Posts Tagged ‘coprinus’
பூஞ்சை இல்லை என்றால்…
பூஞ்சைகளும், காளான்களும் இல்லையென்றால் இந்த பூமியே இல்லையெனலாம். ஆச்சர்யமாக இருக்கிறதா? சரி, பூஞ்சைகள் இல்லையெனில் என்னவாகும் என்பதற்கு சில எளிமையான உதாரணங்களைப் பார்ப்போம். இட்லி, தோசை, தயிர் இதெல்லாம் கிடைக்காது, நாம் வளர்க்கும் பயிர்களுக்கும், தாவரங்களுக்கும் உரம் கிடைக்காது. ஏன் அப்படி? அரிசியையும், உளுந்தையும் நீர் விட்டு அரைத்து மாவாக்கி மூடி போட்டு சமையலறையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு காலையில் பார்த்தால் அது பொங்கி வழியுமே அது எதனால் தெரியுமா? பாலை காய்ச்சி அதில் ஒரு கரண்டி தயிரை ஊற்றிவைத்தால் மறுநாள் மேராகவோ, கட்டித் தயிராகவோ இருக்கிறதே எப்படி? மந்திரமோ, மாயமோ இல்லை. எல்லாம் நுண்ணுயிரிகளின் செயல். பூஞ்சைகளும் அதில் அடக்கம். ஈஸ்ட் (Yeast) கேள்விப்பட்டிருபீர்கள். அது கண்ணுக்குத் தெரியாக பூஞ்சையன்றி வேறில்லை. இவை புளிக்க அல்லது நொதிக்க (fermentation) வைத்தால் தான் நமக்கு இட்லியும், தோசையும்.
இறந்ததை உண்டு வாழும் இவை தாவர வகையும் இல்லை, விலங்கிலும் சேர்த்தியில்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி. பூஞ்சைகளும், காளான்களும் இச்சூழலமைப்பின் மிக முக்கிய அங்கமாகும். எனினும் இவை ஆற்றும் பணி வெளிப்படையாகத் தெரிவதில்லை. காளான்கள் நைட்ரஜன் சுழற்சி மற்றும் இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மட்க, அழுகச் செய்வதில் பெரும்பங்காற்றுகின்றன. இவ்வுலகில் உள்ள 90%க்கும் மேற்பட்ட தாவரங்கள் அவற்றின் நோய் எதிர்ப்புச்சக்திக்கும், வளமில்லா மண்ணிலும் செழித்து வளரவும் அவற்றின் வேர்களில் வாழும் காளான்களைச் சார்ந்துள்ளன.
நாள்பட்ட உணவுப்பண்டங்களை கெடவைக்கும் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய, வடிவமற்ற, பொடி போல் இருப்பவற்றை நாம் பூஞ்சைகள் அல்லது பூசணம் என்றழைக்கிறோம். இவற்றில் சில மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும், ஒவ்வாமையையும் தரும் பண்புள்ளவை. மண்ணில், மரத்தில், கட்டைகளில், சானங்களில் வித விதமான வடிவத்திலும், வண்ணங்களிலும் வளர்பவை காளான்கள் என்கிறோம். பூஞ்சைக்காளான்கள் (Fungi) என்றும் போதுவாக அழைக்கிறோம். இயற்கையாக வளரும் இவற்றில் சில வகைகள் நமக்கு உணவாகவும் பயன்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கும் அனைத்துமே உண்ணத்தகுந்தவை அல்ல. இவற்றில் சில நஞ்சுள்ளவை. நாம் கடைகளில் வாங்கி சமைக்கும் சிப்பிக்காளான்கள், குடைக்காளான்கள் அனைத்தும் பயிர் செய்யப்படுபவை. நாம் மருந்தாக பயன்படுத்தும் பெனிசிலின் கூட ஒரு வகையான பூஞ்சையே. ஆகவே காளான்கள் இல்லாவிடில் இவ்வுலகே இல்லை எனலாம்! ஈஸ்ட், குடைக்காளான்கள் என பல இலட்சக்கணக்கான காளான்கள் இவ்வுலகில் இருந்தாலும் இவற்றில் சிலவகையே தீங்கிழைக்கும் தன்மை கொண்டவை.
கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகளின் அழகை நுண்ணோக்கி வழியாகத்தான் பார்த்து ரசிக்க முடியும். ஆனால் காளான்கள் பல வண்ணமயமான, அழகிய, விசித்திரமான வடிவங்களுடன் இருக்கும். காளான்களின் இனப்பெருக்க முறை விசித்திரமானது. நாம் வெளியில் காணும் (குடை, சிப்பி, பந்து, கோப்பை வடிவ) பகுதி முதிர்ச்சியடைந்தவுடன், மிகமிகச் சிறிய விதைத் துகள்கள் அல்லது வித்துக்கள் (Spores) வெளியிடப்படுகின்றன.
பொதுவாக இவ்வித்துக்கள் காற்றின் மூலமே பரவினாலும், சில வேளைகளில் காளான்கள் வெளியிடும் வாசனையால் கவரப்படும் பூச்சிகளாலும் பரவுகின்றன. இந்த இழைகள் (Hyphae) பின்பு கிளைவிட்டு வளர்கின்றன. இரு வகையான வித்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது (- வகை, + வகை). வேறு இடங்களுக்குப் பரவிய இந்த வித்துக்கள் தனித்தனியே இழை போன்ற தோற்றத்தில் வளர்கின்றன. பிறகு தகுந்த சூழலில் – வகை இழையும், + வகை இழையும் ஒன்று சேர்ந்து நாம் வெளியில் காணும் காளானின் தொடக்க வடிவத்தை (Primodium) அளிக்கின்றன. இது வளர்ந்து பின்பு வித்துக்களை தோற்றுவிக்கிறது.
பூஞ்சைக்காளான்கள் இல்லாத இடமே இல்லை. மண்ணில், கடலில், நாம் சாப்பிடும் பண்டங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட. அறிவியளாளர்களின் கூற்றுபடி உலகில் இதுவரை குறைந்தது 100,000 முதல் 250,000 வகையான பூஞ்சைக்காளான்கள் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 27,000 வகையான பூஞ்சைக்காளான்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்கப்படாதது எத்தனையோ.
பூஞ்சைக்காளான்கள் ஊட்டச்சத்துள்ள ஈரமான, கொஞ்சம் சூடான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இவற்றிற்கு தாவர இலைகளில் உள்ளது போல் உணவு தயாரிக்க பசுங்கனிகங்கள் கிடையாது. ஆகவே, இவை பெரும்பாலும் மற்ற உயிரினங்களின் மீதே சாறுண்ணியாக வாழ்கின்றன. சில உயிரினங்களுடன் ஒத்து வாழவும், வேறு சில அவை வாழும் உயிரினங்களில் வாழ்ந்து அவற்றை சாகடிக்கவும் செய்கின்றன.
இந்த உலகிலுள்ள பெரும்பாலான உயிரினங்கள் பூஞ்சைக்காளான்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. சில வகையான எறும்புகளுக்கும் குறிப்பிட்ட வகையான பூஞ்சைக்காளான்களுக்குமிடையே உள்ள தொடர்பு ஆச்சர்யமளிக்கக்கூடியது. மத்திய அமெரிக்க நாடுகளில் தென்படும் ஒரு வகையான எறும்புகள் இலைகளை வெட்டி அவற்றின் கூட்டுக்குள் கொண்டு போய் சேமிக்கும். இவற்றை இலைவெட்டி எறும்புகள் என்பர். இந்த எறும்புகள் இலைகளையும், பழங்களையும், மலர் இதழ்களையும் மென்று சிறு சிறு துகள்களாக்கி பின் தமது உடலில் இருந்து சுரக்கும் ஒரு வித வேதிப்பொருளை கலந்து இத்துகளை கூழ் போல் ஆக்குகின்றன. இந்த கூழில் இவை பூஞ்சையைப் பயிர் செய்கின்றன. இப்பூஞ்சையும் இக்கூழை உரமாக்கி நன்கு வளர்ந்து ஊட்டச்சத்து மிகுந்த ஒரு வித குமிழை தனது உடலின் ஒரு பாகமாக உருவாக்குகிறது. இக்குமிழே (Gongylidia) அக்கூட்டிலுள்ள அனைத்து எறும்புகளுக்கும் பிரதானமான உணவு. அட்டமைசீஸ் (Attamyces) எனும் இவை வளர்க்கும் பூஞ்சைக்காளான் இந்த எறும்புக்கூட்டைத் தவிர வேறு எங்குமே வளர்வதில்லை.
கார்டிசிப்ஸ் (Cordyceps) இன பூஞ்சைக்காளான்கள் கொஞ்சம் விசித்திரமானவை. இவை மற்ற உயிரினங்களின் மீது ஒட்டுண்ணியாக வாழும். அது வாழும் உயிரினத்தின் (பெரும்பாலும் பூச்சிகள்) மூளையினுள் சென்று அவ்வுயிரினத்தின் குணத்தையும், செயலையும் தன்போக்கிற்கு மாற்றியமைக்கும் திறன்வல்லது. இப்படிச் செய்தே தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ளும். அது வளர்ந்து முதிர்ச்சியடைந்த வேளையில் அது குடிகொண்டிருக்கும் பூச்சியானது உயிரிழந்திருக்கும். கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் இதுதான் இயற்கையின் நியதி. ஒன்று உயிர் வாழ வேண்டுமானால் மற்றொன்று மாளவேண்டும்.
சில வகை குடை காளான்களைக் மழைக்காலங்களில் அதிகம் காணலாம். கோப்ரைனஸ் (Coprinus) இன குடை காளானின் வித்து கரிய நிறத்தில் இருப்பதால், முன்னொரு காலத்தில் அவ்வித்தைச் சேமித்து எழுதும் மையாக பயன்படுத்தினார்கள்.
ஒம்பலோட்டஸ் (Omphalotus) இனக்காளான்களை கும்மிருட்டில் தூரத்திலிருந்து பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். காரணம் மின்மினிப்பூச்சிகளைப் போலவே இரவில் பச்சை நிற ஒளியை உமிழும் தன்மை கொண்டவை (Bioluminescent).
சயாதஸ் (Cyathus) இன காளான் ஒன்றுக்கு ஆங்கிலத்தில்,”Bird nest Fungus” என்று பெயர். பறவையின் கூட்டைப்போன்ற வடிவமும், அதனுள்ளே வித்தினைக் கொண்ட உருண்டையான முட்டை போன்ற உறுப்பினைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு இப்பெயர். இது தன் வித்தினை பரப்பும் விதமே அலாதியானது. முட்டை வடிவிலமைந்த வித்தினைக் கொண்ட பைகள் சுருள்வில் (spring) போன்ற காம்பினால் கீழே இணைக்கப்பட்டிருக்கும். இப்பையின் மீது மழைநீர் விழும் போது அது தெரித்து சுமார் 2 அடி தூரத்திற்கு மேலெழும்பி அருகிலுள்ள (இலையிலோ, கிளையிலோ) பொருட்களின் மீது இச்சுருள்வில் காம்பின் உதவியால் ஒட்டிக்கொண்டு, தகுந்த சூழலில் வித்தினைப் பரப்பும்.
என்னதான் வெவ்வேறு வடிவங்களில், நிறங்களில் இருந்தாலும் பூஞ்சைக்காளான்களை எளிதில் இனங்காண்பது கடினம். விதவிதமான காளான்களைக் காண மழைகாலமே உகந்தது. அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் மழைக்காடுகளின் தரையில், ஈரமான சருகுகளுக்கிடையேயும், சாய்ந்து விழுந்த மிகப்பெரிய மரங்களின் மீதும், உயிருள்ள மரத்தின் தண்டிலும் என பலவிதமான வாழிடங்களில், பலவிதமான காளான்களைக் காணலாம். அப்படி ஆனைமலைப்பகுதியில் பார்த்து படம் பிடித்து, அவற்றை இனம் கண்டு ஒரு சிறிய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டை கீழ்கண்ட இணைய முகவரியிலிருந்து இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்
http://ncf-india.org/publications/53
இனிமேல் பூஞ்சைக்காளானைப் பார்த்தால் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்தானே என்று இளக்காரமாக நினைக்காமல், அவை ஆற்றும் மகத்தான பணியை நினைவில் கொண்டு அவற்றின் அழகை ரசிப்போம்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 15. புதிய தலைமுறை 25 அக்டோபர் 2012








