்பர்-ஐ போன்ற ஆள்தான் நான். நான் சொல்லும் திட்டங்கள், முன் வைக்கும் கோட்பாடுகள் கவர்ச்சிகரமாக தெரிகின்றன. ஆனால், அதில் மிக வெளிப்படையான ஓட்டைகள் இருப்பதை பார்க்கத் தவறி விடுகிறேன். ஏமி பவுலா ஃபவுலர் தன்னை தேடி வராமல் தடுப்பதற்காக தனது வீட்டு கட்டிடத்தின் எண்ணை மாற்றுகிறான், தனது மின்னஞ்சல், தொலைபேசி எண்ணை மாற்றுகிறான். ஆனால் ஏமி பலமுறை தனது வீட்டுக்கு நேரில் வந்திருக்கிறாள் என்ற சின்ன விபரத்தை புறக்கணித்து விடுகிறேன்.

லெனார்டுக்கு இரவில் அலிபி தயாரித்து சிக்க வைக்கிறான். அவனது பாட்டிக்கு கால்பந்து ஆட்டத்தின் மீது பந்தயம் வைக்க டிப்ஸ் கொடுத்து சிக்கிக் கொள்கிறான்.

நானும் இது போல பல திட்டங்களை வைத்திருக்கிறேன். டாடாவில் கம்பளியாட்டுத் தோலில் ஃபினிஷிங் வெடித்ததை சரி செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். ஒரு பைண்டர் பேடிங் மூலமாக சரி செய்து விட்டார். நான் சொன்னது அது வரை முயற்சிக்காத ஒரு விஷயம்தான், ஆனால் நடைமுறைக்கு போயிருந்தால் பல்லிளித்திருக்கும்.

இப்படி அரை வேக்காட்டு அறிஞர்களிடம் சிக்கிக் கொண்டு உலகம் படாத பாடு படுகிறது. பென்னி போன்ற நடைமுறை செயல்பாட்டாளர்கள் இவர்களது குண்டியில் குத்தி வீழ்த்தி விடுகிறார்கள். ஷெல்டனின் ஆன்லைன் கோப்பைகளை திருடிய ஹேக்கரை தேடி நான்கு பேரும் போனால், அந்த ஆள் குண்டாக, வாட்ட சாட்டமாக வந்து ஷெல்டன் கையில் எடுத்து போன ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு துரத்தி விடுகிறான். பென்னி எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் அவனது கொட்டையில் ஒரு உதை விட்டு பொருட்களை திரும்ப பெறுகிறாள். ஷெல்டன் தான் ஜெயித்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறான்.

எல்லோரும் சேர்ந்து சமைத்து எல்லோரும் சாப்பிடுவது என்று திட்டம். ஆனால், யாரும் சமைப்பதில்லை, எல்லோரும் சாப்பிட தயாராக இருக்கிறார்கள், இது நடைமுறை. தன்னார்வத்தில் வேலை செய்ய முன்வருகிறார்கள், விரும்பினால் வேலை செய்வேன், என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது மனப்போக்காக இருக்கிறது.

இதற்கு நடுவில் நான் எங்கு வருகிறேன். சுயவிமர்சனமாக பார்த்தால், பிறர் மீது வைக்கும் விமர்சனம்தான். அரசியல் மீதும், சித்தாந்த போராட்டம் மீதும், ஆய்வுப் பணியின் மீதும், தத்துவார்த்த முனையில் செயல்படுவதன் மீதும் ஆர்வம் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நடைமுறை இல்லை. நடைமுறையை வேறு எதன் மீதாவது நிபந்தனையாக ஆக்கிக் கொள்கிறேன். இது காலைக் கட்டி இழுக்கிறது.

கூட வேலை செய்ய ஆட்கள் வேண்டும், நடைமுறை வேண்டும், மற்றவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று அடிக்கு அடி தடை போட்டுக் கொள்வதாக அமைந்து விடுகிறது. இதற்கெல்லாம் அளவில்லாத சக்தி, உற்சாகம், துடிதுடிப்பு வேண்டியிருக்கிறது.
என்னிடம் குறைவாக இருப்பது அதுதான். துடிதுடிப்பு. ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதைச் செய்து முடிப்பதற்கு தேவைப்படும் துடிப்பு இல்லை. ஆறப் போடுவது, இழுத்தடிப்பது, வேறு எதையோ எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது என்று ஓடுகிறது. வெளியிலிருந்து வரும் அழுத்தம், நெருக்கடிதான் வேலையை முன் நகர்த்துவதாக இருக்கிறது. மற்ற நேரங்களில் சோம்பி போய் விடுகிறேன். இன்னார் இன்ன நினைப்பார்கள், இன்னாருக்கு இதை சாதிக்க வேண்டும், இந்த பதிவை இத்தனை பேர் படித்தார்கள் என்பதுதான் முதன்மையாக இருக்கிறது.

லெனர்ட் போலவோ, பென்னி போலவோ உண்மையில் சமூக மனிதனாக சக மனிதர்கள் மீது கரிசனத்துடன் செயல்படுவது மிகக் குறைவாக உள்ளது.

பல முனைகளில் பல தாக்குதல்கள். வேலைகள் நடக்கவில்லை, பொருளாதார ரீதியில் செயல்படவில்லை, சொந்தங்களை, நட்புகளை புறக்கணிக்கிறேன், இணையத்தில், ஃபேஸ்புக்கில், டுவிட்டரில், இணைய தளத்தில் செயல்பட முடியவில்லை. கயிறு போட்டு கட்டி விட்டது போல இருக்கிறது. இதை எல்லாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மீதி எல்லா மனத் தடைகளையும், சுமைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு செயல்பாட்டை பார்ப்போம். எழுதுவோம், சிந்திப்போம், படிப்போம், விவாதிப்போம், சந்திக்க வேண்டியவர்களை சந்திப்போம்.

10-ம் வகுப்பில் படிக்கும் போதும் சரி, 12-ம் வகுப்பில் படிக்கும் போதும் சரி, கல்லூரியில் படிக்கும் போதும் சரி போராட்டங்களை, முரண்பாடுகளை தவிர்க்கும் மனப்போக்கு உள்ளது. பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு பேசுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மனத்தடைகள் நிறைய இருக்கின்றன, அடிப்படையாக இருப்பது பிரச்சனையை எதிர்கொள்ள பயப்படுவது, சச்சரவுகளை, முரண்பாடுகளை தவிர்ப்பது.

ஒரு சாதாரண விவாதத்தில் கூட ரத்தம் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது, நாடித் துடிப்பு அதிகரித்து விடுகிறது, மூச்சு வேக வேகமாக ஓடுகிறது. இப்படி இருப்பது என்ன மாதிரியான டிசைன் என்று தெரியவில்லை. இது இந்த குசும்பு மனநிலைதான். குரலை உயர்த்தி பேசினாலே சண்டை போடுவது, சண்டை போடுவது என்றால் குரலை உயர்த்திப் பேசுவது என்று அவல நிலையில் இருக்கிறோம். இதற்கு மேல் உழைப்பை வெறுக்கும் சோம்பல். கட்டுப்பட மறுக்கும் தடித்தனம்.

மலிவான சுகங்களில், உளவியல் வெற்றிகளில் ஆழ்ந்து கொண்டிருப்பது. எதையும் எதிர்த்து, அழித்து முறியடிப்பதிலேயே ஓடிக் கொண்டிருப்பது, எதையும் புதிதாக கட்டமைப்பது பற்றி அறிவில்லாமல் இருப்பது என்று போய்க் கொண்டிருக்கிறது.