Showing posts with label haikoo. Show all posts
Showing posts with label haikoo. Show all posts

Friday, March 20, 2009

குழலும் யாழும் இனிதா?

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா? அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டு பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினோரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாத்தி இருப்பாரான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைசொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா!

அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.

பொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பேச்சு வருமாமே! நாம என்னத்த கண்டோம்?

முதலில் தா தா தா என ஒலிக்க தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவை தொடர்ந்து அத்தை வலம் வர தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.

உனக்கு ஒரு தங்கை இருந்திருந்தா குழந்தை அழகா சித்த்தீனு கூப்பிடும், நானும்

"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது!
மனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குது!ன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.

எனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, அத்தையும் இல்லை, ஒரே ஒரு சித்தப்பா தான். அதே போல ஜுனியருக்கு மாமாவும் இல்லை, பெரியம்மாவும் கிடையாது, சித்தியும் இல்லை. இது தான் இன்றைய நிலை.

இல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது? என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.

ஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))

ஆக இனிமே ஷைலஜா அத்தை உனக்கு செயின் தருவாங்க, ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான். சாப்பிட படுத்தினால் இருக்கவே இருக்காரு நம்ம தாய்மாமன் கைப்புள்ள. அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)

இந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ(அத நாங்க சொல்லனும்)

வெப்காம் பார்த்து
அழுகை நிறுத்தும் குழந்தை.
சிரித்தபடியே அழும்
ஆன்சைட் அப்பா.

இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.