UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘interview

தமிழில் சூழலியல் படைப்புகளின் நிலை

with one comment

சூழலியலைப் புரியவைக்க மொழி மேம்பட வேண்டும்! எனும் தலைப்பில் தி இந்து தினசரியில் (19 Feb, 2022) வெளியான எனது நேர்காணலின் முழு வடிவம்.

பேட்டி கண்டவர்: ஆதி வள்ளியப்பன். தி இந்து வலைதளத்தில் படிக்க இங்கே காண்க:

தமிழில் சூழலியல்-பசுமை எழுத்து வளர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் எழுத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்.

ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. எனினும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்னும் தரமான பல உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் வரவேண்டும். களப்பணி முறைகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் தமிழில் எழுத முன் வரவேண்டும். சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ போல இன்னும் பல புதினங்களும், இயற்கை சார்ந்த புனைவு இலக்கியங்களும் நிறைய வரவேண்டும். செல்வமணி, அவை நாயகம், ஆசை இவர்களது படைப்புகளைத் தவிர இயற்கை சார்ந்த கவிதைகள் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை. (பெருமாள்முருகனின் பறவை, இயற்கை கீர்த்தனைகள் நீங்கலாக). Green Humor போன்ற காட்டூன்களும் தமிழில் வரவேண்டும். இயற்கை சார்ந்த சிறார் இலக்கியங்கள் பல தமிழில் வரவேண்டும்.

மூன்று நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்தி பார்க்கவோ, படிக்கவோ முடியாத தற்போது உள்ள சில இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் இயற்கை பாதுகாப்பு சார்ந்த செய்திகளை பல வகைகளில், பல தளங்களில் (காணொளி, infographics) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சூழலியல் பிரச்சினைகள் அறிவியல்பூர்வமாக முன்வைக்கவும், விவாதிக்கவும் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? குறிப்பாக தொலைக்காட்சி, சமூகஊடக விவாதங்களில் ஆரோக்கியமான போக்கு தென்படுகிறதா?

தொலைக்காட்சி பார்ப்பதில்லை, ஒரு சில வாட்ஸ்அப் குழுக்களைத் தவிர வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அந்தக் குழுக்களிலும் கூட விவாதிப்பதோ, தேவையில்லாமல் எதிர்வினையாற்றுவதோ இல்லை. ஆகவே நிம்மதியாக இருக்கிறேன்.

எனினும், சமகால பிரச்சனைகளை பொதுமக்களுக்கு புரியும்படி எளிய வகையில் உடனுக்குடன் சொல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து நிறைய பேசினோம். ஆனால், ஊரடங்கு விளக்கிக் கொள்ளப்பட்டவுடன், நாமும் ‘இயல்பு நிலைக்குத்’ திரும்பிவிட்டோம். அண்மையில் இந்தியாவில் காடுகள் அதிகரித்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியானது. உள்ளே படித்துப் பார்த்தால், தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் காடுகள் என ‘கணக்கு’ காண்பித்திருக்கிறார்கள். இது குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் (1972) திருத்தம் குறித்து தமிழில் செய்திகள் கூட வந்ததாகத் தெரியவில்லை.

காலநிலை மாற்றம் பற்றி தமிழகத்தில் குறைந்தபட்சமாகவாவது விழிப்புணர்வு இருக்கிறதா, தமிழக சூழலியல் செயற்பாட்டாளர்களின் காலநிலை மாற்றம் குறித்த அணுகுமுறை எப்படியிருக்கிறது?

நிச்சயமாக காலநிலை மாற்றம் குறித்து பலரும் அறிந்தே இருக்கிறார்கள். குறிப்பாக நகரப்பகுதியில் உள்ளவர்கள் இதை உணர்ந்திருக்கிரார்கள். ஆனால் அவற்றின் விளைவுகளைப் பற்றி இன்னும் முழுமையாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா எனத் தெரியவில்லை. இது குறித்துதான் தமிழில் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள ஒரு மாற்றாக பசுமை ஆற்றல் முன்வைக்கப்பட்டாலும், அதிலும் பல சிக்கல்கள் இருப்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும். The Guardian தினசரியைப் போல. காலநிலை அவரசநிலை குறித்த புரிதலும், அக்கறையும் கொண்ட பல செய்தியாளர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தினசரிகளில் இதற்கென தனியாக ஒரு பக்கத்தையே ஒதுக்க வேண்டும்.

தமிழ்ச் சூழலியல் எழுத்து என்று வரும்போது, காட்டுயிர்கள், இயற்கை குறித்து போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா? இல்லை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய மேம்போக்கான ஆக்டிவிசம் ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?

மேம்போக்காக இருப்பதாகத் தோன்றவில்லை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அளவு குறைக்கப்பட இருந்த போது சென்னையைச் சேர்ந்த பல இளம் இயற்கை ஆர்வலர்கள் பங்கு கொண்டார்கள். கொடைக்கானல் மெர்குரி கழிவினால் ஏற்படும் மாசு, எண்ணூர் கழிமுக மாசு குறித்து கலை வடிவிலும் (ராப், கர்நாடக இசைப் பாடல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் வெகுண்டெழுந்ததைப் பார்த்தோம். கவுத்தி, வேடியப்பன் மலைப்பகுதிகள் பொதுமக்களின் உதவியாலேயே காப்பாற்றப் பட்டன. இப்பொது அப்பகுதியில் சிப்காட் வருவதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இவை அனைத்தும் முறையாக ஒரே இடத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இயற்கையை அழித்தால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை சரியாக புரிய வைத்தால் அனைவரும் அதற்காகப் போராடுவார்கள். அந்தப் புரிதலை ஏற்படுத்துவது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், அதுசார்ந்து படைப்புகளை உருவாக்கும் ஒவ்வொருவரின் கடமை.

சமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்க தமிழ் சூழலியல் புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா?

நூல்களை விட கட்டுரைகள் வாசித்தது தான் அதிகம். நாராயணி சுப்ரமணியன், சுபகுணம், மா, ராமேஸ்வரன், தங்க ஜெயராமன் ஆகியோரது சூழலியல், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. பரிதியின் ‘பட்டினிப் புரட்சி, நக்கீரனின் ‘நீர்எழுத்து, ஜா. செழியனின் ‘பறவைகளுக்கு ஊரடங்கு, சு. பாரதிதாசனின் ‘பாறு கழுகுகளைத் தேடி’, வறீதையா கான்ஸ்தந்தின் ‘கடலம்மா பேசுறங் கண்ணு’ போன்ற நூல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ்ச் சூழலியல் படைப்புகளில் மொழிநடை, எடிட்டிங் போன்றவை மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா?

இன்னும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து கூடு வைக்கின்றன, கூகை ஒரு வெளிநாட்டுப் பறவை, யானைகள் அட்டகாசம் செய்கின்றன, சிறுத்தைகள் ஊருக்குள் ஊடுருவின என்றே எழுதிக் கொண்டிருக்கிறோம். செஞ்சந்தனம் அல்லது சந்தன வேங்கை என்கிற மரபான பெயர்கள் எப்படியோ உருமாறி செம்மரம் ஆகி விட்டது. வைரசை தமிழில் நச்சுயிரி என்று காலங்காலமாக படித்துவந்திருக்கிறோம். ஆனால் இப்போது அது தீநுண்மியாக திடீர் மாற்றம் அடைந்துவிட்டது. இது குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவோ, கவனம் செலுத்துவதாகவோ தெரியவில்லை.

இயற்கை பாதுகாப்பு குறித்த சொல்லாடலில் மொழி ஒரு முக்கியப் பண்பு வகிக்கிறது. வார்த்தைகளை சரியாகக் கையாளுதல் (மனித-விலங்கு மோதல் அல்ல – மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல்), சரியான பதங்களை, பாரம்பரியப் பெயர்களை உபயோகித்தல், வழக்கொழிந்த பெயர்களை மீட்டெடுத்தல், சரியான துறைச்சொற்களை உருவாக்குதல் யாவும் அவசியம்.

——–

Written by P Jeganathan

February 20, 2022 at 4:14 pm

“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் நேர்காணல்

leave a comment »

“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் இதழுக்காக (01-05-2019/25-௦4-2019-Online) பத்திரிக்கையாளர் திரு. க. சுபகுணம் அவர்களிடம் பகிர்ந்தவை..

Image

நேர்காணலின் முழு வடிவம் கீழே:

பறவைகள். பூவுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனத்தின் ஈர்ப்பையும் அன்பையும் சற்றுக் கூடுதலாகப் பெற்ற உயிரினம். மனிதனால் இவ்வுலகில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் வெகுவாக பாதிக்கப்படுவதும் பறவைகளே. சூழலியல் பாதுகாப்பில் ஒருவரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் முதலில் அவரைப் பறவை நோக்குதலுக்குப் பழக்கவேண்டும். அதுவே தானாக அவரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பறவை நோக்குதலைத் தமிழகத்தில் பரவலாக்கியதில் பல பறவை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அத்தகைய பறவை ஆய்வாளர்களில் முக்கியமானவர் ப.ஜெகநாதன். மக்கள் அறிவியல் (Citizen Science) தமிழ்ச் சமுதாயத்தில் பரவலானதிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. ஆய்வாளர்கள் மக்களிடமிருந்து பிரிந்து நிற்கக்கூடாது, அவர்கள் மக்களுடன் நிற்க வேண்டும். அதை நடைமுறையில் செய்துகொண்டிருப்பவர். இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாக காட்டுயிரியலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி…

ஆய்வுத்துறையில் குறிப்பாகப் பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

1996-ம் ஆண்டு மாயவரத்தில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் முதுகலையில் காட்டுயிரியல் படித்துக் கொண்டிருந்தேன். மக்கள் மத்தியில் காட்டுயிர் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த சமயம். என் களஆய்வுக்காக தவளைகள், பாம்புகள், முதலைகள் போன்ற உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஒகேனக்கல், பிலிகூண்டு, ராசிமணல் போன்ற பகுதிகளின் நதியோரங்களில் தான் களப்பணி. அப்போது பறவைகள் மீது அதீத ஆர்வம் இல்லையென்றாலும், ஓரளவுக்குப் பறவைகளைப் பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தச் சமயத்தில் என் பெற்றோர்கள் ஒரு இருநோக்கியை பரிசளித்தார்கள். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. காவிரிக் கரையில் நடந்து செல்லும் போது பல விதமான பறவைகளை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image

ஆக, பறவைகள்மீது உங்களுக்கு அளப்பரிய ஆர்வம் வந்ததற்கு அந்த இருநோக்கியை காரணமாகச் சொல்லலாமா?

அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நான் பறவைகளைப் பார்க்கத்தொடங்கியது நூல்களில் தான்! சாலிம் அலி எழுதிய இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds) எனும் நூலை ஆர்வத்துடன் தினமும் புரட்டிக்கொண்டிருப்பேன். அதில் உள்ள பலவகையான பறவைகளின் ஓவியங்களை பார்க்கையில் அவற்றை நேரில் பார்க்கும் ஆசை எழும். பறவை பார்த்தல் எப்போதும் அங்கிருந்துதான் தொடங்கும். நூலில் நாம் பார்க்கும் படங்கள் மனதில் பதியும்போது அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இயல்பாகவே குழந்தையைப்போல் துள்ளிக் குதிப்போம். படத்தில் பார்த்த ஒன்றை நேரில் பார்த்தால் யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது.

அப்படிப் பார்த்ததில் எந்தப் பறவை முதலிடத்தில் உள்ளது?

முதலிடம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனினும் இன்னும் நீங்காமல் நினைவில் நிற்பது ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முதன்முதலில் கண்ட மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow), மாயவரம் கல்லூரி விடுதியில் இருந்து பார்த்த கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo), களக்காட்டில் பார்த்த பெரிய இருவாச்சி (Great Pied Hornbill) போன்றவற்றைச் சொல்லலாம். இன்னும் பார்க்க வேண்டிய பறவைகள் எத்தனையோ உள்ளன. ஆக இந்தப் பட்டியல் என்றுமே முடியாது.

இந்தப் பறவைகளை எல்லாம் புத்தகத்தில் பார்த்துப் பழகியபின் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அப்படித் தொடங்கிய ஆர்வம்தான் இதுவரை இழுத்து வந்துள்ளது. பறவைகளைப் பார்க்க இருநோக்கி வேண்டுமென்றில்லை, ஆர்வம் இருந்தால் போதும். முதலில் பறவைகளின் படங்களை நாம் பார்க்கவேண்டும். அதை நேரில் பார்க்கையில் நாமே தானாக இனம் காண முயல்வோம். அதுதான் ஆர்வத்தின் முதல்படி. அவற்றின் குரலைக் கேட்டு அறிந்து கொள்வோம். அதன்பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்க இருநோக்கிகள் நமக்குப் பயன்படும்.

பறவை நோக்குதல் பொதுமக்களிடத்தில் பரவுவது அவசியமானதா?

பறவை நோக்குதல் என்பதொரு அருமையான பொழுதுபோக்கு. குழந்தைகள் முன்பெல்லாம் தெருவில் விளையாடுவார்கள், குளத்தில் குளிக்கப்போவார்கள். அவை தற்காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது. குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள் உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, செல்போன்கள் அவர்களை ஓரிடத்தில் முடக்கி வைக்கிறது. அதனால், தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்படுத்த, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்கப் பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள், என இயற்கையில் உள்ள எந்த உயிரினாமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையைப் பிடிக்க வைக்கவேண்டும். அதற்குப் பறவை நோக்குதல் முதல் படி. அதன்மூலம் பறவைகளை மட்டுமில்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களைத் தூண்டும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப் படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.

Image

அதையும் தாண்டி, பறவை நோக்குதலில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணை கட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலை போட நேர்ந்தாலும் அங்கு சூழலியல் தாக்க மதிப்பீடு முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். அங்கிருக்கும் உயிரினங்களின் வாழிடம் அழியக்கூடாதென்ற கரிசனத்தோடு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். இதெல்லாமே பறவை நோக்குதல் தரும் பலன்களாகக் கருதலாம். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் இது மிகப்பெரிய பங்காற்றும்.

மக்கள் அறிவியல், தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படுகிறது, நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. மக்களை இதுமாதிரியான அறிவியல்பூர்வ முயற்சிகளில் பங்கெடுக்க வைப்பது எப்படி சாத்தியமானது? இதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா!

நீங்களும்தான் இதைச் செய்கிறீர்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தை நடத்துகிறீர்களே, அது எதற்காக?

மாணவர்களுக்கு சமுதாயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படி அணுகவேண்டுமென்ற புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பத்திரிகையாளராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளைப் பற்றிய புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். அதுதானே சமுதாயத்தின் சிறந்த மனிதராக அவர்களுக்குத் துணைபுரியும்.

இதுவும் கிட்டத்தட்ட அதேபோலத்தான். இதழியல் என்பது ஒரு துறை என்பதையும் தாண்டி அதை பொது மக்களும் செய்யமுடியுமென்ற (Citizen Journalism) நம்பிக்கையை எப்படி நீங்கள் விதைத்தீர்களோ அதையேதான் மக்கள் அறிவியல் (Citizen Science) மூலம் சூழலியல் துறையிலும் செய்யமுடிகிறது. அப்போதுதானே சிறந்த சூழலியல் பாதுகாவலனாக மக்கள் வாழமுடியும்.

மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமாஅது எப்படி அறிவியல் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றது? இது எப்படி பறவைகள் அல்லது இயற்கை பாதுகாப்பில் உதவும்?

ஒருவர் ஒரு பறவையைப் பார்க்கிறார். அதன் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்கிறார். இதுவொரு முக்கியமான தரவு (Data). உதாரணத்திற்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் பாறு கழுகின் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். பொதுவெளியில் அதாவது eBird, Wikipedia, Wikimedia Commons போன்ற Portal களில் அதை உள்ளிட்டால் அதே தரவுகள் ஆவணமாகும். இங்கெல்லாம் முன்பு பாறுகள் இருந்திருக்கிறது, இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப் போல. அது பல முடிச்சுகளை அவிழ்க்கவும், ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.

சிட்டுக்குருவியால் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்கவும் இது போன்ற திட்டங்கள் உதவும். (பார்க்க Citizen Sparrow ).

உதாரணமாக ஒரு ஏரி அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியில் இருந்து இருந்து பலரும் அங்கிருக்கும் பறவைகளை பல்லாண்டு காலமாக தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாகவும் அவற்றை eBirdல் உள்ளிடுவதன் மூலமும் அங்குள்ள பொதுப்பறவைகளையும், அரிய பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும், அவற்றின் அடர்வையும் (density) அறிய முடியும். சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்த ஒரு வகைப் பறவை இந்த ஆண்டு கணக்கெடுப்பில் குறைந்து போனதென்றால் அதை அறிந்து கொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.

ஒரு வேளை யாரோனும் அந்த ஏரியில் மண்கொட்டி நிரப்பி கட்டடம் கட்ட வந்தாலோ அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியின் குறுக்கே பெரிய அகலமான சாலையை போட வந்தாலோ அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை பொதுவெளியில் உள்ள மக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்தே அந்தத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்க முடியும்.

ஆக தரவுகள் சேகரிப்பதுதான் இதன் நோக்கமா?

இல்லை. இதுபோன்ற தரவுகளை மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்க வைப்பது மக்களுக்கும் அதன்மூலம் அறிவியல் சார்பான புரிதலை ஏற்படுத்தவும் தான். அவர்கள் சேகரிக்கும் தரவுகளைப் பொதுத்தளத்தில் பதிவிட ஊக்குவிக்கும் போது, அதன்மூலம் மிகப்பெரிய ஒரு கடலில் நாம் போட்ட துளியும் இருக்கிறதென்று அவர்கள் உணர்வார்கள். அது அறிவியல் மனப்பான்மையோடு அனைத்தையும் அணுகவேண்டுமென்ற சிந்தனையை அவர்களிடம் மேன்மேலும் அதிகரிக்கும்.

மக்கள் அறிவியல் தரவு சேகரிப்பதற்கான கருவி மட்டுமல்ல. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்முறை.

மக்கள் அறிவியல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்துகொள்ளவும் அதைக் கணிக்கவும்கூடப் பயன்படுமாமே! உண்மையாகவா?

சூழியல் சுட்டிக்காட்டிகளான பறவைகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து அவைகளோடு இவ்வுலகில் இருக்கும் நமக்கும் எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம். பூமி சூடாதல், காலந்தவறி பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாக பாதிக்கிறது.

வெப்பநிலை உயர்வால் உலகில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பல பறவைகள் பாதிப்படைந்துள்ளன. வெகுதூரத்தில் இருந்து  வலசை வரும் பறவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள. உதாரணமாக ஒரு பழவுண்ணிப் பறவை வகை அது அது வலசை சென்ற இடத்தில் இருந்து கிளம்பி கூடமைக்கும் இடத்திற்கு செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழ மரம் காலந்தவறி முன்னமே பூத்து காய்த்து பழுத்து ஓய்ந்து விடுகிறது. அப்போது அங்கு வரும் அப்பறவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல் போகலாம். அவை அங்கே செல்வது கூடமைத்து தம் இனத்தைப் பெருக்க. ஆனால் போதிய உணவு இல்லாததால் சில பறவைகள் கூடமைகாமல் போகலாம், அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்கு சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்து போகலாம்.

ஒரு பகுதிக்கு ஒரு வகையான பறவை வலசை வரும் நாள் அல்லது வாரம் அதே போல அவை அந்த இடத்தை விட்டு கிளம்பும் நாள் அல்லது வாரம் என்பது மிகவும் முக்கியமான தரவு. இதை பல பறவையாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பதிவு செய்து பொதுவெளியில் உள்ளிடும் போது இது ஒரு முக்கியமானத் தரவாகும். இந்தத் தரவுகள் மூலமாக ஒரு பறவை ஓரிடத்தில் எத்தனை நாட்கள் தங்குகின்றன என்பது தெரியும். அதேபோல் இதற்குமுன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தன என்பதும் தெரியும். இந்தக் காலகட்டம் தற்போது மாறுபடுகிறது. அதற்குக் காரணம் அந்த இடத்திலிருக்கும் தட்பவெப்ப நிலையில் நடக்கும் மாற்றங்கள். அந்த மாற்றங்களுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய முடியும். மக்கள் தரவுகளாகப் பதிவேற்றும்போது அதைவைத்து ஆய்வு மாதிரி ஒன்றை உருவாக்கி அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்றுகூடக் கணிக்கமுடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.

இதுமாதிரியான தரவுகளை மக்கள் பதிவிட்டதன் மூலமாகக் கார்னெல் பல்கலைக்கழக  (Cornell University) ஆய்வாளர்கள் தற்போது காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பாதிப்பை கணிக்கின்றனர். வலசைகள் முன்பு எப்படியிருந்தன, இப்போது எப்படி மாறியிருக்கின்றன, காலப்போக்கில் அது எப்படி மாறுபடும் என்பதையும் அவர்கள் இதன்மூலம் சொல்கிறார்கள். மக்கள் அறிவியல் குடிமக்களிடம் அறிவியல்சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆய்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கின்றது. ஆம், அறிவியல் ஆய்வுகளில் மக்களும் பங்கெடுக்க முடியும். மக்கள் அறிவியலைக் கையிலெடுப்பதன் மூலம் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கணிப்பதற்கு மக்கள் உதவவேண்டும்.

சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அறிவியற்பூர்வமாக ஆதாரமற்றவைகளை அறிவியல் சாயம் பூசிப் பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது?

இப்போதில்லை, இந்த மாதிரியான பிரச்னைகள் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இன்னமும் பூமி தட்டை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இவை இருந்துகொண்டேயிருக்கும். இவற்றைக் கண்டு சினங்கொண்டு, மிரண்டு, மன அழுத்தத்தில் அமர்ந்துவிடக்கூடாது. சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். காலநிலை மாற்றமே பொய்யென்று சொல்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்காவின் ஆகப்பெரிய இரண்டு கட்சிகளும் தற்போது சண்டையிட்டுக் கொள்வதே இதுகுறித்துத்தானே. தெரியாமல் பேசுபவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம். தெரிந்தே அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுபவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுவிட வேண்டும். காலப்போக்கில் அவையெல்லாம் நீர்த்துப்போகும். அதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை.

ஆனால், ஒரு விஞ்ஞானி அமைதியாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லை, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவரகளுமே இதில் வாய்திறந்து பேசவேண்டும். அதுமாதிரியான போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களாக அது அவர்களுடைய கடமை.

இந்தப் போலி அறிவியல் சூழலியல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா! மக்களிடம் பரவிக் கொண்டிருக்கும் இதுமாதிரியான விஷயங்களைக் கலைந்து உண்மைகளை எப்படிக் கொண்டுசெல்வது?

அறிவியல்பூர்வ மனப்பான்மை என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. எதையும் பகுத்தறியும் திறன் சமுதாயத்தில் வளரவேண்டும். அது நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போதும் அப்படித்தான் இருக்கிறதென்றாலும் ஓரளவுக்கு அது மாறிவருகிறது. ஒருவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும்போது பெரும்பாலானவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் அறிவியல் பார்வை வளர்ந்து வருகிறது. முன்பே சொன்னது போல் மக்கள் அறிவியல் மூலமாகவும் அறிவியல்பூர்வ மனப்பாங்கை வளர்த்தெடுக்க முடியும். அறிந்தவர்கள் அனைவரும் இதற்காக உழைத்துக் கொண்டே இருந்தால் போதும் அவை தானாக நீர்த்துப்போய்விடும்.

2.0 படம் பற்றிய உங்கள் கருத்து

நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பலர் சொல்வதை வைத்தும் அப்படத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்ததை வைத்தும் தான் சொல்கிறேன்.

ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்துக் கண்டுபிடிக்கும் விஷயங்களை இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற திரைப்படங்கள் ஒரு நொடியில் தகர்த்துவிடுகின்றன. கைப்பேசி கோபுரங்களால் பறவைகள் அழிவதாக அந்தப் படத்தில் பேசியிருப்பது ஏற்கனவே பலமுறை பொய்ச் செய்தியென்று நிரூபிக்கப்பட்டு புதைக்கப்பட்ட விஷயம். அடிப்படைத் தேடுதல்கூட இல்லாமல், அதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அறிவியலுக்குப் புறம்பானது.

உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்

with one comment

உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும். 

மனித – விலங்கு மோதல்

மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.

நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.

இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?

மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

ele_near human habitation_Photo_P Jeganathan

விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.

இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.

Photo: Ganesh Raghunathan

Photo: Ganesh Raghunathan

இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?

இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.

இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?

நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.

எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.

வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.

விவரங்களை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டியை வைத்துச் சொடுக்கவும் Map: NCF

விவரங்களை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டியை வைத்துச் சொடுக்கவும் Map: NCF

இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.

மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.

Elephant sms_GAN4551_700

மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது  டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.

யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.

1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.

2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.

3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள்  அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.

Photo: Kalyan Varma

Photo: Kalyan Varma

வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.

சாலைபலி (Roadkill)

காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.

linear intrusions_4_2100

இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.

இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?

தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.

குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?

Photo: Ganesh Raghunathan

கேளையாடு Photo: Ganesh Raghunathan

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.

இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?

ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்

1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,

2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,

3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.

காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.

பசுமை இலக்கியம்

தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.

துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?

சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?

nerupu kuziyil kuruviஅதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.

எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.

புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?

அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.

——————————————————————————

இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

November 1, 2013 at 1:46 pm

Design a site like this with WordPress.com
Get started