Archive for November 2022
நீலகிரி நெட்டைக்காலி Nilgiri Pipit
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
நீலகிரி நெட்டைக்காலி Nilgiri Pipit Anthus nilghiriensis – Vulnerable

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் உச்சியில் (சுமார் 1500- 2000மீ உயரம் வரை) உள்ள புல்வெளிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. வெளிர் மஞ்சள் நிற உடலில் பழுப்பு வரிகளைக் கொண்டிருக்கும் சிறிய பறவை. புற்களினுடே நடந்து அல்லது ஓடிச் சென்று இரைதேடும்.
மலையுச்சிப் புல்வெளிகளில் சாலை அமைத்தல், அதிக அளவில் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines) அமைத்தல், பரவும் வந்தேறித் தாவரங்களின் (Invasive Alien Plants) பெருக்கம், வாழிடம் துண்டாதல், சீரழித்தல் காரணமாக இவை ஒரு காலத்தில் காணப்பட்ட இடங்களில் இருந்து மறைந்தும், இப்போது இருக்கும் இடங்களிலும் மேற்சொன்ன காரணங்களால் எண்ணிக்கையில் குறைந்தும் வருகின்றன. மலையுச்சிகளில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.
காஷ்மீர் பூச்சிபிடிப்பான் Kashmir Flycatcher
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
காஷ்மீர் பூச்சிபிடிப்பான் Kashmir Flycatcher Ficedula subrubra – Vulnerable

இமயமலைத் தொடரில் குறிப்பாக ஜம்மு காஷ்மிர் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் (சுமார் 1800-2300 மீ உயரத்தில்) இவை குளிர் காலத்தில் அங்கிருந்து தெற்கு நோக்கி வலசை வருகின்றன. தமிழ்நாட்டில் ஊட்டியை அடுத்த பகுதிகளில் இவை வலசை வரும் காலங்களில் பொதுவாகக் காணலாம். இவை மேலும் தெற்கு நோக்கி இலங்கைக்கு வலசை போகின்றன. இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் காடழிப்பு, வாழிடம் சீரழித்தல் மலையுச்சிகளில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகளுக்குக் ஆளாகக்கூடும்.
சோலைச் சிட்டு White-bellied blue robin
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
சோலைச் சிட்டு White-bellied blue robin Sholicola albiventris – Vulnerable

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலையுச்சியில் உள்ள (1000மீ – 2200மீ) சோலைக் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பாலக்காடு கனவாய்க்குக் தெற்கே உள்ள மலைப் பகுதிகளில் மட்டுமே தென்படும். நீலகிரி மலைப்பகுதியில் தென்படும் நீலகிரி சோலைச்சிட்டு (Nilgiri Blue Robin Sholicola major) ஒரு காலத்தில் இப்பறவையின் உள்ளினமாக (sub species) கருதப்பட்டது. ஆனால், மரபியல் சார்ந்த (Genetic) இனவரலாற்று (Phylogenic) ஆராய்ச்சியின் விளைவாக நீலகிரி சோலைச்சிட்டு தற்போது தனி இனமாக அறியப்படுகிறது.
இதன் உடல் முழுவதும் கரு நீல நிறத்திலும், வயிறும் வாலடியும் வெள்ளை நிறத்திலும், உடலின் பக்கவாட்டுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் இருக்கும். நெற்றியில் வெள்ளைக் கீற்று இருக்கும். சோலைச்சிட்டு பொதுவாக சோலைக்காடுகள் அதனை ஒட்டி அமைந்துள்ள காடுகளில் உள்ள ஓடையோரப் பகுதிகளில் தென்படும். இதன் குரல் இனிமையாக இருக்கும்.
இவற்றின் வாழ்விடங்களான சோலைக்காடுகள் மற்றும் அதனை அடுத்த பகுதிகள் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக (வனப்பகுதியில் சாலைகள் அமைத்தல், நீர்மின் திட்டங்கள், ஓரினத் தோட்டப் பயிர்களுக்காக வனப்பகுதிகள் திருத்தி அமைக்கப்படுதல் முதலான) திருத்தியமைக்கப்படுவதால் இவற்றின் வாழிடம் சீரழிவுக்குள்ளாகியும், ஆபத்துக்குள்ளாகியும் உள்ளது. ஆகவே இவற்றின் எண்ணிக்கை மெல்லக் குறைந்து வருகின்றது.
பொதிகைமலை சிரிப்பான் Ashambu Laughingthrush
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
பொதிகைமலை சிரிப்பான் Ashambu Laughingthrush Montecincla meridionalis – Vulnerable

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் தென் கோடியில் உள்ள பொதிகை மலைப் பகுதியின் உச்சிகளில் மட்டுமே தென்படும் அரிய ஓரிடவாழ்வி. இவை குரலெழுப்பும் விதம் சிரிப்பதைப் போலிருப்பதால் இப்பெயர் பெற்றன. இதற்கு முன் இவை Kerala Laughingthrushன் (கேரளா சிரிப்பான்) உள்ளினமாகக் கருதப்பட்டது. எனினும் மரபியல் சார்ந்த, இனவரலாற்று ஆராய்ச்சியின் விளைவாக இது தற்போது தனி இனமாக அறியப்படுகிறது.
இவை மலையுச்சிப் பகுதிகளில் உள்ள சோலைக்காடுகளில், மழைக்காடுகளில், அதனையடுத்த தேயிலை தோட்டங்கள் முதலிய பகுதிகளில் தென்படுகின்றன. குறுகிய பரவல், வாழிட இழப்பு மற்றும் சீரழித்தல், மலையுச்சிகளில் நிலவும் காலநிலை (Climate Change) மாற்றம் ஆகிய காரணங்களால் இவை அதிக பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.
மஞ்சள்தொண்டை சின்னான் Yellow-throated Bulbul
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
மஞ்சள்தொண்டை சின்னான் Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus – Vulnerable

இந்தியாவில் மட்டுமே குறிப்பாக, தென்னிந்தியாவில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. புதர்களும், கரடு முரடான பாறைகளும் நிறைந்த இடங்களிலும் அதனையடுத்த வனப்பகுதிகளிலும் இவை அதிகம் தென்படும். அத்தி மரங்கள் பழுத்த நிலையில் அவற்றை உண்ண இப்பறவைகள் வருவதைக் காணலாம்.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் (பெரும்பாலும் அடிவாரப் பகுதிகளில்) கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் (செஞ்சிக் கோட்டையில்) இவற்றை எளிதில் காணலாம். புதர்க்காடுகளை அழித்தல், பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தல், வாழிடத்தைச் சீரழித்தல் முதலான காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.
கருமீசை புல்குருவி Bristled Grassbird
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
கருமீசை புல்குருவி Bristled Grassbird Chaetornis striata – Vulnerable

உயரமான புற்களும், புதர்களும் உள்ள இடங்களிலும், புற்கள் உள்ள ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. வட இந்தியாவில் தெராய் நிலப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் (இமய மலை அடிவாரப் பகுதி) இவற்றைப் பொதுவாகக் காணலாம். இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே தென்படும் இவை, தமிழ் நாட்டிற்கு வலசை வருகின்றன. இவை இங்கே இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருந்தாலும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே சென்னையை அடுத்த பகுதிகளில் இவை பதிவு செய்யப்பட்டன (பிப்ரவரி-ஏப்ரல் முதல் வாரம் வரை). இவை வாழுமிடங்களை விவசாயத்திற்காகத் திருத்தி அமைத்தல், புல்வெளிகளைச் சீரழித்தல், அபரிமிதமாகக் கால்நடைகளை மேய்த்தல் போன்ற காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.
பட்டைவால் புல்குருவி Broad-tailed Grassbird
தமிழ்நாட்டின் அற்றுப் போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
பட்டைவால் புல்குருவி Broad-tailed Grassbird Schoenicola platyurus – Vulnerable

கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலையுச்சி புல்வெளிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. இவை பரவியிருக்கும் பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதாலும், ஓரினப்பயிர்களுக்காக அழிக்கப்படுவதாலும், பரவும் வந்தேறித் தாவரங்களால் வாழிடம் கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்தும், சுருங்கியும் போவதாலும், வாழிடங்கள் துண்டாகிப்போவதாலும், இவை ஆபத்துக்குள்ளான பறவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
வெண்பிடரி பட்டாணிக்குருவி White-naped Tit
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
வெண்பிடரி பட்டாணிக்குருவி White-naped Tit Machlolophus nuchalis – Vulnerable

இந்தியாவில் மட்டுமே தென்படும் சிட்டுக்குருவியைவிடச் சிறிய பறவை. இவை ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள், கடைசியாக தமிழ்நாட்டில், குறிப்பாக சத்தியமங்கலம், மசினகுடி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியற்றுப் பரவியுள்ளன. இவை இருக்கும் இடங்களில் கூட அரிதாகவே தென்படுகின்றன. இவை பொதுவாக புதர்க் காடுகளில் (வட மாநிலங்களில்), ஆற்றோர இலையுதிர்க் காடுகளிலும், புதர்க் காடுகளிலும் வசிக்கின்றன (தமிழ்நாட்டில்). அண்மையில் இவை சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாழிடம் அழிக்கப்படுவதாலும், சீர்கெட்டுப் போவதாலும், ஏற்கனவே தொடர்ச்சியற்று பரவியிருக்கும் இவற்றின் வாழிடம் மென்மேலும் பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களால் துண்டாகிப் போவதாலும் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.
கருந்தலை மீன்கொத்தி Black-capped Kingfisher
தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்
கருந்தலை மீன்கொத்தி Black-capped kingfisher Halcyon pileata – Vulnerable

தலை கறுப்பு. மார்பு மற்றும் கழுத்தைச் சுற்றி வெள்ளை நிறம் காணப்படும். உடலின் பக்கவாட்டிலும், வயிற்றுப் பகுதியும் செங்கல் பழுப்பு நிறம். அலகு பவள நிறம். இறக்கை, மேலுடல், வால் ஆகியவை ஊதா நிறம். தோள்பட்டையில் கறுப்பு நிற இறகுகள் இருக்கும். பறக்கும்போது இறக்கைகளில் உள்ள கறுப்பு நிறமும், வெள்ளைத் திட்டும் தெளிவாகத் தெரியும். பொதுவாக, கடலோரப் பகுதிகளில், குறிப்பாக அலையாத்திக் காடுகளில் தென்படும்.
இவை கொரியா, சீனா, வடக்கு இந்தோசீனா ஆகிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அக்டோபர்-நவம்பர் முதல் இந்தியா, இலங்கை, மியன்மார், மலேசியா, அந்தமான்-நிக்கோபார் தீவுகள், சுண்டா தீவுகள் முதலிய பகுதிகளுக்கு வலசைவந்து, மார்ச்-ஏப்ரல் மாதங்களில் திரும்பிச் செல்கின்றன.
இவை ஆறுகளின், ஓடைகளின் மணற்பாங்கான அல்லது மென்மையான மண்ணைக் கொண்ட, சரிவான அல்லது செங்குத்தான கரையோரங்களில் வங்கு குடைந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக இவை இனப்பெருக்கம் செய்யும் இதுபோன்ற வாழிடங்கள் வெகுவாக மாற்றியமைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் (கரைகளை உயர்த்தி காங்க்ரீட் இடுதல் போன்ற செயல்பாடுகள்) வருவதால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்துள்ளது. மீன் வளர்ப்புக் குட்டைகள், பழத்தோட்டங்கள் முதலிய இடங்களின் மேலே (பறவைகளும், வௌவால்களும் வருவதைத் தடுக்க) கட்டிவைக்கப்படும் வலைகளில் சிக்கியும் இவை இறந்துபோவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

