சாகித்ய அகாடமி விருதுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில், சென்ற வாரம் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான நிகழ்வாகும். தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் 24 மொழிகளிலும் சாகித்ய அகாடமிக்கான விருதுக்குரியவர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டு, செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 18 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என சுயேச்சையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளிலும் தலையீடு செய்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அடக்கிவருகிறது. சாகித்ய அகாடமி என்ற சுதந்திரமான கலாசார அமைப்பின்மீதும் ஒன்றிய பா.ஜ.க அரசு தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடு இது. லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி மற்றும் தேசிய நாடகப் பள்ளி தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வாயிலாக, சாகித்ய அகாட...