Showing posts with label Earth Hour. Show all posts
Showing posts with label Earth Hour. Show all posts

Sunday, March 29, 2009

ஒரு மணி நேரம்; 60 நிமிடங்கள்; 360 வினாடிகள்

மணிக்கணக்கில் மின்சாரத் தடை இருந்து பழக்கப்பட்டவர்கள்தாம் நாம். அதனால்
ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்லேதான். ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் எப்படி போகிறது, கடிகார முள் எப்படி நகருகிறது என்று நன்றாக கவனிக்க முடிந்தது - இந்த பூமிக்கான சில மணித்துளிகளில் :-)

தவிர, மின்சாரம் தடையின்றி கிடைக்க Inverter, ஜெனெரேடர் என்று வசதிகளுடன் பழகிவிட்ட இந்த நாளில் நாம்பளாகவே மின்சாரத்தை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கிறப்போ, அது கொஞ்சம் வித்தியாசம்தான்.

கப்யூடரிலிருந்து எல்லாத்தையும் அணைச்சிட்டு, இரண்டு மெழுகுவர்த்தியும் பனை ஓலை விசிறியுமா சோபாவில் உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தேன்... சே... இதென்ன பைத்தியக்காரத்தனம்/ இப்பதானே அணைச்சிட்டு வந்து உட்கார்ந்தோம்? டேபிளின் மேல் கையில் கிடைச்ச பத்திரிகையை எடுத்து புரட்ட ஆரம்பிச்சேன். ஹு..ஹும். மங்கலான வெளிச்சத்தில் படிக்க சுவாரசியமாகவே இல்லை. பத்திரிகையை மூடி வைத்தேன்.

ஆனா, ஒண்ணுமே செய்யாம ஒரு மணி நேரம் சும்மாவே எப்படி உட்கார்ந்து இருப்பது? அப்பதான் 24 மணி நேரமும், உபயோகமோ இல்லையோ ஏதோவொரு 'செய்கையில்' நாட்கள் ஓடிவிடுவது புரிந்தது. அந்த காலத்தில் முனுவர்களின் தவத்துக்கு கடவுள்கள் கேட்ட வரம் கொடுத்தாராம் என்றால், ஏன் மாட்டாராம்? ஒன்றும் செய்யாமல் ஒரு மணி நேரம் இருப்பதே பிரம்ம பிரயத்தனம் என்றால், நாட் கணக்கில் இருப்பது சூப்பர் சாதனை அல்லவா? இன்னிக்கு அப்படி யாராவது நாட்கணக்கில் "சும்மா" இருந்தால் ஒலிம்பிக் தங்க மெடலே கொடுத்தாலும் தகும்!!!

பனை ஓலை விசிறியை விசிறிக்கொண்டு என்ன செய்யலாம் என்று நோட்டம் விட்டபோது, போன் கண்ணில் பட்டது. ஆஹா.... போன் பேச வெளிச்சம் வேண்டாம் - யாரையாவது அரட்டைக்கு இழுக்கலாம் என்று எழுந்த போது, உள்ளே ஒரு அசரீரி. அதென்ன அப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாம? ஒன்றுமே செய்யாமல், யாருடனும் பேசாமல் ஆத்மார்த்தமாக சிந்தித்துக்கொண்டு ஒரு மணி நேரம் உன்னால் இருக்க முடியாதா?

ஹ்ம்ம்... உள்ளே எழுந்த சவாலை ஏற்றுக் கொண்டு பேசாமல் அமர்ந்தேன். ஆனால், உட்கார முடியவில்லை. எழுந்து நடந்தபோது ஜன்னல் வழியே சிறிது நேரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆஹா... இது சுவாரசியம் என்று தோன்றியதில் பனை ஓலை விசிறி சகிதம் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். வீட்டருகில் இருந்த மரம் சமீபத்தில்தான் விழுந்திருந்தது. ( மற்றொரு இழப்பு பூமிக்கு) இப்போ கூடத்து ஜன்னல் வெளியே பெட்ரோல் பங்கும், சாலை சந்திப்பும் நன்றாகவே தெரிந்தது. சரி; எத்தனை வாகனங்கள் சிவப்பு விளக்கை தாண்டுகின்றன என்று பார்க்கலாம். ஆஹா...அதிசயம்; எல்லா வாகனங்களும் கனக்கச்சிதமாக சிவப்பில் நின்று, பச்சையில் ஒழுங்கா போய்கிட்டு இருந்தது. சே... இப்படி சுவாரசியமில்லாம ஓட்டறாங்களே' னு நகரும் வாகனங்களையும் பெட்ரோல் போட இறங்கும் ஓட்டுனர்களையும் பார்த்தபடி மனம் எங்கோ மேய்ந்தபடி இருந்தது.

எத்தனை விதமான வண்டிகள்? மனிதர்கள்? - அவர்கள் ஓட்டும் / பயணிக்கும் வண்டிகள், அவர்கள் எண்ணங்களையும், கவலைகளையும், சந்தோஷங்களையும் சுமந்து போகின்றனவோ?

நம்மைத் தாண்டி வெளி உலகை கவனிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உணரும் அதே உணர்ச்சி மீண்டும் எழுந்தது; நானும் என் கவலைகள்/ மகிழ்ச்சிகள்/ என்று இருக்கும் "நான்' எவ்வளவு மிகச் சிறியது - insignificant - ஒரு விதமான முக்கியத்துவமும் இல்லாத - பிரமாண்டமான மக்கள் சமுத்திரத்தில் எத்தனை சிறிய ஒரு நீர்த் துளி... என்ற உணர்வு......

ரயில் பயணம் ஞாபகம் வந்தது. டில்லிக்கும் சென்னைக்கும் அடிக்கடி பயணம் செய்யும்போது இப்படி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வெளியே "ஓடும்" உலகை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம். நீண்ட இரண்டு நாள் பயண அலுப்பே இதில் மறைந்துவிடும் என்பது மட்டுமல்ல. அந்த ரயில் ஜன்னல் நேரங்கள் என்னுடையவை - சிந்திக்க, அசை போட, திட்டம் இட, என்னைச் சுற்றி 'ஓடும்" உலகை கவனிக்க என்று... பல விதங்களில் அந்த ரயில் பயண தனிமையை ஆவலுடன் ஓரளவு எதிர்பார்ப்பதும் உண்டு.

இந்த 'பூமிக்கான மணித்துளிகள்" மீண்டும் என் ரயில் ஜன்னல் கணங்களை கொண்டு வந்து கொடுத்தாற்போல் இருந்தது.

ஆனாலும் ஒரு மணி நேரம் முடிந்து, ஸ்விட்சை தட்டி விளக்கு போட்டு, மெழுகுவர்த்தியை எனக்கு நானே ஹாப்பி பர்த்டே சொல்லி அணைத்து ( இவற்றை செஞ்ச வரிசையை கவனிக்கவும் - முதல்லே மின்சார விளக்கு போட்டுட்டு, அப்புறம்தான் மெழுகுவர்த்தியை நிறுத்தணும்....!!!) உடனேயே, "நான்" "என்" உலகிற்கு திரும்பின போது "அப்பாடா...." என்று சந்தோஷமாகதான் இருந்தது :-)