Tuesday, June 21, 2022

இலங்கையில் மக்கள் எழுச்சிப் போராட்டம்; வெற்றிகளும், வரவிருக்கும் ஆபத்துகளும் ! - எம். ரிஷான் ஷெரீப்

 
Image

  இலங்கையானது தற்போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் நிதியுதவிகளிலேயே தங்கியிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி முழுமையாக அற்றுப் போய், பஞ்சமும் பட்டினியும் கோலோச்சியவாறு திவாலாகியுள்ள நாட்டில், அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து மக்களால் யோசித்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலைமை நீடிக்கும் எனவும், நாட்டில் பஞ்சம் இன்னும் தீவிரமடையும் என்றும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

    ஏற்கெனவே மின்சாரத் தடை காரணமாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் பல தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து ஸ்தாபனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் தமது தொழில்களை இழந்திருக்கிறார்கள். பட்டினியாலும், மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பொதுமக்கள் இவ்வாறு எல்லாப் புறங்களிலிருந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காக அரசாங்கமானது பொருட்களின் விலைகளை அதிகரிப்பதையும், அதிகபட்ச வரிகளை விதிப்பதையும், கட்டணங்களை அதிகமாக அறவிடுவதையும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பதானது மேலும் மேலும் அரசுக்கெதிராக மக்களைப் போராடத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது.

        இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவை அண்மித்துள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் பலரும் இந்தியாவுக்குத் தஞ்சம் கோரி புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். சிலர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள். இவ்வாறு தைரியமாகப் புறப்பட்டுச் செல்லும் ஒரு சிலரால் மாத்திரமே இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பத்திரமாகப் போய்ச் சேர முடிகிறது. பலரும் இடைவழியில் இலங்கை மற்றும் வெளிநாட்டுக் காவல்துறைகளால் கைது செய்யப்படுகிறார்கள். தாய்நாட்டில் உயிர் வாழ வேறு வழியற்ற நிலைமையில் இவ்வாறு உயிராபத்து மிக்க பயணத்தைத் தொடரத் துணிபவர்களைக் குற்றம் கூற முடியாது.

 
Image

   
கடந்த வாரமும் கூட இலங்கையில் எரிபொருட்களினதும், உணவுப் பொருட்களினதும் விலைவாசிகள் கணிசமான அளவு அதிகரித்திருக்கின்றன. வரிசைகளில் காத்திருந்த மக்கள் அவ்விடங்களிலேயே மரணித்து விழுந்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் மேலும் மேலும் விலைவாசிகள், வரிகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிப்படுவதற்கு எதிராகத்தான் நாடு முழுவதும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள். ரம்புக்கனை எனும் பிரதேசத்தில் அவ்வாறு நடைபெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது களமிறங்கிய காவல்துறை அவர்களைச் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மிகக் கொடூரமாகவும், குரூரமாகவும் மக்களை இவ்வாறு வேட்டையாடிக் கொண்டிருப்பதுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அரச வன்முறை எனப்படுவது இவ்வாறான பேரழிவு ஆயுதங்களால் நடத்தப்படுவது மாத்திரமல்ல. நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்தி, இலங்கை ரூபாயின் பெறுமதி அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருத்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டேயிருத்தல், பட்டினியாலும், மருந்துகளின்மையாலும் மக்கள் மரணிப்பதற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருத்தல், தினந்தோறும் பல மணித்தியாலங்கள் மின்சாரத்தைத் துண்டித்தல், சமையல் எரிவாயு, டீசல், பெற்றோல் போன்றவற்றின் தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமலிருத்தல் போன்ற குரூரமான, ஆயுதங்களற்ற வன்முறைகளையும் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மக்கள் மீது பிரயோகிக்கலாம் என்பதற்கு தற்போது இலங்கை ஒரு அத்தாட்சியாகவிருக்கிறது.

        அவ்வாறே, ஆயுதங்களாலான வன்முறைகளும் இலங்கையில் பகிரங்கமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கொழும்பின் தெருக்கள் அனைத்திலும், குறிப்பாக அலரி மாளிகை, பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றைச் சூழவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவசர காலச் சட்டம் விதிக்கப்பட்டு, நாடு முழுவதிலுமிருந்தும் அதிகளவான காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டு கொழும்பு நகரில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சாதாரணமாக மக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத அளவு உயரமான காவல் அரண்கள் தெருக்களின் மத்தியில் எழுந்துள்ளன.

 
Image

   
எனவே இலங்கையர்கள் மாத்திரமல்லாமல், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கும் வெளிநாட்டவர்களும் கூட தமது பணிநிமித்தமாக தெருவில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எவரையும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும் அனுமதி வழங்கப்பட்டுள்ள காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் ஆயுதந் தாங்கிய இராணுவ வாகனங்களோடு தெருக்களில் வலம் வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பல வெளிநாடுகள் இலங்கைக்கு பயணம் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளதோடு, பல வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் இந்தக் காலகட்டத்தில் இலங்கையிலுள்ள தமது பிரஜைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை விதித்திருக்கின்றன.

    பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு உயிராபத்துகள் உள்ள போதிலும், ஏற்கெனவே நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காரணத்தால்தான் அதற்குக் காரணமான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவையும், அரசியல்வாதிகளையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையிலும், அலரி மாளிகைக்கு முன்பும் நாடு முழுவதும் ஒன்றிணைந்து இரவு பகலாக மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் காரணமாக இலங்கை அரசியலில் தற்போது சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எரிபொருள், உணவு, மருந்து மற்றும் டாலர் தட்டுப்பாடுகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தேவையான பொருத்தமான தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை. என்றாலும், மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக, நாட்டை சரியான பாதையில் திருப்பி நீண்ட கால தீர்வுகளைக் கண்டறிய, மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடிய விதத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

        இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம், இலங்கை மக்கள், கடைசியில் தமது உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் பாரபட்சமின்றி ஒன்றிணைவதற்கான தைரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக சர்வ அதிகாரங்களும் படைத்த ஆட்சியொன்றை, ஒரு சில தினங்களிலேயே தம் முன்னே மண்டியிடச் செய்யும் அளவுக்கு பொதுமக்களின் அந்த ஒற்றுமை பலமடைந்திருக்கிறது. பொதுமக்களின் அந்த சாத்வீகமான போராட்டம் ஆனது, மூன்று தினங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த அமைச்சரவையையும் பதவி விலகச் செய்ய காரணமாக இருந்ததோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பதவியை ராஜினாமா செய்வதற்குக் காரணமாகவும் அமைந்தது. தேர்தல்களின் போதும், மக்களின் ஆர்ப்பாட்டங்களின் போதும் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நாட்டில் இது முக்கியமானதும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததுமான வெற்றிகளாகும்.

Image

    பொதுமக்கள் போராட்டத்தின் அந்த வெற்றிகளைக் காணச் சகிக்காமல் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார் மஹிந்த ராஜபக்ஷ. அந்த அண்மைய வன்முறைகளுக்குக் காரணமான மஹிந்த ராஜபக்‌ஷ மீதும், அவரது உத்தரவுகளை நிறைவேற்றிய அரசியல்வாதிகள் மீதும், காடையர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ராஜினாமா இலங்கை மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் ஒரு முக்கியமான வெற்றியென்றால், அவர் மீதான இந்தத் தடை மற்றுமொரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

    சீரற்ற காலநிலையில், உக்கிரமான வெயில் மற்றும் கடும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் ‘கோட்டா கோ (Gota Go)’ கிராமத்தில் இதுவரை கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களினதும், ஊடகவியலாளர்களினதும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு அதற்கான நீதி கேட்கும் போராட்டமும் வலுத்து வருகிறது. வரலாற்றில் முதற்தடவையாக தமிழர்களோடு, சிங்களவர்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் கடந்த மே மாதம் பதினெட்டாம் திகதி நடத்தியிருக்கிறார்கள்.

    வழமையாக இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும். அவற்றை நடத்துபவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கும். இப்போது கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்போது அரசாங்கத்தால் எதுவுமே செய்ய இயலாதுள்ளது. இதுவும் இந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் அடைந்துள்ள வெற்றிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று.
Image


    இவையனைத்தும் இலங்கை அரசியலில் பொதுமக்களின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள மிகப் பிரதானமான மாற்றங்களாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகான அரசியலில், அரசியல் கட்சிகள் மக்கள் வாக்குகளோடு பாராளுமன்றத்தின் ஊடாக அதிகாரத்திற்கு வந்த போதிலும், நாட்டில் ஜனநாயக அரசியல் செயற்படவேயில்லை. அரச மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் தமது சகாக்களோடு சேர்ந்து நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அவ்வாறே சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாத அரசியலானது, சிறுபான்மையினரை பாகுபடுத்தி அவர்களைத் தரம் குறைந்த குடிமக்களாக ஆக்கியுள்ளது. பல தசாப்தங்களாக தமிழர்கள் தமது உரிமைகளைக் கோரி ஜனநாயக ரீதியிலும், ஆயுதங்களைக் கொண்டும் நடத்திய போராட்டங்கள் குரூரமாக நசுக்கப்பட்டதோடு, அவர்களது பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்ததை விடவும், இன்று சிறுபான்மையினரின் உரிமைகள் மிக மோசமான முறையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்த போதிலும் சிங்கள தேசியவாத அரசியலும், அதன் உதவியாளர்களும் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பற்றி சிறிதளவும் சிந்திக்கவேயில்லை.

    தற்போதைய நெருக்கடி நிலைமையானது பொதுமக்களிடையே இவை தொடர்பான சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, தற்போது மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பொதுமக்களும் சகல இனத்தவர்களையும் ஒன்றுபோலவே கருதக் கூடிய விதத்தில் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று தமது போராட்டங்களின் மூலமாக தைரியமாக கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

 
Image

   
சர்வாதிகாரம் மீதும், இலங்கையைத் தீவிரவாதத்திலிருந்தும், யுத்தங்களிலிருந்தும் மீட்டதாக மார் தட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேக்கள் எனும் அரசியல் குடும்பத்தின் மீதும் பொதுமக்களுக்கு இருந்த பேரச்சத்தை கடந்த பல மாதங்களாக இலங்கையில் உக்கிரமடைந்துள்ள நிதி நெருக்கடியானது முழுவதுமாக நீக்கியிருக்கிறது. பயம் நீங்கிய பொதுமக்கள் புதிய அரசியல் உத்வேகத்தையும், வலிமையையும் தற்போது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகத் திரண்டெழுந்து பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அத்திவாரத்தை அசைத்துப் பார்க்க அவர்களால் முடிந்திருக்கிறது.

         இவ்வாறாக அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாகவும், விழுப்புணர்வோடுமுள்ள குடிமக்களையே ஜனநாயகத்தின் நிஜ ஆதாரமாகவும், உரிமையாளர்களாவும் குறிப்பிடலாம். உண்மையில் தமது வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு ஆட்சியாளர்களை அனுப்பும் அவர்கள் வெறும் வாக்காளர்கள் மாத்திரமல்ல. வாக்களிப்பதோடு, நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் உரிமையையும் அவர்கள் இவ்வாறாகக் கோருகிறார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது கடமையைச் செய்யத் தவறும்போது தைரியமாகவும், நேரடியாகவும் அதனைத் தட்டிக் கேட்டு, பதவி விலகுமாறு அவர்களைக் கோருகிறார்கள்.

        பொதுமக்களின் கோரிக்கைகள் வலுத்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள போதிலும், தற்போது இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையின் நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்படக் கூடும் என்று கருத முடியாது. ஏற்கெனவே பிரதமராக ஐந்து தடவைகள் பதவி வகித்துத் தோற்ற அனுபவத்தைக் கொண்டுள்ள ரணிலின் இயலாமையினால், நாட்டில் பல பிரச்சினைகள் உக்கிரமானதை கடந்த கால அரசியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. ராஜபக்‌ஷேக்களின் நெருங்கிய நண்பரான அவர், ராஜபக்‌ஷேக்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளான வன்முறைகளுக்குத் தூண்டியமை, ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள், போர்க் குற்றங்கள் போன்றவை மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலிருந்து ராஜபக்‌ஷேக்களைப் பாதுகாக்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

 
Image

   
கடந்த வாரங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவால் உசுப்பி விடப்பட்ட காடையர்கள் கூட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களை மிகக் கொடூரமாகத் தாக்கியது. அதனால், உந்தப்பட்ட பொதுமக்கள் ராஜபக்‌ஷேக்களின் பூர்வீக இல்லம், அவர்களது பெற்றோரின் கல்லறை ஆகியவை உட்பட ஏனைய ஊழல் அரசியல்வாதிகளினதும் வீடுகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள். சிலவற்றுக்குத் தீ வைத்தார்கள். இவ்வாறாக அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு ஏற்படுத்திய சேதங்கள் மூலமாக, ‘பொதுமக்கள் கொந்தளித்தால் என்னவாகும்?’ என்பதை அரசுக்குத் தெளிவுபடுத்தினார்கள். பொதுமக்கள் மூலமாக இவ்வளவு பின்னடைவுகளை அரசாங்கம் சந்தித்திருக்கும் நிலையிலும் அது இப்போதுவரை மௌனமாகவே இருப்பதுதான் யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.

        கடத்தல்களுக்கும், கொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பெயர் போன ராஜபக்‌ஷேக்கள், பொதுமக்களால் தமது பூர்வீக சொத்துகளுக்கும், பெற்றோரின் கல்லறைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் தம்மால் வெளியே இறங்கி நடமாட முடியாமை போன்ற அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு வெறுமனே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு ராஜ குடும்பமாக இலங்கையில் தமது ஆதிக்கத்தையும், சர்வாதிகாரத்தையும் நிலைநாட்டிய அவர்கள் பதவி விலக நேரும்போது அதற்குக் காரணமான பொதுமக்களைப் பழிவாங்காமல் வெறுமனே பதவி விலகிச் செல்வார்கள் என்றும் கருத முடியாது. அவர்கள் தமது கேவலமான நிலைக்குக் காரணமான பொதுமக்களுக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டும் என்ற திட்டங்களை இப்போதும் ஒளிந்திருந்தவாறு தீட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். அந்தத் திட்டங்களின் மூலம் நாட்டை மேலும் அதல பாதாளத்தில் வேறு எவருமே மீட்டெடுக்க முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளுவார்கள்.

    அதுவரையிலான ராஜபக்‌ஷேக்களின் இந்தக் கள்ள மௌனமானது, வெடித்துக் கிளம்பக் காத்திருக்கும் எரிமலைக்கு ஒப்பானது. அது எந்தளவுதான் உக்கிரமானதாக பொதுமக்களுக்கு ஆபத்துகளை விளைவித்தாலும் கூட, குரூரத்தையும், வன்முறைகளையும் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷ குடும்பம் மொத்தமாகப் பதவி விலகி, நாட்டில் அவர்கள் கொள்ளையடித்த மக்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்வரை பொதுமக்கள் போராடிக் கொண்டேதான் இருப்பார்கள். நாட்டின் எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக தாம் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் போராட்டம் நிச்சயமாக ஒருநாள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையே பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மத்தியிலும் பொதுமக்களைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறது.

தொடர்புக்கு – [email protected]

நன்றி - உயிர்மை மாத இதழ் - ஜூன், 2022

Image 
Image





Monday, June 6, 2022

தொடரும் இலங்கையின் நெருக்கடி நிலைமை; கண்காணிக்கப்பட வேண்டிய வெளிநாட்டு உதவிகள் - எம். ரிஷான் ஷெரீப்

 
Image

    இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. எரிபொருட்களுக்காகவும், உணவுகளுக்காகவும், மருந்துகளுக்காகவும் பொதுமக்கள் நாளாந்தம் நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்களாகக் காத்திருக்க வேண்டிய நிலைமை தொடர்ந்தும் நீடித்திருக்கிறது.

    சிறிய தனித்த தீவான இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பெருங்கடலில் பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகொன்றாக இலங்கை தத்தளித்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.

    இந் நிலையில் ஒரு ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காத வரை இலங்கைக்கு தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால் வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமலிருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. பதவியேற்றதுமே அவர், நாட்டின் செலவுகளுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்கள் பணத்தை அச்சிட வேண்டும் என்றும் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பண வீக்கமானது நாற்பது சதவீதத்தைத் தாண்டும் என்றும் வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை எதிர்நோக்க மக்கள் தயாராக வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாட்டில் வறுமை நிலையும், வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

Image

  இலங்கையில் விவசாயத் துறையும் உரத் தட்டுப்பாட்டால் பாரிய நெருக்கடியைச் சந்தித்திருப்பதன் காரணத்தால் கடந்த மாதங்களிலும், இந்த மாதத்திலும் எவ்வித விதைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, வரும் மாதங்களில் மக்கள் அனைவரும் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டி வரும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்திருக்கிறார். நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு கூற வேண்டிய, முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் இவர்கள் அனைவரும் இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைக் கூறி, மக்களைக் கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயங்கள் அனைத்தும் மக்களைப் பேரச்சத்தில் தள்ளியுள்ளன.

    முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்த போது அவர் எவ்வாறு பண வீக்கத்துக்குக் காரணமாக, தொடர்ச்சியாக பணத்தை அச்சிட்டுக் கொண்டிருந்தாரோ அதே வழியில்தான் தற்போதைய பிரதமரும், நிதியமைச்சருமான ரணிலின் பாதையும் இருக்கிறது. எனவே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பிறகு பொருளாதாரத்திலும், தமது வாழ்க்கையிலும் ஏதேனும் முன்னேற்றம் உருவாகலாம் என்று மக்களிடம் காணப்பட்ட சிறிய எதிர்பார்ப்பும் கூட முழுவதுமாக தற்போது பொய்த்துப் போயுள்ளது.

    இவ்வாறான நெருக்கடி நிலைமையில், இந்திய மக்களால் சேகரிக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்துகள் உள்ளிட்ட 2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்தன. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மக்களிடம் பகிர்ந்தளிக்குமாறு கோரி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் அவற்றை மொத்தமாகக் கையளித்துள்ளார். ஏற்கெனவே 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருளாதார உதவி உள்ளிட்ட நிறைய உதவிகளை இந்தியா செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலைமையில் இந்தியாவினதும், ஜப்பானினதும் இந்த உதவிகள் மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கின்றன.

Image


    என்றாலும், இந்த உதவிகள் உரிய விதத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச் சேருகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில், இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பெரும்பாலான பொதுமக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. சுனாமி, கொரோனா சமயங்களிலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வழங்கப்பட்ட நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. வழமையாக அமைச்சர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இவ்வாறான உதவிகளில் ஒரு சிலவற்றைப் பகிர்ந்தளித்து, புகைப்படங்களெடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்து மொத்த உதவிகளையும் பகிர்ந்தளித்து விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு அறிவிக்கிறார்கள். ஆனால், உண்மையில் உதவி தேவைப்படும் எளிய மக்களுக்கு அந்த உதவிகள் போய்ச் சேருவதில்லை.

    ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்திய உதவித் திட்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 11000 மெட்ரிக் டன் அரிசிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த மாதம் நடுப்பகுதியில் பொதுமக்கள் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தேடுதல்களை நடத்திய போது பல நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள், உர மூட்டைகள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை அந்த வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

    அடுத்த முக்கியமான விடயம், வழமையாக கொழும்பில் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும் இவ்வாறான உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம். தலைநகரமான கொழும்பிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் வறிய மற்றும் கஷ்டப் பிரதேசங்கள் நெடுங்காலமாக கவனத்திலேயே கொள்ளப்படாத பல பிரச்சினைகளாலும், நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில், அவற்றில் காணப்படும் பஞ்சமும், பட்டினியும், மருந்துத் தட்டுப்பாடுகளும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. கணக்கில் வராத அளவுக்கு மந்தபோஷணம், பட்டினி மற்றும் மருந்தின்மையால் ஏற்படும் மரணங்களும் அப் பகுதிகளில் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    எனவே உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாமல் தாம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் பகிரப்படுகின்றனவா என்பதை, உதவியளித்த நாடுகள் கண்காணிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தமக்கு ஏதேனும் உதவிகள் செய்யும் என்ற மக்கள் நம்பிக்கை முழுமையாக அற்றுப் போயுள்ள நிலையில், மக்களின் இறுதி எதிர்பார்ப்பாக தற்போதைக்கு இவ்வாறான வெளிநாட்டு உதவிகளே உள்ளன. அவை ஒழுங்காகவும், நீதமான விதத்திலும் உரிய மக்களுக்குப் போய்ச் சேருவதிலேயே நிதியுதவிகளை அளித்த நாடுகள் குறித்த அபிமானமும், நல்லபிப்ராயமும் மக்கள் மத்தியில் தங்கியிருக்கிறது.

____________________________________________________

[email protected]

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 01.06.2022


Image




Wednesday, June 1, 2022

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

 
Image

   
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட 'பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு' எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். 

    இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

    இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

    ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

    யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமைக்குக் கொடுத்த அடியாகத்தான் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதென அந்த நபர் கூறுகிறார். இதற்கு சில அரசியல்வாதிகளும் கூட அனுமதியளித்திருக்கின்றனர். அதை நியாயப்படுத்தும் விதமாக, விடுதலைப் புலி இயக்கத் தீவிரவாதிகள் இந் நூலகத்தில் வைத்துத்தான் ஒருவரையொருவர் சந்தித்து தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதாகவும், அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களை அழித்தொழித்து விட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்தோடு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இறுதி பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸார் இருவரை தீவிரவாதிகள் கொலை செய்திருந்ததால் இந்தக் குழுவினர் அமைதியற்று இருந்திருக்கின்றனர்.

    இந்த நபர் கூறும் விதத்தில், அவரும், அவருடனிருந்த குழுவினரும் முதலில் சாராய போத்தலொன்றில் பெற்றோலும், மணலும் நிரப்பி, புடைவைத் துண்டால் மூடி அதனைக் கொளுத்தி விட்டு நூலகத்தை நோக்கி எறிந்திருக்கின்றனர். அந்த போத்தலுக்குள் சதுர வடிவில் வெட்டப்பட்ட இறப்பர் செருப்பின் துண்டொன்றும் இருந்ததனால் பலமாகத் தீ பற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே குழுவிலிருந்த ஒருவர் 'நெருப்பு நெருப்பு' எனக் கத்தியிருக்கிறார். அத்தோடு முன்பே திட்டமிட்டிருந்தவாறு ஒரு குழுவினர் தீயை அணைக்க தண்ணீரை எரிவதைப் போல பெற்றோலையும், மண்ணெண்ணையையும் கொண்டிருந்த வாளிகளை தீயின் மீது எறிந்திருக்கின்றனர். அதனால் தீயானது கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது. நூலகத்திலிருந்த புத்தகங்களிலும் தீப்பிடித்துக் கொண்ட காரணத்தால் சொற்ப நேரத்துக்குள் யாழ்ப்பாண நூலகம் சாம்பலாகி விட்டிருக்கிறது. இருண்ட வானம் சிவந்து போயிருந்தது.

    தீ, அதிக வெப்பத்தையும் கக்கிக் கொண்டிருந்ததனால், தீ வைத்தவர்கள் சற்றுத் தூரமாகச் சென்று இக் காட்சியைக் கண்டு களித்தவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், நூலகத்துக்கு அருகில் ஓடி வந்து தமது அக ஆன்மா எரிந்து கொண்டிருப்பதையும், அதற்குக் காரணமானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்புவதையும் கண்டிருக்கிறார்கள். இந்த வாக்குமூலத்தைக் கொடுத்தவர் கூறுவதற்கேற்ப தீ வைப்பதில் பங்குகொண்ட சிலர் சாராய போத்தல்களைக் கையில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பருகியவாறு இன ரீதியான கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள். மது போதையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு சவால் விடுத்திருக்கின்றனர். பின்னர் போலிஸார் வந்து மிகவும் மென்மையாக அக் காடையர்களை அங்கிருந்து நீங்கிச் செல்லப் பணித்திருக்கின்றனர்.

    மிகவும் அரிய கைப்பிரதிகளைக் கூடக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டதைக் குறித்து ‘Cultural Genocide’ அதாவது ‘கலாசார இனப்படுகொலை’ என பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாண நூலத்தை எரிக்க இராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. காரணம் இராணுவ அதிகாரிகளான ஜெனரல் வஜிர விஜேரத்ன, கர்னல் வைத்தியர் ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகள் கூட யாழ்ப்பாண நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்ததோடு, அவர்கள் கூட இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்தக் குற்றச் செயலைச் செய்ய காடையர்களைத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள்தான் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

    எவ்வாறாயினும், யாழ்ப்பாண நூலகத்தை எரித்த காடையர் குழுவிலிருந்த இந்த நபர் பின்னர் அதைக் குறித்து வருந்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஒரே பிள்ளையும் கூட பதினாறு வயதாகும் முன்பு இறந்து விட்டிருந்தது. அதனால் வாழ்க்கை குறித்து வெறுப்படைந்திருந்த அவர் மதுபானத்திற்கு அடிமையாகியிருந்தார். அவரை நான் இறுதியாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தேன். இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை நான் அறியேன்.

- வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -