Posts Tagged ‘Indian Spotted Chevrotain’
என் வீட்டுத் தோட்டத்தில் – சருகுமான்
சருகுமான் Mouse Deer Indian Spotted Chevrotain (Moschiola indica)
நானிருக்கும் வீட்டிலிருந்து எனது அலுவலகம் செல்ல பரந்து விரிந்த தேயிலைத் தோட்டம், தீவுக்காட்டுப்பகுதியின் வழியாகச் செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். செல்லும் போது காட்டெருது, சிங்கவால் குரங்கு, கேளையாடு, மலையனில் பலவிதமான பறவைகள் யாவும் காணக்கிடைக்கும். இயற்கையை விரும்பும் காட்டுயிர் ஆராய்ச்சியாளனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும். உண்மையில் காடுதான் அலுவலகம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து, பதிவு செய்து, வெளியுலகிற்கு தெரிவிக்க அது தொடர்பான வேலைகளைச் செய்ய என்போன்றோருக்கு செங்கற்கலால் ஆன கட்டிடம் தேவைப்படுகிறது. வீட்டுக்குப் பக்கத்திலும் காட்டுயிர், அலுவலகம் போகும் வழியிலும் காட்டுயிர், அலுவலத்தின் அடுத்தும் காட்டுயிர் என்றால் அது சொர்க்கம் தானே! எனினும் காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவதில் எனக்கு நாட்டமில்லை. பகலில் சென்று இரவில் (முடிந்தால் நடு இரவில்) வீடு திரும்புவதில் தான் சுகமே. ஏனெனில் பகலில் திரியும் காட்டுயிர்களையும் காணலாம், இரவாடி விலங்குகளான காட்டுப்பன்றி, மிளா, புனுகு பூனை, முயல், முள்ளம்பன்றி, அதிருஷ்டமிருந்தால் சிறுத்தை, சருகுமான் முதலியவற்றையும் காணலாம். அடிக்கடி பார்க்கும் விலங்குகளைக் காட்டிலும் எப்போதாவது காணக்கிடைக்கும் உயிரின்ங்களின் பால் ஈர்ப்பு இருப்பது இயல்பே. ஆகவே சருகுமானை பார்க்கும் நாள் சிறந்த நாள் தான். காட்டு வழியே போகும் போது சாலையின் குறுக்கே ஓடினால் ஒழிய சருகுமானை எளிதில் பார்ப்பது கடினம். இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அவ்வப்போது கண்டதுண்டு.
காட்டின் தரைப்பகுதியில் சருகுகளினூடே பகலில் படுத்திருக்கும். அருகில் செல்லும் வரை நம்மால் அது இருப்பதை பார்த்தறிய முடியது. அந்த அளவிற்கு சுற்றுப்புறத்துடன் ஒன்றிப் போயிருக்கும். இதற்கு உருமறைத்தோற்றம்(camouflage) என்று பெயர். அதாவது, ஒரு உயிரினத்தின் உடலின் நிறமோ அல்லது சிறகுகளோ அவை இருக்கும் சூழலின் நிறத்தை ஒத்து இருந்தால் அவை சுற்றுப்புறச்சூழலோடு ஒன்றிப்போய் எளிதில் கண்ணிற்கு புலப்படாத வண்ணம் அமைந்திருப்பதே உருமறைத்தோற்றம். இப்பண்பு அவற்றை பிடிக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவோ, அவை மற்ற இரைஉயிரினங்களை பிடிப்பதற்காகவோ பெரிதும் உதவும். உதாரணம்: பச்சோந்தி, பச்சைப்பாம்பு.
இந்தியாவில் தென்படும் மான் இனங்களிலேயே மிகச்சிறியது சருகுமான். இதன் உயரம் ஒரு அடிதான், உடலின் நீளமும் (முகத்திலிருந்து வால்வரை) சுமார் 50-58 செமீ தான் இருக்கும். சருகுமான் ஒரு விசித்திரமான மான்வகை. பரிணாம ரீதியில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மிகப்பழமை வாய்ந்த பாலுட்டியினத்தில் ஒன்று சருகுமான். இவை அதிகம் பரவி காணப்பட்டது ஓலிகோசீன் – மியோசீன் காலங்களில், அதாவது 35-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. தொல்லுயிர் படிமங்கள் (Fossils) வாயிலாக இதை அறியமுடிகிறது. சருகுமான் மானினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் மான்களுக்கு இருப்பதுபோல் முன்னிரண்டு வெட்டுப்பற்கள் இவற்றிற்கு கிடையாது. மேலும் மூன்று பகுதிகளைக் கொண்ட குடல் இருக்கும் (மான்களின் குடல் நான்கு பகுதிகளைக் கொண்டது). ஆகவே இவை மானினத்தின் முன்தோன்றிகள் (Primitive) எனக் கருதப்படுகிறது. இதனாலேயெ இவை இப்போதும் வாழும் தொல்லுயிரி (Living Fossil) மற்றுமொறு வியக்கத்தக்க பண்பு சருகுமானினம் உடற்கூறு ரீதியில் பன்றி இனத்தின் பண்புகளையும் கொண்டுள்ளது. ஆனைமலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான காடர்கள் இவ்விலங்கிற்குத் தரும் பெயர் என்ன தெரியுமா? கூரன் பன்னி! சருகுமானின் வகைகள் ஆப்பிரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படுகின்றன. இந்தியாவில் தக்கான பீடபூமி, கிழக்கு, மேற்கு மலைத்தொடரின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவை வசிக்கின்றன. இலங்கையிலும், நேபாளத்திலும் இவை வாழ்கின்றன.
சருகுமான்கள் சிறுத்தைகளின் முக்கிய உணவாக அறியப்படுகிறது (விரிவான கட்டுரை இங்கே). இவை வெகுவளவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டும், சில நேரங்களில் சாலையைக் கடக்கும் போது சீறிவரும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இரவிலும் அந்திசாயும் நேரங்களில் மட்டுமே அதிகம் பார்க்கக்கூடிய சருகுமானை ஒரு நாள் பகலிலேயே காணக்கிட்டியது. அதுவும் என் வீட்டு சமையலறைக்கு வெகு அருகாமையிலேயே! சமையலறையின் பின்பக்கக் கதவைத் திறந்தால் கொல்லைப்புறம். காய்கறிகளை அறிந்து வரும் தோல், தண்டு, மிச்சமீதி உணவு யாவற்றையும் வேலியருகே ஒரு குழிதோண்டி அதில் போட்டு வைப்போம். பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதில்லை. வேலியை அடுத்து களைகள் மண்டிய புதர்க்காடும் அதனைத்தொடர்ந்து தேயிலைத் தோட்டமும் இருக்கும். வேலியின் ஓரிடத்தில் விலங்குகள் அடிக்கடி வந்து போனதால் ஒரு அடி உயரமுள்ள திறப்பு இருக்கும். காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் அந்த குப்பைத் தொட்டிக்கு அவ்வழியே அவ்வப்போது வந்து போகும். நாங்கள் குப்பை கொட்ட ஆரம்பித்தபின் தான் அந்த நுழைவாயில் உருவாகியிருந்தது.
காலையில் தூங்கிக்கொண்டிருந்த என்னை ஊரிலிருந்து வந்திருந்த எனது பெற்றோர்கள் என்னை எழுப்பி சருகுமான் வந்திருப்பதாகச் சொன்னார்கள். தூக்கம் கலைந்த எரிச்சலில் எதையோ பார்த்துவிட்டு சருகுமான் என சொல்கிறீர்கள் என முனகிக்கொண்டே அடுப்படிக்குச் சென்று, அப்பா கை நீட்டி காண்பித்த இடத்தைப் பார்த்தல், ஒரு அழகான சருகுமான்! அன்று ஏதோ ஒரு கீரையை ஆய்ந்து தண்டை அங்கே அம்மா கொட்டியிருந்தாள். அதையும் வாழைப்பழத்தோலையும் தின்று கொண்டிருந்தது. உடனே ஓடிச்சென்று காமிராவை எடுத்து வந்து ஒருக்களித்து வைக்கப்பட்ட கதவின் பின் நின்று, ஆசைதீர ’கிளிக்’ செய்துகொண்டே இருந்தேன். அது அலுத்துபோனதும் வீடியே எடுக்க ஆரம்பித்தேன். அப்பாவும் அவர் பங்கிற்கு தனது கைபேசியின் காமிரா மூலம் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாக சாப்பிட்டவுடன் வேலியின் அருகில் இருந்த நுழைவாயிலின் வழியே புதருக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து 3-4 நாட்கள் அதே இடத்திற்கு வந்து காய்கறி குப்பைகளை மேய்ந்துவிட்டுச் சென்றது அந்தச் சருகுமான்.

Indian Spotted Chevrotain (Moschiola indica) (Photo: P. Jeganathan)
சருகுமானின் படம் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்டது மிகக்குறைவே. காட்டில் வைக்கப்படும் தானியங்கிக் காமிரக்களில் பதிவு செய்யப்பட்ட படங்களே அதிகம். எனது நண்பர்களுடனும், இந்தியாவின் மூத்த காட்டுயிர் விஞ்ஞானியான Dr. A J T ஜான்சிங் அவர்களிடம் இந்தப்படத்தை மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டேன். உடனே அவரது Mammals of South Asia எனும் புத்தகத்தில் சேர்ப்பதற்காக கேட்டு வாங்கிக் கொண்டார். சருகுமானை பகலில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. என் வீட்டு சருகுமானை இதே இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
பின்னணி இசை இல்லை, ஆனால் இதைப் பார்க்கும் போதெல்லாம், என் மனதில் வாணி ஜெயராம், ”சருகுமானைப் பாருங்கள் அழகு…” என பாடுவது போலவே இருக்கிறது.