Posts Tagged ‘Nature Alphabet’
இயற்கைத் தமிழ் அரிச்சுவடி
ஒவ்வொரு முறை புத்தகக் கடைகளுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் செல்லும் போதெல்லாம், நான் கூர்ந்து கவனிப்பதில் ஒன்று அரிச்சுவடிகளும், சுவர்ப்படங்களும் (charts) . குறிப்பாக, அதில் தரப்பட்டிருக்கும் உயிரினங்களின் படங்களைத்தான் என் கண்கள் நோட்டமிடும். பெரும்பாலும் அதிலிருப்பவை ஆப்பிரிக்க யானை, பென்குயின், பஞ்சவர்ணக்கிளி, வரிக்குதிரை போன்ற நம் நாட்டில் இல்லாத உயிரினங்கள்தான் அதிகம் இடம்பெற்றிருக்கும். நம் வீட்டின் அருகில் காணப்படும் சிட்டுக் குருவியோ, அரணையோ, வேப்ப மரமோ அதில் இருக்காது.
இயற்கைப் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளில், நான் முதலில் திரையில் காட்டுவது விளம்பரங்களில் வரக்கூடிய சின்னங்களே (logos). அவை அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றையும் மாணவர்கள் அடையாளம் கண்டு உடனே அனைவரும் உரத்த குரலில் சொல்வார்கள். அடுத்ததாக நம் நாட்டில் இல்லாத நெருப்புக் கோழி, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளைக் காட்டும்போதும், பெரும்பாலும் அவற்றின் ஆங்கிலப் பெயரையும், தமிழ்ப் பெயரையும் எல்லாரும் சொல்லிவிடுவார்கள். ஆனால், நம் நாட்டில், அதுவும் நம் வீட்டருகில் தென்படும் பறவைகளையும், மரங்களையும் காட்டினால் சட்டென அந்த அறை அமைதியாகிவிடும். ஒரு சிலர் சரியாகச் சொல்வார்கள். பெரும்பாலும், பார்த்திருக்கிறோம் ஆனால் பெயர் தெரியாது என்பார்கள்.
நுகர்வுத்துறையும், ஊடகங்களும் நம் கண்ணை எந்த அளவுக்குக் கட்டி வைத்திருக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அவ்வளவு ஏன், நம்மூரில் தென்படும் தாவரங்களையும், விலங்குகளையும்கூட பள்ளிப் பாடநூல்களில் பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை. பிறகு மாணவர்களை மட்டும் எப்படி குறை சொல்லமுடியும்?

இந்த ஆதங்கத்தில் பிறந்ததுதான் ‘இயற்கைத் தமிழ் அரிச்சுவடி’. ஆங்கிலத்தில் இது போன்ற அரிச்சுவடிகள் உண்டு. ம. கிருஷ்ணன் அவரது பேத்திக்காக எழுதிய நூல் “Book of Beasts: An A to Z Rhyming Bestiary”. இந்நூலில், ஒவ்வொரு ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் பெயருடைய உயிரினத்தின் ஓவியத்தை அவரே தீட்டியும், அந்த உயிரினத்தைப் பற்றி எதுகை, மோனையுடன் கூடிய ஒரு சிறிய கவிதையையும்கூட எழுதி இருப்பார் (XYZ நீங்கலாக). எனினும் அதிலும், வெளிநாட்டு உயிரினங்கள் பல இருக்கும். இந்தியப் பறவைகளுக்காக மட்டும் A to Z இல் ஆரம்பிக்கும் பெயர்களைக் கொண்ட ஒரு சுவர்ப்படத்தை early-bird அமைப்பு தயாரித்திருக்கிறது (இங்கே காண்க). இதையும், காஷ்மீர் மொழியில் ஒரு இயற்கை சார்ந்த அரிச்சுவடியையும் தயாரித்தது, Nature Classroom இன் குழு. இதுபோல ஒரு அரிச்சுவடியைத் தமிழிலும் தயாரிக்க வேண்டும் என்று இக்குழுவை அணுகினேன். இவர்களுடன் சேர்ந்து, ஓவியர் காருண்யா பாஸ்கரின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதே இந்த ‘இயற்கைத் தமிழ் அரிச்சுவடி’.
பொதுவாக, தமிழ் அரிச்சுவடிகளில் அ – அம்மா, ஆ – ஆடு என்றுதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த அரிச்சுவடியில் வழக்கமாகக் கொடுக்கும் சொற்களுக்குப் பதிலாக, இயற்கை சார்ந்த சொற்கள் மட்டுமே இருக்கும். இதன் மூலம் இளம் வயதிலேயே மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும், இயற்கைக் கல்வியாளர்களுக்கும், தமிழ்நாட்டில் தென்படும் உயிரினங்களை இந்த அரிச்சுவடியின் வாயிலாக அறிமுகப்படுத்துவதே முதன்மையான நோக்கம்.
தமிழில் மொத்தம் 247 எழுத்துகளுக்கும் இயற்கை சார்ந்த சொற்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பது சிரமம். ஆகவே, உயிர்மெய் எழுத்தில் ‘க’ முதல் ‘ன’ வரையிலான எழுத்துகளுக்கும் (18), உயிர் எழுத்து (12), ஆய்த எழுத்து (1), மெய் எழுத்து (18) என மொத்தம் 49 எழுத்துக்குமான உயிரினங்களைத் தேர்வு செய்ததில் கீழ்க்கண்ட காரணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது:
(I) தமிழ்நாட்டில், பெரும்பான்மையான வாழிடங்களில் காணப்படும் உயிரினங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். காட்டுப் பகுதிகளில் (இருவாச்சி, சிவப்பு நத்தை, குறிஞ்சி போன்றவை), சமவெளிப்பகுதி, ஊர்ப்புறங்கள், நகரப்பகுதிகளில் (உழவாரன், அரணை, சிலந்தி), கடல்புறத்தில் (நண்டு, திருக்கை, ஓங்கில்) தென்படும் உயிரினங்களாக அவை இருக்க வேண்டும்.
(II) உருவில் பெரிய, வசீகரமான உயிரினங்களை மட்டுமே தராமல், அதிகம் அறியப்படாத (ஒளி மட்டி, தணக்கு மரம்) அதே வேளையில் உருவில் சிறிய (குளவி, தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள்) உயிரினங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
(III) ஓரிரு உயிரின வகைகள் மட்டுமே இல்லாமல் காளான்கள், தாவரங்கள், சிறிய உயிரினங்கள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என அனைத்துவகையான உயிரின வகைகளும் இருக்க வேண்டும்.
அரிச்சுவடிகள் மழலைப் பள்ளி மாணவர்களுக்கானது. ஆகவே, ஒவ்வொரு சொல்லும் குழந்தைகள் எளிதில் உச்சரிக்கும்படி ஒரே சொல்லில் இருப்பது அவசியம் (அ – அம்மா, ஆ – ஆடு). மேலே சொன்ன காரணிகளையும் கருத்தில் கொண்டு, ஒரே சொல்லாகவும், இயற்கை சார்ந்த சொல்லாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சொல்லைத் தேர்ந்தெடுப்பது சிரமம். ஆகவே, இரண்டு சொற்களைக் கொண்ட பெயர்களும் தரப்பட்டுள்ளது (எ.கா. எட்டுக்கால் பூச்சி, செவ்வந்திச் சிறகன்). அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லாக இருந்தால், அதன் பக்கத்தில் அனைவரும் அறிந்த சொல் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது எ. கா: ஐந்தரம் (பனை). பெரும்பாலும், புழக்கத்தில் உள்ள உயிரினங்களின் பெயர்களையே கொடுத்திருந்தாலும், ஒரு சில இடங்களில் ஆங்கிலத்திலிருந்து அப்பட்டமாக மொழிபெயர்க்கப்பட்ட பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. எ.கா. Indian Pangolinஐ Ant eater என்பர். இதற்கு அலங்கு எனும் மரபான தமிழ்ப் பெயர் இருக்கும்போது, தற்போது பல இடங்களில் இதை எறும்புத் திண்ணி என்று பயன்படுத்துகின்றனர். இதுபோலவே கடல்வாழ் பாலூட்டியான Dugongஐ Sea Cow என்றும் சொல்வதால், இதை கடல் பசு என தவறாக அழைக்கின்றனர். கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த உயிரினத்தை ஆவுளியா என்று அழைக்கும் பெயரே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயிரினங்களின் நல்ல மரபான தமிழ்ப் பெயர்களை இந்த அரிச்சுவடி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவத்துவதால் இச்சொற்கள் மீண்டும் புழக்கத்திற்கு வரும் என நம்புகிறோம்.
இந்த சுவர்ப்படத்தை அச்சிட வேண்டுமெனில் High Resolution PDF ஐ இங்கே பெறலாம்
உயிரினங்களின் பெயர்கள் யாவும் பல நூல்களில் இருந்தும், கட்டுரைகளில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. முன்பே சொன்னது போல், அனைத்து எழுத்துகளுக்கும் சொற்களைக் கண்டுபிடிப்பது சிரமம். அதுவும் ‘ங’ என்ற எழுத்துக்கு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. ஙப்போல் வளை என ஒளவையார் பொருத்தமாகச் சொல்லிவிட்டார். ஆனால் ‘ங’-வில் தொடங்கும் உயிரினம் தமிழில் இல்லை. உயிரினங்களின் பெயர்களைச் சேகரிப்பது, குறிப்பாக பறவைகளின் மரபான, பல ஊர்களில் வழங்கும் பெயர்களைச் சேகரித்து ஆவணப்படுத்துவது, புதிதாகப் பெயர்களை யோசித்துக் கொண்டிருப்பதும் எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. இயற்கைத் தமிழ் அரிச்சுவடி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய நாளிலிருந்து இதற்கான பெயர்களை சேகரித்த போது ‘ங’ வைத் தவிர எல்லா எழுத்துகளுக்கும், சொற்கள் கிடைத்துவிட்டன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியான சோலை இருவாச்சியின் (Malabar Grey Hornbill) குரலொலியைக் கேட்டவுடன் பொறி தட்டியது. இவை ‘ங்ஙா…ங்ஙா…ங்ஙா…’ என மூக்கால் பேசுவது (அல்லது கத்துவது) போலத் தொடங்கி ‘கெக்கெக்கெக்கெக்கே’ என சிரிப்பதுபோல குரலெழுப்பும். இதை கேட்டவுடன் ‘ங்ஙா இருவாச்சி’ எனப் பெயரிடலாமா எனத் தோன்றியது. எனது நண்பர்களும், தமிழ் ஆர்வலர்களுமான ராம்கி, அர. செல்வமணி அவர்களிடம் இது குறித்து ஆலோசித்தபோது தமிழில் ஒற்றை முதலெழுத்தாகக் கொண்டு எந்தச் சொல்லும் ஆரம்பிக்காது என்றனர். இதன் குரல் கேட்பதற்கு சில வேளைகளில் ங்ஙா என்று நெடிலாக இல்லாமல் ங என்றும் கேட்பது போல இருப்பதாலும், அரிச்சுவடியின் வசதிக்காகவும் ‘ங இருவாச்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பறவையின் குரலொலியை இங்கே கேட்கலாம் (https://macaulaylibrary.org/asset/22523631).
பறவைகளின் குரலொலியை வைத்து அவற்றிற்கு பெயரிடுவது (Onomatopoeia) ஒன்றும் புதிதல்ல. கா கா என்று கத்துவதால் காக்கா, குயிலின் ஆங்கிலப் பெயரான Koel என்பதும் இவற்றின் குரல்களை வைத்துத்தான் இப்பறவைகளுக்குப் பெயரிட்டுள்ளனர். ஆகவே தமிழ் ஆர்வலர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியவில்லை. ஆனால், பறவை ஆர்வலர்களுக்கு இப்பெயர் பிடிக்கும் என நம்புகிறேன்.
ஒரு சிலருக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள உயிரினங்களும், அவற்றின் தமிழ்ப் பெயர்களும், புதிதாக இருக்கக் கூடும். அதற்காகவே ஒவ்வொரு சொற்களைப் பற்றி ஒரு சிறிய விளக்கங்கள் கொண்ட உரையும் தரப்பட்டுள்ளது. (கீழே காண்க).
இந்த அரிச்சுவடியை அடிப்படையாக வைத்து கற்பிக்க ஏதுவாக ஒரு சிறிய காணொளியையும், கையடக்க அட்டைகளையும் (flashcards) தயாரிக்கும் திட்டமும் உண்டு. தற்போது இந்தச் சுவர்ப்படம் (chart) ஒரு எழுத்துக்கு ஒரு உயிரினம் என தரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட சுவர்ப்படங்களும் தயாரிக்கப் படவுள்ளன. இந்தப் படைப்பு Creative Commons உரிமத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ள யாவரும் இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அரிச்சுவடி மழலையர்களுக்கானது என்றாலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட இதைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், இயற்கைக் கல்வியாளர்கள் யாவரும் இந்த அரிச்சுவடியின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உயிரினங்களையும், அவற்றின் சரியான தமிழ்ப் பெயர்களையும் அறிந்துகொள்ளலாம்.
—
இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தை இங்கே காணலாம்.
தி இந்து தமிழ் நாளிதழில் (உயிர் மூச்சு பகுதியில்) 14-06-2025 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையை இங்கே காணலாம்.

