Archive for October 2012
பூஞ்சை இல்லை என்றால்…
பூஞ்சைகளும், காளான்களும் இல்லையென்றால் இந்த பூமியே இல்லையெனலாம். ஆச்சர்யமாக இருக்கிறதா? சரி, பூஞ்சைகள் இல்லையெனில் என்னவாகும் என்பதற்கு சில எளிமையான உதாரணங்களைப் பார்ப்போம். இட்லி, தோசை, தயிர் இதெல்லாம் கிடைக்காது, நாம் வளர்க்கும் பயிர்களுக்கும், தாவரங்களுக்கும் உரம் கிடைக்காது. ஏன் அப்படி? அரிசியையும், உளுந்தையும் நீர் விட்டு அரைத்து மாவாக்கி மூடி போட்டு சமையலறையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு காலையில் பார்த்தால் அது பொங்கி வழியுமே அது எதனால் தெரியுமா? பாலை காய்ச்சி அதில் ஒரு கரண்டி தயிரை ஊற்றிவைத்தால் மறுநாள் மேராகவோ, கட்டித் தயிராகவோ இருக்கிறதே எப்படி? மந்திரமோ, மாயமோ இல்லை. எல்லாம் நுண்ணுயிரிகளின் செயல். பூஞ்சைகளும் அதில் அடக்கம். ஈஸ்ட் (Yeast) கேள்விப்பட்டிருபீர்கள். அது கண்ணுக்குத் தெரியாக பூஞ்சையன்றி வேறில்லை. இவை புளிக்க அல்லது நொதிக்க (fermentation) வைத்தால் தான் நமக்கு இட்லியும், தோசையும்.
இறந்ததை உண்டு வாழும் இவை தாவர வகையும் இல்லை, விலங்கிலும் சேர்த்தியில்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி. பூஞ்சைகளும், காளான்களும் இச்சூழலமைப்பின் மிக முக்கிய அங்கமாகும். எனினும் இவை ஆற்றும் பணி வெளிப்படையாகத் தெரிவதில்லை. காளான்கள் நைட்ரஜன் சுழற்சி மற்றும் இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மட்க, அழுகச் செய்வதில் பெரும்பங்காற்றுகின்றன. இவ்வுலகில் உள்ள 90%க்கும் மேற்பட்ட தாவரங்கள் அவற்றின் நோய் எதிர்ப்புச்சக்திக்கும், வளமில்லா மண்ணிலும் செழித்து வளரவும் அவற்றின் வேர்களில் வாழும் காளான்களைச் சார்ந்துள்ளன.
நாள்பட்ட உணவுப்பண்டங்களை கெடவைக்கும் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய, வடிவமற்ற, பொடி போல் இருப்பவற்றை நாம் பூஞ்சைகள் அல்லது பூசணம் என்றழைக்கிறோம். இவற்றில் சில மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும், ஒவ்வாமையையும் தரும் பண்புள்ளவை. மண்ணில், மரத்தில், கட்டைகளில், சானங்களில் வித விதமான வடிவத்திலும், வண்ணங்களிலும் வளர்பவை காளான்கள் என்கிறோம். பூஞ்சைக்காளான்கள் (Fungi) என்றும் போதுவாக அழைக்கிறோம். இயற்கையாக வளரும் இவற்றில் சில வகைகள் நமக்கு உணவாகவும் பயன்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கும் அனைத்துமே உண்ணத்தகுந்தவை அல்ல. இவற்றில் சில நஞ்சுள்ளவை. நாம் கடைகளில் வாங்கி சமைக்கும் சிப்பிக்காளான்கள், குடைக்காளான்கள் அனைத்தும் பயிர் செய்யப்படுபவை. நாம் மருந்தாக பயன்படுத்தும் பெனிசிலின் கூட ஒரு வகையான பூஞ்சையே. ஆகவே காளான்கள் இல்லாவிடில் இவ்வுலகே இல்லை எனலாம்! ஈஸ்ட், குடைக்காளான்கள் என பல இலட்சக்கணக்கான காளான்கள் இவ்வுலகில் இருந்தாலும் இவற்றில் சிலவகையே தீங்கிழைக்கும் தன்மை கொண்டவை.
கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகளின் அழகை நுண்ணோக்கி வழியாகத்தான் பார்த்து ரசிக்க முடியும். ஆனால் காளான்கள் பல வண்ணமயமான, அழகிய, விசித்திரமான வடிவங்களுடன் இருக்கும். காளான்களின் இனப்பெருக்க முறை விசித்திரமானது. நாம் வெளியில் காணும் (குடை, சிப்பி, பந்து, கோப்பை வடிவ) பகுதி முதிர்ச்சியடைந்தவுடன், மிகமிகச் சிறிய விதைத் துகள்கள் அல்லது வித்துக்கள் (Spores) வெளியிடப்படுகின்றன.
பொதுவாக இவ்வித்துக்கள் காற்றின் மூலமே பரவினாலும், சில வேளைகளில் காளான்கள் வெளியிடும் வாசனையால் கவரப்படும் பூச்சிகளாலும் பரவுகின்றன. இந்த இழைகள் (Hyphae) பின்பு கிளைவிட்டு வளர்கின்றன. இரு வகையான வித்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது (- வகை, + வகை). வேறு இடங்களுக்குப் பரவிய இந்த வித்துக்கள் தனித்தனியே இழை போன்ற தோற்றத்தில் வளர்கின்றன. பிறகு தகுந்த சூழலில் – வகை இழையும், + வகை இழையும் ஒன்று சேர்ந்து நாம் வெளியில் காணும் காளானின் தொடக்க வடிவத்தை (Primodium) அளிக்கின்றன. இது வளர்ந்து பின்பு வித்துக்களை தோற்றுவிக்கிறது.
பூஞ்சைக்காளான்கள் இல்லாத இடமே இல்லை. மண்ணில், கடலில், நாம் சாப்பிடும் பண்டங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட. அறிவியளாளர்களின் கூற்றுபடி உலகில் இதுவரை குறைந்தது 100,000 முதல் 250,000 வகையான பூஞ்சைக்காளான்கள் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 27,000 வகையான பூஞ்சைக்காளான்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்கப்படாதது எத்தனையோ.
பூஞ்சைக்காளான்கள் ஊட்டச்சத்துள்ள ஈரமான, கொஞ்சம் சூடான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இவற்றிற்கு தாவர இலைகளில் உள்ளது போல் உணவு தயாரிக்க பசுங்கனிகங்கள் கிடையாது. ஆகவே, இவை பெரும்பாலும் மற்ற உயிரினங்களின் மீதே சாறுண்ணியாக வாழ்கின்றன. சில உயிரினங்களுடன் ஒத்து வாழவும், வேறு சில அவை வாழும் உயிரினங்களில் வாழ்ந்து அவற்றை சாகடிக்கவும் செய்கின்றன.
இந்த உலகிலுள்ள பெரும்பாலான உயிரினங்கள் பூஞ்சைக்காளான்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. சில வகையான எறும்புகளுக்கும் குறிப்பிட்ட வகையான பூஞ்சைக்காளான்களுக்குமிடையே உள்ள தொடர்பு ஆச்சர்யமளிக்கக்கூடியது. மத்திய அமெரிக்க நாடுகளில் தென்படும் ஒரு வகையான எறும்புகள் இலைகளை வெட்டி அவற்றின் கூட்டுக்குள் கொண்டு போய் சேமிக்கும். இவற்றை இலைவெட்டி எறும்புகள் என்பர். இந்த எறும்புகள் இலைகளையும், பழங்களையும், மலர் இதழ்களையும் மென்று சிறு சிறு துகள்களாக்கி பின் தமது உடலில் இருந்து சுரக்கும் ஒரு வித வேதிப்பொருளை கலந்து இத்துகளை கூழ் போல் ஆக்குகின்றன. இந்த கூழில் இவை பூஞ்சையைப் பயிர் செய்கின்றன. இப்பூஞ்சையும் இக்கூழை உரமாக்கி நன்கு வளர்ந்து ஊட்டச்சத்து மிகுந்த ஒரு வித குமிழை தனது உடலின் ஒரு பாகமாக உருவாக்குகிறது. இக்குமிழே (Gongylidia) அக்கூட்டிலுள்ள அனைத்து எறும்புகளுக்கும் பிரதானமான உணவு. அட்டமைசீஸ் (Attamyces) எனும் இவை வளர்க்கும் பூஞ்சைக்காளான் இந்த எறும்புக்கூட்டைத் தவிர வேறு எங்குமே வளர்வதில்லை.
கார்டிசிப்ஸ் (Cordyceps) இன பூஞ்சைக்காளான்கள் கொஞ்சம் விசித்திரமானவை. இவை மற்ற உயிரினங்களின் மீது ஒட்டுண்ணியாக வாழும். அது வாழும் உயிரினத்தின் (பெரும்பாலும் பூச்சிகள்) மூளையினுள் சென்று அவ்வுயிரினத்தின் குணத்தையும், செயலையும் தன்போக்கிற்கு மாற்றியமைக்கும் திறன்வல்லது. இப்படிச் செய்தே தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ளும். அது வளர்ந்து முதிர்ச்சியடைந்த வேளையில் அது குடிகொண்டிருக்கும் பூச்சியானது உயிரிழந்திருக்கும். கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் இதுதான் இயற்கையின் நியதி. ஒன்று உயிர் வாழ வேண்டுமானால் மற்றொன்று மாளவேண்டும்.
சில வகை குடை காளான்களைக் மழைக்காலங்களில் அதிகம் காணலாம். கோப்ரைனஸ் (Coprinus) இன குடை காளானின் வித்து கரிய நிறத்தில் இருப்பதால், முன்னொரு காலத்தில் அவ்வித்தைச் சேமித்து எழுதும் மையாக பயன்படுத்தினார்கள்.
ஒம்பலோட்டஸ் (Omphalotus) இனக்காளான்களை கும்மிருட்டில் தூரத்திலிருந்து பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். காரணம் மின்மினிப்பூச்சிகளைப் போலவே இரவில் பச்சை நிற ஒளியை உமிழும் தன்மை கொண்டவை (Bioluminescent).
சயாதஸ் (Cyathus) இன காளான் ஒன்றுக்கு ஆங்கிலத்தில்,”Bird nest Fungus” என்று பெயர். பறவையின் கூட்டைப்போன்ற வடிவமும், அதனுள்ளே வித்தினைக் கொண்ட உருண்டையான முட்டை போன்ற உறுப்பினைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு இப்பெயர். இது தன் வித்தினை பரப்பும் விதமே அலாதியானது. முட்டை வடிவிலமைந்த வித்தினைக் கொண்ட பைகள் சுருள்வில் (spring) போன்ற காம்பினால் கீழே இணைக்கப்பட்டிருக்கும். இப்பையின் மீது மழைநீர் விழும் போது அது தெரித்து சுமார் 2 அடி தூரத்திற்கு மேலெழும்பி அருகிலுள்ள (இலையிலோ, கிளையிலோ) பொருட்களின் மீது இச்சுருள்வில் காம்பின் உதவியால் ஒட்டிக்கொண்டு, தகுந்த சூழலில் வித்தினைப் பரப்பும்.
என்னதான் வெவ்வேறு வடிவங்களில், நிறங்களில் இருந்தாலும் பூஞ்சைக்காளான்களை எளிதில் இனங்காண்பது கடினம். விதவிதமான காளான்களைக் காண மழைகாலமே உகந்தது. அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் மழைக்காடுகளின் தரையில், ஈரமான சருகுகளுக்கிடையேயும், சாய்ந்து விழுந்த மிகப்பெரிய மரங்களின் மீதும், உயிருள்ள மரத்தின் தண்டிலும் என பலவிதமான வாழிடங்களில், பலவிதமான காளான்களைக் காணலாம். அப்படி ஆனைமலைப்பகுதியில் பார்த்து படம் பிடித்து, அவற்றை இனம் கண்டு ஒரு சிறிய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டை கீழ்கண்ட இணைய முகவரியிலிருந்து இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்
http://ncf-india.org/publications/53
இனிமேல் பூஞ்சைக்காளானைப் பார்த்தால் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்தானே என்று இளக்காரமாக நினைக்காமல், அவை ஆற்றும் மகத்தான பணியை நினைவில் கொண்டு அவற்றின் அழகை ரசிப்போம்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 15. புதிய தலைமுறை 25 அக்டோபர் 2012
மரமும் மரியேனும்
உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் ஒரு மரத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? எனக்கு நினைவுக்கு வருகிற வார்த்தை – உயிர். அப்புறம் வெற்றி, பொருமை, அயராத உழைப்பு, கொடை.
மரத்தை ஒரு உயிருள்ள ஜீவனாக மதிப்பவர்கள் நம்மில் எத்தனைபேர்? மரத்தின் மதிப்பு அது நமக்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை வைத்துத்தானே. நம்மில் எத்தனை பேர் மரத்தை மரமாக மதிக்கிறோம்? ரசிக்கிறோம்? அல்லது Hermann Hesse அவரது Wandering-ல் சொன்னது போல், எவர் மரத்துடன் பேச விழைகிறோம்? யார் மரத்துடன் பேசுகிறார்களோ, அது சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையின் உள்ளர்த்தமும், வாழ்ந்து கொண்டிருப்பதற்கான உண்மையும் புரியும் என்கிறார் அவர். ஒரு மரம் அதன் ஒவ்வொரு நிலையிலும் நமக்குப் பாடம் கற்பிக்கிறது.
விதை முளைத்து பெரிய மரமாக வளர்ந்திருப்பது எளிதான காரியமல்ல. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், தான் வாழ்வதற்கு பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அது மரங்களுக்கும் பொருந்தும். ஓரிடத்திலிருந்து நகரமலேயே பல விதங்களில் தனது விதைகளை மரம் பல இடங்களுக்கு பரப்புகிறது. காற்று, நீர் மூலமாகவும், பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிக்கிறது. அதற்குக் கைமாறாக தனது விதைகளைப் பரப்பிக்கொள்கின்றன. சரியான இடத்திற்கு விதை கொண்டு செல்லப்படவேண்டும். தான் வாழ ஏற்றவகையில் சூழலும், மண்ணும், நீரும் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் துளிர் விட முடியும். மரங்களடர்ந்த நிழலான பகுதியில் விழுந்திருந்தால் சூரிய ஒளிக்காக அருகிலுள்ள தாவரங்களுடன் போட்டிபோட வேண்டியிருக்கும், நிழல் விரும்பும் மரமாக இருந்து வெட்ட வெளியில் அதன் விதை விழுந்திருந்தால் சூரிய ஒளியின் கடுமையை தாக்குப்பிடிக்க வேண்டும். விதை முளைவிட்ட பின் தகுந்த காலநிலை அமைந்திருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் பூச்சிகள், தாவர உண்ணிகள், இரும்புச் சக்கரங்களைக் கொண்ட கனரக வாகனங்கள், மண்ணை விஷமாக்கும் இராசயன மாசு, மண்வெட்டியைக் கொண்ட கைகள் போன்ற பற்பல காரணிகளிடமிருந்து தப்பிக்க வேண்டும். தனக்கு அருகில் வளரும் மற்ற தாவரங்களுடன் நீருக்கும், சூரிய ஒளிக்கும் போட்டி போட வேண்டும்.
ஒவ்வொரு அடி வளரும் போதும் பற்பல இன்னல்களைச் சந்திக்கிறது. இடர் ஏற்படும் போதெல்லாம், தன்னால் முடிந்தவரை உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரே குறிக்கோள் – தழைத்தோங்கவேண்டும். மரம் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இலைகளால் சுவாசித்து, வேரினால் நீர் பருகி ஓயாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறது. நம்முடனேயே சேர்ந்து வளார்கிறது, நம்மைக்காட்டிலும் உயர்ந்து நிற்கிறது, நாம்மைத் தாண்டியும் வாழ்கிறது – கோடாறிக்குப் பலியாகாமலிருந்தால்! இப்படி வளர்ந்து பெரிய மரமாக நிற்பது கானகத்தில் தான். சில வயதான மரங்களை கிராமங்களிலும் காணலாம், சில வேளைகளில் சாலையோரத்திலும் காணலாம். ஆனால் சாலையோர வயதான மரங்களைக் காணும் போதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீ உயிர்வாழப் போகிறாய் என்னும் சந்தேகமும், கவலையும் தான் மேலோங்கும்.
வயதான மரங்களைச் சென்று பார்ப்பதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. அப்படி உலகின் பல வயதான மரங்களைக் கொண்ட இங்கிலாந்தில் உள்ள க்யூ தாவரவியல் தோட்டத்திற்கு (Kew Botanical Garden) அண்மையில் சென்று சுமார் 250 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு மரத்தினைக் கண்டேன். இந்த ஜப்பானிய பகோடா மரம் (Japanese Pagoda Tree) இந்தத் தோட்டத்தில் நடப்பட்டது 1760ல். ஒரு மூதாட்டியைப் பாதுகாப்பாக கவனித்துக்கொள்வது போல் இம்மரத்தைச் சுற்றி கம்பி வேலியும், வயதானதில் கொஞ்சம் சாய்ந்து போனதால் தண்டிற்கு முட்டுக்கொடுத்தும் வைத்திருந்தார்கள். அதிசயத்துடன் பார்த்து, அம்மரக்கிளையின் ஒரு பகுதியை தொட்டுத்தடவி எனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ச்சியுற்றேன். ஞாபகார்த்தத்திற்கு அம்மரத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
க்யூ தோட்டத்தில் நான் பார்த்து அதிசயித்தது மரங்களை மட்டுமல்ல, மரியேன் நார்த் அம்மையாரின் ஓவிய கண்காட்சிக் கூடத்தையும் தான். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இந்தக் காட்சிக்கூடத்தின் ஒவ்வோர் அறையிலும் அவரது ஓவியங்களை அவர் சென்று வரைந்த நாடுகள் வாரியாக காட்சிக்காக வைத்திருந்தார்கள்.
மரியேன் நார்த் (Marianne North) 1830ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். இளம் வயதில் அவர் க்யூ தோட்டத்திற்கு சென்றபோது உலகின் பல இடங்களிலிருந்து கொண்டு வந்து வளர்க்கப்பட்ட பல வகையான அழகிய தாவரங்களும், மலர் செடிகளும், அவரை வெகுவாகக் கவர்ந்தன. மரியேனுக்கு சிறு வயது முதலே ஐரோப்பியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. தான் பார்த்த இயற்கைக் காட்சிகளையெல்லாம் ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். முதலில் பொழுது போக்கிற்காக வரைய ஆரம்பித்தாலும் அவரது தந்தையின் மறைவுக்குப் பின் முழுமூச்சுடன் உலகின் பல நாடுகளுக்கு (பெரும்பாலும் தன்னந்தனியே ஓரிரு பெண்டியர் துணையுடன்) பயணம் செய்து இயற்கைக் காட்சிகளையும், மரங்களையும், தாவரங்களையும், பூக்களையும் ஓவியமாக தீட்டலானார்.
தாவரவியலாளர்கள் ஒரு தாவரத்தை இனங்கண்டு, வகைப்படுத்திய பின் ஓவியர்கள் அத்தாவரத்தின் பாகங்களை (மலர், இலை, தண்டு, விதை முதலிய) மிக மிக நுட்பமாக வரைவார்கள். புகைப்படக்கருவிகள் இல்லாத காலமது. தாவரங்களையும், மரங்களையும் வரைந்தாலும், மரியேன் நார்த்தின் ஓவியங்கள் குறிப்பிட்ட ஒரு தாவரத்தையோ அவற்றின் பாகங்கள் தனித்தனியாக வரையப்பட்டோ இருக்காது. மாறாக அத்தாவரத்தின் முழு வடிவம், அது வளர்ந்திருக்கும் சூழல், அதைச் சுற்றி அவர் பார்த்தறிந்த மற்ற தாவரங்கள், அது வளருமிடத்தில் தென்படும் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிடுக்கும். அத்தாவரங்களின் பின்னனியில் அங்கு வாழும் மனிதர்களும், அவர்களின் வாழ்க்கை முறையும் துல்லியமாக தீட்டப்பட்டிருக்கும். மரியேன் நார்த்தின் ஓவியங்களில் அவர் மையப்படுத்தி வரைந்திருக்கும் தாவரத்தையும் அதன் வாழிடத்தையும் காணலாம். அவரது ஓவியங்களை தாவரவியலாளர்கள் மட்டுமின்றி ஓவியத்தையும், இயற்கையையும் நேசிப்போரும் கூட பார்த்து மனதார ரசிக்க முடியும். இவரது ஓவியங்களில் பல விவரங்கள் பொதிந்திருந்தாலும், அறிவியல் துல்லியத்தில் இம்மியளவும் குறைவிருக்காது.
மரியேன் நார்த் அவர்கள் 1877ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இந்தியாவில் முதலில் அவரது காலடி பட்டது தூத்துக்குடியில். பிறகு தஞ்சை, கொச்சின், அம்ரிஸ்தர், ஆக்ரா அஜ்மீர், நைனிதால் என பல இடங்களுக்குப் பயணித்து அங்கெல்லாம் உள்ள இயற்கைக் காட்சிகளையும், மரங்களையும் மிக அழகான ஓவியமாக பதிவு செய்திருக்கிறார். அவரது இந்திய ஓவியங்களை அகல விரிந்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில ஓவயங்களைப் பார்த்தபோது மயிர்க்கூச்சரிந்தேன். தஞ்சை பெரிய கோயிலை தூரத்திலிருந்து மிக அழகாக ஓவியம் தீட்டியிருந்தார். அடுத்து தஞ்சையில் உள்ளா போவபாப் (Boabob) எனும் ஆப்பிரிக்க மரத்தினை. பிறகு ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலின் ஓவியம் என பரிச்சியப்பட்ட இடங்களையும், மரங்களையும் எதிர்பாராவிதமாக காண நேர்ந்ததில் மகிழ்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் திளைத்தேன். எங்கோ பிறந்து வளர்ந்து, தன்னந்தனிப் பெண்மணியாகப் பற்பல இன்னல்களுக்கிடையில் நெடும்பயணம் மேற்கொண்டு, நம் தாய்நாட்டிற்கும் வந்து, நம் நாட்டுத் தாவரங்களின் பால் காதல் கொண்டு ஓவியமாக்கிய மரியேன் அம்மையாரின் திருவுருவச்சிலையை நெகிழ்ச்சியுடன் பார்த்து தலைவணங்கினேன்.
துளசி, ஆல், அரசு, வேம்பு என பல இந்தியத் தாவரங்களையும் ஓவியமாகத் தீட்டியிருந்தாலும் அவருக்குப் பிடித்தது இமயமலைச்சாரலிலும், மேற்குத்தொடர்ச்சி மலையுச்சிகளிலும் வாழும் ரோடோடென்ரான் (Rhododendron) எனும் சிறு மரம். இதுபோல மரியேன் அம்மையாரின் வாழ்வில் பல மரங்கள் இருந்திருக்கும். அதுபோலவே, நாம் அனைவரின் வாழ்விலும் ஏதோ ஒரு மரம் இருக்கும். நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு மரம் நம் நினைவில் இருக்கும். தஞ்சாவுரில், கரந்தை கருநாசுவாமி கோயிலில் உள்ள வில்வம், அம்மாவின் ஊரில் குளக்கரைக்கு அருகிலிருக்கும் நாவல், திருச்சி BHEL ஊரகத்திலுள்ள சரக்கொன்றைகள், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேருந்து நிற்குமிடத்திற்கு அருகிலிருக்கும் வேம்பு, மண்ணம்பந்தலில் உள்ள இலுப்பை, களக்காடு வனப்பகுதியில் நான் பார்த்த ஏழு இலைப்பாலை, மைசூருக்கு அருகில் பார்த்த பிரும்மாண்டமான ஆலமரம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி எனக்குத் தெரிந்த, பார்த்துப் பழகிய, அடையாளம் கண்டுகொண்ட ஒவ்வொரு மரமும் எனது நண்பர்கள், உறவினர்கள் போலத்தான். எனக்குத் தெரிந்த மரங்களைப் பல நாள் கழித்துப் பார்க்கும் போது என்னையும் அறியாமல் முகத்தில் புன்னகை படரும். அம்மரங்கள் பூக்களை மட்டும் பூப்பதிலை, நான் பார்க்கும் போதெல்லாம் எனது நினைவுகளையும் மலரச்செய்கிறது. வில்வமும், சரக்கொன்றையும் எனது பள்ளிக் காலத்தையும், வேம்பும், இலுப்பையும் எனது கல்லூரி நாட்களையும் நினைவு படுத்தும்.
என்னதான் நகரத்தில் வாழ்ந்தாலும், மரங்களில்லா அப்பார்ட்மென்ட்ஸில் குடியிருந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு மரம் பரிச்சியமாகத்தான் இருக்கும். மரியேன் அம்மையார் மறைந்தது 1890ல், ஆனால் அவர் பார்த்த, நட்டு வைத்த மரங்கள் இன்னும் வாழ்கின்றன. எனது மரங்கள் சிலவற்றை பட்டியலிட்டிருகிறேன். அதுபோல், உங்களது மரங்களையும் பட்டியலிடுங்களேன்? முடிந்தால் அவை இருக்குமிடம் சென்று அம்மரங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பாக்கியசாலி ஆவீர்கள்!
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 14. புதிய தலைமுறை 18 அக்டோபர் 2012
வாருங்கள் விருந்தாளிகளே!
இந்தப் பூமிப்பந்தின் வடபகுதியில் கடுங்குளிர் நிலவும் காலத்தில் இரைதேடி பல பறவைகள் தெற்கு நோக்கி பயணிக்கின்றன. வலசை போதல் (Migration) என்பர் இதை. இப்பறவைகளை சங்கப்புலவர்கள் புலம்பெயர் புட்கள் என்றனர். கி.ராஜநாராயணன் தனது “பிஞ்சுகள்” எனும் நூலில் இவற்றை விருந்தாளிப் பறவைகள் என்றழைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்டு மாதங்களில் இந்தியாவில் பல விருந்தாளிப் பறவைகளை பார்க்கலாம். சுமார் 7-8 மாதங்களுக்குப் பின் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் மீண்டும் வடக்கு நோக்கி பயணிக்கின்றன இப்பறவைகள்.
தென்னிந்தியாவில் பரவலாக தென்படும் ஒரு விருந்தாளி சாம்பல் வாலாட்டி (Grey Wagtail Montacilla cinerea). ஆனைமலைப் பகுதியில் இந்த ஆண்டு முதன்முதலாக பார்த்து நாங்கள் பதிவு செய்த விருந்தாளி இதுவே. பார்க்கப்பட்டது செப்டம்பர் 5ம் நாள்.
அடுத்தது இலை கதிர்குருவி (Greenish Warbler Phylloscopus trochiloides). பதிவு செய்தது செப்டம்பர் 28ம் தேதி.
பழுப்புக் கீச்சானை (Brown Shrike Lanius cristatus) அக்டோபர் முதல் வாரத்தில் பார்த்தோம்.
இந்த மாத இறுதியில் வரும் பிளைத் நாணல் கதிர்குருவிக்காக (Blyth’s Reed Warbler Acrocephalus dumetorum) காத்துக் கொண்டிருக்கிறோம்.
விருந்தாளிப் பறவைகளைப் பார்த்தால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யவும்: Migrantwatch
வலசை போதல், விருந்தாளிப் பறவைகள் பற்றிய சில கட்டுரைகள்:
Welcome back, Warblers , என் பக்கத்து வீட்டு பழுப்புக்கீச்சான்!
சினிமாவும், காட்டுயிரும் அவற்றின் வாழிடங்களும்
எந்தத் தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதும் அதில் வரும் கதாநாயகியையும், காமெடியையும் ரசிப்பதைத் தவிர எனக்கு வேறு ஒரு பொழுதுபோக்கும் உண்டு. அவுட் டோர் லொக்கேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் அது இந்தியாவா இல்லை உலகில் எந்தப்பகுதி, எவ்வகையான வனப்பகுதி, படத்தில் வரும் காட்சியைப் பொறுத்து எந்த அளவுக்கு அவ்வகையான வாழிடத்திற்கு அந்த ஷூட்டிங்கினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், என்பதையெல்லாம் பற்றியே எனது யோசனை இருக்கும். ஒரு வேளை ஏதேனும் பறவையையோ, பூச்சியையோ, மரத்தையோ காண்பிக்கும்போது அது எனக்குத் பரிச்சயமான ஒன்றாக இருந்தால் அருகில் இருப்பவர்களிடம் அதைப்பற்றிச் சொல்லுவேன். பெரும்பாலும் அவர்களிடமிருந்து வரும் பதில், “பேசாமல் படத்தைப் பார்”.
தமிழ்ப் படங்களில் பல காட்சிகளில் காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் காணலாம். நான் குறிப்பிடுவது பழைய படங்களில் வருவதுபோல் கதாநாயகர்கள் சண்டையிட்டு அடக்கும் (?) சிங்கத்தையே, புலியையோ, அல்லது டைரக்டர் இராமநாராயணனின் படத்தில் காட்டப்படும் பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் விலங்குகளையோ இல்லை, இயற்கையான சூழலில் தென்படும் உயிரினங்களை. பாரதிராஜா, ராஜ்கிரண் போன்றவர்களின் படங்களில் அழகிய வயல்வெளியையும், நீர்நிலைகளையும் கொண்ட கிராமங்களைக் காணலாம். வெள்ளைகொக்குகள், மீன்கொத்திகள் பறப்பதையும், பூச்சிகளையும், மீன்கள் துள்ளித்திரிவதையும் அவ்வப்போது காண்பிப்பார்கள். மணிரத்னத்தின் பல படங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பல இடங்களைக் காணலாம்.
இதுபோல, தமிழ் சினிமாவில் ஏதாவது பறவையோ, வண்ணத்துப்பூச்சியோ சில நொடிகள் தான் வந்து போகும். ஆனால், சமீபத்தில் பார்த்த “வாகை சூட வா” எனும் அருமையான படத்தில் சர சர சாரக்காத்து வீசும் போது…என்ற பாடலில் கிராமப்புறங்களில் பார்க்கக்கூடிய சில அழகான உயிரினங்களைக் கொண்ட இயற்கைக் காட்சிகளை படம்பிடித்து இப்பாடலின் பல இடங்களில் காண்பித்திருப்பார்கள். தொலைக்காட்சியில் அடுத்த முறை இந்தப்பாடலை பார்க்கும் போது கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் விளக்கங்களை (பாடலின் ஆரம்பத்திலிருந்து வரும் காட்சிகளுடன்) ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்:
1. கதாநாயகன் மின்மினிப்பூச்சியைப் பிடித்து நாயகியின் நெற்றியில் அதைப் பொட்டாக வைப்பான். மின்மினிப் பூச்சி மின்னுவதேன் தெரியுமா? தனது இரையையும், துணையையும் கவர்வதற்காக. எப்படி மின்னுகிறது தெரியுமா? அதனுடலில் இருக்கும் லூசிபெரின் (Luciferin) எனும் ஒரு வித வேதிப் பொருள் ஆக்ஸிஜனுடன் கலப்பதால் பளிச்சிடும் பச்சை நிற ஒளி இப்பூச்சியின் பின் பக்கத்திலிருந்து உமிழுகிறது.
2. ஒரு மஞ்சள் நிறத் தட்டான் தனது வயிற்றுப்பகுதியின் கீழ் நுனிப்பகுதியை (நாம் வால் என பிடித்து விளையாடும் பகுதி) தண்ணீரின் மேல் தொட்டுத் தொட்டுப் பறக்கும். அதன் மேலேயே சிகப்பு நிறத்தில் இன்னொரு தட்டானும் பறந்து கொண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் இருப்பது பெண் தட்டான். அது தனது முட்டையை தண்ணீரில் இட்டுக்கொண்டிருக்கிறது. அதன் மேலே பறக்கும் சிகப்பு நிறத்தட்டானே அதன் ஆண் துணை. அது பறந்து கொண்டே தனது பெண் துணையை மற்ற ஆண் தட்டான்களிடமிருந்து பாதுகாக்கிறது.
3. கவுதாரி ஓடுவதை (அல்லது ஓடவிட்டுப்) படமெடுத்திருப்பார்கள்.
4. அடுத்து வருவது எலி. வயல் எலியாக இருக்கக்கூடும்.
5. ஒரு பறவை நீர்க் கரையின் ஓரத்தில் அமர்ந்திருப்பதைப்போன்ற காட்சி. இது Chestnut-bellied Sandgrouse எனும் பறவை. வறண்ட வெட்ட வெளிகளிலும், புதர் காடுகளிலும் இதைப் பார்க்கலாம். தமிழிலில் கல்கவுதாரி எனப்படும் (எனினும் இது கவுதாரி இனத்தைச் சார்ந்தது இல்லை). தரையில் இருக்கும் தானியங்கள், புற்களின் விதைகள் முதலியவற்றை சாப்பிடும். உச்சி வெயில் நேரத்தில் காட்டிலுள்ள நீர்க்குட்டைகளின் ஓரத்தில் தாகத்தைத் தனிக்க கூட்டமாக வந்திறங்குவதைக் காணலாம். ஆனால் இந்தப்பாடலில் காண்பிக்கப்படும் கல்கவுதாரியை இயற்கையான சூழலில் படம்பிடித்த மாதிரி தெரியவில்லை.
6. அதற்கு அடுத்து வருவது காட்டு முயல். Rabbit என நாம் பொதுவாகச் சொல்லுவது. ஆனால் இந்தியாவில் Rabbit இனம் கிடையாது. உணவிற்காகவும், செல்லப்பிராணியாகவும் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்தப்பாடலில் வருவது Black naped Hare – கதாநாயகி காதைப்பிடித்து தூக்கும் போது இம்முயலின் கரிய பிடரியைத் தெளிவாகக் காணலாம். இக்காட்டு முயல் இந்தியாவின் பல பகுதிகளில் இது திருட்டு வேட்டையாடப்படுகிறது. இந்திய வனவிலங்குச் சட்டத்தின் படி இது தண்டிக்கத் தகுந்த குற்றம்.
7. அடுத்து குளத்தில் மீன் அல்லது பாம்பு நீந்துவதைக் காண்பிப்பார்கள். ஒரு சில வினாடிகள் மட்டுமே வருவதால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
8. நத்தையைச் சமைப்பதற்காக கதாநாயகி தயார் செய்வாள்.
9. சிகப்பு நிற உடலில் கரும்புள்ளிகளையுடைய Blister Beetle-ஐ போன்ற வண்டுகள் புல்லின் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்.
10. மழைபெய்து கொண்டிருக்கும் போது ஒரு மீன் பனைமரத்தின் மேலேறுவது போல ஒரு காட்சி. இதற்கு மரமேறி கெண்டை என்று பெயர். இதன் சிறப்பு என்னவென்றால் சுமார் 6 மணிநேரம் கூட நீருக்கு வெளியிலும் வந்து சுவாசிக்கக் கூடிய திறன் படைத்தது. ஆனால் இந்த படத்தில் காண்பித்திருப்பது போல செங்குத்தாக ஏற முடியுமா எனத்தெரியவில்லை. இக்காட்சியைக் காணும் போதும், இதற்கு அடுத்து வரும் பறவையும் நிச்சயமாக graphics தான் என்பது புலப்படுகிறது.
அடுத்து நான் பார்த்து வியந்த காட்சி “3” (மூன்று) எனும் படத்திலிருந்து. இப்படத்தில் கதாநாயகன், நாயகியின் வீட்டின் முன் நின்று கொண்டு அவளிடன் தனது காதலைச் சொல்லுவான். அக்காட்சியின் போது நாயகியின் கண்களில் தெரியும் பயம் கலந்த பிரமிப்பையும், பூரிப்பையும் பலர் ரசித்திருக்கலாம். ஆனால் நான் பூரிப்படைந்ததும், ரசித்ததும், அந்தக் காட்சியின் பின்னனியில் ஒரு பறவையின் இனிமையான குரலைக் கேட்டுத்தான். விசிலடிப்பது போன்ற அந்தக்குரல் குயிலினத்தைச் சேர்ந்த Indian Cuckoo எனும் பறவையினுடையது. இதன் குரல் நான்கு சுரங்களைக் (notes) கொண்டது. பறவைகள் பாடும் விதத்தையும், குரலையும் வைத்து அதற்கு செல்லப்பெயரிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் இப்பறவையின் குரல் கேட்பதற்கு, “One more bottle” என்று ஒலிப்பதைப் போலிருப்பதாக குறிப்பிடுகின்றனர். அடுத்த முறை இந்தக் காட்சியைக் காணும் போது இந்தத் தகவலை நினைத்துப் பாருங்கள். காட்சியை விட இந்தப் பறவையின் இனிமையான குரல் உங்களுக்கு நிச்சயமாகப் பிடித்துப் போகும்.
பழைய தமிழ்ப்படங்களில் புலி, சிறுத்தை, சிங்கம் முதலிய விலங்குகளுடன் கதாநாயகன் கட்டிப்பிடித்து சண்டையிட்டு அவற்றை கொல்லுவது போன்ற காட்சியைக் காணலாம். பல வேளைகளில் இந்த விலங்குகளுக்கெல்லாம் வாயைத் தைத்த பின்னரே படத்தில் நடிக்க விடுவார்கள். அதேபோல படத்திலும், சர்க்கஸிலும் வரும் யானைகளை அவை குட்டியாக இருக்கும் போதே பிடித்து வந்து, அடித்து, அங்குசத்தால் குத்திக் கொடுமைப்படுத்தியே அவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்க வைப்பார்கள். இந்த உண்மையெல்லாம் தெரிந்ததனால் படங்களில் இவ்வுயிர்கள் வரும் காட்சிகளை என்னால் ரசிக்க முடிவதில்லை.
பெரிய விலங்குகள் மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினங்களையும் வதைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் நான் ரசிப்பதில்லை. “மீரா” எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல வண்ணத்துப்பூச்சிகளை கதாநாயகி கையில் வைத்து விளையாடுவாள். அவற்றில் சில போலிகள் என்றாலும் நிச்சயமாக சில உயிருள்ள வண்ணத்துப்பூச்சிகள் என்பது உற்று நோக்கினால் தெரியும். “சத்யா” எனும் படத்தில் வரும் ஒரு பாடலில் கதாநாயகன் தட்டானைப் பிடித்து நாயகியின் மேல் விடுவது போன்ற காட்சி வரும். சமீபத்தில் வெளியான “இராவணன்” படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரு தட்டானைக் காண்பிப்பார்கள். பிடித்து வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்பது பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
சினிமாக்காரர்களின் வசீகரத்தினாலோ, பெரிய இடத்திலிருந்து வரும் சிபாரிசினால் ஏற்படும் நிர்பந்தத்தினாலோ வனத்துறையினர் வேறு வழியின்றி அனுமதி வழங்கி விடுவதால், பொதுமக்கள் கூட செல்ல அனுமதிக்கப்படாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் (core area) கூட ஒரு சில படக்காட்சிகளில் வந்து போகும். இந்தப்படங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தவுடனேயே அந்தக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு எந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஊகிக்க முடியும். என்னதான் நல்ல படமாகவும், பிடித்த நடிக, நடிகையர் இருந்தாலும், காட்டுயிர் வாழிடங்களின் சூழலை பாதிப்படையும் வண்ணம் இருப்பதைக் காணும் போது வேதனையாக இருக்கும். தூய்மையான காட்டுயிர் வாழிடங்களில் அதாவது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலோ, ஏரி, குளம் ஆறு போன்ற நீர்நிலைகளிலோ, பாலைவனங்களிலோ, பனிபடர்ந்த மலைப்பகுதிகளிலோ சினிமா ஷூட்டிங் நடத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். நாட்டுப்புறங்களிலும், கிராமங்களிலும், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் அந்த இடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்படையாது என்றே தோன்றுகிறது. எனினும் இது எடுக்கப்படும் காட்சியைப் பொறுத்ததே. ஆனால் வனப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் எடுக்கப்படும் ஒரு சில காட்சிகளால் நிச்சயமாக அந்த இடங்களுக்கு பாதிப்பு இருக்கும். உதாரணமாக ஒரு பாடலில் 20 பேர் ஆடிப்பாடி, பளபளக்கும் (மட்கிப்போகாத) ஜிகினாத்தாளை தூக்கி விசிறி பறக்கவிட்டால் அது அந்த இடத்தை நிச்சயமாக மாசுறச்செய்யும். அதுபோலவே காட்டில் ஓடி ஒளிந்துகொள்ளும் வில்லனையோ, கதாநாயகனையோ பலபேர் தேடிச் செல்லுவது போல எடுக்கப்படும் காட்சிகள் அந்த இடத்தின் தூய்மையையும் அமைதியையும் நிலைகுலையச்செய்யும்.
சில படங்கள் ஆரம்பிக்கும் முன்பு, ”இந்த படத்தில் பறவைகளையோ, விலங்குகளையோ துன்புறுத்தப்படவில்லை” என்று அறிவிப்பார்கள். அதுபோலவே, “இந்தப்படம் எடுக்கப்பட்ட இடங்களில் அதன் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று சொல்லும் காலம் வரவேண்டும். அப்போதுதான் என் போன்றவர்கள் பேசாமல் படம் பார்த்து ரசிக்க முடியும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 13. புதிய தலைமுறை 11 அக்டோபர் 2012

















