Wednesday, December 31, 2025

Dataran Lang என்னும் கழுகுச் சதுக்கம்!

                                                                     Image
அதோ அங்கேன்னு கை காமிச்சுட்டு நம்மை இறக்கிவிட்டார் பெருமாள்.  சாலையைக் கடந்து அந்தாண்டை போகணும். நல்லவேளை இந்த சாலை  அ என்ப்படியொன்னும் பெரூசாவும், ட்ராஃபிக் கூடுதலாகவும்  இல்லை. 
பார்க்கிங் ஏற்பாடுகள் இருந்தாலும் கூட,  அந்தக் கட்டணத்தைத் தவிர்க்க, சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நம்மை இறக்கிவிடுவதே டாக்ஸி ட்ரைவர்கள் பலருக்கும் வாடிக்கையாக இருக்கு.  ஒரு சிலர், உள்ளே கொண்டுபோய் நம்மை இறக்கிவிட்டுட்டு, வெளியில் எங்கேயாவது போய் வண்டியை நிறுத்திக்கறாங்க. நமக்குத் தேவைப்படும்போது, அவர்களை செல்ஃபோன் வழி கூப்பிட்டால் வந்து பிக்கப் செஞ்சுக்கறாங்க. 

தூரத்தில் இருக்கார் பெரிய திருவடி!  குட்டி ஸ்டீல்  தடுப்பு வழியா உள்ளே போனோம்.  வலப்பக்கம் ஒரு அல்லிக்குளம்.  என் கண்ணு என்னவோ தூரத்தில் இருக்கும் பறவை மீதுதான்.
Image
கீழே தரையில் புதிய டைல்ஸ் பதிக்கும் வேலை நடந்துக்கிட்டு இருப்பதால் பக்கவாட்டுப் பாதையில் போகணும்.  வெல்கம் டு லங்காவி, ஜியோ பார்க் னு போட்ட ஒரு உயரம் குறைஞ்ச,  நீள மேடை. க்ளிக் க்ளிக் ஆச்சு.

 இன்னொரு பக்கம் Dataran Langனு இன்னொரு அமைப்பு. மலாய் மொழிப்பெயர்.  டடாரன் னு  சொன்னால் சதுக்கம். அந்த  லேங் என்பது கழுகு.  கழுகுச் சதுக்கம். Eagle Square
Image

ImageImage
பறவையை நோக்கிப் போகும்போது நமக்கிரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய கட்டடங்கள்.  பறவை என்னவோ நமக்கு முதுகு காட்டித்தான் நிக்குது. முகம் பார்க்க முன்னால் போகணும்.
Image
வலையில் சுட்ட படம். அன்னாருக்கு நன்றி !

கடல்தண்ணீரில் கொஞ்சம்தூரம் வரை நீண்டு போகும் அஞ்சு கோண நக்ஷத்திரவடிவின் ஒரு பக்கம் மேடையில் நிற்கும்  பெரிய திருவடி தரிசனம்  எனக்கு !
Image
கழுத்தில் வெள்ளை நிறம் இருப்பதால் இது க்ருஷ்ணப்பருந்துன்னு நான் நினைக்கிறேன்.  ஆனால் உள்ளுர் வழக்கத்தில்  ஊரின் பெயரே கழுகுன்னு இருப்பதால்   இது கழுகு !  ஒரு காலத்தில்  மனிதர்களே இல்லாத இந்தத்தீவில் கழுகுகள் மட்டுமே இருந்ததாகச் சொல்றாங்க.
Image   Image   Image
கழுகுச்சிலையின்  உயரம் பனிரெண்டு மீட்டர்னு தகவல். இது அந்த மேடையுடன் சேர்த்தியா என்னன்னு தெரியலை. அங்கே எல்லோரும் டூரிஸ்டுகள்தான். யார்கிட்டே கேக்கறது.... கூகுளாண்டவரிடம் கேட்டுக்கலாமுன்னு இருந்துட்டேன். ஆண்டவரும் பனிரெண்டுன்னே மொட்டையாச் சொல்றார். ப்ச்.... 

ஆனால் நமக்கொரு கதை கிடைச்சது ! இந்த லங்காவித்தீவுக்குச் சாபம் கிடைச்ச கதை. மாசூரி என்னும் பெயருடைய இளம்பெண் இங்கே இருந்துருக்காள்.  அழகின்னா அப்படி க்  ஒரு அழகி ! இளவட்டப் பசங்களுக்கெல்லாம் இவமேலே ஒரு கண்ணு. யாருக்குக் கொடுத்துவச்சுருக்கோன்ற  மனத்தவிப்பு. 

 அந்த கிராமத்துக்குத் தலைவனா இருக்கறவன், தன்னுடைய தம்பிக்கு இவளைப் பொண்ணு கேட்டுக் கல்யாணமும் ஆச்சு.   சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கும் போது.....  நாட்டில் போர் வந்துருச்சு. போர்வீரனான இவன், சண்டைக்குப் புறப்பட்டுப்போயிட்டான்.  சம்பவம் நடந்தது 18 ஆம் நூற்றாண்டில். (கெடா - ஸயாம் போர் 1821இல்) இந்தக்  Kedah தானே கடாரம்னு  சொன்னாங்க.  ஸயாம் நாடுதான்  இப்போதைய தாய்லாந்து. 1939லேதான்  ஸயாம் என்ற பெயரைத் தாய்லாந்துன்னு மாத்துனாங்களாம்.  ) லங்காவியில் இருந்து தாய்லாந்து வெறும் முப்பது கிமீதான் ! 

மாசூரியின்  அழகைப் பார்த்து கிராமத்தலைவன் மனைவிக்கு   ஒரே பொறாமை. உள்ளுக்குள் குமுறிக்கிட்டே இருக்காள். ஓர்ப்படிகள் ஒத்துமையா இருப்பது அபூர்வம்தான் ! 

இங்கே மாசூரித் தனியா இருக்காள்.   அந்தக் காலக்கட்டத்தில் கிராமத்துக்குள் வந்த ஒரு நாடோடி பாட்டுக்காரனோடு  நட்பா இருக்காள்.  இதைக் கவனிச்ச ஓர்ப்படி,  இதுதான் சாக்குன்னு,  மாசூரிக்கும், பாட்டுக்காரனுக்கும் கள்ளக்காதல்னு அபாண்டமாச் சொல்லி மாசூரியை நடத்தை கெட்டவள்னு ஊருக்குள் செய்தியைப் பரப்பிவிட்டுட்டாள்.  கிராமத்துச் சனம் கொதிச்சுப்போச்சு.  கிராமத்தலைவனும் இதை நம்பி, மாசூரியை ஒரு மரத்தில் கட்டிப்போட்டுடறான். இவளைக் கத்தியால் குத்திக் கொல்லணுமுன்னு தீர்ப்பு.

 விதவிதமான  கத்திகளால் இவளைக் குத்தினாலும் இவள் சாகவே இல்லை.  தான் எந்தத் தப்பும் செய்யாதவள்னு சொன்னாலும் சனம் நம்பமாட்டேங்குது.  தினம் கத்திக்குத்துதான். சோறுதண்ணி இல்லாம மரத்தில் கட்டிப்போடப்பட்டவளுக்கு ஒரு சமயம் வெறுத்துப்போய், எங்க குடும்பத்தில் பரம்பரையா ஒரு கத்தி இருக்கு. எங்க அப்பாவாண்டைபோய், அதை வாங்கிட்டு வந்து என்னைக் கொல்லுங்கன்னுட்டாள். சனம் அப்படியே செஞ்சது. கத்தியால் குத்துனதும்.... குபுகுபுன்னு ரத்தம் வருது. அந்த ரத்தத்தின் நிறம் சிகப்பில்லை. ஒரே வெளுப்பு ! வெள்ளைரத்தம் பார்த்ததும் சனம் அரண்டுபோச்சு.  மாசூரி மரணவாயிலில் இருக்காள். 

மரத்திலிருந்து கட்டை அவுத்து, இவளைத் தரையில் கிடத்துனாங்க.  அரை மயக்கத்தோடுக் கண்களைத் திறந்தவள், 'நான் நிரபராதின்னு எவ்வளவோ கதறினேன். நீங்க நம்பலை.  இப்போ என் உயிர் போகப்போகுது. என்னை தண்டிச்ச பாவத்துக்கு  இந்த ஊருக்கும் மக்களுக்கும் ஒரு சாபம் விடறேன்.  ஏழுதலைமுறைக்கு  உங்களுக்கெல்லாம்  நல்லதே நடக்காது. படாத கஷ்டம் படப்போறீங்க'ன்னுட்டு உயிரை விட்டாள். மாசூரியின்  அப்பாவும், குடும்பமும் இங்கேயே இருக்க விரும்பாம,  ஸயாமுக்கே போயிடறாங்க.  

பத்தினி சாபம் பலிச்சுருச்சு.  போரில்  ஸயாம் ஜெயிச்சுக் கெடாவைப் பிடிச்சுருச்சு. தீவச்சு விட்டதில் பயிர்பச்சை எல்லாம் போச்சு. உண்மையிலேயே இருபதாம் நூற்றாண்டுவரைக் கஷ்டப்பட்டுருந்தாங்க  மக்கள்.  இப்போ மாசூரியின் சமாதியாண்டை உள்ளூர் கலைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் காட்சிக்கு வச்சு லிவிங் ம்யூஸியமா நடத்தறாங்க. Makam Mahsuri ன்னு   டூரிஸ்ட்கள் வந்துபோகும் இடமா இருக்கு! (நாம் போகலை. ப்ச்.....)

நாளைக்குப் புதுவருசம் 2026 பொறக்குதுல்லே..... அந்தக்கணக்கில் பார்த்தால் 'இந்தக் கழுகு'குக்கு வயசு முப்பது. 1996 இல் கட்டியிருக்காங்க. ஊர்ப் பெயருக்கான அடையாளமாம். 

பனிரெண்டு மீட்டர்னா கிட்டத்தட்ட நாலுமாடி உயரம். அந்த ப்ரமாண்டத்துக்கு ஏத்தாப்போல  பெரிய சிறகுகள். 'இதோ அடுத்த நொடி பறந்துபோயிருவேன்'னு சொல்றாப்போல இறகுகளை விரித்துப் புறப்படத் தயாரா இருக்கு!
Image
முழுசாப் பார்க்கணுமுன்னா ட்ரோனில் படம் எடுக்கணுமாம். யாரோ புண்ணியவான் போட்டுருக்கும் வீடியோ க்ளிப் , யூ ட்யூபில் கிடைச்சது. சுட்டி கீழே ! ரெண்டு நிமிட்தான். பார்த்து ரசிக்கலாம்!

https://youtu.be/PNc2alF-WYA

மற்ற ஆட்கள் ஃப்ரேமுக்குள் வராமல் படம் எடுக்கறது ஒரு சவால்தான் !  செல்ஃபீ எடுக்கலாமுன்னா...... ஃப்ரேமுக்குள் அடங்காது. பயணி ஒருவர் உதவினார்.  அப்படியும் சிலர் பின்னாலே இருந்தாங்கதான். அவுங்களை மகள் கிளப்பிவிட்டாள்!!!!
ImageImage
கழுகின் நக்ஷத்திர ப்ளாட்ஃபார்முக்குக் கொஞ்ச தூரம்(3.2 கிமீ)  தள்ளி இன்னொரு அழகான அமைப்பு ! சமீபத்தில் கட்டிவிட்டுருக்கும் டூரிஸ்ட் அட்ராக்ஷன். மஹா டவர்னு பெயர். அந்தமான் கடலை நோக்கி நிற்கும் இதன் மேலே ஏறிப்போய் சுத்துப்புறத்து அழகை ரசிக்கலாம்.  (Sky lounge & Observation deck. போயிருக்கலாமுன்னு இப்போத் தோணுது ) மேற்படி விவரம் தெரியாமல் கோட்டை விட்டுட்டோம். ப்ச்....
ImageImage
ஒரு அரைமணிநேரம்போல நம் பெரியதிருவடியாண்டை  இருந்துட்டு அங்கிருக்கும் கட்டடங்களைப் போய்ப் பார்த்தோம்.  நினைவுப்பரிசுகள், சிறுதீனிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள்,  பொம்மை ரயில் இப்படிக் கொஞ்சம்.  நிறையப் பகுதிகள் ச்சும்மாத்தான் இருக்கு.   வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கலை போல !
Image

                                        ImageImage

Image

Image

                                        ImageImage

Image
கேட்டாண்டை வந்து அல்லிக்குளத்தைப் பார்த்துட்டு, பெருமாளை செல்லில் கூப்பிட்டதும்  அஞ்சு நிமிட்டில் வந்துட்டார்.  வேறெங்காவது போகலாமுன்னா.....எல்லாமே அரைமணி முக்கால் மணி தூரம். நாம் திரும்பிக் கப்பலுக்குப்போகவும் அரைமணி நேரம் ஒதுக்கணும். ஏதாவது கோவிலுக்குப்போகலாமுன்னா.... இப்போ மூடியிருக்கும்.  ரெண்டுங்கெட்டானா இருக்கேன்னு........ கப்பலுக்கே போயிடலாமுன்னு பெருமாள் கிட்டே சொன்னோம்.  அடுத்த முக்கால் மணி நேரத்தில்  க்ரூயிஸ் போர்ட் கார்பார்க் வந்துட்டோம். திரும்பக் கப்பலுக்குப்போக நடக்கணுமேன்னு ஆயாசமா இருக்கு எனக்கு.  அப்ப அங்கே ஒரு  பத்தடி தூரத்தில் நின்னுருந்த வண்டியைப் பார்த்துட்டு  ஓடிப்போய் அதைக் காத்திருக்கச் சொல்லிட்டு வந்தார் பெருமாள். ஷட்டில் சர்வீஸாம்.  அட! நமக்குத் தெரியாமல் போச்சே.....  
பெருமாளோடு ஒரு க்ளிக் ஆச்சு. நன்றி சொல்லிக் கொஞ்சம் டிப்ஸ் கொடுத்துட்டு,  ஷட்டிலில் கப்பலாண்டை  வந்து சேர்ந்தோம். 
ImageImage
களைத்துப் போய்த் திரும்பி வரும் பயணிகளுக்காக  சின்ன கூடாரத்தில் சின்ன ஐஸ் டவலும், ஐஸ் வாட்டரும் வெறும் வாட்டருமாக் காத்திருக்காங்க கப்பல் ஊழியர் சிலர். இந்த சூட்டுக்கு வேண்டித்தான் இருந்தது. 
Image
ஏழரை மணிவரை  கப்பலுக்குத்  திரும்பலாம் என்றாலும் மக்கள் திரும்பிவரத் தொடங்கியிருக்காங்க. கேங்வே  வழியாப் படியேறி கப்பலுக்குள் நுழைஞ்சதும், நம்ம செல்ஃபோன் கெமெரா உட்பட ஸ்கேன் மெஷினுக்குள் போய் வந்துச்சு. நாமும் எலெக்ட்ரானிக் கேட் வழியாப் போகணும். செக்யூரிட்டி செக்  முடிஞ்சதும்  அறைக்குப் போனப்ப மணி  நாலே முக்கால்தான்.  பார்க்க நிறைய சுவாரஸியமான இடங்கள் இருந்தாலும் போக்குவரத்துலேயே நேரப்பத்தாக்குறை ஆகிருது. ஒரு ரெண்டு நாள் லங்காவியில் தங்கினால் போதும்.

நம்ம பால்கனியில் நின்னு கண்களை ஓட்டினால் அதோ தூரத்தே நாம் பார்த்த அழகான மஹா டவர்!  ஸூம் எதுக்கு இருக்குன்னு கிட்டக்கக் கொண்டு வந்தால்  நம்ம 'கழுகார்'  தெரியறார் ! 
Image
சாயா குடிக்கப்போனோம்.  குக்கீஸ் கிடைச்சது. கப்பலில் டின்னர் டைம் , சாயங்காலம் அஞ்சரைக்கே ஆரம்பிச்சுருது.  மக்கள் வந்து சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டாங்க. நமக்கு இப்போ பசி இல்லை. இண்டியன் வகைகளில் ஏதாவது இருக்கான்னு ச்சும்மாப் பார்க்கப்போனேன்.  இருந்தது  அதே 'லாங்க் பீன்ஸ்'! அதுவும் அதே பாத்திரத்தில், அதே வகையில் !  நேத்து பாக்கி!!
ImageImage
கொஞ்சநேர ஓய்வுக்குப்பின்  சூரிய அஸ்தமனம் பார்க்க மேல்தளத்துக்குப்போய் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு.   முதல் நாள் பார்த்த அழகில்லை.............
Image
கீழே தியேட்டரில் பாட்டுக்கச்சேரி.  கொஞ்சம் கூட்டம் இருந்ததுதான்.  என்னால் இந்த இசையை ரசிக்கமுடியலை.  
Image
கஸீனோவுக்குப் போய்  ஜஸ்ட்  கொஞ்சநேரம் விளையாடணும். நான் இதுலே ரொம்பக் கருமி. அதிகப்பட்சமா பத்துடாலர் வரைதான், எப்போதும். ஒரு சென்ட் கேம் போதும். இதுலே ஜெயிச்சு மில்லியனர் ஆகும் எண்ணமெல்லாம் இல்லை.  போரடிக்கும்போது ஜஸ்ட் டைம் பாஸ். ஒரு மெஷீனுக்குப்போய் ஒரு டாலரை அனுப்பிட்டு   நம்மவர் காமிச்ச ஒன் சென்ட் பட்டனைத் தட்டினால்  ஒன்னும் ஜெயிக்கலை. ரெண்டாம் முறையும் அதே.  மூணாம் முறை தட்டினால்....' உன் காசு தீர்ந்துபோச்'னு சொல்லுது மெஷீன்.  அம்பது பெட் என்பதை இவர் கவனிக்கலையாம். அடுத்த டாலரைப் போடலை. போதும் போன்னு எழுந்து வெளியே வந்தாச். 

 ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் அங்கங்கே  நடக்குதுன்னாலும் எதுவும் என் டேஸ்ட்டுக்கு இல்லை.

எட்டுமணிக்குக் கப்பல் கிளம்பிருச்சு.  நமக்கு அடுத்த ஸ்டாப் பெனாங். 

டின்னருக்குப் போனோம்.  கவனமா  'லாங்பீன்ஸ்' செக்‌ஷனைத் தவிர்த்துட்டு  ஸாலட் பக்கம் போனோம். டிஸ்ஸர்ட்க்குப் பழங்கள். ஃப்ளாஸ்க்கில்  வெந்நீர் எடுத்துக்கிட்டு அறைக்குப் போயாச். மருந்து, மாத்திரை, கால்வலிக்குத் தைலம் தேய்ச்சுக்கறது,  இதுக்கிடையில்  டிவியில் நேவிகேஷன் பாத்,  இப்படி இதெல்லாம் தான் எனக்கு  மெயின் பொழுது போக்கு. 
Image
தொடரும்............ :-)

Image

Monday, December 29, 2025

லங்காவித் தீவில் கொஞ்சநேரம்............

காலையில்  கண்விழிக்கும்போதே  ரொம்ப நடக்கவேண்டி இருக்குமோன்ற கவலை.... இப்போதையக் கொள்கைப்படி ரொம்ப எதிர்பார்ப்பு இல்லைதான்.   எவ்வளவு முடியுமோ அவ்வளவு போதும் !  மணி  என்னவோ ஆறேமுக்கால்தான்.. கப்பல் இன்னும் போய்க்கிட்டுத்தான் இருக்கு.   சூரியனைக் காணோமேன்னு பார்த்தால் இதோ இங்கிருக்கேன்னு  கரும் மேகத்துக்குள்ளிருந்து வெளியே எட்டிப்பார்த்தான். 
ImageImage
பத்துமணிக்கு வெளியே போகலாமுன்னு நியூஸ் லெட்டர் சொன்னது.  குளிச்சுத் தயாராகி எட்டுமணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ஃப்ரெஷ் மார்கெட் ப்ளேஸ் (மாடி # 16) போனோம். மழை ஆரம்பிச்சு அடிச்சுப் பேயுது !  கஞ்சி தேடிப் போனேன். ஆ.... கிடைச்சுடுத்து !  நம்மவர் சொல்றார், 'கொஞ்சம் நல்லா சாப்பிட்டுக்கோ. போற இடத்தில் என்ன வசதியோ?'....
ImageImage
கஞ்சியுடன் ஒரு க்ரஸாண்ட், கொஞ்சம் பழங்கள் எனக்கு.  நல்லதா காஃபி போட்டு எடுத்துக்கிட்டு, நீச்சல் குளம் பக்கம் போய் உக்கார்ந்தோம்.  இதே மாடிதான்.  பத்தெட்டு நடந்தால் போதும். மழையை வேடிக்கை பார்த்துக்கிட்டே காஃபி குடிச்சு முடிச்சதும் 'ஸீ வாக்'  போகலாமேன்னு தோணுச்சு. கண்முன்னே இருக்கும்போது விடமுடியுதா ? ரொம்ப நீளமில்லை. ஒரு  பத்து மீட்டருக்கும் குறைவுதான்.


ImageImage
Image
கரை கண்ணுக்குத் தெரிஞ்சது.  வந்துட்டோம்.  வேகம் குறைஞ்சு  லங்காவி க்ரூயிஸ் டெர்மினல் னு  பெயர் காட்டும் இடத்தில் போய் மெதுவா நின்னது.  மணி இப்போ ஒன்பதே கால்.  இன்னும் முக்கால் மணியில் போர்ட் சம்ப்ரதாயங்கள் எல்லாம் முடிச்சதும் கீழே இறங்கலாம்.   அறையில் இருந்து பார்த்தப்ப  ஆறேழு கார்கள் ..... அதிகாரிகள் போல !
Image

Image
மழை கொஞ்சம் நின்னதுன்னு நாம்  வெளியே இறங்கும்போது மணி பத்தரை. நம்ம கழுத்து மெடாலியன்தான்  செக்கவுட்டுக்கும் செக்கின்னுக்கும் ! இந்த ஊர் பெயர் லங்காவி. உள்ளுர் கலாச்சார உடையில்  சில பூமி புத்திரிகள், அங்கங்கே நின்னு நம்மை வரவேற்றனர்.  இந்தாண்டை  பூமிபுத்திரர்கள் சிலர்,   சில இசைக்கருவிகளை வாசிக்கறாங்க.
Image

ImageImage
சிறுசும் பெருசுமா இருக்கும் 99 தீவுகள் கொண்டதுதான்  இந்த லங்காவி மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரம் லங்காவித்தீவு. கெடா மாநிலத்தின் பொன்கலம்னு ஒரு பெயர் !  இந்தக் கெடா மாநிலம் மலேசியா நாட்டுக்குட்பட்டது. கெடா  மாநிலம்தான் நாம்  பள்ளிக்கூடக் காலங்களில் 'கடாரம்'னு சரித்திரப் பாடங்களில் வாசிச்சது! (உண்மையிலான்னு எனக்குச் சரியாத்தெரியலை) மலேசியக் கரைக்கும் லங்காவிக்கும் இடையே முப்பது கிமீ தூரம்தான்.

செந்நிறக் கழுகுகள் ஏராளமா இருப்பதால் இந்தத் தீவுக்கு லங்காவின்னு பெயர்.  மலாய்ப்பெயர்தான் இது.  மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு (அட! ஆமால்லே... நாம் கூட  சாமியார்கள் உடையை காவின்னுதானே சொல்றோம். ) ரெண்டையும் சேர்த்து லங்காவின்னு பெயர் வச்சுருக்காங்க அந்தக் காலத்தில்.! ஊருக்குள்ளே போனதும் காவிக்கலர் கழுகைத் தேடணும்...
Image
நம்ம கப்பலை இப்பத்தான்  முழுசாப் பார்க்கலாமுன்னா  எங்கே ? கப்பலை முழுசுமா ஒரு ஃப்ரேமில் அடக்க முடியாதுன்னு  பார்ட் பார்ட்டா க்ளிக்கினேன். அப்பவும் முன்பக்கம் தெரியலை.  க்ரூப் டூர் போக புக் பண்ணவங்களைக் கூட்டிப்போக கைடு கொடிபிடிச்சுக்கிட்டு நின்னுருந்தார். சீனர்தான். மொழிபிரச்சினை அறவே இல்லை ! ஒரு ஏழெட்டுப்பேர்  நம்மாண்டை, டாக்ஸி வேணுமான்னு  கேட்டாங்க. கேட்டதுலே ஒருத்தர் 'இங்கே எடுக்கலாமா இல்லே வெளியே போனதுமா 'ன்னு நாங்க பேசுனதைக் கேட்டுட்டு,  'நம்ம வண்டியில் வாங்க'ன்னு தமிழில் சொன்னார். ஆஹா.... எங்களுக்கும் மொழிப்பிரச்சினை இல்லை !!!!  வெளியே போய் புக் பண்ணணுமாம். கூடவே போறோம்.   இந்தப் பலகைப் பாதையே ஒரு முக்கால் கிமீ இருக்குமோ என்னவோ! என் கால்வலி, ஒன்னரை கிமீ ஈஸின்னதுபாருங்களேன்....   அதுக்கு ரெண்டாம் வாய்ப்பாடு தெரிஞ்சுருக்கு. கப்பல் முழுசாத் தெரியுதான்னு அப்பப்ப நின்னு க்ளிக்கறதை நிறுத்தலை. 
Image
டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டரைத் தாண்டினதும்  மீண்டும் மழை பிடிச்சுக்கிச்சு.  ஒரு சின்னக்குடை நம்மாண்டை இருக்குன்னாலும், பையில் இருந்து எடுக்கறதுக்குள்ளே பாதி நனைஞ்சுட்டோம்.   ஒரு குட்டித் திண்ணையில்  உக்கார்ந்து குடையைத்தேடுறார் இவர்.  அங்கே போட்டுவச்சுருக்கும் ஊஞ்சலில் நான் கொஞ்சநேரம்.  
ImageImageImage
அடிச்சுப்பேய்ஞ்சமழை  ஒரு நிமிட் இடைவெளி விட்டதும்,  நம்மைக் கூட்டிப்போனவர் , ஒரு டெண்ட் நோக்கி நடந்து ' இங்கேதான்  புக்கிங் 'என்றார்.  சுவாரஸியமான இடங்கள்னு ஒரு பத்துப்பனிரெண்டு இருக்காம்.  அங்கங்கே தகவல் போட்டு  வச்சுருக்குச் சுற்றுலாத்துறை !
Image
'நாங்க ரெண்டே பேர்.  சாயங்காலம் ஆறரைக்குள் திரும்ப நம்மைக் கொண்டுவந்து இங்கே விட்டுடணும்'  என்றதும்  நானூறு ரிங்கிட் (மலேசியன் காசு)கொடுங்கன்னு வாங்கிக்கிட்டாங்க.  ட்ரைவரைக் கூப்பிடப் போகும்போது , தமிழ்பேசும்  ட்ரைவரை அனுப்புங்கன்னு கேட்டுக்கிட்டேன்.  ட்ரைவராக வந்தவர் நம்மை இங்கே கூட்டிவந்தவரே! பெயர் கேட்டதுக்குப் பெருமாள் என்றார் !  ஆஹா.... பார்த்தஸாரதி !    இங்கேயே இருங்க நான் 'தேர்' கொண்டுவர்றேன்னு  போனவரைப் பின் தொடர்ந்தோம். எல்லாம் வேன் டைப் !  
Image

Image
நாங்க ஏற்கெனவே முடிவு செஞ்சபடி, முதலில் அக்வேரியம் போனோம். அண்டர் வாட்டர் வொர்ல்ட் !   பத்தே நிமிட்தான் ஆச்சு. சாலைகள் நல்ல கண்டிஷனில் சுத்தமா இருக்கு ! உள்ளே போய் டிக்கெட் வாங்கும்போது,  அவுங்களாவே நமக்கு சீனியர் சிட்டிஸன்னுக்கான தொகையை வாங்கிக்கிட்டாங்க. முந்தி  கே எல்லில் பெட்ரோநாஸ் டவர் பார்க்கப் போனபோதும், இப்படித்தான் கேக்காமலேயே நமக்கு சீனியர் சிட்டிஸன் டிஸ்கௌன்ட் கிடைச்சது. ( அப்பவே கிழ முகம் வந்துருக்கு, இல்லே ?
                        
                               ImageImage
ஒரு ரெண்டு மணிநேரம் போதுமாம், சுத்திப்பார்க்க.  நாங்கள்  திரும்பி வரும்வரை பெருமாள் காத்திருக்கணும். 

( சாம்பிளுக்குச் சில படங்களைப் பதிவில் போட்டுருக்கேன். மற்ற படங்களை ஒரு ஆல்பத்தில் போடணும். ஃபேஸ்புக் ஆல்பத்தில் போடவா ? )
Image
அக்வேரியம் என்று மீன்கள் மட்டுமே அல்லாது, சில பறவைகளும் விலங்குகளும் கூட இங்கே இருக்கு .  பலவகைகள் இதுவரை நம் கண்ணில் படாதவைகளே!  நாம் இதுவரை கடல்வாழ் உயிர்களில்  கண்டது,  ஒரு கடுகளவு இருந்தாலே அதிகம் ! வானத்து நக்ஷத்திரங்கள் போலத்தான் கடல்வாழ் உயிரினங்களும்..... எண்ணவே முடியாது....
Image
1995 ஆகஸ்ட் மாதம்தான் இதன் திறப்புவிழா நடந்தது. ஆச்சே முப்பது வருஷம், இல்லையோ ?  மலேசியாவின் மிகப்பெரிய  மீன்காட்சிசாலை என்ற பெருமை இதுக்கு இருக்கு.  வெப்பமண்டலக்காடு,  நதிகளின் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் இப்படி மூன்று பகுதிகளுக்கான   அபூர்வ மீன், விலங்கு, பறவைகள்னு காட்சிப்படுத்தியிருக்காங்க.
Image
மொத்தம் ஆறு ஏக்கர் பரப்பளவு. நல்ல விசாலமான  கூடங்கள்.  ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் கூட ரொம்பவே உதவியாக இருக்காம்.
Image

Image
டன்னலுக்குள் போய்,   சிலபல கடல்வாழ் உயிர்களைப் பார்க்கலாம். இந்த சுரங்கப் பாதையே பதினைஞ்சு மீட்டர்தான். ஏதோ பழுது பார்க்கறாங்க போல்.... பாதை மூடியிருந்தது. (பரவாயில்லை. இதைவிட ரொம்பவே நீளமான டன்னலுக்குள் எல்லாம்  வேறு நாடுகளில் போயிருக்கோம்)
வெளியேறும் பகுதியில் வழக்கம்போல் கடைகள்..... லங்காவித் தீவில் ட்யூட்டி ஃப்ரீ வியாபாரம்தானாம் ! பேரனுக்கு லங்காவின்னு ஒரு கழுகுப் படம் போட்ட சட்டை மட்டும்.

ஒன்னரை மணி நேரம் கடந்து நாங்கள் வெளியே வந்தப்ப  மணி ஒன்னு. பகல் சாப்பாட்டுக்கு எங்கேயாவது போகணும் என்று பெருமாளிடம் சொன்னதுக்கு, அவர்  'கிர்திகா கிச்சன்' கூட்டிப்போனார்.  மலேசிய இந்தியர் நடத்தும்  ரெஸ்ட்டாரண்டு. ஆர்டர் எடுக்க வந்த  பெண்ணிடம்,  நாங்க "ரோட்டிச்சனாய்'  சொன்னோம்.  பெருமாள் தனக்கு ஒன்னும் வேண்டாம் என்றார்.  கூட வருபவர்களை விட்டுட்டு சாப்பிடும் வழக்கம் நமக்கில்லாததால்.... அவரை வற்புறுத்தியதும்,  பனிரெண்டு மணிக்கே வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை சாப்பிட்டுவிட்டாராம்.  நோய் காரணம், நேரத்துக்குச் சாப்பிடணும் என்ற அவசியம் இருக்காம்.  அடராமா...... அப்போ ஏதாவது பானங்கள் ?  இளநி இருக்கே என்றேன்.
Image

Image

Image

Image
எனக்கும் இளநி வேணும். வெட்டிக்கொடுப்பாங்களான்னு கேட்டதுக்கு ரெஸ்ட்டாரண்ட் ஓனரம்மா..... அதுக்கென்ன....  தருவோமே என்றார்.   வெட்டி என்றால் ரெண்டாகப்பிளந்து.... பெருமாள் மோர் வாங்கிக்கொண்டார்.  இளநி அருமை ! உள்ளே தேங்காயும் அருமை ! 

ஓனரம்மாவிடம் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தேன். நல்லாவே தமிழ்ப்  பேசறாங்க.  சிவகாமி என்று பெயர்.  கணவர்  காவல்துறையில் வேலை.  ஒரு முப்பது வருஷமாச்சாம் இந்த ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிச்சு ! பில் வந்தப்ப.... மோருக்கு காசு வேணாமாம்.  அது சரியில்லை. என்ன சாப்பிட்டோமோ அதுக்கான முழுத் தொகையும்  கொடுக்கணும் என்றதுக்கு, பெருமாள் அவுங்க உறவினராம்.  அதனால் அவர் சாப்பிட்டதுக்குச் சார்ஜ் இல்லைன்னுட்டாங்க. 
பெருமாள் ஒரு அஞ்சு நிமிட் குடும்ப சமாச்சாரங்கள் எதையோ விசாரித்தபின் அங்கிருந்து கிளம்பிப் போகும் வழியில் பெருமாள் சொல்றார், 'என்னிடம் காசு வாங்கமாட்டாங்க. அதனால்  நான் இங்கே வரவே மாட்டேன்.  டூரிஸ்டுகள்  மரக்கறி சாப்பாடு வேணுமென்றால் மட்டும் இங்கே கூட்டிவருவேன்' 
 
அடுத்து எங்கே போகலாம்னு பார்த்தப்ப, நம்மவர் ஸ்கை ப்ரிட்ஜ்ன்னார். போனபிறவிகளில் இவர் பருந்து.  எங்கே போனாலும் அந்த ஊரில் இருக்கும் உயரமான இடத்துக்குப்போய்ப் பார்த்தே ஆகணும் என்பார்.  அவர் பருந்து என்றால் நான் கருடன்.  கருடன் இருக்கும் ஈகிள் ஸ்கொயர் போகலாம் என்றேன்.

முதலில் ஸ்கை ப்ரிட்ஜ்.  இங்கிருந்து அரைமணி நேரப்பயணம்.  அங்கே இருக்கும் கேபிள் கார் ஸ்டேஷனில் இருந்து மலை உச்சிக்குப் போகணும். அங்கிருந்து SkyGlideன்னு கீழே போக  ஒரு குட்டி ரயில்பெட்டிபோல இருப்பதில் (inclined elevator one car    )   ஏறி  கீழே இருக்கும் ஸ்கை ப்ரிட்ஜ் ப்ளாட்ஃபார்ம் போகணும்.    இந்த ஸ்கை   ப்ரிட்ஜ் ப்ளாட்ஃபார்மிலிருந்து அந்த எதிர்மலையாண்டை போட்டுருக்கும் இன்னொரு ப்ளாட்ஃபார்ம் வரை இருக்கும் வளைவான பாதை (மரப்பலகைகளை அடுக்கி இணைச்சுருப்பாங்க. )  வழியாக நடந்து போய் வரணும். ஸ்கை வாக்    தொங்குபாலம்தான்.  125 மீட்டர் நீளம் .இதன் நடுவில் ஒரு இடத்தில் பலகைக்குப் பதில் கண்ணாடி ! கீழே பார்த்தால் கிடுகிடுப் பள்ளம். த்ரில் !

எப்படிப்போனோமோ அப்படியே திரும்பி டாப் ஸ்டேஷன் போய், கேபிள் கார் மூலம் அடிவாரத்துக்கு வந்துடலாம். நடந்துபோகத் தெம்பு இருந்தால்  டாப் ஸ்டேஷனில் இருந்து ஸ்கை ப்ரிட்ஜ் பளாட்ஃபார்ம் வரை போகப்  போட்டு வச்சுருக்கும் 320 படிகள் மூலம் போகலாம்.  திரும்பி வரும்போது அதே 320 படிகளில் ஏறி  வரணும். இதை எழுதும்போதே ஐயோன்னு இருக்கு  என் முழங்காலுக்கு. என்னடா.... பெருமாளே  இப்படியெல்லாம்..... (மனசுக்குள்ளேதான் முணுமுணுப்பெல்லாம்)


https://youtu.be/ERRuH_azBE0?si=i4p60_NWb8WC402L

மேலே இருக்கும் யூட்யூப் வீடியோவில் இந்த அனுபவம் பார்க்கக்கிடைச்சது.  கொஞ்சம் பெரிய வீடியோதான். ஆனால் சுவாரஸியமே!  நேரம் இருந்தால் பாருங்களேன் !


கேபிள்கார் ஸ்டேஷன் இருகும் மலையடிவாரம் போகும் பாதையே   மலைப்பாதைதான்.  நல்ல அகலமான பாதை, கொஞ்சம் கொஞ்சமா வளைஞ்சு வளைஞ்சுதான் போகுது. ஒரு காமணி நேரமானதும் மழைபிடிச்சது.  அப்படி ஒரு கனமழை.... இன்னும் காமணி போகணும் என்றிருக்கும்போது.....
 'இந்த மழையில் கேபிள்காரில் உச்சிக்குப் போறதும் கொஞ்சம் கஷ்டம்தான். போனாலும்  சுத்திவர 360 டிகிரியில் லங்காவி முழுக்கப்பார்க்க முடியாது. ஒரே மேகக்கூட்டத்தில் ஒன்னுமே தெரியாது. அப்புறமும் ஸ்கைவாக்னு ப்ரிட்ஜ் மேலே நடந்து போய் வர்றதும்  இந்த மழையில் முடியாத காரியம். அங்கே போய் மழை நிக்கும்வரைக் காத்திருக்கலாமா'ன்னார் பெருமாள்.
 கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்... இந்த மழையில்  ஒன்னும் முடியாதுதான்.... ப்ச்.
ரெண்டு நிமிட் யோசிச்ச நம்மவர்,  சரி. வேணாம். திரும்பிடலாம்னார். எனக்கு உள்ளுக்குள்  நிம்மதி.... பெருமாளே காப்பாத்திட்டேடா!!!

நான் மெதுவா  அப்ப அந்த ஈகிள் பார்க்னு சொன்னேன்.  அது ரொம்ப தூரம்னு.......... பெருமாள் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே பரவாயில்லை. இப்பதான் ஸ்கை ப்ரிட்ஜ் இல்லையே..... ஈகிளே பார்க்கலாம்னு நான் முந்திக்கிட்டேன்.    ஊருக்குள்ளே போய்க்கிட்டு இருக்கோம். எங்கே பார்த்தாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களே.....  வெளிநாட்டு மக்கள் ஃப்ளாட்டுகளை வாங்கிப்போட்டுருக்காங்களாம்.  பெருமாள் சொன்னவைதான்.

தமிழ்க்காரப்பயணிகள் கிடைச்சதில் பெருமாளுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. மனக்குறைகளைச் சொல்லி ஆத்திக்க ரெண்டு மக்கள் கிடைச்சாச்சு ! குடும்பக்கதை,  மனைவி போன கதை, மக்கள் தகப்பனைக் கவனிக்காமல் தம் விருப்பப்படி வாழ்வது, பேரக்குழந்தைகள்  இப்போது காட்டும் அன்புன்னு பலதும் நம்ம செவிகளுக்குள் புகுந்தன. ஒவ்வொரு கதைக்கும்  பொருத்தமான ஒரு தமிழ்ச்சினிமாப் பாட்டுவேற , பெரும்பாலும் எம் ஜி ஆர் & சிவாஜி கணேசன் நடித்த சினிமாக்களில் வந்தவை..... உண்மையிலேயே பொருத்தமான பாட்டுகளே ! நல்லாத்தான் பாடறார். ஒருமுறை ஒரு வரி மறந்தப்ப, நான் எடுத்துக்கொடுத்தேன் :-)
ImageImage
முக்காமணி நேரம், சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் கேட்டு, அப்பப்ப உச்சுக்கொட்டிட்டு, அங்கங்கே கொஞ்சம் க்ளிக்கிட்டு ஈகிள் சதுக்கம் வந்து சேர்ந்தோம். 

தொடரும்............. :-)

Image