நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 31, 2023

திருமழபாடி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ நந்தியம்பெருமான் 
திருக்கல்யாணம் 

Image

நேற்று திருமழபாடி தரிசனம்.. 

முன்னிரவு நேரத்தில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் ஸ்ரீ சுயம்பிரகாஷிணி தேவிக்கும் திருக்கல்யாண வைபவம்.. 

கடும் வெயிலிலும்
சின்னஞ்சிறு கிராமமான திருமழபாடி விழாக் கோலம் பூண்டிருந்தது..

முற்பகல் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு நான்கு மணியளவில் திரும்பிவிட்டோம்.. காலையில் இருந்தே ஜனத்திரள்..

தமிழகத்தின் வடக்கு, மேற்கு, தெற்கு - என, எல்லா மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த அன்பர்களைக் காண முடிந்தது.. 

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

திருக்கோயிலைச் சுற்றிலும் வீட்டுக்கு 
வீடு - இலையிட்டு விருந்து உபசரிப்பு.

 பந்தலில் நீரும் மோரும் பானகமும் 
வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்..

Image
மாப்பிள்ளை அழைப்பு

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

மாலை நான்கு மணிக்குப் பிறகு இங்கிருந்து செல்லும் பேருந்துகள் எல்லாம் தொலைவிலேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன..  

இரண்டரை கிமீ தூரம் நடப்பதற்கு சிரமம்.. கூட்டமும் நெரிசலும் ஒத்துக் கொள்வது இல்லை..

எனவே தான் முன்னதாகவே புறப்பட்டு விட்டோம்..

ஸ்ரீ நந்தியம்பெருமான் 
சுயம்பிரகாஷிணி தேவி 
நல்லருளால் 
அனைவரது வாழ்விலும் 
மங்கலங்கள் நிறையட்டும்..

ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய
வைத்யநாதர் அனைவரையும் காத்தருளட்டும்..

கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.. 7/24
(சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், மார்ச் 30, 2023

ஸ்ரீராமநவமி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 16
வியாழக்கிழமை
ஸ்ரீராமநவமி

Image

ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உவந்துறையும்
திவ்யக்ஷேத்திரமாகிய திருக்கண்ணபுரத்தில் 
ஸ்ரீ குலசேகராழ்வார் அருளிச்செய்தது..

 ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் காட்சி தருகின்ற க்ஷேத்திரம் இது..

பதிவில் 
வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர்..

 நன்றி :
நாலாயிர திவ்யப்ரபந்தம்

Image

மன்னு புகழ்க் கௌசலைதன்  மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் 
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே 
என்னுடைய இன்னமுதே  இராகவனே தாலேலோ.. 719

புண்டரிக மலரதன்மேல்  புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன்  உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர்தம் மனம் வழங்கும்  கணபுரத்தென் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய்  இராகவனே தாலேலோ.. 720

Image

கொங்கு மலி கருங்குழலாள்  கௌசலைதன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ்ச்சனகன்  திரு மருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே  இராகவனே தாலேலோ.. 721

தாமரை மேல் அயனவனைப்  படைத்தவனே தயரதன்தன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்- 
காமரங்கள் இசைபாடும்  கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலை வலவா  ராகவனே தாலேலோ.. 722

Image

பாராளும் படர் செல்வம்  பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு  அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா  திருக் கண்ணபுரத்து அரசே
தாராரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ.. 723

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே  அயோத்தி நகர்க் கதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும்  கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ.. 724

Image

ஆலின் இலைப் பாலகனாய்  அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு  இளைய வானரத்துக்கு அளித்தவனே 
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே  அயோத்திமனே தாலேலோ.. 725

Image

மலையதனால் அணை கட்டி  மதில் இலங்கை அழித்தவனே
அலை கடலைக் கடைந்து  அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வலவர்தாம் வாழும்  கணபுரத்தென் கருமணியே
சிலை வலவா சேவகனே  சீராமா தாலேலோ.. 726

Image

தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால்  மதில் இலங்கை யழித்தவனே
களை கழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ.. 727

தேவரையும் அசுரரையும்  திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்தடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நன்னதி பாயும்  கணபுரத்தென் கருமணியே
ஏவரி வெஞ்சிலை வலவா  இராகவனே தாலேலோ.. 728

Image

கன்னி நன் மாமதில் புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த  தமிழ்மாலை
கொன்னவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே.. 729

ஸ்ரீராம் ஜெய்ராம்
ஜெய் ஜெய் ராம்
***

புதன், மார்ச் 29, 2023

பீட்ரூட்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
 புதன் கிழமை

இணையத்தில் இருந்து செய்தித் தொகுப்பு..
படங்கள் : விக்கி
 நன்றி

Image

பீட்ரூட்..

இதுவும் கேரட்டைப் போல வேரடிக் கிழங்கு வகையாகும்..

இனிப்புச் சுவை உடைய இதனை அக்காரக் கிழங்கு எனவும் நிறத்தைக் கொண்டு செங்கிழங்கு எனவும் சொல்கின்றது விக்கி..

பீட்ரூட்டில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை  நிறைந்துள்ளன.

பீட்ரூட் இரத்தத்தை சுத்தம் செய்து  இரத்த சோகையைப் போக்குவதுடன் பற்பல நன்மைகளையும்  வழங்குகின்றது.

உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும்  பார்வை திறனை அதிகரிக்கிறது.

Image

இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கின்றது..

பீட்ரூட் சாறு அருந்துவதால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்தமாகின்றன..

ஆகவே பலருக்கும் இது ஏற்றதாக இருக்கின்றது..

ஆயினும், 
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு பீட்ரூட்  ஏற்றதா.. இல்லையா ? என்பதில் குழப்பம். 

Image

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு பீட்ரூட் நல்லது என்றே பற்பல தரவுகளிலும் காணப்படுகின்றது..

இதில் இனிப்புச்சுவை இருந்தாலும், சர்க்கரை குறைபாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை  சீராக்குகின்றது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், இது, ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.  உடலுக்கு சக்தியைத் தருகின்றது. இதனால் உடலில் பலவீனம் ஏற்படாது. 

பீட்ரூட்டை கழுவி விட்டு துண்டுகளாக்கிச்  சாப்பிடுவதால், அல்லது அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் உணவுக்கு முன் பீட்ரூட்டைத் துருவி உண்ணலாம்.. . இதனால் இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். 

மேலும்,
சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்குவதற்கும்   பீட்ரூட் சாறு சிறந்தது.. 

சாப்பாட்டிற்கு முன் பீட்ரூட் சாறு அருந்துவதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கின்றது, சர்க்கரையின் குறைபாடும் நீங்குகின்றது. இது உணவை ஜீரணிக்கும் ஆற்றலை தந்து, செரிமான மண்டலத்தைப் பலப்படுத்துகின்றது..

சர்க்கரை குறைபாட்டினால், பலருக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சிறுநீரக கோளாறு போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன..

Image

இத்தகைய சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனை சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை குறைவினால் ஏற்படும் மற்ற கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

எனவே, பீட்ரூட்டை  அளவு அறிந்து பயன்படுத்துதல் நல்லது.. 

 நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

செவ்வாய், மார்ச் 28, 2023

கேரட்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 14
செவ்வாய்க்கிழமை

இணையத்தில் இருந்து 
செய்தித் தொகுப்பு..
படங்கள் : விக்கி
 நன்றி

Image

கேரட்..

வேரடிக் கிழங்காக உயிர்ச் சத்துக்களை உள்ளடக்கி வளர்கின்ற தாவரம்..

மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறியப்பட்டு நாளடைவில் எங்கும் பரவியது..

இதில் பீட்டா காரோட்டீன்  மிகுந்து உள்ளது.. இதுவே உடலில்  உயிர்ச் சத்து வைட்டமின் A யாக மாற்றப்படுகிறது. இதன் சாறு  உடல் நலத்திற்கு ஏற்றது.. 

Image

கேரட் கண்பார்வையை மேம்படுத்துவதுடன் புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாகவும் இருக்கின்றது.. 

கேரட்டில்
அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. 

தினமும்  கேரட் சாறு அருந்துவதால் சருமம் பொலிவாகின்றது..

ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படுகின்றது... 

Image

இதிலுள்ள நார்ச்சத்துக்கள்  பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது..

Image

கேரட் சாறு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது..  இதிலுள்ள வைட்டமின்களும் மினரல்களும் பல நன்மைகளைச் செய்கின்றன..

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை  வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு உதவுகின்றன.

Image

கேரட் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முறைப்படுத்துவதிலும் அதிகப்படியான ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

கேரட் குறைந்த அளவு கலோரியும் குறைவான சர்க்கரை அளவும் கொண்டிருக்கிறது. 

இதனால் நீரிழிவு பிரச்னை குறைவதற்கும் பார்வைத் திறன் மேம்படுவதற்கும் உணவில்  கேரட் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Image

கேரட்டில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.

அதோடு தைராய்டு வராமல் தடுக்கிறது.. கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க கேரட் உதவியாக இருக்கிறது. 

அதனால் கேரட்டை அளவறிந்து அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

திங்கள், மார்ச் 27, 2023

வெண்டைக்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
புதன் கிழமை

இணையத்தில் இருந்து
செய்தித் தொகுப்பு
படங்களுக்கு நன்றி: விக்கி..

Image

வெண்டை..

நல்ல பச்சை நிறமான  இளஞ்செடி..
 முழுவதும் சொரசொரப்பான பூஞ்சுனைகள் உடையது..

எத்தியோப்பியாவின் மேட்டுப் பகுதியே இதன் தாயகம் 
என்று அறியப்படுகின்றது..

ஆனாலும் நமது நாட்டிற்கு பழகி விட்ட ஒன்றாக இருக்கின்றது வெண்டை..

ஆடிப் பட்டத்தில் விதைக்கப்பட்ட வெண்டை இருபத்தைந்து நாட்களில் பூத்து விடுகின்றது..
அடுத்த இருபது நாட்களில் காய் பறிக்கலாம்.. 

வருடம் முழுதும் விளையக் கூடியது என்றாலும் விளைச்சலைப் பொறுத்தே சந்தைக்கு வருகின்றது..

பொதுவாக
கூம்பிய வடிவத்தில்  ஐந்து பட்டைகளை உடையது வெண்டைக்காய்.. அதிகபட்சமாக ஐந்து அங்குல நீளம் உடையது..  எட்டு பட்டைகளுடன் கூடிய வெண்டை இனங்களும் இருக்கின்றன..

Image

Image

வெண்டைக்காயை குறுக்காக நறுக்கினால் 
ஐங்கோணத்துடன் வெள்ளை நிற விதை முத்துக்களைப் பார்க்கலாம்.. ஐங்கோணம் பஞ்சாட்சரம்..  ஞானத்தின் அடையாளம்.. அறு கோணமும் அப்படியே..

பிரம்ம லோகத்தில் நான் முகனுடன் வீற்றிருக்கும் 
ஸ்ரீ சரஸ்வதியை அவளது பீஜ மந்திரங்கள் இந்த வடிவத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு..

Image

நமது நாட்டில்  வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற  நம்பிக்கை இதன் அடிப்படையில் தான்..

வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற  நம்பிக்கை  உண்மை தான் என்பதை இப்போது ஏற்றுக் கொள்கின்றார்கள்..

பிஞ்சு வெண்டைக் காய்களை அப்படியே சாப்பிடுவது தனி சுகம்.. வெண்டையை பலவிதமாக சமைத்தும் சாப்பிடலாம்.. 

நமது உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.  தினமும்  சில வகையான காய்களை  உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்மைகள் அதிகம். அப்படி அவசியமானவற்றுள்  வெண்டைக்காயும் ஒன்று..

மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உறுதுணை வெண்டைக்காய்..

குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால்  மூளையின் செயல் திறன் அதிகரித்து ஞாபக சக்தி பெருகுகின்றது.

ஞாபக சக்தி பெருகுவதால் கல்வியில் சிறப்பிடம் தானே!..

Image

வெண்டைக்காயினால்  ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதால்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு   குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

Image

எனவே வாரத்திற்கு  இரண்டு  மூன்று முறை வெண்டைக்காய் உண்பதை வழக்கமாகக் கொள்வது நல்லது

உடலில் தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை  வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உள்ளது.. 

வெண்டைக்காயில் உள்ள  சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

ரத்த சோகை, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண் - என சகல நோய்களுக்கும் வெண்டைக்காய் சிறந்த நிவாரணி..

வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கக் கூடியது

Image

வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B6, வைட்டமின் B9, 
வைட்டமின் C - என ஏராளமான சத்துகள் உள்ளன என்கின்றது விக்கி..

Image

வெண்டைக்காயின் சிறப்பு அதன் வழவழப்புத் தன்மை
(Mucilage - Gelatinous substance) ..
இந்த வழவழப்புத் தன்மையில் தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

நலம் தரும் வெண்டையை  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உணவில் சேர்த்து உடல் நலனை  மேம்படுத்திக் கொள்வோம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***