Archive for மே, 2020

பின்னல்கள் – 8

மே 29, 2020


விசிறி


பனையோலை பட்டையினைக் குறித்துப் பார்க்கையில், பல பண்பாடுகளில் எப்படி அவை ஒரே வடிவத்துடன் பல யுகங்களாய் மாற்றமின்றி வந்தடைந்திருக்கிறது என ஆச்சரியத்துடன் பார்த்தோம். இதற்கு நேர் எதிரான ஒரு முறைமை இருந்திருக்கிறதையும் ஆச்சரியத்துடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான காரணம், அதன் பின்னணியம், விரிவு போன்றவற்றை தேடி கண்டடைவது பேரானந்தம் தான். அவ்வகையில் நாம் அனைவரும் அறிந்த கை விசிறி குறித்த ஒரு பார்வையினை முன்வைக்கிறேன்.


திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து கூறும்போது “தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். (மத்தேயு 3: 12) தூற்றுக்கூடை என்பது fan / winnowing fork என்பதாக ஆங்கிலத்தில் பதிவாகியிருக்கிறது. Fan என்கிற வார்த்தை vannus என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. அது ரோமர்கள் தானியங்கள் பிரிக்க பயன்படுத்தும் புனிதமான கருவி ஒன்றினைச் சுட்டி நிற்கின்றது.

Image
சாதாரண விசிறியின் ஓரங்களில் காணப்படும் பூவேலைகள்


விசிறி குறித்து ஒரு நகைச்சுவைக் கதையே உண்டு. விசிறி விற்கும் வியாபாரி ஒருவன் அரசரிடம் தான் விற்கும் விசிறி எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாது என்று கூறி தனது விசிறியை விற்றுவிடுவான். அரசர் அதனை பயன்படுத்துகையில் அது பழுதடைந்துவிடும். கோட்டையைக்கூட தாண்டாத அந்த வியாபாரியை அரசர் தனது வீரர்களைக் கொண்டு அழைத்து வந்து, என்னை எப்படி நீ ஏமாற்றலாம் எனக் கேட்டார். “அய்யா என் மீதோ என் விசிறியின் மீதோ பிழை இருக்காது தாங்கள் அதனை பயன் படுத்திய விதத்தில்தான் பிழை” என வியாபாரி அதற்கு பதிலளித்தான். “அப்படியானால் அந்த விசிறியை எப்படி கையாளவேண்டும் என்பதை நீ எனக்கு காண்பி” என அந்த அரசன் கேட்க, வியாபாரி விசிறியை ஒருகையால் முகத்தின் முன்னால் பிடித்துக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைக்கவேண்டும் என்று வியாபாரி செய்து காண்பிப்பார்.

Image
விசிறின் விசிறியாக


விசிறி என்றவுடன் எனக்கு எனது பாட்டி வீடுதான் ஞாபகம் வரும். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது வேனிற்கால விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பாட்டி வீட்டின் தரை, சாணி மெழுகப்பட்டிருக்கும், பனை ஓலைப் பாயில் தான் படுக்கவேண்டும். மேலும் மின்விசிறிகள் கிடையாது. இவை அனைத்தும் அன்றைய சூழலில் நான் அறிமுகம் செய்திராத வாழ்க்கைமுறை. பகல் வேளைகளில் நண்பர்களுடன் நன்றாக விளையாடலாம். ஆனால் இரவு நேரம் பாட்டி வீட்டில் தங்குவது எனக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சலைக் கொடுத்தது. வேறு வழி கிடையாது. புழுக்கம் நிறைந்த அந்த இரவுபொழுதுகளில் அங்கே தான் தங்கவேண்டும். அங்கே எனக்கிருந்த ஒரே ஆறுதல் பனையோலை விசிறி தான். ஆங்கில எழுத்து P வடிவில் காணப்படும். அது மிக பெரிய தொழில் நுட்பம் கொண்ட ஒன்றும் அல்ல இருந்தாலும் பாட்டி ஒரு முறை விசிறிவிட்டால் போதும் உடலே குளிர்ந்து சிலிர்த்துவிடும். பனைஓலைக்குள் அந்த காற்று எப்படி அமைகிறது என்று தான் எனக்கு புரியவேயில்லை.

Image
விசிறி மொழி
Image


பனை விசிறி: நாக்கில் சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்களைப் போக்கும் என்று ஒரு குறிப்பினைப் படித்தேன். ‘அட்சய திருதியை’ யில் பனை ஓலை விசிறி உள்ளிட்ட சில பொருட்களை வழங்குவது சிறப்பானது எனும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பனங்காட்டு ஓலைகள் வீசும் காற்று மருத்துவ குணமுடையவைகள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு நண்பர் பனங்காட்டில் சென்று படுத்து உறங்கி புத்துணர்ச்சியோடு வந்தார். நான் சந்தித்த ஒரு சித்த மருத்துவரும் பனை ஓலை விசிறியின் முக்கியத்துவம் குறித்து கூறியிருக்கிறார்.
விசிறிகள் உலகில் வெகு அதிகமாக பரவி இருந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். பல்வேறு நாடுகளில் விசிறி முக்கியமான ஒரு அலங்காரப்பொருளாக இருந்திருக்கிறதைப் பார்க்கலாம். மேலும் வாழ்வின் பல்வேறு தருணங்களிலிலும் பனையோலை விசிறி இணைந்து வந்திருக்கிறதை நாம் அறியலாம். ஒவ்வொன்றும் விரிவான பின்புலம் கொண்டவை. இக்கட்டுரைத் தொடரில் நாம் ஆராய்ந்து முடியாதவை.

Image
கலை நேர்த்தியுடன் செய்யப்பட்ட விசிறி


உலகெங்கும் பார்க்கையில் விசிறி சமயச் சடங்குகளோடு, அரச குலத்தினரோடு உயர்குடியினரோடு தொடர்புகொண்டிருப்பதைக் காணமுடியும். பல்வேறு சூழல்களில் ஆன்மீக குறியீடாக விசிறி பயன்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் தந்தத்திலும், தங்கத்திலும், தாமிரத்திலும் செய்யப்பட்டன. இயற்கையில் கிடைப்பவைகளைத் தாண்டி இவைகள் பயன்படுத்தப்பட்டது. விசிறிகள் இன்றைய கால கட்டத்தில், காகிதம், நெகிழி மற்றும் துணியாலான விசிறிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Image
வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட விசிறி – ராஜஸ்தான்


ஜப்பானியர்கள் விசிறிக்கே விசிறியானவர்கள். ஜப்பானைப் பொறுத்த அளவில் அவர்களது ஆன்மீகத்துடன் விசிறிகள் பெறும் முக்கியத்துவம் வேறெங்கும் இல்லாதது அவர்களது போர் விசிறிகள், சாமுராய் விசிறி சண்டைகள், சுமோ போர் விசிறி, திருவிழாக்கள், கலாச்சார சமூக அடையாளம் என்று பலதளங்களை அது எட்டியிருக்கின்றது. உலகம் முழுக்க தங்கள் பொருட்களை எடுத்துச் சென்ற சீனர்களுக்கே ஜப்பானிய துறவி வழங்கிய கை விசிறி முக்கியமானதாக கருதப்பட்டிருக்கிறது. கி பி 988 வாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டிலிருந்து சீனா சென்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜப்பானிய பாணி விசிறியினையே எடுத்துச் சென்றிருக்கின்றனர். சீனர்கள் விசிறி நடனம் என்று ஒரு வகைமையையே முன்னெடுத்திருக்கிறார்கள்.

Image
ஜப்பானிய பெண்கள் விசிறி பயன்படுத்துகிறார்கள்


ஓலை விசிறிகள் குறிப்பிட்ட இடங்களில் பெருமளவில் புழங்குவதை கவனித்திருக்கிறேன். ஒன்று திருமண வீடுகளில் வருகை புரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது. இரண்டு, சர்க்கஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் விற்பனைச் செய்யப்படும். மூன்று, சமய நிகழ்வுகளான சொற்பொழிவுகள், பாத யாத்திரைகள் போன்றவற்றை மையப்படுத்தி நிகழும் விற்பனை. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் சிவாலய ஓட்டம் மகா சிவராத்திரி அன்று நடைபெறும். விசிறிக்கொண்டே பக்தர்கள் ஓடுவார்கள் அல்லது சைக்கிளில் இதனை வைத்து ஓட்டிச் செல்லுவார்கள். தேவைப்படும் இடங்களில் எடுத்து விசிறிக்கொள்ளுவார்கள். சிவாலய ஓட்டத்தை மட்டுமே தனது வருமானமாக எண்ணி விசிறி செய்யும் ஒரு நபரை நான் குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு என்ற பகுதியில் பார்த்திருக்கிறேன்.

Image
பிரம்மாண்ட அலங்காரம் கொண்ட பழங்கால விசிறி


எனது ஒரிய பயணத்தில் துறவிகள் பனை ஓலைகளை பயன்படுத்துவதைக் கண்டு பிரமித்துப்போனேன். மொகிமா தர்மா என்று சொல்லக்கூடிய ஒரு அமைப்பு. அவர்கள் வைத்திருக்கும் விசிறி தனித்துவமானது இரட்டைச் சுழி கொண்ட ஒர் அழகிய விசிறி அது. துறவினைச் சுட்டும் அந்த விசிறியினை அந்த துறவிகளே தயாரித்துக் கொள்வார்கள். பனை ஓலை பொருட்களை தங்கள் ஆன்மீக வாழ்வின் அடையாளமாக வைத்திருப்பவர்களைக் காணும்போது கண்டிப்பாக பனை ஓர் ஆன்மீக மரம் தான் என்கிற உண்மை வெளிப்படுகிறது. எனது பயணம் முழுக்கவே பனை ஓலைப்பொருட்கள் ஆன்மீக வாழ்வு சார்ந்து பயன்பட்டுக்கொண்டிருப்பதை பதிவுசெய்தபடியே வருகிறேன்.துறவு வாழ்வில் விசிறி இணைந்திருப்பது பவுத்தத்தில் கூடத்தான் எனும்போது ஆசிய வாழ்வில் பனையோலை விசிறியாக பரிமளிப்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டிய சூழல் இருப்பதை நாம் மறுக்க இயலாது. பனையுடன்கூடிய ஆன்மீகத்தின் அந்த ஒரு துளியினையாவது நாம் காத்துகொள்ளவேண்டும்.

Image
மொகிமா தர்மா துறவியின் கரத்திலிருக்கும் விசிறி


குமரி மாவட்டத்தில் உள்ள காணிமடம் என்ற பகுதிக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன். அங்கே யோகிராம் சுரத் குமார் என்பவரது ஆசிரமம் இருந்தது. ஆசிரமத்தின் வெளியே அவரது படம் வரையப்பட்டு ஒரு கரத்தில் விசிறியுடன் அவர் காணப்பட்டார். விசிறி அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும் என்பதுபோல ஒரு தோற்றம் இருந்தது அல்லது அறியாமையை நீக்கி அறிதல் எனும் மென் காற்றினை வழங்கும் ஒரு அழைப்பு. ஆனால் அந்த விசிறி சொல்லும் ஒரு கருத்து அவருக்குள் உள்ளுறைந்திருந்தது. அது தான் எளிமை. பனை ஓலை விசிறி என்பது ஒரு எளிமையின் அடையாளம் தான். தன் வாழ்விடத்தை துறந்தாலும் மென் காற்றினை வழங்க தவறாத மேன்மையின் வடிவம்.

Image
யோகிராம் சுரத்குமார் கரத்தில் இருக்கும் விசிறி


இந்தியாவில் முதன் முதலாக வரலாற்றில் சுட்டிகாட்டப்படும் விசிறியானது அஜந்தா குகையோவியங்களிலிருந்து எடுக்கப்பட்டது என கை விசிறிகள் குறித்து ஆய்வு செய்த George Woolliscroft Rhead என்பவர் தனது History of the Fan என்ற நூலில் வெளிப்படுத்துகிறார்கள்.

Image
எகிப்திய இறகு விசிறி

விசிறிகளைப் பொறுத்தவரையில் முன்று முக்கிய உண்மைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 1. ஒரு நாட்டின் பருவநிலை 2. அங்குள்ள சூழியல் சார்ந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் 3. அப்பகுதி வாழ் மக்களின் கைத்திறன் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் யாவற்றையும் ஒருங்கே பார்க்கவேண்டும் என்கிறார்.

Image
ஆக்ராவில் செய்யப்படும் விசிறி


பழங்குடியினர் மற்றும் தொன்மையான வாழ்வைத் தொடரும் சமூகங்களில் நான்கு விதமான விசிறிகள் பயன்பாட்டில் இருப்பதை அவர் சுட்டி காண்பிக்கிறார். பனை ஓலை விசிறி, பனை மரங்கள் அதிகமாக இருக்கின்ற நாடுகளில் கிடைக்கின்றது என குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, புற்கள் மற்றும் பின்னி செய்யப்படும் மூங்கில் அல்லது பிரம்பு போன்ற பொருட்களைக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக தோல் பொருட்களில் செய்யப்படும் விசிறிகள் பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன என்றும் இறுதியாக இறகுகளில் செய்யப்பட்ட விசிறிகளும் கூட தொல் பழங்கால நாகரீகம் கொண்ட மக்களின் வாழ்வில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

Image
விசிறி செய்யும் கலைஞர்கள்


தமிழகத்தைப் பொறுத்த அளவில் பல்வேறு விசிறிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைஞனின் கைவண்ணம் என்று தான் சொல்ல வேண்டும். ஓலைகளை பயன்பாட்டு பொருளாக பார்த்த நமது முன்னோர் பல்வேறு வகைகளில் அதனை செய்ய முயற்சித்தனர். ஓலைகளின் தன்மை மாறாமல் செய்யப்படும் விசிறிகள். பாதியாக கிழித்து செய்யப்படும் விசிறிகள், பின்னல்கள் கொண்டு செய்யப்படும் விசிறிகள் மற்றும் அழகிய மடக்கு விசிறிகள் என வகைபாட்டிற்குள் வரும். பல்வேறு ஓலைகள், தேவைகளின் விளைவாகவும் சூழல்களை கருத்தில் கொண்டும் வகை வகையாக செய்யப்பட்டு வந்தன.

Image
மடக்கு விசிறி


இந்த வகைகளைத் தேடுவதும் அடையாளப்படுத்துவதும் மிக முக்கியமான தேவை. சிறுவனாக இருக்கும்போது கன்னியாகுமரிக்கு அப்பா அழைத்துச் செல்லுவார்கள். அப்போது கன்னியாகுமரியில் விற்கப்படும் பொருட்களில் மிக முக்கியமானதாக நான் கருதியது பனை ஓலை விசிறிதான். மடக்கும் விதத்தில் செய்யப்படும் அந்த விசிறி இன்று கன்னியாகுமரியிலேயே இல்லாமலாகிவிட்டது. ஒட்டுமொத்த சீன பொருட்களின் விற்பனைச் சாளரமாகத்தான் கன்னியாகுமரி இன்று காணப்படுகின்றது. என்னைப்பொறுத்த அளவில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் நினைவு பரிசாக எடுத்துச் செல்ல வழி வகை செய்வதே மாவட்டத்தின் சூழியலுக்கும் பொருளியலுக்கும் கலை வளர்ச்சிக்கும் செய்யும் பொருத்தமுள்ள பணியாகும்.

Image
வித்தியாச வடிவில் விசிறி


எனது வாழ்வில் அனேகர் விசிறி செய்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரங்களில் செய்யப்படும் விசிறி ஒவ்வொருவிதமானவைகள். சமீபத்தில் முக நூலில் இருக்கும் நண்பர்களிடம் விசிறியுடன் ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்கள் என கேட்டிருந்தேன். அதற்கு எவருமே பதிலளிக்கவில்லை. விசிறி என்பது நமது வாழ்வை விட்டு விலகி சென்றுவிட்டதையே அது காட்டுகின்றது. பெரும்பாலும் வயோதிபர்களுடனும், கிராமப்புறத்தில் உள்ளவர்களுடனும் மட்டுமே தொடர்புடைய ஒன்றாக விசிறி மாறிவிட்டது. இன்றும் நகர்ப்புரங்களில் வசிப்பவர்கள் மின் இணைப்பு போனால் மட்டுமே அதனை பயன்படுத்துகிறார்கள். மும்பையில் நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் வங்காளத்தைச் சார்ந்தவர் வீட்டில் இன்றும் விசிறி இருக்கிறது.

Image
கலைநுணுக்கம் மிகுந்த விசிறி


விசிறி கிழக்கிந்திய வாழ்வில் தனி பரிணாமம் எடுத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளில் முதன்மையானது இங்கே உள்ள கோடைகால வெப்பம் தான். கோடையின் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அவைகளில் முதன்மையானது தங்கள் இல்லங்களிலும் அரசு அலுவலகங்களிலும் விசிறிமயமாக்கினர். அந்த விசிறியினை சதா காலத்திலும் அசைத்து காற்று வரும்படி செய்ய குறைந்த கூலி கொடுத்து வேலைக்காரர்களை வைத்திருந்தார்கள். இந்தியில் அவர்களை “பங்கா வாலா” என்று அழைத்தார்கள். சிலர் முழு பனை ஓலையையுமே எடுத்து விசிறி எனச் செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விசிறி விட்டனர்.

Image
Image
Image
Image
ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிர்ம்மாண்ட விசிறிகளும் விசிறி வீசுபவர்களும்

பனை ஓலையில் விசிறி செய்வது மிகவும் எளிதானது தான். ஆனால் அதனைச் செய்யவும் தனித் திறமை வேண்டும் என்பதை அருகில் இருந்தபோது அறிந்துகொண்டேன். ஓலைகளை தெரிவு செய்வது குறித்து யோசித்துப் பார்த்தால், எப்படிப்பட்ட விசிறி செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஓலைகளின் தேவை இருக்கும். ஓலைகளை பெரும்பாலும் நீரில் நனைத்தே வேலை செய்வார்கள். அது தேவையான வடிவத்திற்கு மாற்றுவது எல்லாம் கலைஞர்களின் திறமையால் மட்டுமே. குருத்தோலைகளையோ வடலியோலைகளையோ அல்லது சாரோலைகளோ எடுத்து பொருள் செய்வது வழக்கம். முழுமையாக ஓலைகளை பெருமளவில் சிதைக்காமல் செய்யப்படுகின்ற விசிறி உண்டு. ஓலையின் வடிவம் மாறி செய்யப்படுகின்ற பின்னல்களாலான விசிறியும் உண்டு. ஓலைகளுடன் இணைந்துகொள்ளும் மூங்கில் போன்ற வேறு பொருட்களும் உண்டு. இந்த வேறுபாடுகள் இன்னும் எவராலும் கூர்ந்து அவதானிக்கப்படாதது நமது ஆழ்ந்த கவனத்தைக் கோருவது.

Image
கால்களால் விசிறும் விசிறி

தபால் தலைகளை சேகரிப்பதுபோல் விசிறிகளை சேகரிக்கும் பழக்கம் கொண்ட சிலர் இருக்கின்றனர். இந்தியா முழுவது அவ்விதத்தில் நாம் ஓலை விசிறிகளை சேகரிக்க இயலும், வர்ணம் பூசியிருப்பதில் காணப்படுவதில் இருக்கும் வேறு பாடுகள், பின்னல்களில் காணப்படும் வேறுபாடுகள், ஓலையைச் சுற்றி வர செய்திருக்கும் பூவேலைப்பாடுகள், ஓலைகளின் ஓரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் துணியோ இன்ன பிற காரியங்களோ ஒவ்வொன்றும் 50 கிலோமீட்டருக்கு வித்தியாசப்படும் அளவிற்கு தனித்துவமானவைகள். 

Image
பின்னல்களால் செய்யப்பட்ட விசிறி

பனை ஓலையில் செய்யப்படும் விசிறிகள் இன்றும் நமக்கு பல உண்மைகளை சொல்லத்தக்கதாக இருக்கிறது. பொதுவாக பனை மரங்களில் பின்னேட்லி (Pinately) பாமேட்லி (Palmately) என இரு வகையாக பிரிப்பார்கள். ஒற்றை ஒற்றையாக தென்னை இலக்குகள் போல மட்டையிலிருந்து பிரிந்து செல்லுபவை பின்னேட்லி வகையாகவும், உள்ளங்கையும் விரல்களும் போல  இணைந்து இருப்பவைகள் பாமேட்லி என்றும் குறிப்பிடுவார்கள். பாமேட்லி வகைகளில் அனேக “பனை வகை” மரங்கள் உண்டு. நாம் சிறப்பாக எடுத்துக்கூறும் பனை மரம் அவைகளில் ஒன்று.

Image
தனியாரின் விசிறி சேகரிப்பு

என்னைப்பொறுத்த அளவில் இயற்கையாகவே பனை மரத்தின் ஓலைகள் விசிறி போன்று இருப்பது இதன் பயன்பாட்டிற்கான தொன்மையான காலத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இரண்டாவதாக பனை ஓலையில் இன்றும் விசிறி செய்பவர்கள், அதனை “கற்களை” வைத்து தான் நேராக்கி சீராக்கி பயன்படுத்துகிறார்கள். ஆகவே கற்காலம் துவங்கி இதன் பயன்பாடும் உருவாக்கமும் இருந்திருக்கும்.

மூன்றாவதாக இன்றும் பனையோலை விசிறிகள் கரி நெருப்பு போட்டு உணவை வேகவைக்கும் தந்தூரி உணவு செய்பவர்கள் பயன்படுத்துவதாக இருக்கிறது. அப்படியானால், நெருப்பில் சுட்டு வேகவைக்கும் முறைமைகளை கடைபிடித்த கற்கால மனிதர்களுக்கும் இது உதவிகரமாகத்தானே இருந்திருக்கும்? நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பனையோலை விசிறியினை தாராளமாக கொண்டு சேர்க்கலாம் போல இருக்கின்றது.

நான்காவதாக பனை ஓலையிலிருந்து வீசும் காற்று பூச்சிகள் அண்டாமல் நம்மை பாதுகாக்கும். குறிப்பாக காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லும்போது கொசுக்களின் அல்லது பூச்சிகளின் தொல்லை இருக்கும். அவைகளினின்று தப்பிக்க  விசிறி மிக முக்கிய தேவையாக இருந்திருக்கும். சில வேளைகளில் வேட்டைபொருட்களை எடுக்கையில் ஈக்களின் தொந்தரவிலிருந்து விடுபடவும் விசிறி உகந்ததாகவே இருந்திருக்கின்றன.

இறுதியாக ஆனால் உண்மையாக சொல்லப்படவேண்டிய காரணம் என்னவென்றால், ஓலை விசிறி வெம்மையைத் தணித்து உடலைக் குளிர்விக்க பயன்பட்டிருக்கும். தனது குழந்தையின் உடல், வெம்மையினை சகிக்காது என்ற உணர்வுடைய ஒரு தாயார் குழந்தைக்கு விசிறி விட தானே கண்டுபிடித்த ஒரு இயற்கை  பொருளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

Image
மோசிகீரனார்

மோசிகீரனார் என்ற புலவர் அக்கால வழக்கத்தின்படி  சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையிடம் பரிசில் பெற வேண்டி சென்றார். நீண்டதூரம் நடந்து வந்த  களைப்பின் மிகுதியாலும் பசியாலும் அரண்மனையில் இருந்த முரசுக்கட்டிலில் படுத்து உறங்கினார். செய்தி மன்னனுக்கு சென்றது. செய்யக்கூடாத ஒன்றை செய்த அந்த பேதையின் தலையினைக் கொய்து வரவேண்டும் என தனது வாளோடு புறப்படுகிறான். அங்கே புலவர், கண்ணயர்ந்து உறங்குவதை கண்டு மனம் பதைத்து தனது வாளை ஒதுக்கிவைத்துவிட்டு கவரி வீசுகிறான் என்பதாக பார்க்கிறோம். கவரி வீசுவது பசியுற்றவனுக்கு மன்னன் செய்யும் கடன் என்பதாக ஒரு விழுமியம் இருந்திருக்கிறது. இன்று பனையோலை விசிறி செய்பவர்களது வாழ்க்கை பசியுடன் போராடிக்கொண்டிருக்கையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம்முன் நிற்கும் மிக முக்கிய கேள்வி.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: [email protected]

பின்னல்கள் – 7

மே 24, 2020


பட்டை
வாழை இலைகள் தான் நமது உணவு உண்ணும் பாரம்பரிய பாத்திரம் என்பதாக இன்று ஒரு கருத்து தமிழகத்தில் நிலைபெற்றிருக்கிறது. அனைத்து திருமண வீடுகளிலும், விருந்து வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் வாழை இலையில் பரிமாறப்படும் உணவே தமிழக உணவு பாரம்பரியத்தைக் குறிக்கும் சிறப்பம்சமாக எடுத்துக்கூறப்பட்டு வந்திருக்கிறது. வாழை மரங்கள் தண்ணீர் செழித்திருக்கும் இடத்தில் வளர்பவை ஆனபடியால் அவைகள் செழிப்பை முன்னிறுத்தும் ஒரு அடையாளமாகிப்போனது. அப்படியானால் ஐவகை நிலம் கொண்ட தமிழகத்தில் குறிஞ்சி பகுதியினைத் தவிர்த்து அனைத்திடங்களிலும் வளரும் பனை மரத்தின் ஓலைகள் எப்படி இவ்வடையாளத்தை இழந்தது?

Image
மித்திரன் பனை ஓலை பட்டையில் பதனீர் குடிக்க உதவியபோது


வாழை இலைகள் எப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவு பாத்திரத்தின் அடையாளமாக மாற முடியும்? யோசித்து பார்த்தால், வளம் மிக்க பகுதியில் வாழ்வோரின் வழக்கமே வறண்ட நிலப் பகுதியில் வாழ்வோர் ஏக்கம் கொள்ளும் வாழ்வு என்பதாக முன்னிறுத்தப்பட்டது. மேலும் வாழை இலையினை மையப்படுத்தியே நமது சமையல்கள் விரிவடைய துவங்கின. ஆகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாழை இலை இட்டு உணவு பரிமாறுதல் பொருந்தும் என்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நிலை எப்போதும் நம்மிடம் இருந்தது இல்லை. உணவுண்ணும் பாத்திரம் அந்தத்த இடத்தில் கிடைக்கும் இயற்கை பொருட்களின் தன்மையைப்பொறுத்தே இருந்திருக்கிறது. தையல் இலை, கமுகு பாளை, வாழை இலை, தேக்கிலை, சேம்பு இலை, தாமரை இலை மற்றும் பனை ஓலை போன்றவை தேவைக்கு ஏற்ப பயன்பாட்டில் இருந்துவந்தன. இவைகளில் கமுகு பாளை தட்டும் பனையோலை தட்டும்தான் கையிலேயே வைத்து உணவு உண்ண வசதியானவைகள். அதிலும் உடனடி பாத்திரம் என்றால் பனை ஓலை தான் மிகச் சரியானது. தேவையான அளவு எப்போதும் எடுத்துக்கொள்ள வாய்பிருந்திருக்கிறது. மொத்தமாக ஓரிலையை வெட்டி விட தேவையில்லை.


பொதுவாக வறண்ட நிலப்பகுதிகள் உள்ள தென் மாவட்டங்களில் பனை ஓலை பட்டை மிக முக்கிய உணவுப்பாத்திரமாக இருந்திருக்கிறது. தவிர்க்க இயலா இந்த பாரம்பரியம் அழிந்து போவதற்கு பனை தொழில் அழிவும் பிற விவசாய தொழில்களின் எழுச்சியும் காரணம். குறிப்பாக அணை கட்டுமானங்கள் போன்ற பெரும் நீர் தேக்கங்களின் வரவிற்கு பின்பு, நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு, உணவுகள் உற்பத்தியிலும் உட்கொள்ளுதலிலும் தமிழகம் மிக அதிக அளவில் மாற்றத்தை அடைந்திருக்கிறது.
பனை ஓலையில் செய்யப்படும் பனையோலைப் பட்டையானது நம்மோடு தங்கியிருக்கும் ஒர் ஆதி உணவு பாத்திரம். இவ்விதமாக எல்லா கலாச்சாரத்திலும் தொல் வடிவங்கள் எளிதில் வந்து நவீன வாழ்வை அடைவதில்லை. ஆதிவடிவங்கள் நம்மை வந்தடைவது ஒரு நல்லூழ். அவ்வடிவங்களே நாம் பனை சார்ந்த வாழ்வை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதற்கு ஏற்ற அடையாளம். அகழ்வாய்வு செய்து நாம் எடுக்கும் பொருட்களை விட பயன்பாட்டில் இருக்கும் இவ்வித பொருட்கள் பயன்பாட்டளவில் மிகவும் தொன்மையானது.

Image
கறி பொதிந்த ஓலை


பனை ஓலையின் வடிவம் அதிகளவில் மாறாமல் பனை மரத்தின் ஓலையைக் கொண்டு செய்யப்படும் ஒரு வடிவம்தான் பனையோலைப் பட்டை. இதற்கு இணையான வேறு எளிய பொருள் பரந்துபட்ட பயன்பாட்டில் இல்லை என்று சொல்லலாம். இன்று பெரும்பாலும் ரோட்டோரங்களில் பனையோலைப் பட்டைகளுடன் பதனீர் விற்பவர்கள் நின்று விற்பனை செய்வதைப் பார்க்கிறோம். அந்த பட்டைதான் பதனீரை விற்பனை செய்யும் விற்பனை முகவர் எனும் அளவிற்கு இன்று பனையோலைப் பட்டை முன்னணியில் நிற்கின்றது.


எனது சிறு வயதில் பதனீரை பனையோலைப் பட்டையில் வழங்கும் ஒரு முறைமையை நான் பெரிதும் ரசித்திருக்கவில்லை. மடிப்பு மடிப்பாக இருக்கும் இலைகள், இரண்டு கைகளும் பற்றியிருக்க குனிந்து மாடு நீர் குடிப்பது போல பதனீர் குடிப்பது, ஏதோ இலையையும் சேர்த்து சாப்பிடும் பாவனையைக் கொண்டிருந்தது. எவ்வகையிலும் பொருத்தமில்லா ஒரு கடினமான வடிவத்தை நமது முன்னோர் நம்மீது திணித்துவிட்டார்களோ என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் வளர்ந்த பிற்பாடு, ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் கத்தியும் கரண்டியும், சீனர்கள் பயன்படுத்தும் இரட்டைக் குச்சிகளும் இதனை விட கடினமான அனுபவங்களைக் உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் பனை ஓலை பட்டையின் வடிவம் மிக நேர்த்தியான ஒன்றாகவும் காணப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல பனைஓலையில் சாப்பிடும் உணவின் சுவை என்னை திக்குமுக்காட செய்வதாக இருந்தது. தனித்துவமான அந்த வடிவம், பயன்பாடு மற்றும் பயன்படுத்துவோர் சார்ந்த தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு அதிகமானவை. அட்சயப்பாத்திரம் என்ற ஒரு உன்னத வடிவமாகவே இதனைப் இன்று பார்க்கிறேன்.


ஓலைகளில் பல்வேறு பயன்பாட்டு வடிவங்கள் செய்வது உலகமெங்கும் வழக்கில் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவை யாவும் பல நூற்றாண்டுகளாக நமது மரபில் ஊறி எழுந்தவை. இன்று இவற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், இவை அத்தனை எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஒருமுறை தொட்டுணர்ந்தாலே தெரிந்துவிடும். ஆதி மனிதர்கள் ஓலைகளுடன் கொண்டுள்ள உறவைச் சொல்லும் சான்றுதான் பனை ஓலை பட்டை.


பெண்களும் தாய்மார்களுமே ஆதி பயன்பாட்டு பொருட்களை கண்டுபிடித்தவர்கள் என்பது குறித்த பார்வை, பெண்ணிய ஆய்வாலர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையைப் பெற்றடுத்த தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பின் போது ஏற்படும் தேவைகளுக்கேற்ப அனேக காரியங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஓலை பட்டையில் கூட குழந்தையை விரித்து பரப்பி வைத்து படுக்க வைத்திருக்கலாம். அது போலவே விழுந்து கிடக்கும் பனை ஓலைகளை எடுத்து குவித்து குழந்தையின் சிறு வாய் வழி குழந்தைகளுக்கு உணவு புகட்டும் தாய்மார்கள் பனை ஓலை பட்டையின் ஆதி வடிவைக் கண்டுபிடித்திருப்பார்கள். உணவை சாறு, கூழாக அருந்தும் ஒரு குழந்தைப் பருவத்து நிலையை இது இன்றும் உணர்த்துவதாக இருக்கிறது.


பனை மரத்துடன் ஈடுபாடு கொண்டவர்கள் பனையோலை பட்டையில் பதனீர் வாங்கிக்குடித்த அனுபவத்தை மறப்பது இல்லை. பட்டையை கிளப்பும் அந்த அனுபவம் தொன்றுதொட்டு வரும் ஒரு அறிவு என்பதோடு தொன்மையான ஓலை பயன்பாட்டின் ஆதாரம் என்றும் நாம் கொள்ளலாம். மேலும், பின்னல்கள் எனும் மொழியினை மனிதர் கற்றுத்தேற நாம் கண்டடைந்த பாதையினைச் சுட்டி நிற்கும் மைல்கற்கள் இவைகளே

Image
பனை ஓலைப் பட்டையில் பனம்பழம் – குற்றாலம்


வேட்டை சமூகங்கள் ஓலைகளையும் இலைகளையும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களையுமே தங்கள் வேட்டைப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து வெகு சமீப காலம் வரை கூட பனை ஓலையிலேயே பன்றி இறைச்சியினை பொதிந்து கொடுப்பார்கள். இவ்விதமாக பொதிந்தவைகளிலிருந்து கறியை எடுத்து வீசியெறியும் ஓலைகளின் நடுவில் குழிவு இருப்பதைப் பார்க்கலாம். இவைகளும் ஓலை பட்டையின் ஒரு ஆதி வடிவமாக இருக்க வாய்ப்பிருக்கிறது

பனை ஓலைகளில் பட்டையினை மடிக்கும்போது கவனிக்கவேண்டியவைகள் சில உண்டு. எல்லாரும் எளிதில் பனை ஓலையில் பட்டையைப் பிடித்துவிடமாட்டார்கள். அது எளிதும் அல்ல. ஓலைகளின் பதம் மிகவும் முக்கியம். எத்துணை திறமையானவர் மடித்தாலும் ஒருசில ஓலைகளில் கீறல்கள் விழுந்துவிடுவது இயல்பு. சில வேளைகளில் நெருப்பில் வாட்டி மடிக்கும் வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பு எப்போதும் சாத்தியப்படுவதில்லை.

Image
பதனீர் விற்பவரும் பனம் பழம் விற்கும் சிறுவனும் பனையோலை பட்டையுடன் – குற்றாலம்


ஓலைகளை குறித்து ஒரு சிறு அறிமுகம் இருந்தால் பின்வருவனவற்றை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். இரண்டு பெருவிரல்களும் இணைந்திருக்கும்படி கைகளை விரித்து வைத்துக்கொள்ளுங்கள். பனை ஓலையும் சற்றேறக்குறைய இப்படித்தான் இருக்கும். இப்பகுதியில் தான் மட்டை வந்து மையம் கொள்ளும். இதனை மூக்கோலை என்றும் பொன்னி ஓலை என்றும் குறிப்பிடுவார்கள். இப்பகுதிக்கு என்று ஒரு தனித்துவமான மடிப்பு இருக்கும் இதிலே ஒரு குருவி பதிவாக வந்து ஒளிந்து கொள்ளும். ஆகவே தான் ஓலையின் இப்பகுதியில் தங்கியிருக்கும் குருவிக்கு மூக்கோலை குருவி அல்லது பொன்னி குருவி என்று பெயரிட்டார்கள் குமரி மாவட்டத்தினர். தூத்துக்குடி ராமனாதபுரம் போன்ற பகுதிகளில் இவற்றை முன்னி ஓலை என அழைப்பார்கள். ஓலையின் இப்பகுதி பெரும்பாலும் பொருட்கள் செய்ய பயன்படுத்துவதில்லை.
பொன்னி ஓலையை மையப்படுத்தி ஓலையினை வலஞ்சிறகு இடஞ்சிறகு என்றும் பிரிப்பார்கள். அதாவது, ஓலையினை வலதுபுறம் என்று இடதுபுறம் என்று பிரிப்பது. இதில் வலஞ்சிறகிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பனை மரத்திலிருந்தே பதமாக வெட்டி அருவாபெட்டியில் எடுத்துவரப்படும் நிகழ்சிகள் உண்டு. தனித்துவமான பொருட்களை அவ்வளவு கவனமாக செய்வார்கள். ஓலையின் இரு ஓரங்களையும் கடஞ்சிலக்கு என்பார்கள். ஓலையை பெருமளவில் பாதிக்காதபடி கடஞ்சிலக்கினை எடுத்துக் கூட பட்டை மடிப்பார்கள். அது பதனீர் இறக்கும் பனை மரத்தை பெருமளவில் பாதிக்காத செயல்.

Image
குருத்தோலைச் சிறகு


மூன்று, நான்கு அல்லது ஐந்து ‘இலக்குகள்’ கொண்ட பனை ஓலைகளை ஒன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றை மடக்கிச் செய்வதுதான் பனை ஓலைப் பட்டை. பொதுவாக ஒரு ஐந்து இலக்குகள் கொண்ட ஓலையினை இணிந்து எடுத்துப் பார்த்தால் அது மனிதக் கைகளை ஒத்திருக்கும். ஓலையில் அடிப்பாகம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளங்கை போலவும், மேற்பகுதி விரல்கள் போன்று பிரிந்தும் இருக்கும். இது மனிதக் கைகளை குவித்து தண்ணீர் மொண்டு குடித்த ஆதி குடிகளின் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். பிரிந்திருக்கும் விரல்களை எப்படி சேர்த்துவைத்துத் தண்ணீர் மொண்டுகொள்ளுகிறோமோ, அதுபோலவே ஓலைகளையும் குவித்துப் பிடித்துவிட்டால் தண்ணீரைத் தேக்கி குடிக்கும் ஒரு வடிவமாக மாற்ற முடியுமே என எண்ணியிருக்கலாம். ஓலைகளைப் பரத்தி, பிரிந்திருக்கும் நுனிப்பகுதிகளை ஒன்றிணைத்தால் ஒரு குழிவுடன் கூடிய படகின் வடிவம் கிடைக்கும். ஒன்றிணைத்த ஓலைகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரித்து, நீண்டு நிற்கிற ஓலைகளுக்குக் குறுக்காக சுற்றிக் கட்டிவிட்டால் பயன்பாட்டுக்கு ஏற்ற பனை ஓலை பட்டை தயார்.

Image
மித்திரன் நேரடியாக பனையேறி அளித்த பட்டையில் பதனீர் சுவைக்கும் காட்சி – திருஞானபுரம்


ஒரு வகையில் பனை ஓலைப் பட்டைகளின் எளிமையும் தான் தொன்மையான அவற்றை இன்றுவரை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பனையேறிகளின் முதல் நாள் பூசையில் பனையோலைப்பட்டை கண்டிப்பாக ஓர் இடம் பெற்றிருக்கும். குமரியிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்கள் விழாக்களின்போது, சடங்குகளின்போது பனை ஓலைப் பட்டையில் ஏதேனும் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.

Image
கூடவிளை – தென்னிந்திய திருச்சபை, துக்க வெள்ளி ஆராதனைக்குப் பின்பு நிகழும் பனையோலைப் பட்டை கஞ்சி வழங்குதல்


குமரி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபைகளில் நடைபெறும் புனித வெள்ளி ஆராதனை ஒரு தொல் சடங்கினை ஏந்தி வருவதை இன்றும் காணலாம். பல திருச்சபைகளில் மும்மணி நேர ஆராதனைக்குப் பின்பு கஞ்சியினைக் கொடுப்பார்கள். ஆனால், இன்றும் ஒரு சில திருச்சபைகளில் பனை ஓலைப் பட்டையிலேயே இதனை வழங்குவார்கள். இதற்காக திருச்சபையினர் எடுத்துக்கொள்ளும் சிறப்பு கவனம் நம்மை பிரமிக்க வைப்பது. ஓலைகளை வெட்டி மலைபோல முந்தையநாள் குவித்துவிடுவார்கள். பிற்பாடு அவைகள் புழுமி மென்மையாகும்போது ஓலைகளை எடுத்து மடிப்பார்கள். ஓலைகளை மடிப்பதற்கு என்று தனி திறமை வாய்ந்தவர்கள் உண்டு.
இதே சூழலை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அசனம் வழங்கும்போது பனை ஓலை பட்டையில் தான் கொடுப்பார்கள் நவீன வாழ்வில் வாழை இலைகள் பனையோலைகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டன.


பனையோலைப் பட்டை சோறு வழங்குதலில் நாட்டார் தெய்வ வணக்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. பல்வேறு விழாக்களில் கொடுக்கப்படும் கிடாய்கறி சோறு பனை ஓலைப் பட்டைகளிலேயே கொடுக்கப்படும். திருவிழாக்களின் உற்சாக களைப்பில் மிக அதிக உணவைக் கோருகின்ற ஒரு வடிவம் பட்டை சோறு என்றால் அது மிகையாகாது. கிடா அல்லது கோழி பலியிட்டு நாட்டார் தெய்வங்களை வணங்கும்போதும் பனை ஓலை பட்டையில் கறிசோறு வழங்கும் நடைமுறை இன்றும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமனாதபுரத்தில் கோழிக்கறியினை பனையோலை பட்டையில் உண்ட அனுபவம் கிட்டியது. பதனீரோ, கஞ்சியோ, கறிக்குழம்போ பனை ஓலை வாசத்துடன் நம் நாக்கில் வந்து விழுவது பசியை நன்கு தூண்டும்.


2018 ஆம் ஆண்டு தமிழகத்தினை சுற்றி வருகையில், அனேக தென் மாவட்ட கோவில்களின் அருகில் பனை ஓலை பட்டைகள் திருவிழாக்கள் முடிந்துவிட்டதன் அடையாளமாக கிடந்தன. பழங்காலத்தில் சில பாட்டிமார் இவ்வித ஓலைகளை எடுத்து கடவம் போன்ற பொருட்களை செய்து ஓலைகளை மறு சுழற்சி செய்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்.

Image
மட்டையுடன் இணைந்திருக்கும் பனையோலையினை தேவைக்கேற்ப கிழித்தெடுக்க தயாராகும் பனையேறி – பண்ணைவிளை


எனது அனுபவத்தில் பனையோலை பட்டையினை பயன்படுத்தும் மக்கள் பலதரப்பட்டவர்கள் என அறிந்திருக்கிறேன். தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் அவற்றின் பயன்பாடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சாதி சமய மொழி நாடு கடந்து காணப்படும் பனை ஓலை பட்டைதான். அப்படி பார்க்கையில் தமிழகத்தில் இழந்துபோன பட்டையின் பங்களிப்பை மீட்டுருவாக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இராமனாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் எப்படியாவது ஒரு சில கடைகளில் பனை ஓலை பட்டையில் உணவளிக்கும் கடைகள் உருவாகத்துவங்கினால், மண்வாசனை என்ற கூற்று பனைவாசனை என மாறும். பட்டையைக் கிளப்பும் காலத்திற்கு தமிழகம் தயாராகட்டும்.

அசனம் : திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய திருச்சபையில் வழங்கப்படும் சிறப்பு விருந்து. ஊரிலுள்ள அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொள்ளலாம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: [email protected]

பின்னல்கள்  –  6

மே 18, 2020

சரடுகள்

பனை சார்ந்த தேடுதல்கள் முடிவேயில்லாதது, விரிவானது. அவைகள் எங்கே எப்போது எப்படி விரிவடையும் என்பது நாமே அறிந்துகொள்ள முடியாதது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களும் எப்படி நம்மை வந்தடைகின்றன என்பது கூட மிகப்பெரிய ஆச்சரியம் தான். பல நேரங்களில் நாம் பெறுகின்ற புதிய திறப்புகள் கடவுள் நமக்கு அருளிய வரம் என்றே கொள்ளமுடியும். அந்த அளவிற்கு தர்க்க விதிகளை மீறியே பனை சார்ந்து  புதிய திறப்புகள் கிடைக்கும்.

Jalli

ஜல்லிக்கட்டு காளையுடன்

தமிழகத்தில் பனை குறித்து அறியாதவர் என எவரும் இருக்கவியலாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக பனை சார்ந்த உணவு பொருட்களை குறித்தாவது ஒரு சில காரியங்களை அறிந்திருப்பார்கள். பிரச்சனை என்னவென்றால், அதுவே அவர்கள் அனைத்தையும் அறிந்திருப்பதற்கான அத்தாட்சி எனக் கொள்ளுவார்கள். பனை சார்ந்து ஒரு மாற்று உலகம் இருக்கிறது என்றோ அதில் உழலும் மக்களின் வாழ்வின் சவால்கள் குறித்தோ  ஏதும் அறியாதவர்கள் அவர்கள். குறிப்பாக பனை மரம் வாழ்வின் முக்கிய சரடாக இருந்திருக்கிறது என்பதைக் குறித்து ஏதும் அறியாதவர்கள். பனை சார்ந்து காணப்படும் அனைத்துமே பண்பாடு சார்ந்து முக்கியத்துவம் அற்றது என்னும் மனநிலையைக் காட்டும் புரிதல் இது.

மற்றொருபுறம், பனை மரத்துடன் தங்கள் வாழ்வை இறுக பிணைத்துக்கொண்டவர்கள்.  பனை சார்ந்த பல்வேறு நுட்பங்களை அறிந்து வைத்திருக்கிறவர்கள். தங்கள் வாழ்வோடு  அவைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால் வேர்கொண்டவற்றை தனித்து வெளிக்காட்ட இயலாதவர்கள். இயல்பாக வெளிப்படும் தங்கள் திறமைகள் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாததால், அது குறித்து பொதுவிடங்களில் வாயே திறக்காதவர்கள்.  பல நேரங்களில் அவர்கள் அறிந்தவற்றை  முக்கியமான ஒரு அறிதல் என்றோ பண்பாட்டிலிருந்து நழுவிச்செல்லும் ஒன்றினைத் தாம் கட்டி காக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதில்லை. ஆகவே பொதுவிடங்களில் இவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆய்வு சார்ந்து இவர்களிடமிருக்கும் தொன்மையான திறமைகள் பட்டியலிடப்படவுமில்லை.

பனை சார்ந்த ஆய்வுகளில் பெரும்பான்மையானவை பனை மரத்தை பணம் காய்க்கும் மரமாக எப்படி முன்னிறுத்துவது என்பதாகவே இருந்திருக்கிறது. ஆகவே பனையேறிகளே கூட வேறு வகை கேள்விகளுக்கு தயாராக இல்லை. கடந்த தலைமுறை முழுவதும் பனை சார்ந்த வாழ்வை பனைத்தொழில் என்றே புரிந்துவைத்திருந்தது. அப்படி இல்லாவிட்டால், பனை சார்ந்த ஆய்வுகள் பெரும்பாலும் ஒற்றை சமூக பின்புலத்தில் வைத்து தேடுவது என்பதாகவே இருக்கிறது. அப்படி பார்க்கையில் மிகப்பெரும் பனை பாரம்பரியம் கொண்ட சரடுகள் பலவும் அறுபட்டு பனை சார்ந்த தொன்மையினை எட்ட இயலாதபடி துண்டிக்கப்பட்டு கிடப்பது மனதை பிசைகின்றது.

பனை சார்ந்த கயிறுகள் குறித்து எனது தேடுதல் யாவும் எதிர்பாராமல் நிகழ்ந்தவைகளே, அவைகள் என்னை ஒரு மிகப்பெரிய வரலாற்று பின்னணியத்தில் கொண்டுபோய் விடும் என நான் சிறிதும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. பல வேளைகளில் ஒரு சரடினைப் பிடித்து  நாம் சென்று சேரும் இடங்கள் மர்மதேசங்களாகவும் அற்புத உலகமாகவும் காணக்கிடைப்பது விந்தையிலும் விந்தை. வேற்று கிரகத்தை ஒத்த பனை கயிற்றுலகத்தில் காணப்படும் பொருட்களும் அதிசயமானவைகளாகவே காணப்படுகின்றன.

கயிறுகள் மீதான எனது ஆர்வம் சிறிய வயது முதலே துவங்கி இருக்கிறது. வீட்டின் பின்புறம் கிணறும் வாளியும் கயிறும் நான் நெருங்க இயலாத ஆச்சரிய பொருட்கள். அக்கா தான் கிணற்றில் நீர் இறைப்பவர்கள். சிறு பிள்ளையாகிய நான்  கிணற்றின் அருகிலேயே செல்லக்கூடாது.  அக்கா தண்ணீர் நிறைந்த வாளியினை கயிற்றில் கட்டி இழுப்பது காண கண்கொள்ளா காட்சி.   ஒருமுறை இடதுகையால்  இழுத்த கயிற்றினை அப்படியே வலது கையால் லாவகமாக சுழற்றி வீசுவார்கள் அது மிகச்சரியான ஒரு வட்டத்தை அமைத்து அமர்ந்துவிடும். நீர் இறைத்த பின்பு அந்த கயிறு கிணற்றின் மதில்மேல் சுற்றி பாம்பு போல் அமர்ந்திருக்கும்.

2019 ஆம் ஆண்டு பொங்கல் நிகழ்விற்காக திருப்பூர் அழைக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்தவர் திருப்பூரில் உள்ள திரு. சத்தியமூர்த்தி  அவர்கள். எப்படி என்னைக்குறித்து அறிந்துகொண்டார்கள் என்பதை நான் அறியேன் ஆனால் அவர்களது அழைப்பு சாதாரணமான ஒன்றாக இல்லை. என்னால் அங்கே பனை பொருட்களை எடுத்துச் செல்லுவது இயல்வதல்ல என்று கூறி அங்கே செல்வதை தவிர்த்தும் அவர்கள் என்னை அழைப்பதில் குறியாக இருந்தார்கள். பனை ஓலைப் பொருட்களை எடுத்துச் செல்லுவதற்கு என தனியாக ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்தார்கள். கன்னியாகுமரி வந்து பனை ஓலைப் பொருட்களை எடுத்துச் செல்லும் அளவு அவருக்குள் இருக்கும் பனை சார்ந்த நெருக்கத்தை பெருவியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

முந்தைய நாள் இரவே நான் அங்கே சென்று சேர்ந்துவிட்டேன். பல்வேறு பொருட்களை அங்கு நான் காட்சிக்கு கொண்டுசென்றிருந்தேன். எனக்கு அறிமுகமாயிருந்த தஞ்சாவூரைச் சார்ந்த வாகை விக்டோரியா எனது பொருட்களை காட்சிக்கு வைக்க உதவினார்கள். மறுநாள் அவர்களுக்கு வேலை இருந்ததால் என்னோடு அவர்கள் இருந்து உதவ முடியாது எனக் கூறிவிட்டார்கள். என்ன அதிசயமோ மறுநாள் வாகையின் தோழி தீபா எனும் ரங்கநாயகி அங்கே தனது கணவருடன் வந்திருந்தார்கள். மிகவும் நட்புடன் பழகும் அவர்கள் பனை சார்ந்த பொருட்களைக் கண்டவுடன் ஏதோ ஒரு உத்வேகத்தில் எனக்கு உதவி செய்கிறேன் எஎன ஒப்புக்கொண்டார்கள்.  தீபா பேச்சினூடாக தான் காங்கேயத்திலிருந்து வருவதாக கூறவும், எனது மனதில் வேறு ஒரு கேள்வி எழுந்தது. காங்கேயம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. தெரிந்தது எல்லாம் காங்கேயம் காளைகளுக்கு பிரபலமான ஊர். ஆகவே அது சார்ந்தே பேசலாம் என நினைத்து, காங்கேயம் காளைக்கு பனை நார் கொண்டு மூக்கணாங் கயிறு கட்டுவார்களா என்று கேட்டேன். “கேட்டு சொல்றேன்” என்றார்கள். பொதுவாக “கேட்டு சொல்லுகிறேன்” என்று சொல்லுகிறவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவது இயல்பு. ஆகவே நானும் அதனை அப்படியே மறந்துவிட்டேன்.

Panai porutkaL

தீபாவும் வாகையும்

பிற்பாடு நான் என்னையே கேட்டுக்கொண்டேன்… அது எப்படி பனை சார்ந்த ஒரு கயிற்றினைக் குறித்து இவர்களிடம் நான் கேட்டேன்? அதுவும் மாடுகள் குறித்து அடிப்படையே அறியாத நான் எப்படி இந்த கேள்வியை எழுப்பினேன் என்றே தெரியவில்லை.  ஆனால்  இந்த கேள்வி என் மனதின் அடியாளத்தில் உள்ள ஒரு பதிலை துழாவி எடுத்தது. கூ. சம்பந்தம் அவர்கள் எழுதிய பனைத்தொழில் உண்ணாபொருட்கள் என்கிற புத்தகத்தில் பனை நார் கொண்டு செய்யும் கயிறு ஒன்றினை மூக்கணாங் கயிறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற குறிப்பு வரும். ஆனால் காங்கேயத்தைச் சார்ந்த தீபா அவர்களை சந்திக்கும்வரை என் மனதில் அப்படி ஒரு கேள்வி  எழுந்திருக்கவில்லை. தான் காங்கேயத்தைச் சார்ந்தவள் என தீபா அவர்கள் சொன்னவுடனேயே தான் எனக்குள் அந்த கேள்வி பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கிறது.

மனிதனை ஒரு சமுக விலங்கு என்பார்கள். பிற விலங்குகளோடு ஒரே நிலப்பரப்பை பகிர்ந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில், மிருகங்களும் மனிதர்களும் ஒரு புரிந்துகொள்ளுதலுக்குள் வருவதே வீட்டு விலங்குகள் உருவாவதற்கு முதற்படி.  மனிதனும் மிருகங்களும் ஒருவருக்கு ஒருவர் “கொண்டும் கொடுத்தும்” “பெற்றும் பெருகியும்”  “இசைந்தும் அசைந்தும்” புரிதலுடன்கூடிய ஒரு ஒப்பந்தத்தின் வெளிப்பாடே வளர்ப்பு மிருகங்கள் மனித வாழ்வில் இடம்பெற காரணம். ஆனால் பெருமளவில் மனிதனின் அறிவு கூர்மைபெற அவன் தனது வேலைகளை எளிதாக்கும் பொருட்டும், தேவைகளை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ளவுமே அவன் மிருகங்களை வீட்டு விலங்குகளாக மாற்றுகிறான்.

mookaNangkayiRu

மூக்கணாங் கயிறு

அந்த வகையில் நாய் அவனோடு இணைந்த முதல் மிருகம் என்பதில் பொருத்தப்பாடு அனேகம் உண்டு. குறிப்பாக மனிதன் வேட்டைக்குச் செல்லும் சூழலில் அவனுக்கு வேட்டையில் உறுதுணையாக நிற்கும் ஒரு விலங்கு தேவைபடுகிறது. அந்த விலங்கு மனிதன் வேட்டைக்குச் செல்லும் தடங்களை தொடர்ந்து தங்களுக்கு வேண்டியவைகளைப் பெற்றுக்கொண்ட ஓநாய்களின் அல்லது பனங்காட்டு நரிகளின் வழித்தோன்றல்களாக இருக்கலாம்.

வளர்ப்பு மிருகங்கள் என்று சொல்லும்போது ஏதோ ஒரு சில நாட்களில் விலங்குகள் பழகிவிடுவதில்லை. குறிப்பாக 60 – 90 தலைமுறைகள் விலங்குகளின் வாழ்வு தொடர்ந்து மனிதர்களுடன் உரையாடலில் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் கற்றறிந்தவர்கள். அவ்விதமான ஒரு சூழலில் தான் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெறும். கி மு 10500 வாக்கில் தான் கால்நடைகள் மனித வாழ்வில் உள்நுழைந்திருக்கின்றன. இது விவசாயம் தலை தூக்குகின்ற காலகட்டம் தான். புதிய கற்காலத்தில் இவைகள் நிகழ்வது ஒரு புது பாய்ச்சலை நோக்கி மனித இனம் நகர்கின்றது என்ற ஒரு உண்மையினை நமக்கு அறிவிக்கின்றது.

கால்நடை என்றவுடனேயே, நாம் கண்டிப்பாக மாடுகளை தான் எண்ணுவோம். பெரும்பாலான குகை ஓவியங்களிலும் மாடுகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. அப்படியே மாடுகளின் முக்கியத்துவத்தையும் தமிழர் வாழ்வில் காணப்படும் ஏறு தழுவுதலையும் நாம் பிரித்து பார்க்க இயலாது. மாடுகள் எப்படி மனிதர்களோடு பழகியிருக்கும்?

ஊன் உண்ணும் மிருகங்கள், மாடோ மனிதனோ கிடைப்பவற்றை குறிவைக்கையில் மனிதனுக்கும் மாடுகளுக்கும் ஏற்படும் புரிதல் தான் ஒன்றிணைவதற்கான முதற்படி. மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஒரே பொதுவான எதிரி தான். கோரைப்பற்கள் கொண்ட மிருகங்களை சமாளிப்பதை விட, இரு கொம்புகளைக் கொண்ட மாடுகளை சமாளிப்பது எளிதானது என கருதியிருக்கலாம் அப்படியே மாடுகளும் வேட்டைக்கு இரையாவதை விட சற்றே மனிதர்களுடன் இணக்கமாக இருந்துகொள்ளலாம் என்றும் நினைத்திருக்க வாய்புள்ளது. மாத்திரம் அல்ல மாடுகளின் உணவுகள் மனிதர்களுக்கு தேவையற்றவைகள். ஆகவே மனிதர்களுக்கு மாடுகளால் உணவு பஞ்சம் வர வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்திருப்பார்கள்.

இச்சூழலில் தான் மனிதர்களின் கண்டுபிடிப்பான கயிறு இவர்களுக்கு பெருமளவில் உதவியிருக்கும். வேட்டையில் பிடித்த மிருகங்களையோ அல்லது அவைகளின் குட்டிகளையோ  கட்டி போட்டு வளர்த்திருக்கும் வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறது. கழுத்திலோ அல்லது காலிலோ கயிறு கட்டப்பட்டு ஓரிடத்தையே சுற்றி சுற்றி வந்து அவ்விடத்திற்கும் மனிதர்களுக்கும் சிறுக சிறுக பழக்கப்படுத்தப்பட்டிருக்கும்.  குழிகளை வெட்டி அதில் விழவைத்து பழக்கப்படுத்துவதோ அல்லது கூண்டுகளைக் கட்டி அதற்குள் இட்டு வளார்த்து பழக்கப்படுத்துவதைவிட கயிறு கட்டி பழக்கப்படுத்துவது எளிதானது.

அவ்வகையில் தான் மாட்டிற்கான மூக்கணாங்கயிறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வெகு சமீபத்திய கண்டுபிடிப்பாக மூக்கணாங்கயிறு இருக்கலாம். ஆனாலும் அதன் பயன்பாடு மிகவும் முக்கியம். அழிந்து போன பனை நார் மூக்கணாங்க் கயிறு குறித்து ஒரு தகவல் என்னை நோக்கி மேலெழும் என நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை.

ஒருநாள் தீபா என்னை அழைத்தார்கள். இங்க ஒரு தாத்தா பனை நார் கொண்டு கன்றுக்குட்டிக்கான மூக்கணாங் கயிறு செய்கிறார்கள் என்று உறுதி செய்தார்கள்.  ஆனால் அந்த தாத்தாவிற்கு யாராவது மட்டைகளை வெட்டிபோடவேண்டும் என்றார்கள். அப்புறமாக மேலும் சில நாட்கள் கழித்து, மட்டைகளை வெட்டிப்போட ஆட்களை தேடுகின்றோம் என்றார்கள். இன்னும் ஒரு சில நாட்களுக்கு பின்பு மட்டையை வெட்டிபோட ஆட்களை ஒழுங்குசெய்திருக்கிறோம் என்று உறுதி கூறினார்கள். இறுதியாக பனை நார் கயிறு செய்ய துவங்கிவிட்டோம் என்றார்கள். இவைகள் எதுவுமே நிகழ்கின்றவைகளாக எனக்கு படவில்லை ஏதோ ஒரு கனவு என்னைக் கடந்து செல்கின்றதுபோலவே இருந்தது.அப்போது நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் வாழ்ந்துவந்தோம். அங்கிருந்துது நான் மும்பை வந்த பின்பு ஒரு நாள் எங்கள் கரங்களில் அந்த மூக்கணாங் கயிறு கிடைத்தது. இவ்வித நுண்தகவல்களை வெளியிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ள ஒருபோதும் இயலாது.

95 வயது நிரம்பிய பழனிச்சாமி கவுண்டர்  பனை நார் கொண்டு இதனைச் செய்திருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பாளையம் என்ற ஊரில் வசிக்கும் இவர் தனது கால் தொடைப்பகுதியில் பனை நார்களை வைத்து திரித்து இந்த கயிற்றினைச் செய்திருக்கிறார். கைகள் கால்கள் கண்கள் ஆகிய “உடற்கருவிகளிக்கொண்டே” இவ்வித பாரம்பரிய மூக்குச் சரடினை செய்திருக்கின்றனர் என்பது  சாதாரணமாக நாம் கடந்துபோகக்கூடிய செய்தியல்ல. சுமார் முப்பது முதல் நாற்பது வருடங்களுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்த ஒரு அறிவு அப்படியே நமது கண்களுக்கு முன்பே மங்கி போகின்றது.

இது விஷயமாக இயற்கை ஆர்வலர் எஸ். மோகன் ராசுவுடன் பேசிக்கொண்டிருந்தேன்… “கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர்கள் பனை ஏறி பதனீர் எடுப்பது குறைவுதான் என்றாலும், பனை சார்ந்த பல்வேறு பொருட்கள் அவர்கள் விவசாய வாழ்வில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவ்வகையில் மாடுகளை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. புளிச்சக் கீரைத் தண்டு, யானை கத்தாளை போன்றவைகளைக் கொண்டு கயிறு செய்த பாரம்பரியம் போய் நூல் கயிறு, என வரிசையாக இயற்கைபொருளிலிருந்து செயற்கை பொருள் நோக்கி வந்தவர்கள் தற்பொழுது நைலான் கயிற்றினை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.

மேலும் “மாட்டிற்கு தகுந்தாற்போல் மிக சன்ன கயிற்றிலிருந்து  மிகப்பெரிய கயிறு என மெதுவாக மாறுவார்கள்.  மாட்டின் மூக்கில் புண் ஏற்படாமல் இருக்க கயிற்றில் வெட்டுகாய பூண்டு, தும்பை, குப்பைமேனி, போன்ற இலைகளின் சாற்றினை கயிற்றில் உருவி முக்கணாங் கயிறு கட்டுவது வழக்கம்” என்றார்.

யோசிக்கையில் சில விஷயங்கள் நமக்கு பிடிபடுகின்றன… கொங்கு மண்டலத்தில் வேலிகளை சுற்றி பனை மரங்கள் இருந்திருக்கின்றன. பனை ஒரு அத்தியாவசிய மரம் எனபதனை மக்கள் புரிந்திருக்கிறார்கள். அப்படியானால், பனை கொங்கு மண்டலத்தில் பயன்பாட்டில் இருந்த ஒரு மரம் என்பதும், பனை சார்ந்த பயன்பாடுகள் குறிப்பிட்ட அளவில் உயிர்ப்புடன் இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

கங்கேயம் காளைகள் பொதுவாக வண்டியிழுக்க மற்றும் ஜல்லிக்கட்டிற்கு பெயர்போனவை. முரட்டுக்காளைகள்… அவைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வருகையில் கூட இரு பக்கமும் மூக்கணாங் கயிற்றினைப் பிடித்திருப்பதை நாம் காணலாம். பனை நார் கொண்டு செய்யப்பட்ட மூக்கணாங் கயிறு எவ்வகையில் மிருதுவாகவும் அதே வேளையில் உறுதியுடனும் இருந்திருக்கும் என்ற புரிதல் கொண்ட ஒரு காலகட்டம் இருந்திருக்கிறது. அதனை துழாவி எடுத்தால் கொங்கு மண்டலத்தை இணைக்கும் சரடுகள் கிடைப்பது உறுதி.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: [email protected]


Design a site like this with WordPress.com
தொடங்கவும்