Thursday, June 18, 2009
பேரம்
மிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா?
ரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு!
ரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு! என கண் சிமிட்டினான்.
சொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.
நைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா?
வேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.
ஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.
*************************************************************************
நன்பகல் ஒரு மணி
டாக்டர்! நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல?
மிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க?
நோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.
ஓகே! இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.
ரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், "நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க!"
சாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்?
வேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்! என்ன புரிஞ்சதா?
புரிஞ்சது டாக்டர்.
***************************************************************************
மாலை ஐந்து மணி
மணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா! அடிக்கடி மக்கர் பண்ணுது.
அடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க? இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்?
அது ஆச்சு, மூனு வருஷம்.
ஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.
ம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது?
ஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.
"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா".
டாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.
ஹலோ! ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க?
பேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.
****************************************************************************
இரவு எட்டு மணி
ஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்மாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.
இதோ பாரு மணி! என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா? சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே! பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே?
இல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்!னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.
போயிட்டு வரேம்மா! மணி விடை பெற்றான்.
என்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை! என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.
************************************************************************
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
Saturday, December 29, 2007
போடுங்கம்மா ஓட்டு!
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.
சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.
"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.
பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.
Sunday, December 23, 2007
யாழினி
நாள்: 20- பிப்ரவரி-2030
நேரம்: மாலை 4 மணி அடிக்க ஐந்து நிமிஷம்
மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரன்ஸ் ஹால் அனைத்து உலக டெலிவிஷன், பத்திரிகை, மீடியா மக்களால் நிரம்பி வழிந்தது. மரபியல் விஞ்ஞானி புரபசர் பத்ரிநாத் தீடிரென்று அழைத்தால் விஷயம் இல்லாமல் இருக்குமா? ஏதாவது புதுவகை லேகியம் கண்டுபிடித்து விட்டாரா?
சரியாக மணி நாலு அடிக்க, அந்த ஹாலில், கையில் லாப்டாபுடன் புரபசரின் உதவியாளினி மிஸ்.யாழினி உள்ளே நுழைய ஹால் களை கட்டியது. சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் வழுக்கை தலை, கோல்ட் பிரேம் கண்ணாடியுடன் உற்சாகமாக வரும் நமது புரபசர் பக்கம் திரும்புவோம்.
புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர். இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு, ரஷ்ய, அமெரிக்கர்களின் உருப்படாத கண்டுபிடிப்புகளால் கோட்டை விட்டவர். சரி, புரபசருக்கு இவ்ளோ அறிமுகம் போதும். புரபசரும், யாழினியும் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. யாழினி, தனது லாப்டாப்பை உயிர்ப்பித்து, விரல்கள் நோகாமல் அதில் பியோனோ வாசிக்க ஆரம்பித்தாள். குடுத்து வைத்த லாப்டாப்.
புரபசர் தொண்டையை கனைத்து கொண்டு பேச்சை ஆரம்பித்தார். டியர் பிரண்ட்ஸ்! என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு முதலில் நன்றி. நான் மரபியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறேன். அதை பற்றி விளக்க தான் இந்த கூட்டம். விளக்கமா சொல்றேன்.
நம்ம எல்லோருக்குமே தத்தம் குழந்தைகள் பெரிய டாக்டரா, இஞ்சினியரா, ஒரு கிரிகட் ஸ்டாரா வரனும்! என்ற கனவு இருக்கு இல்லையா? ஆனா, படிக்க வசதி வாய்ப்பு இருந்தும், ஒரு சில பேர் தான் அவங்க துறையில மிளிர முடியுது. இதுக்கு வெளி காரணிகள் பலது இருந்தாலும், ஒரு மரபியல் விஞ்ஞானியா நான் கண்டுபிடிச்சது அவங்க ஜீன்களின் அமைப்பு தான் மெயின் காரணம்.
இன்னும் விளக்கமா சொல்லனும்னா, ஒரு சிலர் கணக்குல புலியா இருப்பாங்க. அதுக்கு அவங்க மரபியல் அமைப்பே காரணம். இந்த ஜீன்களின் அமைப்பை நமது விருப்பத்துக்கேப்ப மாத்த முடிஞ்சா, அதாவது கணினி புரோகிராமிங்க் மாதிரி எல்லாம் ஒரு கட்டுகோப்பா நடக்கும்.
என்னோட ஆராய்ச்சிபடி, கருவில ஒரு உயிர் உருவானவுடன் சரியாக அறுபதாவது நாளில், 0.12 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும் அந்த உயிரின் க்ரோமோசோம் கட்டமைப்பை மாத்தி அமைச்சா உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை பெரிய டாக்டராவோ, விண்வெளி வீரனாகவோ, வர முடியும்! என சொல்லி நிறுத்தி ஒரு மடக்கு தண்ணீரை புரபசர் பருக,
இது சாத்யமா புரபசர்? இதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ரிப்போட்டர் இடைமறித்தார்.
முப்பது வருஷத்து ஆராய்ச்சி இது. இன்னிக்கி புகழ் பெற்று விளங்கும் சில பேர் என்னோட ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் தான், என சில பெயர்களை உரக்க சொல்ல, வரிசையாக புகழ் பெற்ற சில டாக்டர்கள், கம்யூட்டர் புலிகள், விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்து புரபசரின் கூற்று உண்மை தான்! என கூறினர்.
இந்த ஆராய்ச்சியில் உள்ள தீமைகள் ஏதாவது சொல்ல முடியுமா புரபசர்?
இந்த ஆராய்ச்சியில் நன்மைகள் தான் அதிகம். ஒரு ஆரோக்கியமான, வலிமையான பாரதத்தை நாம் உருவாக்க முடியும். நம் குழந்தை என்னவாக வேண்டும்? என்பதை கருவிலேயே நாம் முடிவு செய்து விடலாம். தீமைகள்னு பாத்தா, இவங்க தம் துறை தவிர மத்த விஷயங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமா இருப்பாங்க. உதாரணமா சொல்லனும்னா, கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது.
அதாவது, கிட்டதட்ட ஒரு ரோபோ மதிரி இருப்பாங்க!னு சொல்றீங்க இல்லையா புரபசர்?
இல்ல, ஏவி விட்ட ஏவுகணை மாதிரி இருப்பாங்க.என பெருமையுடன் சொன்ன அந்த மைக்ரோ வினாடி, யாழினியின் செல்பேசி, "பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ மெளவல்! மெளவல்!" என்ற பழைய திரைபட பாடலை ரிங்க்டோனாக ஒலித்தது.
ஈஸிட்? ரியலி? ஐ கான்ட் பீலீவ் திஸ் நியூஸ்! என ஏற்கனவே பெரிதான தனது அழகிய கண்களை இன்னும் அதிகமாக விரித்து பல ரிப்போட்டர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தாள் யாழினி.
என்ன விஷயம்? எனபது போல புரபசர் புருவத்தை தூக்க, உங்களுக்கு மரபியல் துறையில், இந்த மிகப் பெரிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிச்சு இருக்காங்க! என யாழினி திருவாய் மலர, அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. சந்தோஷத்தாலும், ரிப்போட்டர்களின் வாழ்த்துக்களாலும் திக்குமுக்காடி போனார் புரபசர்.
சார், ஒன் மோர் குட் நியூஸ் பார் யூ! உங்க பொண்ணு ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்காங்க, இப்ப தான் ஹஸ்பிடலில் இருந்து கால் வந்தது என மறுபடி யாழினி இன்ப அதிர்ச்சி குடுக்க,
யாழ்! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! போதும், இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம் போதும். நான் உடனே என் மகளை பாக்க ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ இந்த ரிப்போட்டர்ஸ்க்கு நம் ஆராய்ச்சி பற்றி தேவையான மேட்டரை குடுத்து பிரஸ் மீட்டை முடிச்சுடு. எனக்கு வரும் வாழ்த்துக்களை பதிவு செய்து, நன்றி தெரிவித்து விடு. பை டேக் கேர்! என சொல்லி விர்ரென புரபசர் பறந்தார்.
போடா போ! அங்க உன் பேர குழந்தை என்ற பெயரில் பிறந்து இருக்கும் ரோபோவை பாக்க போ! உன் ஆராய்ச்சிக்கு என் அக்கா குழந்தையை பலி வாங்கின இல்ல, உன் பேரனின் ஜீன் அமைப்பை உனக்கு தெரியாமல் மாத்தியாச்சு. 3 வருஷம் கழிச்சு அது உன்னை பாத்து தாத்தா!னு ஆசையா கூப்டாது. மாமா! பிஸ்கோத்துனு கேக்கும் பாரு.
இது தான் நான் உனக்கு குடுக்கும் தண்டனை! என மனதுக்குள் சிரித்துக் கொண்டே அழுதாள் யாழினி.
பி.கு: சர்வேசன் நடத்தும் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு கடைசி நாளான இன்று அவசரமாய் எழுதியது. வழக்கம் போல நீங்க ஷ்டாட் மிஜீக் போடுங்க.
Monday, August 13, 2007
இன்றைய சுதந்திரம்
இந்த தடவையாவது அப்பா லீவுக்கு வருவாரா மா? எனக்கு புது சைக்கிள் கிடைக்குமா?
கண்டிப்பா வருவார் கண்ணா! நேத்து நைட் கூட போன்ல உங்கிட்ட பிராமிஸ் பண்ணாரே?
ஆமா! போன வருஷம் கூட இப்படி தான் சொன்னார், வந்த ரெண்டு நாளுல கிளம்பிட்டார். ராஜேஷ், பிரகாஷ் அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஹோம் வர்க் செய்ய கூட ஹெல்ப் பண்றாங்களாம்.
சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!
இடம்: சியாசின், மைனஸ் 52 டிகிரி குளிர், 21537 அடி உயரம்.
ஹலோ மேஜர்! இந்த தடவை நீங்க லீவுக்கு போறீங்க போல, கங்கிராட்ஸ்.
தாங்க்ஸ் ராஜ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு வாரம் முன்னடியே நீங்க திருநெல்வேலி போறீங்க இல்லையா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?
நோ பிராப்ளம்! சொல்லுங்க வாட் கேன் ஐ டூ பார் யூ?
என் பையன் புது சைக்கிள் கேட்ருக்கான். நான் ஊருக்கு போற வழில வாங்க முடியுமா?னு தெரில. எனக்காக நீங்க வாங்கி வைக்க முடியுமா? நெல்லை ஸ்டேஷன்ல நான் வாங்கிக்கறேன்.
ஷ்யுர்! இது கூட செய்ய மாட்டேனா உங்களுக்கு?
தாங்க்ஸ் ராஜ்!
இடம்: அகஸ்தியர்பட்டி விமான தளம் - நெல்லை மாவட்டம்
மேஜரின் மனைவி, ராஜ் மற்றும் குழந்தை அர்ஜுன் கையில் புது சைக்கிளுடன் மேஜரின் வரவுக்காக காத்திருந்தனர்.
ராணுவ விமானம் ரன்வேயில் வந்திறங்கியது. மூவர்ண கொடி போர்த்திய பெட்டி வந்திறங்கியது!
"சியாசினில் நடந்த தீவிரவாத ஊடுருவலை நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் நடந்த பயங்கர சண்டையில் அன்னிய நாட்டு கூலிபடைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட இருபது வீரர்கள் உயிர் நீத்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இத்துடன் செய்திகள் முடிவடைகிறது.
நேயர்களே! சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
காலை 7.30க்கு:
தேச பக்தி பாடல்கள் - பாடுபவர் சீர்காழி சிவசிதம்பரம்
9.00 மணிக்கு:
மேடி மாதவனுடன் கல்லூரி மாணவிகள் ஒரு குறும்பு பேட்டி
9.30 க்கு:
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ - உருவான கதை
10.30க்கு:
உடையணிவதில் ஆண்களுக்கு அதிக சுதந்திரமா? பெண்களுக்கு அதிக சுதந்திரமா? கலகலப்பான பட்டிமன்றம் சாலமன் பாபையா தலைமையில் காண தவறாதீர்.
11.30 க்கு:
நமீதாவுடன் சும்மா நச்சுனு ஒரு பேட்டி.
மாலை 5 மணிக்கு:
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இன்னும் திரைக்கே வராத கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.
நேயர்களே! சுந்திர தின நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள், இந்திய சுதந்திரத்தை கொண்டாடுங்கள்" - எங்கோ டிவி பெட்டி அலறிக் கொண்டிருந்தது.
Wednesday, April 04, 2007
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!
டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.
ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.
ஒரு நாள் வழக்கம் போல தன் தங்கமணிய கூட்டிண்டு காட்டுக்கு விறகு வெட்ட போனான்.
போனானா, நடு வழில ஒரு ஆறு(திரிஷா நடிச்ச படம் இல்லை)வந்ததாம். "ஏனுங்க, இன்னிக்காவது நீங்க குளிக்க கூடாதா?"னு தங்கமணி கேக்க, "அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்.
சரி, எப்படியோ போங்க!னு சொல்லிட்டு தங்கமணி முகத்த கழுவ ஆத்துல இறங்கினாங்களாம். நம்ப ஆளு எவ்ளோ பாசம் வெச்சு இருக்கர்ரு?னு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, "அய்யோ! தண்ணி இழுக்குது, கை குடுங்க!னு கத்தினாங்களாம்.
நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதை!னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும்? ஏன் F1 F1னு கத்தற?னு கேட்க, நம்ப பயலும் விவரம் சொல்லி இருக்கான்.
சரினுட்டு, குகிள் தேவதையும் தண்ணில முங்கி தங்கமணிய வெளிய கொண்டு வந்தாங்களாம்.
அட! அப்ப தான் தெரியுது, அந்த தேவதை கொண்டு வந்தது நமீதாவ!
இது தானே உன்னோட தங்கமணி?னு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், "ஆமா! ஆமா! இது தான் என்னோட தங்கமணி!"னு குதிச்சானாம்!
தேவதை கோபமா ஒரு லுக்கு விட்டுட்டு, அட பாவி! போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லை!னு ஒழுங்கா தானே பதில் சொன்ன. இப்ப நமீதாவ பாத்தவுடனே இப்புடி ஊத்தறியே டா?
அப்பவும் இந்த பூனையும் பகார்டி அடிக்குமா?ங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு "நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான்! இது என் தங்கமணி இல்ல தான்! ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!) நான் அதுவும் இல்லை!னு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமா! ஆமா!னு தலையாட்டினேன்!னு வைங்க, உடனே ஆஹா!
நீ தான்டா மனுஷன்!
தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.

உடனே தேவதையும், உன்னைய திருத்தவே முடியாது!னு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்!னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்!
எப்பிடி இருக்கு கதை?
எல்லாம் சரி, அது என்னடா இந்த கதைக்கு இப்படி ஒரு டைட்டில்?னு தானே நீங்க கேக்கறீங்க.
பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?