நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 30, 2022

சுக்குமி..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

// அது சரி.. மெனெக்கிட - எந்த மொழி இது?.. //

நேற்று எங்கள் பிளாக் கேள்வி பதில் பகுதியின் கருத்துரையில்
அன்பின் நெல்லை அவர்கள் கேட்டிருந்த அந்தக் கேள்விக்கு என்னால் ஆன விளக்கம்..

Image

" வேல மெனெக்கிட -  என்பது தமிழ் தான்!.. தமிழே தான்!.. "

" நாம் தான் தமிழை அர்த்தம் பொருத்தமாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!.. "

" அது எப்படி என்றால் -
வேலை, வினை கெட!..
அதாவது -
நான் செய்ய வேண்டிய வேலையும் கெட்டது.. என் பழைய வினையும் கெட்டது.. "

" எப்படி?.. "

" இவனுக்கு இந்த வேலையை செய்யப் போனதால் எனது வேலை கெட்டுப் போயிற்று.. இவனுக்கு இந்த மாதிரி ஒரு வேலையை ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்து கொடுக்க மறுத்ததால் அப்போது ஏற்பட்ட பாவ வினையும் இத்தோடு கெட்டுப் (விட்டுப்) போயிற்று.. 
- என்பதாக அர்த்தம்.. "

" அட!... "

" எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்.. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் -  என்ற கதை தான்!.. "

" இது வேறயா?.. "

" ஏடும் எழுத்தாணியும் இருந்த அந்தக் காலத்தில் எழுதுவதற்கு பதம் ஆன ஓலை வேண்டும்.. "

" பச்சை ஓலையும் ஆகாது..
சருகான ஓலையும் ஆகாது..
பதம் ஆன ஓலையும் விலை கொடுத்தால் தான் கிடைத்திருக்கும்.. இப்படியான சூழலில் அரைகுறைப் பேர்வழி எழுதுகின்றேன் என்று ஓலையில் கிறுக்கிக் கிழித்து வைத்தால்!.. அது வேறெதற்கும் ஆகாது.. "

" இதேபோல் எழுத்தறிந்து வாசிக்கத் தெரியாத ஒருவன் ஏற்ற இறக்கங்களுடன் பாடுவேன்!.. என்று சுர வரிசைக்குள் கை வைத்தால்!.. "

"ஆகா.. அருமை!.. "

"இதற்குத்தானே சொல்லி வைத்தார்கள் - 

சுக்குமி ,
ளகுதி ,
ப்பிலி!.. - என்று!.."

"நீங்களும் உங்கள் தமிழும்.. ஆளை விடுங்கப்பா!.. "
***

செவ்வாய், ஜூன் 28, 2022

பாமாலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று செவ்வாய்க் கிழமை

ஸ்ரீ தையல் நாயகி அன்னைக்கொரு
 அன்பின் பாமாலை
***
Image

இப்பாமாலை  பிரபல ஜோதிடரும் கவிஞருமான உயர்திரு சிவல்புரி சிங்காரம் அவர்களது கவிதையினை ஒட்டி எழுதப் பெற்றது..
***
முன்னவன் மூத்தவன்
மூஷிக வாகனன்
தன்னுடன் கொஞ்சும் மயிலே
தையல் நல்லாள் எனும்
தாயுனைத் தஞ்சமென்
றடியேனும் தேடி வந்தேன்..

தாயென நின்றவள்
தமிழென வந்தவள்
தயவினை நாடி வந்தேன்
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 1

நடைகொண்ட விடையோடு
நடங்காணும் நாயகன் 
இடங்கொண்ட தேவி போற்றி
தண்டமிழ்க் கந்தனைக்
தண்மலர்க்  கடம்பனைக்
கொண்டாடும் குமரி போற்றி

அண்டத்தில் அணுவாகி
அணுவுக்குள் ஆடிடும்
ஆதியே போற்றி போற்றி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 2

காண்கின்ற காட்சியில்
கண்ணொளி ஆகின்ற
கருணையே போற்றி போற்றி
கைகால்கள் நழுவாமல்
கண்கொண்டு வாழ்தற்கு
காமாக்ஷி போற்றி போற்றி

கண்ஆயிரம் என்று
புண்ஆயிரம் கொண்ட
புன்மையைத் தீர்த்த தேவி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 3

அருணனின் பிள்ளைகள்
ஐயனின் அடிதொழ
அருள்முகம் காட்டி நின்றாய்
அன்றரக்கன் செய்த பிழை
ஆகாதது என்று கழுகரசன் 
தோளில் நின்றாய்

ரகுராமன் வரும் வரையில்
புள்ளரசன் இன்னுயிர் 
அன்னையே காத்திருந்தாய்
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 4

Image

தீமைக்கும் தீயர்க்கும்
திருமுகம் காட்டியே
திருவருள் ஊட்டாதவள்
திருவடி தொழுகின்ற
தூயோர்க்கு என்றுமே
நல்வழி மாற்றாதவள்

திண் என்று போர் கொண்டு
தீயவர் முடி வென்று
பழிபாவம் தீர்ப்பாளவள்
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 5

சொல்லுக்குள் சொல்லான
சுந்தரி சௌந்தரி 
சூலினி போற்றி போற்றி
சூழ்வினை நீக்கிட
வாராஹி என்றுவரும்
வளர்சிவை போற்றி போற்றி

மகிஷனைத் தீர்த்திட்ட
மா துர்க்கை மங்கலை ஈஸ்வரி 
போற்றி போற்றி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 6

Image

பேராயிரம் கொண்ட
பெருமான் எழுந்தனன்
பிணிகளைத் தீர்க்க என்று
பிரியாத தேவியவள் 
உடனாகி வருகவே பிணி
தீர்க்கும் தைலம் கொண்டு

நானுண்டு என்மகனே
அஞ்சாதே நீ என்று 
அன்புடன் சொல்லி வருக
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் வருக வருக.. 7

சித்தாமிர்தக் குளம்அதன்
அருகில் நின்வாசல்  
என்றுமே மறந்ததில்லை
ஆண்டுகள் பலசென்று
சந்நிதிக்கு வந்தாலும்
அன்பு செய்ய மறந்ததில்லை

தடம் மாறிச் சென்றதில்லை
தடுமாறுகின்றேனே
தாய் உள்ளம் காண வில்லையோ
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 8

அறியாமல் செய்தபிழை
அத்தனையும் அன்னையே
அன்புடன் நீ பொறுப்பாய்
அறிந்தெனது உளம் செய்த
ஒருநன்மை இருந்தாலேஅது
கொண்டு அன்பு தருக..

பிள்ளைமனம் தெரியாத
அன்னையென் றெவருமே
இவ்வுலகில் இருந்ததில்லை
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 9

புள்ளிருக்கு வேளூரில்
புகழ்கொண்ட புண்ணியமே
புத்தொளி கொண்டு வருக
முள்ளிருக்கும் வழிதன்னில்
முன்னெடுத்து வைக்காமல்
முன்நின்று காக்க வருக

உற்றதுணை நீயின்றி
மற்றவர் யாருண்டு
உதவிட உவந்து வருக
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 10

பகை வென்று பிணி வென்று 
முடிகொண்ட நாயகி
பைரவி பரமேஸ்வரி
கால்களில் தோள்களில்
பலம் தந்து நலம் தருக
சங்கரி ஜகதீஸ்வரி

ஆனந்த வல்லியாய் அருள் 
கொண்டு வரவேணும்
அன்னையே புவனேஸ்வரி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 11

Image

கற்பகவல்லியே என்துயர் 
தீர்க்கவே காற்றாகி 
வருக வருக
கால் கொண்டு எழுந்திட
காருண்ய வல்லியே
ஊற்றாகி வருக வருக

தஞ்சையில் உன்செல்வன்
தமிழ் கொண்டு பாடிடும்
கவிகேட்க வருக வருக
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக..12

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
***

ஞாயிறு, ஜூன் 26, 2022

திரு ஆதனூர்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சென்ற மாதம் (28/5) கும்பகோணத்திற்கு அருகில் கோயில் திருவிழாவில் இருந்தபோது கிடைத்த நேரத்தில் அருகிருக்கும் ஆதனூர் திவ்யதேச தரிசனம்..

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்குப் பின் மறுபடியும் காணக் கிடைத்திருக்கின்றது.. அப்போது  இருந்த நிலையில் இருந்து இத்திருக்கோயில் அகோபில மடத்தின் ஜீயர் அவர்களால் மீட்கப்பட்டு முழுமையாக திருப்பணி செய்யப் பட்டிருக்கின்றது..
இத் திருக்கோயில் வழிநடை வரிசையின்படி பதினோராவது திவ்ய தேசமாகும்..

திருத்தலம்
திரு ஆதனூர்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்
ஸ்ரீ ரங்கநாதன்

பார்க்கவி, ஸ்ரீரங்கநாயகி

தலவிருட்சம்
புன்னை, பாடலி 
தீர்த்தம் 
சூர்ய புஷ்கரணி 

பிரணவ விமானம் புஜங்க சயனம் 
கிழக்கு திருமுக மண்டலம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்..

Image

Image

Image

Image

Image
நன்றி கூகிள்

Image
நன்றி கூகிள்

Image
நன்றி கூகிள்

Image
நன்றி தினமலர்

Image
நன்றி கூகிள்

வழக்கம் போல சாபம் பெற்றான் தேவேந்திரன்.. இந்த முறை பிருகு முனிவரிடம் இருந்து..
கலங்கிக் கண்ணீர் சிந்தினான் இந்திரன்..
பிறகென்ன சாப விமோசனம் தான்.. இதற்காக பிருகு முனிவருக்கு மகளாகத் தோன்றினாள் மஹாலக்ஷ்மி..
மாலவன் அவளது கைத்தலம் பற்றிய வேளையில் இந்திரனுக்கு சாப விமோசனம்.. அது இத்தலத்தில் நிகழ்ந்தது..

தெய்வப்பசு காமதேனு தன் மகள் நந்தினியுடன் பெருமாளின் சயனத் திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்திருக்கின்றாள்..

ஈஸ்வரனின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலத்தைச் சாம்பலாக்கிட முனைந்த அக்னி தேவனை தோஷம் பற்றிக் கொண்டது.. அது நீங்கியது இத்தலத்தில்..

திருமங்கை ஆழ்வாருக்கு மரக்காலுடன் ஏடும் எழுத்தாணியும் ஏந்தி வந்து திருக்காட்சி நல்கிய பெருமாள்.. மரக்காலைத் தலைக்கு வைத்தபடி சயனத் திருக்கோலம்.. 

திரு அரங்கத்தில் கோயில் வேலை செய்தவர்களுக்கு அவரவர் வேலைக்கு ஏற்ப அளந்தளித்த மரக்கால் இது..

நேர்மையாய் பணி செய்தவர்களுக்குப் பொன்னாகக் கிடைக்க  மற்றவர்களுக்குக்
கிடைத்த விதத்தைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை..
இப்படி பெருமாள் அங்கே அளந்த படியால் பெரும் கலவரம் மூண்டது..

வேலைக் களவாணிகள் ஒன்று சேர்ந்து துரத்தினர்..
மண்ணளந்த மாயன் விலகி ஓடினான்..
ஆழ்வார் பெருமாளை விரட்டிப் பிடித்து யாரென்று கேட்டதற்கு  ஏட்டில் எழுதிக் காட்டி பெருமாள் அவரை ஆட்கொண்டார் என்பது ஐதீகம்..

பிரணவ விமானத்தின் கீழ் கருவறை.. திரு அரங்கத்தைப் போல பெரிய பெருமாள்.. ஸ்ரீ ரங்கநாதன் எனும் திருப்பெயரும் வழங்கப்படுகின்றது.. பெருமாளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. திகட்டாத பேரழகுப் பெட்டகம்.. 

கிழக்குத் திருமுகமாக புஜங்க சயனம்.. நாபிக் கமலத்தில் நான்முகன்.. பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி பூதேவி.. காமதேனு தன் மகள் நந்தினியுடன்..

அக்னி தேவன், பிருகு முனிவருடன் திருமங்கை ஆழ்வாரும் இருக்கின்றார்.. ஸ்வாமி சந்நிதிக்கு வலப்புறமாக ஸ்ரீ ரங்கநாயகி சந்நிதி கொண்டிருக்கின்றாள்.. பிருகு முனிவரின் மகள் என்பதால் பார்க்கவி என்ற திருப் பெயரும் வழங்கப்படுகின்றது..

சுவாமிமலையில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது ஆதனூர்.. 

இங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் மற்றொரு திவ்ய தேசமான புள்ளபூதங்குடி ஸ்ரீ வல்வில் இராமன் திருக்கோயில்..

கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியே செல்கின்றன..

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

இடரான ஆக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென்னார் அமலன் 
ஆதனூர் எந்தை யடியார்..
-: திருமங்கையாழ்வார் :-
*
ஆதிரங்கேஸ்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம் ப்ருகு, அக்னி, காமதேனு ப்யோ தத்தாபீதம் தயாந்திரம் விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் 
ஸுர்ய புஷ்கர்ணி திரே சேஷஸ்யோ பரி ஸாயிநம்..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

வெள்ளி, ஜூன் 24, 2022

நடந்தாய் வாழி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
Image

Image

Image

Image

Image

Image

வான் பொய்ப்பினும் தான் பொய்யா 
மலைத் தலைய கடற்காவிரி..
-: பட்டினப்பாலை :-

உழவர் ஓதை மதகு ஓதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!..
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன் 
தன் வளனே வாழி காவேரி!..
-: இளங்கோவடிகள் :-

தண்ணீரும் காவிரியே
-: கம்பர்:-

கலவ மயிலுங் குயிலும் 
பயிலுங் கடல்போற் காவேரி
(1/67) 
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ் (2/106)
-: திருஞானசம்பந்தர் :-

கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் (5/75)
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி (6/73)
-: அப்பர் ஸ்வாமிகள் :-

மாமணிக் கல்லை உந்தி 
வளம்பொ ழிந்திழி காவிரி  (7/48)
அழகார் திரைக் காவிரி (7/ 77)
-: சுந்தரர் :-

கங்கையிற் புனிதமாய காவிரி
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ஏழ்தலம் புகழ் காவேரியால் 
விளை சோழ மண்டலம்
-: அருணகிரிநாதர் :-

சென்ற 27/5 ல் கல்லணையில்  தண்ணீர் திறந்து விடப்பட்டது.. 

அப்போது
கும்பகோணத்திற்கு அருகில் இருந்தேன் .. காவிரியாற்றில் நீர் வந்தபோது இரவு நேரம்.. சென்று தரிசிப்பதற்கு இயலவில்லை.. இந்நிலையில் 3/6 அன்று திரு ஐயாற்றில் காவிரி தரிசனம்.. சந்தனம் சாற்றி மலர்கள் தூவி வணங்கி என் அன்பினைத் தெரிவித்துக் கொண்டேன்..

Image

Image

Image

Image

காவிரி காவிரி எனும் போது 
என் கண்கள் ஆனந்தக் கடலாட
என் தமிழும் அதனுடன் சேர்ந்தாட
அந்த செங்கரைப் பூக்கள் அசைந்தாட
அங்கு சேலொடு உளுவை புரண்டாட
சிறு குருவிகள் தாமும் மகிழ்ந்தாட
தென்னங்குலைகளும் 
வளைந்து கூத்தாட
தென்திசைக் காற்றும்
சேறுடை நாற்றும் 
சிலு சிலு என்றே பண்பாட
செக்கர் வானக் கதிரும் சேர்ந்தே 
செந்நெல் கதிருடன் நின்றாட
செழுமைகள் எங்கும் குழைந்தாட
கொண்டாடு மனமே
கொண்டாடு..

வாழிய காவிரி வாழியவே!..
***

வியாழன், ஜூன் 23, 2022

வாத்தலையம்மன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருவையாறு கும்பகோணம் சாலையில் 11 கி.மீ. தொலைவிலுள்ள ஆடுதுறை ஸ்ரீ குலை வணங்கு நாதர் கோயிலுக்கும் கூடலூர் ஸ்ரீ ஜகத்ரக்ஷகப் பெருமாள் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில்..

ஸ்ரீ ஜகத்ரக்ஷகப் பெருமாள் கோயிலின் கும்பாபிஷேகத்தன்று இக்கோயிலுக்கும் சென்றிருந்தேன்..

Image

தஞ்சை மாவட்டத்தில் காவிரி முதலான ஆறுகளில் இருந்து உள்ளூர் பாசனத்திற்கு என்று பிரியும் கால்வாய்களின் தலைப்பில் காவல் நாயகமாக அம்மன், முனீஸ்வரன், வீரன் ஆகியோர் கோயில் கொள்வதுண்டு..

கால்வாய் தலைப்பு என்பதே வாய்த்தலை - வாத்தலை என, மருவி நிற்கின்றது..

Image

ங்கே 
வாத்தலை அம்மன் எனும் பெயர்.. வாத்தலை நாச்சியார் என்றும் வழங்குவதுண்டு..

தொன்மையான திருமேனி.. லிங்க வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக விளங்குகின்றாள் அம்மன்.. 

Image

Image

Image

Image

சந்நிதியின் இருபுறமும் ஸ்ரீ கணபதியும் கந்தனும்..
கீழ்புறத்தில் ஸ்ரீ மதுரை வீரன்.. மேல்புறத்தில் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்..

Image

Image

வாத்தலை அம்மனின் கோயிலுக்குப் பின்புறம் காவிரி.. எதிரே பரந்து விரிந்த வயல்வெளி..

Image

காவிரியில் தண்ணீர் வந்து விட்டது.. கழனிகள் காத்திருக்கின்றன..

ஒவ்வொரு நாற்றும் அதன் கதிரும் வாத்தலை அம்மனுக்கே அர்ப்பணம்.. 

Image

இக்கழனியைக் கண்களைப் போல காப்பவளும் அவளே..

களத்தில் கதிர்களைக்கட்டு கட்டாகச்
சேர்ப்பவளும் அவளே..

வாத்தலையாள் வரவேணும்
வாரி எல்லாம் தரவேணும்
பூத்தலையாள் புதுநிலவாய்
பொன்னியுடன் வரவேணும்..

காவிரியாள் கருணையிலே
கழனியதில் நிறை வேணும்
முகத்தலையும் குறைநீக்கி
குளுமைதனைத் தரவேணும்..

காற்றலையும் திசையெல்லாம்
கை கூப்பித் தொழவேணும்
சேற்றினிலே நாற்றுகளில்
செழுங்கதிராய் வரவேணும்..

நோய்களையும் வினைகளையும்
நெருங்காமல் விரட்டி விட்டு
நோய் களையும் தாயே நீ
வளர்கலையாய் வரவேணும்..

களைகளையும் கழித்து விட்டு 
கதிர்முகமாய் வரவேணும்
கதிரவனும் கை கொடுத்து
கதிர் உழக்காய் தரவேணும்

சோறதனில் சுகம் அதுவாய்
நின் அருளே வரவேணும்..
பாரதனில் பசி தீர்க்கும்
பணி அதையே தரவேணும்!..
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

புதன், ஜூன் 22, 2022

நவநீத சேவை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த ஞாயிறு அன்று தஞ்சை மாநகரில் நிகழ்ந்த கருட சேவைக்குப் பின் திங்கட்கிழமை காலை நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்.. இவ்வைபவத்தில் பிரதான கோயில்களான மாமணிக் கோயில்களுடன்
ஏனைய சில கோயில்களும் சேர்ந்து பதினைந்து பல்லக்குகள் நகரில் எழுந்தருளின. 

அந்தக் காட்சிகள் இன்றைய பதிவில்..

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

நேற்று மாமணிக் கோயில்கள் மூன்றிலும் தீர்த்த வாரியுடன் கருட சேவைப் பெருவிழா இனிதே நிறைவுற்றது..

இந்நிலையில் 
கருட சேவையை நேரில் தரிசிக்க இயல வில்லையே - என்று நான் வருந்தியிருக்க, தாழியில் இருந்த வெண்ணெயில் கையளவுக்கு பிரசாதமாக அனுப்பி அருள் பொழிந்து இருக்கின்றார் பெருமாள்..

நெஞ்சம் நெகிழ்ந்திருக்கின்றேன்..
*
Image

கல்யாண வரதன் கவலையைத் தீர்க்க
வீரசிங்கம் வினைகளை விலக்க
மாமணிக் குன்றம் மங்கலம் அருள
நீலமேகம் நின்றருள் பொழிகவே!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***