Archive for August 2014
தலைதெறிக்க ஓடியது சிறுத்தை!
நாங்கள் நால்வர். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மழைக்காட்டுப் பகுதியில் கானுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தோம். அதுவரை வானை மூடிக்கொண்டிருந்த மழை மேகங்கள் விலகி வெயில் அடிக்க ஆரம்பித்தது. அது வரை பெய்த மழையால் மரங்களிலிருந்து நீர் சொட்டிக் கொண்டேயிருந்தது. பறவைகளின் பாடல்கள் வழியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அழகிய மழைக்காட்டின் நெடிந்துயர்ந்த மரங்களையும், அவற்றின் தண்டிலும், கிளைகளிலும் படர்திருக்கும் பல வித பச்சை நிற பாசிகளையும், சிறு செடிகளையும், தரையில் வளர்ந்திருக்கும் பல வண்ண மலர்ச் செடிகளையும், காட்டின் திறப்பில் எதிரே தெரிந்த, மேகக்கூட்டங்கள் தழுவிய உயர்ந்த மலைச்சிகரங்களையும், காட்டுயிர்களையும் கண்டுகளித்த நிம்மதியில், களைப்பு தெரியாமல் (அவ்வப்போது அட்டைகளை கால்களிலிருந்து பிய்த்து எடுத்து தூர எறிந்து கொண்டே) நடந்தோம்.
வளைந்து நெளிந்து செல்லும் மழைக்காட்டின் பாதையில் பேசாமல் மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். மாலை 5 மணி. முன்னே சென்று கொண்டிருந்தவர் சட்டென எங்களை கையைக் காட்டி நிறுத்தினார். எங்கள் முன்னே காட்டுத்தடத்தின் ஓரத்தில் சுமார் 30 மீ தூரத்தில் ஒரு சிறுத்தை அமர்ந்திருந்தது. ஆமாம் சிறுத்தை. மகிழ்ச்சி தாளவில்லை எங்களுக்கு. உடனடியாக தடத்தைவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டோம். எங்களது கண்களாலும், சைகைகளாலும் பேசிக்கொண்டோம்.
அச்சிறுத்தை அமர்ந்திருந்த இடம் மரங்களில்லா ஒரு திறந்த வெளி. காட்டுத்தடத்தின் ஓரத்தில் அமர்ந்து கீழேயிருந்த பள்ளத்தாக்கை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அமர்ந்திருந்தது என்று சொல்வதைவிட கிட்டத்தட்ட படுத்திருந்து, தலையை மட்டும் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். என்ன ஒரு அழகு. காட்டில் எத்தனை வகை உயிரினங்களைக் கண்டாலும் ஒரே ஒரு சிறுத்தையை பார்ப்பதற்கு ஈடு இணையே கிடையாது. இயற்கை ஆர்வலர்களுக்கு இது புரியும்.
சிறுத்தைக்கென்று ஒரு வசீகரம் உண்டு. அதைக் காணும் போது இனம் புரியாத ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். அது நிச்சயமாக பயம் கிடையாது. சொல்லப்போனால் இயற்கை ஆர்வலர்கள் என்று இல்லை, மனிதர்கள் அனைவருக்கும் சிறுத்தையை இயற்கைச் சூழலில் பார்க்க ஆர்வம் இருக்கும். இதை நான் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிறுத்தையைப் பார்த்து பயம் கொள்பவர்கள் அதைப் பற்றி அறியாதவர்களே. அப்படிப்பட்டவர்கள் முதன் முதலில் சிறுத்தையைப் பார்க்கும்போது ஒரு வித அச்சம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிறுத்தையின் குணாதிசியத்தைப் பற்றி அறிந்து கொண்டால், அதை ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் நிச்சயமாகத் தோன்றும். அந்த ஈர்ப்பு சக்தி சிறுத்தைக்கு உண்டு.
வால்பாறையில் பல வேளைகளில் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கும் ஒரு தவறான பழக்கம் உண்டு. அப்போது கூண்டில் அடைபட்ட அந்த சிறுத்தையைப் பார்க்க வரும் கூட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். ஒரு சினிமா ஸ்டாருக்குக் கூட அவ்விதமான கூட்டம் கூடாது. என்னதான் இவ்வூர்க்காரர்கள் பலர் சிறுத்தையை நினைத்து பயந்தாலும், அதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் கூண்டில் அடைபட்ட, மன உளைச்சலில் இருக்கும் ஒரு பரிதாபமான உயிரைக் காண வருவார்கள். பெண்களும், ஆண்களும், வயதானோரும், இளைஞர்களும், சிறுமியரும், சிறுவர்களும் அலையெனத் திரண்டு வருவார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தோன்றும், இவர்களுக்கு மட்டும் சிறுத்தையப் பற்றி தெரிந்திருந்தால் இப்படி கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்திருக்க மாட்டார்கள். சிறுத்தையை இயற்கையான சூழலில் பார்ப்பதையே அவர்கள் விரும்பியிருப்பார்கள். சிறுத்தையைப் பற்றி அறிந்திருந்தால் சுதந்திரமாகச் சுற்றும் சிறுத்தையைக் கண்டு பயப்படாமல், அதைப் பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைத்திருப்பார்கள். அக்கணம் ஒரு சுவைமிக்க, மயிர்கூச்செறிய வைக்கும், வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்.

கூண்டில் பிடிக்கப்பட்ட சிறுத்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும். அப்போது அதனருகில் சென்று பார்ப்பது அதன் நிலைமையை மேலும் மோசமாக்கும். படம்: கணேஷ் ரகுநாதன்.
அன்மையில் வண்டலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகித்து அதை கூண்டு வைத்துப் பிடிக்க ஏற்பாடுகள் நடந்தன (1) (2) (3). சென்ற ஆண்டு பெரம்பலூர் பகுதியில் வனப்பகுதியில் அருகாமையில் இருக்கும் ஒரு கிராமத்தில் சிறுத்தையைப் கண்டதாலேயே அதை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது (4). சிறுத்தையைப் பற்றி அறிந்திருந்தால் அவர்களில் சிலர் அதைக் கூண்டு வைத்து பிடிக்கச் சொல்லி அதிகாரிகளை நிர்பந்தப் படுத்தியிருக்க மாட்டார்கள். எவரையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் குணங்களை மதிப்பிடுவது தவறு. அது சிறுத்தையின் விஷயத்திலும் பொருந்தும். சிறுத்தையை ஊருக்குள் பார்ப்பதாலேயே (குறிப்பாக வனப்பகுதியை அடுத்துள்ள பகுதிகளில்) அதை கூண்டு வைத்துப் பிடிப்பது தவறு. உண்மையில் சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள். மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலாவுவதை அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன. மனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பவை எனக்கருதப்படும் சிறுத்தைகளை பொறிவைத்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவிப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. மாறாக இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
ஒரிடத்திலிருந்து சிறுத்தையை பிடித்துவிட்டால், அச்சிறுத்தை உலவிவந்த இடத்தை வேறொரு சிறுத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். தாய் சிறுத்தையானது அதன் குட்டிகளுக்கு குறைந்தது 2-3 ஆண்டுகள் கூட இருந்து அவற்றிற்கு இரையை வேட்டையாடவும், மனிதர்களிடமிருந்து விலகிச் செல்லவும் கற்றுக்கொடுக்கும். ஒரு வேளை தாய் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தால் அதன் சிறுத்தைக் குட்டிகள் தாயின் மேற்பார்வையின்றி சுதந்திரமாகச் சுற்றித்திரிந்து எதிர்பாராவிதமாக மனிதர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கக்கூடும். ஆகவே ஒரிடத்தில் சிறுத்தைகள் நடமாடுவதைக் கண்டால் அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது நல்லது. நாம் அவற்றை தொந்தரவு செய்தால் ஒழிய அவை நம்மை அநாவசியமாகத் தாக்கவருவதில்லை என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.
நான் பார்த்துக் கொண்டிருந்த சிறுத்தைக்கு வருவொம். அதைக் கண்ட மகிழ்ச்சியில் ஓரிரு கணங்கள் திளைத்த பின் உடனடியாக எனது காமிராவை எடுத்து அதைப் படமெடுக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அழகு. அந்த மாலை வேளையில் வீசிய சூரியக்கதிர்கள் அதன் உடலில் தெரித்து, பொன்னிற மேனியை ஜொலிக்கச் செய்தது.
அவ்வேளையில் நாங்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் இருந்த மரத்தின் மேலே ஒரு நீலகிரி கருமந்தி தாவிக் குதித்து விக்குவது போன்ற உரத்த குரலெழுப்பியது. சிறுத்தையைக் கண்டு எழுப்பும் எச்சரிக்கைக் ஒலி அது. மெதுவாகத் திரும்பிய சிறுத்தை எங்களைக் கண்டது. கொடிய மிருகங்கள் வெகு அருகில் நின்று கொண்டிருப்பதைக் பார்த்தவுடன் அதன் கண்களில் குழப்பம், பயம், மிரட்சி.
கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பிப் பார்க்காமல் காட்டுக்குள் ஓடியது அந்தச் சிறுத்தை. ஆம், எங்களைக் கண்டு தலைதெறிக்க ஓடியது அந்தச் சிறுத்தை!
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 26th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
மஞ்சள் விசிறிவாலியின் நடனம்
குறைந்தது முக்கால் மணி நேரமாவது இருக்கும், அந்தப் பறவையைக் கவனித்துப் பின்தொடர்ந்து அது பறந்து செல்லுமிடமெல்லாம் சென்று கொண்டிருந்தேன். மரக்கிளைகளினூடே தூரமாகப் பறந்து சென்று என் கண்ணை விட்டு அகலும் வரை. சிட்டுக்குருவியின் உருவை ஒத்த சிறிய பறவைதான். ஆனால் இறக்கைகளை சற்று விரித்து வைத்துக் கொண்டிருப்பதால் கொஞ்சம் பெரியதாகத் தெரியும். நான் பார்த்துக் கொண்டிருந்தது மஞ்சள் விசிறிவாலி (Yellow-bellied Fantail Chelidorhynx hypoxantha) எனும் ஒரு அழகான பறவையை. இது ஈப்பிடிப்பான்கள் (Flycatchers) வகையைச் சேர்ந்தது. இந்த ஈப்பிடிப்பான்களுக்கென்றே ஒரு பிரத்தியேக குணம் உண்டு. ஓரிடத்தில் அமர்ந்து காற்றில் அல்லது இலைகளில், கணுக்களில், கிளைகளில் இருக்கும் பூச்சிகளை பறந்து சென்று பிடித்து மீண்டும் (பெரும்பாலும்) இருந்த இடத்திற்கே வந்து அமரும் பண்புள்ளவை.
இந்தியாவில் நான்கு வகையான விசிறிவாலிகள் உள்ளன. அவற்றில் இரண்டு வகைகளைத் தமிழக வனப்பகுதிகளில் காணலாம். அவை (1) வெண்புருவ விசிறிவாலி (White-browed Fantail Rhipidura aureola), (2) வெண்புள்ளி விசிறிவாலி (White-spotted Fantail Rhipidura (albicollis) albogularis). முதலாவது இந்தியா முழுவதும் (இமயமலை அடிவாரக் காடுகள், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக) பரவி காணப்படும். இலங்கையிலும் தென்படுகிறது. வெண்புள்ளி விசிறிவாலி கங்கை நதிக்கு தெற்கேயுள்ள தீபகற்ப இந்தியாவின் பல பகுதிகளில் பரவி காணப்படுகிறது. முன்றாம் வகை வெண் தொண்டை விசிறிவாலி (3) (White-thorated Fantail Rhipidura albicollis). இது இமயமலை அடிவாரக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்கள், ஒரிசா, பீஹார் முதலிய கிழக்கு இந்திய மாநிலங்களிலும், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தென்படுகின்றன. இவை பொதுவாக புதர்க்காடுகள், இலையுதிர் காடுகளிலும், அதனை அடுத்த தோட்டங்களிலும், ஊர்ப்புறங்களிலும் தென்படுகின்றன. நான் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சள் விசிறிவாலி இமயமலை அடிவாரக்காடுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், வங்காளதேசத்திலும் மட்டுமே தென்படும்.
நான் இருந்தது உத்ராஞ்சல் மாநிலத்தின், ஜிம் கார்பெர்ட் புலிகள் காப்பகத்தினை ஒட்டிய சால் மரங்கள் நிறைந்த வனப்பகுதியில். விசிறிவாலிகளைப் பார்ப்பவர்கள் அவை சுறுசுறுப்பாக சிறகடித்துப் பறக்கும் விதத்திலும், தங்களது வால் சிறகுகளை அவ்வப்போது விரித்து பக்கவாட்டில் ஆட்டி ஆட்டி நடனமாடுவதைப்போல் அங்குமிங்கும் துள்ளித் திரிவதையும் கண்டு அதிசயித்துப் போவார்கள். இது பார்ப்பவரின் மனதை உடனே கொள்ளை கொள்ளும் அழகான பறவையினம். நான் முதன்முதலில் பார்த்த விசிறிவாலி வெண்புருவ விசிறிவாலி. 1998ம் ஆண்டு ஜவ்வாது மலைத்தொடரில் உள்ள காவலூர் எனும் ஊரினருகிலிருக்கும் வனப்பகுதியில் இப்பறவையைக் கண்டுகளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஏனைய இரண்டு விசிறிவாலிகளையும் ஆந்திராவிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கண்டிருந்தாலும், மஞ்சள் விசிறிவாலியை இங்குதான் முதலில் பார்த்தேன். இந்தியாவில் தென்படும் முன்று வகை விசிறிவாலிகளின் இறக்கையும் உடலும் கருப்பும், வெள்ளையுமாக இருக்கும் ஆனால் மஞ்சள் விசிறிவாலியின் இறக்கை, வால், உடலின் மேல் பகுதி யாவும் பழுப்பு நிறமாகவும், உடலின் கீழ்பகுதியும், புருவமும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். மற்ற எல்லா விசிறிவாலிகளைக்காட்டிலும் இது சற்று உருவில் சிறியதாகவும் இருக்கும். அலகில் இருந்து கண்களின் பின்னோக்கி இருக்கும் சிறகுகள் கருப்பாக இருப்பதால் இது கருப்பு கண்ணாடி அணிந்திருப்பதுபோன்ற தோற்றமளிக்கும்.
அது காலை நேரம். சூரிய ஒளி மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது. எனினும் குளிராகத்தான் இருந்தது. சால் மர இலைகளிலிருந்து இரவில் பெய்த பனித்துளிகள் சூரிய வெப்பத்தில் மெல்ல உருகித் திரண்டு, கீழே ஒவ்வொன்றாக மெல்லச் சொட்டிக்கொண்டிருந்தது. மரத்தின் மேலிருந்த இலைகளிலிருந்து கீழ் கிளைகளில் உள்ள இலைகளில் “டப்” என்ற ஒலியுடன் விழுந்து தெரித்துக்கொண்டிருந்தது. இந்தக் கிளைகளுக்கு இடையில் தான் அந்த மஞ்சள் விசிறிவாலியைக் கண்டேன். மரக்கிளைகளில் பறந்தும், தாவிக்கொண்டுமிருந்த அந்த மஞ்சள் விசிறிவாலி இலைகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாக, மேலிருந்து வந்த சூரிய ஒளி விழுந்த ஓர் இடத்தில் வந்தமர்ந்தது. நான் அதை பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. அதை எனது காமிராவில் படமெடுக்கவும் முயன்று கொண்டிருந்தேன்.
மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் படமெடுப்போருக்கு சூரிய ஒளி அமைவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. நவீன டிஜிட்டல் SLR காமிராக்களில் ஒளி குறைவான இடங்களிலும் கூட ISO வை அதிகப்படுத்தி நல்ல படங்கள் எடுக்கக்கூடிய வசதிகள் இருக்கும். எனினும் இயற்கையான சூரிய ஒளியில் எடுக்கப்படும் படத்தின் அழகே தனிதான். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், கண் மூடித்திறக்கும் நேரத்தில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் பறவைகளைப் படமெடுப்பதென்பது எளிதான காரியமல்ல. அவற்றை இருநோக்கி வழியாக கண்ணெடுக்காமல் தொடர்ந்து பார்ப்பதென்பதே கடினமான செயல். இந்நிலையில் அவற்றை படமெடுக்க இன்னும் அதிகம் உழைக்கவேண்டும். நல்ல படம் அமைய அதிர்ஷ்டமும் இருக்கவேண்டும்.
முதலில் அப்பறவையை பார்த்து அது துள்ளித்திரிவதை ரசித்தபடியேதான் இருந்தேன். பின்புதான் அதை படமெடுக்க முயற்சிக்கலாமே என்ற ஆசை துளிர்விட்டது. அதுவும் ஓரளவிற்கு நான் வைத்திருந்த காமிராவிற்கு எட்டுமளவிற்கு அருகில் இருந்த தாழ்ந்த மரக்கிளையில் வந்தமர்ந்த போது எனது காமிராவை தயார்படுத்தினேன். ஒரு கண்ணை மூடி மறு கண்ணால் காமிராவிலுள்ள கண்ணோக்கி வழியாக அப்பறவையை தொடரலானேன். ஓரிரு படங்களை எடுத்தாலும் அப்படி ஒன்றும் தெளிவாக இல்லை. அப்பறவையின் மேல் லென்சை குவியப்படுத்தும் முன்பே பறந்து விடும். கலங்கலான பறவையின் படமே மிஞ்சும். அல்லது படமெடுக்கும் பொத்தானை அழுத்தியவுடன் பறவை பறந்து போய் படத்தில் அது அமர்ந்திருந்த கிளை மட்டுமே இருக்கும். சிறிது நேரம் அப்பறவை என்னை அங்குமிங்கும் அலைக்கழித்தது. முயற்சியைக் கைவிட்டு விடலாம் என்று கூட தோன்றியது. அந்நிலையில் தான் சூரிய ஒளி இருந்த இடத்திற்கு அப்பறவை வந்தமர்ந்தது. அதன் மஞ்சள் நிற உடலில் இளங்காலை வெயில் பட்டு பொன் நிறத்தில் மின்னியது. எப்போதும் செய்வதுபோல் வால் இறக்கைகளை விசிறி போல் விரித்து கால்களை மாற்றி மாற்றி வைத்து அங்குமிங்கும் துள்ளியது. அதைச் சுற்றிலும் உள்ள பூச்சிகளைக் காண்பதற்காகவும், பிடித்துண்பதற்கு ஆயத்தமாவதற்குமே அப்படிச் செய்கிறது என்றாலும் அப்படிச் செய்வது அது நடனமாடுவது போலவே தோன்றியது.
சூரிய ஒளி என் தலைக்குப் பின்னாலிருந்து வீசியதால் அங்கு பறந்து கொண்டிருந்த சிறிய பூச்சிகளின் மேல் பட்டுத் தெரித்து மின்னியது. இவற்றை அந்த மஞ்சள் விசிறி வாலி பார்த்திருக்க வேண்டும். நான் நின்ற இடத்திலிருந்து சுமார் 5 அடி தூரத்திற்கு அருகில் இறக்கைகள் படபடக்க பறந்து வந்து அங்கு பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய பூச்சிகளை ஒரே வீச்சில் (பறப்பில்)(பாய்ச்சலில்) பிடித்து மீண்டும் கிளைக்குத் திரும்பியது. கண்ணிமைக்கும் நேரத்தில் என் கண் முன்னே ஒரு மத்தாப்பு மின்னி மறைந்தது போலிருந்தது. காற்றில் நடனமாடி என்னை வாய்பிளந்து நிற்கச் செய்த அப்பறவை வெளிச்சம் மிகுந்த இடத்திற்கு சென்று அமர்ந்தது. வாய்ப்பை நழுவ விடாமல் உடனே காமிராவைத் திருப்பி படமெடுக்க ஆரம்பித்தேன்.
காமிராத்திரையில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்தபோது ஒரே ஒரு படம் என் மனதைக் கவர்ந்தது. அந்தக் காலை வேளை சூரிய ஒளியில் நனைந்து, இறக்கைகளை அகல விரித்து, வால் இறகுகள் விசிறி போல் விரிந்து பின்னழகைக் காட்டிக்கொண்டு இருந்தது அப்பறவை. அப்படி ஒன்றும் பெரிய அழகான படம் இல்லையென்றாலும், விசிறிவாலியின் பண்பைக் காட்டும் விதத்தில் இருந்ததால், அந்தப் படம் எனது மனதிற்கு நிம்மதி அளித்தது. விசிறிவாலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதினாலும், பல மணிநேரம் பேசினாலும் அவற்றை நேரில், இயற்கையான சூழலில் பார்ப்பது போல் ஆகாது. அதைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அந்த ஒரு கணத்தை தம் வாழ்வில் என்றுமே மறக்க மாட்டார்கள்.
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 19th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
நாம் வாழ, நம் யானைகளும் வாழ…
ஒரு நாள் காலை நண்பர் தொலைபேசியில் அழைத்து அய்யர்பாடிகாரனும், சின்ன மோனிகாவும் வனப்பகுதியின் ஓரமாக தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே ஒரு ஆச்சர்யமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து உறங்கிக் கொண்டிருகிறான், அவள் நின்று கொண்டிருக்கிறாள் என. வியப்பு மேலிட உடனே அந்த இடத்திற்கு விரைந்தேன். அவர் சொன்னபடியேதான் இருந்தது நான் இதுவரை கண்டிறாத அந்தக் காட்சி. சற்று நேரத்தில் அவளும் மெதுவாக தனது கால்களை மடக்கி பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். இரவெங்கும் சுற்றியலைந்து உணவு தேடும் போதும், இடம்பெயரும் போதும் வழியெங்கும் மனிதர்களால் ஓட ஓட விரட்டப்பட்டதாலோ என்னவோ பகலில் அவர்களிருவரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆள் அரவமற்ற அந்த இடத்தில் அவர்கள் இருவரும் நிம்மதியாகத் தூங்குவதைக் கண்டு எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.
ஒவ்வொரு யானையையும் அடையாளம் கண்டு பெயரிடுவது ஆராய்ச்சியாளர்களின் இயல்பு அய்யர்பாடிக்காரனையும், சின்ன மோனிகாவையும் போல வால்பாறை பகுதியில் சுமார் 80-100 யானைகள் இருக்கிறார்கள். வால்பாறையைச் சுற்றிலும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது காலகாலமாக நிகழ்ந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய மனிதர்களாகிய நாம் யானைகளின் வழித்தடங்களில் (elephant corridors) வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தோம். ஆகவே, இந்த வால்பாறை பகுதி மனிதர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் யானை முதலிய காட்டுயிர்களுக்கும் தான். தற்போது சுமார் 220 சதுர கி.மீ பரப்பில் அமைந்த, தேயிலைத் தோட்டங்களும், துண்டாக்கப்பட்ட மழைக்காட்டுச் சோலைகளும் உள்ள இப்பகுதியில் மக்கள் தொகை சுமார் ஒரு இலட்சம். ஆகவே மனித அடர்த்தி மிகுந்த இடத்தில் யானைகளுடன் மனிதர்களோ, மனிதர்களுடன் யானைகளோ எதிர்கொள்ள நேரிடுவது பல வேளைகளில் தவிர்க்க முடியாது. இதன் விளைவுகளில் முதலாவது பொருட்சேதம், இரண்டாவது உயிர்ச்சேதம். அதாவது, ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, பருப்பு முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால், அக்கட்டிங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளின் அருகாமையில் இருப்பின் அங்கும் சில வீடுகளிலும் சேதம் ஏற்படுகிறது. இந்த பொருட்சேதத்தை பல வழிகளில் ஈடுகட்ட முடியும். ஆனால் மனித உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது. இதைத் தவிர்க்க இப்பகுதியில் வனத்துறையும், யானை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
முதலில் மனித உயிரிழப்பு ஏன், எப்படி, எப்போது, எங்கு ஏற்படுகிறது என்பது ஆராயப்பட்டது. இப்பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக யானைகளின் இடம்பெயர்வையும், பண்புகளையும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் Dr. ஆனந்தகுமாரும் அவரது குழுவினரும் இதற்கான விடைகளைக் கண்டறிந்தனர். சுற்றிலும் வனப்பகுதியைக் கொண்ட, மனிதர்களின் அடர்த்தி மிகுந்த வால்பாறை பகுதியில் ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானைகளும் மனிதர்களும் எதிர்பாராவிதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும், சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் முக்கிய காரணம். டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. ஆகவே வனத்துறைனரின் உதவியுடன் வால்பாறையில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. யானைகளின் இருப்பிடம், முன்கூட்டியே பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பப்பட்டது, யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வாழும் (சுமார் 2 கீ.மீ. சுற்றளவில்) பொதுமக்களுக்கு அவர்களுடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டது, அப்பகுதியின் மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. இவ்விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே நாளடைவில் செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். 2011ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்ட இத்திட்டங்களினால் மனித உயிரிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதிலும் 2013ம் ஆண்டு எந்த ஒரு மனித உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வினைப் பற்றிய விரிவான கட்டுரையை இங்கே காணலாம்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல கால காலமாக இருந்து வரும் ஒன்று. இதை நம் இலக்கியங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் நாம் அறியலாம். சமீப காலமாக இந்த எதிர்கொள்ளல் அதிகரித்திருப்பதென்னவோ உண்மைதான். அதற்கான காரணங்களில் முக்கியமானவை மக்கள் தொகைப் பெருக்கம், காடழிப்பு, கள்ளவேட்டை, விவசாய முறைகளில் மாற்றம் முதலியவை தான் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அழிந்து வரும் பேருயிர் யானை. அதைப் பாதுகாப்பது நம் கடமை. யானைகளால் ஏற்படும் சேதங்களால் பாதிக்கப்படுவோர் அவற்றை எதிரியாகப் பாவிப்பது இயல்புதான். ஆகவே இதுபோன்ற மனித-யானை எதிர்கொள்ளலால் ஏற்படும் விளைவுகளை, வால்பாறையில் செயல்படுத்தப்பட்டது போன்ற அறிவியல் ஆய்வுத் தரவுகளைக் கொண்டு கையாளவும், சமாளிக்கவும் வேண்டும். பாதிப்பினை தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். வால்பாறையில் பின்பற்றப்படும் செயல்திட்டங்கள் அனைத்தும் மனிதர்-யானை எதிர்கொள்ளல் இருக்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் என நினைப்பதும் தவறு. இடத்திற்குத் தகுந்தவாறு எதிர்கொள்ளாலைத் தணிக்க, சரியான திட்டங்களை அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டும். இது வனத்துறையின் பணிமட்டுமே அல்ல. எல்லா அரசுத்துறைகளும், ஆராய்ச்சியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், குறிப்பாக பொதுமக்களும் இவற்றில் பங்கு பெறவேண்டும். அப்போதுதான் எந்த ஒரு செயல் திட்டமும் நீண்ட காலம் நீடித்துப் பலன் தரும். இதுவே யானைகள் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். இங்கே நாமும் நிம்மதியாக வாழ வேண்டும், யானைகளும் வாழ வேண்டும்.
வால்பாறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரிவாகக் காண கீழ்கண்ட வீடியோவைக் காண்க
யானைகளைப் பற்றி மேலும் அறிய காண்க:
யானை அழியும் பேருயிர் எழுதியவர் ச. முகமது அலி
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 12th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
பஷீரின் குடுமிக்கழுகு
வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்குப் போய்க் கொண்டிருந்தது வண்டி. முன் இருக்கையில் அமர்ந்து சாலையோரத்து வனப்பகுதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அட்டகட்டியைத் தாண்டியவுடன் சாலையோரத்தில் மரங்களில்லா வெட்ட வெளியைத் தாண்டிச் சென்றோம். சாலையை விட்டு சற்றுத் தள்ளி மலைச்சரிவில் இலைகளில்லாத ஒரு மொட்டை மரம் நின்று கொண்டிருந்தது. அதைக் கடந்து செல்லும் போது மரத்தின் மத்தியில் இருந்த பிளவுபட்ட ஒரு கிளையில் ஏதோ அசைவது கண்ணில் தென்பட்டது. உடனே நிறுத்தும்படிச் சொல்லி வண்டியை பின்னால் எடுக்கச் சொன்னேன். அருகில் சென்றதும் தெரிந்தது, அது ஒரு குடுமிக்கழுகின் கூடு. வண்டியை போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் சற்று தள்ளி நிறுத்திவிட்டு இருநோக்கியின் (Binoculars) மூலம் அப்பறவைக் கூட்டைக் கவனிக்கலானேன்.
என் கண்ணுக்கு நேரான மட்டத்தில் சாலையை விட்டு சற்று தூரமாக அமைந்திருந்தது அந்தக் கூடு. அந்தக் கழுகு, கூடு கட்ட மிக அருமையான இடத்தையும், மரத்தையும் தேர்ந்தெடுத்திருந்தது. நெடுந்தோங்கி வளர்ந்திருந்த மரத்தண்டின் மத்தியில் இரு பெரும் கிளைகள் பிளவுபட்டிருந்த இடத்தில் மரச்சுள்ளிகளால் தட்டு போன்ற பெரிய கூடு இருந்தது. அதில் அமர்ந்திருந்தது ஒரு குடுமிக்கழுகு. அது பெட்டையாகத்தான் இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் போது ஒரு வேளை அசையாமல் அமர்ந்திருந்தால் என்னால் அதை கவனித்திருக்க முடியாது. ஆனால் அது அவ்வப்போது எழுந்து சுள்ளிகளை தனது கூரிய அலகால் நகர்ந்தி சரி செய்து வைத்துக் கொண்டிருந்தது. பின்பு உடலை பக்கவாட்டில் அசைத்து அமர்ந்தது. நிச்சயமாக முட்டையிட்டிருக்கும். சிறிது நேர கவனத்திற்குப் பின் அந்த மரத்தின் இடதுபுற மேல் கிளையில் இன்னுமொரு குடுமிக்கழுகு அமர்ந்திருந்ததைக் கண்டேன். அது ஆண் பறவையாகத்தான் இருக்க வேண்டும். ஆணும், பெட்டையும் சேர்ந்து கூடு கட்டினாலும், அடைகாப்பது பெட்டை மட்டுமே.
நான் அக்கழுகினை பார்த்துக் கொண்டிருந்ததையும், காமிராவில் படமெடுப்பதையும் பார்த்த காரோட்டி பஷீர் மெல்ல அருகில் வந்து அங்கே என்ன பார்க்கிறீர்கள் என்றார். இருநோக்கியைக் கொடுத்து கழுகு இருக்கும் திசையில் பார்க்கச் சொன்னேன். கிட்டக்க தெரியுது சார்! அதோட மூக்கு (அலகு) கூர்மையா இருக்கு சார் என்று ஆச்சரியத்துடன் சொன்னார். பறவையின் பெயரைக் கேட்டார். காட்டுக் குடுமிக்கழுகு என்றேன். மரக்கிளையில் அமர்ந்திருந்த ஆண் பறவையையும் காட்டி அதை பார்க்கச் சொன்னேன். அதன் உச்சந்தலையிலிருந்து பின்னால் 3-4 சிறகுகள் தனியாகச் சிலுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, இதனால் தான் இதற்கு குடுமிக்கழுகா என்றார். ஆம் என்றேன். தமிழ்நாட்டில் இரண்டு வகையான குடுமிக்கழுகு இருப்பதையும், நாம் பார்ப்பது வனப்பகுதியில் மட்டுமே வாழும் காட்டுக் குடுமிக்கழுகு (Legge’s hawk eagle), மற்றொன்று குடுமிக்கழுகு (Changeable Hawk-eagle) என்றும் சொன்னேன். அவை என்ன சாப்பிடும் என்று கேட்டார். குரங்கு, மந்தி, முயல், காட்டுக்கோழி, மயில் போன்ற உருவில் பெரிய உயிரினங்களையும் பிடித்து இரையாகக் கொள்ளும் திறன் வாய்ந்தது. அவ்வப்போது, பல்லிகள், ஓணான்கள் முதலிய சிறிய ஊர்வனவற்றையும், மைனா, புறா, கிளி போன்ற சிறிய பறவைகளையும் வேட்டையாடி உண்ணும் என்று சொன்னேன். பஷீருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இரயிலுக்கு நேரமானதால் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
அடிக்கடி இல்லையென்றாலும் இரு மாதத்திற்கு ஒரு முறையாவது வாடகைக் காரில் வால்பாறையிலிருந்து கோவைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும் சூழல் ஏற்படும். ஒரு முறை நான் வழக்கமாக அழைக்கும் காரோட்டி வராததால் பஷீரை அனுப்பி வைத்தார். அதிலிருந்துதான் அவரைத் தெரியும். பஷீர் ஒரு பொறுப்பான காரோட்டி. எப்போதும் நிதானமாக வண்டியை ஓட்டிச் செல்வார். வளைவுகளில் முந்துவதில்லை. மேலேறி வரும் வாகனத்திற்கு ஒதுங்கி வழிகொடுப்பது என மலைப்பாதையில் வண்டி ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுபவர். முக்கியமாக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது போன் வந்தால் அதை எடுத்துப் பேச மாட்டார். முக்கியமான அழைப்பாக இருந்தால் என்னிடம் கேட்டுவிட்டு வண்டியை நிறுத்திய பின் பேசுவார். வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதும் கூட தேவைப்பட்டால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசும் குணமுள்ளவர். அவரது வண்டியில் போவது இது இரண்டாவது முறை. அதிகம் பேசாத அவர், இந்த குடுமிக்கழுகினை பார்த்தது முதல், பறவைகளைப் பற்றியும், காட்டுயிர்களைப் பற்றியும் வழியெங்கிலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.
இது நடந்து ஒரு மாதம் கழித்து (ஏப்ரலில்) ஒரு நாள் எனக்கு பஷீரிடமிருந்து போன் வந்தது. “சார்..முட்டை பொரிஞ்சி, குஞ்சு வெளியில வந்துடுச்சின்னு நெனக்கிறேன் சார்” என ஆர்வம் மேலோங்க கத்திச் சொன்னார். என்னை விட அதிகமாக பயணம் செய்பவர் அவர். அவ்வழியே போய் வரும் போதெல்லாம் அக்கூட்டினை கண்காணித்து வந்திருக்கிறார். எப்படித் தெரியும் எனக் கேட்டேன். வண்டியை நிறுத்தி சற்று நேரம் கூட்டை பார்த்த போது ஏதோ சிறியதாக அசைந்தது என்றார்.
அது நடந்து சில நாட்களில் கோவைக்குச் செல்லும் வேலையிருந்த போது பஷீரின் வண்டியில் பயணம் செய்தேன். அப்போது அக்கூட்டினை பார்த்த போது பஞ்சு போன்ற தூவிகளைக் கொண்ட சிறிய குஞ்சு அசைவது தெரிந்தது. அதைச் சுற்றி பச்சை இலைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. பிறந்த அந்த கழுகுக்குஞ்சினை கூட்டின் கிளைகள் குத்தாமல் இருக்கவே பச்சை இலைகளால் ஆன மெத்தை போன்ற இந்த ஏற்பாடு. இருநோக்கியின் மூலம் கழுகுக்குஞ்சை ஆர்வத்துடன் பார்த்தார் பஷீர். அம்மரத்தின் உச்சியில் ஒரு கழுகு அமர்ந்திருந்தது. பெட்டைக் கழுகாக இருக்கலாம். குஞ்சு பொரித்தவுடன் ஆண் அவ்வப்போது, தான் வேட்டையாடிய இரை உயிரிகளை கூட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கும். பெரும்பாலும் பெண் கூட்டினருகிலேயே இருக்கும்.
பஷீருடன் அந்தக் கழுகு கூடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மரத்தையும் இடத்தையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த மரத்தின் எந்தக் கிளையில் அமர்ந்து பார்த்தாலும் விசாலமாக முன்னே பரந்து விரிந்திருக்கும் கானகத்தினையும் அதனையடுத்த பகுதிகளையும் பார்க்க முடியும். எதிரி உயிரினங்களிடமிருந்து கூட்டைக் காக்கவும், அம்மரத்தின் உச்சியிலிருந்து கொண்டே அக்கானகத்தின் விதானப்பகுதியை நோட்டமிட்டு வேட்டையாட ஏதேனும் இரை உயிரினங்கள் தென்படுகின்றனவா எனப் பார்ப்பதற்கும் அந்த இடம் ஏதுவாக இருக்கும். இதையெல்லாம் கேட்ட பஷீர் சொன்னார்,” நம்பள மாதிரிதான சார் அதுகளும். நம்ம வசதிக்கு ஏத்த மாதிரிதான நம்ம வீடு பாத்துக்கிறோம்”.
நான்கு மாதம் கழித்து (ஆகஸ்டு) மீண்டும் பஷீருடன் அவ்வழியே பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் சொல்லாமலேயே கூடு இருக்குமிடத்திற்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்தினார். என்னிடமிருந்த இருநோக்கியை வாங்கி கூட்டை பார்க்க ஆரம்பித்தார். அங்கு கழுகு இல்லாததால் அருகிலிருந்த கிளைகளை நோட்டமிட்ட அவரது முகம் மலர்ந்தது. காமிராவை தயார் செய்து கொண்டிருந்த என்னிடம், “சார் கழுகு குஞ்சு வளர்ந்து பெரிசாயிடுச்சி” என்றார். அம்மரத்தின் கிளையில் குடுமிக்கழுகின் இளம் பழுப்பு நிறக் குஞ்சு அமர்ந்திருந்தது. சற்று நேரத்தில் கீ..கீ..கீ.. என உரக்கக் குரலெழுப்ப ஆரம்பித்தது. “அதோட அம்மாவ கூப்பிடுதா சார்” என்றார். சிறு குழந்தை போன்ற அவரது ஆர்வத்தைக் கண்டு புன்னகையுடன், “இருக்கலாம்” என்றேன்.
இந்த ஆண்டு வெளியூருக்கு அதிகம் பயணிப்பதில்லை. ஆகவே, பஷீரை சந்தித்தும் பல நாட்கள் ஆகிறது. இப்போதெல்லாம் அவரிடமிருந்து போனும் வருவதில்லை. எனக்கும் அவரை தொடர்பு கொள்ள நேரமும் கிடைக்கவில்லை. அவரும் என்னைப் போல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கக்கூடும். கழுகுகள் பல வேளைகளில் தான் கட்டிய கூட்டை மறுபடியும் பயன்படுத்தும் குணமுடையவை. ஆகவே, ஒருவேளை மீண்டும் அந்த கூட்டில் அவரது குடுமிக்கழுகினைக் கண்டால் நிச்சயமாக என்னை போனில் அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 5th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.















