வியாழன், டிசம்பர் 18

எனது ஆசிரியர்களுக்கு - ஆதவன் தீட்சண்யா

சேலம் மாவட்டம் ஓமலூர் பக்கமிருக்கிற ஆர்.சி.செட்டிப்பட்டியில் தான் எனக்கு நான்கு வயதாகும் வரை எங்கள் குடும்பமிருந்தது. அது எனது தந்தைவழி தாத்தம்மாவின் (பாட்டி) ஊர். அங்கிருந்துப் பார்த்தால் சேர்வராயன் மலை தெரியும். அந்த மலை மீது தான் ஏற்காடு இருக்கிறது. ஏற்காட்டில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு பங்களா இருப்பதாக எங்களூர்க்காரர்கள் எப்படியோ  தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே இரவு நேரங்களில் மலையின் எந்தப் பகுதியில் மின்விளக்கொளி அல்லது வாகன விளக்கொளி தெரிந்தாலும் “அதோ பார் எம்மார் ராதா வங்ளா” என்று உத்தேசமாக கை காட்டுவது அவர்களது வழக்கம். அது எங்களுக்கெல்லாம் இரவுநேர வேடிக்கை. எங்கப்பாவுக்கு யார் தூண்டிவிட்ட ஆசையோ “அந்த பங்ளா  பக்கத்துலதான் மான்ஃபோர்ட் ஸ்கூல் இருக்கு. படிச்சா அதுல படிக்கணும்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். 

ஆர்.சி.செட்டிப்பட்டியிலிருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அலமேலுபுரத்தில் காடு (நிலத்தை இங்கு இப்படித்தான் சொல்வோம்) வாங்கி அதிலேயே போட்டுக்கொண்ட கொட்டாய்க்கு (கூரைவீடு) எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. அப்பாவின் வாய் மான்ஃபோர்டு என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் என்னைச் சேர்த்ததென்னவோ எங்கள் காட்டிலிருந்து இரண்டு பர்லாங்க் தூரத்தில் இருந்த சாமியாபுரம் குறவர் சமூக சீர்திருத்தப்பள்ளியில் தான். (இப்போது அரசு நடுநிலைப் பள்ளி என்று அதன் பெயர் மாறியுள்ளது.) அது வாரநாட்களில் பள்ளிக்கூடமாகவும் வார இறுதியில் தேவாலயமாகவும் செயல்பட்டது. ஐந்து வயதானால் தான் சேர்த்துக் கொள்வார்கள் என்பதால் எங்கப்பா என் பிறந்த நாளை ஒரு வருடம் ஒரு மாதம் சேர்த்து ஐந்து வயது என பொய்க்கணக்குக் காட்டினாராம். தலைமையாசிரியருக்கு சந்தேகம். எனவே காதைத் தொடச் சொன்னார். கையை தலைக்கு மேலாக வைத்து எனது காதைத் தொடச் சொல்கிறார் என்பது புரியாமல் நான் அவரது காதைத் தொட்டு, அதற்காக பள்ளியில் சேர்வதற்கும் முன்பாகவே முதல்நாளே அவரிடம் குட்டு வாங்கியதை அப்பா கேலியாக எப்போதாவது சொன்னதுண்டு. 

ஐந்தாம் வகுப்பை முடிக்கும் தருவாயிலும்கூட எனக்கு சரியாக எதையும் எழுதவே வராது. நண்பன் ஜெயபால் தான் எனக்காக எழுதிக்கொடுத்து காப்பாற்றி வந்தான். அப்படி இருந்த என்னை ஆறாம் வகுப்பிலிருந்து சேலத்தில் சேர்க்கப்போவதாக அப்பா சொல்ல ஆரம்பித்தார். அவரது மனம் ஏனோ ஏற்காடு மலையிலிருந்து அடிவாரத்துக்கு இறங்கியிருந்தது. செட்டிப்பட்டியினர் பெரும்பாலும் சேலம் செயின்ட் பால்ஸ் பள்ளிக்குத்தான் படிக்கப்போவார்கள். என்னையும் அங்குதான் சேர்ப்பாராயிருக்கும் என்று தாத்தம்மா சொன்னது. ஆனால் அப்பாவோ என்னை சேலம் சி.எஸ்.ஐ. கான்வென்டில் தங்கிப் படிக்கும் வகையில் ஆறாம் வகுப்பில்- அதுவும் ஆங்கிலவழியில் சேர்த்துவிட்டார். மகனது ஆங்கிலப் படிப்பென்பது அவரது கனவாக இருக்க, ஆங்கில எழுத்துகளை பொம்மை போல பார்த்திருந்த எனக்கோ ஆங்கிலத்திலேயே பேசும் ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் பார்க்க அச்சமாக இருந்தது. அப்படியிப்படி என இரண்டு மாதங்கள் தாக்குப்பிடித்துப் பார்த்த எனக்கு அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. யாரிடமும் தெரிவிக்காமல் பள்ளிக்கூடத்தையும் விடுதியையும் விட்டு தப்பி ஓடிவந்துவிட்டேன். வீட்டுக்கும் போகமுடியாது.  அங்குமிங்குமாக சுற்றித் திரிந்துவிட்டு பொம்மிடிக்கு அருகேயுள்ள நடூர் சாலை பர்லாங் கல்மீது உட்கார்ந்திருந்த என்னை, வாரச்சந்தைக்குப் போய் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த மோபிரி ரெட்டி என்பவர் மலையடிவாரத்தில் இருந்த தனது வீட்டுக்கு கூட்டிப்போய் 19நாட்கள் வைத்திருந்து பிறகு எங்கள் வீட்டைக் கண்டுபிடித்து என்னைக் கொண்டுபோய் ஒப்படைத்தார். 

தனது கனவு பொய்த்துப்போன துக்கத்திலும் கோபத்திலும் அப்பா என்னோடு பேசுவதையே நிறுத்திவிட்டிருந்தார். இப்போது நினைத்தால் அப்பாவின் நியாயங்கள் புரிகிறது. ஆனால் அப்போது அப்பாவின் போக்கு எனக்கு கடும் மனவுளைச்சலாகி வீட்டிலிருக்கப் பிடிக்காமல் அடிக்கடி தப்பியோடி  இருக்கிறேன். அப்படி ஒருமுறை காணாமல் போன என்னை தேடிப்பிடித்து கூட்டிவரும் போதுதான் இனிமேல் ஓடாமல் இருந்தால் வரும் கல்வியாண்டில் பாப்பிரெட்டிப்பட்டி பள்ளியிலேயே சேர்த்து விடுவதாகத் அப்பா உறுதியளித்தார். அப்பா அப்படி சொன்னதும் பதிலுக்கு நானும் ஏதாவது சொல்லவேண்டும் என்று எனக்குத் தோன்றியதோ என்னவோ, அப்படி சேர்த்துவிட்டால் நான் “பர்ஸ்ட் ரேங்க்” வருவேன் என்று வீறாப்பாக சொல்லிவிட்டேன். வீட்டிலிருந்த ஏழு மாதங்களில் தான் எண்களையும், எழுத்துக்களையும் எழுதப் பழகினேன். 

எனக்காகவே இயங்குகிறது என்பதான நினைப்போடுதான் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்திருப்பேன் போல. ஒருவேளை அந்தப் பள்ளிக்கூடம் இல்லாமல் போயிருந்தால் நான் இடைநின்ற மாணவனாக, ஆறாம் வகுப்பைக்கூட முடிக்காமலே ஓடிவந்துவிட்டவனாகத்தான் இருந்திருப்பேன் என்று இப்போது புரிகிறது. நான் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பாவுக்கு உறுதியளித்ததற்காகவோ அல்லது நான் கற்பதற்கு உகந்த இடம் இதுதான் என்ற நம்பிக்கையினாலோ படங்களைப் படிப்பதில் எனது ஈடுபாடு கூடியது. அதற்காக இராப்பகலாக மாங்குமாங்கெனப் படித்தேன் என்று பொருளில்லை. 

அப்போது காந்தன் மோட்டார் சர்வீஸ், எம்.என்.பிரதர்ஸ், மல்லிகா போன்ற பேருந்துகளில் மாணவர்களுக்கு 5 பைசா கட்டணம். பேருந்துக்கென வீட்டில் கொடுக்கும் 10 பைசாவை ஸ்டேசனரி கடையில் கொடுத்தால் மூன்று காமிக்ஸ் புத்தகங்கள் வாடகைக்குக் கிடைக்கும். அன்றாடம் போகவர ஆறு கிலோமீட்டர் நடப்பதெல்லாம் அப்படியொன்றும் கடினமாகத் தெரியாமல் போனதற்கு இந்த காமிக்ஸ் புத்தகங்கள்தான் துணை. காமிக்ஸிலிருந்து மெதுவே பி.டி.சாமி பேய்க்கதைகளுக்கு நகர்ந்தேன். எங்கள் காட்டில் விளையும் தக்காளியை கூடைகளில் அடைத்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அயோத்தியாப்பட்டணம் சந்தைக்குக் கொண்டுபோய் ஏலத்திற்கு வைத்துவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில் அங்கு கிடக்கும் கல்கண்டு, ராணிமுத்து, மாலைமதி  இதழ்களைப் படிக்கத் தொடங்கினேன். இதனூடாகத்தான் நான் பள்ளிப்பாடங்களையும் படித்தேன். ஆறாம் வகுப்பு தொடங்கி - இடையில் எட்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வைத் தவிர- பள்ளி இறுதித்தேர்வு வரையான எல்லா தேர்வுகளிலும் என்னால் முதலிடம் பெற முடிந்தது.   

ஆண்டுதோறும் பள்ளி இறுதித்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர் தலைமையாசிரியர் அறையின் முன்புறச்சுவரில் எழுதப்பட்டிருக்கும். அந்தப் பட்டியலில் எனது பெயரையும் இடம்பெறச் செய்து எனது தந்தைக்கு கொடுத்த உறுதிமொழியை நிறவேற்றிவிட்டேன். ஆனால் அதற்கு நான் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது. ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கவேமுடியாது என்று தப்பித்து ஓடிவந்த சிறுவனை தம் பிள்ளைபோல அரவணைத்துக்கொண்ட இந்தப் பள்ளியின் ஆசிரியர்களுக்குத்தான் அதில் முதன்மையான பங்கிருக்கிறது. அவர்கள் என்னை வாங்கவைத்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் எனக்கு வாழ்வாதாரமாக தொலைத்தொடர்புத் துறையில் வேலை கிடைத்தது என்பதை சொல்லும் இந்நேரத்தில் ஒவ்வொரு ஆசிரியராக நினைவுக்கு வருகிறார்கள். 

பள்ளிக்கூடம் என்கிற கட்டிடம் அதுவாகவே நம்மை எதுவாகவும் ஆக்கிவிடாது. நமக்குள் ஏதாவது நடக்குமென்றால் அது ஆசிரியர்களால் தான் முடியும். பின்னாளில் தொழிற்சங்க ஊழியனாக, புத்தகப்படிப்பாளியாக, எழுத்தாளனாக, ஊர்சுற்றியாக நானடைந்தப் பரிமாணங்களுக்கு எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் நேரடியாக எந்தளவுக்குப் பங்களித்தார்கள் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவர்களனைவரும் புகட்டிய ஈரத்தில்தான் நான் வேர்பிடித்து இப்படியாக தழைத்திருக்கிறேன் என்று இங்கு எழுதுவதைப் படிக்க அவர்கள் அனைவருமே இப்போது இருக்கவேண்டுமென மனம் விரும்புகிறது. அவர்களில் ஒருவரேனும் இதைப் படித்துவிட்டால் நன்றி சொன்ன நிறைவு கிட்டும்.   

கனவு ஆசிரியர், 2025 ஆகஸ்ட்


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது ஆசிரியர்களுக்கு - ஆதவன் தீட்சண்யா

சேலம் மாவட்டம் ஓமலூர் பக்கமிருக்கிற ஆர்.சி.செட்டிப்பட்டியில் தான் எனக்கு நான்கு வயதாகும் வரை எங்கள் குடும்பமிருந்தது. அது எனது தந்தைவழி தாத்...