தேர்தல் சிதறல்கள் -பிப்.19
- கிரிக்கெட் வீரர் அசாருதீன் காங்கிரஸில் இணைகிறார். ஆந்திராவில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்க வைக்கப்படலாம்
- சிவசேனா, சரத் பவாரோடு ரகசிய பேரத்தில் இறங்கியிருக்கிறதா?
- “நீங்கள் (எம்.பிக்கள்) ஒரு பைசாவுக்கு கூட இலாயக்கற்றவர்கள்” என சபாநாயகர் சோம்நாத் சேட்டர்ஜி கண்டணம்
- ”நீங்கள் ஜெயிக்க வேண்டுமானால், என்னோடு கூட்டு சேருங்கள், தி.மு.கவினை கழட்டி விடுங்கள்” – ஜெயலலிதா
- “பத்து வருடங்களுக்கு மேல் கேஷுவல் பணியாளராக வேலைபார்த்தவர்களுக்கு நிரந்தர பணி” தேர்தலையொட்டி, மேற்குவஙகத்தில் அறிவிப்பு
Gross Domestic Politics
சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.
இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?
மத்திய பட்ஜெட் பற்றி ஒரு ஒலிப்பதிவு
மத்திய பட்ஜெட் பற்றி நாராயணன் – பத்ரி சேஷாத்திரி கலந்துரையாடிய ஒரு ஒலிப்பதிவு
தரவிறக்க நேரடிச் சுட்டி இங்கே.
தேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்
நேற்று (செவ்.பிப்ரவரி 17) தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்புகள் பற்றிய புது விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. இதன் படி மாநில/நாடாளுமன்ற தேர்தல் நடக்கப்போகும் தேதிகளிலிருந்து 48 மணிநேரத்திற்கு முன்னால் அனைத்துவிதமான கருத்துக் கணிப்புகளும் [பத்திரிக்கை / வானொலி / தொலைக்காட்சி] தடை செய்யப்பட்டுள்ளன.
ஒரு வேளை தேர்தல் பல கட்டங்களாக பிரித்து நடக்கும் பட்சத்தில், கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிக்கும் வரை வெளியிடக் கூடாது.
The guideline said: “No result of any opinion poll or exit poll conducted at any time shall be published, publicised or disseminated in any manner, whatsoever, by print, electronic or any other media, at any time during the period of 48 hours ending with the hour fixed for closing of poll in an election held in a single phase; and in a multi-phased election, and in the case of elections in different States announced simultaneously, at any time during the period starting from 48 hours before the hour fixed for closing of poll in the first phase of the election and till the poll is concluded in all the phases in all States.”
இன்னுமொரு சாதிக்கட்சி உதயமானது.
நேற்றைய தினமலர் செய்தி:
http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=873
கோவையில் நடந்த கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாட்டில், கொங்குநாடு முன்னேற்ற பேரவை என்ற கட்சி முறைப்படி துவக்கப்பட்டது; பச்சை மற்றும் மஞ்சள், சிவப்பு நிற கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.கொங்கு வேளாள கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாடு, கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியில் கோலாகலமாக துவங்கியது. பின், தீரன் சின்னமலை கடவுளாக அறிவிக்கப்பட்டு, கண் திறக்கும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், பரமத்தி, வேலூர், சங்ககிரி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் கொங்கு இன மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல, வலுவான அமைப்பு தேவை என்ற கோஷத்துடன் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, தன்னுடைய அரசியல் பிரவேசத்தை ஆரம் பித்துள்ளது.பேரவையின் முதல் அரசியல் எழுச்சி மாநாடு, கருமத்தம் பட்டியில் அதிகாலை யாக பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.
——————————————–
தமிழர் என்று இனத்தால் ஒன்று பட வேண்டிய நேரத்தில் நம்மக்கள் சாதிப் பெயரில் கட்சி / அரசியல் நடத்துவது வேதனையானது.
பைரோன் சிங் ஷிகாவத் – பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)
அத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.
ராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.
ஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.
என்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.
பாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.
கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?
பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.
பட்ஜெட்(?)
பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர் இல்லை. நேற்று அவர் வாசித்தது பட்ஜெட்டும் இல்லை. முந்தாநாள் ராத்திரி உட்கார்ந்து, ஹோம்வொர்க் முடிக்க வேண்டிய மாணவன் போல், அவசர அவசரமாக அவரே எழுதியது போல் இருந்தது. யாருக்கும் திருப்தியில்லை. மார்கெட் விழுந்தது. தொழிலதிபர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டனர். வரிச்சலுகைகள் எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றம்.
தேர்தலுக்கு கொஞ்ச காலம் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில் பொதுவாக பெரிய அறிவிப்புகள் இருக்காது. காரணங்கள் இரண்டு:
1. அரசியல் தர்மம்: பதவியில் இருக்கும் கட்சி மக்களைக் கவரும் வண்ணம் புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது அதிகார துஷ்பிரயோகமாக இருக்கும். இது அரசியல் தர்மம் அல்ல.
2. பொருளாதார தர்மம்: அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் வரப்போகும் அரசாங்கத்தைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்தும். புதிய அரசாங்கத்திற்கு அதன் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடலாம். இது பொருளாதார தர்மம் அல்ல.
இவ்விரண்டு காரணங்களினாலும், இந்த வருடம் ஒரு வரவு-செலவு திட்டம் இருக்காது, வரவு-செலவு கணக்கு மட்டுமே காட்டப்படும் என்று முன்னமே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில வாரங்களுக்கும் முன்னால் மத்திய அரசாங்கம், இம்முறை ஒரு இடைக்கால வரவு-செலவு திட்டம் அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு லேசான ஆச்சரியத்தையே உண்டு பண்ணியது. காரணம், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி. பரந்த அளவில் வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு, மார்கெட் சரிவு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசரம் இருப்பதால், பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதல் அளிக்கும் பட்ஜெட் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு உருவாக்கியது.
ஆனால், நேற்று வழங்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது. எந்த ஒரு தொழில்துறைக்கும் சலுகைகள் அளிக்கப்படவில்லை; எந்த ஒரு வரிச்சுமையும் குறைக்கப்படவில்லை; எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. மாறாக மத்திய அரசின் “செல்லத்” திட்டங்களாக இருக்கும் சில திட்டங்களுக்குப் புதிய நிதி ஒதுக்கீடுகள் – அதாவது செலவுகள் – அறிவிக்கப்பட்டன. எந்த ஒரு புதிய வருமானமும் இல்லாமல், புதிய செலவுகளை அறிவித்ததால், புதிய பற்றாக்குறை உருவாகியுள்ளது. மேலும், இந்த செலவுகள் வரப்போகும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் என்ற வகையில் மேற்கூறிய பொருளாதார தர்மத்திற்கு முரணானதாகவும் உள்ளன.
சந்தைப் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் ஊக்குவிக்காத, வரிச்சுமை எந்த விதத்திலும் குறைக்காத, வேலை வாய்ப்புகளை எந்த விதத்திலும் பெருக்காத இந்த இடைக்கால பட்ஜெட் தேவையே இல்லை. இதற்கு பதில் வெறுமனே கணக்கு காட்டி விட்டு தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்பி இருக்கலாம். எல்லோருக்கும் நேரம் மிச்சமாகியிருக்கும்.
பட்ஜெட் பற்றி சில கருத்துப் பத்திகள்:
http://blog.investraction.com/2009/02/nothing-much-in-interim-budget.html
http://www.valueresearchonline.com/story/h2_storyView.asp?str=100143
நாடாளுமன்ற தொகுதிகள்
இந்தியாவின், மாநில வாரியான நாடாளுமன்ற தொகுதிகள் பற்றிய பட்டியல்.
அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?
தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.
கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.
டெல்லியில் ஷீலா தீக்ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.
26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.
இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.
- பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு
- தீவிரவாத அச்சுறுத்தல்
- பணப்புழக்கம்
- மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்
- உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி
- விவசாயிகளின் பிரச்சனைகள்
இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.
காங்கிரஸ் அலை வீசுகிறதா?
இன்றைய எகனாமிக் டைம்ஸ் தினசரியில் எம்.கே.வேணு, காங்கிரஸ் முன்னிறுத்தும் யு.பி.ஏ விற்கு சாதகங்கள் அதிகம் என்று எழுதியிருக்கிறார். அவர் எழுதியதன் சாராம்சமும் என் பார்வைகளும் கீழே.
சாராம்சம்
இந்தியாவின் ஒட்டுப் போடும் மக்கள் தொகை சராசரியாக 67 கோடி. இதில் 55% 6 மாநிலங்களில் இருக்கிறது – உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இந்த 6 மாநிலங்களில் 291 தொகுதிகள் (மொத்தம் 545) இருக்கின்றன. பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட இன்றைக்கு முக்கியமாக தேசிய ஆட்சியினை நிறுவும் அதிகாரத்தில் இருக்கின்றன. இம்மாநிலங்களில் நிலவும் மாநில அரசியல், சர்ச்சைகள், மாநில அளவிலான பிரச்சனைகளை சார்ந்து பார்த்தால், காங்கிரஸிற்கே சாதகமான நிலையுள்ளது.
சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸை நம்பி தான் ஆக வேண்டும். இல்லாவிடில் மாயாவதியினை தூக்கியடிக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில் சமாஜ்வாடி கட்சி 35 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது (மொத்தம் 80/81 தொகுதிகள்). இப்போதிருப்பதை அப்படியே தக்கவைத்து கொண்டு காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றும் சாத்தியங்கள் இருக்கின்றன.மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் என்.சி.பிக்கும் இதே மாதிரியான ஒரு நிலைமை உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையின் மீதும் அசையாத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கிறது.
மன்மோகன் சிங்கினை முன்னிறுத்தி, இப்போதிருக்கும் அரசியல்/பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது. ஒரு பொருளாதார வல்லுநரின் தலைமையில் நாடு இருந்தால், இப்போது இருக்கும் உலகளாவிய பொருளாதார சிக்கலிலிருந்து நாட்டினை முன்னேற்ற, சிக்கல்களை களைய முடியும் என்கிற வாதத்தினை காங்கிரஸ் முன்வைக்கிறது. இப்போதே காங்கிரஸ் தன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி உடன்பாடு நடவடிக்கைகளில் இறங்க தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்கிற இரட்டை அஸ்திரங்களில் மூன்றாவது அணி பலவீனமாக இருக்கும். அந்த ஸ்திரத்தன்மை, பாதுக்காப்பினை தான் இரண்டு தேசிய கட்சிகளும் முன்வைக்கின்றன. காங்கிரஸுக்கு இன்னொரு பலமான விஷயம், பா.ஜ.க போல அதற்கு மத சாயம் இல்லாமலிருப்பது. மதச்சார்ப்பின்மை என்பதே காங்கிரஸின் இன்னொரு சீட்டாக முன்வைக்கப்படும்.
கெனிஷிய தியரி தான் இன்றைக்கு உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார விடிவாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஒரு கெனிஷியவாதியாக பார்க்கப்படலாம் கடந்த திட்ட கமிஷன் கலாந்தாய்வில் கலந்து கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிகில்ட்சு சொன்னது “ இன்றைக்கு வலது சாரி என்று யாருமேயில்லை. எல்லோரும் கெனிஷிய தியரியினை எப்படி இடம்பெற செய்யலாம் என்பதில் தான் போட்டி போடுகிறார்கள்”.
ஒரு வேளை, தேர்தல் முடிந்து மீண்டும் கம்யுனிஸ்டுகள் ஒன்றாக சேரலாம் என்கிற பட்சத்தில், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தினை வைத்துக் கொண்டு, காங்கிரஸுக்கு அதுவும் சாதகமாக முடியும்.
என் பார்வை
மேற்சொன்ன வகையில் பார்க்கும் போது கண்டிப்பாக காங்கிரஸிற்கு சாதகமே. ஆனால், மக்களின் மனதில் தொடர்ச்சியாக ஒரு anti-incumbency விஷயம் ஒடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சிக்கலான மனநிலை.
மாநிலங்களின் பலத்தினை வைத்து கொண்டு தான் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங் வரையிலான கூட்டணி அரசுகள் ஆட்சிபுரிந்திருக்கின்றன. மாநிலங்கள் / பிராந்திய கட்சிகள் இன்றைக்கு தேசிய அளவிலான அரசியல்/சமூகம்/பொரூளாதாரம் ரீதியிலான அச்சுறுத்தல்களையும், சாதகங்களையும் அளிக்கின்றன. முக்கியமாக தெற்கில் பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட அசுர பலத்தோடு இருக்கின்றன. கர்நாடகாவில் பா.ஜ.கவும், ஆந்திராவில் காங்கிரஸும் ஆண்டாலும், அதற்கு இணையான பலம் பிராந்திய கட்சிகளால் மட்டுமே பெற முடிகிறது.
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் காங்கிரஸும், கம்யுனிஸ்டுகள் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலை. அப்படி பார்க்கையில், பா.ஜ.கவினை விட காங்கிரஸிற்கு தெற்கில் செல்வாக்கு அதிகம். ஆக இது ஒரு சாதகமான பார்வை. தற்போதைய ராஜஸ்தான்,டெல்லி வெற்றிகளும் காங்கிரஸிற்கு ஊக்கத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் தெற்கில் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி அரசுகள் மீது கடுங்கோவமும், எரிச்சலோடும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை (உ-ம் ஆந்திரா, தற்போதைய தமிழ்நாடு). பா.ஜ.க தெற்கிலிருக்கும் செல்வாக்கு மிகக் குறைவு. பா.ஜ.கவினை விட கம்யுனிஸ்டுகளுக்கு தெற்கில் செல்வாக்கு அதிகம்.
ஆகவே சாதகங்கள் அதிகமிருந்தாலும் its too early to predict the voters’ mind.