Monday, September 28, 2020

தொல்காப்பிய- நன்னூல் மரபும் புதிய இலக்கண உருவாக்கமும்



தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்க  

1. தற்காலத் தமிழுக்கான ஒரு தரவுத்தளம் வேண்டும்.

2.   தமிழ் மரபிலக்கணத்தோடு மொழியியலிலும் போதிய  திறம் வேண்டும்.  

இவை என் வரம்புக்கு அப்பாற்பட்டவை.

3. இத்துறையில் ஏற்கெனவே  நல்லறிஞர்தம் நூல்கள் சில வெளிவந்துள்ளன.

4. சிலர் தொடர்ந்து நுட்பமாகப் பணியாற்றியும் வருகின்றனர்.

இதற்கு மேல் என்னளவில் ஏதும் செய்ய இயலாது. ஆனாலும் 

தொல்காப்பிய - நன்னூல் மரபு (அவ்விலக்கணங்களல்ல அவற்றின்மரபு)

1.புதிய இலக்கண அமைப்புகளை உள்வாங்கத்தக்கது என்பது பற்றியும்

2.அம்மரபைப் புதிப்பித்துப் பயன்கொள்ள வேண்டிய தேவை பற்றியும் 

3.ஏற்கெனவே அவற்றின் செல்வாக்குப் புதிய இலக்கண நூல்களில் உள்ளத என்பது பற்றியும், சில எடுத்துக்காட்டுகள் வழியாகக் கருத்தளவில்                 விவாதித்து அம்மரபு தொடரவேண்டும் என வலியுறுத்த முயல்கிறது         இவ்வுரை.


தொல்காப்பியமும் மரபும்

தொல்காப்பியரே மொழி கால இட மாறுதலுக்குட்பட்டது என்பதை உணர்த்து ஆங்காங்குப் புறனடை புகல்வார்.

   கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் 

   கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே" (வே.ம.,35 & இடை. 48)

என ஈரிடங்களில் கூறுவார். பிறிதோரிடத்தில்,

கிளந்தவற்று இயலான்/ பாங்குற உணர்தல்" (உரி.98) 

என்பார். இந்தக் 'கிளந்தவற்று இயல்' என்பதே மரபு.

இலக்கண மரபுகள்

இலக்கண மரபு பற்றிப் பல்வேறு சிந்தனைகள், கட்டுரைகள், நூல்கள் வெளிவந்துள்ளன. என்னளவில் ஐந்து நூல்களைச் சுட்டலாம் என்று கருதுகிறேன்.

1.இலக்கண உருவாக்கம்                                                         - செ. வை. சண்முகம்

 2. தொல்காப்பிய உருவாக்கம்                                                 - ச. அகத்தியலிங்கம்

3. தமிழ் இலக்கண மரபுகள்:

     கி.பி. 800 - 1400

     இலக்கண நூல்களும் உரைகளும்                                    - இரா. சீனிவாசன்

4. இலக்கணவியல் : மீக்கோட்பாடும் கோட்பாடும்       - சு.இராசாராம்

5. பிற்கால இலக்கண மாற்றங்கள்[எழுத்து]                    - க. வீரகத்தி


Image

Image





மூன்று மரபுகள்
'தமிழ் வரலாற்றிலக்கண' நூலாசிரியர் ஆ.வேலுப்பிள்ளை மூன்று மரபுகளை, ஓரளவு சமயச்சார்பும் கருதி இனங்கண்டுள்ளார் (பக். 19 - 23)

1. தொல்காப்பிய மரபு : இளம்பூரணர், குணவீர பண்டிதர், பவணந்தி, மயிலைநாதர் முதலியோர் இம் மரபினர் . இஃது ஒருவகையில் சமண மரபு. நச்சினார்க்கினியர், இலக்கண விளக்க ஆசிரியர் வைத்தியநாத தேசிகர்  முதலிய சைவருள் ஒருசாராரும் இவ்வழியைப் பின்பற்றினர்.

2. தமிழ் இலக்கணத்தில் வடநூல் முடிபுகளையும் கொள்கைகளையும் புகுத்தி அமைதி காண முற்பட்ட மரபு:தமிழ் இலக்கணத் துறையில் முதலில் நுழைந்த சைவராகிய சேனாவரையர் இப்போக்கின் முன்னோடி. தமிழையும் வடமொழியையும் ஒருங்கு பேணிய திருவாவடுதுறை ஆதீனத்தோடு தொடர்புடைய சங்கர நமச்சிவாயர், சுவாமிநாத தேசிகர், சிவஞான முனிவர் முதலியோர் சேனாவரைய நெறியினர்.

3.சங்கத(சமற்கிருத) இலக்கணமும் தமிழ் இலக்கணமும் ஒன்றே எனும் மரபு: தொல்காப்பிய இலக்கணத்தை மறுத்துச் சங்கத இலக்கணத்தை அப்படியே தமிழுக்குக் கொணரும் முயற்சியைக் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் தொடங்கிவைத்தது.

சங்கத, தமிழ் இலக்கணம் ஒன்றே என்னும் மரபினவாகக் கருதப்படும் வீரசோழியம், பிரயோக விவேகம் ஆகியவற்றின் கோட்பாட்டு வேறுபாடுகளைப் பேராசிரியர் சு.இராசாராம் அவர்கள் விளக்கியுள்ளார்.

தொல்காப்பியத்தைவிடவும்  அவிநயத்தை ஒட்டியே நன்னூல் செல்கிறது என  மயிலைநாதர் உரை மேற்கோள்கள் கொண்டு கருதுகிறார் சீனிவாசன் (ப. 129) 
நேமிநாதச் சொல்லதிகார இயலமைப்பு, பெரிதும் தொல்காப்பியச் சொல்லதிகார இயலமைப்பையே பின்பற்றுகிறது. இதனைத் தொல்காப்பியத்தின் வழி நூல் எனலாம்.

என்றாலும் தொல்காப்பிய-நன்னூல் மரபு எனக் காண நேர்வது ஏன்?

தொல்காப்பிய - நன்னூல் மரபு

நன்னூல் தோன்றுவதற்கு முன் வேறு சில இலக்கணமரபுகள் இருந்தாலும் தொல்காப்பியமே செல்வாக்குடன் பயிலப்பட்டுள்ளது. குறிப்பாகச் சான்றோர் செய்யுள்கள் எனப்பட்ட  எட்டுத்தொகை பத்துப்பாட்டாகிய சங்க இலக்கியங்களின் மதிப்போடு தொடர்புடையதாக, அவ்விலக்கியங்களின் இலக்கணமாகத் தொல்காப்பியம் கருதப்பட்டது; கருதப்படுகிறது.

பொதுக் காலம் [கி.பி.] 11 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான உரையாசிரியர் காலம்  சங்கத்தமிழுக்கு மீட்சி இயக்கம் நிகழ்ந்த காலம் என்கிறார்  வையாபுரிப் பிள்ளை (பக். 197 - 198)

15 ஆம் நூற்றாண்டிலிருந்து  சான்றோர் செய்யுட் பயிற்சி குன்றிச் சைவ சித்தாந்த உரைகள் பெருகின. இதற்குச்  சைவ சமயவுணர்ச்சி மிகுந்ததே காரணம் என்கிறார் தாமஸ் லேமன் (T.Lehman, pp.68-70)இதனால் பெரிதும் சமயச்சார்பற்ற சங்க இலக்கியங்கள்  பயிலவும் பயிற்றவும் படாமற் போயின. நற்பேறாகச்  சைவப்புலவர் மரபினராலும் சைவ மடங்களாலுமே பெரும்பாலான சான்றோர் செய்யுட் சுவடிகள் பேணப்பட்டதையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீட்க வாய்ப்பாக அமைந்ததையும் வரலாறு காட்டுகிறது[சங்க இலக்கிய முதற்பதிப்புகளிலுள்ள சுவடி உதவியோர் பட்டியல்கள் காண்க]

அகத்திணையியலில் பிரிவின்கண் நிகழும் கூற்றுகளுள் தலைவி கூற்றுக்கான சூத்திரம் இல்லை. " காலப் பழமையாற் பெயர்த்து எழுதுவார் விழ எழுதினார் போலும் " என்பார் இளம்பூரணர். இது பயிற்சி இடையீட்டைக் காட்டும். 
பொதுக் காலம் 19ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியப் பயிற்சி அரிதாயிருந்ததைத் தம் தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரைப்பதிப்பின் பதிப்புரையில் (பக்.௪-௫)சி.வை.தாமோதரம்பிள்ளை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகப் பொருளதிகாரப் பயிற்சி இறையனாரகப்பொருள் காலத்தில் குன்றியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
                                              Image



பயில்வில் சற்றே ஏற்ற இறக்கங்கள் தென்பட்டாலும்,தொல்காப்பியம் செல்வாக்கை இழக்கவில்லை.

தொல்காப்பியத்தின் தொடர்ச்சிக்கு அதன் நடைமுறைப் பயன்பாட்டை விடவும் பண்பாட்டு மதிப்பே காரணம் . உரையாசிரியர்கள் பிந்தைய, தம்காலச் செந்தமிழ் வழக்குகளுக்கும் -  முறை வைப்பு, விதப்பு முதலியவற்றால் - அதனைப் பயன்பாட்டிலக்கணமாகவும் பேண முற்பட்டனர்.

தொன்றுதொட்டுத் தொடரும் தமிழ்மொழி , தமிழ் இலக்கண மரபுணர்வோடு கால, மொழி மாறுதல்களையும் கணக்கில் கொண்டு பவணந்தியார் இயற்றிய நன்னூல் நடைமுறை இலக்கணமாக, பாட நூலாக , பயிலப்பட்டது; பயிலப்படுகிறது.

நன்னூல் சமணரால் இயற்றப்பட்டது. அதன் முதல்உரையாசிரியராகிய  மயிலைநாதரும் சமணரே . எனினும் சைவரும், வைணவர்தாமும் பயிற்சிக்குரியதாக அதனைக் கொண்டனர்.

 நன்னூல்  தமிழைப் பயிலப் பொதுநிலையில் பயன்பட்டதற்குக் காரணம் தமிழ் ஒரு மொழி என்னும் நிலையில் கருவியாக,  பெரிதும் சமயஞ்சாராததாக  இருந்ததும், இருப்பதுமேயாகும்.

சுருங்கச் சொல்வதெனில் தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ்நூல்வழித் தமிழாசிரியர்*போற்றுவனவாகப் பயிலப்பட்டன. 

பதிப்பு வரலாற்றிலும் இம்மரபின் பதிவு தொடர்ந்தது. இ. சாமுவேல் பிள்ளையால் தொல்காப்பிய-நன்னூல் ஒப்புநோக்குப் பதிப்பு 1858 இலேயே வெளிவந்தது. முகப்பில் 'தொல்காப்பிய நன்னூல்' என்றே தலைப்பு அச்சிடப்பட்டது. 
                                           Image

வித்துவான் க.வெள்ளைவாரணர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சி மாணவராக இருந்த காலத்தில் (1935 - 1937) 'தொல்காப்பியம் - நன்னூல் - எழுத்ததிகாரம் ' என்னும் ஆராய்ச்சியுரையினை எழுதினார். 1962 இல் அது நூலாயிற்று. அதனைத் தொடர்ந்து அதற்காகத் தொகுத்த குறிப்புகளை அடியொற்றித் 'தொல்காப்பியம் - நன்னூல் - சொல்லதிகாரம்' என்னும் ஆய்வுரை 
1971 இல் நூலாயிற்று என்கிறார் வெள்ளைவாரணர் (பதிப்புரை)


நன்னூல் காலத்திற்குப் பின் தமிழில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நேர்ந்துவிட்டாலும் , இருபத்தோராம் நூற்றாண்டின் இருபதுகளிலும் கூட , போதுமானதன்று என உணரப்பட்டும் கூட, நன்னூல் நடைமுறைப் பயனுடையதாகவே  தொடர்கிறது. 

இதற்கு மரபின் செல்வாக்கு மட்டுமன்று,  மரபிலக்கணக் கூறுகள் பயன்பாட்டுக்கு இணக்கமாயிருப்பதும் காரணமாகும்.

[*யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர்(நூற்பா 6) வடநூல்வழித் தமிழாசிரியர் என ஒரு சாராரைச் சுட்டுகிறார். இதனால் தமிழ்நூல் வழித் தமிழாசிரியர் இருந்தமையை உய்த்துணர முடிகிறது. இதே காலத்தில்தான் வீரசோழியம் தோன்றியது என்பதையும் கருதவேண்டும். ]

வட மொழி மாதிரிகளின் ஒட்டாமை

வடமொழி மாதிரிகளைக் கொண்டு தமிழை விளக்க முற்பட்ட முயற்சிகளின் திறம் எவ்வாறிருப்பினும் அவை தமிழோடு ஒட்டவில்லை. அவற்றின் சுவடுகள் சில தொடர்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

எடுத்துக்காட்டாக வீரசோழியம் சுப்பிரத்தியம் என்னும் வடமொழி உருபைத் தமிழுக்கும் கொணர்கிறது.

" சாத்தன் , கொற்றன் என ஒருவனைக் கருதின சொல்லின் பின்பும்
   சாத்தி ,  கொற்றி என ஒருத்தியைக் கருதின சொல்லின் பின்பும் 
   யானை , குதிரை என ஒன்றைக் கருதின சொல்லின் பின்பும்
   சு  என்னும் எழுவாய் வேற்றுமைப் பிரத்தியம் நிறுத்துக....
    எங்கும் அழியும் ஏறிய சு என்பதனால் அச்சொற்களின் பின்பு நின்ற 
    சுவ்வை உலோபித்துச் சாத்தன், கொற்றன் என்று உச்சரித்துக்கொள்க."
    (நூற்பா 33 உரைப் பகுதி) -என்பது வடமொழி வழிப்பட்ட வீரசோழிய முறை . மொழியியலார் சொல்லும் சுழியுருபை ஒத்தது இது. இதனைக் குற்றமாகக் கருதவேண்டியதில்லை. இஃதொரு இலக்கண விளக்கமுறை.

விகுதிபுணர்ந்து கெட்டது என விளக்கும் முறையொன்று உரையாசிரியர் சிலரிடம் இருந்தது ; இலக்கண நூல்களிலும் இடம்பெற்றது. இது வடமொழி வழி இலக்கணச் சுவடு எனலாம்.

இத்தகு சுவடுகள் மட்டுமன்றி வடநூல் வழித் தமிழ் இலக்கணங்களாகக் கருதப்பட்டவற்றின் உடன்பாடான செல்வாக்கும் தமிழ்வழித் தமிழிலக்கண மரபைச் செழுமைப்படுத்தியுள்ளன என்பதைக் க. வீரகத்தி சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.
வீரசோழியத்தின் செல்வாக்கு நன்னூலிலும் , இலக்கணக்கொத்தின் செல்வாக்கு 
பிந்தைய தமிழிலக்கண நடைமுறையிலும் தொடர்வதை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் காலம்  அறிவியல்பூர்வமாகத் தமிழும் வட மொழியும் வெவ்வேறு குடும்ப மொழிகள் அவற்றின் எழுத்து, சொல், தொடரமைதிகளும் வேறு என்பதை நிறுவிவிட்டது.

குறியும் செய்கையும்

சரி . இலக்கண மரபு எதனூடாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது?
இலக்கணக் கலைச் சொற்களினூடாகவே பெரிதும் மரபு தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலக்கண மரபில் அது குறி எனப்படுகிறது.

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக் 
கொள்ளும் என்ப குறியறிந் தோரே (தொல்.பொருள்.50)

என்னும் நூற்பாவுரையில் இளம்பூரணரும் நச்சினார்க்க்கியரும் குறி என்பதற்கு இலக்கணம் என்றே பொருள் கண்டுள்ளனர். ஒருவகையில் , எத்துறையாயினும் , கலைச்சொற் புரிதலே பெரும்பாலும்  துறைப் புரிதலாகும். 

பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்  
என நன்னூலுக்கு முன்னிணைப்பாகவுள்ள பொதுப் பாயிரச் சூத்திரம் (20) சொல்லும்.இப்பொதுப் பாயிரம் பவணந்தியார் இயற்றியதன்று; அவர் தொகுத்து முறைப்படுத்தியது.

" குறியாவன இவை உயிர், இவை ஒற்று, இவை பெயர், இவை வினை என்றல் தொடக்கத்து அறிதல் மாத்திரையாய் வருவன. குறி என்பது அறிதலை உணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர் " என்கிறார் சங்கர நமச்சிவாயர்; மேலும், 'குறி என்பதற்குப் பெயர்களை உணர்த்தும் சூத்திரம் என்று பொருள் கூறுவாரும் உளர் ' எனச் சுட்டி மறுக்கிறார். 

' பெயரே தொகையே..' என்னுமொரு சூத்திரத் தொடக்கம் மட்டும் காட்டிப் பெயர்ச் சூத்திரம் முதலிய ஆறுவகைகளை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பாயிர வுரையில் கூறுவார்.
சங்கர நமச்சிவாயர் தரும் எடுத்துக்காட்டுகளை நோக்கப் பெயர் என்பதும் பொருந்தும் எனினும் , கலைச்சொற்கள் இதனை / இவற்றை இவ்வாறு குறிக்கும் எனக் குறிப்பாக வரையறுத்த பொருள் உடையன.

குறி = குறித்தல்; வரையறுத்துச் சுட்டுதல்  என்பதை உணர்த்தும் முதனிலைத் தொழிற்பெயர் எனல் பொருந்தும்.

மேலும் சங்கர நமச்சிவாயர், "எல்லா நூலுள்ளும் வரும் எல்லாச் சூத்திரங்களும் குறிச் சூத்திரம் , செய்கைச்சூத்திரம் என இரண்டாய் அடங்கும்" என்பார். 
செய்கை என்பதற்கு அவர் தரும் விளக்கம்:  " பத முன் விகுதியும் பதமும் உருபும் புணரும் புணர்ச்சி விதி அறிந்து , அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது , அவ்வாறு வேண்டுழிப் புணர்த்தலைச் செய்தும் பெயர், வினை முதலியன கொள்ளும் முடிபுவிதி அறிந்து , அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது , அவ்வாறு வேண்டுழி முடித்தலைச் செய்தலும் முதலியன " 

குறிகள் அறிந்து கொள்ளுதற்குரியன; அக்குறிகளை அறிந்து மொழியின் இயங்குநிலை உணர்தல் செய்கை. 

சுப. திண்ணப்பன் தொல்காப்பிய எழுத்து, சொல்லதிகாரக் குறியீட்டுச் சொற்களை நன்கு தொகுத்தாராய்ந்துள்ளார்; நன்னூலின் கலைச்சொற்களோடு ஒப்பு நோக்கியுள்ளார்.

" தொல்காப்பியத்திலுள்ள குறியீட்டுச் சொற்களை நுணுகி நோக்குவார் அவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் எளிதில் அறிய இயலும். அவ்வாறுணர்வார் அக்குறியீடுகள் நீண்ட வடிவத்திலிருந்து சுருங்கிய வடிவமாக மாறிய தன்மையை நன்கு அறிவர். தொல்காப்பியத்தில் தொடர்களாக உள்ள சில, நன்னூலில் தொகையாகப் பயன் படுத்தப் பட்டுள்ளன[ எ.கா. அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவி (தொல்.) , அண்மை விளி (நன்.)]... நன்னூலில் உள்ள குறியீடுகள் சுருக்கமானவையாகவும் திட்பமுடையனவாகவும் திகழ்கின்றன" (பக்.372& 376)

கலைச்சொல்லாகவும் பொதுப் பொருளிலும் பயன்படுத்துதல்( எ.கா. அல்வழி) , பல பொருள் ஒரு சொல்[ முறை (வரிசை/ உறவுமுறை) , ஒரு பொருள் பல சொல்( ஈறு/இறுதி / அந்தம்) , தனித்தும் சேர்த்தும் பொருள் வேறுபாடின்றிப் பயன்படுத்துதல் ( பெயர் /பெயர்க்கிளவி / பெயர்ச்சொற் கிளவி / பெயர்நிலைக் கிளவி) முதலிய கலைச்சொல் தடுமாற்றங்கள் தொல்காப்பியத்தில் காணப்படுவதை நிதானமாகச் சுட்டுகிறார்(பக். 368 - 373). எனக்குத் தெரிந்த அளவில் இலக்கணக் கலைச்சொற்களை இக்கட்டுரை போல் அலசி ஆராயும் கட்டுரை கடந்த ஐம்பதாண்டுகளில் பிறிதில்லை.

தொல்காப்பியம் முதலியவற்றின் பெரும்பாலான இலக்கணக் கலைச்சொற்கள் புழக்கத்தில் பயனுடையவாயிருக்கின்றன. ஆனால், மரபிலக்கணங்களில் சிலபல சொற்கள் சற்றுக் குறைபாடுடையனவாக, முன்னுக்குப் பின் மாறாக (inconsistent), கையாளப்பட்டுள்ளன. "இதுவே பல மரபு இலக்கணங்களின் குறையாகவும் இலக்கணக் கோட்பாட்டு ஆராய்ச்சிக்குத் தடையாகவும் அமைந்துவிட்டது" என்கிறார் செ.வை.சண்முகம் (ப.37)

மரபிலக்கணக் கலைச்சொற்களில் மரபறிந்தோரே தடுமாறுவதும்  இல்லாமலில்லை. மிகவும் பழகிய செய்யுள் என்கிற சொல்லையே எடுத்துக்கொள்வோம்.

செய்யுள் என்பதற்குப் 'பா' எனப்பொருள் தருகிறது 'தொல்காப்பியச் சிறப்பகராதி' ;
மாறாகத் 'தொல்காப்பியச் சொற்பொருளடைவு' , 'பேச்சுவழக்கல்லாத பாட்டு , உரை போன்ற மொழி வடிவம்' என்று பொருள் தந்து , அடிக்குறிப்பில், " தொல்காப்பியர் காலச் செய்யுள்  பாட்டு, உரை, முதுசொல், மந்திரம் போன்றவற்றையும் உட்கொண்டு வழக்கெனப்படும் பேச்சிலிருந்து வேறுபட்டது" என விளக்கம் தந்துள்ளது.

இரண்டும் அறிஞர்களால் ஆக்கப்பட்டவை. பின்னதே செய்யுள் என்பதற்கு உரிய பொருள் தந்துள்ளது.

இந்தக் குழப்பம் காலத்தின் கோலம்; சொற்பொருள் மாற்றத்தின் (semantic change) விளைவு.

தமிழ் வழிக்கு இயையுமெனில் தொல்காப்பிய நன்னூல்களில் இடம்பெறாத பிற இலக்கணநூற் கலைச்சொற்கள் சிலவற்றையும் ஏற்கலாம். பெரும்பான்மை கருதியே தொல்காப்பிய - நன்னூல் மரபு என்கிறோம்.

" தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, விதிவினை, மறைவினை, செயப்படுபொருள் குன்றிய வினை, குன்றாத வினை, பொது வினை, அவாய்நிலை, அண்மைநிலை என அவர் [இலக்கணக்கொத்து ஆசிரியர்] இலக்கண உலகில் நிலைப்படுத்திக்கொண்ட குறியீடுகள் பலப்பல ( க. வீரகத்தி, ப. 69). 

அனைத்து மரபிலக்கணக் கலைச்சொற்களையும் தொகுத்து வகைப்படுத்தி வரன்முறை காணும் பெருமுயற்சி ஓர் ஆய்வாக விரிதல் வேண்டும். இதற்குத் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி பெரிதும் உதவும். அவ்வகராதியின் தலைச்சொல் அடைவு தனிநூலாக வந்துள்ளது.

Image

மரபிலக்கணக் கலைச் சொற்களைத் தவிர்த்து, மொழியியல் அடிப்படையில் முற்றிலும்  புதிய இலக்கணக்குறிகள் கொண்டு தமிழுக்கு இலக்கணம் வகுக்கலாம்தான்.அது ஒப்பீட்டளவில் துல்லியமாக அமையும்தான். அத்தகு குறிகள்தாமும் தமிழாக்கும்போது இயல்பாகவே மரபிலக்கணக் கலைச் சொல் சார்புடையதாயிருப்பதைப் பார்க்கலாம்.

இவற்றை இலக்கணக் கலைச்சொற்களாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

புதிய தமிழாக்கங்களிலும் புரிதல் குழப்பம் இல்லாமலில்லை.அண்மையில் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் உரை கேட்ட ஒருவர் மாற்றிலக்கணம் என்பதைப் பிறவற்றிலிருந்து மாறுபட்ட இலக்கணம் என்றெண்ணி வினவினார். இது மாற்று என்பதற்கு வழக்கில் உள்ள பொருளோடு கொண்ட குழப்பமே காரணம். 

Morphology, Morpheme, Allomorph என்பன உருபனியல், உருபன் , மாற்றுருபு என நிலைத்துவிட்டன. இங்கு, உருபு என்பதுMorph என்பதைக் குறித்து மரபிலக்கணப் பொருளின் வேறாகிறது. வேறு எனினும் மாறு அல்லது முரண் இல்லை. 

phoneme, Allophone என்பனவற்றை மு.வ. முதலொலி , வகையொலி என ஒரு காலத்தில் தமிழாக்கினார் (ப.32). இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்பவற்றை உளங்கொண்டு செய்யப்பட்டவை என்பது வெளிப்படை. 

காலப்போக்கில் Morpheme, toneme , Grapheme முதலியனவற்றின் சீர்மை நோக்கி Phoneme , Allophone என்பவை ஒலியன், மாற்றொலி என்றாயின. பிறவும் அவ்வாறே.

துறையில் புழக்கமும் புலமையும் மேம்பட மேம்படக் குழப்பம் குன்றும்.


இலக்கண உருவாக்கத்தில் மரபு

இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

கணினி மொழியியல் முதலியவற்றின் அடிப்படையில் எந்திரத் தேவை கருதித் தமிழின் அமைப்பை வரையறுத்தல், பிறமொழியாளர்க்குத் தமிழ் பயிற்ற, தமிழில் மொழிபெயர்க்க,  அவ்வம் மொழிக்கேற்ப உருவாக்கப்படும் உறழ்நிலை இலக்கணம் (Contrastive Linguistics) முதலியவை தேவைதான். 

தமிழில் புழக்கமுள்ளவர்களுக்குத் தற்காலத் தரநிலைத் தமிழை - எளிமையாகக் சொல்வதெனில் இன்றைய இலக்கியத் தமிழை - தமிழ் வழியாகப் பயிற்றும் நோக்கில் தமிழ் மொழி அமைப்புகளை விளக்கும் இலக்கணத்தையே நான் இங்குக் கருதுகிறேன். 

மொழி வெறும் கருவி மட்டுமன்று; தொடர்ச்சியான மாற்றங்களினூடாகத் தொடரும் பண்பாட்டுச் சேமிப்புமாகும். தமிழுக்குப் பனுவல் நிலையில் தமிழி(தமிழ் பிராமி) பாறைப் பொறிப்பு, பானையோட்டுக் கீறல் தொடங்கி இன்றளவும் தொடர்ச்சி உண்டு. 'என்றுமுள தென்றமிழ்' எனக் கம்பன் உணர்ந்தது இதைத்தான். தற்காலத் தரநிலைத் தமிழ் முற்றிலும் புதியதன்று; மாறுதல்கள் பலவற்றினூடாகத் தொடரும் ஒன்று. இலக்கணமும் இந்தத் தொடர்ச்சிக்கு ஈடுகொடுத்துவருகிறது.

சில வேளைகளில் நவீன எழுத்தாளர்கள் உரைநடையில் கூட முந்து தமிழை ஊடாட விடுகின்றனர்(நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரைக்குப் 'பனுவல் போற்றுதும்' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறார்)

தமிழ் மரபிலக்கண அறிவு என்றுகூட  சொல்ல இயலாது, மரபிலக்கணச் சுவை கண்ட ஒருவனின் ஆதங்கமாகவும் இந்தக் கட்டுரையைக் கொள்ளலாம். 

இலக்கணக் கலைச்சொற்கள் அன்றாட வழக்கில் பயன்படுவதும் உண்டு. அகவை பத்தே ஆன, ஆங்கில வழியில் ஐந்தாம் வகுப்புப் பயிலும் குழந்தை தன் தங்கையோடு பிணங்கியபோது, " நான் அஃறிணையோடெல்லாம் பேச மாட்டேன் " என்றதை அறிந்து மகிழ்ந்தேன்; வியந்தேன். இதில் ஒரு பண்பாட்டுக் கூறும் பொதிந்துள்ளதல்லவா! 

எழுத்திலக்கணம் 

உயிர், மெய், உயிர்மெய், குற்றெழுத்து/குறில், நெட்டெழுத்து/நெடில் , வல்-எழுத்து, மெல்-எழுத்து, இடை-எழுத்து (வல் -, மெல்-, இடை-) , குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் , அளபெடை முதலியன மரபுவழிக் கலைச்சொற்கள்.

எழுத்துகளை வகைப்படுத்தும்போது , குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் மூன்றை மட்டும் 'சார்ந்து வரல் மரபின் மூன்று' என்பார்தொல்காப்பியர். 

பிறப்பியலில் 'சார்ந்து வரினல்லது தமக்கியல் பிலஎனத் 

தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்று ' எனச் சுட்டுவார்.

பின்னர், சார்பெழுத்து என்னும் கலைச்சொல் உருவாயிற்று. தொல்காப்பியர் கலைச்சொல் கொள்ளாமைக்குக் காரணம் அவை பற்றிய அவரது  கொள்கையே.

மேலும், நன்னூல் அவிநய வழி நின்று உயிர்மெய் முதலிய பத்து எழுத்துகளைச்சார்பெழுத்து என்றது(எண்ணிக்கை மிகுதியை வளர்ச்சியாகக் கொள்ள வேண்டியதில்லை)

மொழி முதல், கடை எழுத்துகளிலும் மெய்ம்மயக்கத்திலும் மாறுதல்கள் நேர்ந்துள்ளன. 

கலைச்சொற்களை மாற்ற வேண்டியதில்லை.

போலி எழுத்திலக்கணம் நீட்டப்படலாம். கேரளம், கேரளா (அம்/ஆ - போலி)

இரண்டும் சரி. மரபு பேண விரும்புவோர் - அம் இறுதியைத் தொடரலாம். - ஆ இறுதி வழுவோ பிழையோ அன்று. புணர்ச்சியில் இயல்பாகவே இச்சொற்கள் மரபு பேணிக்கொள்கின்றன(கேரளம் + இல் = கேரளத்தில்; கேரளா + இல் = கேரளாவில் - என அத்துச் சாரியையோ உடம்படுமெய்யோ  செய்கை பிழையின்றி நிகழ்கிறது)

தொல்காப்பியம் கூறும் நிறுத்த சொல், குறித்துவரு கிளவி என்பன நிலைமொழி, வருமொழி என்று நிலைப்பட்டன (தொல்காப்பியத்தில் நிலைமொழி என்பதும் ஓரிடத்தில் ஆளப்பட்டுள்ளது).

புணர்- ச்சி என்னும் எழுத்திலக்கணக் கலைச் சொல் தொடர்கிறது.

எழுத்துச் சீர்திருத்த அணியினரும் மொழியியல் ஆய்வாளரும் ஐ, ஒள தேவையில்லை என்கின்றனர்.

அறிவார்ந்த நிலைநின்று மொழியியலார் கருத்தில் உடன்படலாம். மொழி வெறும் எந்திரமன்று. 'மரபு நிலைதிரியின் பிறிது பிறிதாகும்' என்று தொல்காப்பியம்பிறிதொன்று கருதிச் சொன்னதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். சுமைதான் . மரபு கருதிச் சுமப்பதே நல்லது. 

மரபிலக்கணமும் மொழியியலும் பயின்றோர் இதில் நிதானம் கடைப்பிடித்துள்ளனர்.

 '12 உயிர் ஒலியன்களில் ஐகார ஒளகாரங்களை மரபிலக்கணங்கள் நெட்டுயிர்களாகவே கொண்டுள்ளன.இருந்தாலும் இன்றைய வழக்கில் ஐகாரம் அகர யகரச் சேர்க்கையாகவும், ஒளகாரம் அகர வகரச் சேர்க்கையாகவும் அமைந்துள்ளன ' (பொற்கோ, ப.3)

" ஐகாரத்தை அ+ய் என்றும் ஒளகாரத்தை அ+வ் என்றும் இரு இரு ஒலியன்களின் சேர்க்கையாகக் கருதலாம்" (அகத்தியலிங்கம், தமிழ் மொழி அமைப்பியல், ப34)

ஐகார ஒளகாரங்களை நீக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லவில்லை.

உயிர்மெய் புழக்கத்தில் உள்ளது. இதனைச் சார்பெழுத்தாகக் கொள்ள வேண்டியதில்லை. 

குற்றியலுகரம் இன்றும் தேவை. ஆய்தம் அரிதாகப் புழங்குகிறது. அஃறிணை என்னும் கலைச்சொல்லுக்காகவே ஆய்தம் பேணப்பட வேண்டும்.

எஃகு முதலிய சொற்களில் ஓரளவு பயன் படுகிறது.

F இல் தொடங்கும் ஆங்கிலச் சொற்கள்,  பெயர்கள் (எ.கா. ஃபைல், ஃபிர்தௌசு) ஆகியவற்றில் ஆய்தப் பயன்பாடு புதுவரவு. மரபிலக்கண நோக்கில் இவை பிழையானவை.

புத்திலக்கண நோக்கில் இதற்கும் ஓர் இடம் தரலாம்.

தற்காலத் தமிழ் எழுத்தில் ஓசை நீட்டம் காட்ட அளபெடைகள் அரிதாகப் பயன்படுகின்றன. நெடிலை அடுத்து நெட்டுயிரையே போட்டுக் காட்டும் வழக்கமொன்றும் உள்ளது (எ.கா. நேஏஏஏஏ... ராக).

உயிர், மெய், உயிர்மெய், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை ஆகியவற்றை மரபுவழிப் பெயர்கள் சுட்டிப் புத்திலக்கணத்திலும் பேணலாம்; பேணுகின்றனர்.

இருபத்தாறு என்பது இருபத்தியாறு [இருபத்த் (உ) + இ + (ய்) ஆறு] என வழக்கில் பெருகியிருப்பதை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டி, " இருபத்தியாறில் இடம்பெற்ற இகரத்தை இனி ஒரு புதிய சாரியையாகப் புதிய தமிழ் இலக்கணம் இனங்காண வேண்டும் " என்கிறார் இரா.கோதண்டராமன் (ப.124) . 

சாரியை என்னும் கலைச்சொல் பழசு; 'இ'கரம் என்னும் சாரியை புதுசு. இது மரபின் தொடர்ச்சி.

சொல், தொடரிலக்கணம்

உயர்திணை, அஃறிணை - மாறாமல் தொடரும் கலைச்சொற்கள். ஆடூஉ அறி சொல் முதலியனவாகத் தொல்காப்பியர் சொல்வன ஆண்பால் விகுதி முதலியனவாக மாறியுள்ளன. இம்மாற்றம் கையாள எளிதானது.

இலக்கண விளக்கத்தில் சற்றே வேறுபடினும் பெயர், வினை , இடை, உரி மாறவில்லை. தொழிற்பெயர், ஆகுபெயர் முதலியனவும் இன்றளவும் பயனுடையவை.

தொல்காப்பியம் தொழிற்பெயர் என ஒன்றை மட்டும் சொல்கிறது. காலங் காட்டும் பெயரைத் 'தொழில்நிலை ஒட்டும் பெயர்' (வேற்.9) என ஓரிடத்தில் குறிக்கிறது.

நன்னூல் தொழில்நிலை ஒட்டும் பெயரை ,வினையாலணையும் பெயர் என ஆளுகிறது. இதுவே இலக்கணப் பயில்வில் பெருவழக்காகியுள்ளது.

  1.தமிழ்ப் பயிற்சி

 2.தமிழ் பயில்தல்

 நிலை மொழி தமிழ் - பெயர்ச்சொல்; வருமொழி - பயிற்சி, பயில்தல் இரண்டும் மரபிலக்கணப்படி தொழிற்பெயர்கள். இரண்டுமே வேற்றுமைத்தொகைகள்தாம்.

  1. தமிழ்மொழியில் பயிற்சி  என ஏழாம் வேற்றுமைப் பொருளில் விரிக்கலாம்.

   2. தமிழைப் பயில்தல் என இரண்டாம் வேற்றுமைப் பொருளில் விரியும். 

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வருமொழி வல்லெழுத்தாயினும் வலி மிகாது.

 மரபிலக்கணப்படி வருமொழி  இரண்டும் தொழிற்பெயர்கள். ஆனால் தொடரியல் இலக்கண உறவில் வேறுபடுகின்றன. 

 பயிற்சி- தொழிலின் பெயர்

பயில்தல்- தொழில் நிகழ் பெயர்

 எனப் பெயரிட்டு ஆளலாம். வேறு வகையில் பெயர் சுட்டவும் வாய்ப்புள்ளது.

ஆனால், தொழிற்பெயர் என்னும் மரபான கலைச்சொல்லின் சாயல் குன்றாமல் ஆக்குவது நல்லது. 

 தொழில், பெயர் என்னும் இரு சொற்களையும் தக்கவைத்துக்கொண்டு

 தொழிலின் பெயர் (ஆறாம் வேற்றுமைத்தொகை)

தொழில் நிகழ் பெயர் (வினைத் தொகை) - என்றால், மரபான 'தொழிற்பெயர்' என்பதன் உள்வகைகளாக இவற்றைக் கொண்டுவிடலாம்.

 தொடரியல் நிலைநின்று தொல்காப்பியத்தைப் பார்க்கலாம். மொழி இலக்கணம் என்னும் நிலையில் , தொல்காப்பியர் தொடரிலக்கணத்திற்கு  முதன்மையளித்துள்ளார் . 

தொல்காப்பியப் பயிற்சி மீள் எழுச்சியுற்றபோது சொல்லிலக்கண உரைகளே மிகுதியாகத் தோன்றின. இதற்கு வடமொழி இலக்கணச் செல்வாக்குக் காரணமெனக் கூறப்படுவதை (சீனிவாசன், ப.91) நான் மறுக்க விரும்பவில்லை. அதுமட்டுமே காரணமன்று என்று கருதுகிறேன். 

தொல்காப்பியர் இடையியலில் வினை செயல் மருங்கின் காலமொடு வரும் கால இடைநிலைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை அவர் அறிந்திருக்கிறார்.

எழுத்ததிகாரத்தின் ஆறு இயல்கள் - மூன்றில் இரண்டு பங்கு - புணர்ச்சி பற்றிப் பேசுகின்றன. இவை தாமும் தொடரிலக்கணம் நோக்கியவை என்று தென்படுகிறது.

தொல்காப்பியர் சொல்லின் அகப்பகுதிகளான பகுபத உறுப்பிலக்கணமும், அகப் புணர்ச்சியும் கருதாமைக்குரிய காரணங்களுள் ஒன்று தொடரிலக்கண நோக்கில் அவை பொருட்படுத்தத் தக்கதனவல்ல என்பது.

பால் காட்டும் விகுதிகளும் சாரியைகளும் தொடரியல் சார்ந்தவையாதலின் அவற்றை விளக்கியிருக்கிறார் தொல்காப்பியர்.

பவணந்தியாரும்  பகுபத இலக்கணத்தை எழுத்ததிகாரத்தின் பதவியலிலேயே வைத்துள்ளார். 

பகுபத உறுப்புகளாதலின் பால் காட்டும் விகுதிகளையும் அவர் பதவியலில் சொல்ல நேர்ந்தது.

எழுத்ததிகாரத்தை 'எழுத்தெனப்படுப' என்று தொடங்கிய தொல்காப்பியர் சொல்லதிகாரத்தைச் ' சொல்லெனப்படுப' என்று தொடங்குவதுதானே சீர்மை!.

திணை, பால் பகுப்புகள் தமிழுக்கேயுரியன என ஓர்ந்துணர்ந்து அவற்றை முதற்கண் வைத்த திறத்தை அகத்தியலிங்கம் விளக்கியுள்ளார் (தொல்காப்பிய உருவாக்கம், பக்.108 - 118)

 உயர்திணை, அஃறிணை, ஆடூஉ , மகடூஉ, பல்லோர், ஒன்று, பலவறி சொற்கள் ,  அவற்றின் ஈற்றில் நின்று இசைக்கும் பதினோர் எழுத்துகள் (அவையாவன பால் காட்டும் விகுதிகள்) ஆகியவற்றைக் கூறிப் பத்தாவது நூற்பாவில் தொல்காப்பியர்

இரு திணை மருங்கின் ஐம்பால் அறிய

ஈற்றின் நின்றிசைக்கும் பதினோர் எழுத்தும்

தோற்றம் தாமே வினையொடு வருமே 

என்கிறார்; அடுத்து, அந்தாதியாக ,

வினையில் தோன்றும் பாலறி கிளவியும்

பெயரில் தோன்றும் பாலறி கிளவியும்

மயங்கல் கூடா; தம்மரபினவே 

என மரபைக் காரணம் காட்டி இயைபை(Concord)   விதிக்கிறார்.

பெயரிலக்கணமோ வினையிலக்கணமோ கூறும் முன்பே

பெயர், வினை என ஆள நேர்கிறது. உண்மையில் பெயர், வினை, இடை, உரி யாவும் தொடரை விளங்கிக்கொள்வதோடு தொடர்புடையவை.

தொல்காப்பியர் சொன்ன  தமிழ்த் தொடரிலக்கண இயைபு மரபு இன்றளவும் தொடர்கிறது. இது தமிழின் மொழி அடையாளங்களுள் முதன்மையான ஒன்றாகும்.

ஐம்பால் என்பது தொல்காப்பிய மரபு. வீரசோழிய வேற்றுமைப் படலம் " ஒருவன் ஒருத்தி ஒன்றாம் சிறப்போடு பல்லோர் பல "(30) என்கிறது,  கிரியாபதப் படலம், "ஒருவன் ஒருத்தி சிறப்புப் பலர் ஒன்றொடு பல "(71)என்கிறது.

சிறப்பு என்பது தொல்காப்பியர் சொல்லாததன்று.

வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி 

இலக்கண மருங்கின் சொல்லாறு அல்ல" (கிளவி. 27)

என்பார், அவர் கால வழக்குக் கருதி. 

காலப்போக்கில் செய்யுள் வழக்கிலும் பெருகி விட்டதால் வீரசோழியம் சிறப்பு என ஒன்றை 'இலக்கண மருங்கிற்' சேர்த்துக்கொண்டது.இதனைத் தம் இக்காலத் தமிழ் இலக்கணத்தில் உயர்பாற் பெயர் என்பார் பொற்கோ (ப.39)

அகத்தியலிங்கம்  உயர்திணை ஒருமையில் ஆண், பெண், உயர்வு ஒருமை என மூன்றைக்கொள்வதோடு உயர்வு ஒருமையில் சாதாரண உயர்வு ஒருமை, சிறப்பு உயர்வு ஒருமை என்னும் உள்வகைகளையும் கொள்கிறார் ( 'தமிழ்மொழி அமைப்பியல்' ப.81)

பொற்கோவும் அகத்தியலிங்கமும் , 'உயர்சொற் கிளவி' என்னும் தொல்காப்பியத் தொடரிலிருந்து புதிய கலைச்சொல்லை உருவாக்கியுள்ளனர் எனலாம். 

தொல்காப்பியம் கூறும் இயைபு மரபே அடிப்படை.

இயைபு மரபினின்றும் வேறுபடும் சூழல்கள் மொழிப் புழக்கத்தில் நிலவுவது இயல்புதான். அவற்றை எவ்வாறு ஆள்வது என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் . 

உரையாசிரியர்கள் வழு, வழுவமைதி எனச் சுட்டும் தொடரிலக்கணப் பகுதிகளில் கணிசமானவை இந்த இயைபுமரபு சார்ந்தவை.

கிளவியாக்கமும் வேற்றுமை இயல்களும் எச்சவியலும் நான்கு சொற்கும் பொது இலக்கணம் கூறுவன, பெயர் வினை இடை உரி இயல்கள் சிறப்பிலக்கணம் கூறுவன என்னும் சேனாவரையர் கருத்தினூடாகப் பொது இலக்கணம் கூறும் ஐந்தியல்கள் தொடரியல் பற்றியன என உய்த்தறியலாம். செ.வை.சண்முகம் இவற்றுள் நான்கு இயல்கள் தொடரியல் செய்தி கூறுவன ; விளிமரபு பெரும்பாலும் சொல்லிலக்கணச் செய்தி கூறுவது என்கிறார்[ தொல்காப்பியத் தொடரியல், ப.1]

வினை முற்று - பெயர் இயைபு, பண்பு கொள் பெயர், அடை சினை முதல் , இயற்பெயர் சுட்டுப் பெயர் , இரட்டைக் கிளவி, வேற்றுமை இயல்களின் இலக்கணம், எச்சவியலின் மொழிபுணர் இயல்பு (= செய்யுளின் தொடரமைப்புகள்)  ஒரு சொல் அடுக்கு , தொகைகள், தொகைகளின் பொருள் சிறக்குமிடம் (= தொடர் அழுத்தம்), ஒரு சொல் நீர்மை , உரையசைக்கிளவிகள்,  எச்சங்கள் முதலிய பலவும் தொடரிலக்கணம் சார்ந்தவை.

பெயரெஞ்சு கிளவி, வினையெஞ்சு கிளவி ஆகியன ஆள வசதியாகப் பெயரெச்சம், வினையெச்சம் என்றாயின. இவை போல்வன பிறவும் இன்றும் பயனுடையவை.குறிப்புப் பெயரெச்சம் இன்று பெயரடை எனப்படுகிறது. 

பெயரெச்ச வினையெச்ச வடிவங்களை மரபிலக்கணங்கள் வாய்பாடுகளால் சுட்டும். இந்த வாய்பாட்டு மரபு தற்காலத் தேவைகருதிப் புதிய இலக்கணங்களில் வேறு பலவற்றுக்கும் விரிக்கப்பட்டுள்ளது.

இக்கால இலக்கணங்களின் கலைச்சொல் உருவாக்கத்திற்கு மாதிரிக்காட்டுகளாக மூன்று தங்களின் உள்ளடக்கப் பக்கங்கள் சிலவற்றை இறுதியில் இணைத்துள்ளேன்.

 ' இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூலும் தொல்காப்பியமும் போதுமானதாக அமையவில்லை' (ப.2) என்று கருதும் பொற்கோ முகவுரையில், " இந்த இலக்கண நூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழமைகளைப் போற்றிக் காப்பதோடு புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டுகிறது " (ப. v ) என்று கூறியதைத்தான் என் நோக்கில் விரிவாக வழிமொழிந்திருக்கிறேன்.


Image

கு.பரமசிவம் தம் நூலுக்கு 1983 இல் எழுதிய முன்னுரையில், " தமிழ் அமைப்புப் பற்றிய முழுமையான நூல் இதுவரை வந்ததில்லை. இந்த நூலே முதல் முயற்சி" (ப. xii) என்றார். அவர் மறைவிற்குப் பின் 2011 இல் வந்த பதிப்புக்கு இ அண்ணாமலை எழுதிய முன்னுரையில் , " இது தோன்றி கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் , வேறுசில இக்காலத் தமிழ் இலக்கணங்கள் எழுதப்பட்டிருந்தாலும் , இன்னும் புதிய இலக்கண மரபு உருவாகவில்லை" (ப. x) என்கிறார்.

ஏறத்தாழ 400 பக்க அளவில் புத்திலக்கணம் வகுத்த பொற்கோ, " இந்த நூல் மேலும் செம்மை பெற வேண்டும், செழுமை பெற வேண்டும் " (ப. vii)என்கிறார் . சற்றுப்பொடி எழுத்தில் 350 பக்க அளவில் எழுதிய அகத்தியலிங்கம், " பெரிய அளவில் உருவாக வேண்டிய ஒரு இலக்கணத்தை உள்ளத்தில் கொண்டு சிறிய அளவில்... உருவாக்கப்பட்டுள்ளது இந்த இலக்கண நூல். " (ப. 6) என்கிறார்(இரு நூல்களும் 2002 

இந்த வழியில் ஆய்வைத் தூண்டுவதே என் நோக்கம். 

பனம்பாரனார் தொல்காப்பியரையே , ' புலந்தொகுத்தோன்' என்றுதானே போற்றுகிறார்.

இக்கால இலக்கணக் கலைச்சொற்களையும் தொகுத்து , தொல்காப்பிய - நன்னூல் மரபு எனப்படும் தமிழ்வழித் தமிழாசிரியர் மரபுக்கேற்பத்  தகுநிலைப்படுத்த வேண்டும்.


1.1. மரபான கலைச்சொல்லை மரபான பொருளிலேயே ஆளுதல்

1. 2.மரபான கலைச்சொல்லையே விரிந்த பொருளில் ஆளுதல்

2. மரபான கலைச்சொல்லுடன் புதுச்சொல்லைச் சேர்த்துத் தொகையாகப் பயன்படுத்துதல்

3. முற்றிலும் புதிய கலைச்சொல்லை ஆக்கிப் பயன்படுத்துதல்(பிந்தைய இரண்டிலும் மொழிபெயர்ப்பின் செல்வாக்குக்கு இடமுண்டு) - என்று புத்திலக்கணக் கலைச் சொற்களை வகைப்படுத்த முடியும்.

இக்காலத் தமிழுக்கான குறிப்பிடத்தக்க நூல்களாக நான் கண்ட , ஏற்கெனவே ஆங்காங்குச் சுட்டிய , மூன்றினை முன்மாதிரிகளாகச்  சொல்லி நிறைவு செய்கிறேன்.

1. கு.பரமசிவம்                                   - இக்காலத் தமிழ் மரபு

2. இக்காலத் தமிழ் இலக்கணம் - பொற்கோ

3. தமிழ்மொழி அமைப்பியல்      - ச. அகத்தியலிங்கம்


---------------------------------------------------------------------------------------

Image

Image

Image

Image

Image


துணை நூல்கள்: 


அகத்திய லிங்கம், ச. ,

தொல்காப்பிய உருவாக்கம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2002.



இராசாராம், சு., 

இலக்கணவியல் : மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு, நாகர்கோவில், 2010.



கோதண்டராமன், இரா. , 

தமிழெனப் படுவது , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.


கோபாலையர், தி.வே.,

தமிழ் இலக்கணப் பேரகராதி (17 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2005.


சண்முகம், செ.வை.

இலக்கண ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004 .

தொல்காப்பியத்  தொடரியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.

இலக்கண உருவாக்கம்,  அடையாளம், புத்தாநத்தம், 2012.



சீனிவாசன், இரா.,

தமிழ் இலக்கண மரபுகள்  கி.பி. 800- 1400  இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், 2000


திண்ணப்பன், சுப.

 'தொல்காப்பியத்தில் இலக்கணக் குறியீட்டுச் சொற்கள்' , தொல்காப்பிய மொழியியல் (பதிப்பர்: ச.அகத்தியலிங்கம் & க.முருகையன்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1972.


பரமசிவம், கு.,

இக்காலத் தமிழ் மரபு - தற்காலத் தமிழின் இலக்கணம், அடையாளம், புத்தாநத்தம், 2011.


பொற்கோ,

இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002.


மதுகேஸ்வரன், பா.,

 'தொல்காப்பியப் பதிப்பு வரலாறு (1847- 2006)' தொல்காப்பியம் பன்முக வாசிப்பு ( பதிப்பாசிரியர்: பா.இளமாறன்), மாற்று, சென்னை, 2008.


வரதராசன் , மு., 

மொழி நூல் , பாரி நிலையம் , சென்னை, 2015

வீரகத்தி, க,

பிற்கால இலக்கண மாற்றங்கள் [எழுத்து] , குமரன் புத்தக இல்லம், கொழும்பு/சென்னை, 2011.

வெள்ளைவாரணர், க.,

தொல்காப்பியம் - நன்னூல் - சொல்லதிகாரம், தமிழ்ப்பல்கலைககழகம், தஞ்சாவூர், 2010.

வேலுப்பிள்ளை, ஆ.

தமிழ் வரலாற்று இலக்கணம், பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1979

வையாபுரிப்பிள்ளை, ச.,

தமிழ்ச் சுடர் மணிகள், பாரி நிலையம், சென்னை, 1968.

Lehman , T.,

 'A Survey of Classical Tamil Commentary Literature ' Between Preservation and Recreation : Tamil Traditions of Commentary ( edited by Eva Wilden), French Institute of Pondicherry, 2009.

அகராதிகள்

நாகராசன், ப.வே.& விஷ்ணுகுமாரன், த.(தொகுத்தோர்)

தொல்காப்பியச் சிறப்பகராதி, பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம், திருவனந்தபுரம், 2000.


பாலசுப்பிரமணியன் , க.,

தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2016.


(தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலம், வீரசோழியம் ஆகிய மரபிலக்கண நூல், உரைப் பதிப்புகள் சேர்க்கப்படவில்லை)

 

                            ------------------------நன்றி!---------------------

                                                             ↓

 கோவை, பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின்  சார்பில் நிகழ்ந்த இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில்

 ' தொல்காப்பிய - நன்னூல் மரபும் புதிய தொடரிலக்கண உருவாக்கமும் ' 

 (24.08.2020) என்னும் பொருளில்உரையாற்ற  வாய்ப்பளித்த, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சி.சித்திரா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ஆனந்தவேல் ஆகியோர்க்கு நன்றி.



Tuesday, September 22, 2020

தன்னை இனங்கண்ட தமிழ்

 தன்னை இனங்கண்ட தமிழ்*

------------------------------------------------

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

 மங்காத தமிழென்று சங்கே முழங்கு

.... ..................

  திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

 விண்ணோடும் உடுக்களோடும்

 மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

 பிறந்தோம் நாங்கள்"

என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். இது தமிழ்ப்பற்று மீதூர்ந்த கவியுணர்ச்சியின் மிகை என்றுதான் தோன்றும். தவறில்லை. இதனை உணர, வரலாற்றில் பின்னோக்கிச் செல்லவேண்டும்.


இந்தியத் துணைக் கண்டத்தின்  வளமோங்கிய சமற்கிருத மொழியையும் வழக்கில் பரவியிருந்த பிராகிருத மொழிகளையும் வடமொழிகள் எனக் கொண்டு தன்னைத் தென்மொழியாக இனங்கண்ட தமிழின் வரலாற்றையும் பார்க்க வேண்டும்.


தமிழின் தலையூற்றாக எஞ்சி நிற்கும் முழு முதல் இலக்கணமாகிய தொல்காப்பியம் உணர்ச்சி கலவாமல் புறநிலைநின்று தமிழை இயற்கையான மொழியாகக் கண்டு இலக்கணம் கூறியிருக்கிறது.


தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் மொழியும், இலக்கண மரபும் உருவாகிவிட்டன.

தொல்காப்பியப்பாயிரம் (முன்னுரை) 'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன்' என்று தொல்காப்பியரைத் தொகுத்தவராகச் சுட்டுகிறது.


'எழுத்தெனப்படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப' என்று தொடங்குகிறது தொல்காப்பியம். 'என்ப' என்பதற்கு 'என்பார்கள்' என்று பொருள். தமிழ்எழுத்துகள் முப்பது என்பது தொல்காப்பியருக்கு முன்பே வரையறுக்கப்பட்டுவிட்டது.

மாங்குளம் குகைக்கல்வெட்டுக் கண்டுபிடிப்பு (1882-1903) முதல் கீழடிப் பானையோட்டுக் கீறல் கண்டுபிடிப்பு(2013-19) வரையிலானவை தமிழகத்தின் பரவலான பழந்தமிழ் எழுத்து வடிவங்களைக்காட்டுகின்றன. கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காலப் பழமை நீண்டு போய்க்கொண் டிருக்கிறது.


அந்த எழுத்து வடிவத்தை அசோகன்பிராமி என்று குறிப்பிட்டது போய்த் தமிழ்ப் பிராமி என்று சுட்ட நேரிட்டது; ஆய்வாளர் சிலர் தமிழி என்று சொல்ல வேண்டும் என்கின்றனர். இது புதிதன்று .பொதுக்காலத்திற்கு முந்தைய (கி.மு.) முதல் நூற்றாண்டிலேயே பந்நவணா சுத்த என்னும் சமணநூல் 'தாமிளி' என்னும் எழுத்து வடிவம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.


கரகங்கள்-என்றும் சொல்லின் உச்சரிப்பை karahangal என்று உரோமானிய எழுத்தில் காட்டலாம். இதில் 'க' மூன்று இடங்களில் வருகிறது. முதலில் உள்ளதை ka என்றும், இடையில் உள்ளதை ha என்றும் மூன்றாவதை ga என்றும் ஒலிக்கிறோம்.

ஆனால், 'க' என்ற ஓர் எழுத்தாலேயே எழுதுகிறோம். மூன்று தனித்தனி எழுத்துகள் இல்லையே ஏன்? தேவையில்லை. தமிழ் ஒலியமைப்புக்கு ஓர் எழுத்துப் போதும். இதுகுறையா? இல்லை, நிறை.


இந்தக் கால மொழியியலின் உட்பிரிவாகிய ஒலியன் இயல், ஒலியன், மற்றொலிகள் என இந்த இயல்பைவிளக்குகிறது. க் k என்னும் ஒலியனுக்கு (phoneme) k, g, h என்று மூன்று மாற்றொலிகள் (allophones) உள்ளன. k சொல்லின் முதலிலும் இடையில் இரட்டிக்கும்போதும் -kk-(எ.கா.- பக்கம்) வரும். மெல்லெழுத்தை அடுத்து வரும்போது g வரும். இடையெழுத்துகளை அடுத்தும் (எ.கா- வாழ்க) உயிர் ஒலிகளுக்கு இடையிலும் h வரும்.

இவ்வாறுஇடங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதால் ஓர் எழுத்தே போதுமானது என இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டிருக்கிறது.


 ச, ட, த, ப போன்ற எழுத்துகளும் இடத்துக்கேற்ப ஒலியில் வேறுபடும்.

தமிழ்முதலில் பெருமளவு எதிர்கொண்ட மொழி பிராகிருதம். பிராகிருதத்தில் k(a), h(a), g(a)  ஆகியவற்றுக்குத் தனித்தனி எழுத்துகள் உண்டு. பிராகிருத மொழி அமைப்பிற்கு அவை தேவை.


தன்னை இனங்கண்ட தமிழ், ஒலிவேறுபாடு மட்டும் கருதிப் பிராகிருத எழுத்துகளைக் கடன் வாங்காமல், தன்உள்ளார்ந்த அமைப்பை உணர்ந்து வரையறுத்துக் கொண்டது. பிற பிராமி எழுத்துகள் தமிழிலிருந்து தோன்றியவை என்னும் கருத்தும் உண்டு. ஆனால் இதுபோதிய அளவு நிறுவப்படவில்லை.


பழந்தமிழிக்கல்வெட்டுகளில் மிகச்சில பிராகிருத எழுத்துகள் இல்லாமலில்லை. ஆனால், பெரும்பாலான பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலி மரபிற்கேற்ப மாற்றிக்கொள்ளப்பட்டன.

இதனைத் தொல்காப்பியம், 

 'வடசொற் கிளவி வடஎழுத்து ஓரீஇ

 எழுத்தொடு புணர்ந்த சொல்ஆ கும்மே'

என்று இலக்கணமாக விதித்தது (ஒரீஇ=நீக்கி)

இலக்கியத்தமிழில் இவ்விதி பல நூற்றாண்டுகள் இயல்பாகத் தொடர்ந்தது.


 பிற்காலக் கல்வெட்டுகளிலும், மிகப்பிற்கால இலக்கியங்களிலும் வடஎழுத்துகள் கலந்தாலும் அவை தமிழ் அகர வரிசையில் அயல் எழுத்துகள் என்னும் தெளிவுடன்தான் பயிற்றுவிக்கப்பட்டன.

 

பொதுக் காலம் (கி.பி)11ஆம் நூற்றாண்டில் எழுந்த வீரசோழியம் வடநூன் மரபும் புகன்று கொண்டே தமிழிலக்கணம் உரைப்பதாக முன்மொழியுமளவுக்குத் தமிழ் இலக்கண மரபிற்குள்ளும் வடமொழித் தாக்கம் மேலோங்கியது. மிகுதியான  வடமொழிச் சொற்களோடு தமிழ் கலந்தமணிப்பிரவாள நடை மதிப்புக்குரியதாயிற்று. இவற்றுக்கும் சூழல் சார்ந்த தேவையும் மொழி மனப்பாங்குமே காரணம்.


இப்போக்கு நீடிக்கவில்லை. கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொல்காப்பிய வழி நூலாக நன்னூல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதன் பொருட்டே இது நன்னூல் எனப்பட்டது போலும் !

 

தென்னகத்தில்பொதுக்காலத்துக்கு முன்பே கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கியதற்கான சான்றுகள் இருந்தாலும் அவை தம்மைத் தனிமொழிகளாக இனங்கண்டு வரையறுத்துக் கொள்ளவில்லை.


தமிழகத்திலோ அரசியல்வணிக முக்கியத்துவமற்ற பகுதிகளிலும் கூட, பரவலாகத் தமிழ் எழுத்தறிவுநிலவியதற்குப் பானையோட்டு எழுத்து வடிவங்களே சான்று. பானைகள் சுட்ட பின் தனித்தனியே எழுத்துகள் கீறப்பட்டுள்ளன. இதிலிருந்து பலரும் எழுத்தறிவு பெற்றிருந்தது புலனாகிறது என்கிறார் அறிஞர்  ஐராவதம் மகாதேவன்.


தமிழ்தன்னை இனங்கண்டு வரையறுத்துக் கொண்டதற்குத் தெய்வீகக் காரணம் ஏதுமில்லை; வரலாற்றுச் சூழல் வாய்ப்பாக அமைந்திருந்தது. தமிழகத்திற்கு வடக்கிலிருந்ததென்னகப் பகுதிகள் நந்தர்- மௌரியர் ஆளுகை எல்லைக்குள் இருந்தன. அசோகரின் பதின்மூன்றாம் பாறைக் கல்வெட்டுச் சூத்திரம், அப்பகுதிகள் அசோகர் ஆட்சிக்குட்பட்டிருந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே, அப்பகுதிகளில் பிராகிருதமே ஆட்சிமொழியாக இருந்தது.


ஊர் ஊராகச்சென்று பாடிப் பரிசில் பெற்ற வளமான பாணர் மரபு, இன்னார்தாம் பயில வேண்டும், இன்னார் பயிலக் கூடாது என விதிக்கும் குருமார் ஆதிக்கம் இன்மை, வலிமையானஉள்ளூர்த் தன்னாட்சி, சமண பவுத்தப் பரவல், அயலக வணிகத் தொடர்பு ஆகியவற்றோடுஎளிதாகப் பயிலத்தக்க வகையிலான எழுத்தெண்ணிக்கைக் குறைவும் சனநாயகப் பூர்வமான எழுத்தறிவுப் பரவலுக்குக் காரணம் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.


தமிழ் வெறும் புற அடையாளமாகத் தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. அதன் ஒலி, எழுத்து, சொல், தொடர் மரபுகளின் உள்ளார்ந்த கட்டமைப்பிலேயே தனித்தன்மை பேணியது.

அதனால்தான் அயல் தொடர்புகள் அளவு கடந்த நிலையிலும் கூட அவற்றில் அமிழாமலும் அவற்றைப் பகையாகக் கருதாமலும் உள்வாங்கித் தன்மயமாக்கிக் கொண்டது.


'ஐந்தெழுத்தால்ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே... வடமொழி தமிழ் மொழி எனும் இருமொழியினும் இலக்கணம் ஒன்றே' என்றார் பதினேழாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புலவர் சாமிநாத தேசிகர். அவர் அப்படி நம்பினார்.சமற்கிருதத்தில் இல்லாத தமிழ் எழுத்துகள் எ,ஒ,ழ,ற,ன என்னும் ஐந்து மட்டுமே. இந்தஐந்தெழுத்தால் ஒரு மொழி (பாடை-பாஷை) தனித்தது என்று கூற இயலாது என்றுகருதினார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. காலத்தின் கோலம் அது.


மாறாகஅடுத்த நூற்றாண்டில் பிறந்த சிவஞான முனிவர், 'தமிழ் மொழிப்புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும்...' வடமொழியிற்பெறப்படாதவை; தமிழுக்கே உரியவை என்றார். முனிவர் சமற்கிருதம் பயின்றவர் மட்டுமல்லர்; அதனிடம் பெருமதிப்புகொண்டிருந்தவராவார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தொடக்கத்தில் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ்துலக்கிக் காட்ட, அந்நூற்றாண்டின் இறுதியில் தமிழ் முதலிய திராவிடமொழிகளின் தனித்தன்மையை ஒப்பிலக்கணம் என்னும் நவீன அணுகுமுறையில் ராபர்ட் கால்டுவெல் நிறுவினார். கடந்த ஒன்றரை நூற்றாண்டில் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகள் வளர்ந்து மேம்பட்டுத் திராவிட மொழிக் குடும்பத்தனித்தன்மை ஐயமின்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. என்றாலும் சச்சரவு ஓயாததற்குக் காரணம் அரசியலே அன்றி மொழியியல் அன்று.


வடமொழிகளை நன்கறிந்த தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின்தனித்தன்மையை உணர்ந்து  இலக்கணம் தொகுத்திருக்கிறார். எழுத்ததிகாரத்தின்முதல் நூற்பா (சூத்திரம்) 'எழுத்தெனப் படுப' (எழுத்து என்று சொல்லப்படுவன)என்று தொடங்குகிறது. அப்படியானால் சொல்லதிகாரம், 'சொல் எனப் படுப' என்றுதானே தொடங்க வேண்டும்? இல்லை. 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணைஎன்மனார் அவரல பிறவே' என்று தொடங்குகிறது.

கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் நான்கு இயல்கள்கடந்து ஐந்தாவதாகிய பெயரியலின் நான்காவது நூற்பா 'சொல் எனப் படுப' என்றுதொடங்குகிறது.

ஏன்?

தமிழின் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடும் அவற்றுள் அடங்கிய ஆண்பால், பெண் பால்முதலிய பால் பாகுபாடும் தமிழ்க் கிளவியாக்க (தொடர், வாக்கிய)க் கட்டமைப்பில் இன்றியமையாதவை; மரபு வழிப்பட்ட தனித்தன்மையுடையவை; வடமொழிகளில் காணப்படாதவை. எனவேதான், இவற்றை முதலில் முன்வைக்கிறது தொல்காப்பியம்.


எல்லிஸும்அவரது குழுவில் இயங்கிய தென்னிந்திய மொழிகளின் பண்டிதர்களும் தம் மொழிக்குழுவின் தனித்தன்மையைத் தேட அகத்தூண்டுதலாக அமைந்தது அவற்றின் இலக்கணமரபில் காணப்பட்ட, இலக்கியச் சொற்பாகுபாடுதான்.


கன்னட, தெலுங்கு மொழி இலக்கணங்கள் தற்சமம், தற்பவம், தேசியம், கிராமியம் எனவகைப்படுத்தின. முதலில் உள்ள தற்சமம், தற்பவம் இரண்டும் வட சொற்களின் வகைப்பாடு. பின்னரே வடசொல் அல்லாத, அவ்வம் மொழிக்கே உரிய சொல் வகைகள் இடம்பெற்றன.


இதிலும் தொல்காப்பியம் தொட்டுத் தொடரும் தமிழ் இலக்கண மரபு தனித்தன்மை பேணியது; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றது; வடசொல்லுக்குஇறுதியில்தான் இடமளித்தது.


உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகள், குற்றியலுகரம் முதலிய சார்ந்துவரும் எழுத்துகள் , இவை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் மரபுகள் , எழுத்துகளின் ஒலிகள் எழுப்பப்படும் முறை, ஒலியன் மற்றொலித்தெளிவோடு கூடிய எழுத்து வடிவங்கள், ஒரு தொடரின் அடுத்தடுத்த சொற்கள்ஒலியும் பொருளும் சார்ந்து புணரும் முறை, சொற்கள் தொடராக அமைந்து பொருள் குறிக்கும் போக்கு, சொற்களின் இலக்கண இலக்கிய வகைப்பாடு முதலிய ஒவ்வொன்றிலும் தமிழின் தனித்தன்மையைக் காண முடியும். இவற்றை இலக்கண மொழியியல் நோக்கில் விளக்கலாம்; விரிப்பின் அகலும்.


பிராகிருதம், சமற்கிருதம் தொடங்கிக்காலந்தோறும் பல்வேறு மொழிகளின் தொடர்பை ,செல்வாக்கை, ஊடுருவலை, ஆதிக்கத்தைத் தமிழ் எதிர் கொண்ட போதிலும் ஆட்சிமொழி நிலையிலிருந்து வழுவியபோதிலும் மொழி, இலக்கண மரபுகள் சிலவற்றை நெகிழவிட்டுச் சில பலவற்றைப் புதிதாகக் ஏற்றுக் கொண்ட பிறகும் உள்ளார்ந்த இழையொன்று இடையறாமல்தொடர்கிறது. 'என்றுமுள தென்றமிழ்' என்றார் கம்பர்.


தொல்காப்பியத்துக்குப்பாயிரம் (முன்னுரை) தந்த பனம்பாரனார் 'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுகம்' என்கிறார். மொழியால் தன்னை இனங்கண்டு கொண்ட இந்தமக்கட்குழு பின்னர் நாட்டு எல்லை முதலிய பலவற்றையும் தன்மொழி சார்ந்தேஉணர்ந்து கொண்டது.


'நல் தமிழ் முழுதறிதல்' என மோசி கீரனார் (புறநானூறு 50) மொழியைச் சுட்டினார்.

'தண்டமிழ்க் கிழவர்... மூவர்...' என வெள்ளைக்குடி நாகனார் (புறநானூறு 35) தமிழ்நாட்டைச் சுட்டினார்.

'தமிழ்கெழு கூடல்' எனக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் (புறநானூறு 58) தமிழ்ச் சங்கப் புலவர்களைச் சுட்டினார்.

'தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ்' எனக் குன்றம் பூதனார் (பரிபாடல் 9) அகப்பொருள் இலக்கண மரபைச் சுட்டினார்.

'தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்' எனக் குடபுலவியனார் (புறநானூறு 19) தமிழ் மன்னர் படைகளைச் சுட்டினார்.

'அருந்தமிழ் ஆற்றல்' எனத் தமிழ் வேந்தர்தம் பேராற்றலைச் சுட்டினார் இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம், கால்கோட் காதை)

' தமிழ் தழிய சாயல் 'எனத் திருத்தக்க தேவர் (சீவகசிந்தாமணி 2026) இனிமையைச் சுட்டினார்.


சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தத்தம் பக்தி நெறியைத் தமிழ் என்றே சுட்டியதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. பக்தி இயக்கத்தின் பிறப்பிடம்தமிழகம் என்பது நிறுவப்பட்ட உண்மை.


வைணவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தமிழ் வேதம் என்றனர் எனில் சைவர் தமிழே சிவபெருமான் அருளியது என்றனர்.


'ஆயுங்குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பியதண்தமிழ்' என்று தமிழைத் தந்தவர் அவலோகிதராகிய புத்தரே என்கிறார் வீரசோழியஇலக்கண ஆசிரியர் புத்தமித்திரர்.


பக்தி இயக்க எழுச்சிக்காலம் போல் தமிழை எண்ணற்ற அடைமொழிகளால் ஏற்றிப் போற்றிய காலம் பிறிதொன்று இல்லை என்றே சொல்லலாம். தமிழகத்தின் இரண்டாவது பக்தி யுகத்தில்( கா.சிவத்தம்பி,மதமும் கவிதையும்)

"மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன்     

                                         முத்தமிழால்

வைதா ரையுமங்கு வாழவைப் போன்" என்று அருணகிரியார் பாடியிருப்பது பக்தி இயக்கவழித் தமிழுணர்வின் உச்சம்.


'பயிலுவதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய், திருவருள் வலத்தாற்கிடைத்த தென்மொழி' என இராமலிங்க அடிகள் தமிழை ஆன்மிக மொழியாகக் காண்கிறார்.


இருபதாம் நூற்றாண்டின் சமயச் சார்பற்ற தமிழ் எழுச்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான அடைமொழிகளில் தமிழ் சீராட்டப்பட்டது ; தமிழே தெய்வ நிலைக்கு உயர்த்திக் காணப்பட்டது.

Image

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று பேதையர் சிலர் பேசக் கேட்டுப் பதைத்தார் பாரதி. தமிழ் என்னும் கருவியை உலகியல் நலன் நோக்கித் தமிழரே கைநெகிழவிடுவது கருதிய பதற்றம் அது. இந்த உணர்வின் தொடர்ச்சியாக ஒரு தமிழியக்கம் உருவாயிற்று அதன் கவிதை அடையாளம் பாரதிதாசன்.


அச்சு என்னும் புதிய ஊடகத்திற்கேற்பத்  தகவமைத்துக் கொண்டு தன்னைத் தக்கவைத்துக்கொண்ட தமிழ் மின்னணு ஊடக மொழியாக அடுத்த பாய்ச்சலையும் நிகழ்த்தி நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.


இந்தப் புதிய பாய்ச்சலுக்கு ஆற்றல் தந்த முன்னோடிகளாய், தொடர்ந்தும் அரும்பணி ஆற்றிவருகிறவர்கள் அயல் வாழ் தமிழர்கள்.


இவர்கள்தாம்


'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 

தமிழ்கூறு நல்லுலகம்'

என்பதை

வடதுருவம் தென்துருவம் ஆயிடைத் 

தமிழ்கூறு நல்லுலகம்


என்று மாற்றித் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பி வருகிறார்கள்.


ஆனாலும், இருபத்தோராம் நூற்றாண்டிலும் தமிழ் நெகிழவிடப்படுமோ என்கிற பதற்றம் தொடர்கிறது. தமிழ் மொழிப் பயன்பாடு திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறது என்றே சொல்லலாம்.


தமிழ் ஒரு மொழிதான்; கருவிதான். ஆனால்தமிழ்ச் சமூகம் தன் முதல் தனி அடையாளமாக அதனைக் கண்டுணர்ந்து பின்னர் நாடு, அரசு, ஆற்றல், அகப்பொருள், பக்தி, இனிமை முதலிய பலவற்றினதும் அடையாளமாக விரித்துக் கொண்டது. பற்பல நூற்றாண்டுகளில் படியும் ஆற்றுப்படுகை மணற்பரப்புப்போல நுண்மையான பண்பாட்டுணர்வாகவும் 'தமிழ்' படிந்து கிடக்கிறது.


'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்'.


* தினமணி.காம் இணைய இதழுக்காக 31.12.2019 அன்று எழுதிய கட்டுரையின் திருத்திப் புதுக்கிய வடிவம்.

சங்கர நமச்சிவாயரின் சனநாயக மனப்பாங்கு

 

பேராசிரியர் க.பாலசுப்பிரமணியன்    பேராசிரியர் ச.அகத்தியலிங்கனாருடன் இணைந்தெழுதிய 'தமிழ் இலக்கண மரபு' என்னும் கட்டுரையைத் தம் கட்டுரைத் தொகுப்பில் முதலாவதாக வைத்துள்ளார். அதில்,

ஹீபுரு மொழியாளரும் கிரேக்கரும் தத்தம் மொழிகளே நாகரிகம் வாய்ந்தனவாகவும் மற்றவர் மொழிகள் காட்டுமிராண்டி மொழிகள் எனவும் கருதினர். இத்தகைய மனப்போக்கு பிற மொழி பயிலும் ஆர்வத்தைத் தடை செய்துவிட்டதால்தான் மொழியியல் வளர்ச்சி தடைப்பட்டது

 ( தொல்காப்பிய இலக்கண மரபு, அரிமா நோக்கு வெளியீடு, சென்னை, 2017,பக்.17-18) என்கின்றனர்.

மாறாகத் தமிழ் இலக்கண மரபின் மொழிப் பொறையைச்  செய்யுளீட்டச் சொல் வகைகள் (இயல், திரி, திசை, வட சொற்கள்) காட்டுவதாக மகிழ்கின்றனர்(௸).

Image




தண்டியலங்காரத்தின் பழைய உரையாசிரியர்  கௌட நெறி , வைதருப்ப நெறிகள் தமிழுக்கும் உரியன என்பதை  வலியுறுத்துவதற்காக முன்வைக்கும் காரணங்களைத் தொடர்பு கருதிக் காண்போம்.

Image



இதன் [தண்டியலங்காரத்தின்] முதனூல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லையெல்லாம் சமஸ்கிருதம் , பிராகிருதம் , அவப்பிரஞ்சம் என மூன்று வகைப்படுத்து , அவற்றுள் சமஸ்கிருதம் புத்தேளிர் மொழி எனவும் , அவப்பிரஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழி எனவுங் கூறினார் , அதனால், பிராகிருதம் எல்லா நாட்டு மேலோர் மொழி எனப்படும் . அல்லதூஉம் பிரகிருதி என்பது இயல்பாகலான் , பிராகிருதம் இயல்பு மொழி.

அந்தப் பிராகிருதத்தைத் தற்பவம் , தற்சமம் , தேசியம் என மூன்றாக்கினார் . அவற்றுள் தற்பவம் என்பன ஆரியமொழி திரிந்து ஆவன ...   தற்சமம் என்பன ஆரியச்சொல்லும் தமிழ்ச் சொல்லும் பொதுவாய் வருவன... தேசியம் என்பன அவ்வந் நாட்டவர் ஆட்சிச் சொல்லேயாய்ப் பிற பாடை நோக்காதன... இவ்வாற்றான் தமிழ்ச் சொல்லெல்லாம் பிராகிருதம் எனப்படும் . அச்சொற்களால் இயற்றப்படும் எல்லாக் கவிக்கும் அவ்வலங்காரம் அனைத்தும் உரியவாகலின் , ஈண்டு மொழிபெயர்த்து உரைக்கப்பட்டன.

புத்தேளிர் மொழி, மேலோர் மொழி,இழிசனர் மொழி என்னும் படிநிலையின் ஏற்றத்தாழ்வு வெளிப்படையானது. 'இழி'சனர் மொழி என்னும் அவப்பிரஞ்ச மொழிகளிலிருந்துதான்  இக்கால நவீன இந்திய மொழிகள் பல உருவாகியிருக்கின்றன. மக்களாட்சி[சனநாயக]க் காலம் எனப்படும் இக்காலத்திலும் பாரதப் பண்பாட்டுக்குச்  சமற்கிருதமொன்றே மூலம் என்னும் கருத்து அதிகாரச் செல்வாக்குடன் திகழ்கிறது என்றால் அக்கால ஆதிக்கம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

இந்தப் பின்னணியில் சங்கர நமச்சிவாயரைப் பார்க்கவேண்டும்.

சங்கர நமச்சிவாயர் விருத்தியுள் சிவஞான முனிவர் செய்த சிற்சில செருகல்கள், நீக்கல்கள், திருத்தங்களால்  சிவஞான முனிவர் விருத்தி எனத் தனியுரை போல வழங்குகிறது (விரிவுக்கு: அ.தாமோதரன், சங்கர நமச்சிவாயர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003 ¹ , பக்.52 - 62)

Image




ஆனால், சில இடங்களில் செருகல்கள் சங்கர நமச்சிவாயர் உரையோடு மாறுபடுகின்றன என்கிறது என் சிற்றறிவு.  இது பதிப்புப் பிரச்சினையுமாகும்."சிவஞான முனிவர் தமது கைப்படத் திருத்திய சங்கர நமச்சிவாயர் உரையேட்டை மூல பாடத் திறனாய்வு நோக்கில் மேலும் ஆராய்ந்தால் நன்னூலுக்கு முனிவர் செய்த உரைப் பணியைத் துல்லியமாக மதிப்பிட முடியும். அதற்கு  [திருவாவடுதுறை]ஆதீன நூல் நிலையக் கதவு திறக்குமா? " என்கிறார் பேரா. அ. தாமோதரன்(௸ நூல், ப.62).

                                                           ---------------x---------------

சங்கர நமச்சிவாயருக்கு முன்பே நன்னூலுக்கு உரை வரைந்த மயிலைநாதர் ,

 இஃது[வட சொல்] ஒரு நிலத்திற்கேயுரிய தன்றிப் பதினெண் பூமிக்கும் விண்ணிற்கும் புவனாதிகட்கும் பொதுவாய்வருதலின், திசைச்சொல்லின் அடக்காது வேறோதினாரென்க. அஃதென்னை ? வடக்கண் மொழி என்றாராலோ எனின், ஆண்டு வழக்குப் பயிற்சியை நோக்கி அவ்வாறு கூறினாரென்க (269, உரை)

 என்கிறார். இப்போது சங்கர நமச்சிவாயர் உரைப்பகுதி:

வடக்கும் ஒரு திசை அன்றோ ? வட சொல் என வேறு கூறுவது என்னை எனின், தமிழ்நாட்டிற்கு வட திசைக்கண் பதினெண் மொழிகளுள் ஆரியம் முதலிய பல மொழியும் உளவேனும் தென்றமிழ்க்கு எதிரியது கடவுட்சொல்லாகிய ஆரியம் ஒன்றுமே என்பது தோன்ற அவற்றுள் தமிழ்நடை பெற்றதை வட சொல் என்றும் ஏனையவற்றுள் தமிழ்நடைபெற்றதைத் திசைச்சொல் என்றும் சான்றோரான் நியமிக்கப்பட்டன என்க" ( நன்னூல் 270)

இந்த இடத்தில்  " அன்றியும்,ஆரியச் சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலகம் முதலியவற்றிற்கும் பொது ஆகலான் அவ்வாரியச் சொல் தமிழ்நடை பெற்றதைத் திசைச்சொல் என்றல் கூடாது எனக் கோடலும் ஆம்" எனமயிலைநாதரின் கருத்தை , ஏறத்தாழ அவருடைய சொற்களையே  எடுத்தாண்டு, சங்கர நமச்சிவாயர் உரையின் இடையே செருகுகிறார் சிவஞான முனிவர்(?).

சங்கர நமச்சிவாயர் வடசொல் கடவுட்சொல் என்றாரேனும் ' விண்ணுக்கும் மண்ணுக்கும் புவனாதிகட்கும் பொது ' என்றாரிலர்.  மேலும் 'செந்தமிழ்க்கு எதிரியது' என்று அவர் கூறுவதையும் கருதவேண்டும்.'எதிரியது' என்பது பகை குறித்தன்று; தமிழ் தனக்கிணையாக 'எதிர்கொண்டது' என்னும் பொருட்டு.

  ஆன்ற மொழிகளுக்குள்ளே - உயர்

  ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் 

என்று பாரதி பாடியதும் அதுவே.

மயிலைநாதருக்கும் சங்கர நமச்சிவாயருக்குமிடையில் வடசொல் பற்றிய பார்வையில் நுட்பமான மாறுபாடு -  வேறுபாடு என்றாவது கொள்ள வேண்டும் - உள்ளது.முனிவர்  இரண்டையும் ஏற்கிறார் போலும்.

சங்கர நமச்சிவாயரின் பார்வை வேறுபாடு தற்செயலானதன்று; மொழிப் பன்மை குறித்த அவரது முழுமைப் பார்வையின் விளைவு என்று கருதலாம்.

   செந்தமிழ்  நிலஞ்சேர்  பன்னிரு   நிலத்தினும்

   ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந்

   தங்குறிப்  பினவே  திசைச்சொ  லென்ப (273)

எனும் நூற்பா விளக்கத்தில்,

செந்தமிழ்' என்றமையால் கொடுந்தமிழ் என்பதூஉம் ஆரியத்தின் காரியமாய வடசொல்லை வேறு கூறுதலின் தமிழ் ஒழிநிலம் பதினாறு என்பதூஉம் கற்றோரையும் மற்றோரையும் தழீஇத் , 'தங்குறிப்பின' எனப் பொதுமையின் கூறினமையின் இத்திசைச் சொற்கள் அந்நிலத்தோர்க்கு இயற்சொல்லாய்ச் செந்தமிழோர்க்கு அவ்வாறு குறிக்கப்படாத திரிசொல்லாய் நிற்கும் என்பதூஉம்  பெற்றாம்.

-எனச்  சங்கர நமச்சிவாயர் திசைச்சொல்லை விளக்குகிறார்.

Image


செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்

தங்குறிப் பினவே² திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 394)

என்னும்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி, ' ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத் ' தை இடைமிடைந்து நூற்பாவாக்கியுள்ளார் பவணந்தி. 

தொல்காப்பிய நூற்பாவிற்கு உரையெழுதிய இளம்பூரணர், 

தங்குறிப்பினவே’ என்றது அவை ஒரு வாய்பாட்டவேயல்ல; தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும், அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது 

 என்கிறார். இளம்பூரணர் கருத்தை  வழி மொழிந்து மேலும் விளக்கமாக,'கற்றோரையும் மற்றோரையும் தழீஇ ', 'அந்நிலத்தோர்க்கு இயற்சொல்' என்றெல்லாம் சங்கர நமச்சிவாயர் குறிப்பிடுவது வெறும் பொறையன்று; பிற மொழிகளை அவரவர் நிலை நின்று ஏற்கும் மொழிச் சனநாயகம்.

__________________________________________

1.   தமிழிணைய மின்னூலகத்தில் (tamildigitallibrary.in) கிடைக்கிறது

2.  குறி என்பதற்கு இலக்கணம் என்னும் பொருளும் உண்டு. அது கொண்டு 'குறிப்பின ' என்றதற்கு இலக்கணத்தன என்று பொருள் காணலாம். வண்ணனை இலக்கணத்தின் வித்து இதில் கிடப்பது வியப்பு! இதுவே தொல்காப்பியக் கருத்தும் என்பது பொருந்தும்.  இதனை உளங்கொண்டே இளம்பூரணரும் உரைவரைந்துள்ளார்



Friday, September 18, 2020

எதிர்வினைகள் எள்ளலுக்குரியவை அல்ல!

 எதிர்வினைகள் எள்ளலுக்குரியவை அல்ல!

----------------------------------------------------------------------------------

தோழர் ப.ஜீவானந்தம் [ஜீவா] தனித்தமிழ் ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் தம் பெயரை உயிரின்பன் என்று மாற்றிக்கொண்டாராம். ஒரு முறை தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரைக் காண அவரது இல்லம் சென்று, "ஐயா !" என்று குரல் கொடுத்தாராம்.


"யாரு போஸ்ட்மேனா?" என்று அடிகள் வினவிய குரல் கேட்டதாம். 


ஜீவாவுக்குத் தனித்தமிழ்ப் பிரமை தகர்ந்ததாம். 


தோழர் சிலர் எள்ளல் நகை தோன்ற இதனைச் சொல்வதுண்டு. 


துணுக்குகளிலிருந்து கொள்கை!


இதில் நாடகச் சிறு (மைச்)சுவையன்றி வேறில்லை. எழுத்தாளர்கள், தலைவர்கள் முதலியோர் குறித்து இப்படிப்பட்ட வழக்காற்றுத் துணுக்குகள் பலவுள. போகிறபோக்கில் அவர்களே சொல்லியிருக்கலாம். இவற்றுள் சில, தொடர்புடையோரின் ஆளுமைக்கு இழுக்கு என்று தெரியாமலே சுவை சொட்டச்சொட்டப் பரப்புகிறார்கள் சீடர்கள். போகட்டும்.


நான் கொள்கையளவிலோ நடைமுறையிலோ தனித்தமிழ் இயக்கப் பிரிவு எதனையும் சாராதவன். என் எழுத்திலும் வலிந்து தனித்தமிழ் ஆளும் வழக்கமில்லை. எனக்குத் தனித் தமிழியக்க நண்பர்கள் உண்டு.


ஒரு கருத்தரங்கில் தனித் தமிழியக்கம் பற்றி உரையாற்ற எனக்கு வாய்ப்பு வந்தபோது 'இவனுக்கென்ன தகுதி இருக்கிறது' என்று தனித்தமிழ் நண்பர் சிலர் வினவியதாகக் கேள்வி. உரிய காலத்தில் போதிய தரவுகள் கிடைக்காததால் அக்கருத்தரங்கில் நான் உரையாற்றவில்லை.நிற்க.


இந்திய அளவில் மொழிப் பிரச்சினையிலும் தமிழக அளவில் தமிழ்ப் பிரச்சினையிலும் அதிகாரப்பூர்வமார்க்சியர் , மார்க்சிய அறிஞர்களின் பார்வை குறைபாடுடையது. 


இந்தித் திணிப்பு எதிர்ப்பின் ஒட்டுமொத்த உரிமையும் எங்களுக்குத்தான் என்கிற திராவிடக் கட்சிகளும் வெறும் பள்ளிப்பாட இந்தி எதிர்ப்புச் சடுகுடு நடத்துகிறார்களேயன்றிக் கணிசமாகத் தமிழ்நாட்டில் இந்தியும் 'இந்தி'யரும் திணிக்கப்பட்டு அரசு, அரசு சார் பணிகளில் தமிழும் தமிழரும் புறக்கணிக்கப்படுவது பற்றிக் கண்டுகொள்ளவில்லை.


இந்திய அளவில் இந்தி என்பது இந்து அடிப்படைவாத நிரல்களில் ஒன்று என்பது ஏறத்தாழ நிறுவப்பட்ட பிறகும் - வெள்ளம் தலைக்கு மேல் போகிற காலத்திலும் - பொதுவுடைமையர்  வெறும் நடைமுறை உத்தியாக இந்தித் 'திணிப்பை' மட்டும் எதிர்த்துக் குரல்கொடுத்து வருகிறார்கள். 


இந்தித் திணிப்பு மட்டுமில்லை அனைத்தையும் சங்கதம் என்னும் ஒற்றை அடையாளக் தின்கீழ் - ஒற்றை அடையாளத்திற்குள் அன்று அடையாளத்தின் கீழ் - கொணர்வதுதான் வைதிக வருணாசிரம இந்துத்துவத் திட்டம்.


தனித்தமிழியக்கத்தின் தோற்றத்திற்கும் தொடர்ச்சிக்கும் இன்றளவும் ஒரு தற்காப்பு நியாயம் உள்ளது. 


செயற்கையானதொரு நடையாக மாறிவிட வாய்ப்பு மிகுதி என்றாலும்,மொழி அடிப்படைவாதக் கூறுகள் இல்லாமலில்லை என்றாலும்,  தனித்தமிழ் வன்மையான ஓர் எதிர்வினையே. இந்த வன்மை வரலாறு வழங்கியது. தமிழ் இலக்கண மரபில் தனித் தமிழின் உணர்வார்ந்த இழையோட்டத்தைக் காண முடிகிறது.


எதிர்வினைகள் எள்ளலுக்குரியவை அல்ல.

Image

தென்னிந்திய மொழிகள் ,  வட மொழிகளை- குறிப்பாகச் சங்கதத்தை -  சாராத தனித்தன்மையுடையன என இனங்காண ஃபிரான்சிஸ் வைட் எல்லிசுக்கு முதன்மையான தூண்டுகோலாயமைந்தது அவற்றின் செய்யுட் சொல் வகைகளே. தமிழில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் ; பிற தென்னிந்திய மொழி இலக்கணங்களில் தற்சமம், தற்பவம், தேசியம், கிராமியம் (இவ்வரிசையில் சிற்சில 

மேலோட்டமான வேறுபாடு உண்டு). 


தற்சமம், தற்பவம் என்பவை வடசொல் வடிவ வகைகள். பிற திராவிட மொழி இலக்கணங்களில் இவையே முன்னின்றன. தமிழில் வட சொல்லுக்குக் கடைசி இடம்தான். வட மொழி இலக்கணங்களின் சில மொழி விளக்க மாதிரிகள் தமிழில் தொல்காப்பியம் தொட்டே காணப்படலாம். 


வடமொழியின் ( குறிப்பாகச் சங்கதத்தின்) வரலாற்றுப் பின்னணி, மாறுதல்கள், இருக்கு வேத உள்ளடக்கம்  , இருக்கு வேத மொழி ஆகியன பற்றிய ஆய்வுகள் இல்லாமலில்லை. வேதச் சங்கதத்திற்கும் செவ்வியல் சங்கதத்திற்குமிடையிலான வேறுபாட்டை எவரும் மறுக்க இயலாது.


தமிழை 'அறிவியல்' அடிப்படையில் ஆராய்ந்து எல்லாம் வடமொழி, வேதோபடிநிடத வழிப்பட்டவை என்று நிறுவ முயலும் நாசசாமி வகையறாக்கள் , சங்கதத்துக்கும் இருக்கு முதலிய வேதங்களுக்கும் முந்தைய வரலாறு உண்டு என்பதையோ அவை மக்கள் உருவாக்கியவை என்பதையோ பார்ப்பதில்லை. அதுமட்டுமன்று பிற இந்திய மொழிகளும் சங்கதத்தின் மீது ஒலி, சொல்லளவிலும் செவ்வியல் சங்கதத்தில் கணிசமாகத் தொடரளவிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதையும் கருதவேண்டும்.


அது தெய்வ மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று புரட்டுவது மொழி-அறிவியலாகிய மொழியியலுக்குப் புறம்பானது. அது மட்டுமே இந்தியப் பண்பாட்டின் ஊற்றுக் கண் என்பதற்கு இன்றளவும் இடையூறாயிருப்பது - சில ஆய்வுப் புரட்டர்களின் அரைவேக்காட்டுத் திரிபுகள்    தவிர - குதிரையின் சுவடற்ற பண்டைச் சிந்துவெளி. 


ஈனியல் (Genetics) வழி ஆய்வுகளும் சிந்துவெளி நாகரிகக் காலத்திற்குப் பின்பே இருக்கு வேத ஆரியர் வந்தனர் என்பதை நிறுவும் பாதையில் முன்னேறிவிட்டது.


மொழிக்குடும்ப நோக்கில் திராவிட மொழிகள் அமைப்பால் சங்கதத்தினின்றும் வேறுபட்டவை; அடிப்படை இனச் சொற்களாலும் வேறுபட்டவை. வெறும் சொற்கலப்பு மட்டுமே கருதி மொழிகளை இனவுறவுடையவை எனக் கொள்ள இயலாது.


இந்தியாவின் எந்த மொழி, இலக்கியம் பயில்வோராயினும் ஒரு பிரிவினர்,  பண்டை இந்தியாவின் - ஏன் தெற்காசிய நாடுகளின் - வளமான பொது/ தொடர்பு மொழியாக மதிப்புடன் திகழ்ந்த சங்கத மொழி பயில வேண்டும் என்பது என் கருத்து.


சமண, பெளத்த சமய ஆய்வுக்கும் சங்கத அறிவு தேவை. அது வெறும் வைதிக மொழியன்று.


பத்தி இயக்கம், சமண, பெளத்த சமயங்கள் முதலியவற்றின் ஆய்வுக்குத் தமிழறிவும் தேவை.


திராவிட மொழிகள் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் குறைந்தவையாயினும், தம்மளவில் தனித்தன்மை பேணி, இந்தியப் பண்பாட்டிற்குப் பங்களித்துள்ளன.

மேலும் மக்களாட்சி ஊழியில் வழங்குமொழிகள் வளர்க்கப்படவும், பண்பாட்டு மொழிகள் பேணப்படவும் வேண்டும்.


பழந்தமிழ்,  சங்கதம், பாலி,  முதலியன ஆய்ந்து பேணப்பட வேண்டுமேயன்றி, பயன்படுத்தி வளர்க்கப்பட வேண்டியதில்லை.


ஆனால் வழங்குமொழிகளை ஓரங்கட்டி , ஒற்றை இந்தியைத் திணித்து, எல்லாவற்றையும் வைதிகச் சங்கதத்தின் கீழ்க்கொணர வெறிகொண்டலைவது  பண்பாட்டு ஒடுக்குமுறையேயன்றி வேறில்லை.


மாறாக, இந்தியாவின் பன்முகப் பண்பாட்டைப் புதைக்கும் சவப்பெட்டிமீதுஅறையப்படும் அடுத்த ஆணியாக    சங்கதத் துறையினரும் உலக பிராமணக் கூட்டமைப்புத் தலைவருமாக முற்றிலும் மேட்டுக்குடி வடவரைக் கொண்டு பன்னிரண்டாயிரமாண்டு இந்தியப் பண்பாட்டை ஆராயும் குழு (Expert Committee for Conducting Holistic Study of Origin and Evolution of Indian Culture) அமைக்கப்பட்டிருக்கிறது.


இது, ஏற்கெனவே எழுதிய முடிவுகளை முன்வைத்து  - சில துக்கடாக்கள் இணைக்கப்படலாம் - ஆராய்ச்சி என்னும் பெயரிலான நாடகத்தை நடத்திக் காட்டப் போகிறது.





வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...

Image