‘காலா காலருகே வாடா’
December 1, 2018 § 3 Comments
‘நீண்ட நாள் வாழுங்கள்’ எ ன்று ஒருவரை வாழ்த்துவது அவருக்குக் கொடுக்கும் சாபம் என்று நான் நினைக்கின்றேன். சம கால நண்பர்களாகிய படைப்பாளிகளும், அறிஞர்களும், ஒவ்வொருவவற்றைருவராக விடை பெறும்போது, தாம் மாட்டும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்குக் குற்றமாகப் படும் என்பதில் ஆச்சர்யமில்லை.
அண்மையில் என் அரும்பெரும் நண்பர்கள், அறிஞர்கள் காலமாகிவிட்டனர். ஐராவதம் மகாதேவன், அ.அ. மணவாளன். இருவரும் நாம் தமிழரென பெருமைகொள்ள பாதை வகுத்தவர்கள்.
முற்றிலும் வேறுபட்ட துறையினின்றும் வந்த மகாதேவன் இந்திய வரலாற்றிலும், கல்வெட்டுத் துறையிலும் ஈடுபட்டுத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டது வியக்கத்தக்க செய்தி. தம் இறுதி மூச்சு உள்ளவரை, அவர் சிந்து சமவெளி நாகரிகத்தின் வெளிப்படுகளாக விளங்கும் உருவ வடிவங்களை எழுத்துக்களாகக் கண்டறிந்து அவற்றைத் தொன்மை தமிழ் இலக்கிய கலாசாரத்தோடு தொடர்புப் படுத்தி அறிஞர் உலகுக்கு அறிவிப்பதில் ஈடுபட்டது மகத்தான தொண்டு.
தமிழ்ப் பேராசிரியர் மணவாளனைக் குடத்திலிட்ட விளக்கு என்று சொல்லவேண்டும். பன்மொழிப் புலவராகிய அவர் தம் மீது வெளிச்சம் படாமிலிருப்பதை அக்கறையாகப் பார்த்துக் கொண்டவர். தொல்காப்பியத்தில் இடை ச்செருகல்களை நுண்மையாக ஆராய்ந்தவர். இந்தியவன் மிகச் சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகிய சரஸ்வதி சம்மான் அவருடைய ‘இராம காதையும் இராமயணங்களும்’ என்ற நூலுக்குக் கிடைத்தது. இந்நூலில் அவருடைய பரந்து பட்ட மொழி அறிவையும் தேர்ச்சியும் காண இயலும். கம்பனின் இராமாயணம் எந்த அளவுக்கு மற்றைய வட்டார மொழிகளில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.
இவ்விருவருவடைய ஆராய்ச்சிப் பங்களிப்பைப் பார்க்கும் போது எனக்கு க் காலத்தை வென்றவர்கள் என்ற நிலையில் காலனைக் காலருகே வாடா என்று சொல்லும் பாரதி வாக்கு நினைவுக்கு வருகிறது.
