Posts Tagged ‘Theodore baskaran’
இயற்கை சார்ந்த கட்டுரை தொகுப்புகள்
தென்னிந்திய இயற்கை சார்ந்த ஆங்கில வழி நூல்கள் – ஓர் அறிமுகம் – தொடர்ச்சி..
இயற்கை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி, பின்னர் நூலாகத் தொகுத்து வெளிவந்தவற்றில் முக்கியமானவை ம. கிருஷ்ணனின் படைப்புகள். இவர் 46 ஆண்டுகளாகப் பத்திரிகைகளில் எழுதிய பல கட்டுரைககளில் சிலவற்றை பின்வரும் நூல்களில் காணலாம்: Jungle and Backyard, Nights and Days: My Book of India’s Wild Life, Nature’s Spokesman: M. Krishnan and Indian Wildlife (தொகுத்தவர் ராமச்சந்திர குஹா), Of Birds and Birdsong (தொகுத்தவர்கள் சாந்தி & ஆஷிஷ் சந்தோலா), My Native Land: Essays on Nature (தொகுத்தவர்கள் S. தியடோர் பாஸ்கரன் & A. ரங்கராஜன்).
ம. கிருஷ்ணன், Aமுதல் Z வரை உள்ள ஆங்கில எழுத்தில் தொடங்கும் காட்டுயிர்களின் பெயர்களை வைத்து பாடல்களை எழுதி அவரது பேத்திக்குத் தந்துள்ளார். இந்தப் பாடல்கள் அனைத்தும் Book of Beasts: An A to Z Rhyming Bestiary எனும் நூலாக வெளிவந்துள்ளது. ம. கிருஷ்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ஓவியம் தீட்டுவதிலும் வல்லவர். இவரது பல கட்டுரைகளில் அவரது கோட்டோவியங்களைக் காணலாம். இந்த நூலிலும் அவர் வரைந்த பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழில் பசுமை படைப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான S. தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய பல கட்டுரைகள் The dance of the Sarus, A day with the Shama முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் நேசுரலிஸ்ட் சொசைட்டி (Madras Naturalist Society) வெளியிடும் இதழ் Blackbuck. இந்த இதழில் வெளிவந்த பலருடைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து Sprint of the Blackbuck: Writings on Wildlife and Conservation in South India எனும் நூலாக இவர் தொகுத்துள்ளார்.
பத்திரிகைகளில் குறிப்பாக தி ஹிந்து ஆங்கில தினசரியில் தொடர்ந்து காட்டுயிர் குறித்து எழுதி வருபவர் ஜானகி லெனின். இவர் எழுதிய My Husband & Other Animals 1 & 2 (இரண்டு பாகங்கள்), Stories from the Wild, Every Creature Has a Story: What Science Reveals about Animal Behaviour ஆகியவை அவசியம் படிக்க வேண்டிய நூல்களாகும்.
இந்தியாவின் மூத்த காட்டுயிரியலாளர் AJT ஜான்சிங். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தேராதூனில் உள்ள இந்தியக் கானுயிர் ஆராய்ச்சிக் கழகத்தின் (Wildlife Institute of India, Dehradun) இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். மலையேற்றத்தில் வல்லவரான இவர் தென்கிழக்கு ஆசியா நாடுகளின் பல மலைப்பகுதிகளுக்கு, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெரிய பாலூட்டிகளை (Large Mammals) பற்றி பல காலம் ஆராய்ச்சி செய்துவருபவர். இது குறித்த இவர் எழுதியவை Field Days: A Naturalist’s Journey Through South and Southeast Asia, Walking the Western Ghats, On Jim Corbett’s Trail and Other Tales from the Jungle கட்டுரைத் தொகுப்புகளாக வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கானுயிர்ப் பாதுகாப்பு குறித்துப் பேசிய முன்னோடிகளில் ஒருவரான E.R.C டேவிடார் (E. R. C. Davidar) நீலகிரிப் பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கையை முதன்முதலாகக் கணக்கெடுத்தவர். இவரது கட்டுரைகள் Cheetal Walk: Living in the Wilderness எனும் தொகுப்பில் காணலாம். இவர் மறைந்த பின் அவரது படைப்புகளை Whispers From the Wild எனும் நூலில் அவரது மகளான ப்ரியா டேவிடார் (Priya Davidar) தொகுத்தார். இவர் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் உள்ள சூழலியல் துறையின் ஓய்வுப்பெற்ற துறைத் தலைவர் ஆவார். சென்னையில் பள்ளி ஆசிரியராக உள்ள M. யுவன் எழுதிய A Naturalist’s Journal, வால்பாறையில் மழைக்காட்டு மீளமைப்பிலும், பறவைகள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ள T. R. சங்கர் ராமன் எழுதிய கட்டுரைத் தொகுப்பான The wild heart of India ஒரு குறிப்பிடத்தக்க நூல்கள்.
நம்மைச் சுற்றி காட்டுயிர் – புத்தக விமர்சனம்
தமிழில் சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த எழுத்துக்களை பல காலமாக படைத்து வரும் அனுபவம் மிக்க இருவரின் கூட்டுமுயற்சியில் விளைந்தது இப்புத்தகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் தியடோர் பாஸ்கரன், The Hindu தினசரியின் குழைந்தைகளுக்கான இணைப்பான Young World ல் எழுதிய 11 சிறு கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டதே இந்நூல். தமிழில் மொழிபெயர்த்தது ஆதி. வள்ளியப்பன். இவர் தமிழில் சூழியல் சார்ந்த பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதிவருபவர். காட்டுயிர்களைப் பற்றி மட்டுமல்லாமல் செல்லப்பிராணிகளைப் பற்றியும் சில கட்டுரைகளை இந்நூலில் காணலாம். பல நூல்களை எழுதியிருந்தாலும் தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியவைகளை ஏன் அவரே தமிழாக்கம் செய்து இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆதி வள்ளியப்பன் குழந்தைகளுக்காகவே தமிழில் பல கட்டுரைகளை எழுதிவருபவர். சிறுவர்களுக்கான ‘துளிர்’ அறிவியல் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இந்நூல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான Books for Children ன் வெளியீடு. இதனாலேயே ஆதி வள்ளியப்பனின் பங்கை உணரலாம்.
குழந்தைகளுக்காக எழுதப்படும் அறிவியல், காட்டுயிர் சார்ந்த புத்தகங்களில் (உதாரணமாக ஆதிவள்ளியப்பனின் “மனிதர்க்கு தோழனடி”, ரேவதியின் “குருவி நடக்குமா” முதலிய அறிவியல் கதைகள்) யாவிலும் சொல்லப்படும் கருத்துகள் சிறுகதை அல்லது உரைநடை வடிவில் இருக்கும். இவை 10-15 வயதுள்ள குழந்தைகளுக்கானது எனலாம். ஆனால் இப்புத்தகத்தில் கட்டுரைகள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே பதினைந்து வயது குழந்தைகள் முதல், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருக்குமானது இப்புத்தகம்.
அழகிய, பொருத்தமான, வண்ண வண்ண புகைப்படங்களும், ஓவியங்களும் எழுதப்பட்ட கருத்துகளை, விளக்கங்களை வாசகருக்கும் எளிதில் தெளிவுபடுத்தும். அதிலும் குழந்தைகள் புத்தகங்களில் வண்ண ஓவியங்களும், புகைப்படங்களும் அதிகம் இருக்கவேண்டும் என்பது என் அவா. ஆனால் இதில், ஒரு சில புகைப்படங்களை மட்டுமே உள்ளது. அட்டைப்படத்தில் அழகான ஆண் வெளிமானின் (ஆங்கிலத்தில் Blackbuck ஆனால் ஓரிடத்தில் Black buck என இரு வார்த்தைகளாக்கப்பட்டிருந்தது) புகைப்படமும், உள்ளே இரு இடங்களில் பட்டைத்தலை வாத்தின் (புகைப்படக்காரர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை) கருப்பு வெள்ளை படமும் தான் இருக்கிறது. பல கோட்டோவியங்களில் சில அழாகாவே உள்ளன. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந்திருக்கலாம். கலர் படங்கள் கொண்ட புத்தகங்களை அச்சடிக்க நிறைய செலவாகும். புத்தகத்தின் விலையும் கூடும். எனினும் இந்த நிலை மாற வேண்டும்.
இயற்கையும் காட்டுயிர்களும் கட்டுரையில் பழந்திண்ணி வெளவால் பறக்கும் போது உண்டாக்கும் ஒலியின் எதிரொலி மூலம் வழி கண்டறியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழந்திண்ணி வெளவால்கள் அப்படிச் செய்வதில்லை. அதற்குக் கண்கள் பெரியவை. பூச்சியுண்ணும் சிறிய வெளவால்கள் (microchiroptera) தான் எதிரொலியை ஏற்படுத்திப் பறக்கவும், அவற்றின் இரையைப் பிடிக்கவும் செய்கின்றன. வானம்பாடியை தரையில் வாழும் பறவை என குறிப்பிடப்பட்டுள்ளது (தரையில் வாழும் வானம்பாடி எனும் கட்டுரை), எனினும் வெட்ட வெளியில், அடர்த்தியில்லாத புதர்க்காடுகளில் வாழும் என்பதே பெருத்தமாக இருக்கும். தரையில் கூடமைத்தாலும் இவை கவுதாரி, காட்டுக்கோழி, மயில் போன்ற தரைவாழ் பறவைகள் (Terrestrial) அல்ல. வெளிமான்களின் வாழிடம் எனும் தலைப்பிலமைந்த கட்டுரையின் இறுதியில் இரைக்கொல்லிப் பறவைகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. விளக்கத்தை வைத்துப் பார்க்கும் பார்த்தால் அது பூனைப்பருந்தாக (Harrier) இருக்கவேண்டும், வல்லூறு (Falcon) அல்ல. தாமரைக்கோழி கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பூனைப்பருந்து Marsh Harrier என ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. பறவைகளுக்கு ஒரு விடுதி கட்டுரையில் சொல்லப்படும் கொம்பன் ஆந்தை/கோட்டான் Barn Owl எனும் பறவை. இதை கூகை என்றும் கூறுவர். Horned owl ஐ தான் கொம்பன் ஆந்தை என்பர். பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர்களையும் கொடுத்திருக்கலாம். தமிழ்பெயர்கள் மாறி வருவதை கவனித்து திருத்தி அமைத்திருக்கலாம். இது ஆசிரியரின்/மொழிபெயர்ப்பாளரின் தவறில்லை. தமிழ்நாட்டில் ஒரு பறவைக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொர் பெயரிட்டு அழைப்பார்கள். க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் எனும் புத்தகத்தில் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து வழங்கியுள்ளார். இப்பெயர்களையெல்லாம் ஒருங்கே நெறிப்படுத்த வேண்டிய தருணம் இது.
ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதன் ஆங்கில மூலத்தின் தலைப்பையும், வெளிவந்த நாளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். இதில் உள்ளது மொத்த பக்கங்களே நாற்பத்தி எட்டுத்தான். விலை ரூபாய் 25 தான். நாம் செய்யும் பல தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு புத்தகமாவது வாங்க முடியும். இது போன்ற புத்தகங்களை அல்லது இதிலுள்ள கட்டுரைகளை பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். அல்லது துணைப் பாடநூலாக (Non-detail) வைக்கலாம். எல்லா பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த கல்வி என்பதே இல்லாத இச்சூழலில் இது போன்ற புத்தகங்கள் அதன் குறையைப் போக்கும். இது போன்ற புத்தகங்களே பொதுமக்கள் மத்தியில் காட்டுயிர் பேணல் விழிப்புணர்வு, இயற்கையின் பால் நாட்டம், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை. இப்புத்தகத்தின் நேக்கமும் அதுதான்.
********
நம்மைச் சுற்றி காட்டுயிர் – பூவுலகு. ஜனவரி-பிப்ரவரி (2013)ல் வெளியான நூல் மதிப்புரை. இதன் PDF இதோ.
********
இந்நூலின் சில பக்கங்களை இங்கே காணலாம்.
வெளியீடு: Books for Children, பாரதி புத்தகாலாயத்தின் ஓர் அங்கம், சென்னை – 18. விலை Rs. 25/-
********
பல்லுயிர் பாதுகாப்பிற்கு நாம் என்ன செய்யலாம்?
இப்பூமிப்பந்தினை சீரழிவிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் என யோசிக்கும் முன் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும்.
இதைப் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பல்லாயிரக்கணக்கான சதுர அடி வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலுள்ள எண்ணிலடங்கா உயிரினங்கள் தங்கள் வாழிடங்களை இழந்து தவிக்கின்றன, பல உயிரினங்கள் இந்த உலகிலிருந்து முற்றிலுமாக அழிந்து போகின்றன. இவற்றையெல்லாம் பாதுகாக்கத் தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? நான் இருப்பது நகரத்தில், காட்டைக் காப்பாற்றுவதால் எனக்கு என்ன கிடைக்கும்?
மிக எளிதான அனைவரும் அறிந்த பதில்கள் இதுதான். காடு செழித்தால் நாடு செழிக்கும், மரமிருந்தால் தான் மழை பொழியும். மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் முழுமையாக விடையளிப்பதோ, இதையெல்லாம் செய்யலாம் என்பதை பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் அந்த விடையைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஊட்டுவதும், வழியையும் காட்டுவதும் தான்.
முதலில் நாம் அனைவரும் செய்யக்கூடியது இயற்கைப் பேணல், காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த புத்தகங்களை படிப்பது. தமிழில் இவற்றைப் பற்றிய புத்தகங்கள் குறைவு, எனினும் சு. தியடோர் பாஸ்கரன் (உயிர்மை மாத இதழில் எழுதி வருபவர்), ச. முகமது அலி (காட்டுயிர் எனும் இதழின் ஆசிரியர்) ஆதி. வள்ளியப்பன் (துளிர், பூவுலகு முதலிய அறிவியல் இதழ்களில் எழுதி வருபவர்) போன்ற சில சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கிப் படிக்கலாம். பல்லுயிர்ப்பாதுகாப்பின் (Biodiversity Conservation) அவசியத்தைப் பற்றி, ”இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” எனும் புத்தகத்தில் (உயிர்மை பதிப்பகம்) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களின் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்:
“…சில தீரா நோய்களுக்கு மருந்து, உணவுப் பற்றாக்குறைக்கு நிவாரணம் என பல தீர்வுகள் இப்பல்லுயிரியத்தில் மறைந்திருக்கலாம். சகல உயிர்களுக்கும் ஆதாரமான சூழலியல் செயலாக்கங்களுக்கு இந்த உயிரின வளம்தான் அடிப்படை என்பதையும், மக்களின் நல்வாழ்விற்குப் பல்லுயிரியமே மூல சுருதி என்பதையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. பல்லுயிர் ஓம்புதல் (322) என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த அக்கறையையே. இந்த உயிர்வளம் நமது வம்சாவளிச் சொத்து. இழந்துபோனால் மீட்க முடியாத ஐசுவரியம்….”
இந்த வார்த்தைகளே போதுமானவை, மேலும் தெரிந்து கொள்ள புறவுலகு சார்ந்த கட்டுரைகளையும், புத்தகங்களையும் படிக்கலாம். படித்தால் மட்டும் போதாது அதன் வழி நடத்தல் வேண்டும். இயற்கையின் பால் நாட்டம் ஏற்பட்டு அவற்றைக் காணவும், மகிழவும் செய்தால் மட்டுமே அவற்றைக் காப்பாற்ற முடியாது. அது ஒரு அக்கறையாக வளர வேண்டும்.
நான் நகரத்தில் இருக்கிறேன், நான் வறுமையில் வாடும் ஒரு இந்தியக் குடிமகன், என்னால் பல்லுயிர் பாதுகாப்பிற்கு என்ன செய்து விட முடியும் என்பகிறீர்களா? நகரத்திலுள்ளவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் செய்யக்கூடியவற்றை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். இது எனதல்ல. Andrew Balmford எனும் சூழியல் விஞ்ஞானி சமீபத்தில் எழுதிய Wild Hope எனும் நூலில் சொன்னது. நம் இந்தியச் சூழலுக்கேற்ப சிலவற்றை இணைத்துள்ளேன். அவர் கூறுவதாவது:
காட்டுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பாடுபடுவோருக்கு உதவுதல்:
நம்மால் நேரிடையாக இவற்றில் பங்குபெறமுடியாவிடின் இந்தக்காரியங்களைச் செய்வோருக்கு அல்லது அவர்களது அமைப்பு, சங்கம், நிறுவனங்களுக்கு பண உதவி செய்யலாம். எனினும், இந்த அமைப்புகள் உண்மையிலேயே இயங்குகின்றனவா? இதுவரை அவர்கள் சாதித்தது என்ன? செய்து கொண்டிருப்பது என்ன? எப்படிப்பட்ட நிபுணர்களை, அனுபவசாலிகளைக் கொண்டுள்ளன? போன்ற விவரங்களை பகுத்தறிந்து உதவுதல் நலம். அரசு சாரா நிறுவனங்கள் உள்நாட்டிலும், பண்ணாட்டளவிலும் பல உள்ளன. Greenpeace, World Wildlife Fund for Nature (WWF) போன்ற பண்ணாட்டு அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு. இந்தியாவில் Bombay Natural History Society, Keystone Foundation தமிழகத்தில் கோவையிலுள்ள ஓசை, சிறுதுளி அமைப்புகள், அருளகம், பூவுலகின் நண்பர்கள், Madras Naturalist Society முதலியவற்றைச் சொல்லலாம்.
பங்களித்தல்:
வெறும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு (நன்கொடையோ, அன்பளிப்போ அல்லது அந்த அமைப்புகள் விற்கும் பொருட்களை வாங்கியோ) நான் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்குத் துணைபோகிறேன் என்று சொல்லாமல் அந்த அமைப்புகளின் வேலைகளில் பங்கு கொண்டு தொண்டூழியம் (Volunteering) செய்யலாம்.
கருத்துகளை அனைவருக்கும் தெரிவியுங்கள், போராடுங்கள்:
கடைக்குச் செல்லும் போது கூடவே பையை எடுத்துச் செல்வது, பிளாஸ்டிக் பைகளை வாங்காமல் இருப்பது, தேவையில்லாத நேரத்தில் மின் சாதனங்களை அனைத்தல், கூடியவரை நமது சொந்த பெட்ரோல், டீசல் வாகனங்களில் செல்லாமல் பேருந்து, இரயிலில் செல்லுதல், தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தல், வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது அங்கு குப்பைகளை போடாமல் இருத்தல் போன்ற, நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள் நிச்சயமாக உதவும். நாம் ஒருவர் இவற்றைப் பின்பற்றினால் போதாது. இயற்கைச் செல்வங்களை பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இயற்கைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம், அவற்றிற்காக குரலெழுப்பலாம்.
பார்த்து வாங்க வேண்டும்:
நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஏதே ஒரு வகையில் இயற்கைச் சீரழிவிற்கு நம்மை அறியாமல் துணைபோகிறோம். காலையில் எழுந்து காபியோ, டீயோ குடிக்கிறோம். அது பயிரிடப்படுவது வனங்களை அழித்தே. இதனால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. சமைக்கப் பயன்படும் பாம் ஆயில் (Palm Oil) பயிரிடப்படுவது பல சதுர கிமீ பரப்புள்ள மழைக்காடுகளை அழித்தே. இதனால் இந்தோனிஷியாவில் உள்ள ஒராங்உடான் (Orangutan) எனும் அரிய வகை குரங்கினத்தின் வாழிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. கோல்டன் (Coltan) நாம் பேசும் மொபைலில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான உலோகத் தாது. ஆப்பிரிக்காவில் இதைத் தோண்டி எடுக்க காடுகளை அழிப்பதால் அங்கு வாழும் கொரில்லாக்கள் (Gorilla) அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.
அதற்காக இவற்றை பயன்படுத்தாமல் உயிர்வாழ முடியுமா? மொபைல் இல்லாத வாழ்வை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? முடியாது ஆனால் நல்ல, தரமான, கலப்படமில்லாத பொருட்களை வாங்குவது போல இயற்கைக்குப் புறம்பாக, இயற்கை வளத்தைச் சீரழித்து தயாரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை வாங்காமல் தவிர்த்தல் வேண்டும். வளங்குன்றா விவசாயத்தின் மூலமும், இயற்கை விவசாயமுறையில் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாம். நுகர்வோர் பொறுப்புடன் பொருட்களை பார்த்து வாங்க ஆரம்பித்தால் அதைத் தயாரிப்போரும் பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள். மாறியாக வேண்டும்.
சிறந்த உதாரணம், கிட் கேட் (Kitkat) சாக்கலேட். இதன் தயாரிப்பாளார்களான நெஸ்லே கிட்கேட் மிட்டாய் தாயாரிப்பதற்காக பாம் ஆயில் வாங்கியது ஒராங்உடான் குரங்கினத்தின் வாழிடமான மழைக்காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒரு நிறுவனத்தாரிடமிருந்து. ஆகவே ஒவ்வொரு கிட்கேட் சாப்பிடும் போதும் நாம் அந்த அரிய குரங்கினத்தை சாகடிக்கிறோம் எனும் பொருள்படும்படியான ஒரு குறும்படத்தை கிரீன்பீஸ் (Greenpeace) இயக்கத்தார் தயாரித்து வெளியிட்டனர். அதை இங்கு காணலாம்
இதைப்பார்த்த பலர் கிட்கேட் மிட்டாயை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் பின் தாம் செய்வதை அறிந்து நெஸ்லே அந்த நிறுவனத்திடமிருந்து பாம் ஆயில் வாங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். ஆகவே மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை.
உடும்புக்கறி, சிட்டுக்குருவி, கருங்குரங்கு லேகியங்கள், ஆமை முட்டை போன்றவற்றை சாப்பிட்டால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல. எதையாவது எளிதில் ஏமாற்றி விற்க வேண்டும் எனில் இப்படிச் சென்னால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். இதற்கெல்லாம் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. அதுபோக காட்டுயிர்களை வேட்டையாடுவதும், அவற்றை வாங்கி ஊக்குவிப்பதும் இந்திய காட்டுயிர்ச் சட்டத்தின் படி குற்றமாகும்.
Wild Hopeல் சொல்லப்பட்ட மற்றுமொரு முக்கியமான கருத்து – ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். பல்லுயிர் பாதுகாப்பிற்கு பல வகையில் இடர்கள் வந்து கொண்டே தானிருக்கும். அவற்றைக் கண்டு துவண்டுவடலாகாது. போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
எத்தனை புத்தகங்கள் படித்தாலும், பல பேர் போதித்தாலும் நாமாக உணராவிட்டால் நாம் எதையும் செய்ய முற்படுவதில்லை. எதை நாம் விரும்புகிறோமோ, நேசிக்கிறோமோ அதைத்தான் பாதுகாக்க முற்படுவோம். இந்தியா பல்லுயிரியம் மிகுந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கைச் செல்வங்களில் பல உலகில் வேறெங்கும் கிடையாது. இதை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 16. புதிய தலைமுறை 1 நவம்பர் 2012





















