Posts Tagged ‘Janaki Lenin’
இயற்கை சார்ந்த கட்டுரை தொகுப்புகள்
தென்னிந்திய இயற்கை சார்ந்த ஆங்கில வழி நூல்கள் – ஓர் அறிமுகம் – தொடர்ச்சி..
இயற்கை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி, பின்னர் நூலாகத் தொகுத்து வெளிவந்தவற்றில் முக்கியமானவை ம. கிருஷ்ணனின் படைப்புகள். இவர் 46 ஆண்டுகளாகப் பத்திரிகைகளில் எழுதிய பல கட்டுரைககளில் சிலவற்றை பின்வரும் நூல்களில் காணலாம்: Jungle and Backyard, Nights and Days: My Book of India’s Wild Life, Nature’s Spokesman: M. Krishnan and Indian Wildlife (தொகுத்தவர் ராமச்சந்திர குஹா), Of Birds and Birdsong (தொகுத்தவர்கள் சாந்தி & ஆஷிஷ் சந்தோலா), My Native Land: Essays on Nature (தொகுத்தவர்கள் S. தியடோர் பாஸ்கரன் & A. ரங்கராஜன்).
ம. கிருஷ்ணன், Aமுதல் Z வரை உள்ள ஆங்கில எழுத்தில் தொடங்கும் காட்டுயிர்களின் பெயர்களை வைத்து பாடல்களை எழுதி அவரது பேத்திக்குத் தந்துள்ளார். இந்தப் பாடல்கள் அனைத்தும் Book of Beasts: An A to Z Rhyming Bestiary எனும் நூலாக வெளிவந்துள்ளது. ம. கிருஷ்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ஓவியம் தீட்டுவதிலும் வல்லவர். இவரது பல கட்டுரைகளில் அவரது கோட்டோவியங்களைக் காணலாம். இந்த நூலிலும் அவர் வரைந்த பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழில் பசுமை படைப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான S. தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய பல கட்டுரைகள் The dance of the Sarus, A day with the Shama முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் நேசுரலிஸ்ட் சொசைட்டி (Madras Naturalist Society) வெளியிடும் இதழ் Blackbuck. இந்த இதழில் வெளிவந்த பலருடைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து Sprint of the Blackbuck: Writings on Wildlife and Conservation in South India எனும் நூலாக இவர் தொகுத்துள்ளார்.
பத்திரிகைகளில் குறிப்பாக தி ஹிந்து ஆங்கில தினசரியில் தொடர்ந்து காட்டுயிர் குறித்து எழுதி வருபவர் ஜானகி லெனின். இவர் எழுதிய My Husband & Other Animals 1 & 2 (இரண்டு பாகங்கள்), Stories from the Wild, Every Creature Has a Story: What Science Reveals about Animal Behaviour ஆகியவை அவசியம் படிக்க வேண்டிய நூல்களாகும்.
இந்தியாவின் மூத்த காட்டுயிரியலாளர் AJT ஜான்சிங். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தேராதூனில் உள்ள இந்தியக் கானுயிர் ஆராய்ச்சிக் கழகத்தின் (Wildlife Institute of India, Dehradun) இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். மலையேற்றத்தில் வல்லவரான இவர் தென்கிழக்கு ஆசியா நாடுகளின் பல மலைப்பகுதிகளுக்கு, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெரிய பாலூட்டிகளை (Large Mammals) பற்றி பல காலம் ஆராய்ச்சி செய்துவருபவர். இது குறித்த இவர் எழுதியவை Field Days: A Naturalist’s Journey Through South and Southeast Asia, Walking the Western Ghats, On Jim Corbett’s Trail and Other Tales from the Jungle கட்டுரைத் தொகுப்புகளாக வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கானுயிர்ப் பாதுகாப்பு குறித்துப் பேசிய முன்னோடிகளில் ஒருவரான E.R.C டேவிடார் (E. R. C. Davidar) நீலகிரிப் பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கையை முதன்முதலாகக் கணக்கெடுத்தவர். இவரது கட்டுரைகள் Cheetal Walk: Living in the Wilderness எனும் தொகுப்பில் காணலாம். இவர் மறைந்த பின் அவரது படைப்புகளை Whispers From the Wild எனும் நூலில் அவரது மகளான ப்ரியா டேவிடார் (Priya Davidar) தொகுத்தார். இவர் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் உள்ள சூழலியல் துறையின் ஓய்வுப்பெற்ற துறைத் தலைவர் ஆவார். சென்னையில் பள்ளி ஆசிரியராக உள்ள M. யுவன் எழுதிய A Naturalist’s Journal, வால்பாறையில் மழைக்காட்டு மீளமைப்பிலும், பறவைகள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ள T. R. சங்கர் ராமன் எழுதிய கட்டுரைத் தொகுப்பான The wild heart of India ஒரு குறிப்பிடத்தக்க நூல்கள்.
நூல் அறிமுகம்: My Husband and other animals
பாம்புகளையும், முதலைகளையும் பிடித்துக்கொண்டு அலைபவரின் மனைவி அவரது வாழ்வில் நிச்சயமாக பல வித சுவாரசியமான அனுபவங்களைப் பெற்றிருக்கக் கூடும். அதுவும் தானே ஒரு கானுயிர் ஆர்வலராக இருந்தால் கேட்கவே வேண்டாம். தான் அவருடன் சேர்ந்து பார்த்த, பயணித்த, அனுபவங்களை மிக அழகாக சிறு கட்டுரைகளாக பதிவு செய்து அதையே ஒரு நூலில் பொதித்தால், அதுதான், “My Husband & other animals”. கணவர் – ரோமுலஸ் விட்டேகர். மெட்ராஸ் முதலைப் பண்ணையை (Madras Crocodile Bank Trust and Centre for Herpetology (MCBT) ) நிறுவியவர், ஒரு காலத்தில் பாம்புகளை அவற்றின் தோலுக்காகக் கொன்று கொண்டிருந்த, பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்களான இருளர்களுக்கு புணர்வாழ்வளித்து பாம்புகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தியவர், மிகச் சொற்ப எண்ணிக்கையில் இருந்த நன்னீர் முதலைகளை (Mugger crocodile) அழிவிலிருந்து மீட்ட பெருமைக்குறியவர், கங்கை, சம்பல் நதிகளில் தென்படும் கரியால் (Gharial) எனும் அரிய வகை ஆற்று முதலையினத்தையும் காப்பாற்ற பாடுபட்டு வருபவர், கருநாகத்தைப் (King Cobra) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர், உலகின் பல பகுதிகளுக்குச் சென்று ஊர்வன பற்றிய ஆவணப்படங்களை எடுத்தவர், அமெரிக்காவில் பிறந்து சிறு வயது முதலே இந்தியாவில் வளர்ந்தவர். இவரது மனைவி இந்நூலின் ஆசிரியர் ஜானகி லெனின்.
The Hindu நாளிதழில் வாராவாரம் (சனிக்கிழமை தோறும் Metroplusல்) வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஜானகி லெனின் அடிப்படையில் கானுயிர் ஆவணப் படம் எடுப்பவர். இவரது கட்டுரைகளின் சிறப்பம்சம் ரத்தினச் சுருக்கமான, சொல்லவந்ததைத் தெளிவாக, சுவாரசியமாக, கட்டுரையின் தேவைக்கேற்ப நகைச்சுவையாகவோ, உணர்ச்சிபூர்வமாகவோ, ஆதங்கத்துடனோ, கோபத்துடனோ, ஆராய்ந்து சொல்லப்பட்ட விதம். நாளிதழில் வெளிவரும் தொடர் வாசிப்போரை கவர்ந்திழுக்கும் வண்ணம் தலைப்பைப் பெற்றிருக்க வேண்டும். கட்டுரையின் நீளத்திற்கும், வார்த்தைகளுக்கும் உச்சவரம்பு இருக்கும். அதற்குள் சொல்ல வந்ததை தொய்வில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். இந்தப் பண்புகளையெல்லாம் கொண்டிருக்கிறது இவரது கட்டுரைகள். ஒரு சிலவற்றைத் தவிர.
கட்டுரைகள் பலதரப்பட்டவை. மெட்ராஸ் முதலைப் பண்ணையில் வாழ்ந்த வாழ்க்கை, அங்குள்ள உயிரினங்களிப் பற்றி, வெளிநாட்டுப் பயணங்களில் பார்த்த உயிரினங்கள் பற்றி, பாம்பு பிடிக்க இந்திய வனப்பகுதிகளில், வெளிநாடுகளில் ரோமுலஸுடன் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள், அவர்கள் வசிக்கும் புதர்காடு சூழ்ந்த பண்ணை வீட்டினருகில் பார்த்த சிறுத்தை, முள்ளம்பன்றி, பாம்புகள், பறவைகள் பற்றி, அவர்களோடு வசிக்கும் செல்லப்பிராணிகளைப் பற்றி, அவர்கள் வீட்டுக்குள் வசிக்கும் தேரை, தவளை, தேள், பாம்பு பற்றி, இந்தியாவின் பல்லுயிர்ப் பாதுகாப்பு, மனித-விலங்கு எதிர்கொள்ளல், தனது கணவரின் சிறு பிராயத்தில் பாம்பு பிடிப்பதில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், இருளர்களின் வாழ்வு, முதலைப் பண்ணை தொடங்கிய கதை, பாம்புக்கடி பற்றிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அறிவியல் ஆராய்ச்சியால் விளைந்த உண்மையான தரவுகள், முடநம்பிக்கைகள் என நூல் முழுவதும் பல சுவாரசியமான, அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய, ஆச்சர்யமளிக்கும், தகவல்களைக் கொண்டுள்ளன இவரது கட்டுரைகள்.
இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இது போன்ற சமீபத்திய பசுமை இலக்கியப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ம. கிருஷ்ணன் (Jungle and backyard, Nature’s spokesman: M. Krishnan and Indian wildlife), தியடோர் பாஸ்கரன் (The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist), ஏ. ஜே. டி. ஜான்சிங் (Field Days: A Naturalist’s Journey Through South and Southeast Asia) ஆகியோரின் நூல்களைச் சொல்லலாம். எனினும் தொடர்ச்சியாக இரண்டாண்டுகளாக (இன்னும் முடிவு பெறாமால்) இவர் போல யாரும் இதுவரை எழுதி வருவதாக எனக்குத் தெரியவில்லை. ஹிந்து நாளிதழின் Science and technology இணைப்பில் D. பாலசுப்ரமணியன் Speaking of science எனும் தலைப்பில் கட்டுரைகளை பல ஆண்டுகளாக எழுதிவருகிறார். அவரது கட்டுரைகள், அறிவியலின் பல துறைகளையும் தொழில்நுட்பத்தையும் பொதுமக்களுக்கு எளிமைப்படுத்திச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும். எனினும் கானுயிர் சம்பந்தமான கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருவது இதுவே முதல் முறை.
இந்தத் தொகுப்பு புகழ்பெற்ற அமெரிக்க பசுமை இலக்கியப் படைப்பாளரான David Quammen னுடைய Natural acts, The Boilerplate Rhino போன்ற நூல்களை நினைவுபடுத்துகின்றது. இந்நூலின் (அல்லது தொடரின்) தலைப்பு My Husband & other animals கூட கொஞ்சம் வித்தியாசமானதுதான். புகழ்பெற்ற இயற்கையியலாளாரான Gerald Durrell ன் புகழ்பெற்ற “My family and other animals” நூலினை ஒத்த தலைப்பு. எனினும் இந்தத் தலைப்பு அவரது கணவரை அவமதிப்பது போன்று இருப்பதாக சிலர் எண்ணலாம். அப்படி நினைப்பவர்களுக்கு குட்டு வைக்கும் வகையில் அவரது 100வது கட்டுரையில் (My Husband and Other Animals – Is my husband an animal?) இப்படிப்பட்ட தலைப்பை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை மிக அழகாக விளக்கியுள்ளார்.
அழகான அட்டைப்படத்துடன், கனமில்லாத இந்த நூல் 90 கட்டுரைகளைக் கொண்டது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் 3 அல்லது 4 பக்கங்களே உள்ளன. எளிமையான ஆங்கிலத்தில் சுவாரசியமான தகவல்கள், ஏராளமாகப் பொதிந்திருப்பதால், ஒரு கட்டுரையைப் படிக்க அதிகபட்சம் 5-10 நிமிடமே ஆகும். எதற்காவது (யாருக்காவது) காத்துக் கிடக்கும் நேரத்தில் 1-2 கட்டுரைகளை (நீங்கள் படிக்கும் வேகத்தைப் பொறுத்து) படித்து முடித்து விடலாம். ஆங்கிலத்தில் இவ்வகையான நூல்களை Easy Read என்பர். இந்நூலின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
My Husband and other animals. ஆசிரியர்: Janaki Lenin (ஜானகி லெனின்) பதிப்பகம்: Westland (2012), விலை: Rs. 250.
இந்த நூல் அறிமுகத்தின் சில பகுதிகள் திசை எட்டும்: மொழியாக்கக் காலாண்டிதழில் (ஜனவரி-மார்ச் 2014) வெளியானது.
















