இனிய உதயம் 2025 செப்டம்பர் இதழுக்கு நான் வழங்கிய நேர்காணல்.
நேர்கண்டவர்: புதுகை முருகுபாரதி
அலமேலுபுரம் ஒண்டிக்கொட்டாயில்
இருந்த சிறுவயதுக் காலம் பற்றி?
சேலம் மாவட்டம் ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி என்கிற ஊரிலிருந்து
60கி.மீ. தொலைவிலுள்ள அலமேலுபுரத்திற்கு நாங்கள் 1968ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோம். பத்துபதினைந்து
குடும்பங்களே வசித்துவந்த அலமேலுபுரத்துக்குள் அல்லாமல், நாங்கள் சேலம் – அரூர் நெடுஞ்சாலையில்
சரியாக 40ஆவது கிலோமீட்டரில் எங்கள் தாத்தம்மா மாரிமுத்தம்மாள் (தந்தைவழிப் பாட்டி)
வாங்கியிருந்த காட்டிலேயே (நிலத்தில்) கொட்டாய் (கூரைவீடு) போட்டுக்கொண்டு குடியேறினோம்.
காட்டில் தனித்திருக்கும் கொட்டாயை “ஒண்டிக்கொட்டாய்” என்போம்.
அப்பா மாரியப்பன் திமுககாரர். அண்ணா முதற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களுடன்
அறிமுகமும் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தவர். செட்டிப்பட்டியில் திமுகவை
முதன்முதலில் தொடங்கியவர். 1967 தேர்தலில் ஓமலூர் தனித்தொகுதியில் போட்டியிடுவதற்கு
அவருக்கு எம்.ஜி.ஆரின் பரிந்துரை இருந்தது. “படித்தவன் நமக்கு அடங்கி இருக்கமாட்டான்”
என்று பொறுமிக்கொண்டிருந்த உள்ளூர் ஆதிக்கச்சாதி திமுக தலைவர் ஒருவர், எம்.ஜி.ஆர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகிப்போன சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அப்பாவுக்கான அந்த
வாய்ப்பினைத் தட்டிப்பறித்து தனக்கு அடக்கமான ஒருவருக்கு கொடுத்துவிட்டார். ஆனாலும்
அப்பாவுக்கு திமுக பற்று குறையவில்லை. இடம்பெயர்ந்து வந்த எங்களது ஒண்டிக்கொட்டாய்
மீது திமுக கொடியைப் பறக்கவிட்டிருந்தார். உயரப் பறந்த அந்தக் கொடிதான் எங்கள் கொட்டாய்க்கு
அடையாளம். அல்லது, எங்கள் கொட்டாய் தான் அங்கு அந்தக்கொடிக்கு அடையாளம் என்றும் சொல்லலாம்.
எதுவொன்றுக்கும் நாங்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த சாமியாபுரம்
கூட்டுரோடு என்ற இடத்திற்குத்தான் செல்லவேண்டும். பேருந்து நிறுத்தமான அங்கு சில டீ
கடைகளும் மளிகைக்கடைகளும் இருந்தன. நான் படித்த ஆரம்பப் பாடசாலையும் அங்குதானிருந்தது.
புதிய இடத்தில் உறவினர்களோ தெரிந்தவர்களோ யாருமில்லை. செட்டிப்பட்டியிலிருந்து
அப்பாவழிச் சொந்தங்களோ க.ஈச்சம்பாடியிலிருந்து அம்மாவழிச் சொந்தங்களோ வந்தால்தான் உண்டு.
கூட்டுரோட்டில் இறங்கி வழி கேட்பவர்களுக்கு திமுக கொட்டாய் என்று சொல்லியனுப்புவார்கள்.
அப்படி எப்போதாவது வரும் உறவினர்களுக்காக எங்கள் கண்கள் எப்போதுமே அனிச்சையாக சாலையை
ஏக்கத்துடன் பார்த்தபடியே இருக்கும். இரவானால் வாகனங்களின் வெளிச்சத்தில் சாலையில்
நடமாட்டத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும்.
எங்களுக்கு அருகாமையிலிருந்த கொட்டாய்களில் எஞ்சோட்டுச் சிறுவர்கள் யாருமில்லை. பள்ளிக்கூடம்
இல்லாத நேரம் முழுவதும் விளையாடவோ பேசிமகிழவோ நண்பர்கள் இல்லாத பால்யம் என்னுடையது.
விடுமுறைகளில் க.ஈச்சம்பாடிக்குச் செல்வது மகிழ்ச்சியானது.
எனக்கு மாமன் முறையான மாதையன், எங்கள் வீட்டிலேயே தங்கி வேளாண் வேலைகளை
கவனித்துவந்தார். தீவிர சிவாஜி ரசிகர். சைக்கிளில் ரெண்டாவதாட்டம் சினிமாவுக்கு அழைத்துச்
செல்வார். விடுமுறை நாட்களில் மலையடிவாரக் காட்டில் மாடு மேய்க்க விறகெடுக்க வயலுக்கு
தழையறுக்க என்று அழைத்துப்போய் அங்கு சுடலைப்பழம், சூரப்பழம், கெளாக்காய் பறித்துக்
கொடுப்பார். பொன்வண்டு பிடித்து தீப்பெட்டியில் விட்டு வளர்க்கத் தருவார். சந்தனமரத்துப்பட்டையை
வாயில் போட்டு மென்றுவிட்டு பாழியில் தேங்கித் தெளிந்திருக்கும் தண்ணீரைக் குடித்தால்
லேசாக இனிக்கும். ஏற்றம் இறைப்பது, ஏர் பூட்டி ஓட்டுவது, பார் போடுவது, பறம்படிப்பது
என பல வேலைகளையும் நான் விளையாட்டாகவே பழகியது அவரிடமும் ஈச்சம்பாடி மாமன்களிடமும்
தான். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே, எங்கள் காட்டில் விளையும் தக்காளியை
அதிகாலை 3மணிக்கு லாரி பிடித்து கொண்டுபோய் அயோத்தியாப்பட்டிணம் மார்க்கெட்டில் விற்று
விட்டுத் திரும்பி பள்ளிக்கூடம் போகிறவனானேன்.
எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதை (வெளியேறினார்?)
எதிர்த்து திமுக கொடியை அப்பா இறக்கிவிட்டார். அவரும் அவரது நண்பர்களும் சோளக்கொல்லையில்
மறைந்திருந்து அவ்வழியே வந்த டிடிசி பஸ்களின் மீது கல் வீசினார்கள். அவர்கள் சாமியாபுரத்தில்
அதிமுகவின் முதல்கிளையைத் தொடங்கினார்கள். திண்டுக்கல் இடைத்தேர்தலில் கவிஞர் நா.காமராசனுடன்
தங்கி வேலை பார்த்தார்கள். வெற்றிப் பெருமிதத்துடனும் மதுரை முத்துவின் ஆட்கள் கொடுத்த
சைக்கிள்செயின் காயங்களுடனும் திரும்பி வந்தார்கள்.
தென்னகம் பத்திரிகையில் வெளியான எம்.ஜி.ஆரின் அறிவிப்பைப் பார்த்து கட்சியின் கொடியை
கையில் பச்சை குத்திக் கொண்டவர்களில் அப்பாவும் ஒருவர். கூட்டுரோட்டில் பொதுக்கூட்டம்
பேசவந்த எம்.ஜி.ஆருக்கு என்னை மாலை போட வைத்தார் அப்பா. அடுத்தடுத்த காலங்களில் வந்த
எம்.ஜி.சக்கரபாணி, ஜி.ஆர்.எட்மண்ட், எஸ்.டி.எஸ் எனப் பலரும் என்னிடம் மாலை வாங்கியவர்கள்
தான். (நான் மனமார மாலையிட்டது வி.பி.சிங் அவர்களுக்குத்தான்).
இதனிடையே ஒசூர் கூட்டுறவு சொசைட்டி கடனுதவியில் ரோட்டோரத்து வயலில்
ஓட்டு வீடு கட்டி குடிபெயரும் தருவாயில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்துவிட்ட
நான், அப்படியே தொலைத்தொடர்புத் துறையில் டெலிபோன் ஆபரேட்டர் வேலை கிடைத்து தேன்கனிக்கோட்டை
ஓசூர் என்று போய்விட்டேன். இந்த வீட்டுடன் இப்போதுவரை எனக்கு ஏனோ உணர்வுப்பூர்வமானதொரு
பிணைப்பு ஏற்படவேயில்லை. என் நினைவில் இன்னுமும் பழைய ஒண்டிக்கொட்டாய் தான் இருக்கிறது.
தங்களின் பெற்றோர் குறித்து..?
அம்மா ரத்தினம்மாள் நிலபுலன்கள் உள்ள குடும்பத்தின் ஒரே மகள். செல்லமாக
வளர்ந்தவர். ஊரிலிருந்து முதன்முதலாக பள்ளிக்கூடம் போன பெண் என்பதால் பள்ளிக்கூடத்தாள்
என்றும் ஊரார் விளிப்பதுண்டு. எனக்கு விவரம் தெரிந்தமட்டிலும் பண்ணையம், தாத்தம்மா
பார்த்து வந்த ரோடு வேலை, ஜல்லி வியாபாரம் மூலமாக எங்கள் குடும்பம் நல்ல நிலையில்தான்
இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் தாத்தாம்மா வேலையை நிறுத்திக்கொண்டதும் குடும்பத்தின்
பொருளாதார நிலை சடீரென மாறிப்போனது. ஏழு பிள்ளைகளையும் வளர்க்க எங்கம்மா பட்ட பாடு
எழுதித் தீராதது.
அப்பாவைப் பொறுத்தவரை தனது இளமைக்காலம் முழுவதும் அவரது அம்மா சம்பாதிப்பதை
கைகுளிர செலவழித்துப் பழகியவர். மாரண்டஹள்ளியில் ஜில்லா போர்டு பள்ளியின் ஆசிரியராகப்
பணியாற்றியிருக்கிறார். பிறகு ஒசூர் கால்நடைப்பண்ணையின் குந்துமாரனப்பள்ளி மையத்தில்
வேலை பார்த்துள்ளார். “எங்கம்மாக்கிட்ட நூறுபேர் வேலை செய்றாங்க, உன்கிட்ட கைகட்டி
நிப்பேன்னு நினைச்சியா?” என்று அதிகாரியை அறைந்துவிட்டு வேலையிலிருந்து நின்றுவிட்டார்.
ஓமலூரில் கை நழுவிப்போன எம்.எல்.ஏ. பொறுப்பை 1977இல் அரூரில் அடைவதற்கான
சூழல் இருந்தது. அவர்தான் வேட்பாளர் என்று சில நாளிதழ்களில் பெயர்கூட வெளியானது. ஆனால்
கூட்டணிக்கட்சியான சிபிஎம்முக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதில் அந்த வாய்ப்பையும் இழந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் திமுகவுக்கு திரும்பினார். எனது இலக்கிய, அரசியல் செயல்பாடுகளைப்
புரிந்து ஆதரவளித்தவர்.
இளங்கலை கணிதம் படிக்குமளவு கணக்கின் மீது ஆர்வமா?
ஆர்வமில்லை, கணிதம் படித்தால் வேலைவாய்ப்பு என்று அப்போதிருந்த கற்பிதத்தில்
சேர்ந்ததுதான்.
எஸ்.எம்.இரவிச்சந்தர், ஆதவன் எனும் புனைபெயரில் கவிதை
எழுதத் தொடங்கியது எப்போது?
தான் எழுதித்தரும் பெயர்கூட நீடிக்கப்போவதில்லை என்பதறியாத ஒருவர்
எனக்கெழுதிய ஜாதகத்தில் எனது பெயர் சுந்தரலிங்கம் என்ற கார்த்திகேயன். ஆனால் பள்ளிக்கூடத்தில்
சேர்ந்தபோது எஸ்.எம். இரவிச்சந்தர். 1980களில் தகடூர் ஆதவன், ஒசூர் ஆதவன் என்றாகி 1996ல்
தீட்சண்யா பிறந்ததும் ஆதவன் தீட்சண்யாவானேன்.
படிக்கும்போதே தொலைபேசித் துறையில் தேர்வெழுதி பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றீர்கள். அப்போதைய மனநிலை எப்படியிருந்தது?
படிப்பின் இலக்கே ஒரு வேலையில் சேர்ந்துவிடுவதுதான் என்று பொதுப்புத்தியில்
இருந்த கருத்துதான் எனக்கும் இருந்ததால் வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றை எட்டிவிட்டது
போலிருந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தில் இணைந்தது எப்போது?
ஒசூரில் 1984/1985ஆம் ஆண்டாக இருக்கலாம்.
1996-இல் வெளியான ’புறத்திருந்து...’ முதல் கவிதை நூலுக்கும், 20
ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நான்காவது கவிதை நூலான
‘மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்’ நூலுக்குமான மொழிநடையில் ஏற்பட்ட மாற்றம்
குறித்து...
சமூகப்பார்வை, வாழ்வனுபவம், படிப்பு, அரசியல் ஈடுபாடு இவையெல்லாம்
சேர்ந்து எழுத்தின் உள்ளடக்கம் செறிவேறுகையில் அதன் சத்தும்சாரமும் குன்றாமல் வெளிப்படுத்திட
மொழியும் திடப்படும். எனக்கும் அதுதான் நடந்தது.
‘புது விசை’ கலாச்சாரக் காலாண்டிதழைத்
தொடங்கிட என்ன காரணம்..?
கருத்துலகில் இடதுசாரி கண்ணோட்டத்துடன் குறுக்கீடு செய்ய ஒரு பத்திரிகையைத்
தொடங்கலாமென முன்மொழிந்தார் கவிஞர் கந்தர்வன். அந்த நோக்கத்திலிருந்து விலகாமல் 48
இதழ்களை அச்சில் கொண்டுவந்தோம். இடையில் தட்ஸ்தமிழ்.காம், கீற்று.காம் தளங்களில் இணைய
இதழாகவும் வெளிவந்திருந்தது.
தமுஎகச மாநாட்டில் பொதுச்செயலாளராகப்
போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் நிர்வாகி நீங்கள்தான். இதற்கான உத்வேகத்தை எங்கிருந்து
பெற்றீர்கள்?
அமைப்பின் கொள்கையை வடிவமைப்பது தொடங்கி, தலைமைப்பொறுப்புக்குப்
போட்டியிடுவது வரையான உரிமை தமுஎகசவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு. அத்தகைய ஜனநாயக
முதிர்ச்சியுடன் அமைப்பு இயங்குவதை எனது போட்டியும் தேர்வும் உறுதிபடுத்தியது.
கலை இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் தமுஎகச
இன்னமும் ஆற்றவேண்டிய பணிகளாக எதைக் கருதுகிறீர்கள்?
தமுஎகச உறுப்பினர்களின் கலைஇலக்கியச் செயல்பாடுகள் ஒருபடித்தானதல்ல.
கலை இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும் அவர்கள் தாம் இயங்கும் துறையின் சமகால
அடையாளங்களாக தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கான படைப்புமனதுடன் உழைக்கிறவர்களாக
அவர்கள் வளர்வதற்கு அமைப்பு கூடுதலாக செயலாற்ற வேண்டியுள்ளது. பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், திருநர், பால்புதுமையினர் ஆகியோரிலுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இனங்கண்டு திரட்டுவது
அவசியமாகிறது. சமூகநீதி, சமத்துவம், மனித மாண்பு, தமிழ்மொழி, தமிழர் நலன் சார்ந்த புரிதலின்
மட்டத்தை உயர்த்துவதற்கான பணி இடையறாமல் நடந்தாக வேண்டும்.
தலித் இலக்கியம் என்று தனியே ஒரு வகை
இலக்கியமாகச் சுட்டப்படுவது சரியான போக்குதானா..?
மனித வாழ்வனுபவமும் அதையொட்டிய கற்பனையும் தான் இலக்கியம். அப்படியிருக்க
மற்றவர்கள் கிறுக்குவதெல்லாம் இலக்கியம் என்றறியப்படுகையில், தலித்துகள் தமது வாழ்வனுபவத்தை
எழுதுவது மட்டும் தனி முன்னொட்டுடன் ஒதுக்கிக்காட்டப்படுகிறது. தலித்துகள் யாரும் தாங்கள்
தலித் இலக்கியத்தை எழுதப்போவதாக சொல்லிக்கொண்டு எழுதாத நிலையில் இந்த ஒதுக்கம் தலித்
நீதிபதி, தலித் அரசியல்வாதி, தலித் டாக்டர் என்று சுட்டும் சாதி உளவியலின் நீட்சிதான்.
தலித்துகளின் எழுத்துக்களில் உட்பொதிந்துள்ள சாதிமறுப்பு, சாதியொழிப்பு, சமத்துவம்,
பார்ப்பனீய எதிர்ப்பு சார்ந்து எழுதுவதற்கும் படிப்பதற்கும் அஞ்சுகின்ற சாதிய மனங்களுக்கு
இப்படியான உடனடி இனங்காட்டல் தேவைப்படுகிறது போலும். நான் 2015 முதல் “சாதி மறுப்பு
இலக்கியம்” என்பது பற்றி பேசிவருகிறேன்: “சாதியத்திற்கு எதிரான
உள்ளடக்கங்களைக் கொண்ட படைப்புகளை சாதி மறுப்பு கலை இலக்கியம் என்கிற பொது
அடையாளத்தின்கீழ் வகைப்படுத்தும் பட்சத்தில் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும்
குறிப்பிட்ட நோக்கத்தின் கீழ் அணிதிரண்டு செயலாற்றுவதற்கு வாய்ப்பு உருவாகும்.
சாதி ஒழிப்புக் கருத்தியலை ஏந்திச்சென்று பரந்த இச்சமூகத்தின் மீது வீசி வெடிக்கச்
செய்கிற ஆற்றலும் நுட்பமும் தந்திரமும் இழைந்த ஆக்கங்களை உருவாக்குவதற்கு
இப்படியானதோர் ஒருங்கிணைவு அவசியமாயிருக்கிறது” (பார்க்க: சாதி மருப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள்- https://aadhavanvisai.blogspot.com/ 2016/07/ blog-post_9.html)
தங்களின் சிறுகதைகளில், கட்டுரைகளில் வெளிப்படும் சமூகக்கோபமும், வெளிப்படைத்தன்மையும்
கவிதைகளில் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா..?
கவிதைகள் சீற்றமாகவும் கதைகள் பகடியாகவும் இருக்கின்றன என்போருமுண்டு.
படிப்பவர்களுக்குரிய எல்லையற்ற மதிப்பீட்டுச் சுதந்திரத்தை ஏற்கவும் மறுக்கவும் நான்
யார்?
2014-இல் வெளியான தங்களது ‘மீசை என்பது
வெறும் மயிர்’ ‘நாவலல்லாத நாவல்’
என்று சொல்லப்படுகிறதே..!
இப்படியிருந்தால் தான் நாவல் என்று இலக்கணம் சொல்வதை விடவும் அபத்தம்
வேறெதுவுமில்லை. நாவல் என்ற சொல்லே புதியது என்பதைத்தான் குறிக்கிறது. அப்படியிருக்க
புனைவின் அதிகபட்ச சாத்தியங்களை எழுதிப் பார்த்தால் என்ன என்கிற முயற்சிதான் மீசை என்பது
வெறும் மயிர்.
இன்றைய ஒன்றிய அரசின் செயல்பாடுகளை எப்படி
பார்க்கிறீர்கள்..?
ஆட்சியதிகாரத்தைச் சுவைப்பதற்காக வெட்கங்கெட்டு அலைகிற கும்பல் போல
மேலுக்குத் தெரிந்தாலும் உண்மையில் ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் நிகழ்ச்சி நிரலைச்
செயல்படுத்துவதற்காக இயங்குகிறது. அது இந்தியச்சமூகம் பார்ப்பனீயத்திற்கு எதிராக அடைந்துள்ள
வெற்றிகளை அழித்தொழிக்கும் வேலைத் திட்டத்துடன் ஏவப்பட்டுள்ளது. பார்ப்பனர், சமஸ்கிருதம்,
வேதங்கள் என ஆரிய மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில்தான் அரசின் திட்டங்கள், செயல்பாடு
நிலைப்பாடு அனைத்தும் உள்ளன. இந்தியச் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் அதை அங்கீகரிக்கிற
அரசியல் சாசனத்தையும் ஒழித்துக்கட்ட நூறாண்டுகால வன்மத்துடன் களமிறங்கியுள்ளவர்களின்
இந்த ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் களங்கம் என்றே கருதுகிறேன்.
தொழில் வளர் நகரமான ஓசூரைப் பற்றி ‘ஓசூர்
எனப்படுவது யாதெனின்...’ எனும் நூலை எழுதத்
தூண்டியது எது?
ஆனந்த விகடன் இணைய இதழில் “எனது ஊர்” என்கிற தலைப்பில் தொடர் ஒன்றை
எழுதும்படி கேட்டபோது, என் வாழ்வின் பெரும்பகுதி ஒசூருடன் தொடர்புடையது, ஆகவே ஒசூரைப்
பற்றி எழுதுகிறேன் என்று தொடங்கினேன்.
இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் கலை
இலக்கியவாதிகளுக்கான உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் என்ற வகையில் சாகித்ய
அகாதமி விருதாளார்களுக்கு வீடு வழங்கி கெளரவப்படுத்துவது சரியானது. அதேவேளை, வறிய நிலையில்
உள்ள எழுத்தாளர்களைக் கண்டறிந்து உதவும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுக்கவேண்டும்.
கேரளாவைப்போல இங்கு தமிழ் அகாதமி உருவாக்குவது அவசியம்.
கவிஞர் தமிழ்ஒளி சிலைத்திறப்பு, அவரது எழுத்துகளைப் பரப்ப நிதி ஒதுக்கீடு,
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடு, கலைஞர் நூலகம்
என்று பாராட்டத்தக்க பல முன்னெடுப்புகள் உள்ளன. மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை
அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று தமுஎகச தான் கோரியது. இப்போது அவ்வாறு நடப்பதை வரவேற்கிறேன்.
ஆனால், புத்தகத் திருவிழாக்களில் உள்ளூர் கலைஇலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்
என்கிற குறை பரவலாக உள்ளது. பொது நிகழ்வுகளுக்காக இன்னின்னாரை அழைப்பது தொடங்கி, தங்கவைக்கப்படும்
இடம், மதிப்பூதியம் வரையாக நிலவும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும். புத்தகத் திருவிழாக்களை
நடத்தும் குழுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன்
நடப்பதற்கான வழிகாட்டுதலை அரசு வெளியிட வேண்டும். புத்தகத்திருவிழாக்கள், மாபெரும்
தமிழ்க்கனவு, இலக்கியச் சங்கமங்கள் என பொதுநிதியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும்
‘செட் பிராப்பர்ட்டிகள்’ போல ஒரு சிலரே ஆக்ரமித்துள்ள நிலைமை ஏற்புடையதல்ல. அதிகாரிகளின்
அணுக்கப்பட்டியலில் இருந்தால்தான் வாய்ப்பு என்னும் இழிநிலையில் மாற்றம் தேவை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் முடக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக்
கலைஞர்கள் நலவாரியத்தை இப்போதைய அரசு மாற்றியமைத்துச் செயல்பட வைத்தது நல்ல விசயம்.
ஆனால் ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்கள் உள்ள இம்மாநிலத்தில் அந்த வாரியத்திற்கு
ஒதுக்கப்பட்டுள்ள நிதி அற்பமானது.
கலை பண்பாட்டுத்துறைக்கு தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும்
கலை இலக்கிய அமைப்புகளோடு எந்தத் தொடர்புமில்லை. துறைசார்ந்த முன்னெடுப்புகள் தமுஎகச
போன்ற அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டால் இணைந்து செயல்பட முடியும்.
திரைப்படங்களில் பங்களிப்பு
செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து...
ரஞ்சித்தும், அதியனும் நேரடி அறிமுகத்துக்கும் முன்பாகவே என் எழுத்துகள்
செயல்பாடுகள் மீது மரியாதை கொண்டவர்கள். அதியன் வழியாகத்தான் ரஞ்சித்துடன் நேரடி அறிமுகம்
ஏற்பட்டது. அவரது அட்டைக்கத்தியும் மெட்ராஸூம் என்னை வெகுவாக ஈர்த்தப் படங்கள். புதுவிசையில்
வெளியான அவரது தண்ணிக்கோழி சிறுகதை தமிழின் சிறுகதைகளில் முக்கியமானது. அந்தக் கதை
தங்கலான் வரையாக ரஞ்சித்தின் எல்லாப் படங்களிலும் குறியீடாக வந்துகொண்டேயிருக்கிறது.
அடுத்தப்படத்தின் கதைக்கருவுக்கான தேடலில் ஈடுபட்டிருந்த ரஞ்சித்
2015 தொடக்கத்தில் ஒருநாளிரவு நண்பர்களுடன் ஓசூர் வந்திருந்தார். தமிழ்நாட்டிற்கு வெளியே
புலம்பெயர்ந்து போன தமிழர்களின் நலன் காக்கப் போராடிய ஒரு போராளியின் கதை என்கிற ஒற்றைவரி
அவருக்குள் திடப்படாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதுபற்றி உரையாடும்போது சமீபத்திய மலேசியப்பயணங்களில்
நான் கண்டுவந்த சில விசயங்களை ரஞ்சித்துடன் பகிர்ந்துகொண்டேன்.
ரப்பர் தோட்டங்கள், ஈயச்சுரங்கங்கள், துறைமுகங்களில் பணியாற்ற மலேசியாவுக்கு
அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தம்மீதான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக
நடத்தியப் போராட்டங்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், தலைமறைவாகி தப்பியவர்கள், காட்டு
பெருமாள் போன்ற சாகச நாயகர்கள், செம்பனைத் தோட்டத்தின் வருகை, வேலையிழந்த தமிழர்கள்
பெருநகரங்களுக்கு உதிரியாக வரும் அவலம், போதைப்பொருள் விற்பனை, என்கவுண்டர் சாவுகள்,
மை ஸ்கில் பள்ளி என்று விவரித்து மலேசியா அவருக்கான கதையைக் கொடுக்கும் என்று சொன்னேன்.
அடுத்த சில வாரங்களில் ரஞ்சித் மலேசியா சென்றார். இவற்றையெல்லாம் எனக்குக் காட்டிய
தம்பி நவீனுக்குச் சொல்லி அவர் ரஞ்சித்தை எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போய் காட்டியதுடன்
அங்கு தமிழர் வரலாறு வாழ்நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருந்தார். கபாலியில் ரஞ்சித்தின்
பாய்ச்சலைக் கண்டு எனக்கு உள்ளூர அவ்வளவு மகிழ்ச்சி. ஒரு திரைப்படத்தில் ஏதேனுமொரு
வகையில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றால் அது கபாலி தான்.
காலா நிலவுரிமை சார்ந்த படமென்பதால் அதில் உடனிருக்குமாறு ரஞ்சித்
அழைத்தார். அவருக்கு எந்தளவுக்கு நான் உதவியாக இருந்தேனென்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் தனது கலையுழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை அவர் என்னோடும் மகிழ்நனோடும் உளப்பூர்வமாக
பகிர்ந்துகொண்டார். தங்கலான் முதற்கட்ட ஆய்வுகளுக்காக
கே.ஜி.எப். போன குழுவில் நானுமிருந்தேன். தங்கலான் பார்த்தபோது என் மனம் உருவகித்து
வைத்திருந்த படம் அதுவல்ல என்று தோன்றியது. மலேசியா, மும்பை, கே.ஜி.எப். தமிழர்களின்
வாழ்க்கைப்பின்புலத்தில் கபாலி, காலா, தங்கலான் எடுத்த ரஞ்சித், அந்த வரிசையில் இலங்கை
மலையகத்தமிழர்கள் பற்றிய படமொன்றை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளேன்.
ரஞ்சித்தைப் போன்றதோர் ஆளுமை வருவதற்கு தமிழ்ச்சினிமாவிற்கு நூறாண்டுகள்
தேவைப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவரது பன்முகப்பட்ட முன்னெடுப்புகளில் இயன்றவரை உடனிருக்கிறேன்.
அரசியல் ஒத்திசைவில்லாத விசயங்களைப் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்கிற உரிமையுடன் தோழமை
தொடர்கிறது.
அதியன் அற்புதமானதொரு கவிஞர். உழைக்கும் வர்க்கச் சார்புநிலையிலிருந்து
உலகத்தைப் பார்ப்பவர். சினிமாவை அதன் உட்பொருளில் உணர்ந்து கற்றவர். என்னால் பங்களிக்க
முடிகிறதோ இல்லையோ அவர் படமெடுக்கிறபோது உடனிருக்க வேண்டுமென விரும்புகிறவர். இரண்டாம்
உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நான் பங்கெடுத்தது அப்படித்தான். “தண்டகாரண்யம்”
அவரது இரண்டாவது படம். அதில் தொடக்கம் முதலே இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்.
பொன்விழா (1975-2025) கண்ட இலக்கிய
அமைப்பான தமுஎகச, இன்றைய சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக எதைக் கருதுகிறது?
சமூகத்தில் மேலாதிக்கம் பெறவிரும்பும் பார்ப்பனீயச் சக்திகள் (சுதந்திரம்
சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறை) அதற்காக மக்களை “நாம்”, “அவர்கள்” என்று
பிளவுபடுத்துகிறார்கள். அதனிமித்தம் வெறுப்புக் கருத்தியலை ஊடகங்கள், கலை இலக்கியங்கள்
வழியே பரப்புகிறார்கள். இதுகுறித்த எச்சரிக்கையை கலை இலக்கியச் சமூகத்தில் பரப்புவதற்கான
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுதான் இன்றைய முதன்மையான சவால். அன்புடனும்
பரஸ்பர மரியாதையுடனும் பன்மைத்துவமாக இணங்கி வாழ்வதற்கான விருப்பத்தை மக்களிடையே உருவாக்கவல்ல
கலை இலக்கிய ஆக்கங்களை உருவாக்குகிறவர்களாக தனது உறுப்பினர்கள் வளர உதவும் கடமையும்
தமுஎகசவுக்கு உள்ளது.
தற்காலத் தமிழிலக்கியப் போக்குகளில்
நீங்கள் ஏற்பதை எதை? மறுப்பது எதை?
பாரம்பரியம் மரபு மீட்டுருவாக்கம் என்ற போர்வையில் கடந்த காலத்து
முடையேறிய பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்துகின்ற, அதன்பேரிலான மதிப்பீடுகளை
சமகாலத்தின் மீது கொண்டுவந்துக் கொட்டுகின்ற குப்பைவண்டிகளைத் தவிர மற்றெல்லா போக்குகளும்
எனக்கு ஏற்புடையதே.
நீங்கள் எழுத நினைத்து, இன்னமும் எழுதமுடியாமல் இருப்பது எதைப் பற்றி..?
கலையமைதியுடன் வெளிப்படுத்தத் தேவையான தொடர் உழைப்பைத் தரமுடியுமானால்
எதுவொன்றையும் எழுதமுடியும் என்றே கருதுகிறேன்.
இளைய தலைமுறை எழுத்தாளர்களில்
தங்களுக்குப் பிடித்த எழுத்தாளரென்று யாரைச் சொல்வீர்கள்?
கல்வியறிவுப் பரம்பல் எழுத்திலக்கியத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது.
தமது வாழ்வனுபவத்தை சொல்லியாகும் மனஅவசத்தால் நிறையபேர் எழுத வந்துள்ளனர். நஸீமா பர்வீன்,
அராபத், சு.வெங்குட்டுவன், அ.பிரகாஷ், ஜெ.அன்பு, சிவசித்து, விடுதலை சிகப்பி, அமுதாசெல்வி என்று
கொண்டாடத்தக்க பெரும்பட்டியல் உள்ளது.
‘இனிய உதயம்’ இதழ்... உங்களின் பார்வையில்...
நக்கீரன் குழுமத்திலிருந்து இப்படியொரு இதழ் வெளிவருவதும், அதில்
கலை இலக்கிய ஆக்கங்களுக்கும் ஆளுமைகளின் நேர்காணலுக்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது.