வந்தது புதுசு.. என்றது மனசு!

2026 உள்ளே – நமதுள்ளே.. நுழைந்துவிட்டது. முகத்திலே ஒரு முறுவல் தெரிகிறதே! விஷமமான சிரிப்பா, வெள்ளைமனந்தான் வெளிப்படுகிறதா. போகப்போகத் தெரியும். இந்தப் பூவின் வாசம் புரியும்.. புரியும்…

இப்படித்தான் குதூகலமாக உள்ளே வந்தது 2025. என்ன ஒரு ஆட்டம்போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறது. எத்தனை அபத்தமான, ஆபத்தான போர்வெளிகளை அது காண்பித்து மிரட்டியது. எத்தனை, எத்தனை சிக்கல்களை, இடர்களை அது தெளித்துவிட்டு பயமுறுத்தியது, ஏற்கனவே களைத்துப்போயிருந்த மனித உலகத்தில். இப்படியெல்லாம் நிகழ்ந்திருந்தும்.. என்னேன்னவோ நல்லதுகளும், வெற்றிகளும், சாதனைகளும் கூடவே வெளிப்பட்டனதானே போன வருடத்தில்.

இந்த வருடம் என்பது போன ஆண்டின், மறைந்துவிட்டதுபோலத் தோன்றும் கால விள்ளலின் தொடர்ச்சிதான் என்பதை மறக்கலாகுமா? நேற்றும் முந்தாநாளும் நாம் அசால்ட்டாக விதைத்திருந்தவை, இப்போது முளை காட்டுகின்றனவே.. என்ன என்ன அவைகளிலிருந்து வரப்போகிறதோ.. எதெதையெல்லாம் விதையென ஊன்றிவைத்திருக்கிறோமோ ..ஆண்டவா ! விதை விதைத்தவன் வினையறுப்பான் என்பதெல்லாம் இந்தக் காலைவேளையில் உடனே ஞாபகத்துக்கு வரவேண்டும் என்று யார் கேட்டார்கள்..

சரி. வந்ததை வரவில் வைப்போம்.. சென்றதை செலவில் வைப்போம்.. இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்..நாகூர் ஹனீஃபாவின், டி எம் எஸ்-ன் குரல்களுந்தான்  கூடவே இனிமையாய்க் கேட்கிறது. நம் மனம் ஒன்னும் அவ்வளவு கெட்டுப்போயிடலையோ இன்னும்?

நம்ம நாடு அதிலும் நம்ம ராஜதானி.. டெல்லி எப்படி இருக்கிறது இன்று? இன்றா? இன்னொரு நாள் வந்துவிட்டதா என்பார்கள் டெல்லிவாசிகள். ஹேய்! இன்னொரு வருஷம் வந்திருச்சுப்பா என்றால் முழிப்பார்கள். மாசுமண்டலம், பனிப்படலத்திலிருந்து எல்லாம் வெளியே வந்தால்தானே ஏதாவது தெரிய வரும், 2025 போய்விட்டது என்பது ப்ரக்ஞையில் வரும் அவர்களுக்கு? என்ன செய்ய, அவர்கள் கர்மா அவர்களுக்கு!

இந்த உலகின் பெரும் நிலப்பரப்புகளை தற்போது ஆண்டுவரும் அதிமேதாவி அரசியல்வாதிகள் – ட்ரம்ப், புடின், ஸீ பெங்- போன்ற பிரஹஸ்பதிகளைத்தான் சொல்கிறேன் – கொஞ்சம்  சும்மா கிடப்பார்களா 2026-ல்? இல்லை, எதைத் தூக்கி எவன் மீது வீசலாம் என்று மனமலைவார்களா? வன்ம நெருப்பை இஷ்டம்போல் விசிறியடிப்பார்களா? வெனிஸூலாவின் மதுரோ, யுக்ரேனின் ஸெலன்ஸ்கியெல்லாம் என்ன ஆவார்கள்? ஆடுவார்களா இன்னும்? இல்லை, ஓடிவிடுவார்களா? ஈரானின் அயதொல்லா கமேனி? வண்டி புறப்பட்டுடும்போலத்தான் தெரிகிறது. வடகொரியாவின் கிம் ஜாங் உன்? அதுக்கென்ன, அதுமாட்டுக்கு ஏவுகணை மேல ஏவுகணையா ஏவிகிட்டு, ஜப்பானையும் தென்கொரியாவையும் பாத்து சிரிச்சிகிட்டு இருக்கும். தைவானில் சீனா கையை வைத்தால், எங்கள் ராணுவ சித்தாந்தத்தின்படி நாங்கள் அதை பாதுகாப்பு சவாலாக எதிர்கொள்ளவேண்டிவரும் என முழங்கி, சீன ஸி பெங்குக்கு எரிச்சலூட்டியிருக்கும் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஸனே தகேய்ச்சி, பேச்சோடு நின்றுவிடுவார்தானே… நமது அண்டைப்புறத்தில் முனீர் மாமாவும், (வங்கதேசத்து ஆட்சிக்கு வரப்போகும்) ரஹ்மானும் நரேந்திரனை மனதில் நினைத்து இறுகக் கட்டிப் பிடித்துக்கொள்வார்கள்.. நட்பை வெளிப்படுத்துவார்கள். அதற்கப்புறம் ?

எதற்கு இப்படியெல்லாம் ஆயிரம் கேள்விகள் ஜனவரி காலையில்? என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே… இதெல்லாம் நமக்கு நல்லாப் பழக்கப்பட்டதுதானே! இப்படிப் பாடிப் பாடி.. பார்த்திருப்போம், காலத்தைக் கவனித்திருப்போம்:

நூறுவகைப் பறவை வரும்.. கோடிவகைப் பூ மலரும்..

ஆடிவரும் அத்தனையும்.. ஆண்டவனின் பிள்ளையடா….

**

தேவதச்சன் கவிதைகள் – மென்மனச் சிதறல்கள்

கவிதையை நோக்கிய என் மனதின் ஈர்ப்பு இன்னும் குறையவில்லை, மறையவில்லை. வாழ்க்கையின் வழக்கமான சில, பல கவர்ச்சிகள் விலகி.. போய்விட்டன என்றபோதிலும். சுப்ரமணிய பாரதிக்குப் பிறகு – ஆத்மாநாம், பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், ஃப்ரான்சிஸ் கிருபா என்றெல்லாம் தமிழின் நவீன கவிதைப் பிரதேசங்களில் ஈடுபட்ட மனம், தேவதச்சனின் கவிதா மேன்மையையும் அவ்வப்போது தரிசித்துவந்திருக்கிறது. ஒரு சில கணங்களில் கண்முன்னே தோன்றியதுபோல் தோன்றி, நகர்ந்து மறைந்துவிடும் காட்சி அனுபவங்களையும், சலசலக்கும் மனதின் ஆழ பிம்பங்களையும் வார்த்தைகளில் அவர் வடித்தெடுக்கும் நேர்த்தி அலாதியானது. அவரின் சில வார்ப்புகளை இங்கே பகிர விழைகிறேன் :

சிறுமி கூவுகிறாள்

சிறுமி கூவுகிறாள்

நான் போகிற இடம் எல்லாம் நிலா

கூடவே வருகிறதே..

சிறுவன் கத்தினான்

இல்லை, நிலா என்கூட வருகிறது

இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு

திருப்பத்தில் பிரிந்தனர்

வீட்டுக்குள் நுழைந்து உடன்

வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள்

நிலா இருக்கிறதா?

இருக்கிறதே..

அவள் சின்ன அலையைப்போல சுருண்டாள்

அந்தச் சின்ன அலையில்

கரையத் தொடங்கியது நிலவொளி

எல்லோர் கூடவும் போன நிலா பிறகு

எங்கே போனதென்று

யாருக்கும் தெரியவில்லை

**

காற்று ஒருபோதும் ஆடாத

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை

காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள்

காலில் காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன

வெட்ட வெளியில்

ஆட்டிடையன் ஒருவன்

மேய்த்துக்கொண்டிருக்கிறான்

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை மற்றும்

சில ஆடுகளை

**

கல் எறிதல்

ஆளாளுக்குக் கல் எடுத்து

எறிந்தனர்

என் கையிலும்

ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து

மலைத் தொடர் வடிவத்தில் இருந்த

கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்

உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்

ஓசையற்று மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக வீசினேன்

விடைபெறும் முகமாகவும்

என்னையும் தூக்கிச் செல்லேன் என்று

இறைஞ்சும் விதமாகவும்

**

பரிசு

என் கையில் இருந்த பரிசை

பிரிக்கவில்லை. பிரித்தால்

மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும்போல் இருக்கிறது

என் அருகில் இருந்தவன் அவசரமாய்

அவன் பரிசைப் பிரித்தான். பிரிக்காமல்

மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்கமுடியும்

பரிசு அளித்தவனோடு

விருந்துண்ண அமர்ந்தோம்

உணவுகள் நடுவே

கண்ணாடி டம்ளரில்

ஒரு சொட்டு தண்ணீரில்

மூழ்கியிருந்தன

ஆயிரம் சொட்டுகள்

**

ஒரு சைக்கிளை விற்றல்

அப்பாவின் வலிகள்

அவரது டைரியில் இருக்கிறது

அவரது அலமாரியில்

சட்டைத்துணிகளுக்கு மறைவில் இருக்கிறது

யார் வந்தாலும் உடனே மறைக்கும்

தலையணைக்கடியில் இருக்கிறது

அவர் எரிந்து முடிந்த சிதையின்

சாம்பலில் இருக்கிறது

அவரது பழைய சைக்கிளை விற்ற இன்றைய தினத்தில்

எங்கிருந்தோ பறவை ஒன்றின் ஒலி

விட்டு விட்டுக் கேட்கிறது

அப்பாவின் வலிகளும்

கூடவே கேட்கின்றன

**

கடைசி மனிதன்

பூக்காரி பேசுவதை

நடுவிலிருந்த பூக்கள்

கேட்டுக் கொண்டிருந்தன

“ஆஸ்பத்திரி சென்று பார்த்துவிட்டு வந்தேன்.

மாரிமுத்து பிழைப்பது கஷ்டம்” என்றாள்.

வழக்கமாக வரும் வாடிக்கையாளர்

தலையசைத்தபடி

ஏதோ சொல்ல வாயெடுத்தார்

நீர் தெளித்திருந்த பூக்கள் மேல் –

மெல்ல வந்து

படிந்து கொண்டிருந்தது

சாலைத் தூசிகள்

திகைத்தபடி திரியும்

ஒரு நாய்க்குட்டியின் மழலை

மற்றும்

கடைசி மனிதனின்

மௌனம்

**

Image

கவிஞர் தேவதச்சன்

ஒருபோதும்..

ஒருபோதும்

மீன்கள் திரும்புவதில்லை

திரும்பக் கூடுவதுமில்லை

கடல்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றன

மீன் திரும்பினால்..

ன்மீ ஆகிவிடுமே!

யாராவது

ன்மீயைப் பார்த்திருக்கிறீர்களா

வலைவீசிப் பிடித்திருக்கிறீர்களா

மேலும்

ன்மீயை எப்படித்தான்

சமைப்பது

ஆனால்

திரும்பிக்கொண்டிருக்கும் ன்மீயை

எப்போதும் விரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

**

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025 : இந்தியா சேம்பியன்

இதுகாறும் கைக்கெட்டாதிருந்த  மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டது. கடந்த ஓரிரு வாரங்களாக எதிர்பார்ப்புகளை எகிறவிட்டிருந்த இந்திய மகளிரின் இறுதி வெற்றியினால், பெருமையோ பெருமை நாட்டிற்கு. நாட்டிலும், அயல்நாடுகளிலும் உள்ள எண்ணற்ற இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் புகழ் போதையில் தள்…ளாடி…க்கொண்டிருக்கிறார்கள்!

நேற்று (02/11/25) நவி மும்பையில் நடந்த  மகளிர் ஒரு-நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை(2025)-க்கான இறுதிப்போட்டியில், போராடிய தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. 2017-ல் நடந்த உலகக்கோப்பை ஃபைனலில் 9 ரன் வித்தியாசத்தில்  இங்கிலாந்திடம் தோற்று, பெரும் வேதனை, மன அழுத்தத்திற்கு இந்தியா உள்ளானது நினைவில் நிற்கிறது. மேலும் எட்டுவருஷம் பிடித்திருக்கிறது, எட்டாக்கனியைக் கைப்பற்றுவதற்கு. Better late, than never !

நேற்றிரவு டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வொல்வார்ட், இந்தியாவை முதலில் பேட் செய்யச் சொன்னார் – கோப்பைக்கான இலக்கைத் துரத்தி வெல்வது தங்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில். காயத்தினால் விலகிவிட்ட ப்ரதிகா ராவலுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றிருக்கும்  21-வயது ஷெஃபாலி வர்மாவும், இந்திய மகளிர் கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான, துணைக் கேப்டன் ஸ்ம்ருதி மந்தனாவும் இந்திய இன்னிங்ஸைத் துவக்கினார்கள். இருவரும் நிதானமாக ஆரம்பித்து 104 ரன்கள் எனத் துவக்க பார்ட்னர்ஷிப் கொடுத்தது சிறப்பு. ஸ்ம்ருதி 45 ரன்னெடுத்திருக்கையில் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் க்ளோ ட்ரையோனால் (Chloe Tryon) வீழ்த்தப்பட்டார். அடுத்துவந்த ஜெமிமாவுடன் மட்டையைத் தொடர்ந்து சுழற்றினார் ஷெஃபாலி. தென்னாப்பிரிக்காவின் வேகம் மற்றும் சுழலை திறம்பட சந்தித்தார்கள் இருவரும். சதம் அடித்துவிடுவார்போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றிய நேரத்தில், திடீரென அயபோங்கா காகாவிடம் (Ayabonga Khaka)அகப்பட்டு அவுட்டாகிவிட்டார் ஷெஃபாலி. ஹர்மன்ப்ரீத் களத்தில் இறங்க, ஜெமிமாவுடன் கூட்டு சேர்ந்து கொஞ்சம் ரன் ஏற்றுவாரோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தனர். 223 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என 40-ஆவது ஓவரில் தடுமாறியது இந்தியா. ஸ்கோர் 300 ஐத் தாண்டினால்தான் தென்னாப்பிரிக்காவிற்கு அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். ஆல்ரவுண்டர்கள் தீப்தி ஷர்மாவும், அமன்ஜோத் கௌரும் களத்தில். அமன்ஜோத் அதிக நேரம் நிற்கும் மூடிலில்லை. போய்விட, ரிச்சா கோஷ் வந்து இறங்கினார். பௌண்டரிகள், சிக்ஸர்களும் வந்திறங்கின. தீப்தி 58, ரிச்சா 34 என விளாசியதால் இந்திய ஸ்கோர் இறுதியில் 298 ஐத் தொட்டது.  கோப்பைக்காக தென்னாப்பிரிக்காவுக்கான இலக்கு 299 என நிர்ணயம். தென்னாப்பிரிக்கத் தரப்பில் அயபோங்கா காகா சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒரே விக்கெட்தான் எடுத்தார் என்றாலும், ரன் அதிகம் கொடுக்காமல் தன் 10 ஓவர் கோட்டாவைப் பூர்த்தி செய்தார், தென்னாப்பிரிக்காவின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர், வெள்ளைத்தலை கருப்பழகி நொன்குலுலேகோ மலாபா !

Image

Image

Ayabonga Khaka

இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுதும் சீராகவும், சிறப்பாகவும் ஒரு வீராங்கனை ஆடினார் எனச் சொல்லலாமெனில், அவர் தென்னாப்பிரிக்கக் கேப்டன் லாரா வொல்வார்ட்(Laura Wolvaardt) ஆவார். நேற்றிரவு இந்திய வேகத்தை முனை மழுங்கச் செய்தவரும் அவர்தான். வேகப்பந்துவீச்சாளர்களின் வேகாத பருப்பைக் கண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத், இந்திய ஸ்பின்னர்களை முழுசாக நம்பி செயல்பட்டார். தீப்தி, ஸ்ரீசரணி, ராதா யாதவ் ஆகியோரிடம் பந்து மாறி மாறிச் சென்றது. அவர்களும் இறுக்கமாகப் பந்துவீசி மெல்ல ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். இருந்தும் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் ரன் சேர்த்தல் ஒரு நேர்கோட்டில் செல்வதுபோல் தோன்றியது. ராதா ரன்களை அதிகமாகக் கொடுப்பதை கவனித்த ஹர்மன்ப்ரீத், தூரத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷெஃபாலியை அழைத்தார். ஷெஃபாலிக்கு இன்று நல்ல நாள் போல் தெரிகிறதே.. ஒருவேளை, தன் பார்ட்-டைம் ஸ்பின்னினால் விக்கெட் எடுத்துக்கொடுப்பாரோ.. என அவர் மனதில் தோன்றியதாம். போடும்மா.. நீயும் கொஞ்சம்..! – என்று பந்துவீசச் சொன்னார். ஆஃப் ஸ்பின் போட்டு, தன் இரண்டாவது பந்திலேயே தென்னாப்பிரிக்க மிடில் ஆர்டர் பேட்டர் ஸுனே லூஸை (Sune Luus) காட்&பௌல்ட் செய்துவிட்டார் ஷெஃபாலி.அட! போராடும் குணம்கொண்ட ஆல்ரவுண்டர் மரிஸான் காப்பையும் (Marizanne Kaap) அடுத்த ஓவரில் வீட்டுக்கு அனுப்பி, இந்தியாவின் அழுத்தத்தைக் குறைத்துவைத்தார்.

இப்படி ஒவ்வொன்றாக விக்கெட்டுகள் பறிபோக, பிரமாத ஆடிவந்த கேப்டன் வொல்வார்ட்டும் 101 ரன்னில் அவுட்டாக, தென்னாப்பிரிக்காவுக்கு மூச்சுவாங்கியது. தத்தளித்துத் தடுமாறி இறுதியில் 46-ஆவது ஓவரில் 246-க்கு ஆல் அவுட்டாகித் தோற்றது. இந்தியாவின் கைக்கு  முதன்முறையாக உலகக்கோப்பை வந்து சேர்ந்தது. குதூகலம், கொண்டாட்டம், கொடியசைப்பு, வானவேடிக்கை எனத் தூள் பறந்தது நள்ளிரவுக்குப் பின், நவி மும்பையின் DY Patil மைதானத்தில்.

Image

படத்தில்: மேல்வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து -ஸ்ரீசரணி , ஷெஃபாலி வர்மா, ரேணுகா சிங், ராதா யாதவ், ஸ்னேஹ் ரானா, கோப்பையும் கையுமாக ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்ம்ருதி மந்தனா, அருந்ததி ரெட்டி, உமா சேத்ரி, க்ராந்தி கௌட், அமன் ஜோத் கௌர்.

மண்டிபோட்டு உட்கார்ந்தவாறு: இடமிருந்து-ரிச்சா கோஷ், (வாயை ஒரேயடியாகத் திறந்திருக்கும்) ஹர்லீன் தியோல், (தள்ளுவண்டியில் -காயம் காரணமாக) ப்ரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ்!

**

இறுதிப்போட்டியின் நாயகியாக இந்தியாவின் ஷெஃபாலி வர்மா (87 ரன்கள், 2 விக்கெட்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப்போட்டித் தொடரின் நாயகியாக ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா (இறுதிப் போட்டியில் 58 ரன்கள், 5 விக்கெட்டுகள்) தேர்வானார்.

இறுதி ஸ்கோர்: இந்தியா 298/7.  தென்னாப்பிரிக்கா: 246

கோப்பைக்கான சிறப்பாட்டத்தைக் கண்டுகளிக்க என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, ஐசிசி சேர்மன் ஜே ஷா, மும்பை இண்டியன்ஸ் அணி உரிமையாளர் நீத்தா அம்பானி ஆகிய பிரமுகர்களும் வந்திருந்தனர். (பாலிவுட் அசடுகள் யாரையும் டிவி காண்பித்ததாக நினைவில்லை!) ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு உறுப்பினருடன் கைகுலுக்கி கோப்பைக்காக உற்சாகப்படுத்தியிருந்தார் டெண்டுல்கர்.

1973-ல் மகளிர் கிரிக்கெட்டுக்கான முதல் உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இங்கிலாந்து அதை வென்றது. இதுவரை உலகக்கோப்பைகளை வென்ற அணிகள்: ஆஸ்திரேலியா 7 தடவை, இங்கிலாந்து 4, நியூஸிலாந்து 1. இப்போது இந்த அரிய, பெரிய பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது. “இது ஆரம்பம்தான். இனிமேல்தான் இருக்கு…!” என்று ஆஸ்திரேலியா போன்ற சவால்விடும் அணிகளை எச்சரித்திருக்கிறார் இந்திய அணியின் வெற்றித் தலைவி ஹர்மன்ப்ரீத் கௌர். வாழ்த்துக்கள் ஹீரோயின் !

கிரிக்கெட் போர்டிலிருந்து சிறப்புப் பரிசுகள் உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு வழங்கப்படலாம். பெருந்தொழில் பிரமுகர்களிடமிருந்தும் உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரலாமோ? இரண்டு நாட்கள் முன்பு குஜராத்திலிருந்து ஒரு பிரபல நகை/வைர வியாபாரி “இந்தியப் பெண்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்டால்….” என்று ஏதோ சொன்னதைப் படித்ததாகவும் ஞாபகம்..!

**

ஓ.. ஜெமிமா !

நீ என்ன செய்துவிட்டாய்..

நான் ஏன் மயங்குகிறேன்..!

இப்படி ஆரம்பிக்கும் பழைய திரைப்பாடலொன்று நேற்றிரவு ஞாபகத்துக்கு வந்தது! உலகக்கோப்பை செமி ஃபைனலில் நமது கிரிக்கெட் வீராங்கனைகள் நேற்று ஒரே போடாகப் போட்டு எதிரணியைச் சாய்த்ததே காரணம். சாதாரண கிரிக்கெட் வெற்றியா இது!

நேற்றிரவு (30-10-25) திருச்சியின் ரெட் ஃபாக்ஸ் ஹோட்டல் ரூமில் அமர்ந்து டிவியில் மகளிர் உலகக்கோப்பைக்கான இந்திய-ஆஸ்திரேலியா செமிஃபைனல் மேட்ச்சைப் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர, நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோற்றுப்போகும் என்று ஒருபோதும் நம்பவில்லை. இந்தியா கொஞ்சம் போராடும். கடைசியில் தோற்று வெளியேறும். நாமும் கொஞ்சம் பார்த்துவைப்போம் என்றுதான் நினைத்து டிவி முன் அமர்ந்திருந்தேன்.

ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி, 339 என்கிற ஹிமாலய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. ஃபீபி லிட்ச்ஃபீல்ட் (Phoebe Litchfield) 119, எலிஸ் பெர்ரி (Elyse Perry) 77, ஆஷ்லே கார்ட்னர்(Ashley Gardner) 63 முக்கிய ஸ்கோர்கள். இலக்கு நோக்கி, இந்தியா தன் பேட்டிங்கைத் தொடங்கியதும், ஸ்டார் பேட்டர் ஸ்ம்ருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் ஆஸ்திரேலிய சீற்றத்தில் ஆரம்பத்திலேயே விழுந்துவிட்டனர். ஜெமிமா ரோட்ரிக்ஸும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் இறங்கி, எதிரணியின்பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ஆடினார்கள். ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். சரி, இந்த ரெண்டுபேரும் 50-60 எடுத்து அவுட் ஆகிவிடுவார்கள். அடுத்து, ரிச்சா கோஷ் கொஞ்சம் வானவேடிக்கைக் காண்பித்து ரசிகர்களை அநியாயத்துக்கு உசுப்பேற்றுவார். அவரும் தன் கணக்குக்கு நாற்பதோ ஐம்பதோ எடுத்துவிட்டு ஓடிவிடுவார். மற்றவர்களால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாது. எப்படியும் 339 என்கிற இலக்கெல்லாம் இந்திய மகளிருக்கு எட்டாக் கனிதான். 70-80 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்கும் என்கிற அனுமானத்தோடும், அவநம்பிக்கையோடும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

கதை நேற்றிரவு வித்தியாசமாக விரிந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் 89 ரன்னில் வீழ்ந்துவிட்டார். ஆஸ்திரேலிய முகங்களில் மினுமினுப்பு! ஆனால் ஜெமிமா மசியவில்லை. அடுத்துவந்த ரிச்சா கோஷுடன் (Richa Ghosh) ஆட்டத்தின் போக்கு குறித்து அடிக்கடி பேசிக்கொண்டும், ரன்களை வேகவேகமாக ஏற்றியவாறும் பரபரப்பு காட்டினார். தடாலென்று இரண்டு சிக்ஸர்களைத் தூக்கிய ரிச்சா, ஆஸ்திரேலிய ரத்த அழுத்தத்தை ஏற்றிவிடுவார் எனத் தோன்றியது. இருவரின் ஆட்டமும் இந்திய ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்றது. வியர்க்க விறுவிறுக்க போராடிக்கொண்டிருந்த ஜெமிமா நைஸாக தன் சதத்தையும் எட்டிவிட்டார். தன் முதல் உலகக்கோப்பை சதத்தைக் கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை. தரப்பட்ட பணியை முடித்துவிட்டுத்தான் மற்றதெல்லாம் என மனம் சொல்லியிருக்கும். ரிச்சாவுடன் வேகமாக ஓடி, ஓடி சிங்கிள்கள், அவ்வப்போது பௌண்டரி என ஒரே முனைப்பிலிருந்தார் ஜெமி.

Image

(படம்) ஜெமிமா ரோட்ரிக்ஸ் !

இந்த நேரத்தில் பாய்ண்ட் திசையில் ஒரு பந்தை தூக்கியடிக்க முற்பட்ட ரிச்சாவை கேட்ச் பிடித்து ஆஸ்திரேலியர்கள் வெளியேற்றிவிட்டார்கள். தங்கள் முதுகில் தாங்களே தட்டிக்கொண்டு ரிச்சா என்கிற ரூபத்தில் சூழ்ந்திருந்த ஆபத்துமேகம் விலகிவிட்டது எனக் கொஞ்சம் கொண்டாடினார்கள். அடுத்தாற்போல் இறங்கிய அமன்ஜோத் கௌர் நெருக்கடி நேரத்தில் ரிச்சாவைப்போல் அதிரடி காட்டி ஆடக்கூடியவரல்ல. ஜெமிமாவின் முகத்தில் கவலையின் இருள். ஜெமிமா வெகுவாகக் களைத்திருக்கிறார். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழல். அமன்ஜோத் எந்த நேரத்திலும் அவுட்டாகலாம். அடுத்து ஆட வரவிருக்கும் வீராங்கனைகளுக்கு மட்டையைப் பிடித்து சரியாக நிற்கக்கூட முடியாது. ‘இந்தியாவின் கதை ..ஐயோ பாவம்..இன்னும் சில ஓவர்களில் முடிந்துவிடும்’ என்ற இறுமாப்பில் வலிமையான ஆஸ்திரேலிய அணி ஆவேசமாகப் பந்து வீசியும், ஃபீல்டிங் செய்தவாறும் இருந்தது.

ஏற்கனவே ஒல்லிக்குச்சி. தன் மீது அணியினருக்கும், ரசிகர்களுக்கும் எகிறியிருந்த எதிர்பார்ப்பின் அழுத்தம். வியர்வை, புழுக்கம்வேறு என எல்லாமாகக் கூட்டணிபோட்டு ஜெமிமாவைப் பாதியாக உருக்கிவிட்டிருந்தது. ஆனால் அந்த இளம் வீராங்கனை அசரவில்லை. அவருக்குள் ஏதோ ஒரு பூதம் புகுந்துகொண்டு ஆட்டிவைப்பதுபோல் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெமி. இவரும் அமன்ஜோத்தும் சிங்கிள்களுக்கிடையில் எதிர்பாரா பௌண்டரிகளையும் கொளுத்திப்போட்டனர். பயக் களை ஆஸ்திரேலிய முகங்களில் தெரிய ஆரம்பித்தது. 49- ஆவது ஓவரிலேயே திறன் காட்டிய ஜெமிமாவும், சமயோஜிதமாகத் துணையாட்டம் ஆடிய அமன்ஜோத் கௌரும் இலக்கை வெற்றிகரமாகக் கடந்தனர். இந்தியாவை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரவேசிக்கவைத்தனர். இரண்டாவது ஓவரிலேயே ஆடவந்திருந்த ஜெமிமா 127 ரன் எடுத்து அவுட்டாகாது நின்றார். (ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 26 எடுத்தார். அமன்ஜோத் 8 பந்துகளில் 15 ரன்! பந்துவீச்சில், ஸ்ரீசரணியும், தீப்தி ஷர்மாவும் தலா 2 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.)

முக்கிய விக்கெட்டுகளை இந்தியா தடதடவென இழந்த இலையில், ஜெமிமா இன்று காண்பித்த. ஆட்ட சாதுர்யம், திறன், இலக்கை நோக்கிய விடாமுயற்சி, தனி ஒருவளாய் நின்று சாதித்துக் கொடுத்தது என எப்படி வேண்டுமானாலும் அவரது பங்களிப்பைப் புகழலாம் கிரிக்கெட் உலகம். தான் பாராட்டப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இண்டர்வியூவின்போது ஜெமிமா வெகுவாகக் கண்கலங்கித் தடுமாறுவதைப் பார்க்கையில், நமக்கே கண்களில் ஈரம் தட்டியதை உணர முடிந்தது.

ஞாயிறன்று நம்மை உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சந்திக்கத் தயாராயிருக்கிறது, இங்கிலாந்தை ஓட,ஓட விரட்டிவிட்ட தென்னாப்பிரிக்க அணி. இந்தியாவோ, தென்னாப்பிரிக்காவோ – எது வென்றாலும்- அதன் கையில் உலகக்கோப்பை சிக்குவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

ஹர்மன்ப்ரீத் கௌருக்கு அந்த யோகம் உண்டோ ..!

Scores:

Aus 338 all out

Ind 341/5

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை – ஃபைனலில் தென்னாப்பிரிக்கா.

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ‘ஆட்டம்’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது நேற்று (29-10-25). குவஹாட்டியில் நடந்த முதல் செமிஃபைனல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெகு சிறப்பாக ஆடி, இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இரண்டு சிறப்பம்சங்கள் : தென்னாப்பிரிக்க கேப்டன் வொல்வார்ட்டின் (Laura Wolvaardt) அட்டகாச சதம். 169 ரன் ,என அதிரடிகாட்டி அவர் அவுட்டானபோது இங்கிலாந்து அணியில் ஒவ்வொருவராக அவரிடம் சென்று கையைக் குலுக்க முயற்சித்தார்கள். அல்லது கையசைத்தார்கள். தலையசைத்து அமைதியாக நடந்தவாறே மைதானத்தை விட்டு வெளியேறினார் வொல்வார்ட். ஒரு சிரிப்பில்லை. கொண்டாட்டமில்லை. குரைத்தல், குதித்தல், கோணல்கள்போன்ற  ட்ராமா ஏதுமில்லை. {இந்தியக் கேப்டன் (பெண் கோஹ்லி எனத் தன்னைக் கருதிக்கொண்டிருக்கும்) ஹர்மன்ப்ரீத் கௌர் கவனித்திருந்தால், ஏதேனும் இதிலிருந்து கற்றுக்கொண்டிருந்தால், நாட்டுக்கு நல்லது!} நேற்றைய போட்டியின் இன்னுமொரு சிறப்பு பங்களிப்பாளர்: தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் மரிஸான் காப். (Marizaane Kapp) ஏழே ஓவர்களில் வெறும் 20 ரன்கள் கொடுத்து, 5 இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வலிமையான இங்கிலாந்தை நிலைகுலையச் செய்ததோடு, 42 ரன்களையும் தன் அணிக்காக சேர்த்தார் காப். ஆல்ரவுண்டர் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்?

Image

South African Skipper Laura Wolvaardt.

இன்றைய இரண்டாவது செமிஃபைனலில் இந்தியா, உலக சேம்பியனான, இந்த முறையும் கோப்பையை தட்டிச்செல்லக்கூடிய அணி என அனுமானிக்கப்படும் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இருப்பினும், ஒருவேளை இந்தியா ப்ரமாதமாக சாதித்து வெற்றிபெற்றால், கோப்பைக்கான ஃபைனலில் நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கும்.

இதுகாறும் சிறப்பாக ஆடிவந்த ஓப்பனர் ப்ரதிகா ராவல் காயம் காரணமாக இனி மிச்சமிருக்கும் ஆட்டங்களில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக, இதற்கு முன்னால் துவக்க ஆட்டக்காரராக இருந்த, உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறாதிருந்த,  21-வயது ஷெஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இன்றைய செமிஃபைனலில் அவர் ஸ்ம்ருதி மந்தனாவுடன் இந்திய பேட்டிங்கைத் துவக்க வாய்ப்பு. பொதுவாக அதிரடியாக ஆடக்கூடிய வர்மா, எடுத்த எடுப்பிலேயே செமிஃபைனலில் இறக்கப்படவிருக்கிறார்! எப்படிப் பாடுவாரோ… ஐ மீன்.. ஆடுவாரோ..!

Image

Recalled to open India Innings: Shafali Varma

இன்றைய ஆட்டத்தில் ரேணுகா, க்ராந்தி, ஸ்ரீ சரணி ஆகியோரின் பௌலிங் இந்தியாவுக்குக் கைகொடுக்கலாம். இந்தியாவின் கண்ராவி ஃபீல்டிங் அணியைக் கவிழ்த்துவிடும் அபாயமுண்ட்டு. பேட்டிங்கில்,  ஸ்ம்ருதி, ஷெஃபாலி, தீப்தி, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா ஆகியோரின் பேட்டிங் ரசிகர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இவர்களில் மூன்றுபேராவது க்ளிக்கானால், இந்தியா பிழைக்கும். இல்லையேல், ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா ஃபைனலை ஞாயிறன்று கண்டுகளிக்கலாம்!

**

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை- செமிஃபைனலில் இந்தியா!

ஆரம்ப இரு மேட்ச்சுகளின் சுலப வெற்றிகள் தவிர்த்து, முக்கிய அணிகளுக்கெதிரான தொடர்ந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் மண்ணைக் கவ்வித் திணறிக்கொண்டிருந்த இந்திய மகளிர் அணி, நேற்று (23/10/25) நியூஸிலாந்தை நவி மும்பையில் சந்தித்தது. இந்தப் போட்டியை ஜெயித்தே ஆகவேண்டும். இல்லை எனில் கிட்டத்தட்ட வெளியேற்றம்தான் என்கிற எக்கச்சக்கமான நெருக்கடி நிலையில், இந்திய அணி திடீரென விழிப்பு கண்டது! அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், நியூஸிலாந்து பௌலர்களை ஒரு கை பார்த்துவிட்டனர். எட்டி நின்ற வெற்றி, கைக்கெட்டியது. ம்ஹ்ம்ம்…. ஒருவழியாக உலகக்கோப்பையின் செமிஃபைனலில் நுழைந்தாயிற்று.

Image

Century celebrations : 1. Smriti Mandhana

Image

2. Pratika Rawal

முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது டாஸை வென்ற நியூஸிலாந்து அணி. இந்திய அணியின் நம்பகமான துவக்க வீராங்கனைகளான ஸ்ம்ருதி மந்தனாவும் (Smriti Mandhana), ப்ரதிகா ராவலும் (Pratika Rawal) மெல்ல ஆரம்பித்து, பின் பிரமாதமாக ஆடினார்கள். இருவரும் வெகுவாக முன்னேறி இறுதியில் சதமடித்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இதற்கு முந்தைய உலகக்கோப்பைகளில், இப்படி ஒரு சிறப்பான துவக்க பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு நிகழ்ந்ததில்லை. ஏராளமாக வந்திருந்து களித்திருந்த ரசிகர்கள் ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள்! ஸ்ம்ருதி அவுட்டானவுடன் உள்ளே இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் (Jemimah Rodrigues) எதிரணயின் பந்துவீச்சாளர்களை விளாசி அபாரமாக ஆடியதில், இந்தியாவினால் 340 என்கிற பெரிய ஸ்கோரை 49 ஓவர்களில் எழுப்பமுடிந்தது. நியூஸிலாந்தின் ரோஸ்மேரி மாயர் (Rosemary Mair), அமேலியா கெர், சுஸீ பேட்ஸ் (Suzy Bates)ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. மற்ற பௌலர்களின் பாச்சா நம்மவர்களிடம் பலிக்கவில்லை! மழை வேறு இடையிடையே உள்ளே வந்து ஆட்டம்போட்டதால், DLS முறைப்படி நியூஸிலாந்துக்கான இலக்கு 44 ஓவர்களில் 325 என நிர்ணயிக்கப்பட்டது.

Image

India’s spirited pace duo: Renuka Singh Thakur & Kranti Gaud

நியூஸிலாந்து அதி கவனமாக ஆடி இலக்கை நோக்கி முன்னேறத்தான் பார்த்தது. ஆனால், இந்திய பௌலர்களான அனுபவ வீராங்கனை ரேணுகா டாக்குரும் (Renuka Thakur), 22 வயது புதுவரவு க்ராந்தி கௌடும் (Kranti Goud) தங்களின் துல்லிய வேகத்தினால்,அவர்களை நாட்டியமாடவைத்தார்கள். விக்கெட்டுகள் அவ்வப்போது சரிந்தவாறு இருந்தன. ஜியார்ஜியா ப்ளிம்மர் (Georgia Plimmer) (30), அமேலியா கெர் (Amelia Kerr)(45) நன்றாக ஆரம்பித்தும், பிட்ச்சில் நீடிக்க முடியவில்லை. மிடில் ஆர்டர் பேட்டர், ப்ரூக் ஹாலிடே (Brooke Halliday) சிறப்பாக ஆடி 84 பந்துகளில் 81 விளாசினார். நியூஸிலாந்தின் விக்கெட்கீப்பர் இஸபெல்லா கேஸ் (Isabella Gaze) வேகமாக 65 ரன் எடுத்தும் மற்றவர்கள்  வரிசைகட்டி வெளியேறியதால் நியூஸிலாந்தைக் காப்பாற்ற முடியவில்லை.  

இந்த மேட்ச்சில், ஆறு பந்துவீச்சாளர்களை இந்தியக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (Harmanpreet Kaur) மாற்றி மாற்றி நன்றாகப் பயன்படுத்தினார். எல்லோருக்கும் விக்கெட் கிடைத்தது! ரேணுகா, க்ராந்திக்கு தலா 2 விக்கெட்டுகள். ஸ்பின்னர்களான ஸ்னேஹ் ரானா, ஸ்ரீ சரணி, தீப்தி ஷர்மாவுக்கு தலா ஒரு விக்கெட். எப்போதாவது பந்து கொடுத்தால் போதும் என்பதாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் ப்ரதிகாவுக்கு நேற்று பெரிய மனசுபண்ணி கேப்டன் 4 ஓவர் கொடுக்க, ப்ரதிகாவும் தன் பங்குக்கு ஒரு விக்கெட்டைப் பிடுங்கி வீசிவிட்டார்.  ப்ரதிகா 122 ரன்கள், ஒரு விக்கெட் என  எடுத்தபோதிலும், சிறப்பு ஆட்டக்காரருக்கான விருது ஸ்ம்ருதி மந்தனாவுக்கே கிடைத்தது. 109 ரன் எடுத்த துணைக் கேப்டன் ஸ்ம்ருதி, 3 கேட்ச்சுகளை லாவியதும் முக்கிய காரணமாக இருந்திருக்கும்..

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய கேப்டனான ஹர்மன்ப்ரீத் கௌர் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. இங்கிலாந்துக்கெதிராக 70 ரன் எடுத்ததைத் தவிர, அவரது பேட்டிங்கை சகிக்கமுடியவில்லை. நேற்றைய போட்டியிலும் 10 ரன்களில் அம்மா காலி! ஆனால், கோஹ்லியைப் போல் ஆவேசம், முகக்கோணல்கள் காண்பிப்பதில், ஜூனியர்களை முறைப்பதில், வசைபாடுவதில் குறையேதும் வைக்கவில்லை அம்மணி!

**

விரட்டி மிரட்டிய ’ஆபரேஷன் சிந்தூர்’

தீவிரவாதத்தை அழிக்கும் முயற்சியில் தேவைப்பட்டால், உள்ளே புகுந்தும் அடிப்போம், (‘அந்தர் குஸ் கே பி மாரேங்கே..’ Andhar gus ke bhi maaraenge) என நமது தலைவர்கள் சூளுரைத்தது, பாப்புலராகிப்போன வெறும் வெட்டிப்பேச்சல்ல என்பது எதிரிநாட்டுக்கு மே 7 –ஆம் தேதி வெளிச்சமானது – அதாவது இரவில் காண்பிக்கப்பட்ட சூரியனானது. இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் (drones) பாகிஸ்தானுக்குள் புகுந்து விளையாடியதன் விளைவாக, பாம்புக்கு வெகுநாளாகப் பால் வார்த்து வளர்த்துவந்த பாகிஸ்தானின் கண்ணெதிரே பயங்கரவாதக் கும்பல் சுமார் 100 பேர் கூண்டோடு கைலாசத்துக்கு .. சே..  ’ஜன்னத்’துக்கு நேராக அனுப்பட்டனர். லஷ்கர், ஜஷ்ம்-எ-முகமது என்கிற பாகிஸ்தானின் சர்வதேசப் பிரசித்திபெற்ற தீவிரவாதத் தலைமைகள் மற்றும் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை துல்லியத் துவம்சம் செய்தபின் அடுத்தநாள் பத்திரிக்கைகள், மீடியா சந்திப்பின்போது இந்திய ராணுவம் இப்படிச் சொன்னது: ’நாங்கள் முன்பே சொன்னபடி இந்தத் தாக்குதலில் தீவிரவாத தளங்கள், பயிற்சிக்கூடங்கள், பயங்கரவாதிகள் மட்டுமே எங்களது இலக்குகள். அவை திட்டமிட்டபடி தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ, அதிகார மையங்களோ, சாதாரண மக்களின் வாழ்விடங்களோ எங்கள் இலக்கல்ல .. அதனால் இது மேற்கொண்டு ஒரு போராகப் ’பரவும்வகையிலானது  அல்ல’ (non-escalatory) என்று கூறிக்கொள்கிறோம்’ என்றது. அதாவது, நீங்கள் திருப்பித் தாக்கவில்லை எனில் இதோடு இது நிறுத்தப்பட்டுவிடும், பரவ வாய்பில்லை என்று, பாகிஸ்தானுக்கு நேரடியாக, அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானாவது, சும்மா இருப்பதாவது? இத்தனை வருஷங்களாக வாங்கிக் குவித்து வைத்திருக்கும் சீன,  அமெரிக்க ஆயுதங்கள், சமீபத்தில் இறக்குமதி செய்த துருக்கியின் ட்ரோன்கள் (Drones) .. இதையெல்லாம் எப்பத்தான் உபயோகிப்பது? பாகிஸ்தானின் அரிப்புக்கு இந்தியாவைத் தாக்கியே ஆகவேண்டுமே. அப்படித் தாக்கினால்தானே பாகிஸ்தான் எனும் ஒரு நாடு இருப்பதே உலக அரங்கில் தெரியவரும்.. பொருளாதாரம் என்ற ஒன்றே தென்படாத நிலையில், உலகவங்கியின் வாசலில் திருவோடு தூக்கி நிற்பதே பொழப்பா போன அவலத்தினிடையே.. பாகிஸ்தானுக்குக் காட்டிக்கொள்ள வேறென்ன இருக்கிறது? இந்தியாவோடு முழுப்போர் என இல்லாவிட்டாலும், ஒரு சிறு சண்டையாவது நிகழ்ந்தால்தானே அதன் இருப்பு உலக அரங்கில், ஐ.நா.சபையில் பிரஸ்தாபிக்கப்படும். தளபதி  முனீருக்கும் புகழ் கிடைக்கலாம். ஒருவேளை, டம்மிபீஸ் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபைத் தூக்கி வீச முடிந்தால், தானே பாகிஸ்தானின் ஜனாதிபதி என முஷரஃப் போல அறிவித்து உலகம் சுற்றும் வாலிபனாக முனீர் வலம்வர வாய்ப்பு உண்டு. இப்படி சில சாத்தியக்கூறுகள், ஒளிக்கீற்றுகளாக மின்னினபோலும் பாகிஸ்தான் ராணுவத் தலைமைக்கு.

ஆகவே, அடுத்த பகலிலேயே (லோக்கல் பாஸ் சீனாவின் மேலான ஆசியுடன்) தன் வேலையைக் காண்பித்தது. தரைப்படைகளைக்கொண்டு காஷ்மீர் பிரதேசத்தில் மரபுவழிப்போரை விமரிசையாகத் துவக்கிவைத்தது. இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள் கொண்டு இந்தியக் காஷ்மீரின் எல்லைக் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இந்திய  ராணுவமும் திருப்பித்தந்தது. அவர்களது தரப்பிலும்,  நமது தரப்பிலும் எல்லைக்கு அருகாமையிலுள்ள கிராமங்களில் குண்டுகள் ஏராளமாகத் துளைத்தன. க்ராஸ்ஃபைரில் மாட்டிய உயிர்கள் , ராணுவத்தினரோ, பொதுஜனமோ.. இழக்கப்பட்டிருக்கும்தான். யுத்தம் என்றால் இதெல்லாம் தவிர்க்கமுடியாததே.

உள்ளே புகுந்து விளாசிய இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதாக எண்ணி, அந்த இரவில் எல்லை ஓரமிருந்த இந்திய ராணுவ தளங்களை, போஸ்ட்டுகளை, ட்ரோன்கள், ஏவுகணகள் மூலம் தாக்கி அழிக்க முயற்சி செய்தது. பிரதானமாக, ஜம்மு காஷ்மீரின் உதம்பூர், ஜம்மு விமான தளங்கள், பஞ்சாப் எல்லைக்கருகில் அம்ருத்ஸர், பட்டான்கோட், ஆதம்பூர்,  ராஜஸ்தானின் ஜெய்சால்மர், குஜராத்தின் புஜ் (Bhuj) , ஜம்மு ஆகிய டவுன்கள் இலக்காகின. அம்ருத்ஸரின் பொற்கோவிலைத் தாக்கமுடிந்தால், சீக்கியர்கள் இந்தியாவுக்கெதிராகத் திரும்புவார்கள் என்கிற குள்ளநரித் தந்திரமும் இதில் அடங்கும்.(இந்தப் பின்னணியில் பொற்கோவிலோடு, வைஷ்ணோ தேவி கோவிலுக்கும் சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது) சண்டிகர், டெல்லி போன்ற நகரங்களில் எதையாவது வீசி ஷோ காட்டமுடிந்தால் நம் புகழ் உலக மீடியாவில் கொடிகட்டி பறக்குமே என்கிற நப்பாசையும் ஜெனரல் அஸீம் முனீருக்கு இருந்தது. முனீர் ஸ்வாமிகளுக்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள்.. நெஞ்சத்திலே ஓசைகள் !

ஜம்மு விமான நிலையத்தைத் தாக்க பாகிஸ்தானின் முயற்சி ஆகாஷின் வளையத்துக்குள் வந்து சின்னாபின்னமாகியது. விடாது மீண்டும் முயற்சித்துப் பார்த்தது பாகிஸ்தான். ஆனால் இந்திய வான்படையின் சாகஸம், தீவிர எதிர்ப்புகளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் அவர்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள், இந்தியாவில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களாலும், ஏனைய வான் ஊடுறுவல் எதிர்ப்பு கலவை ஆயுதங்களாலும் வெற்றிகரமாக தாக்கப்பட்டு சாம்பலாகின. அவற்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட P 15 ரக ஏவுகணைகள் மற்றும் பாகிஸ்தானின் உற்ற சகோதரனான – பாய்ஜானான (bhaijaan !)- துருக்கியிடம் ஆசை ஆசையாய் வாங்கிய இஹா (YIHA), சோங்கார் (Songar) ரக ட்ரோன்கள் (drones) அடங்கும். எதிரியின் வான்வழித் தாக்குதலைத் தடுத்து சிதைத்ததில், பாரதத்தின் நெடுநாள் நண்பனான ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட S 400 ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத் தொகுப்புகள் இந்தியாவுக்கு பெரும் உதவியாய் இருந்தது இந்தப் போரில் கண்கூடாகத் தெரியவந்தது. இந்தியாவில் Make in India திட்டப்படி தயாரிக்கப்பட்ட நவீன ஆகாஷ் ஏவுகணைகள் எதிரி ஏவுகணைகள், ட்ரோன்களை வானிலேயே ஒருகை பார்த்துக்கொண்டன. குறிப்பிடத்தக்க வகையில், சீனாவின் PL-15 ஏவுகணைகள், J 10 C போர்விமானங்கள்  இந்திய ராணுவத்திடம் செம்மையாக உதைவாங்கின. இனி ஒரு நாடும் அந்த ஏவுகணைகளை, போர்விமானங்களை சீனாவிடமிருந்து வாங்காது. துருக்கிய ட்ரோன்களுக்கும் (drones) அதே கதி. ஐயோ.. பாவம்! பரதேசி பாகிஸ்தானுக்கு உதவப்போய்.. இப்படியா ஆகணும்? பாத்திரம் அறிஞ்சு பிச்ச போடுங்கடா.. முட்டாள்களா..      

Image

India’s supersonic cruise missile Brahmos

தான் அவர்களின் ராணுவ தளங்களைத் தொடாதிருக்கையில், தன்னுடைய விமான, தரைப்படை தளங்கள் ஆகியவை தாக்கப்பட்டதில் அல்லது அதற்கான முயற்சிகள் பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டதுகண்டு இந்தியா ஆவேசமுற்றது. இதுவரை அடக்கி வாசித்துக்கொண்டிருந்த  பாரதம் தன் கோரமுகத்தையும் எதிரிக்குக் காண்பிக்கலாயிற்று. அடுத்த இரவினில் முழுமூச்சோடு பாகிஸ்தானின் எல்லைப்புற ராணுவநிலையங்கள் தாண்டி, தலைநகர் இஸ்லாமாபாதின் வெகுஅருகில் ராவல்பிண்டி ராணுவதள அமைப்புகள், விமானநிலையங்களிலேயே நெருப்பு வைத்தது.  பாகிஸ்தானின் 11 முக்கிய விமானப்படைதளங்கள் தாக்கப்பட்டன. சில அழிந்தன. பல காரியத்துக்கு உதவாத நிலைக்கு சேதப்படுத்தப்பட்டன. சில நிமிடங்களில் எதிரியின் இடுப்பை ஒடித்து, எழுந்து நிற்கவும் முடியாமல் இந்தியா களத்தில் சாதித்ததை உலகம் கூர்ந்து கவனித்தது. அசந்தது. இந்த அதிரடி நவீனப் போர்ச் சாதனையில் ப்ரஹ்மோஸ் (Brahmos) ஏவுகணைகளின் பங்கு மிகச் சிறப்பானது. Prestigious Indo-Russian production.. ரஷ்ய-இந்திய தயாரிப்பு. களத்தில் நேரடியாக சோதிக்கப்பட்டது, காரியத்துக்கு உதவியது.. இதுவே முதல் முறை. கூடவே ஒத்துழைத்த இந்திய SkyStriker Drones.. Adani Group’s Alpha Design Technologies உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தால்,  நமது எதிரிக் கட்சிகளில் சிலவற்றிற்கே எக்கச்சக்கமாக எரியும்… !

Image

Akash missiles on show during Republic Day Parade, New Delhi

இரவினில் நடந்த இந்த கோரத்தாக்குதலின் விளைவுகள் புரியவர, பாகிஸ்தானுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. முக்கிய காரணம் இந்தியத் தாக்குதலில் சிதைக்கப்பட்ட சில குறிப்பிடத் தகுந்த விமானதளங்கள்.  அங்கே என்ன இருந்தது இந்தியா என்னதான் செய்துவிட்டது? அதைப்பற்றித் தெரிந்தபின், பாகிஸ்தானின் பாண்ட் கழண்டு கீழே விழுந்துவிட்டது இருக்கட்டும். அகராதிபிடிச்ச அமெரிக்காவுக்கும் தலைசுற்றியது அன்று.

இந்தியாவிடமிருந்தோ.. ’நான் என்ன செய்துவிட்டேன்… நீ ஏன் மயக்கம்போட்டு விழுந்துவிட்டாய்..’ என எழுந்தது சன்னமான குரல்.. கமுக்கமான சிரிப்பு… !

  • தொடரும்

சிந்தூர் போட்டபோடு !

குங்குமம்… மங்கல மங்கையர் குங்குமம்

குங்குமம் .. மதுரை மீனாட்சி குங்குமம்…

என ஆரம்பிக்கும் பழைய தமிழ்சினிமாப் பாடலை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தாலும் ஒரு எழவும் புரிந்திருக்காது. ஏனெனில் தமிழ் தெரியாதே அவர்களுக்கு!   அருமையான மொழியையெல்லாம் அறிந்திருக்க, அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்கணும். அழிவு காரியங்களிலேயே காலத்தைத் தொலைத்துவிடுபவர்களுக்குப் பாட்டுக்கெல்லாம், அதுதரும் சேதிக்கெல்லாம் ஏது நேரம்…

காஷ்மீருக்குள் அன்று புகுந்து, மதத்தின் பெயரால் கொலைகள் செய்து ஓடிமறைந்த தீவிரவாதக் கயவர்கள், கணவனை இழந்து துடித்த இந்திய இளம்பெண் ஒருத்தியிடம் திமிராய்ச் சொன்னார்களாம் –  ”போ ! மோடியிடம் போய்ச் சொல்” என. அதாவது ”நாங்க அப்படித்தான் வருவோம், சுடுவோம் ..  போ… ஒங்க பிரதம மந்திரிக்கிட்டபோய் வேணாச் சொல்லிக்க” என்பது நரேந்திர மோடிஜிக்கான சவால் மட்டுமல்ல. இந்தியா எனும் மாபெரும் தேசத்துக்கான சவால். பிரதமருக்கு மட்டுமா .. நாட்டுக்கே தெரிவிக்கப்பட்டது, காஷ்மீரின் பஹல்காமில் (Pahalgam) சுற்றுலாவுக்குச் சென்றவர்களுக்கு அன்று நடந்த அட்டூழியங்களின் விபரங்கள். சீறியது இந்தியா.  கொதித்தெழுந்தது. ’தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீவிரவாதிகளை அடியோடு வேரறுப்போம், தேவைப்பட்டால் தீவிரவாத உற்பத்திப் பிரதேசமான எதிரிநாட்டின் உள்ளே புகுந்தும் அழிக்கத் தவறமாட்டோம்’ என சூளுரைத்தது. செயல்பட்டது. பிரதமர் மோடி முப்படை தளபதிகளோடு கலந்து ஆலோசித்தார். தீவிரவாதத்தை, அதற்கு நீரூற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் எதிரிகளை, எப்போது, எங்கே, எப்படித் தாக்கவேண்டும் என்கிற முடிவு இந்திய ராணுவத்திடமே விடப்பட்டது. அதற்கான முழுசுதந்திரமும் தரப்பட்டது.

விளைவு? இந்திய ராணுவம் திட்டமிட்டு தற்போது நடத்திவரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’! ஹிந்தியில் ‘சிந்தூர்’ என்றால் திலகம். குறிப்பாக மணமான பெண்கள் நெற்றியில் வைத்துக்கொள்ளும் மங்கலத் திலகம். திருமணமான வட இந்திய மகளிர் தலை வகிடில் வைத்துக்கொள்ளும் செந்தூரப் பொட்டு. இப்படியெல்லாம் அர்த்தமுண்டு. (இங்கே- இந்திய ஆண்களைக் கொன்று, அவர்களது மனைவிகளின் பொட்டை அழித்தாயல்லவா? பிடி ஆபரேஷன் சிந்தூர்.. ஒழி ! என உருவகமாக, கவித்துவமாகப் பொருள்.)

ஆபரேஷன் சிந்தூர் என்றதும், அந்தக்கால ’ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நினைவுக்கு வரவில்லை? முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் தலைமையின்போது, இந்திய ராணுவம், உள்நாட்டில் இருந்துகொண்டே அழிவாட்டம்போட்ட காலிஸ்தானி பிரிவினைவாதிகளை அடியோடு அழிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளின் நாமகரணம்தான் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’. அது இந்திராவின் 1984. இது மோடியின் 2025.  

Image

Cartoon courtesy: Deccan Chronicle

தரைப்படை, விமான, கடற்படைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட முக்கூட்டு ஏற்பாடுகளின்படி, இந்தியத் தாக்குதல் தீவிரவாதத்தின் விளைநிலமான பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்டு வருகிறது. கடும் எதிர் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதோடு, வெற்றிகரமாக அவற்றை நடத்திக்காட்டும் பொறுப்பு ராணுவத்தின் இரண்டு பெண் சிங்கங்களிடம் விடப்பட்டது. ராணுவ ரீதியாக துவம்சம் செய்வதோடு, உளவியல் ரீதியாகவும் (கேலியா செஞ்சே, கேலி? பொம்பளைகளை வச்சே போட்டுத் தாக்கிட்டோம்.. பாத்தியாடா !)எதிரியை உதைத்து நொறுக்கும் ஏற்பாடு! தீவிரவாதத்தைக் களையெடுக்க இந்திய ராணுவம், நாசகாரர்களுக்குத் துணைபோகும் பாகிஸ்தானின் உள்ளே புகுந்து விளையாடிய சாகசம்.

அரசு ஆசீர்வாதத்தோடு பாகிஸ்தானிற்குள்ளேயே இயங்கியவாறு இந்தியாவுக்கெதிராக அவ்வப்போது கொலைகள், குண்டுவெடிப்புகள் என நாசகாரவேலைகளை நிகழ்த்திவந்த பிரதான தீவிரவாத இயக்கங்களின் 9 தளங்களை, இரவோடு இரவாக இருபத்துஐந்தே நிமிஷங்களில் ஏவுகணைகள், ட்ரோன்கள் (drones) துணையோடு அழித்தொழித்தது இந்திய ராணுவம். இவற்றில் பாக் வசமுள்ள காஷ்மீர் பிரதேசத்தில் (POK) சில; மேலும் சில தளங்கள், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிற்கு அருகில் ராணுவ பாதுகாப்புடன், தீவிரவாதிகளுக்கான பயிற்சி தரும் தளங்களாக பலவருடங்களாக இயங்கிவருபவை. இந்தத் தகவலை, தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு சர்வதேச எச்சரிக்கைபோல, ஐ.நா. உட்பட ஏனைய பன்னாட்டு அமைப்புகளின் கவனத்துக்கு இந்தியா பலமுறை கொண்டுவந்திருக்கிறது. கேட்டார்களா? அவர்களுக்கு இதற்கெல்லாம் ஏது நேரம், காலம்?

Image

Amul’s famous cartoon on ’Operation Sindoor’ ‘s Lady Military Officers

இதுவரை அவரவர்க்கான பணி இடங்களில், வெளிவெளிச்சம் அதிகம் விழாமல் அமைதியாகப் பணியாற்றிவந்த, இந்திய தரைப்படையின் கர்னல் ஸோஃபியா குரேஷி மற்றும் விமானப்படையின் வயோமிகா சிங் ஆகிய வீராங்கனைகளை இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் ஆரம்பிக்கப்பட்ட அடுத்தநாள் -மே 8-ஆம் தேதி- காலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது முதன்முறையாக தீர்க்கமான வெளிச்சத்தில் பார்த்தது. புரிந்துகொண்டு, ஆமோதிப்பதாகத் தலையாட்டியது.  முந்தைய இரவினில், பாகிஸ்தானுக்குள் அமைந்திருந்த தீவிரவாதிகள் இயங்குதளங்கள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டவிதம் – ‘ஆபரேஷன் சிந்தூரின்’ சில பெருமைக்குரிய செய்கைகள்பற்றி அவர்கள் கொஞ்சம் விவரித்தார்கள். தீவிரவாத இயக்க அமைப்புகளின் மீது வெறும் 25 நிமிடங்களில்  எதிரி நாட்டிற்குள் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல், நடத்தி முடிக்கப்பட்ட துல்லியம், திறன் – ஆகியவை இந்திய ராணுவத்தின் உறுதியை, மேன்மையைப் பறைசாற்றியதோடு, இந்த இரண்டு பெண்மணிகளும் வெறுமனே ராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல..they are much more.. என, பாகிஸ்தானி கோமாளிகளுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே உரைத்துவைத்தது.

இப்படியெல்லாம் பெருமைக்குரிய, கடமைஉணர்வு மிக்க தேசபக்தர்களைக் கொண்டதுதான் இந்திய ராணுவ, உளவு மற்றும் ஏனைய பாதுகாப்பு அமைப்புகள். சிலர் வெளிச்சத்துக்கு இப்படி அபூர்வமாக  வருவதுண்டு. பலர் தேசப்பணியில், திரைமறைவில், குறைந்த வெளிச்ச வெளியில் தங்களுக்காகத் தரப்பட்ட அரசுக் கடமைகளை செவ்வனே செய்து முடிக்கிறார்கள். கால ஓட்டத்தில் பதவி ஓய்வு பெற்று காட்சியிலிருந்து விலகிவிடுகிறார்கள். எல்லோரைப்பற்றியுமா நாம் கேள்விப்படமுடிகிறது?

மே 8-ஆம் தேதி அதிகாலையில், பாக் அரசு இயந்திரங்களும், சுற்றுப்புறவாழ் மக்களும்,  ஓடோடிவந்து தலைநகர் இஸ்லாமாத், ராவல்பிண்டி போன்ற நகர்களுக்கருகில், தாக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகையில், அவைகள் கட்டிடக்கழிவுகளின் குவியல் மேடுகளாக மாறியிருந்தன. இந்திய ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான்க்குள் பாய்ந்து நிகழ்த்திய பயங்கரத் தாக்குதல்கள் பாகிஸ்தானிய மக்களுக்கும், சீனா, துருக்கி போன்ற பாக் ஆதரவு நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தன. ’அவசியமெனில், உள்ளே புகுந்து அடிக்கவும் தயங்கமாட்டோம்’ என இந்தியப் பிரதமரும், ராணுவ மந்திரியும் சொன்னது வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்கையில், அது வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது. என்ன செய்வது.. நாட்டிற்கும் உண்டே விதி…

சுருக்கமாக மேலே தந்திருப்பது ஆபரேஷன் சிந்தூர் – முதற்பகுதி மட்டுமே. மேற்கொண்டு நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில், காரியம் இன்னும் முடியவில்லை. சிந்தூர் 2.0 தொடர்கிறது என்றது இந்திய பாதுகாப்பு அமைச்சகம்.    

– தொடரும்….

**

WPL 2025 – மகளிர் கிரிக்கெட் – ஆரம்ப மோதல் : குஜராத் – பெங்களூர்

காதலர் தினமாகிய இன்று ஆரம்பிக்கிறது , வெகுவாகப் பிரபலமாகிவரும் ‘மகளிர் கிரிக்கெட் லீக்’ (WPL – Women’s Premier League, 2025). வடோதராவில் துவங்கும் முதல் மேட்ச்சில் இரவு 7.30-க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜயண்ட்ஸ் அணியோடு மோதுகிறது.

Image

மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான ஸ்ம்ருதி மந்தானா தலைமை தாங்கும் ஆர்.சி.பி (RCB) மகளிர் அணியில் திறன்மிகு வீராங்கனைகள்: டேனி வயாட் (Danni Wyatt) , எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry), ரிச்சா கோஷ் (Richa Ghosh) (விக்கெட்கீப்பர்), மேகனா, ஜியார்ஜியா வேர்ஹம் (Georgia Wareham), ராகவி பிஷ்த் (Raghvi Bisht) போன்ற பேட்டர்களோடு, ரேணுகா சிங் (Renuka Singh), வி.ஜே. ஜோஷிதா , கனிகா அஹுஜா, ப்ரேமா ராவத் ஆகிய பௌலர்கள். மேலே சொன்னவர்களில் பெர்ரியும், மேகனாவும்கூட பந்துவீசக்கூடியவர்களே.  ஆஷா ஷோபனா, ஷ்ரெயங்கா பாட்டில் (Shreyanka Patil) ஆகியவர்கள் ஸ்பின்னர்கள்- ’காய’ லிஸ்ட்டில் இருந்தார்கள் இதுவரை. தகுதிபெற்று, இன்று ஆடுவார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. ஆடினால் அது ஆர்.சி.பி-க்கு வலு சேர்க்கும். குஜராத்திற்கு சோதனை கொடுக்கும்.

Image

RCB’s Smriti Mandhana, Shreyanka Patil and Ellyse Perry

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் (Ashley Gardner) கேப்டன் பொறுப்பேற்றிருக்கும் குஜராத் ஜயண்ட்ஸும் (Gujarat Giants) சரியான போட்டி அணிதான்.  வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்டர் டியாண்ட்ரா டாட்டின் (Deandra Dottin) முதல் முறையாக WPL -ல்ஆடுகிறார். தவிர, லாரா வொல்வார்ட் (Laura Wolwaardt), ஆஷ்லி கார்ட்னர், ஃபீப் லிட்ச்ஃபீல்ட் (Phebe Litchfield),  ஹேமலதா, ஹர்லீன் தியோல் (Harleen Deol),  ஆகியோரும் கவனிக்கத்தக்க பங்களிப்பு தரக்கூடியவர்கள். இவர்களில் சிலரிடமிருந்துதான் ரன்கள் விறுவிறுவென்று வந்துசேரும்! பௌலர்களில் ஆல்ரவுண்டர்கள் (மேற்குறிப்பிட்ட) கார்ட்னர், டாட்டின் ஆகியோரோடு, இந்திய வீராங்கனைகள் ஸயாலி ஸத்கரேயும் (Sayali Satghare,மும்பை), தனுஜா கன்வரும் (Tanuja Kanwar, Railways)  குறிப்பிடத்தக்கவர்கள்

ஆடுகளம் ஸ்பின்னிற்குத் துணைபோக வாய்ப்புகள் அதிகம். வேகப்பந்துவீச்சாளர்களிடமும் (குறிப்பாக அயல்நாட்டு வீராங்கனைகள்) வாய்பிளக்க நமது வீரங்கனைகள் சிலர் தயாராக இருப்பார்கள்தான். அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு!

Image

Gujarat Giants’ allrounder Deandra Dottin (West Indies) making debut in WPL 2025

Image

Gujarat’s bowler 17-year old Shabnam Shakhil

நாம் சென்றவருடம் பார்த்தபடி, இந்தியாவில் நிறைய ரசிகர் பட்டாளம் தங்களது மனங்கவர் மங்கைகளின் (ஸ்ம்ருதி, ஷ்ரெயங்கா, ஹர்லீன், ஜெமிமா, எல்லிஸ் பெர்ரி என இங்கே குறித்துக்கொள்க!) நேரடி தரிசனத்துக்காக ஸ்டேடியம் வந்து முட்டிமோதித் தள்ளுவார்கள். தங்களது ப்ரியைகளை மைதானத்தில் ‘ஆட’ வைத்து வேடிக்கைப் பார்ப்பதில் அவர்களுக்கு அலாதி இன்பம். ஸ்பான்சர்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் அடிக்குது யோகம் – மேலும், மேலும்.

கடந்த வருட WPL சேம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அதானியின் குஜராத் அணியை ஒருகை பார்க்குமா இன்று?

Star Sports, JioStar 7:30 PM IST.  

தமிழ்ப் புத்தகத் திருவிழா 2024-25, சென்னை

போயிருந்தேன் நானும் புத்தகக் கண்காட்சிக்கு! கடந்த ஆண்டின் கடைசி வாரத்தில் சென்னையிலிருந்தேன். பெங்களூரிலிருந்து காலை ஆறரைக்குப் புறப்பட்டு டாக்ஸியில் சென்றேன் குடும்பத்துடன். மதியமே சென்னையில் ஹோட்டலில் இருக்கவேண்டும் என முடிவு செய்ததால், ஏற்கனவே செய்திருந்த டபுள்-டெக்கர் ரயில் புக்கிங்கை கான்சல் செய்து டாக்ஸிப் பயணம். இப்படிக் கடைசி நேரத்திலும் பயண ஏற்பாடுகளில் மாற்றம் செய்வது என்பதெல்லாம் நமக்குக் கைவந்த கலை என்பதைக் காட்டிலும், அப்படித்தான் பெரும்பாலும் வாய்க்கிறது என்பதே உண்மை!

பொதுவான சென்னை வெப்பம் காணப்படாத (நானொரு பெங்களூர் வாசி) அந்த டிசம்பர் மதியத்தில், டாக்ஸிக்காரர் இறக்கிவிட்டபடி, வெளியேறும் வழிக்கு அருகில் இருந்த வழியே புத்தகக் கண்காட்சியில் நுழைந்தேன். கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கையிலேயே இடதுபுறம் கண்ணில்பட்டது மத்திய அரசின் ’நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா’வின் ஸ்டால் ஒன்று. பிரதானமாக டெல்லியிலிருந்து இயங்கும் NBT, இதுவரை என்னென்ன பதிப்பித்துவைத்திருக்கிறது என்பதற்கான ஒரு ஹிண்ட் கிடைக்கும், பார்ப்போமே என்று நுழைந்து அங்கு தென்பட்ட சில தமிழ், ஆங்கிலப் புத்தகங்களை நிதானமாக நோட்டம்விட்டேன். ஒன்றை எடுத்து உள்ளடக்கத்தைக் கவனித்துக்கொண்டிருக்கையில், அங்கு எதையோ ஒழுங்குபடுத்தி அடுக்கிவைத்து, தூசிதட்டிக்கொண்டிருந்த ஒரு சிப்பந்தி என்னைப் பார்த்து, ‘என்ன சார், புக் வாங்கப்போறீங்களா?’ என்றார். திடுக்கிட்டு, ‘மொதல்ல பாக்கணும்ல. அப்பதான வாங்கமுடியும்’ என்றேன் எரிச்சலைக் கட்டுப்படுத்தியபடி. ‘இங்கே செட் பண்ணிக்கிட்டிருக்கேன்.. கொஞ்சம் அந்தப்பக்கம் போய் பாருங்க!’ என்று ஒரு ஓரத்தைக் காட்டிவிட்டு தன் வேலையைத் தொடர ஆரம்பித்தார். வாசல் கௌண்ட்டரில் ஒருவர் ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கியவாறு பணம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

என்னைக் கவர்ந்த ஆசிரியர், தலைப்பு என்று மனதில்கொண்டு சில புத்தகங்களை வேகமாகக் கவனித்தபின் (’நெசமாவே வாங்கத்தான் போறீங்களா’ -ன்னு அந்த மனிதர் திரும்பவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) ஒரு சிறுகதைத் தொகுதியைக் கையிலெடுத்தேன். தலைப்பு: புதிய தமிழ்ச் சிறுகதைகள் தொகுதி- 1. (விலை ரூ.125, NBT India). 16 தேர்ந்தெடுத்த தமிழ்ச் சிறுகதைகள் இப்படி: கிருஷ்ணன் நம்பியின் அருமையான  ‘மருமகள் வாக்கு’ (ஏற்கனவே இந்த வலைப்பக்கத்தில் இந்தச் சிறுகதைபற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்) கதையில் புத்தகம் ஆரம்பிக்கிறது, அம்பை எழுதிய மிலேச்சன், ஆதவன் அளித்த ‘நிழல்கள்’ (படித்த நினைவில்லை), வண்ணநிலவனின் மிகவும் ஸ்லாகிக்கப்பட்ட சிறுகதையான எஸ்தர், சார்வாகனின் ‘உத்தியோக ரேகை’, இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’, நீல.பத்மநாபனின் ‘சண்டையும் சமாதானமும்’, ஆ.மாதவனின்  ‘நாயனம்’, வெகுஜன நாயகன் சுஜாதாவின் அயரவைக்கும் ‘நகரம்’, சா.கந்தசாமி படைத்த ‘ஒரு வருடம் சென்றது’, நாஞ்சில் நாடனின் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, வண்ணதாசனின் ‘தனுமை’, கி.ரா.வின் ‘நாற்காலி’, ஆர்.சூடாமணி எழுதிய ‘அந்நியர்கள்’, ஜெயந்தனின் ‘பகல் உறவுகள்’ ஆகியவையோடு அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’. சிலவற்றை வாசித்திருக்கிறேன். சிலதுபற்றிக் கேட்டதோடு, வாசிக்க நினைத்ததோடு சரி. இனிதான் கையில் பிடித்துப் படிக்கவேண்டும்.  புத்தகத்தில் கடைசி நான்கு பக்கங்கள் படைப்பாளிகள்பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்கின்றன. சில வாசகர்களுக்கு அதுவே ஆசிரிய அறிமுகமாகவும் அமையலாம். நூலைத் தொகுத்தவர் அசோகமித்திரன். அவர் பெயரை அட்டையில் பார்த்ததும்தான் இதைக் கையிலே எடுத்துப் புரட்டினேன். வாங்கினேன்.

Image

இன்னொரு புத்தகம் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான ‘ஆதவன்’ எழுதிய சிறுகதை நூல் – தலைப்பு: ‘ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்’. ஆதவனின் சிறுகதைகளை நூலாகத் தொகுத்தவர் : இந்திரா பார்த்தசாரதி.(NBT India. ரூ.215. First Edition 1992). புத்தகம் கொண்டிருக்கும் ஆதவனின் சிறுகதைகள்: முதலில் இரவு வரும், மூன்றாமவன், கருப்பை, நிழல்கள், ’ஞாயிற்றுக்கிழமைகளும் பெரிய நகரமும் அறையில் ஓர் இளைஞனும்’, ’சிகப்பாக, ஒல்லியாக, மீசை வச்சுக்காமல்’, கால்வலி, ’ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்’, அப்பர் பெர்த், ஒரு தற்கொலை, இன்டர்வியூ, இறந்தவன் –ஆகிய 12 கதைகள். ’ஒரு பழைய கிழவரும்…..’, ‘இன்டர்வியூ’ இரண்டும் படித்த ஞாபகம். மீதத்தை நிதானமாக வாசிக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களிலும் ஆதவனின் ‘நிழல்கள்’ இடம் பெற்றிருப்பதை கவனிக்கிறேன்!

நான் வாங்கிய மூன்றாவது தமிழ் புத்தகம்: அசோகமித்திரன் எழுதிய ‘படைப்புக்கலை’ (காலச்சுவடு பதிப்பகம்.(கிடைத்தது NBT ஸ்டாலில்) ரூ.180. First Edition: 1987).  இலக்கியக் கொள்கைகள், போக்குகள்பற்றி, சமகால எழுத்தாளர்களின் படைப்புகள்பற்றி, தன்னைப்பற்றிய விமரிசனங்களுக்கு பதிலாக – என்றெல்லாம் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன்.

இந்தப் புத்தகத்தின் துவக்கத்தில், ‘இரு நிமிடங்கள்’ என்கிற தலைப்பில் அசோகமித்திரனின் இந்த வரிகள் வாசகரைக் கொஞ்சம் நிறுத்தி சிந்திக்கவைக்கும்:

”ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும், ஒரே கதையைத்தான் மா(ற்)றி, மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது..”  

நான் புத்தகக் கண்காட்சியில் இரண்டரை மணிநேரம் சுற்றியிருப்பேன். ஏதேதோ பெயர்களில், கேள்விப்பட்ட, படாத பதிப்பகங்களின் ஸ்டால்கள் ஒரு மலைப்பைத் தந்தன. இவ்வளவு பதிப்பகங்களா தமிழ்நாட்டில் குப்பைகொட்டிக்கொண்டிருக்கின்றன – அதுவும் இந்த டிஜிட்டல் காலத்தில்? ஒரு சில வரிசைகளைத்தான் ‘பார்க்க’ முடிந்தது. அதற்குள்ளே களைப்பு. இதமான சீதோஷ்ண நிலை என்று சொல்வதற்கில்லை. தொண்டையில் ஒரு வறட்சி. ஒரு காப்பி, அல்லது குறைந்தபட்சமாய் ஒரு டீ கிடைத்தால்..என்று இழுத்தது மனது. நுழைவு வாசலுக்குச் சென்று அங்கு உட்கார்ந்திருந்த ஊழியர் ஒருவரிடம் ’காப்பி, டீ ஏதாவது பக்கத்தில் விற்கிறார்களா, எங்கே கிடைக்கும்’ என விஜாரித்தேன். ”அதெல்லாம் இங்க கெடைக்காது சார். ஃப்ளாஸ்க்கில ஒருத்தர் டீ எடுத்துட்டு வந்து கொடுத்துட்டுப் போவாரு. ஒரு ரவுண்டு வந்துட்டுப் போயிட்டாரு. நீங்க இப்படியே நடங்க. எக்ஸிட் கேட்டுக்கு வெளியே போனீங்கன்னா,  ரோட்டோரமா டீக்கடை இருக்கு. குடிச்சுட்டு வாங்க. டிக்கெட்டைப் பத்திரமா வச்சுக்குங்க. கேப்பாங்க!” என்று எச்சரித்தார்.

இவ்வளவு தூரம் நடந்து வெளியே போய், டீ குடித்து, திரும்பி வந்து மேலும் சுற்றிச்சுற்றி வருவதா! சரிப்படாது. கிளம்புவதற்கு முன் மேலும் ஒன்றிரண்டு ஸ்டால்களைப் பார்த்துவிடலாம் என உள்வாங்கி நடந்தேன். முதலில் தென்பட்டது The Hindu –ஆங்கில இதழ்/பதிப்பக ஸ்டால். அட.. ஹிந்துவுக்கும் ஒரு ஸ்டால் இருக்கா இங்கே.. என்ற  ஆச்சரியத்தில் உள்ளே சென்று பார்த்தேன். (’தமிழ் இந்து திசை’ பதிப்பக ஸ்டாலும் அங்கிருந்தது என்று பிற்பாடு கண்டேன். லேசாகக் கவனித்துவிட்டு வந்துவிட்டேன்).

ஆங்கில ’ஹிந்து’ ஸ்டாலில் சில நல்ல, தரமான புத்தகங்கள் தென்பட்டன. பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள். சிலவற்றை ஆர்வமாகப் புரட்டினேன். அந்தக்கால சென்னை நகரம்பற்றிய, தமிழ்நாடுபற்றிய சில புத்தகங்கள் கண்சிமிட்டின. பெரிதாக, சிறப்பான அச்சு, புகைப்படங்களுடன் அழகாக இருந்தன. ஒன்றை வாங்கினேன்: Tamil Nadu In Focus என்ற தலைப்பிலான புத்தகம். சோழ மன்னனின் மறந்துபோன தலைநகரம், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான தமிழ் மண்ணின் முதல் எதிர்ப்புகள், புரட்சிகள், ஸ்ரீரங்கம், வேலூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள், வேலு நாச்சியாரின் படையில், வெள்ளையர்களுக்கெதிராக தீரம் வெகுவாகக் காட்டிய குயிலி எனும் வீராங்கனை, கொடி காத்த குமரன், ஊமைத்துரை.. என்று  ஆரம்பித்து, தமிழ்நாட்டின் சரித்திரம், கலாச்சாரம், அரசியல் என்று பயணித்து, வைக்கம் போராட்டம், கன்னியாகுமரிக் கோவில் வாசலில் காந்தி,  காங்கேயம் காளை, டிவிஎஸ் நடத்திய பஸ் சர்வீஸ் என்றெல்லாம் கதைத்து முடித்து,  வாசிக்கும் ஆர்வத்தைப் பொங்கச்செய்யும், வண்ணப்படங்களோடு கவர்ச்சிகாட்டும் புத்தகத்தை வாங்காது விடமுடியுமா?  Tamil Nadu In Focus – Culture and Society; Politics and Governance. The Hindu Group. First published : 2023. Price Rs.599.

வாங்கிய புத்தகங்களுக்கு 10% டிஸ்கவுண்ட் கிடைத்தது. புத்தகக் கண்காட்சிக்குச் செல்கையில் கையில் பையோடு போக மறந்தேன். NBT ஸ்டாலில் பழுப்பு நிறக் கவரில் மூன்று புத்தகங்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். தூக்கிக்கொண்டு வரிசை, வரிசையாக நான் நடந்து பட்டபாடு. ஏதோ நேர்த்திக்கடன்போல! நல்லவேளையாக, ’தி ஹிந்து’வில் சரியான துணிப்பையில் போட்டுப் புத்தகத்தைக் கொடுத்தார்கள். மற்ற மூன்றையும் அதற்குள் திணித்துக்கொண்டு, வெளியே வேகவேகமாக நடந்தேன். ஆட்டோ பிடித்து வெளியேறினேன். அடுத்த நாளே பெங்களூர் திரும்பவேண்டியிருந்ததால், புத்தகவிழாவிற்கு இரண்டாம் முறையாகப் படையெடுக்க அவகாசம் கிடைக்கவில்லை.

**