என்னைப் பற்றி

வியாழன், அக்டோபர் 28, 2010

பணியும் பயணமும்

வேலை செய்வதில் இருக்கும் கோளாறுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.

காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரை ஏற்பாடுகள் எல்லாம் அரைகுறையாக இருந்தன. ஊடகங்கள் போட்டு வாட்டி எடுத்த பிறகு கடைசி நிமிட சுறுசுறுப்பில் களம் இறங்கி எல்லாவற்றையும் சீர்படுத்தி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த வழி செய்தார்கள். இது போன்று  வாழ்க்கையிலும் பல முறை நடந்திருக்கிறது.

பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது பாடங்களை அன்றன்றே படித்து விட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலும். தேர்வுக்கு முந்தைய ஒரு மாதம், தேர்வுக்கு முந்தைய நாளில் அதிக அழுத்தத்துடன் படித்துக் கொண்டிருப்போம். தேர்வு முடிந்து அடுத்த ஆண்டு, பருவம் ஆரம்பித்த நாட்களில் தேர்வு நாட்களில் அனுபவித்த அழுத்தத்தை மறந்து மீண்டும் படிப்பை பின்னால் தள்ளி விட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நம்மை மறந்திருப்போம். இந்த நாட்களுக்கான தேர்வு நெருங்கும் போது மீண்டும் கடைசிக் கட்ட தயாரிப்புகளில் இரவு பகலாக மணிகளைச் செலவிட்டுக் கொண்டிருப்போம்.

இந்தச் சுழலை உடைக்க மாதா மாதம் தேர்வு என்று சில கல்லூரிகளில் வைக்கிறார்கள். இப்படி வெளிக் காரணி ஒன்று தூண்டி, அழுத்தம் கொடுத்தால்தான் நாம் நமது கடமையைச் செய்கிறோம். எதையும் செய்ய ஆரம்பிப்பதை இழுத்தடித்து தாமதித்திருந்து விட்டு, ஆரம்பித்த பிறகு இராப்பகலாக கண் விழித்து, அதிக அழுத்தத்துடன் அவசர அவசரமாக முடிக்கப் பார்க்கிறோம். start late, execute fast seems to be our mantra. Can it be start early, execute deliberately and create great.

கடைசி நிமிடத்தில் வேலை முடிக்க முயற்சிக்கும் போது நமக்கே தோன்றும் பல நுணுக்கங்களை செய்ய முடியாமல் போய் விடுகிறது. இந்த நுணுக்கங்கள், செய்யா விட்டாலும் வேலை முடிந்து எதிராளி ஏற்றுக் கொள்வார் என்றாலும், இந்த நுணுக்கங்களுடனான பணி முடிப்பு உயர்ந்த தரத்தையும், அதன் விளைவான எதிர்காலச் சிறப்பையும் தரும்.

கல்லூரி எடுத்துக் காட்டில், தினமும் 2 மணி நேரம் படித்து, அழுத்தம் எதுவுமில்லாமல் நிதானமாகப் படித்து, சின்னச் சின்னக் குறிப்புகளை அவதானித்துக் கொண்டிருந்தால் படித்ததில் தோன்றும் கிளைச் சிந்தனைகளை, தொடர்ந்து போய் புதிய ஆக்கங்களைச் செய்யலாம். அந்த வாய்ப்பு இல்லாமலேயே போய் விடுகிறது.

இரண்டாவதாக, டாட்டா நிறுவனத்தில் நான் பணிபுரியும் போது நடக்கும் மாதாந்திர உற்பத்தித் திட்டமிடல். 20ம் தேதிக்குப் பிறகு எல்லா விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டும், சுறுசுறுப்பாக பெரும் அளவிலான உற்பத்தி நடக்கும். 28, 29, 30, (31)ம் தேதிகளில் ஒவ்வொரு மணி நேரமும் இலக்கைக் கண்காணித்து அறிக்கை தயாரிப்பார்கள். மாதக் கடைசி நாளின் இரவு முழுவதும் பணி புரிவார்கள். அடுத்த மாதம் முதல் நாளின் வேலை நேரத்துக்கு முன்பு தொழிற்சாலையிலிருந்து வெளியில் போய் விட்டிருக்கும் சரக்கு மாதக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கடைசி வாரத்தில் தினமும் ஒரு டிரக், கடைசி நாளில் ஒரே நாளில் 3 டிரக்குகள் என்று போய்க் கொண்டிருக்கும்.

இவ்வளவும் முடிந்து அடுத்த மாதம் ஆரம்பித்ததும், எல்லாமே தளர்வாகி விடும். நிறைய பேர் விடுமுறைகள் எடுக்க ஆரம்பிப்பார்கள், உற்பத்தி கொஞ்சம் மந்த கதியில் நகர்ந்து கொண்டிருக்கும். திட்டத்தை கண்காணித்தல் அறிக்கை கொடுத்தல் எல்லாம் சுணக்கமாகவே இருக்கும். திரும்பவும் சூடு பிடிப்பதற்கு 15ம் தேதி ஆகி விடும்.

இந்த அணுகுமுறையில் ஒரு ஆதாயம், கிட்டத்தட்ட 1000 பேர் இணைந்து ஏழெட்டு பிரிவுகள் ஒத்துழைத்து வேலை செய்வதற்கு 10 நாட்களில் அதிக குவியத்துடன் பணி செய்வது பலனைத் தருகிறது. மற்ற 20 நாட்களில் சொந்த வேலைகளுக்காக விடுமுறை எடுப்பது, இயந்திரங்களுக்கான பராமரிப்பு வேலை செய்வது, போன்ற ரிப்பேர் பணிகளை முடித்துக் கொள்ளலாம்.

அட்ரீனலின் பாய்ச்சலில் மொத்த நிறுவனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதால் கிடைக்கும் அதிக ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி இராப்பகலாக வேலை செய்வதால் உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் அதிகமாகிறது. பொருளின் தரக் கட்டுப்பாடும் தளர்வாகி விடுகிறது. கடைசி நேர அவசரத்தில் கொஞ்சம் ஏறக்குறைய இருப்பதையும் தள்ளி விட்டு விடும் போக்க வந்து விடுகிறது. ஒரு நாள் தாமதித்தால் சரியான தரம் உருவாக்கி அனுப்ப முடியும் என்று வருபவற்றை அந்த ஒரு நாள் வேலையை வெட்டி விட்டு அன்றே அனுப்பி விடும் மனநிலை ஏற்பட்டு விடுகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், பொருட்களின் தரம், ஊழியர்களின் மனஆரோக்கியம், பணப் புழக்கம் போன்ற நோக்குகளில் இப்படி மாதத்துக்கு 10 நாட்கள் அதிக ஆற்றலுடன் வேலை பார்ப்பது என்ற திட்டமிடல் ஊறு விளைவிப்பதாகவே இருந்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பொருள் அனுப்புவதும், பணம் பெறுவதுமான சுழற்சியும் வட்டமாக இல்லாமல் ஒரு பக்கம் புடைத்துப் போய் விடுகிறது.

இன்னொரு பழக்கம், மேலே சொன்ன start early, execute with care என்பதற்கு நேரடியாக பொருந்தும் நேரப் பராமரிப்பு. ஒரு இடத்துக்கு இன்ன நேரத்துக்குப் போக வேண்டும் என்றால் தாமதமாக புறப்பட்டு வழியெங்கும் டென்ஷனோடு வேகமாக ஓட்டிப் போய்ச் சேருவதை விட, திட்டமிட்டு நேரத்தில் புறப்பட்டு, நிதானமாக பயணப்பட்டுப் போய்ச் சேருவதுதானே நல்லது! வழியில் ஏதாவது தேவை இருந்தால் நிறுத்தி அதையும் முடித்துக் கொள்ளலாம். எதிர்பாராத சிறப்பான ஒன்று கண்ணில் பட்டால் அதையும் செய்து விட்டு பயணத்தைத் தொடர்ந்து கொள்ளலாம்.

இன்னாருக்கு இன்ன தேதி வாக்குக் கொடுத்து விட்டால்,  கட்டாயம் இருந்தால் ஒழிய வேலை ஆரம்பிப்பதே இல்லை. அதுவும் வாக்கு கொடுத்த உடனேயே பணி ஆரம்பிப்பதில்லை. பணி செய்ய 2 நாட்கள் இருக்கிறது என்று கணக்குப் போட்டிருந்தால், முதல் நாளில் ஆரம்பித்து 2 நாட்களில் வேலையை முடிக்காமல், முடிப்பதாகச் சொன்ன நாளிலிருந்து இரண்டு நாட்கள் முன்பு பணி ஆரம்பித்து முடிக்க முயற்சிப்பேன். நம்முடைய கணக்கு தவறிப் போனால் வாக்கும் தவறி விடும். மேலே சொன்னது போல அவசர அவசரமாக செய்வதால் பல நுணுக்கங்கள், இன்னும் சில நிமிட முயற்சியில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பவற்றை புறக்கணித்து விட வேண்டியிருக்கும்.

அதற்காக ஒரு பணியை எடுத்துக் கொண்டு அதை செதுக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லைதான். செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்.

எந்த ஒரு வேலையும் செய்து கொண்டிருக்கும் போது இதைச் சீக்கிரம் முடித்து விட்டு அடுத்ததற்கு தாவி விட வேண்டும் என்றில்லாமல், திட்டமிட்ட நேரம் வரை நிதானமாக செய்யும் போது தோன்றும் சின்னச் சின்ன நுணுக்கங்களை எல்லாம் கவனித்து செய்ய வேண்டும். சீக்கிரமாக ஆரம்பித்து நிதானமாக பணி செய்து, சிறப்பாக முடிக்க வேண்டும். தாமதமாக ஆரம்பித்து அவசரமாக பணி செய்து முடிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தது. அதன் பிறகு முடி வெட்டவே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு (வேலூருக்கு இடம் மாற்றும் பொழுது) முகம் மழிக்கும் கருவியின் கைப்பிடி உடைந்து விட்டது. (செப்டம்பர் 5ம் தேதி என்று நினைக்கிறேன்).  புதிதாக வாங்கவில்லை. தாடியும் மீசையும் வளரட்டும் திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

அப்படி ஒன்றரை மாத தாடி மீசையுடனும் 5 மாத தலைமுடியுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். முதல் ஒரு வாரம் தாடி சோம்பேறி, நோயாளித் தாடி போலத் தெரிந்தது. அடுத்த ஒரு மாதம் முதிர்ச்சியைக் காண்பிப்பதாக இருந்தது. கடைசி இரண்டு வாரங்கள் மீசை மேலுதடு தாண்டியும், தாடியில் கத்தரித்து விடாத ஒழுங்கின்மையும் சோம்பேறி வடிவத்துக்குப் புது உயிர் கொடுத்திருந்தன.

போன வாரம் 21ம் தேதி திருப்பதிக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.  சுணக்கமாக இருந்து விட்ட பணிகளை எல்லாம் முடித்து இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 27ம் தேதி மதியம் புறப்பட்டுப் போகலாம் என்று நினைத்திருந்தேன். அன்றைக்கு நானும் ஆம்பூர் போக, புறப்படுவது நின்று போனது. மாலையில், இரவில் போகலாம். அன்று காலையிலேயே நல்ல மழை, காயப்போட்டிருந்த துணிகள் எல்லாம் நனைந்து விட்டிருந்தன. அதனால் தீபாவளி நாட்களில் போகலாம் என்று நினைத்துக் கொண்டுத் தூங்கி விட்டேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்திருக்கும் போது இணைய இணைப்பு மீண்டும் வேலை செய்தது. பணிகளை எல்லாம் திட்டமிட்டு விட்டு, இன்றைக்கே போக வேண்டும் என்று தோன்றியது. வீட்டை ஒழுங்கு படுத்தித் தூத்துத் துடைத்து, பாத்திரம் கழுவி, துணி துவைத்துப் போட்டு துவைத்த துணிகளை தேய்த்து வைத்து விட்டுப் புறப்பட வேண்டும். போகலாம் வேண்டாம் என்று பல முறை ஊசலாடி, பணிகளை செய்து கொண்டிருந்தேன்.

10 மணி வாக்கில் தயாராகி விட்டேன். கால் சட்டையை தேய்க்கும் வேலை மட்டும் இருந்தது. அதையும் முடித்துக் கிளம்பும் போது பத்தரை மணி தாண்டி விட்டிருந்தது. பையில் மாற்றுத் துணிகள், செல்ஃபோனை வீட்டிலேயே விட்டு விட்டேன். ஓடைப்பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தால் சித்தூர், திருப்பதி பேருந்துகள் எதுவும் வரவில்லை. சாலையைக் கடந்து பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

பேருந்து நிலையத்திலும் சித்தூர் என்று போட்டிருந்த தனியார் பேருந்தில் மட்டும் திருப்பதி, சித்தூர் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஏறாமல் காத்திருந்தேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலப் போக்குவரத்துக் கழக பேருந்து வந்தது. திருமலை போவது. திருமலை பேருந்து கிடைத்தால் நேராக ஏறி விடுவதாக நினைத்திருந்தேன். ஏறி உட்கார்ந்தால் பேருந்து நிரம்புவது வரை காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. பேருந்து புறப்படும் போது 11.45 ஆகி விட்டிருந்தது. இதற்குள் இன்னொரு ஆந்திர பேருந்து, ஒரு தமிழ்நாடு பேருந்து புறப்பட்டுப் போய் விட்டிருந்தன.

88 ரூபாய் கட்டணம். மேல் திருப்பதி வரை போவதற்கு. அதிகமாகப் பட்டது. சென்னையிலிருந்து திருப்பதி 60 ரூபாய், மலையில் ஏற 30 ரூபாய். இதுவும் கிட்டத்தட்ட அதே கட்டணம். தூரம் குறைவு என்பதற்கு என்ன ஆதாயம்.

வழியில் சித்தூர் ஆட்களையும் ஏற்றி கொண்டார்கள். சித்தூர் சீக்கிரமே வந்து விட்டது. பேருந்து நிலையத்தில் சாப்பிடுவதற்கு 10 நிமிடங்கள். பேருந்து மறுபடியும் புறப்பட்டு ஓடியது. அடுத்த 2 மணி நேரங்களுக்குள் திருப்பதி வந்து விட்டது. இது வரை வந்திராத வழித்தடம். புத்தூரும் பார்க்கவில்லை, காளகஸ்தியும் பார்க்கவில்லை. திருப்பதி பேருந்து நிலையம் கூட வராமல், நேராக அலிப்பிரி பாலாஜி லிங்க் பேருந்து நிலையம் வந்து விட்டது.

மலையில் நடந்தே ஏறினால்தான் இலவச மொட்டை, சீக்கிர தரிசனம் என்று இங்கு இறங்கி நடைபாதைக்கு வந்தேன். இடையில் எங்கும் உட்காராமல் ஒரே முயற்சியில் ஏற வேண்டும் என்று நினைத்திருந்தேன். 1200 படிகள் ஏறிய பிறகு மட்டும் ஒரு முறை உட்கார்ந்து மூச்சு வாங்கிக் கொண்டேன். அதன் முன்பும் பின்பும், மொட்டை போட உட்காரும் வரை நடந்து கொண்டுதான் இருந்தேன். இடையில் பொருள் வாங்க, சீட்டு பெற நின்றதைத் தவிர வேறு இடங்களில் நிற்கக் கூட இல்லை.

ஏற ஆரம்பிக்கும் போது யாரோ இரண்டேகால் என்று மணி சொன்னார்கள். (பேருந்து பயணம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம்)  காலி கோபுரத்தில் சீட்டில் வந்த நேரம் 3.05 (2050 படிகள் ஏற 1 மணி நேரம்). ஏறி முடித்த பிறகும் இருட்டியிருக்கவில்லை.  5 மணி ஆகியிருக்கும் என்று தோன்றியது. மொட்டை போட்டு விட்டு அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டேன்.

வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸ் வந்தால் நடந்து வந்தவர்கள் போவதற்கு வெளியில் பெரிய வரிசை நிறுத்தியிருந்தார்கள். சாப்பிடலாம் என்று சுற்றி வந்து இந்தியன் காஃபி ஹவுசில் இட்லி, உப்புமா, காஃபி குடித்து விட்டு, வெளியூர் பேருந்து நிறுத்தத்தில் வேலூர் பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஆறே முக்காலுக்குக் கிளம்பி ஏழே முக்காலுக்கு திருப்பதி பேருந்து நிலையம். 10 நிமிடங்கள்  நிற்குமாம். போய் செருப்புக் கடையில் புதுச் செருப்பு 200 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன். போன தடவை வாங்கிய 30 ரூபாய் கடனையும் கொடுத்து விட்டேன்.

பேருந்து புறப்படும் போது எட்டரை மணி இருக்கும். வேலூர் வரும் போது 11 மணி தாண்டி விட்டிருந்தது. வீட்டில் 11.30க்கு வந்தேன் என்று நினைவு.

திங்கள், செப்டம்பர் 06, 2010

வேலூரில் வேர் பதிக்க....

நேற்றுக் காலை எழுந்திருக்கும் போது வேலூரில் முத்து மேன்ஷனின் 304ம் எண் அறையில். புதன் கிழமை இரவில் போனதிலிருந்து புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு தங்கி விட்டு சனிக்கிழமை காலையில்தான் அறையை காலி செய்து விட்டுப் போயிருந்தேன். ஞாயிற்றுக் கிழமை மாலையில் மேடையில் பேசும்படி சொன்னதால், சனி மாலையில் கருத்தரங்கு முடிந்ததும் சென்னைக்கு வந்து விட்டு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் மீண்டும் போகலாம் என்று உத்தேசித்திருந்தேன்.

சனிக்கிழமை மாலையில் கருத்தரங்கு முடிந்த பிறகு பத்திரிகைச் செய்தி தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி தங்கிப் போகச் சொன்னார். அப்படியே  காட்பாடி கோபாலகிருஷ்ணா நகர் போய்  வாடகைக்கு எடுத்திருந்த அறையின் சாவியை வாங்கிக் கொண்டு வந்தோம். அதன் பிறகு புத்தகக் கண்காட்சி மைதானத்துக்குப் போய் எடுத்திருந்த குறிப்புகளை கணினியில் உள்ளிடுவதற்கே ஒன்பதரை மணி தாண்டி விட்டிருந்தது. அதன் பிறகு அண்ணாமலையார் விடுதிக்குப் போய் அங்கு வைத்திருந்த பைகளை எடுத்துக் கொண்டு முத்து மேன்ஷன் வந்து அறை எடுத்திருந்தோம்.

இரண்டு பேருக்கு 250 ரூபாய், ஒருவராகத் தங்கினால் 200 ரூபாய் கொடுத்திருந்தேன். முதலில் தங்கியிருந்த 101ம் அறை போய் விட்டிருக்க இன்னமும் இரண்டு மாடி ஏறி 304ம் எண் அறை.

ஆறு மணிக்கெல்லாம் விழித்து காலைக் கடன்களை முடித்து விட்டு கணினியை இணைக்க முடியாமல் உட்கார்ந்திருந்தேன். படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இயக்க வசதியாக மின் இணைப்பு பிளக்குகள் இல்லாமல் இருந்தது. அப்படியே அரைக்கால் சட்டையும் முன்தினம் துவைத்துப் போட்டிருந்த பிஎஸ்ஜி லெதர்லிங்க் டிசட்டையும் போட்டுக் கொண்டு வெளியில் உலாவி வரப் போனேன். அப்படியே பணப் பையையும் வைத்துக் கொண்டேன். சனி மற்றும் வெள்ளிக் கிழமை போலவே 10 நிமிடம் வள்ளலார் நோக்கி நடந்து திரும்பினேன். கலைஞர் கருணாநிதி அறிவியல் தொழில் நுட்ப மையம் என்று திறக்கப்படக் காத்திருக்கும் கட்டிடம் தாண்டி, ஆவின் பால் நிலையத்தைத் தாண்டி, ஏதோ ஒரு சாமியாரின் மருத்துவக் கூடத்தின் அருகில் திரும்பி வந்து விட்டேன்.

நாளிதழ் கடையில் இந்து நாளிதழ் வாங்கினேன். 4.50 காசுகள்.  வேலூரில் இந்து விலைக்குறைப்பு செய்யவே இல்லை. சென்னையில் கிடைப்பது போல நகர இணைப்புகளும் கொடுப்பதில்லை. வார நாட்களில் 3.25 (சென்னையில் 2.50), ஞாயிற்றுக் கிழமையில் 4.50. வேலூர் பக்கத்தில் பிரதானமாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உட்கார்ந்து கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஓப்பன் பக்கத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டுக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்கள். ஆசிரியர்களின் சமூக மதிப்பு ஏன் குறைந்தது என்று ஒருவர், ஆசிரியை ஒருவரின் அக்கறை குறித்து ஒருவர். பக்கத்தில் ஒருவர் அதிகாலையிலேயே புகை விட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒருவர் வந்து 'இந்தக் கடை எத்தனை மணிக்குத் திறக்கும்' என்று கேட்டவுடன் 'தெரியாது' என்ற பதிலைச் சொல்லி விட்டு எழுந்து கொண்டேன்.

வரவேற்பு மேசையில் அறையில் நாற்காலி எடுத்துப் போடும்படி சொன்னால் வெளியிலேயே கிடக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நான்கு மாடி ஏறுவதற்கு கொஞ்சம் சுணக்கம்தான். நாம் எப்படி ஏறி இறங்குகிறோம்? மேலே போய்ப் பார்த்தால் வெளியில் அப்படி நாற்காலிகள் எதுவும் இல்லை. அவர்கள் கொடுத்திருந்த கைபேசி எண்ணில் அழைத்து நாற்காலி கொண்டு வரச் சொல்லி விட்டேன். அது வரை காத்திருக்க மனதில்லாமல், தொலைக்காட்சியின் மின்னிணைப்பை எடுத்து விட்டு அதில் மடிக்கணினிக்கு இணைப்பு கொடுத்தேன்.

ஆனால் அது ஏனோ மின்சாரம் வராமல் போய் விட்டது. அதன் பிறகு தொலைக்காட்சியும் இயங்கவில்லை. நாற்காலி கொண்டு வந்து போட்ட பிறகு கண்ணாடியின் அருகில் இருந்த இணைப்பில் இணைத்துக் கொண்டேன். சிறிது நேரம் படுத்துக் கண்களையும் மூடிக் கொண்டிருந்தேன். குளிக்க வேண்டும் பரிந்துரை அறிக்கை தயாரிக்க வேண்டும். எதுவும் செய்ய மனமில்லை. முகம் மழிப்பது, தலை முடி வெட்டுவது எல்லாவற்றையும் தள்ளிப் போட முடிவு செய்திருந்தேன்.

எட்டரை மணி போல பசிப்பது போலிருக்க கீழே வந்து அடுத்த கடையான ஆரியாஸ் உணவு விடுதிக்குள் நுழைந்தேன். 4 இட்லிகள் கேட்டால் வடையுடன் வந்தது. இங்கும் சரி, பாலா விடுதியிலும் சரி,  காட்பாடி திருநகர் அருகில் போன தேநீர்க் கடையிலும் சரி வடைகள் மிகவும் மெதுவாக மெதுவடையாகவே இருந்தன. ஏதாவது சேர்ப்பார்களோ?

இட்லிகளுக்குப் பிறகு ஒரு செட் பூரி, அதன் பிறகு காஃபி. இவ்வளவுக்கும் வயிற்றில் இடம் இருந்தது. கூடப் படிப்பதற்கு இந்துவின் இலக்கிய விமர்சனம் பகுதியை எடுத்துப் போயிருந்தேன். ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கு இலக்கிய தரகர் ஒருவரை எப்படி பெறுவது என்று விளக்கி நீளமான முதல் பக்கக் கட்டுரை. தமிழ் பதிப்பு உலகில் இத்தகைய வாய்ப்பு ஒன்றைப் பார்த்து அந்தத் திசையில் செலுத்த ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.

55 ரூபாய்கள் கட்டணம். வெளியில் வந்து மீண்டும் நான்கு மாடிகள் படியேறி அறை. உட்கார்ந்து முந்தைய நாள் கருத்தரங்கு விவாதங்களின் பரிந்துரை அறிக்கையை தயாரித்தேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதி முடித்து விட்டு இன்னொரு கோப்பில் தமிழ் வடிவிலும் எழுதினேன்.

'நேற்றைக்கு நன்றாக போச்சு, இன்னைக்கு இந்துவில் நல்லா ரிப்போர்ட்ட பண்ணியிருக்கான்' என்றதும், நான் 'பரிந்துரை அறிக்கை தயாராகி விட்டது' என்றேன். 'இன்றைக்கு நீங்கள் இருந்தால் கலெக்டரிடம் சந்தித்துக் கொடுத்து விடலாம், இல்லை என்றால் அடுத்த வாரம் ஒரு நாளில் போய்ச் சந்திக்கலாம்' என்றார்.

'மாலையில் பேசணுமா?' என்றேன். 'பேசணும் என்று கட்டாயம் எதுவுமில்லை.. அப்படி பேச விரும்பினால், கலெக்டரும் மாலை நிகழ்ச்சிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரைச் சந்தித்து அறிக்கையைக் கொடுத்து விடலாம். உங்களுக்கு கலெக்டரிடம் ஒரு அறிமுகம் கிடைக்கும். ஆனால் சுருக்கமா முடிச்சிடுங்க.'

அப்படியே தொடர்ந்து, போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளை பரிசீலிப்பதில் உதவி செய்யும்படி கேட்டார். ஒரு இரண்டு மணி நேரத்தில் முடித்து விடலாம் என்று தகவலும் சொன்னார்.

அறையை காலி செய்யும் போது 250 ரூபாய் வாங்கிக் கொண்டு 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டார். அறைப் பணியாளருக்கு அன்பளிப்பு எதுவும் கொடுக்கவில்லை.

பகிர்வூர்தியில் ஏறி அண்ணாமலையார் விடுதிக்கும் முன்பு இறங்கிக் கொண்டோம். இரண்டு பேருக்கு 10 ரூபாய்கள், முந்தைய நாள் இரவு 7 ரூபாய் வீதத்தில் 14 ரூபாய்கள் வாங்கிக் கொண்டார். வெள்ளிக் கிழமை இரவு கையில் சில்லறை இல்லாமல் கூட வந்த ஒரு இளைஞர் கொடுத்து விடுவதாகச் சொல்லி விட்டார்.

சென்னைக்குப் போய் qa consultant வேலையை ஆரம்பிக்க வேண்டும். நிறுவன தளத்தை ஜூம்லாவுக்கு மாற்ற வேண்டும். இரண்டையும் முடித்து விட வேண்டும் என்று உறுதி பூண்டேன். கட்டுரைகளையும் படித்துக் கொள்ளலாம் என்று  கட்டுரைகளை படித்து மதிப்பெண் கொடுத்தேன்.

நிறைய உழைத்து நன்கு எழுதியிருந்தார்கள். ஆங்கில அறிவைக் குறித்துப் பேசிய போது, மாலையில் பேசுவதற்காக ஆங்கில மொழிப் புத்தகங்களை சீன மொழிக்கு மாற்றுவது போல தமிழுக்கு மாற்ற ஒரு முனைவு ஏற்படுத்துவது குறித்து கிட்டத்தட்ட ஒரு சொற்பொழிவே ஆற்றினேன். அதைத் தொடர்ந்து இவ்வளவு மாணவர்கள் ஆர்வமாக தகவல்களைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிக் கொடுத்திருப்பதை வியந்து பாராட்டினேன். வேலூர் மாவட்டம், வேலூர் நகரம், வேலூர் கோட்டை, கோட்டையில் நடந்த போராட்டம் பற்றி விக்கிபீடியாவில் முழுமையாகத் தொகுத்து வழங்கப் போதுமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கட்டுரைகள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்கின்றன. கணினியில் உள்ளிட்ட ஓரிருவரும் அச்செடுத்து கொடுத்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்தையும் மின் வடிவாக்கி விக்கிபீடியாவில் போட வேண்டியிருக்கும்.

கீழே வரும் போது வரவேற்பறை பெண் வணக்கம் தெரிவித்தாள். அப்படி நடந்தே பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன். ஒரு குளிரூட்டப்பட்ட பேருந்து பயணச் சீட்டு அலுவலகத்துக்கு அருகில் நின்றிருக்க உள்ளிருந்தபடியே சாப்பிட்டுக் கைகழுவிக் கொண்டிருந்தார் நடத்துனரோ, ஓட்டுனரோ! இன்னொரு பேருந்து புறப்படும் இடத்தில் நின்றிருந்தது. அதனருகில் வந்து பூந்தமல்லி போகுமா என்று கேட்டால் இருக்கை இல்லை என்று சொல்லி விட்டார்.

அதன் முன்பு புறப்படத் தயாராக இருந்த சேலம் பேருந்து ஒன்றில் ஏறி கடைசி இருக்கையின் நடுவில் உட்கார்ந்து கொண்டேன். கால் நீட்டிக் கொள்ள முடியும். வலது புறம் மூவர் இருக்கையில் இரண்டு பெண்கள். இடது புறம் ஒரு இஸ்லாமியரும் அவரது மகனும் ஏறிக் கொண்டார்கள். வண்டி புறப்படும் போது ஒருவர் மல்லிகை மூட்டையை காலருகில் போட்டு விட்டு இறங்கிப் போனார். பையை இருக்கைக்கு அடியிலேயே வைத்துக் கொண்டேன். கடையில் வாங்கி வந்திருந்த தமிழ் கம்ப்யூட்டரில் மென்பொருள் சுதந்திர நாள் குறித்த எனது கட்டுரையை அப்படியே வெளியிட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து ஜூம்லா புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்

நடத்துனரிடம் 40 ரூபாய் சீட்டு வாங்கிக் கொண்டு, 500 ரூபாயை மாற்றிக் கொண்டு விட்டேன். கோயம்பேடுக்கு 46, பூந்தமல்லிக்கு 40 ரூபாய்கள். பேருந்தில் பூம் தொலைக்காட்சித் திரை இருந்தது. 'ஒரே விளம்பரமாகத்தான் இருக்கு, நாம எதையும் மாற்ற முடியாது' என்று நடத்துனர் சொன்னார். கடைசி வரை அதை இயக்கவேவில்லை.

வண்டி சீரான 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வாலாஜாவில் நுழையாமல் புறவழிச்சாலையில் திரும்பி விட்டது. முன்னால் போய்க் கொண்டிருந்த ஓசூர் வண்டி வாலாஜாவுக்குள் போனது. ஆனால் மகிழ்ச்சி கொஞ்ச நேரம்தான் நீடித்தது. காவேரிப்பாக்கம் தாண்டியதும் அங்கிருந்த உணவு விடுதிக்குள் நுழைந்து விட்டார்கள்.

நானும் தமிழ் கம்ப்யூட்டருடன் இறங்கி ஒரு எலுமிச்சை சாதம், ஒரு தயிர் சாதம் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. 25 ரூபாய், 20 ரூபாய் என்று மொத்தம் 45 ரூபாய்கள். நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தால் 5 ரூபாய்க்கு நாணயங்களும் 50 ரூபாய் நோட்டும் கொடுத்தார். பேருந்தில் ஏறினால் சாப்பிட வராத பயணிகள் முறைத்தார்கள். 'இவ்வளவு தூரத்துக்குள் சாப்பிட என்ன தேவை, நேரமாகிறது இல்லையா' என்று கோபம். நான் ஏறியும் 5 நிமிடங்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுக்க ஓட்டுனர் வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் என்று எங்கும் போகாமல் நேராக பூந்தமல்லி வந்து சேர்ந்தோம். அருகில் உட்கார்ந்திருந்த பையன் காலை மடக்கி மேலே வைப்பது, கையால் இடிப்பது என்று எரிச்சலூட்டிக் கொண்டிருந்தான். வலது பக்கம் தாராளம் இடம் இருந்ததால் நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.

பூந்தமல்லியில் இறங்கி பேருந்து நிலையத்துக்குள் போய் 53ம் எண்ணில் ஏறினால், உட்கார்ந்த பிறகுதான் அது மதுரவாயல் வழியாகப் போவது என்று தெரிந்தது. 2 ரூபாய் சீட்டு வாங்கி குமணன் சாவடியில் இறங்கிக் கொண்டேன். கூட்டமாக வந்த பேருந்துகளை போக விட்டு, 54Fல் ஏறினேன். 4.50 காசுகள் சீட்டு வாங்கி காசு கொடுக்கும் போது நடத்துனர் கொடுக்க முயற்சித்த சீட்டுப் பறந்து போய் விட்டது. அவர் வேகமாக நகர்ந்து அதைப் பிடித்து விட்டார். திரும்பி வந்து சில்லறையும் சீட்டுக் கிழித்துக் கொடுத்தார். அந்தச் சீட்டை முன்னால் கொடுத்து விட்டாராம். நம்முடையது என்று வந்து விட்டதை வேறு யாருக்குக் கொடுத்தார் என்று ஒரு கணம் மனதில் ஓடியது.

1. இலவசமாக எதையும் கொடுக்கக் கூடாது
2. இலவசமாகக் கொடுப்பதை ஒரு போட்டி வைத்துக் கொடுக்கலாம். அதில் நிறைய ஆர்வம் இருக்கிறது.
3. விலை குறைவாகக் கொடுக்க வேண்டும்.
4. தரத்தில் மிகவும் கறாராக இருக்க வேண்டும்.
5. வாடிக்கையாளர்களை நேரடியாகவே கையாள வேண்டும். யாரிடமும் விடக் கூடாது.

ராமாபுரத்தில் இறங்கி ஆட்டோவுக்கு 20 ரூபாய் கொடுத்து ராயலா நகர்.  மேசையை ஒதுங்க வைத்து, துடைத்து தொலைபேசி இணைப்புக்கு உயிர் கொடுத்து இணையத்தில் இணைக்க அரை மணி நேரம் ஆனது. வேலூருக்குப் போய் வந்தது புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது. சோறு, காரக் குழம்பு, வாழைக்காய் பொறியல் சாப்பிட்டு விட்டு மின்னஞ்சல் கூகுள் பஸ்.

qaconsultant தரவுத் தளம் உருவாக்குதல் நிரல் உருவாக்குதல் யீ சட்டகத்தில் செய்ய ஆரம்பித்தேன்.
நமது வழங்கியில் இடம் நிறைந்து விட்டது என்று தகவல் வர, நிறையக் கோப்புகளை நீக்கித் தள்ளினேன். இரவு 10 மணி வாக்கில் qaconsultantஐப் போட்டு தொலைபேசி சொல்லியும் விட்டேன். ஜூம்லாவில் வேலை ஆரம்பிக்கும் போது தூக்கம் கண்களைச் சுழற்றி விடத் தூங்கப் போய் விட்டேன்.

ஞாயிறு, ஜூலை 25, 2010

சிறு குறிப்புகள்

வாணியம்பாடி வெற்றி தங்கும் விடுதியில். வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு சிஎல்ஆர்ஐயில் ஆல்ஃபா செயற்குழு கூட்டமும் தொடர்ந்து ஆறரை மணிக்கு ஆண்டு பொதுக்குழுக் கூட்டமும் நடக்க இருந்தது. ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் போதும் என்று திட்டமிட்டிருந்தேன்.

மாலையில் வந்து கடிதங்களை வாங்கிக் கொள்ளட்டுமா என்று மின்னஞ்சல். விபரங்களைச் சொல்லி ஐந்தே கால் மணிக்கு ராமாபுரம் மியாட் மருத்துவமனை அருகில் வந்து விட்டால் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தேன். அவரிடமிருந்து மறுமொழி எதுவும் இல்லை. கையில் அவரது கடித உறையை எடுத்துக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று ஒரு கேள்வி!

மூன்றரை மணி வாக்கில் நண்பன் தொலைபேசி வீட்டில் இருந்தால் வருவதாகச் சொன்னான். அன்றைக்கு லீவு எடுத்திருக்கிறானாம். போன தடவை காரில் வந்திருந்தான். இப்போது இரு சக்கர வண்டியில். நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை அலசி விட்டு, அவனது செல்லத் திட்டமான மருத்துவ சேவைகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் குறித்து பேச ஆரம்பித்தோம்.  உலகத் தரமான மென்பொருள் பயன்பாடு பல வசதிகளுடன் செய்து முடிக்க வேண்டும்.

மதியம் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவியிருக்கவில்லை. சாப்பிட்ட உடன், டம்ளரிலில் இருந்த பாலையும் குடித்து விட்டிருந்தேன். தயிர் கடையில் கிடைக்கவில்லை. காலையில் பால் வாங்கும் போது பசுமை மளிகைக் கடையில் தயிர் இல்லை என்றார்கள். சாப்பிடுவதற்கு முன்பு இன்னொரு கடையில் கேட்டால், அங்கும் தயிர் இல்லை. இரவு கூட்டம் முடித்து விட்டுத் திரும்பும் வழியில் ஆரோக்யா நிலையத்தில் கேட்டால் அங்கும் தயிர் இல்லை.

அதனால் வீட்டில்  தேநீர் எதுவும் தயாரித்துக் கொடுக்க முடியாது. அவனிடம் 6 மணி கூட்ட விபரத்தைச் சொல்லி விட்டு அப்படியே புறப்பட்டு வழியில் ஒரு தேநீர் குடித்து விட்டுப் போகலாம் என்று சொல்லிக் கிளம்பினோம். புறப்படுவதற்கு முன்பு  தொலைபேச முயற்சித்தால் எடுக்கவேவில்லை. கொஞ்ச தூரம் வெளியில் வந்த பிறகு தொலைபேசினார். 'ஐந்தேகாலுக்கு வந்து சேர முடியாது, திங்கள் கிழமை வாங்கிக் கொள்கிறேன்.'

வெள்ளிக் கிழமை காலையிலிருந்தே நிறைய முடிக்க வேண்டிய வேலைகளை முடித்திருந்தேன்.

திங்கள், ஜூலை 12, 2010

ரயில் பயணங்கள்

12ம் தேதி. மீண்டும் நான்கு நாட்கள் இடைவெளி. வெள்ளிக் கிழமை வாணியம்பாடி போவதற்கு காலையில் கிளம்பியது, சனிக்கிழமை வாணியம்பாடி போய் வந்த களைப்பில் தூங்கியது. ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாளுக்காக தூக்கம். இன்றைக்கு எழுத முடிகிறது. இரண்டு நாட்கள் காரணம் கிடைத்து விட்டது மூன்றாவது நாள் என்ன நடந்தது? அதாவது வியாழக்கிழமை?

அப்படியே தாமதமாக எழுந்தாலும் எழுதுவதில் கொஞ்ச நேரம் செலவிட்டால் என்ன?

வெள்ளிக் கிழமை காலையில் 4 மணிக்கு எழுந்து கொண்டேன். ஆறே காலுக்கு மத்திய ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படுகிறது. முந்தைய நாள் இரவு சொல்லும் போது காலையில் எழுப்பி விட அலாரம் வைக்க வேண்டுமா என்று அப்பா கேட்டார்கள். வேண்டாம் என்று சொல்லி படுத்து விட்டேன். வழக்கம் போல இரண்டு முறை எழுந்து பார்த்து விட்டு மூன்றாவது முறை 4 மணிக்கு எழுந்து விட்டேன். வீட்டிலிருந்து 5 மணிக்குப் புறப்பட்டால் சரியாக இருக்கும்.

பல் தேய்த்து விட்டு, கணினியில் மின்னஞ்சலைத் திறந்து விபரங்களைக் குறித்துக் கொண்டேன். வாடிக்கையாளர் தர வேண்டிய பண விபரங்களைக் குறித்துக் கொண்டேன். அதன் பிறகு அடுக்களையில் தூத்து ஒதுக்கி விட்டு அழுக்காகக் கிடந்த பாத்திரங்களையும் கழுவி கவிழ்த்து விட்டேன். அப்பா எழுந்து தேநீர் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். "எனக்கும் வேண்டுமா" என்றதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். பேருந்தில் போகும் போது வெறும் வயிற்றில் தேநீர் குடித்திருந்தால் கலக்க ஆரம்பிக்கும்.

குளித்து விட்டு வெளியில் வரும் போது 5 மணி. ஆப்பிள் பழங்களில் ஒன்றை வெட்டி நான்கு கால் பகுதிகளில் ஒன்றை அப்பாவிடம் கொடுத்து விட்டு சாப்பிட்டேன்.

ஆப்பிள் சாப்பிடும் முறையிலும் சில நுணுக்கங்கள். முழு ஆப்பிளைக் கடித்துச் சாப்பிட்டால், நடுவில் விதைகள் இருக்கும் பகுதியைச் சுற்றிச் சுற்றிக் கடிக்க வேண்டியிருக்கும். ஒரு கத்தியால் ஆப்பிளை அதன் மையம் வழியாக நான்காக வெட்டி, நான்கு கால் பகுதிகளிலும் நடுவில் விளிம்பாக நிற்கும் விதைப்பகுதியைக் கத்தியால் சீவி அகற்றி விடலாம்.

தோல் அகற்றக் கூடாது, வெட்டுவதற்கு முன்பு நன்கு கழுவிக் கொண்டால் போதும்.

ரோடு வரை எப்படிப் போவாய், வேணும்னா கொண்டு விட்டு விடுகிறேன் என்ற அப்பாவின் உதவலையும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். கறுப்பு கால்சட்டை, முந்தைய நாள் போட்டிருந்த சட்டை அணிந்திருந்தேன். கையில் குறிப்பேடு. பையில் காசு - கால் சட்டைப் பையில், சட்டைப் பையில் பேனாக்கள் மற்றும் பெயர் அட்டைகள்.

தாம்பரத்துக்குப் புறப்படும் போது வீட்டைப் பூட்டி சாவியை சன்னலுக்கு அருகில் வீட்டுக்குள்ளாக வைத்து விடுமாறு அப்பாவிடம் சொல்லி விட்டிருந்தேன். வீட்டுச் சாவி பையில் இல்லை, வண்டி சாவியும் இல்லை. பேருந்தில் சில்லறை கிடைக்குமா?

முந்தைய நாள் குடி தண்ணீர் கொண்டு வந்த கடைக்காரரிடம் அது வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அதற்கும் முந்தைய நாள் சொன்னது. கிளம்பி விடப் போவதால் தண்ணீர் வேண்டாம். தண்ணீர் காசு கொடுத்து வாங்குவதில்லை என்று கொள்கை முடிவு. அவர் கொடுத்திருந்த 20 ரூபாயைத் திரும்பத் தந்து விட்டார். 2 பத்து ரூபாய் தாள்கள். காலையில் புறப்படும் போது பேருந்துக்குக் கொடுக்க அவற்றையும் எடுத்துக் கொண்டேன்.

வீட்டிலிருந்து வெளியில் வந்து ராயலா நகர் சாலையில் நேராக திருவள்ளுவர் சாலை போகாமல், திரும்பி குறுக்குத் தெருவில் நுழைந்து கனரா வங்கி இருக்கும் முனையில் திருவள்ளுவர் சாலையில் சேர்ந்தேன். இந்த வழி கொஞ்சம் தூரம் குறைவாக இருப்பது போன்ற உணர்வு. அது கனரா வங்கியா, இந்தியன் வங்கியா? இந்தியன் வங்கி இவ்வளவு அருகில் இருக்கிறதென்றால், நமது வங்கிக் கணக்கை இங்கேயே மாற்றிக் கொள்ளலமே என்று கூடத் தோன்றியது.

விறு விறு வென்று நடந்து நெடுஞ்சாலை கண்ணுக்குத் தெரியும் திருப்பத்தை அடைந்தேன். இன்னும் சில நிமிட நடை. சாலையில் வரிசையாக மாநகர் பேருந்துகள் போவதாகத் தெரிந்தது. வெளியூர்ப் பேருந்துகளாகவும் இருக்கலாம். 'இந்த நேரத்தில் இத்தனை பேருந்துகள் போய் நாம் அதில் ஏறிக் கொள்ளா விட்டால் அடுத்த பேருந்து எப்போது வருமோ' என்று கொஞ்சம் கவலைப் பட்டுக் கொண்டே சாலையை அடைந்தேன்.

கடைசியாகப் பார்த்த ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கிளம்பிக் கொண்டிருந்தது. சாலையில் ஏறிய பிறகு நிறுத்தத்துக்குப் போக சில நூறு மீட்டர்கள் நடக்க வேண்டும். இரு சக்கர வண்டியில் ஒரு அம்மாவை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஒருவர் பேருந்து நிறுத்தம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவரை அங்கு இறக்கி விடும் திட்டம். இறக்கி விட்டு, வண்டியை நிறுத்தித் தானும் நின்று கொண்டார். ஏற்கனவே ஒரு பையனும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தான்.

சில நிமிடங்களுக்கு பேருந்துகள் எதுவும் வரவில்லைதான். ஏறுவதற்கு நிறைய பேர் சேரவும் ஆரம்பித்தார்கள். முதலில் வந்தது 21E, அடையார் வழியாக பாரிமுனை போகும் வண்டி. அதில் ஏறி கிண்டி போக வேண்டியிருக்குமோ? கிண்டியில் தாம்பரத்திலிருந்து வரும் பேருந்துகளும் கிடைக்கும். இல்லை என்றால் ரயிலில் கூட ஏறிப் போய் விடலாம். பின்னாலேயே 54 சொகுசுப் பேருந்து. வெள்ளை நிற விளக்குகள் பொருத்தி ஊர்வசி பாட்டில் வரும் பேருந்து போல மின்னும் பேருந்து.

ஏறி நடத்துனரிடம் 10 ரூபாய்த் தாளை நீட்டி சென்ட்ரல் சீட்டு கேட்டால் 10 ரூபாய்க்கே சீட்டு கொடுத்து விட்டார்! முன்புறமாக நகர்ந்து ஓட்டுனருக்கு பக்க வாட்டில் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். பேருந்து சீராக குலுங்கல்கள் இல்லாமல் ஓடியது. கிண்டி 21E, 21G ஒன்று அதை முந்த முயன்று தோற்றிருந்தது. 21 E நிரம்பி விட்டிருந்தது. சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, எல்ஐசி, போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் நிறுத்தச் சொல்லி ஒருவர் இறங்கிக் கொண்டார்.

ரயில் நிலையத்துக்குள் வரிசையாக பேருந்துகள் நின்று சாலை வரை வரிசை நீண்டிருந்தது. இந்தப் பேருந்து ஓட்டுனரும், அந்த நேரம் முன்பக்க இருக்கை ஒன்றில் உட்கார்ந்து விட்ட நடத்துனரும் நிலையத்துக்குள் போகாமல் சாலையிலேயே திருப்பி நிறுத்தினார்கள். கிட்டத்தட்ட பேருந்தில் எல்லோருமே இறங்கி விட்டோம். ஒன்றிரண்டு பேர் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள்.

இன்றைக்குக் காலையில் எழுந்திருக்கும் போது தெளிவுகள் நிறைய. நிவதி வேலைக்கு வாடிக்கையாளர்கள் அழைத்தால் சரியான அளவு பணம் தந்தால் மட்டும் செய்தால் போதும். இணைப்பு பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான தொழில் நுட்பப் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருந்தேன். போன 10 ஆண்டுகளாக அதற்கான அடித்தளங்களை வலுவாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். வேறு யாரும் இந்த வேலையை செய்து விடப் போவதில்லை. குறிப்பாக தோல் பதனிடும் நுட்பர்கள், தோல் பொருள் வடிவமைக்கும் நுட்பர்கள் தமது விபரங்களை பகிர்ந்து கொள்ள தேவையான மென்பொருள் சேவை.

நிலைய நுழைவாயிலுக்கு முன்பு, பேருந்திலிருந்து இறங்கிப் போகும் பாதையில் வரிசையாகக் கம்பித் தடுப்பு போட்டிருந்தார்கள். கம்பிக்கு அப்பால் சிற்றுந்துகள் உள்ளே வந்து ஆட்களை இறக்கிப் போக தடம். கம்பி ஓரமாக நடந்து ஹிக்கின்பாதம்ஸ் இருக்கும் வாசலுக்கு நேரெதிரில் இருந்த திறப்பில் போய் நிலையத்துக்குள் நுழைந்தேன்.

நுழையும் இடத்தில் ஒரு பாதுகாப்பு வாசல் அமைத்து அது வழியாகப் போகச் சொல்லி எழுதியிருந்தார்கள். வெளியில் வருவதற்கு திறந்த வாசல். இங்கே மக்கள் மாற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு வருடி உள்ள வாசலில் வெளியில் வருபவர்களும் அந்தப் பக்கமாக உள்ளே போகிறவர்களுக் நடந்து கொண்டிருந்தார்கள். நான் பாதுகாப்பு வாசலில் காத்திருந்து வெளியில் வருபவர்கள் கூட்டம் குறைந்த பிறகு நுழைந்து போனேன். காவலுக்குத் துப்பாக்கியுடன் நின்றிருந்தவர் எங்கோ பார்த்திருந்தார்.

ஹிக்கின் பாதம்சில் 10 ரூபாய் தாளை நீட்டி நாளிதழ் கேட்டால், சில்லறை இல்லை என்று அனுப்பி விட்டார். அருகில் ரத்னா கபேயில் காஃபி 11 ரூபாய் என்று எழுதியிருந்தார்கள். ரயில் நிலைய காபி 5 ரூபாய்க்குக் கிடைக்கும். ஹாட் சிப்சில் டோநட்ஸ் கூட நிறுத்தி விடவில்லை. நிலையத்துக்கு வெளியில் பலகை இயங்கவில்லை. ஆறு மணிக்கு மேல்தான் இயக்குவார்களாயிருக்கும்.

என் கையில் ரயிலுக்கான பயணச் சீட்டுக் கூடக் கிடையாது. தொலைபேசியில் வண்டி, பெட்டி எண், இருக்கை எண்களைச் சொல்லியிருந்தார். அவர் ஒரு வேளை வரா விட்டால் நான் பயணச் சீட்டு இல்லாமல் நிலையத்துக்குள் நுழைந்த தவறைச் செய்தவனாவேன். அவர் இன்னும் வந்திருக்காமல் கூட இருக்கலாம்.

நிலையத்துக்குள் பக்கவாட்டு வாசலைப் பார்த்திருந்த மின்னணு அறிவுப்புப் பலகையில் வந்து சேரும் ரயில்கள், புறப்படப் போகும் ரயில்களின் விபரங்களை வரிசைப்படுத்தியிருந்தார்கள். 6.15க்கு கோவை விரைவண்டி, 10வது நடைமேடை என்று போட்டிருந்தது. 10வது நடைமேடைக்கு நேரெதிரில்தான் நின்று கொண்டிருந்தேன். தடத்தில் ரயிலும் நின்று கொண்டிருந்தது.

மக்கள் பெட்டிகளில் ஏறி நிரம்பியிருக்க, நடைமேடையில் சுறுசுறுப்பான நடமாட்டங்கள், விற்பனைகள். ரயில் கிளம்ப இன்னும் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்கிறது. அதனால் எல்லாம் மந்த கதியில்தான் நகர்ந்து கொண்டிருந்தன.

எதிரில் எதிர்ப்பட்ட ஒரு உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் காபி ஒன்று வாங்கிக் கொண்டேன். காபி 5 ரூபாய் என்று எழுதிப் போட்டிருந்தாலும், 6 ரூபாய் என்று சொல்லி வாங்கிக் கொண்டிருந்தார். அதைப் பற்றிக் கேட்டால், 'இது பொடி போட்டு செய்வது, பாசஞ்சர் கம்ப்ளெயின்ட் செய்வாங்க என்றுதான் விற்றுக் கொண்டே இருக்கிறேன். வழக்கமான காபி வேலை செய்யவில்லை' என்று ஏதோ சப்பைக் கட்டு கட்டினார்.

வாங்கிக் குடித்துக் கொண்டே நடையைத் தொடர்ந்தேன். D5, 13 மற்றும் 14 இருக்கைகள். D5 வண்டிக்கு முன்பு உணவுப் பெட்டி அதற்கடுத்து இரண்டாவது பெட்டி D5. முதலாவது பெட்டி D4?

D5ல் ஒட்டியிருந்த முன்பதிவு விபரப் பட்டியலைப் பார்த்தால் பெயர்கள் இருந்தன. கொஞ்ச தூரத்தில் வரும் போது வெளியில் ஒருவர் நின்றிருப்பதைப் பார்த்து நமக்கு முன்பே வந்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டே நடந்து அருகில் பார்த்தால் அவர் இல்லை. இப்போது வண்டிக்குள் எட்டிப் பார்த்தால் ஏற்கனவே ஏறி உட்கார்ந்திருந்தார். நடைமேடைக்கு அப்பால் அந்தப் பக்கம் சன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தார். நானும் ஏறி அவருக்கு எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

வெளியில் பார்த்தால் அடுத்த நடைமேடையில் நின்றிருந்த வண்டியைக் கழுவி விட்ட தண்ணீர் வெளியில் வந்திருந்தது. மஞ்சளாக மனிதக் கழிவின் காட்சியும் வாடையும். சன்னலை கண்ணாடிக் கதவு இறக்கி விட்டுக் கொண்டேன். 'நிலையத்தில் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மக்களுக்குப் புரிவதில்லை' பூவண்ணனுன் தன்பக்க சன்னலை இறக்கி விட்டுக் கொண்டார். என் கையில் குடித்துக் கொண்டிருந்த காபி வேறு. அவருக்கு காபி வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் காபி, டீ சாப்பிடுவதில்லை என்று நினைவு.

சிறிது நேரத்தில் நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு ஒரு பெண் வந்து விட நான் எழுந்து பூவண்ணனுக்கு அருகிலான நடு இருக்கையில் அமர்ந்தேன். மூன்றாவது ஆள் யாருமில்லை. எதிரில் நடு இருக்கையில் ஒரு வயதான அம்மா. நான் உட்கார்ந்திருந் சன்னலோரம் ஏதோ அலுவலகத்துக்கு காட்பாடி போகும் அம்மா. காபியைக் குடித்து முடித்து கப்பைக் கையிலேயே வைத்திருந்தேன்.

கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண் எனது அருகில் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்தார். அவரது கணவர் இருக்கை தேடி வேறு இடம் போயிருக்கிறார் போலிருக்கிறது. ரயில் புறப்பட்ட பிறகுதான் உட்கார்ந்தார். வேறு யாராவது வந்து எழுப்பி விடக் கூடாதே என்ற தயக்கம். சில நிமிடங்களில் தொலைபேசியில் தகவல் வரை குழந்தையையும் பை ஒன்றையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

அந்தப் பக்க இருக்கையில் கைக்குழந்தையுடன் ஒரு அம்மா, அவரது அப்பா. அவர்கள் கைக்குழந்தைக்கும் சேர்த்து மூன்று இருக்கைகள் பதிவு செய்து விட்டிருந்தார்கள் என்று பட்டது.

நாங்கள் இரண்டு பேரும் பேச ஆரம்பித்தால் ஏதாவது இழுத்துக் கொண்டே போகும். சில நேரம் அவர் பேசுவதை நிறுத்த வேண்டியதாயிருக்கும். வண்டி நகர ஆரம்பித்த பிறகு சன்னலைத் திறக்கச் சொன்னேன். அதன் வழியாக கப்பை வெளியில் போட்டேன். நிலையத்தில் குப்பை போடக் கூடாது. நிலையத்துக்கு வெளியில் போடலாம். ரயில் பெட்டிக்குள் குப்பைத் தொட்டி கிடையாது. பின்னர் சாப்பிடப் போகும் போது அங்கு குப்பைத் தொட்டி வைத்திருந்தார்கள்.

பேச்சு எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தது. என்னென்ன பேசினோம் என்பது கூட நினைவில் இல்லை. நமது சேவைக்கான விதிமுறைகளையும் இவரிடம் சொல்ல ஆரம்பித்து விட்டேன். காசு கொடுக்காமல் எதுவும் வேலை செய்யப்போவதில்லை என்பதுதான் தகவல். இவர்களுக்காக வேலையை காசும் இல்லாமல் ஏன் செய்ய வேண்டும்.

நிவதி செய்து கொடுப்பது இணைய வழிச் சேவைகளுக்கான தயாரிப்புதான் என்றால் அந்தப் பணியின் மூலம் பணம் ஈட்டுவதையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆதாயம் இல்லாமல் அதில் ஏன் நேரம் செலவழிக்கிறோம்!

உணவு அறைக்குள் போய் சாப்பிட்டு வரலாம் என்று நானேதான் அவரை கிளப்பினேன். பொங்கல் வடை, பிரெட் ஆம்லெட், இட்லி வடை என்று விற்க ஆரம்பித்திருந்தார்கள்.

அரக்கோணத்தில் நிற்கும் போது ஒல்லியாக குள்ளமாக ஒரு இளம் பெண் ஏறினார். பின்முதுகில் பையோடு ஒருவர். அந்தப் பெண் கண்களால் பூவண்ணனின் தலையாட்டல் பெற்று எனக்கு அடுத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார். நாங்கள் நகர்ந்து அவர் வசதியாக உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஏற்கனவே ஒல்லி, இருக்கையின் நடுவில் மூன்றில் இரண்டு பகுதி இடம் மட்டும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

முதுகுப் பையுடனானவர் எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் எழுந்து போயிருந்த இடத்தில் அமர்ந்தார். அங்கு ஆள் வருகிறது என்று எச்சரித்ததும், அவர் வந்ததும் எழுந்து கொள்வதாகச் சொன்னார். 'ஹைதராபாத்திலிருந்து வருகிறேன். அதான் டயர்டா இருக்கு' என்று ஒரு பீட்டர் விட்டுக் கொண்டார். அந்தப் பெரியவர் வந்ததும் எழுந்து நின்றார்.

தாண்டிச் சென்ற பயணச் சீட்டு பரிசோதகர் ஒருவரை நிறுத்தி தன் கையில் வைத்திருந்த ஒரு தாளைக் காட்டினார். அவர் வருவார் என்று இவர் சொல்லி நகர முயல, விடாமல் கையில் திணித்து தன் கதையைச் சொன்னார். அவருக்கு இடம் கிடைத்திருந்த வண்டியைப் பிடிக்க முடியாமல் இதில் ஏறினார். இவருக்கு இருக்கை தர வேண்டும். ஆனால் இருக்கை எண் குறிப்பிடாத முன்பதிவு.

'எதுவானாலும் இந்த பெட்டிக்கான அலுவலர் வந்தால்தான் ஆகும்.' காத்திருந்தார். ஹைதராபாத்திலிருந்து ரயிலில் வந்து கொண்டிருக்கும் களைப்பு இவருக்கு. நாங்கள் யாரும் கண்டு கொள்ளாமல் உட்கார்ந்திருந்தோம்.

அலுவலர் வந்ததும், என்னருகில் உட்கார்ந்திருந்த பெண்ணை எழுந்திருக்கச் சொல்லி தான் உட்கார்ந்து இவருக்கு இருக்கையை எழுதிக் கொடுத்து விட்டார். அந்தப் பெண் மாதாந்திரப் பயணச் சீட்டு வைத்திருக்கிறார் போலிருக்கிறது. எழுந்து நின்று கொண்டு விட, அந்த ஹைதராபாத் மனிதர் உட்கார்ந்து விட்டார். அந்தப் பக்க இருக்கையில் கைக்குழந்தை தொட்டிலிலிருந்து விழித்து நடு இருக்கையில் உட்கார வைத்திருந்தார்கள். 'அங்கு உட்கார்ந்து கொள்ளுங்கள்' என்று அந்தப் பெண்ணுக்குச் சொன்னேன். 'பரவாயில்லை.'

'குழந்தைக்கு என்ன வயசாகிறது? ஒரு வயது இருக்குமா?' என்று ஹைதராபாத் மனிதர் கேட்டார். அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. 'குழந்தைக்காக ஒரு இருக்கையை ஏன் பிடித்தீர்கள்' என்று கேள்வி கேட்பதாக நினைத்து பதில் சொன்னார். 'அதுக்கில்லை, குழந்தையைப் பற்றி சும்மா கேட்டேன். நான் என் நீஸ் பார்க்கப் போகிறேன், அதான்' என்று இவர் வழிந்தார்.

'இப்படி ஆறு மாசத்துக்கு ஒரு முறை ஊருக்கு வருகிறோம் இப்படி கஷ்டப்பட்டு பயணம் செய்வதில் கடுப்பாகி விடுகிறது' என்று பேச ஆரம்பித்தார். ஊர் திருப்பத்தூர், எம்சிஏ படித்திருக்கிறார். ஹைதராபாத்தில் வேலை செய்கிறார். முன்பு இணையத் தளம் செய்து தரும் நிறுவனம் சொந்தமாக நடத்தியிருக்கிறார். 'உங்களுக்கு ஏதாவது நிரல் உருவாக்கம் தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் செய்து தர முடியும்.'

புதன், ஜூலை 07, 2010

வார்ப்புகள்

3ம் தேதிக்குப் பிறகு இன்றைக்குத்தான் எழுத்து. நேற்றைக்கு எழுத உட்காரும் போது வேறு எங்கெங்கோ போய், படிக்க ஆரம்பித்து எழுத்தும் விட்டுப் போய் மற்ற திட்டங்களும் மாறிப் போய் விட்டன. ஞாயிற்றுக் கிழமை நடைப்பயணம் குறித்து எழுதிக் கொண்டிருந்தேனோ? சனிக் கிழமை என்ன நடந்தது?

காலையில் தரை தூப்பது, துடைப்பது, குளிப்பது எதுவும் நடக்காமல் பாதியில் போய் இந்து நாளிதழும் பால் கவரும் வாங்கி வந்து கொண்டேன்.

இணைய வழங்கியில் கடவுச் சொல் மாற்றுதல், நிரல் மேலாண்மை என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். இணையப் பயன்பாடுகளில் என்னென்ன கருவிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதி பதிந்தேன்.

இரவில் எழுந்து உட்கார்ந்திருக்கும் போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாக இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை வரித் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் திரும்பப் பெற்றதைக் குறிப்பிட்ட பிபிசி தமிழ் பகுதியில் செய்தி ஒன்று வந்திருந்தது. அதைக் குறிப்பிட்டு நிறவெறி தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிராக செய்தது போல பொருளாதார, அரசியல், சமூகத் தடைகளை இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று பதிந்து வைத்தேன்.

அரசியல் சூழலில் ஈழத் தமிழரை ஆதரித்தாலே தீவிரவாதி என்று சிறையில் வைத்து விடும் பயம் நிலவுகிறது. அஞ்சி அஞ்சி சாவார், அவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே.

மதியத்துக்கு மேல் வீட்டை ஒதுங்க வைத்து பாத்திரங்களைக் கழுவி விட்டு சாப்பிடலாம் என்று இடத்தை விட்டு நகராமலேயே திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது தொலைபேசி. நிறுவனத்துக்கு உடனேயே போய் பார்க்க முடியுமா என்று கேட்டார்களாம். அவர்களுக்கான விற்பனை ஆவணத்தை இறுதிக் குறிப்புகள் சேர்த்து அனுப்பி வைத்தேன்.

கால் சட்டையை தேய்த்து உடை மாற்றி அடுத்த 20 நிமிடங்களில் தயாராகக் கிளம்பி விட்டேன். அனுப்பிய கோப்பை வெளியில் எடுத்துப் போய் அச்செடுத்துத் தயாராக வைத்திருந்தார். அவர் வீட்டில் வண்டியை விட்டு விட்டு 15F பேருந்தில் ஏறி போனோம். ஈவிகே சம்பத் சாலை, தினத்தந்தி அலுவலகத்துக்கு அருகில் இவர்கள் நிறுவனம்.

நிறுவன இயக்குனரைச் சந்தித்து பேசினோம். விலை பேரம் பேசினார். உடனேயே உறுதி தர விரும்பவில்லை, ஒரு வாரத்தில் சொல்கிறேன் என்று சொன்னார். மற்ற வாடிக்கையாளர்களிடம் பேசினாராம். நல்லபடியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். திட்டப்பணி முடித்த பிறகான பராமரிப்பில்தான் நாம் அதிகம் காசு கேட்பதாகச் சொன்னார்களாம். ஒரு நாள் போய் வேலை பார்க்க கட்டணம் சொன்னதும் அவ்வளவு தர முடியாது என்றார். 2 ஆண்டுகளுக்கு சேவை அளிக்கிறோம் என்று ஒத்துக் கொண்டோம்.

இன்னும் பேரம் பேசுவதில் இறங்குவார்கள் என்று தோன்றியது. எப்படியோ பணத்தைக் கையில் கொடுத்தால் வேலையை ஆரம்பிப்போம். யாருக்காகவும் ஆதாயம் இல்லாமல் நாம் வேலை செய்ய வேண்டாம் என்று பேசிக் கொண்டு வந்தோம். திரும்பும் போதும் அதே 15F.

வீட்டுக்கு வந்ததும் தூத்து, தரை துடைத்து, பாத்திரம் கழுவி விட்டு தியானத்தில் உட்கார்ந்தேன். அதன் பிறகு சமையல், சோறு, பருப்பு, வெங்காயத்தை வெட்டிப் போட்டு ஒரு குழம்பு. சாப்பிட்டு முடிக்கும் போது ஒன்பதே முக்கால் ஆகி விட்டிருந்தது. தூக்கம் கண்களை சுழற்றியது.

இதை முடித்ததும் வீட்டைத் தூத்துத் துடைக்க வேண்டும், ஊற வைத்திருக்கும் துணிகளை துவைத்துப் போட வேண்டும். இணையத் தளத்தை மறுவடிவமைக்கும் வேலையை செய்ய வேண்டும்.

சனி, ஜூலை 03, 2010

தேறிய குறிப்புகள்

நேரம் 7 மணி. 4.40க்கு விழிப்பு வந்து 5.40 வரை எழுந்திருக்கவில்லை. இரவும் சீக்கிரமாகவே தூங்கப் போய் விட்டேன். இப்படி சீக்கிரமாகத் தூங்கப் போவதில் சிக்கல்கள் உண்டு. இயல்பாக உடம்பு இளைப்பாறத் தேவைப்படும் தூக்கம் தூங்கி முடித்ததும் எழுந்து விட்டால் புத்துணர்வோடு செயல்படலாம். அதற்கு மேல் தூங்க முயற்சித்து அரைகுறையாகத் தூங்கி எழுந்தால் தூங்காதது போன்ற களைப்பு இருக்கிறது. இது என்ன காரணத்தால் என்று புரியவில்லை. 8 மணிக்குத் தூங்கி விட்டால், இயல்பான தூக்கம் முடிந்து 2 மணிக்கு விழிப்பு வரலாம். மணி 2தானே ஆகிறது என்று மறுபடியும் தூங்க முயற்சித்தால் சோம்பல் குடியேறி விடும்.

அதுதான் இன்றைக்கு நடந்திருக்கிறது. வார இறுதி என்ற உணர்வினாலோ தெரியவில்லை, வெள்ளிக் கிழமை மாலைகளும், சனிக்கிழமைகளும் சோதனை நாட்களாகவே அமைந்து விடுகின்றன.

துடிப்பாக எனக்கு வேண்டியதை சாதிக்கும் முனைப்பு என்னிடம் கிடையாது. செய்வதை செய்து கொண்டே போவது, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பது. நிகழ்வதை ஏற்றுக் கொள்வது என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்தத் துடிப்பு வந்து விடுவதாகத் தோன்றவில்லை.

1. எப்போதும் உண்மையாகவும், அடுத்தவரிடம் நேர்மையாகவும் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
2. ஒவ்வொரு நாளையும் பயனுள்ள நாளாகக் கழிக்க வேண்டும். பொருட்களையும் மற்ற அமைப்புகளையும் முறையாகப் பேணிக் காக்க வேண்டும்.
3. எந்த உயிரையும் தன்னுயிர் போல பேண வேண்டும்.

இதைத் தவிர வேறு என்ன வழி காட்டல் தேவை?

அடுத்த ஒரு மணி நேரத்தை எப்படிக் கழிக்க வேண்டும் என்பதற்கு இரண்டாவது கோட்பாடு விடை கொடுக்கிறது. என்ன தொழிலில் இறங்க வேண்டும் என்பதற்கு 1ம் 2ம் விடை கொடுக்கின்றன.

இவற்றை வழிகாட்டியாகக் கொண்டு நாட்களை கழிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எப்படி செலவிடப்பட வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த ஒரு மாதம், அடுத்த ஒரு ஆண்டு, அடுத்த 5 ஆண்டுகள், அடுத்த 10 ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன சாதித்திருக்க வேண்டும் என்று திட்டம் வேண்டும்.

அதுபடி நடக்க வேண்டியதுதானே? இந்தத் திட்டங்களுக்கு உதவும் பணிகளை எல்லாம் செய்ய வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு உதவாத பணிகளை செய்யக் கூடாது. வழிகாட்டல் இன்னும் எளிதாகி விட்டிருக்கிறது.

எட்டு மணிக்கு எழுத்தை முடித்து விட்டு, வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும். குளிர்ப்பெட்டியைத் துடைக்க வேண்டும். கழுவ வேண்டிய பாத்திரங்கள் பெரிதாக இல்லைதான். இதை எல்லாம் முடிப்பதற்கு ஒன்பதரை மணி ஆகி விடும். குளித்து விட்டு பால் வாங்கி வந்து காய்ச்சிக் குடிக்க வேண்டும். காலை உணவுக்கு என்ன செய்வது? உப்புமா செய்யலாம்.

அதன் பிறகு அலுவலகத்துக்குத் தொலைபேசி காசோலை தயாராகி விட்டதா என்று கேட்க வேண்டும். மாலை 5.30க்கு வீட்டுக்கு வருவதாகத் திட்டம்.

நமது இணையத்தளத்தை மறுவடிவமைப்பதற்கான வேலையை ஆரம்பிக்க வேண்டும். பிஎச்பி include கோப்புகளை php5 அமைப்புக்கு மாற்ற வேண்டும். ஜாவாஸ்கிரிப்டு நிரல்களை jquery வடிவிலும், பயனர் இடைமுகத்தை அஜாக்ஸ் மூலமாகவும் மாற்றியமைக்க வேண்டும். இருக்கும் பக்க வடிவமைப்பை முதலில் மாற்றி விட்டு தொழில் நுட்பத்தை வரையறுத்துக் கொள்ளலாம். பக்க வடிவமைப்பு மாற்றுவதை அடுத்தக் கட்டமாகச் செய்யலாம்.

வீட்டில் சரி செய்ய வேண்டியவை?

1. UPS பொருத்துவது
2. தொலைக்காட்சி பெட்டியை சரி செய்வது
3. கணினிகளை சரி செய்வது
4. பொருட்களை அடுக்கி வைக்க அலமாரிகள் வாங்குவது

jquery, ajqx, இன்றைக்கு php5 என்று புத்தகங்களை தேடி தகவிறக்கி வைத்துக் கொண்டுள்ளேன். இந்த மூன்றையும் இணைத்து நமக்குத் தேவையான அடுத்தக் கட்ட பயன்பாடுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

பக்கத்து வீட்டில் வான்கோழி வளர்க்கிறார்கள். உறுமிக் கொண்டே இருக்கின்றன. காலை வேளை குழந்தைகள் தயாராகும் ஓசைகள் வீடுகளிலிருந்து கேட்கின்றன. நேற்றைக்கு எட்டிப் பார்த்தான். காலையில் பள்ளிக்குப் போகும் சத்தம் கேட்டது. மாலையில் வரவில்லை. காலையில் பள்ளிக்குப் போகும் போது கை காட்டி விட்டுப் போனான். பாசமான பையன் என்று நினைத்துக் கொண்டேன்.

வெள்ளி, ஜூலை 02, 2010

நகரும் மணற் குவியல்கள்

நேரம் 5 மணி 32 நிமிடங்கள். நேற்றை விட சரியாக ஒரு மணி நேரம் தாமதம். சில காரணங்கள் உண்டு.

தூங்கப் போகும் போது 11.30 தாண்டி விட்டிருந்தது. பகலில் கணிசமான நேரம் தூங்கியிருக்கவே, இதனால் பாதிப்பு இல்லாமல் காலையில் 4 மணிக்கு எழுந்து விடலாம் என்று முடிவு செய்தேன். கொஞ்ச நேரம் தியானமும் செய்து விட்டுத் தூங்கலாம் என்று உட்கார்ந்தால், வாளியில் போட்டு வைத்திருந்த சோப்புத் துண்டுகள் நினைவுக்கு வந்தன.

துணி துவைக்கும் சோப்பு வாங்கினால் கரைந்து கரைந்து கடைசி ஆகும் போது துண்டு துண்டாக உடைந்து போக உடைந்த துண்டுகளை எல்லாம் ஒரு சோப்பு டப்பாவில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தேன். அவற்றை எப்படிப் பயன்படுத்துவது? முன்பு ஒரு முறை அவற்றை தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து பாத்திரம் தேய்க்கும் சோப்புக்கு மாற்றாக பயன்படுத்தினேன். பாத்திரம் கழுவும் போது நுரை அதிகமாக வருவது கொஞ்சம் சிரமம்தான்.

தரையில் விரித்திருக்கும் மிதியடிகளை துவைத்துப் போட வேண்டும். இந்த சோப்புத் துண்டுகளைத் தண்ணீரில் கரைத்து அவற்றையும் ஊற வைக்கலாம் என்று முடிவு செய்து, காலையிலேயே சோப்புத் துண்டுகளை எல்லாம் குறைவாகப் பயன்படுத்தும் குளியலறையில் போன வாரம் கழுவி புதிது போல ஆக்கி வைத்திருந்த வாளியில் ஊற வைத்திருந்தேன். இப்போது ஊறிக் கரைந்து போய் இருக்கும். அவற்றில் தரை விரிப்புகளை ஊற வைக்க வேண்டும்.

எழுந்து முன்னறை விரிப்பு, முன்னறை குளியலறை விரிப்பு, சமையலறை விரிப்பு மூன்றையும் ஊற வைத்து விட்டேன். இந்த குளியலறையின் விரிப்பை விட்டு வைத்தேன். அவ்வளவு அழுக்காகவில்லை என்பது ஒரு காரணம், எல்லாமே காயப் போட்டு விட்டால், தரையில் கால் துடைத்துக் கொள்ள என்ன செய்வது என்ற தற்காப்பு இன்னொரு பக்கம்.

தொடர்ந்து தியானம் செய்து விட்டுத் தூக்கம். தூக்கம் நன்றாகவே வந்தது. இடையில் விழிப்பு - 3.40. 20 நிமிடங்கள் தூங்கி எழுந்திருக்கலாம் என்று படுத்தால் 4.50 ஆகி விட்டிருந்தது அடுத்த முறை எழுந்து மணி பார்க்கும் போது. கழிவறைக்குள் போனால் இரண்டு கரப்பான் பூச்சிகள் உறவாடிக் கொண்டிருந்தன. நேற்றைக்கு இரவில் தூங்கப் போகும் போதுதான் இரண்டை பிடித்து வெளியில் போட்டேன்.

முன்பெல்லாம் துடைப்பத்தில் அழுத்திப் பிடித்து அல்லது வேகமாகத் தள்ளி கதவுக்கு வெளியில் தூக்கி எறிவேன். நிறைய ஓட வேண்டியிருக்கும். இப்போது கையில் கிடைத்ததும் துடைப்பத்தால் ஒரு அடி. செத்தது போலக் கிடப்பதில் இந்த கரப்பான் பூச்சிகளுக்கு நிகரே இல்லை. அதன் பிறகு எளிதாகத் தள்ளித் தள்ளிக் கொண்டு போய் வெளியில் விட்டு விடலாம். வாய்ப்புக் கிடைத்ததும் மறுபடியும் புறப்பட்டு ஓடுவதில்தான் குறி அவைகளுக்கு.

இரண்டையும் பிடித்து வெளியில் விட்டு பல் தேய்த்து எழுத உட்காரும் முன்பு ஊற வைத்திருந்த காலடி விரிப்புகளை அலசிக் காயப் போட்டு விடலாம் என்று உத்தேசம். வீட்டு வேலைகளை எல்லாம் முடிக்கும் போது அவற்றில் நீரும் ஓரளவு வடிந்திருக்கும். எடுத்து தரையில் அதனதன் இடத்தில் விரித்து விடலாம். இல்லை என்றால் நடமாட ஆரம்பித்ததும் வீடு முழுவதும் காலடித் தடங்கள், பாதத்தில் எடுத்து வரும் அழுக்குத் தடங்கள் ஆகி விடும்.

ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றுக் கட்டிக் காத்து, சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமானால் முழு நேரம் அதிலேயே மூழ்கியிருக்க வேண்டும். எங்க அப்பாவைப் பெற்ற அம்மா எப்பவுமே சும்மாவே இருக்க மாட்டார் என்று பேச்சு உண்டு. வயதாகி, கீழே விழுந்து முதுகு வலி வந்த பிறகு கூட இருந்து கொண்டே தரை தூப்பது, துடைப்பது என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார். எல்லா வேலையும் முடித்து விட்டார் என்று நினைத்தால், டப்பாவிலிருந்து உளுந்தை சுளவில் கொட்டி கல் பார்க்க ஆரம்பிப்பார்.

வீட்டு வேலையும் சரி நிறுவன வேலையும் சரி இப்படி வரையறுக்க முடியாமல் நீண்டு கொண்டே முடிக்க முடிக்க வந்து கொண்டே இருப்பதுதான். தினமும் காலையில் 2-3 மணி நேரங்களும் பகல் முழுவதும் பாத்திரங்களை அவ்வப்போது கழுவும் நேரமும் செலவழித்தாலும், இடைவிடாமல் அடுத்த ஒரு மாதம் உழைப்பதற்குத் தேவைகள் இருக்கின்றன வீட்டில். குடும்பங்களில் குடும்பத் தலைவி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதால் ஆண் பொருள் சம்பாதிக்கும் முழுப் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி முழுப் பொறுப்பை எடுத்த யாருக்கும் ஓய்வெடுக்கவோ, பொழுது போக்கவோ நேரம் இருக்கவே முடியாது.

நிறுவனம் மேலாண்மை செய்வதிலும் அதே கதைதான். பிஎஸ்ஜி லெதர்லிங்கில் முதல் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆரம்பித்த அடித்தளங்களிலேயே கட்டிடம் கட்டிக் கொண்டே போய்க் கொண்டிருந்தோம். அடுத்த 5 ஆண்டுகளில் மென்பொருள் தொழில் நுட்பம் நாம் ஆரம்பித்த சூழலான இணையத்தை மையமாகக் கொண்டு வேகமாக மாறி விட்டிருந்தது. நாம் அதையெல்லாம் உள்ளெடுத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு மேலாளர் 5-6 பேரைத்தான் நிர்வகிக்க முடியும் என்று சொல்வார்கள். வேலை வாங்குவது மட்டுமில்லை, அவர்களுக்காக யோசித்து, அவர்களை ஒருங்கிணைத்து சரியான திசையில் நிறுவனத்தின் நோக்கங்களை செலுத்தவும் இவர் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்மணி ஒரு வீட்டைத்தான் திறம்பட நிர்வகிக்க முடியும். இரண்டாவது வீட்டை நிர்வகிக்க வழி வேண்டுமானால் காட்டலாம். அதே போல நிறுவனத்தில் அந்த மேலாண்மை வட்ட வரம்பை விட எண்ணிக்கையை அதிகப் படுத்த முனையும் போது வெவ்வேறு பிரிவுகளில் தன்னைப் போலவே முழு அர்ப்பணிப்புடன் எடுத்த பொறுப்பில் ஆழ்ந்து விடும் மற்ற மேலாளர்களை நியமித்து பொறுப்பை அவர்களிடம் கொடுத்து மேற்பார்வையிடும் முறைமை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தில் இறங்கியிருந்தால், சந்தைப் படுத்தல் சறுக்கியிருக்கும், சந்தைப்படுத்தலில் ஈடுபடும் போது சேவை அளித்தல் சறுக்க ஆரம்பித்தது. சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் அத்தகைய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கும், பொது நிர்வாகத்துக்கும் பொறுப்பானவர்கள் உருவாகியிருக்கவில்லை . அதை உணர்ந்து நான் அவற்றிலேயே மூழ்கியிருந்திருக்க வேண்டும். திரும்பிப் பார்க்கும் போது தெளிவும் கருத்தும் தெரிகிறது. அந்தந்தக் கட்டங்களில் தேவையானது என்று படுவதைத்தான் செய்து கொண்டிருந்தோம்.

Rich Internet Applications என்ற Wrox பதிப்பக புத்தகத்தையும் தகவிறக்கிக்கொண்டேன். மென்பொருள் உருவாக்கம், வினியோகம், பயன்படுத்தலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களைப் பற்றிப் பேசும் புத்தகமாக இருந்தது. அஜாக்சை இன்னும் முறையாகப் படித்துக் கொள்ள வேண்டும். jquery in action புத்தகத்தைப் புரட்டி முடித்து விட்டேன். இன்னும் விளக்கமாக படிக்க வேண்டும். எடுத்துக்காட்டுகளை எழுதி செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.

பிஎச்பியை விட்டு விட்டு பைதான் அல்லது ஜாவா பக்கம் போகலாமா என்றும் ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது. இருக்கும் வாடிக்கையாளர்கள் எல்லாம் தந்தது வரை போதும் என்று நகர்ந்து விட்டிருக்க நம்மைக் கட்டிப் போடுவதற்கு எதுவும் இல்லைதான். இதுவரை செய்த வேலைகளை எல்லாம் திரும்பச் செய்யும் பணியில் கவனமாக இருக்க வேண்டும். இணைய வழி சேவை பயன்பாடுகள் என்று நகரும் போது இந்த மாறுதல்கள் பெரிய பணியாக இருக்காது.

இரண்டு பயன்பாடுகளாக உருவாக்கச் சொல்கிறார்கள். ஒன்று பயனர் பயன்படுத்துவதற்கு, இன்னொன்று பயனர் பயன்படுத்துவதை அலசி அதை மேம்படுத்துவதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான பயன்பாடு. இரண்டையும் ஒரே நேரத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நேற்று காலையில் வேலைகளை முடித்து விட்டு வாங்கி வந்திருந்த பாலையும் குடித்து விட்டேன். பழையது முழுவதையும் தயிர் ஊற்றிச் சாப்பிட்டு முடித்தேன். தொலைபேசி முந்தைய நாள் போன இடத்தில் என்ன நடந்தது என்பதையும் அடுத்த நாள் போவதையும் பேசினேன். 'நானே அங்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தேன்' என்றார். '

காசு கொடுக்காமல் system study எல்லாம் நான் போகப் போவதில்லை என்று அவர்களிடம் சொல்லியிருந்தேன். என்னைப் பொறுத்த வரை காசு தராத யாருக்கும் இனிமேல் வேலை பார்க்கப் போவதில்லை என்று முடிவு. கொஞ்ச நாள் தாக்குப் பிடித்து விட்டால் உருவாக்கத் திறமையில் பணம் சம்பாதித்துக் கடன்களையும் தீர்த்து விடலாம், முதலீடு செய்தவர்களையும் திருப்திப் படுத்தி விடலாம்.

கப்பலை கை விட்டு விட்டு, தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு சின்ன படகில் இறங்கிக் கொள்ளலாம். அல்லது கப்பலை நிர்வகிக்க எளிமையான முறைகளை வகுத்துக் கொள்ளலாம்.

வியாழன், ஜூலை 01, 2010

கடன்பட்டார் நெஞ்சம்....

நேரம் நான்கு மணி முப்பத்தி இரண்டு நிமிடங்கள். ஜூலை மாதம் 1ம் தேதி, 2010ம் ஆண்டு. சரியாக 4 மணிக்கு எழுந்து நின்று விட்டேன். 3.40க்கு எழுந்து மணி பார்த்து விட்டு திரும்பப் படுத்து விட்டு அடுத்தது எழுந்து பார்க்கும் போது மணி 4.

நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கத் தாமதமாகி விட்டிருந்தாலும் மற்ற வேலைகளை பழுதில்லாமல் செய்ய முடிந்தது. ஒரு மணி நேரம் எழுதி முடித்த பிறகு வீட்டை தூய்மைப் படுத்தும் வேலை. துணிகள், பாத்திரங்கள், புத்தகங்கள் ஒழுங்கு படுத்திய பிறகு, துணியை எடுத்து மேசைகள், நாற்காலிகளை எல்லாம் தூசி தட்டினேன். அதன் பிறகு அதே துணியை தண்ணீரில் அலசி, ஈரத் துணியால் எல்லாவற்றையும் துடைத்து தூய்மைப் படுத்தினேன்.

துணி துவைக்க வேண்டியதோ, பாத்திரம் கழுவ வேண்டியதோ பெரிதாக இருக்கவில்லை. தரை தூத்து வாரி, அதன் பிறகு துடைத்து விட்டுக் குளிக்கப் போக வேண்டியதுதான். இவ்வளவுக்கும் ஒன்றரை மணி நேரம் ஓடி குளித்து முடித்து பார்க்கும் போது நேரம் ஏழரை தாண்டி விட்டிருந்தது. கடைக்குப் போய் பால் வாங்கும் போது டெக்கான் குரோனிக்கிளும் வாங்கிக் கொண்டேன். ஓமர் அப்துல்லாவின் பேட்டியின் இரண்டாவது பகுதியைப் படிக்க வேண்டும். நடுப்பக்கத்தில் அது இருக்கவும் செய்தது. முதல் பக்கத்தில் காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, மேலும் உயிர்ப்பலிகள் என்று செய்தி.

தலையங்கத்தில் ஆந்திரா /கர்நாடகா எல்லையில் பெல்லாரியில் இரும்புத் தாது சுரங்கங்களை வைத்துக் கொண்டு அதிகாரம் செய்து கொண்டிருக்கும் ரெட்டி சகோதரர்களை கண்டித்து எழுதியிருந்தார்கள். அவர்களைத் தட்டிக் கேட்கும் நீதிபதிகள், அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு விடுகிறார்கள். கிட்டத்தட்ட திரைப்படங்களில் வரும் வணிக/அரசியல் வாதிகள் போல செயல்படுகிறார்கள் என்று தோன்றியது. உலகச் சந்தையில் இரும்புத் தாதுவின் விலை வெகுவாக ஏறி விட்டிருக்கிறது. இவர்கள் அதைப் பயன்படுத்தி பணத்தைக் குவிக்கிறார்கள்.

குடிக்கத் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு, இட்லிக்கு துவையல் அரைக்கும் வேலை. தேங்காய், இரண்டு பச்சை மிளகாய்கள், இரண்டு பல் வெள்ளைப் பூண்டு, சிறிதளவு புளி, உப்பு, கூடவே சிறிதளவு இஞ்சியும் சேர்த்துக் கொண்டேன். திங்கள் கிழமை காலையில் வாங்கிய மாவில் பாதி மீதியிருந்தது. இதை இட்லி ஊற்றிக் கொள்ள வேண்டும். செவ்வாய்க் கிழமை செய்த சோற்றில் பெரும்பகுதியில் தண்ணீர் ஊற்றி வைத்தது இருந்தது. அதை மதிய உணவுக்கும், செவ்வாய்க் கிழமை மாலையில் பிசைந்த சப்பாத்தி மாவில் மீதியிருந்ததை மாலை உணவுக்கும் வைத்துக் கொள்ளலாம். இவை மூன்றுக்கும் துணைப் பொருளாக துவையல்.

12 இட்லிகள் ஊற்றும் தட்டில் ஊற்றிய பிறகு மாவு இன்னும் மீதி இருந்தது. அதை வழித்து இன்னொரு சின்னக் கிண்ணத்தில் ஊற்றி குளிர் பெட்டியில் வைத்துக் கொண்டேன். சாப்பிட்டு விட்டு பணி மேசை. இன்றைக்கும் javascript, jquery தொடர வேண்டும். முதலில் நமது இணையத் தளத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இணையத் தளத்தின் நோக்கம் என்ன, அது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டேன். தொடர்ந்து jquery புத்தகத்தின் அடுத்தடுத்த பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே மின்சாரம் தடைப்பட்டு திரும்ப வந்தது. 12 மணிக்குப் போனது 12.30க்குத் திரும்பியது. 2 மணி வாக்கில் போய் மூன்றரைக்குத்தான் திரும்பி வந்தது.

இணையக் கணினியில் git சில கட்டளைகள் வேலை செய்யவில்லை. perl வடிவமைப்பில் ஏதோ மாறுதல்கள் காரணமாக பிழை காண்பித்தது. அதற்கான நுட்ப சேவை விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து மின்னஞ்சல் உரையாடலும் நடந்தது. அவர்கள் நேரம் முடிந்ததும் (அமெரிக்க நேரம் என்று நினைக்கிறேன்), பிரச்சனை சரியாகமலேயே மின்னஞ்சல் பரிமாற்றம் நின்றிருந்தது. இன்றைக்கு சரியாகியிருக்க வேண்டும்.

மூன்றரைக்கு தொலைபேசி விற்பனை சந்திப்பில் காண்பிப்பதற்கு இணையத்தில் வைத்திருக்கும் மாதிரியைத்தான் காட்ட வேண்டும், அதை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுமாறு சொன்னார். EDIலிருந்து அழைத்து 16ம் தேதி சந்திப்பில் நாம் கலந்து கொள்வதை உறுதி செய்தார்கள். நிவதி குறித்து பேச வேண்டும்.

இடையிடையே வலைப்பதிவுகளில், கூகுள் பஸ்சில் வரும் கருத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எரிபொருள் விலை உயர்வு, கார்பொரேட் நிறுவனங்களின் செயல்பாடு என்று விவாதங்கள். தமிழ் பதிவர் பட்டறைக்கான மடற்குழுவிலும் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. வலைப்பதிவர் பட்டறை என்று நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பேர் தமது காசை செலவழித்து பங்கேற்றுக் கொண்டதற்கும், வேறு ஏதோ வழியில் வந்த பணத்தைச் செலவழித்து ஆதாயம் தேடி வந்து போன நிகழ்வுகளுக்கு உள்ள வேறுபாட்டை சுட்டிக் காட்டி ஒரு மடலும் எழுதினேன்.

மாலைக்குள் jquery அஜாக்சு கையாளுதல் வரை வந்து விட்டது. கிட்டத்தட்ட எல்லாமே ஒரு சுற்று அடித்தாகி விட்டது.

5 மணிக்கு மேல் சப்பாத்தி போட்டு - நான்கு சப்பாத்திகளும் ஒரு குட்டி சப்பாத்தியும் வந்தன - மீதியிருந்த தோசை மாவையும் ஊற்றி சாப்பிட்டு முடித்தேன். தொட்டுக் கொள்ள துவையலும், நெல்லிக்காய் ஊறுகாயும்.

முரட்டுக் காளை என்ற 1980களின் ரஜினிகாந்த், ஏவிஎம், எஸ் பி முத்துராமன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியில் ஜல்லிக் கட்டு, தொடர்ந்து ஒரு பாட்டு, பண்ணையாருடன் பகைமையை மூட்டி விடும் கணக்குப்பிள்ளை என்று கதை வளர ஆரம்பித்தது. பண்ணையாரின் தங்கை காளையனைக் காதலிக்கிறாள். இருவருக்கும் திருமணம் பேசும் போது, தனது தம்பிகளை உத்தேசித்து அந்த உறவை நிராகரித்து விடுகிறான் காளையன். அத்தோடு போதும் என்று நிறுத்திக் கொண்டேன்.

இன்னொரு படமாக மைக்கேல் மதன காமராஜன். பெயர்கள் போடும் போதே நான்கு குழந்தைகள் பிறந்து பிரிந்த கதையை இளையராஜா பாட்டில் சொல்லி பின்னணி காட்சிகளும் ஓடுகின்றன. 4 குழந்தைகளாகப் பெற்ற அம்மாவிடமிருந்து குழந்தைகள் கொல்ல எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு குழந்தை திருடனின் மனதை மாற்றி மைக்கேல் என்ற பெயரில் வளர்கிறது. ஒரு குழந்தை தனது தந்தியிடமே அனாதை என்ற முத்திரையோடு போய்ச் சேருகிறது - பெயர் மதன கோபால் என்ற மதன். ஒரு குழந்தை பாலக்காடு சமையல் காரரிடம் காமேசுவரன் என்ற பெயரில் வளர்கிறது. நான்காவது குழந்தை ராமகிருஷ்ண ராஜூ என்ற பெயரில் வளர்கிறது.

மதனின் தந்தையை சூழ்ச்சி செய்து கொல்கிறார்கள், சொத்தைக் கைப்பற்றத் துடிக்கும் தந்தையின் தம்பியும் அவரது மகன் நாசரும். கமல் சரியான நேரத்தில் லண்டனில் இருந்து வந்து தந்தை எழுதியிருந்த உயிலைக் காட்டி சொத்துக்களை ஆள ஆரம்பிக்கிறார். மைக்கேலின் தந்தை கள்ள நோட்டு அடித்து, மைக்கேல் காவல் துறைக்கு அல்வா கொடுத்து விட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லும் போது காவல் துறை துரத்த தப்பி ஓடும் போது தீ விபத்தை உருவாக்குகிறார்கள்.

அந்தத் தீ விபத்தில் ஓவியரான குஷ்புவின் கண்காட்சி பாதிக்கப்பட தீயில் சிக்கிக் கொள்ளும் குஷ்புவை ராஜூ தீயணைப்புப் படைவீரராகக் காப்பாற்றி ஜொள்ளு விட ஆரம்பிக்கிறார். அவர் வீட்டுக்குத் திரும்பும் போது கடன் கொடுத்த பட்டாணி பணம் கேட்டு நெருக்க பொதியில் இருந்த கருவாட்டுத் துண்டுகள் தெருவில் வீசி எறியப்படுகின்றன.

காமேசுவரன் கல்யாணச் சமையலுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு போகும் போது அவர் மேல் கருவாட்டுத் துண்டுகள் விழுகின்றன. டெல்லி கணேஷிடம் கணக்குக் கொடுக்கும் போது சட்டைப் பையிலிருந்து ஒரு கருவாட்டுத் துண்டு எடுக்கப்பட தவறி சாம்பாரில் விழுந்து, அதை பரிமாறவும் செய்கிறார்கள். அதனால் எதுவும் குழப்பம் வந்து விடக் கூடாது என்று ஓடும் போது கையில் கிடைத்ததை லவட்டிச் செல்லும் பாட்டி ஒருத்தி, அந்தப் பொருட்களை திரும்ப வைத்து விட முயலும் பேத்தியாக ஊர்வசி. ஊர்வசியிடம் கொஞ்சம் வழியும் காமேசுவரன், அவர்தான் திருடுவதாக கையைப் பிடிக்க, பாட்டி பேத்தியின் கையைப் பிடித்து விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்து காமேசுவரனுக்கு டெல்லிகணேஷிடமிருந்து அடி விழுகிறது.

சூழ்ச்சி ஆள் மாறாட்டம் முகக் குழப்பம் என்று படம் தொடர, அதற்கு மேல் சகிக்க முடியாமல் மூடி விட்டேன். சிங்கதம் சீனிவாசராவ் என்பவரின் இயக்கம். நகைச்சுவை, அடிதடி என்று கலவையாக போய்க் கொண்டிருந்தது.

தனி மின்னஞ்சலில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா, கூகுள் பஸ்சில் ஏதாவது உண்டா, லினக்சு குழுமத்தில் என்ன சேதி, அலுவலக அஞ்சலில் என்ன மடல் என்று தாவித் தாவி பார்ப்பது ஒரு பக்கம். தமிழ்மணத்தில் என்ன பதிவுகள், slashdot.orgல் என்ன விவாதம் நடக்கிறது, statcounterல் நமது பதிவுகளை யார் பார்க்கிறார்கள் என்ற விபரம் இன்னொரு பக்கம். இவற்றுக்கு நடுவில் மற்ற வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

எட்டு மணிக்கெல்லாம் கணினியை அணைத்து விட்டுத் தூங்கச் சென்று விட்டேன். கொஞ்ச நேரம் தியானமும் நடந்தது அதன் பிறகு படுத்துத் தூங்கி விட்டேன். இரவு பத்தே முக்காலுக்கு விழிப்பு வந்து எழுந்து நேரம் பார்த்திருந்தேன். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பகல் தூக்கத்திலும், இரவு சீக்கிரம் தூங்குவதிலும் சமனாகி விடுகிறது. ஆனால் அந்த அதிகாலை மணிகளில் செய்ய முடியும் வேலைகள் பகலிலும் முன்னிரவிலும் விழித்திருந்தாலும் செய்து முடிக்க சிரமமானவை. காலையில் ஆவதை விட இரண்டு மடங்கு நேரமாகி விடுகிறது. அல்லது வேலை நடக்காமலேயே இருந்து விடுகிறது.

எழுத்து முடிக்கும் போது 5.35 ஆகியிருக்கும். எழுந்து தூத்துத் துடைக்க வேண்டும். கழுவ வேண்டிய பாத்திரங்கள் சில கிடக்கின்றன. ஈரத் துணியால் கதவுகள், அலமாரிகள், துடைக்க வேண்டும். முன்னறையில் சாமான் வைக்கும் தட்டுகளில் நாளிதழ் விரிப்பை மாற்ற வேண்டும். அதன் பிறகு தூத்து, பாத்திரம் கழுவி, தரை துடைத்து முடிக்கும் போது 6.45 ஆகி விடும்.

காலை உணவாக மீதியிருக்கும் பழையது சாப்பிட்டுக் கொள்ளலாம். மதிய உணவுக்கு கோதுமை மாவும், ரவையும் சேர்த்துக் கலக்கி, வெங்காயம் வெட்டிப் போட்டு, சீரகம், மிளகு சேர்த்து தோசை சுட்டுக் கொள்ளலாம். அதற்கு தேங்காய் ஒன்றும் வாங்கிக் கொள்ள வேண்டும். மாலை உணவுக்கு ரவை கிண்டிக் கொள்ளலாம்.

மதிய உணவுக்கு என்ன என்று காலையிலேயே திட்டமிடாதவன் யோகி என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். வேறு யாரிடமாவது பிச்சை எடுக்கும் வாழ்க்கை முறை இருந்தால் அந்தத் திட்டமிடல் தேவையில்லை. நாமே பொருள் வாங்கி, நாமே சமைத்து, நாமே சாப்பிடும் போது திட்டமிடல் இல்லாவிட்டால் பட்டினியில் சாகத்தான் வேண்டும்.

பணிக்கும் நுணுக்கமாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

9.00 - 11.00 jquery / javascript குறித்த கட்டுரை எழுதுதல்
11.00 - 1.00 leatherlink.net தளத்திற்கான மறுவடிவமைப்பை செய்தல்
1.00 - 2.00 மதிய உணவு
2.00 - 4.00 அனுப்ப வேண்டிய அறிக்கை
4.00 - 6.00 leatherlink.net தளத்திற்கான மறுவடிவமைப்பு

இவற்றைத் தவிர தொலைபேசி நேற்றைய விபரங்களைக் கேட்க வேண்டும். நாளைக்கு போவதற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்க வேண்டும், எண்ணை வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பின்நோக்குப் பார்வை
  • டாடா நிறுவனத்தில் உற்பத்தித் தளத்தில், விற்பனைப் பிரிவில் பல மாற்றங்களை, மேம்பாடுகளைக் கொண்டு வந்தேன்.
  • டாடா சாங்காயில் போய் தோல் விற்பனையை கிழக்கு சீனாவில் தொடங்கி வைத்தேன்.
  • பிஎல்சியின் சீனா பணிகளை ஆரம்பித்து வைத்து தளம் ஏற்படுத்திக் கொடுத்தேன்.
  • எறும்புகள் குழுவின் மூலம் உலகளாவிய தமிழர் அணி ஒன்றை உருவாக்குவதில் பங்களித்தேன்.
  • தமிழ் கணினி என்று ழ திட்டத்தில் பணியாற்றி மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டேன்.
  • பிஎஸ்ஜி லெதர்லிங்கின் மூலம் இணைய வழி சேவையாக மென்பொருள் வசதிகளை தோல் துறையினருக்கு செய்து கொடுப்பதில் வெற்றி பெற்றேன்.
  • லெதர்லிங்க் விவாத மேடை முழுக்க முழுக்க நான் எழுதிய நிரலால் இயங்குவது.
  • அஜாக்ஸ் என்பது நான் செயல்படுத்தியது
  • stock source என்ற கோட்பாட்டின் படி ஒரு சரக்கு விபரத்தின் வரலாற்றை எளிதாக எடுத்துக் காட்டும் வடிவமைப்பைச் செய்து கொடுத்தேன்.
  • வலைப் பதிவுகள் மூலம் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.
  • சென்னை வலைப்பதிவர் பட்டறை என்ற கூட்டுறவு சாதனையின் ஒரு பகுதியாக இருந்தேன்.
இப்படி சாதித்தவை பல இருக்க, வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஏதாவது உழைத்துக் கொண்டே இருக்க யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நமது மனதுக்குச் சரி என்று படும் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைக்கு இந்தச் சேவையை அளித்தால், அவர்களிடமிருந்து பிற்காலத்தில் இன்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செயல்படுவோம். அந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை, அந்த பலன்களின் தைரியத்தில் அடுத்தவர்களிடம் கடன் படாமல் இருக்க வேண்டும்.

கையில் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி நமது வெளிப்பாட்டைச் செய்து கொண்டே இருக்கலாம். என்ன வருகிறதோ வரட்டும். பட்டக் கடன்களை திருப்பி விட்டால், அதன் பிறகு கட்ட தளைகள் எதுவுமே இருக்காது. நான் இறகு போன்ற மனதுடன் என் கடமையை செய்து கொண்டு போக முடியும். அதற்கான வழிகள் பிறக்க வேண்டும்.

புதன், ஜூன் 30, 2010

கற்றதும் கற்பித்தலும்

ஜூன் மாதம் 30ம் தேதி, காலை 5.10. நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தது, 45 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. 3 மணிக்கு விழிப்பு வந்தது. திரும்பப் படுத்து அடுத்த முறை விழிப்பு வந்த போது எழுந்து பார்த்தால் 4.45 ஆகியிருந்தது. கண்கள் எரிச்சல், கால்கள் உளைச்சல். திரும்பவும் படுக்கைக்கு அனுப்பும் அறிகுறிகள். பழக்கத்தை உடைக்கவும் சரி, உருவாக்கவும் சரி நிறைய மன உறுதி தேவையாக இருக்கிறது.

நேற்றைக்கு கிட்டத்தட்ட வெற்றிகரமாகவே கழிந்தது. காலையில் 4 மணிக்கு எழுந்து கொண்டேன். பல் தேய்த்து தயாராவதற்கு 4.35 ஆகி விட்டிருந்தது. அடுத்த 1 மணி நேரம் எழுத்து. அதைத் தொடர்ந்து வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்தேன். துவைத்த துணிகள், படித்த நாளிதழ் பக்கங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாவற்றையும் மடித்து, ஒதுங்க வைத்து அதனதன் இடங்களில் வைத்தேன். சமையலறை பொருட்கள் வைக்கும் தட்டுகளில் தாள் விரிப்புகளை மாற்ற வேண்டும். ஒவ்வொரு டப்பாவாக பாட்டிலாக எடுத்து கீழே வைத்து விரித்திருந்த செய்தித்தாளை அகற்றி, தூசி தட்டி, வேறு தாளை விரித்து, டப்பாக்களை துடைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன்.

ஒரு பிளாஸ்டில் அடுக்கில் கரண்டிகள் ஒரு தட்டில், சமையல் கருவிகள் இன்னொரு தட்டில், உருளைக்கிழங்கு, வெங்காயம் மூன்றாவது தட்டில் வைப்பது வழக்கம். இரண்டு நாட்கள் முன்பு வாங்கி வந்திருந்த கீரையை அதிலேயே வைத்து அது அழுகிப் போயிருந்தது. அதையும், பல மாதங்களுக்கு முன்பு வாங்கிய வெல்லத்தையும், ஆர்லிக்சு பாட்டிலில் இருந்த சர்க்கரையையும் குப்பையில் கொட்டினேன். பிளாஸ்டிக் அடுக்கிலும் நாளிதழ் விரிப்புகளை மாற்றி காய்கறிகளை கீழ்த் தட்டுக்கும் கருவிகளை மேல் தட்டுக்கும், நடுவில் உள்ள தட்டில் அகப்பைகளையும் போட்டு வைத்தேன். சமையல் மேடையையும் துடைத்துக் கீழே தள்ளி விட்டு தரை பெருக்க ஆரம்பித்தேன்.

தினமும் பெருக்கினாலும் கணிசமான அளவு குப்பையும் தூசியும் சேர்ந்துதான் விடுகின்றன. இவ்வளவுக்கும் ஒரே ஒரு ஆள் புழங்கும் நாட்கள்தான். வெளியிலிருந்து காற்றில் அடிக்கப்பட்டு வரும் தூசி. சுவர்கள், மற்ற பொருட்களை தூசி தட்டும் போது கீழே விழும் தும்புகள் என்று சேர்கின்றன. சமையலறையில் கொஞ்சம் உணவுப் பொடிகள் இருக்கலாம். குப்பைத் தொட்டியில் விரிப்பதற்கு பிளாஸ்டிக் பைகள் இல்லை. கடைக்குப் போகும் போதெல்லாம் கையில் ஒரு பையையும் எடுத்துப் போய், பிளாஸ்டிக் பைகளை மறுதலித்து விடுவதால் பிளாஸ்டிக் பைகள் அதிகம் சேர்வது இல்லை.

சன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த கொசு வலைகளில் தூசி படிந்து போயிருந்தது. சன்னலை மூடி வைத்த பகுதியில் வெளிர் மஞ்சள் நிறத்திலும், திறந்து வைத்த பகுதியில் கறுப்பாகவும் மாறி விட்டிருந்தன. அவற்றை பிடுங்கி குளியலறைக்குள் போட்டேன். தண்ணீரில் அலசி காய வைத்து மறுபடி மாட்ட வேண்டும். இதெல்லாம் செய்வதற்குள் நேரம் ஓஓடி விட்டிருந்தது. 1 மணி நேரத்துக்குள் வீட்டை தூய்மை செய்வதை முடித்து விட்டு உலாவப் போக வேண்டும் என்பது நடக்கவில்லை. தொடர்ந்து கொசு வலைகளை கழுவி வெளியில் மாட்டி விட்டு தரை துடைக்க ஆரம்பித்தேன்.

தரை துடைக்க ஃபினாயில் 5 மூடிகள் ஊற்றி ஒரு வாளியில் இரண்டு மக் தண்ணீரில் துடைக்கும் நீர்மத்தை வைத்துக் கொண்டு இன்னொரு வாளியில் நிரம்பும் வரை தண்ணீர் பிடித்து துடைத்த துணியை அலசும் பாத்திரமாக பயன்படுத்துவது சரியாக இருக்கிறது. முந்தைய நாள் வந்த குழந்தைகளில் யாரோ காலையில் நாளிதழ் வாங்கும் போது கிடைத்திருந்த கேண்டிமேன் மிட்டாயைத் தின்று பாதியில் துப்பி, தரையெல்லாம் அப்பியிருந்தது. துடைக்கும் போது போய் விடுமா அல்லது கரையாக படிந்து விடுமா என்று சந்தேகம். துடைத்ததும் போய் விட்டது.

மேசையின் மீது வைத்திருந்த காசு 9 ரூபாய்கள் மட்டும் இருந்தன. திங்கள் கிழமை காலையில் 100 ரூபாயை பகிர்வூர்தி காரரிடம் கொடுத்து மாற்றியதில் எட்டு 10 ரூபாய் நோட்டுகளும், 3 ரூபாய் சில்லறையும் இருந்தன. ரயில் சீட்டு வாங்க ஒரு பத்து ரூபாய் நோட்டை மாற்றி, 5 ரூபாய் சில்லறை கிடைத்தது. கிண்டியில் நாளிதழ் வாங்க 3 ரூபாய் சில்லறை தீர்ந்தது. பேருந்தில் சீட்டு வாங்க 5 ரூபாயைக் கொடுத்து 2 ரூபாய் சில்லறை கிடைத்தது.

மாவு வாங்க 22 ரூபாய் - இரண்டு 10 ரூபாய்களும், 2 ரூபாய் சில்லறையும் சரியாக இருந்தது. இப்போது 50 ரூபாய் கையில் இருக்க வேண்டும். பால் வாங்கப் போகும் போது 10 ரூபாய் நோட்டுகளை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு போனேன். வழியில் எண்ணி எண்ணிப் பார்த்ததில் 5 நோட்டுகள் இருந்தன. கடைக்குப் போய் 11 ரூபாய் பாலுக்கு இரண்டு 10 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டேன், 9 ரூபாய் சில்லறை. அந்த சில்லறை மட்டும் இருக்கிறது. 30 ரூபாய்க்கான மூன்று 10 ரூபாய்களைக் காணவில்லை. கடையில் பால் வாங்கும் போது மேசையில் வைத்து விட்டு வந்து விட்டேனோ? சாத்தியம் மிகவும் குறைவு, எனது கையும், கண்ணும் ஏமாற்றியிருந்தாலும், கடைக்காரர் கூப்பிட்டுக் கொடுத்திருக்கலாம். வீட்டில் மேசையிலிருந்து யாராவது எடுத்திருப்பார்களோ? யாரைப் போய் கேட்க?

இப்படி இரண்டு நாட்களில் மூன்று இடங்களில் 240 ரூபாய் ஏமாந்திருக்கிறேன்.

முதலில் செல்பேசி சரி செய்யும் கடையில் கொண்டு கொடுத்தால் '1 மணி நேரத்தில் சரி செய்கிறேன், அதை மாற்ற வேண்டியிருக்கும், இதை மாற்ற வேண்டியிருக்கும்' என்று சொல்லி 200 ரூபாய் வாங்கிக் கொண்டார். அதன் பிறகும் செல்பேசியைப் பயன்படுத்த முடியவில்லை. வேறு ஏதோ imei எண் போய் விட்டது அதை அமைக்க இன்னும் 150 ரூபாய் வேண்டும் என்று கேட்டதும் கொஞ்சம் வாக்குவாதம் செய்து விட்டு கருவியை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். 200 ரூபாய் கூட சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டுத் தண்ணீரைத் துடைத்துக் கொடுத்து விட்டதாகத் தோன்றியது. அப்படிச் செய்யும் போது imei எண்ணையும் நீக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறானோ அந்தப் பையன். மிகப் பெரிய ஏமாற்றமாக உணர்ந்த நிகழ்வு.

யாரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது. 1 மணி நேரத்தில் சரி செய்கிறேன் என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக திங்கள் கிழமை காலை தாம்பரத்தில் பகிர்வூர்தி ஓட்டுனர் சில்லறை கொடுக்கும் சாக்கில் 20 ரூபாய் வசூலித்துக் கொண்டது. இதுவாவது நான் உணர்ந்து என் அறிவில் நடந்தது. சூழ்நிலைக்கு ஏற்றபடி தயாரிப்புடன் எதையும் செய்ய வேண்டும். கையில் சில்லறை இல்லாத நிலைமையைத்தானே அவர் பயன்படுத்திக் கொண்டார். இனிமேல் அத்தகையை நிலைகளில் நிற்கக் கூடாது.

மூன்றாவதாக 30 ரூபாய் தொலைந்தது. இது எனது கவனக் குறைவால், போயிருக்கிறது. பணத்தை மிகவும் கவனமாக ஒரே இடத்தில் வைத்து எடுக்க வேண்டும். பயன்படுத்த வேண்டும். பொதுவான இடங்களில் வைத்து தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

உலாவப் போவதை மட்டும் ரத்து செய்து கொண்டேன். குளித்து விட்டு கடைக்குப் போய் வந்தேன். திருவள்ளுவர் சாலைக்கே சென்று விட்டேன். டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ், ஆவின் பால் அரை லிட்டர், புளி 100 கிராம், பூண்டு 50 கிராம், புளியோதரைப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி 50 கிராம் பொதிகள். 2+11+5+6+10+10=44 ரூபாய்கள். நூறு ரூபாய் தாளை மாற்றி மீதியைக் கொடுத்து விட்டார்.

வீட்டிற்குள் வரும் போது வெளியில் குழாயில் குடிக்கும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலையில் வராமல் மாலையில்தான் விட்டார்கள். அதனால் இன்றைக்குக் காலையில் வருமா அல்லது அடுத்த நாள்தானா என்று ஒரு நிச்சயமற்ற நிலைமை. இன்றைக்கே விட்டிருந்தார்கள். எதிர்வீட்டு அம்மா குடத்தில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். காவலர் வீட்டின் முன்பிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். என்னைக் கூப்பிடப் போயிருந்திருப்பார். ஞாயிற்றுக் கிழமை பிடித்த தண்ணீரே வாளியிலும் குடத்திலும் இருந்தது.

வீட்டுக்குள் போய் வாங்கி வந்திருந்த பொருட்களை டப்பாக்களில் தட்டி விட்டு, வாளித் தண்ணீரை கொதிக்க வைக்கும் பாத்திரங்களில் ஊற்றி விட்டு போய் ஒரு வாளி நிரப்பிக் கொண்டு வந்தேன். காலை உணவுக்கு உப்புமா செய்வதாக முடிவு செய்து அரை வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் வெட்டி வைத்துக் கொண்டேன். பாலை அடுப்பில் வைத்து குறைந்த அனலில் அமைத்து விட்டு தியானம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டும் போயிருந்திருக்கும், எழுந்து விட்டிருந்தேன்.

பாலை இறக்கி குடிக்க எடுத்து விட்டு, ரவை வறுக்க ஆரம்பித்தேன். தேங்காயும் கீறி வைத்திருந்தேன். ரவையை வறுக்க சின்ன சட்டி, உப்புமா செய்ய பெரிய சட்டி. வறுத்து கீழே இறக்கிய பிறகு பெரிய சட்டியை வைத்து எண்ணைய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து அவை எண்ணையில் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கி, எடுத்திருந்த 2 உழக்கு ரவை வேகுவதற்கு மூன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். ஒரு கரண்டி உப்பும் சேர்த்துக் கொதிக்க விட்டேன். கொதித்த பிறகு ரவையைச் சேர்த்து கிண்டினால் உப்புமா தயார்.

பாலைக் குடித்துக் கொண்டே முறுக்குகளில் ஒன்றிரண்டை உள்ளே தள்ளினேன். டெக்கான் குரோனிக்கிளில் கால்பந்து விளையாட்டுச் செய்திகள், நடுப்பக்கத்தில் காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவின் பேட்டி, மூன்றாவது பொருளாதார முடக்கம் (third great depression) என்ற பால் குரூக்மேனில் பத்தி, ஜயதி கோஷ் என்பவரின் எரிபொருள் விலை உயர்வு குறித்த கட்டுரை என்று நிறையவே படிக்க ஆர்வமான கட்டுரைகள்.

சாப்பிட்டு விட்டுக் கணினியை இயக்கினேன். ஜாவாஸ்கிரிப்டு, Jquery படித்து அதை செயல்படுத்த வேண்டும்.

முதலில் எழுதி வைத்து பதியாமல் இருந்த பதிவுகளை எல்லாம் ஒரு மூச்சாக சேர்த்து விட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அதில் ஓடியது.

அதன் பிறகு இணையத்தில் தேடி jquery பற்றிய கற்பித்தல் படக்காட்சி அல்லது இலவச புத்தகங்களை கண்டு கொள்ள முயற்சித்தேன். படக்காட்சியில் 12 வயதான ஒரு சிறுவன் கூகுள் நுட்ப உரையில் பேசியது கிடைத்தது. அது கொஞ்ச நேரம் பார்த்து விட்டு மூடி விட்டேன். தேடித் தேடி jqueryஐ விளக்கும் புத்தகத்தின் பிடிஎஃப் கோப்பை கோப்பு பகிர்ந்து கொள்ளும் தளம் ஒன்றில் பிடித்தேன். கடையில் வாங்கினால் 500 ரூபாயிலிருந்து செலவாகலாம். இப்போது அந்தக் கோப்பை தகவிறக்கி படிக்க ஆரம்பித்தேன்.

நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்து எப்படி jquery மூலம் வலைஉலாவியில் பயன்பாடுகளை எளிதாக உருவாக்கலாம் என்று தெரிந்து கொண்டேன். இடையிடையே மடல்கள், கூகுள் பஸ்சில் செய்திகள் எட்டிப் பார்த்துக் கொண்டேன். பெரும்பாலும் நேரத்தில் படிப்பதிலிருந்து விலகவில்லை.

மதிய உணவுக்கு சோறு அழுத்தக் கலனில் வைத்து விட்டு, வாங்கி குளிர் பெட்டியில் வைத்திருந்த பாகற்காயை வெட்டி, காலையில் வைத்திருந்த அரை வெங்காயத்தையும் வெட்டி பொரியல் செய்ய தயாரித்துக் கொண்டேன். 'பொரியல் செய்கிறேன் பேர்வழி என்று காய்களை சட்டியில் கருக வைத்து சாப்பிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது' என்று அண்ணன் சொல்லியிருக்கிறான். முறுகலான உணவுகளில் சத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடுகிறது என்பது அதிலிருந்துதான் பதிந்தது.

போதுமான அளவு எண்ணெய் சேர்த்து, தீயை தாழ் நிலையில் வைத்து சட்டியில் கிளறிக் கொண்டே இருந்தால் கரிந்து விடாமல் பொரியல் தயாராகி விட்டது. சனிக் கிழமை கத்தரிக்காய் பொரியல் இப்படி செய்ய முடிந்தது, இப்போது பாகற்காய் பொரியலும்.

ஊற்றிக் கொள்வதற்கு ரசம் அல்லது சாம்பார் வைக்கவில்லை. புளியோதரைப் பொடி, தயிர் என்று சாப்பிட்டுக் கொண்டேன். தயிரும் பாலில் உறை ஊத்தியது உறைந்திருக்கவில்லை. உறைக்காக வாங்கிய தயிர் டப்பாவில் மீந்திருந்ததை ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டேன். மதியத்துக்கு மேலும் jquery விபரங்கள் தொடர்ந்தன. சோறு வடித்த கஞ்சி மாலையில் குடிப்பதற்கு. அதிகமாக செய்து வைத்திருந்த பாகற்காய் பொரியலுடன் இரவு உணவுக்கு சப்பாத்தி செய்து கொள்ளலாம் என்று முடிவு.

மாலையில், இரவு உணவுக்காக சப்பாத்தி மாவு பிசைந்து வைத்து விட்டுக் கணினியில் வேலையைத் தொடர்ந்தேன். போய் சப்பாத்திகளாக விரித்து விட்டு, 5 சப்பாத்திகள் போக மீதிமாவை குளிர் பெட்டியில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். ஏழரை தாண்டி விட்டிருந்தது.

சட்டையை மாட்டி விட்டு வெளியில் 20 நிமிடம் உலாவி விட்டுத் திரும்பும் போது வீட்டில் மின் தடை ஏற்பட்டிருந்தது. மின் அலுவலகம் அருகில் போகும் போது ஏதோ பெரிய சத்தமும் ஒரு வெளிச்ச மின்னலும் கேட்டது. அது நம்ம வீட்டுப் பக்க இணைப்புகளைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறது என்று புரிந்தது.

இணையக் கருவியை அணைத்து எனது கணினியையும் அணைத்து வைத்தேன். அவரது கணினி மின் வெட்டில் அணைந்து போயிருந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, எதிர்பார்த்திருந்தால் மின்சாரம் இணைக்கப்பட்டது. புத்தகம் ஒன்றுடன் வெளியில் நாற்காலி கொண்டு போய் உட்கார்ந்தேன்.

செவ்வாய், ஜூன் 29, 2010

ஒடுக்கம்

நேரம் 4.38. இன்றைக்கு ஜூன் 29 ஆகி விட்டது. இன்னும் ஒரு நாளில் இந்த மாதமும் முடிந்து அடுத்த மாதம் ஆரம்பித்து விடும்.

நேற்றைக்குக் காலையில் தாம்பரத்தில் கண் விழித்தேன். நேரம் என்ன என்று கேட்டால் ஐந்தேகால் என்று சொல்ல எழுந்து விட்டேன். இன்னும் நிறைய நேரம் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்று குட்டியாக எட்டிப் பார்த்த எண்ணத்தை நடைமுறைக்கு சரிப்படாது என்று புறங்கையால் ஒதுக்கித் தள்ளினேன். அக்காவும் எழுந்து மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்தாள். எனக்கு இடையில் என்ன நடந்தது என்று நினைவே இல்லை.

'இரவு கரண்ட் போய் விட்டு போய் விட்டு வந்ததே, தூங்க முடிந்ததா?' என்று அக்கா கேட்க, அதைப் பற்றிய உணர்வே இல்லாமல் தூங்கியதாகச் சொன்னேன். 'நல்ல மழை இரவெல்லாம்' என்றதற்கும் அதே பதில். மழை பெரிதாக பெய்ததை உணர்ந்து அதைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தது அப்புறமாக நினைவு வந்தது. கழுவும் தொட்டியில் முகம் கழுவி வாய்க் கொப்பளித்துக் கொண்டேன். பல் தேய்க்க பிரஷ் கொண்டு வந்திருக்கவில்லை. மாற்றுத் துணி கொண்டு வந்திருக்கவில்லை. நேராக ராமாபுரம் போய் விட வேண்டியதுதான்.

அக்காவிடம் சொல்லும் போது, 'குடிக்க எதுவும் வேண்டாமா' என்ற கேள்விக்கு வேண்டாமென்று மறுத்து விட்டு புறப்படத் தயாரானேன். 'மழை இன்னும் பெய்கிறதா பார்' என்று கேட்டு பின் வாசலைத் திறந்து பார்த்தால் மழை சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. மழைத்துளி தரையில் விழுவதைத்தான் பார்க்கமுடியவில்லை. 'கொஞ்சமாகத்தான் பெய்கிறது போலிருக்கிறது. கிளம்புகிறேன்.'

வெளிக்கதவைத் திறப்பதற்கு திறவுகோல் வேண்டும். கதவுக்கு ஒரு பூட்டு, அதற்கு வெளியில் அளிக்கதவில் ஒரு பூட்டு, சுற்றுச் சுவரின் அளிக்கதவில் இன்னொரு பூட்டு, சுற்றுக் கதவு பூட்டைத் திறக்கப் போகும் போது மழை துளிகள் ச்சின்னதாக விழுவதை உணர்ந்தேன். திரும்பி வந்து சாவியை கொடுக்கும் போது, குடை எடுத்துக் கொண்டு போகும் படி சொல்லி, ஒரு குடை எடுத்துத் தரச் சொன்னாள் அக்கா. என்ன மாதிரி அன்பு இந்த அக்காவுக்கு, நான் ஒன்றுக்கும் உதவாமல் மண் போல இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து என்னை பார்த்துக் கொள்கிறாள். என்னைப் பற்றி பெரிதாக எல்லோரிடமும் பேசுகிறாள். இது போல ஒரு அக்காவுக்கு என்ன தவம் செய்திருந்தேன். யாரோ வலைப்பதிவில் அக்கா பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

குடை பிடித்துக் கொண்டே வெளியில் வந்தேன். இன்னமும் விடிந்திருக்காத இளம் காலை. முடிச்சூர் சாலை வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டேன். எதிர்த் திசையில் பேருந்துகள் ஒன்றிரண்டு போயின. இந்தத் திசையில் பேருந்துகளுக்கு முன்பு ஒரு பகிர்வூர்தி வந்தது. அதில் இரண்டு பேர் ஏறிக் கொண்ட பிறகு எனக்கும் இடம் ஏற்படுத்தி ஏற்றிக் கொண்டார். ஓட்டுனரின் அருகில் வலது புறத்தில். காலை உள் அடக்கி உட்கார வேண்டும். அடுத்த வண்டி ஏதாவது இடித்துக் கொண்டு போய் விட்டால் கதை கந்தலாகி விடும்.

ஒரு வழிப்பாதை எல்லாம் பொருட்படுத்தாமல் முடிச்சூர் சாலையில் நேராகப் போய் புதிய பாலம் கட்டும் இடத்தில் இடது புறம் திரும்பி சண்முகம் சாலை கடைத்தெரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்தார். ரயில் நிலையத்தின் முன்பு நிறுத்தி இறங்கச் சொல்லி விட்டார். என்னிடம் 100 ரூபாய் நோட்டுதான் இருந்தது. 3 ரூபாய் சில்லறை. பேருந்தில் ஏறியிருந்தால் 3 ரூபாயில் சீட்டு வாங்கியிருக்கலாம். இவருக்கு 10 ரூபாய் கொடுக்க வேண்டும். நல்ல வேளையாக மற்றவர்கள் எல்லாம் 10, 10 ஆகக் கொடுத்தார்கள். சில்லறை இல்லை என்று சொல்லி விட்டார். அதன் பிறகு ஆறு பேர் கொடுத்த கட்டணத் தொகை, அவரது பையில் இருந்தது எல்லாம் சேர்த்து 80 ரூபாய்கள்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தார். இரட்டை கட்டணம். மூன்று ரூபாய் பேருந்து கட்டணம் இல்லாமல், 10 ரூபாய் பகிர்வூர்தி கட்டணமும் இல்லாமல் 20 ரூபாய் செலவழித்து வந்து சேர்ந்திருக்கிறேன். மனம் நொந்து கொண்டது.

சாலையைக் கடக்க தரையடி சுரங்க நடைபாதையில் இறங்கினால் பெருமழையில் தண்ணீர் தேங்கியிருந்தது. நல்ல வேளையாக படி இறங்கியதுமான இடத்தில் மட்டும் தண்ணீர். அதில் எல்லோரும் இறங்கி நடந்தார்கள். பாதம் நனையும் அளவுதான் தண்ணீர். கால் சட்டையை இடுப்பில் உயர்த்திப் பிடித்த படி இறங்கினேன். அந்த வேளையிலேயே நிறைய கூட்டம். நிறைய பேர் வேலைக்குக் கிளம்பி விட்டிருந்தார்கள். ரயில் நிலையத்துக்குள் போய்ப் பார்த்தால் பயணச் சீட்டு வாங்கும் இடத்தில் நீண்ட காத்திருக்கும் வரிசை.

கிண்டி வரை 5 ரூபாய் என்று எழுதிப் போட்டிருந்தார்கள். பேருந்தில் 9 ரூபாய் வரை ஆகிறது. இனிமேல் இப்படி ரயிலைப் பிடித்து விட வேண்டியதுதான். 5 ரூபாயில் வேலை முடிந்து விடும். மூன்று வரிசையில் சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நிற்கும் போது கடற்கரைக்குச் செல்லும் வண்டி என்று ஒன்று புறப்படும் அறிவிப்பு (முதல் நடைமேடையிலிருந்து) கேட்டது.

சீட்டு வாங்கி வெளியில் வருவதற்கு முன்பே அடுத்த வண்டி இரண்டாவது நடைமேடையில் நிற்பதாக அறிவிப்பும் வந்து விட்டது. நெல்லையிலிருந்து வரும் நெல்லை விரைவு வண்டி வந்து கொண்டிருப்பதாக இன்னொரு அறிவிப்பு. படியேறி 1,2ம் நடைமேடைகளில் இறங்கினேன். வண்டி நின்று கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. ஏணிப்படியிலிருந்து இறங்கியதும் அருகில் இருந்த பெட்டியில் ஏறிக் கொண்டேன். உட்கார இடம் கிடைத்தது. முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் நேராக மின்விசிறி காற்று அடித்துக் கொண்டிருந்ததால், எழுந்து எதிர்ப் புறத்தில் சன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். கதவை அடுத்த இருக்கை. எதிரில் ஒரு வயதான அம்மா, சன்னலை மூடி வைத்திருந்தார்கள்.

எதிரில் மறுபக்கம் இளம் பெண் ஒருத்தி சன்னலோரமாக உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்க்காதது போல பார்த்துக் கொண்டே ஒருவர் எதிர் இருக்கையில் உட்கார்ந்தார். இன்னொரு இளம் பெண்ணும் கூட ஒரு வயதான பெண்மணியும் வர அவர்களுக்கு இடம் விட்டு தான் இந்தப் பக்க இருக்கைக்கு மாறி தான் ஒரு கனவான் என்பதை அந்தப் பெண்ணுக்குக் காட்டிக் கொண்டார். அதன் பிறகும் பார்க்காமல் பார்த்துக் கொண்டார்.

வண்டி கிளம்புவதற்கு முன்பு எல்லா இருக்கைகளும் நிறைந்து கதவருகில் நான்கைந்து பையன்கள் நிற்கவும் ஆரம்பித்திருந்தார்கள். வழக்கமான தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல் என்று வண்டி தாண்டிக் கொண்டிருந்தது. இடையில் கொஞ்சம் கண்களை மூடினேன். தூங்க முடியவில்லை. எதிரில் தெரிந்த பெண் கரிய நிறம். களையான முகம், கூரான மூக்கு. குண்டாக இல்லாவிட்டாலும், அதே போன்ற துறுதுறுப்பு. செல்பேசியில் யாரிடமோ பேசி விட்டு அடுத்து அம்மாவிடம்.

பழவந்தாங்கல் தாண்டி கொஞ்ச தூரம் ஓடி பரங்கிமலை, அடுத்ததாக கிண்டி. பரங்கிமலை அருகிலேயே எழுந்து கதவருகில் நின்று கொண்டேன். கிண்டியிலும் ஏணிப்படியின் அருகில் வண்டி நின்றது. ஏறி இறங்கி, சுரங்க நடைபாதைக்கு பக்கவாட்டு வெளிப்பாடு வழியாக சாலைக்கு வந்தேன். பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கும் வழியில் கடையில் இந்து நாளிதழ். 3 ரூபாயைக் கொடுத்தால் நாளிதழ் கொடுத்து விட்டு 50 பைசா பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தான். கொஞ்ச நேரம் தயங்கி நின்ற பிறகு ஒரு இனிப்பு மிட்டாயைக் கொடுத்து அனுப்பினான். கேண்டிமேன்.

ராமாபுரம் போகும் 18E அல்லது M49R வண்டி வந்தால்தான் ஏற வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தேன். வேறு பேருந்தில் போய் இறங்கி நடப்பது தேவையில்லை. பூந்தமல்லி போகும் பேருந்துகள் எதிரில் கடந்து போயின. பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் போய்ச் சேரும் போது தூரத்தில் பச்சை நிற பேருந்து ஒன்று தெரிந்தது, 18Eதானோ? அதேதான். இது என்ன அதிசயம்.

நாம் வந்ததும் நமக்குப் போக வேண்டிய பேருந்து வருகிறது. அரை மணி நேரத்துக்கு ஒன்று என்ற அளவில்தான் பொதுவாக ஓடிக் கொண்டிருக்கும். ஏறி உட்கார்ந்து சீட்டு வாங்கினேன். 3 ரூபாய். மொத்தம் 28 ரூபாய் செலவழிந்திருக்கிறது. முடிச்சூரிலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை 20 ரூபாய் அதன் பிறகு ராமாபுரம் வீடு வரை 8 ரூபாயில் வந்தாச்சு. முந்தைய நாள் போகும் போது ராமாபுரத்திலிருந்து கிண்டிக்கு 5 ரூபாய், கிண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பேருந்து 9 ரூபாய், தாம்பரத்திலிருந்து முடிச்சூர் சாலைக்கு 3 ரூபாய் என்று 17 ரூபாய்கள்.

நேராக தோசை மாவு விற்கும் கடைக்குப் போய் 1 கிலோ மாவு வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே கட்டி வைத்திருந்ததைக் கொடுத்தார். கொஞ்சம் உப்பிப் போயிருந்தது. ஆவின் பால் எங்கும் தென்படவில்லை. வீட்டுக்குப் போய் குளித்து விட்டு பால் வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் வந்தால் முதல் வேலையாக கணினியை இயக்கிக் கொண்டேன். உடை கூட மாற்றவில்லை. பல் கூடத் தேய்க்கவில்லை. மின்னஞ்சலில் பெரிய சேதி எதுவும் இல்லை.

பாத்திரங்கள், நாளிதழ்கள், துணிகளை ஒதுங்க வைத்து விட்டு சமையல் மேடையைத் துடைத்துத் தள்ளி விட்டு பெருக்கி வாரினேன். அடுத்தது தூங்கும் அறையில் ஒதுங்க வைத்து பெருக்கிறேன். சமையலறையில் மேடைக்குக் கீழே தட்டுகளில் தூசி அடைந்திருந்த நாளிதழ் விரிப்புகளை மாற்றி தூசி வாரினேன். அது ஒரு வெளிச்சத்தையே கொடுத்து விட்டது போலிருந்தது. ஞாயிற்றுக் கிழமை துவைத்தது போக சேர்ந்திருந்த நான்கைந்து துணிகளைத் தண்ணீரில் ஊற வைத்திருந்தேன். துணி துவைக்கும் பொடி தீர்ந்து விட்டிருந்தது.

நானும் பணி மேசைகளை தூசி தட்டித் துடைத்து, உள் அறையிலிரும் தூத்து வாரிப் போட்டு விட்டு, தரை துடைக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு துணிகளுக்கு சோப்பு போட்டு வைத்திருந்ததை அலசிக் காயப் போட்டு விட்டேன். நான்கே துணிகள் இருந்ததால் இரண்டு வாளி தண்ணீரில் அலசி முடித்து விட்டேன் நிறைய துணிகள் இருந்தால் இரண்டு வாளிகளாக இரண்டு முறை அலசியிருப்பேன்.

தரை துடைத்து விட்டு அடுத்தது முகம் மழித்தல், குளியல். குளித்து விட்டு கடைக்குப் போய் பால் வாங்கிக் கொண்டேன். தயிர் வாங்க மறந்திருந்தேன். பாலை காய வைத்து விட்டு தியானத்தில் உட்கார்ந்தேன். 20 நிமிடங்கள் கிட்டத்தட்ட முழுமையாக உட்கார்ந்து விட்டேன். தூக்க, மயக்க, கனவு நிலைகள் நிறைய ஏற்பட்டன. 20 நிமிடங்கள் விழித்திருக்கக் கூட முடியாமல் குப்பைகள் பாரங்கள் குவிந்து கிடக்கின்றன, மனதில். கொஞ்ச கொஞ்சமாக இறக்கி தூய்மைப்படுத்த வேண்டும்.

தோசை மாவு நன்கு புளித்து நுரைத்துதான் போயிருந்தது. தோசைகள் மெலிதாக வந்தன. இரண்டு நாட்கள் முன்பு செய்திருந்த உருளைக்கிழங்கு போட்ட காரக் குழம்புடன் ஏழெட்டு தோசைகளை உள்ளே தள்ளின். இன்னும் 2-3 தோசைகளுக்கு மீந்திருக்கும் போது நிறுத்திக் கொண்டேன்.

தோல் பதனிடும் வேதிப் பக்குவங்களை பகிர்ந்து கொள்ளும் இணையப் பயன்பாட்டைப் பற்றி விவாதித்தோம். அது எப்படி செயல்பட வேண்டும். யார் யாரிடம் அதற்காக பண முதலீடு செய்யச் சொல்லலாம் என்று சேர்த்துக் கொண்டோம்.

வர வேண்டிய பணம், எனது தொலைபேசி இல்லாத நிலைமை எல்லாவற்றையும் பேசினோம். ஜாவாஸ்கிரிப்டில் புதிதாக கற்க வேண்டியது, இன்னும் மேம்படுத்த வேண்டியது என்று பேசினோம்.

இரவு சாப்பிடுவதற்கு கஞ்சி போட்டிருந்தேன்.

இரண்டு உழக்கு அரிசி, மீந்திருந்த சிறுபயறு, தேங்காய் காலையிலிருந்தே வெளியில் வைத்திருந்ததைக் கீறி உலர் அரவையில் பொடியாக்கி சேர்த்தேன். மீதி தேங்காயில் ஒரு மிளகாய் போட்டு துவையல். புளி, பூண்டு இரண்டும் இல்லை. வாங்க வேண்டும். கஞ்சி முழுவதையும் குடித்தேன்.

கணினியை மூடி விட்டு ஒன்பதரை மணிக்குப் படுக்கப் போனேன். கையில் இந்து நாளிதழ், படித்துக் கொண்டே இருக்கும் போது, அப்படியே சுருண்டு தூங்கி விடுவோம் என்று ஒரு தளர்ச்சி. ஏதோ ஒரு உந்தலில் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்தேன். மின் விளக்கை அணைத்து, மின் விசிறியை இணைத்து, மேற்கு பக்கமாக தலைமாட்டை மாற்றிக் கொண்டு தூங்கினேன். 2 மணிக்கு ஒரு முறை விழிப்பு, மூன்றரைக்கு இன்னொரு முறை. அப்படியே மறுபடியும் படுத்துக் கொண்டேன். 4 மணிக்கு எழுந்து கொண்டேன்.

இதை முடித்ததும், வீட்டை ஒதுங்க வைத்து தூத்துத் துடைத்தல் (1 மணி நேரம்). அடுக்களையில் செய்தித்தாள் விரிப்புகளை மாற்ற வேண்டும். கொசு வலை அடைப்புகளை கழற்றி கழுவிப் போட வேண்டும். உலாவி வருதல், கூடவே பால் வாங்கிக் கொள்ள வேண்டும் (7 மணி ஆகியிருக்கும்). முகம் மழித்து, குளித்து விட்டு (7.30), பால் ஏற்றி விட்டு தியானம் (8). சாப்பிட்டு விட்டு வேலை ஆரம்பிக்க வேண்டும். tentschool பதிவில் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஜாவாஸ்கிரிப்ட் குறித்து எழுத வேண்டும்.

tentschool லினக்சு, போஸ்ட்கிரெஸ்கியூஎல், அபசே, பிஎச்பி, எச்டிஎம்எல், ஜாவாஸ்கிரிப்ட், சிஎஸ்எஸ் தொழில் நுட்பங்களைப் பற்றி முதல் கட்டுரைகளை முடித்து விட வேண்டும். ஜாவாஸ்கிரிப்டு குறித்து தமிழில் எழுத ஆரம்பிக்கலாம்.

திங்கள், ஜூன் 28, 2010

திட்டமிட்டுதான் வாழ வேண்டும்

9.05
விமான நிலையத்தில் வரவேற்கப் போக வேண்டியிருந்தது. நேற்றைக்குக் காலையிலேயே அக்கா வீட்டுக்கு தாம்பரம் போய் விட்டு அங்கிருந்து போயிருக்கலாம். காலையில் எழுந்திருந்தால், கைபேசி உயிரை விட்டிருந்தது. தண்ணீரில் விழுந்தது என்று பண்டுவம் பார்த்து ஓரளவு சரியாகி நன்றாகத்தான் வேலை செய்து கொண்டிருந்தது. இன்றைக்கு திடீரென்று சுத்தமாக உயிரே இல்லை.

யாருடைய எண்ணையும் பார்க்க முடியாது. வீட்டு எண் மட்டும் நினைவில் இருக்கிறது. கடையில் கொடுத்து சரி செய்யக் கேட்டுக் கொள்ளலாம்.

காலையில் எழுந்து வீட்டை தூய்மை செய்து, குளித்து வேலை ஆரம்பிக்க வேண்டியதை சுருக்கி விட்டேன். இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே என்று ஒரு சமாதானம். வீட்டில் அறைகளை எல்லாம் தூசி தட்ட வேண்டும், அதற்குப் பிறகு தூத்து வாரலாம் என்று ஒரு காரணம். வீட்டை தூய்மை செய்யாமலேயே சாப்பிட வழி வகுத்துக் கொண்டேன். குளிக்கக் கூட இல்லை.

புறந்தூய்மை நீரான் அமையும். வீட்டை தினமும் தூத்துத் துடைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவ வேண்டும். சமையல் மேடை, கதவுகள், பொருட்கள் வைக்கும் அலமாரிகள், பணி மேடை, கணினிகள் எல்லாவற்றையும் தூசி தட்டி, ஈரத் துணியால் துடைக்க வேண்டும். காலையில் பல் துலக்கி, வயிற்றை தூய்மை செய்து, குளிக்க வேண்டும்.

இவ்வளவும் முடிந்த பிறகுதான் எதுவும் சாப்பிடவோ, படிக்கவோ முடியும். சாப்பிடுவதற்கு சமையல் செய்ய வேண்டும். இதுதான் திட்டம். 5 நாட்கள் எப்படியோ செய்து விட்டேன். சனிக் கிழமை கொஞ்சம் சறுக்கம். நேற்றைக்கு முற்றிலும் போய் விட்டது.
  • பொன்னியின் செல்வன் முதல் மூன்று பாகங்களை மதுரைத் திட்ட உரையின் மூலம் படிப்பது. நான்காம் மற்றும் ஐந்தாம் பாகம் வீட்டில் இருக்கிறது. அவற்றை பல முறை படித்து விட்டிருக்கிறேன். முதல் மூன்று பாகங்களை குழந்தை உண்டாகியிருக்கும்போது படிப்பதற்காக வாங்கிக் கொண்டு போனார்கள். இது வரை திருப்பித் தரவேயில்லை. கேட்கலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. இணையத்தில் படிப்பது என்று படிக்க ஆரம்பித்தேன்.

  • தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு தொடர்பான இடுகைகள், கருத்து சொல்லுதல்.

  • சென்னை லினக்சு பயனர் குழுவில் மடல்களைப் பார்த்து படிப்பது, பதிலளிப்பது.
பல் தேய்த்துக் கடையில் போய் பால் வாங்கி வந்து விட்டேன். கூடவே டெக்கான் குரோனிக்கிள் செய்தித்தாளும். ஞாயிற்றுக் கிழமை டெக்கான் குரோனிக்கிள் 2.50, இந்து 4 ரூபாய் என்று நினைக்கிறேன். சனிக்கிழமை மட்டும்தான் இரண்டுமே 2.50 அதனால் இந்து வாங்கிக் கொள்ளலாம் இப்படி 50 பைசாவையும், 1 ரூபாயையும் எண்ணிச் செலவிட ஆரம்பித்திருக்கிறேன்.

ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று பல நாட்களாகவே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது போன்று பொழுது போவதால் நடக்காமலேயே இருந்து வந்தது. இன்றைக்கு எழுதப் பழகும் போது வந்து விட்டது.

நமது வன்மைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். 2006ம் ஆண்டில் எழுத ஆரம்பித்தது, தினமும் எழுத எழுத, தொட்டனைத்தூறும் மணற்கேணி போல எழுத எழுத வாழ்க்கையின் நிலைமையும் உயர்ந்து கொண்டே போனது. 2008ம் ஆண்டு மார்ச் மாதம் எழுதுவதை நிறுத்துவதாக முடிவு செய்து நிறுத்தினேன். அப்போதிலிருந்து சறுக்கி சறுக்கி கீழே வந்து விட்டேன். விமானம் மேலே பறப்பதற்கு ஆரம்ப வேகம் வேண்டும். பறக்கும் போது அதே வேகத்தை குறைக்காமல் வைத்திருக்க வேண்டும். வேகம் குறைந்து விட்டால் விமானம் கீழே விழுந்து விடும்.

மேலே கொண்டு போன வாழ்க்கையை அதே நிலையில் வைத்திருக்கத் தேவையான பழக்கங்களை விட்டு விட்டதால் வேகம் போதாமல் கீழிறங்கி விட்டிருக்கிறது. மீண்டும் ஆற்றல் வேகம் தேவை.

இந்த இரண்டுக்கும் மனப் பயிற்சி மிகவும் அவசியம். மனப் பயிற்சிக்குத் தினமும் 1 மணி நேரம் எழுதுவது (குறைந்த பட்சம்), காலையில் சாப்பிடுவதற்கு முன்பு 20 நிமிடங்கள், மாலையில் தூங்குவதற்கு முன்பு 20 நிமிடங்கள் தியானம் செய்வது இரண்டும் மிகவும் அவசியம்.

இப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் தினசரி செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் மூன்று ஆண்டுகளுக்கு முந்தி இருந்தது போலவே இருக்க வேண்டும்.

அதிகாலை 4 மணி - தூக்கம் எழுதல்
4.30 - 5.30 எழுதுதல்
5.30 - 6.30 வீடு தூத்தல், பாத்திரம் கழுவுதல், தூசி தட்டுதல், துணி துவைத்தல், தரை துடைத்தல்
6.30 - 6.50 உலாவி வருதல் (உடலை ஆரோக்கியமாக பேண மிகவும் அவசியம்)

6.50 - 7.50 துணி துவைத்தல் குளியல்
7.50 - 8.10 தியானம்
8.10 - 9.00 காலை உணவு, நாளிதழ் படித்தல்

9.00 - 13.00
14.00 - 18.00 வேலை

வேலை என்பதில் எதையும் நுகர்வது அடங்காது. படிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது பணியில் அடங்காது. வேலை என்றால் என்னிலிருந்து மதிப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மட்டும்தான். எழுதுவது, நிரல் எழுதுவது, பொருட்களை அடுக்கி வைப்பது, கணினிகளை பராமரிப்பது இது போன்று மதிப்பை உருவாக்கும் பணிகளை மட்டும்தான் பகல் வேளையில் செய்ய வேண்டும்.

13.00 - 14.00 மதிய உணவு

18.00 - 19.00 மாலை உணவு
19.00 - 21.30 இணையம் - வலை பதிதல், மடற்குழுக்கள்
21.30 - 22.00 தியானம் --> தூக்கம்

இதுதான் வாழ்க்கைக்குத் திருப்பிக் கொடுப்பதோ மதிப்பை உருவாக்குவதோ நடக்கக் கூடிய முறையாக இருக்க முடியும். இதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இன்று முழுவதும் முடிவு செய்தது போல செயல்படுவோம். அடுத்தடுத்த நாட்களில் தேவையான படி திட்டமிட்டுக் கொள்வோம். தர்மம், உழைப்பு, நேர்மை, நியாயம் வெல்லும்.

செவ்வாய், ஜூன் 22, 2010

பாலில் ஊறிய செல்பேசி

காலையில் சுறுசுறுப்பாக வீட்டை தூய்மை படுத்தி, குளித்து கால் சட்டை, மேல் சட்டை உடுத்து சட்டைப் பையில் பேனா, செல்பேசி அணிந்து கொண்டு காலை உணவுக்கு வழி தேட ஆரம்பித்தேன். சப்பாத்தி மாவு பிசைந்து வைத்தது இருந்தது.

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் வழக்கப்படி காய்ச்சிய பால் இறக்கி கிண்ணத்தில் ஆறிக் கொண்டிருக்க, அடுப்பில் ஒன்று கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் சப்பாத்தி சுடும் கல் போட்டு விட்டு, சப்பாத்தி போடும் கட்டையில் உருண்டைகளை விரிக்க ஆரம்பித்தேன். முதல் சப்பாத்தி கல்லில் ஒழுங்காக போய்ச் சேர்ந்தது.

இரண்டாவதை கட்டையில் வைத்து விட்டு நிமிர்ந்தால் தொலைபேசி அடித்து நின்றது. கூப்பிட்டவர்கள் காலை வேளையில் தொந்தரவு வேண்டாம் என்று திரும்பி அழைக்கும் போது அழைக்கட்டும் என்று ஒரே மணி ஒலிக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தார்கள் (என்று நினைக்கிறேன்).

அந்தப் பொறுமை இல்லாமல் உடனடியாக திருப்பி அழைத்து முகத்துக்கும் தோளுக்கும் நடுவில் செல்பேசியை இடுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துத் தொடர்ந்தேன். கூடவே சப்பாத்தி இடுவதையும் நிறுத்தவில்லை, கல் காய்ந்து அடுத்த சப்பாத்தி தயாராகி விட வேண்டுமே! கை அசைவில் உடல் அசைவில் செல்பேசி நழுவி (அவசரப்படாதீர்கள்) தரையில் விழுந்தது. எதிரில் பேசியவர்கள் என்ன நினைத்தார்களோ, அவசர அவசரமாக எடுத்து மீண்டும் இடுக்கிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தேன், கை வேலையும் நிற்கவில்லை.

இந்த முறை விழுந்தது நழுவி சூடான பால் பாத்திரத்துக்குள் விழுந்தது. உடனடியாக எடுக்கும் அளவுக்கு பால் ஆறியிருக்கக் கூடவில்லை. இடுக்கி தேடி தொலைபேசியை வெளியில் எடுத்துப் பார்த்தால் காட்சி சன்னலில் வெள்ளையாக ஒரு புகை மூட்டம் தெரிந்தது.

ஒரு தடவை மழையில் நனைந்து கொண்டே பாலபாரதியைப் பார்க்கப் போயிருந்த போது, 'நனைந்திருந்த செல்பேசியை உடனே அணைத்து, மின்கலனை நீக்கி தண்ணீர் போக காய வைத்து விடுங்கள்' என்று சொன்னார். 'தண்ணீர் மின்சுற்று எதிலாவது புகுந்தால் எல்லாம் புகைந்து போய் விடலாம் என்று அந்த முன்னெச்சரிக்கை, நன்கு காய்ந்த பிறகுதான் மின்கலனையோ மின்னிணைப்பையோ இணைக்க வேண்டும். '

அந்த நினைவில், வெளியில் எடுத்த செல்பேசியைத் தண்ணீரில் ஒரு முறை காட்டி விட்டு, மின்கலனை கழற்றி, முன்பக்க மூடியையும் நீக்கி வைத்து விட்டேன். இருக்கிற நிலைமையில் இது வேறு செலவு வைக்கப் போகிறதா என்ன?

செல்பேசியின் தொலைபேசி பட்டியலில் 200 எண்கள் சேமித்து வைத்திருக்கும் வசதி இருந்தது. இப்போது எத்தனை எண்கள் இருக்கின்றன? சேவை அட்டையிலும் 200 எண்கள் வசதி இருக்கிறது. அதனால் எதில் எந்த எண் சேமிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாது (அதைப் பார்க்கும் வசதி இந்தக் கருவியில் இல்லை), இரண்டும் சேர்ந்து ஒரே பட்டியலாகத்தான் தெரியும்.

இப்போ யார் யார் எண்களை இழக்கப் போகிறோம்? ஈரம் காய்ந்த பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பிக்குமா என்று எண்ணங்கள் குமுறிக் கொண்டிருந்தன. பாலில் விழும் போது பேசிக் கொண்டிருந்தவர் அவரிடம் கோபித்துக் கொண்டு இணைப்பைத் துண்டித்து விட்டதாக நினைக்கலாம். (அவர்களது எண் சேமித்து வைத்திருக்கவில்லை).

அப்படி கோபிக்கும்படியான பேச்சுத்தான் நடந்து கொண்டிருந்தது. பேசிக் கொண்டிருந்தால் மழுப்பி விட்டு வைத்திருப்பேன். இப்போது திரும்ப அழைக்கும் வாய்ப்பும் இல்லை. மின்கலனை கழற்றி விட்டதால் மீண்டும் கருவி உயிர் பெற்றாலும் வந்த அழைப்புப் பட்டியல் எல்லாம் மறைந்திருக்கும்.

11 மணிக்கு ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கப் போக வேண்டும். ஓரிரு மணி நேரம் காய்ந்து விட்டதே என்று மின்கலனை பொருத்த முயன்றால், NOKIA என்று ஒரு மின்னு மின்னி விட்டு காட்சி சன்னல் வெறுமையாகி விட்டது. 'இன்னும் சில மணி நேரம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். இப்போ மின்கருகல் நடந்து விட்டது போலிருக்கிறதே' என்று நொந்து கொண்டு, அலுவலக நண்பரின் செல்பேசியை இரவல் வாங்கி, சேவை அட்டையைப் பொருத்திக் கொண்டேன்.

செல்பேசி உயிர் பெறும் வரை வரும் அழைப்புகளை இன்னொரு எண்ணுக்கு அனுப்பும் சேவையை செயல்படுத்த முயன்றால் வோடபோன் காலை வாரி விட்டது. கடைசி வரை அதைச் செயல்படுத்தவே முடியவில்லை.

மதியம் திரும்பி வந்து, மின்விசிறிக்குக் கீழே வைத்திருந்த கருவியின் பாகங்களை இணைத்துப் பார்த்தால் உயிர் வந்தே விட்டது. பாலும், நீரும் உலர்ந்து போய் வழக்கமாக இயங்கும் நிலை திரும்பி விட்டிருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை அணைத்துப் பிரித்து காய வைத்து, இரவிலும் பிரித்து போட்டு தூங்கி காலையில் பொருத்தினால் எதுவும் நடக்காதது போல இயங்க ஆரம்பித்தது.

நினைவுச் சின்னமாக ஒரு மேகம் போல திரையின் ஒரு பகுதியில் தெரிகிறது. திறந்து துடைத்துக் காய வைக்கும் தேவை இருக்கிறதோ!

ஞாயிறு, ஜூன் 20, 2010

எறும்புகள்

வீட்டில் ஒரு குளியலறையில் கதவு நிலை ஓரமாக எறும்புகள் புற்று மண் குவித்துக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே இது ஆரம்பித்து விட்டிருந்தது. ஒரு சில நாட்களுக்கு ஒரு முறை மணலை அள்ளி வெளியில் கொண்டு போட்டு விடுவேன். மணலை அள்ளிப் போடுவதும் கொஞ்சம் சிக்கலான வேலைதான், கைகளில் கால்களில் ஏறி கடித்த்த்து விடும் போர் எறும்புகள். மணலோடு வெளியில் போன எறும்புகள் தவிர மிஞ்சியவற்றைத் தண்ணீரோடு தள்ளி விட்டு விடுவேன்.

இரண்டு மூன்று நாட்கள் எதுவும் தெரியாது, மீண்டும் தம் முயற்சியில் மனம் தளராமல் மீண்டும் மண் குவிய ஆரம்பித்திருக்கும். 'ஏதாவது மருந்து வாங்கிப் போட வேண்டும்' என்று பரிந்துரைகள் வந்தாலும், அது போன்று வேதி மருந்துகளை தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம், தேவையில்லாமல் எறும்புகளைக் கொன்று குவிக்கவும் வேண்டாம் என்று அள்ளி வெளியில் போடும் முறையிலேயே தொடர்ந்து கொண்டிருந்தேன்.

கடைக்குப் போகும் போது மனதில் நினைவிருக்கும் அளவுக்குப் பொறுமை மீறிய பிறகு எறும்புப் பொடி வாங்கி வந்தேன். ஒரு குளியலறையை கிட்டத்தட்ட தமது ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்டது போல நடந்து கொண்டிருந்த எறும்புகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டிய நாள் வந்தாச்சு.

6 ரூபாய்க்கு QUEENS ANT POWDER என்று எறும்புப் பொடி, 100 கிராம் - 100% சுத்தமான கமாக்சைன் (Gamaxine) பொடி என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். பொத்தூர் கிராமம், சென்னை - 62ல் இருந்து சேர்மா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் பொதி.

சின்ன வயதில் எறும்புப் பொடிக்கு மசியாத எறும்புகள் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். "பொடி போட்டால் அதையும் தின்று விட்டு தமது வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள்" என்று சலித்துக் கொள்வார்கள். இந்தப் பொடியும் அது போலவா அல்லது உண்மையிலேயே வேலையைக் காட்டி விடுமா?

உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தோடு, ஒரு பிளாஸ்டிக் பையில் குவிந்திருந்த மணலை எறும்புகளோடு அள்ளினேன். பரபரவென்று சிதறி இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன. துடைப்பத்தால் கூட்டிக் கூட்டி மணலை எல்லாம் அள்ளி விட்டேன். இதற்குள் அள்ளும் முறம் வழியாகவும், பையிலிருந்தும் கைகளிலும், தரையிலிருந்து கால்களிலும் தாக்குதல் ஆரம்பித்திருந்தது. கடைசியாக சிதறியிருந்த எறும்புகளை ஒரு கூட்டு கூட்டி பையில் தள்ளினேன். இருந்தும் சில நூறு இன்னும் ஓடிக் கொண்டிருந்தன.

பையை வெளியில் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு (குப்பைகளில் கொஞ்சம் தளைக்கட்டும்), திரும்பி வந்து பொடிபொதியை வெட்டித் திறந்து எறும்புகள் துளை செய்திருந்த இடுக்குகளில் தூவினேன். எனது வளமை போல தேவைக்கு அதிகமாகவே தூவினேன்.

கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் ஹிட் போல அடித்தது செத்து விழுவது போல இல்லை. எறும்புகள் பொடிக்குள்ளும் தமது ஓட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தன. (கரப்பான் பூச்சிகளை ஒரு அடி அடித்து வீட்டுக்கு வெளியில் கொண்டு விடுவதுதான் வழக்கமாகி விட்டிருக்கிறது.) அப்படியே கையோடு, குளியலறை சுவர்களையும், தரையையும் தேய்த்துக் கழுவி விட்டு விட்டு, விடாப்பிடியாக இருந்த கறைகளை கழுவும் அமிலத்தால் கரைத்துத் தள்ளி விட்டு வெளியில் வந்தேன்.

ஒரு மணி நேரம் கழிந்து போய்ப் பார்த்தால், தூவிய பொடியின் நடுவில் அதைச் சுற்றி கும்பல் கும்பலாக எறும்பு உடல்கள். வருத்தமாகத்தான் இருந்தது.

எறும்புகளின் குடியிருப்பை வைத்து இரண்டு திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக ஓரிரு மாத இடைவெளியில் வெளியான சித்திரப் படங்கள்.

ANTZ என்ற படத்தில் வேலைக்கார எறும்புகள், போர் எறும்புகள், ராணி, இளவரசி, சூழ்ச்சி செய்யும் அடாவடி தளபதி என்று கொண்டு போய் Z என்ற வேலைக்கார எறும்பு தளபதியின் சூழ்ச்சியை முறியடித்து இளவரசியின் காதலைப்பெற்று கைப்பிடிக்கும் கதை. எறும்புக் கூட்டுக்குள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பெரிதாக சிந்தித்து நுணுக்கமாக படம் எடுத்திருந்தார்கள். எல்லாமே வரையப்பட்ட சித்திரங்கள், பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தது மட்டும் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள்.

A Bugs Life என்ற படத்தின் கதை பெரும்பாலும் திறந்த வெளியில் நடைபெறுகிறது. இதுவும் வரை ஒளிப்படம்தான். எறும்புகளை மிரட்டி தமக்கு உணவு சேர்த்துத் தரும்படி அடாவடி செய்யும் வெட்டுக் கிளிகளை முறியடிக்க flik என்ற எறும்பு முன் முயற்சி எடுத்து, பல குளறுபடிகளுக்குப் பிறகு இறுதியில் எறும்புகள் வெட்டுக் கிளிகளை துரத்தி அடித்து flik இளவரசியைக் கைப்பிடிக்கிறது. வெளிப்புறக் காட்சிகள் அங்குலம் அங்குலமாக செதுக்கி அசத்திய படம்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்த பிறகு, எறும்புகள்தானே என்று தேய்த்து விட்டு அல்லது மருந்து போட்டு படுகொலை செய்து விட்டு போக முடிகிறதில்லை. 'எறும்புக் குழுமத்தில் என்னென்ன உள் நிகழ்வுகள் இருக்கும், எவ்வளவு உழைப்பில் தமது புற்றை உருவாக்குகின்றன, அவற்றை குலைக்கும் போது எப்படி உணர்கின்றன' என்று மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு குறைந்தது ஒரு நூறு எறும்புகளின் உயிரற்ற உடல்களைப் பார்க்க வேண்டிய செயலை செய்து விட்டு அதை பதிவும் செய்தாகி விட்டது.

தமிழ் டாட் நெட், சிட்னி பாலா இணையத் தமிழ் இளைஞர்களை ஒன்று சேர்த்து சாதிப்பதற்கு ஆரம்பித்த மடற்குழுவின் பெயரும் எறும்புகள்தான். எறும்புகள் போல சுறுசுறுப்பாக கூடு கட்டி, கடைசியில் யாரோ வந்து காலால் உதைத்துப் போட்டு விட்டுப் போவது, அல்லது பாம்பு ஒன்று எறும்புகளைத் தின்று விட்டு தான் குடியேறி விடுவது மனித சமூகங்களிலும் நடக்காமலா இருக்கிறது!

திங்கள், ஜூன் 07, 2010

பயணம் - 9 (திருமலை)

முன்பெல்லாம் வரும் போது பேருந்து நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை நடந்து வந்து மலையில் ஏறி விட்டு திரும்பும் போது பேருந்து பிடித்து இறங்கிக் கொள்வேன். ஏறும் போது எவ்வளவு சீக்கிரமாக எவ்வளவு வேகமாக ஏற முடியும் என்று என்னுடன் நானே போட்டி போட்டுக் கொண்டு ஏறுவது வழக்கம். ஒன்றரை மணி நேரத்தில் ஏறியது கூட உண்டு.

திருப்பதியிலிருந்து அலிப்பிரி வரை 4 கிலோமீட்டர் தூரம் இருக்கும். மலையின் மீது நடந்து ஏற 9 கிலோமீட்டர் தூரம். முதல் கட்டத்தில் சுமார் 3000 படிகள் கொண்ட செங்குத்தான மலை. அதன் பிறகு படிகளும், மெலிதான ஏற்றங்களுமான பாதை. ஒன்றரை மணி நேரம் முதல் 3,4 மணி நேரம் வரை ஏறுவதற்கு பிடிக்கும்.

பிற்பகல் இரண்டு அல்லது இரண்டரை மணிக்கு ஏற ஆரம்பித்தது, அடுத்த நாள் காலை விடியும் நேரத்தில் போய்ச் சேர்ந்தேன். சில இடங்களில் நான்கைந்து படிகள் ஏறிய உடனே உட்கார வேண்டியிருந்தது. இடையிடையே தண்ணீர் குடிக்க குழாய்கள் நிறைய இருக்கும். கழிவறைகளையும் இந்த தண்ணீர் குழாய்களையும் அங்கங்கு இடித்து புதிதாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஜூன் மாத வெயிலில் அதிகம் கூட்டமாக இருப்பது போலத் தெரியவில்லை.

நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், களைப்படையும் போது உட்கார்ந்து கொள்ள வேண்டும், தோதுவாக இருந்தால் படுத்து கண் மூடித் தூங்க வேண்டும். வழி நெடுக மின் விளக்குகள் பொருத்தியிருக்கிறார்கள். இருட்டிய பிறகும் நிறைய பேர் நடந்து கொண்டுதான் இருந்தார்கள். திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு கூர்க்கா போல தென்படும் காவலர்கள். பூசைக்கு தமிழ் பூசாரிகள் வழிவழியாக உரிமை வைத்திருப்பது போல காவலுக்கு இவர்களுக்கு தனி உரிமை இருக்கலாம்.

இரவு ஏற ஏற, நடப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்து ஆங்காங்கே நடைபாதையின் ஓரங்களில் குடும்பங்களாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் இருக்கும் கடைகளும் ஏறக் கட்டி மூடியிருந்தார்கள். அந்தக் கணக்கு எல்லாம் பார்க்காமல், நடப்பது, உட்காருவது, தூங்குவது என்று நகர்ந்து கொண்டே இருந்தேன்.

நடந்து போகும் யாத்திரிகர்களுக்கு உடனடி தரிசனம், இலவச தங்குமிடம், இலவச உணவு, இலவச லட்டு, மொட்டை போட்டுக் கொள்வதும் இலவசம் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்கிறார்கள். காலி கோபுரம் என்ற இடத்தில், நடந்து போகும் பாதையில் இருக்கும் இடத்தில், அடையாளச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில கிலோமீட்டர்கள் தூரத்தில், அதில் முத்திரை வாங்கி நடந்து போவதை சான்று படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சீட்டைப் பயன்படுத்தி இலவச வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.

PAC எனப்படும் பயணிகள் வசதிகள் மையத்தின் ஒரு கட்டிடத்தில் இந்த வசதிகள் கொடுக்கிறார்கள்.

1. தங்குமிடம் என்பது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு ஒரு லாக்கர், அந்த லாக்கர் இருக்கும் கூடத்தில் ஒரு இடம் பிடித்து தூங்கும் வசதி. லாக்கர் சாவி வாங்க வைப்புப் பணம் கொடுக்க வேண்டும்.

2. உணவு, அந்தக் கட்டிடத்தில் அன்னதானம் என்று சாப்பாடு போடுவது.

3. மொட்டை போடுவதற்கு சீட்டு வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். அதிகார பூர்வமாக இலவசமாக இருந்தாலும் மொட்டை போடும் தொழிலாளிக்கு 15 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது எழுதிய விதிக்கு மாற்றான நடைமுறை.

4. கோயிலுக்குள் போவதில் நடைபாதைப் பயணிகளுக்காக தனி நுழைவாயில். அதிக நேரம் காத்திராமல், உடனேயே கூண்டிலிருந்து வெளியில் அனுப்பி வரிசையில் சேர்த்து விடுவார்கள். வரிசை கோவிலைச் சுற்றி வெளியில் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கலாம்.

5. இலவச லட்டு தரிசன வரிசையில் கிடைக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வெளியில் லட்டு வினியோக மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பொது தரிசனம் என்ற முறையில் போனால் கூண்டில் காத்திருப்பது ஏழெட்டு மணி நேரம் வரை நீளலாம். காத்திருக்கும் போது சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அதிகாலை விடிய ஆரம்பித்திருக்கும் பொழுது. பயணிகள் சேவை மையத்துக்குப் போய் மொட்டை போட சீட்டு வாங்கிக் கொண்டேன். மொட்டை போடும் இடத்துக்குப் போகாமல், முதல் தளத்துக்கு ஏறி, நன்றாக குளித்துக் கொண்டேன். நடந்து அழுக்கும் தூசியுமாக மொட்டை போடுபவரை அவதிப் படுத்துவானேன்! துணிகளையும் நனைத்துப் போட்டுக் கொண்டேன்.

சாப்பிடுவதற்கு அன்ன தானம் பகலில்தான் நடக்கும். மொட்டை போட்டுக் குளித்து விட்டு கோவிலை நோக்கிப் போனால், சில நிமிடங்கள் காத்திருக்கும் கூண்டில் தாமதிக்க நேர்ந்தால் அங்கு ஏதாவது சாப்பிடக் கிடைக்கலாம். எதுவும் சாப்பிட்டு ஒன்றரை நாள் ஆகி விட்டிருந்தது.

மொட்டை போடும் இடத்தில் நீளமான வரிசைகள். சீட்டில் போட்டிருந்த எண் வரிசையில் நின்றால் ஒவ்வொருவராக மொட்டை போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். பெண்களுக்கு மொட்டை என்று மிகச் சில பேர், மற்றவர்கள், நீண்ட கூந்தலில் மூன்று இழைகளை மட்டும் வெட்டிக் கொண்டார்கள். குழந்தைகள் கதறிக் கொண்டு மொட்டை, வளர்ந்த ஆண்களுக்கு தலை மட்டுமில்லாமல், மீசை தாடியும் மழிக்க வேண்டிய அதிக வேலை.

தரையெல்லாம் தண்ணீர். முடியை திரட்ட, தண்ணீரை தள்ளி விட பணியாளர்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு பேர் நின்றிருந்தாலும், முடி குவிந்து கொண்டிருந்தாலும் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவில் உயரமான கூரை, காற்று சுழற்சிக்கு exhaust விசிறிகள். ஒன்றரை இரண்டு மணி நேரக் காத்திருப்பு. ஈரத்தைப் பார்க்காமல் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன்.

மொட்டை போட்டுக் கொண்டு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டிய 15 ரூபாயைத் தராமல் நகர்ந்து கொண்டிருந்தார்கள் ஓரிருவர். நானும் அப்படித்தான் செய்ய வேண்டுமா? ஆரம்பத்திலேயே, காசு தரப் போவதில்லை என்று சொல்லி விடுவது என்று முடிவு செய்து கொண்டேன். இடையிடையே மொட்டை போடுபவர் ஓய்வு இடைவெளி என்று போக வேண்டும். நான் காத்திருந்த அந்த நேரத்தில் இரண்டு முறை போய் வந்தார்.

கடைசியாக என் முறை வரும் போது, 'காசு இல்லாமல் வந்தேன். உங்களுக்குத் தர வேண்டிய காசு தர முடியாது' என்று சொன்னதும் சிரித்து தலை ஆட்டிக் கொண்டார். எந்தக் கீறலும் இல்லாமல் தலையையும் முகத்தையும் மழித்து முடித்து விட்டார்.

மறுபடியும் முதல் தளத்துக்குப் போய் குளித்து, இன்னும் காய்ந்திராத உடைகளையே மாட்டிக் கொண்டு கீழே வந்தால் சாப்பாட்டுக் கடை எதுவும் ஆரம்பித்திருக்கவில்லை. கோவிலுக்குப் போக ஒரு கிலோமீட்டர் நடை தூரம் இருக்கும். நடைபாதை யாத்திரிகர்கள் நுழைவதற்கு இன்னும் விரிவாக கம்பிகள் போட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள். நடந்து வந்தால் இலவச தரிசனம் என்பது பரவலாக தெரிந்து நிறைய பேர் நடந்து வர ஆரம்பித்திருக்கலாம்.

பாதுகாப்பு சோதனை தாண்டி கூண்டுக்குள் நிற்கவே தேவையில்லாமல் கதவு திறந்திருந்தார்கள். இங்கும் சாப்பிட எதுவும் கிடைக்காது. வரிசையில் சேர்ந்து கொண்டேன்.

வரிசை என்பது நெருக்கமான ஒரு கூட்டம் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டே முன்னேறுவதுதான். லட்டுக்கான இலவச சீட்டு எதுவும் கொடுக்கவில்லை. காசு கொடுத்து வாங்கும் சீட்டுகள் மட்டும் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே நகர்ந்து நகர்ந்து அதிகம் தேக்கம் இல்லாமல் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் கோவிலைச் சுற்றி வெளியில் வந்து விட்டேன். வெளியில் வரும் போது பிரசாதம் என்று ஒரு கையளவு பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என்று ஏதாவது கொடுப்பார்கள். பொங்கல் கிடைத்தது. அதை வாயில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன்.

நேராக சாலைக்கு வந்து போன ஒரு இரு சக்கர வண்டியில் பயணிகள் வசதிகள் மையத்தில் விட்டு விடச் சொன்னால் ஏற்றிக் கொண்டு வந்து விட்டார். நேராக அன்னதான வரிசை. அப்போதுதான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. கூடம் நிறையும் வரை உள்ளே விட்டு விட்டு கதவை மூடி விடுவார்கள். அடுத்த பந்திக்கு வரிசை வளர ஆரம்பிக்கும். இப்போது வரிசை நகர்ந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட கதவின் அருகில் போகும் போது நிறுத்தி கதவை சாத்தி விட காத்திருத்தல். அந்த பந்தி சாப்பிட்டு முடித்து, தூய்மை செய்யப்பட்டு, அடுத்த பந்திக்கு இலை போடுவதை வரை காத்திருப்பு. அதற்குள் வரிசை வளர்ந்து விட்டிருந்தது. அது ஒரு முக்கால் மணி நேரம் ஆகியிருந்திருக்கும்.

சோறு, சாம்பார், ரசம், பொரியல், மோர் பெரிய வண்டிகள் போலக் கொண்டு வந்து இரண்டு பேர் இரண்டு பக்கமும் ஊற்றிக் கொண்டே போவார்கள். வேக வேகமாக எவ்வளவு முடியுமோ சாப்பிட்டுக் கொள்ளலாம். முன்பு ஒரு முறை சாப்பிட்டதை விட இப்போது தரம் குறைந்திருப்பதாகத் தோன்றியது.

சாப்பிட்டு விட்டு திரும்பும் வழியைப் பிடித்து விட்டேன். 'கோயிலுக்கு வந்தோம், கூட்டத்தில் பணப்பை களவு போய் விட்டது, ஊருக்குப் போகக் காசு இல்லை' என்று குழந்தையுடன் தம்பதியினர், குடும்பமாக என்று கேட்பவர்களை நடந்து வரும் பாதையில் சந்திக்கலாம். அது போல 'கோவிலுக்கு மெட்ராசிலிருந்து நடந்தே வந்தேன், திரும்பிப் போக பேருந்துக்குக் காசு வேண்டும்' என்று கேட்க மனமில்லை.

காலில் போட்டிருந்த செருப்பு திருப்பதியில் வாங்கியதுதான். பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு கடையில் ஒரு ஆண்டுக்கு முன்பு, போட்டிருந்த செருப்பு தொலைந்து போய் விட்டிருக்க வாங்கினேன். அந்தக் கடைக்குப் போய் செருப்பைக் காட்டி பழைய வாடிக்கையாளர் என்று நினைவூட்டி 'செருப்பை வைத்துக் கொண்டு சென்னைக்குப் பேருந்து கட்டணம் கொடுங்கள், இரண்டு நாளில் திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து செருப்பை எடுத்துக் கொள்கிறேன்' என்று ஒரு பரிமாற்றம் நடத்தலாம் என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டு மலை இறக்கத்தை ஆரம்பித்தேன்.

கடைகள் மூடுவதற்கு முன்பு போய்ச் சேர வேண்டும். மதியம் மூன்று மணி தாண்டியிருக்கலாம். இறங்கும் போது வேகமாக இறங்கி விடலாம். தெம்புக்கு வயிறும் நிறைந்திருக்கிறது. திட்டம் பலித்து விட்டால், காசை வாங்கி இரவுப் பேருந்து. காலையில் சென்னையில் இறங்கி காசு எடுத்துக் கொண்டு வார இறுதியில் திரும்பி வந்து கடைக்காரருக்குக் கொடுத்து விடலாம். பலிக்குமா?

மாற்றுத் திட்டங்கள் எதுவும் ஒத்து வரவில்லை. கீழே இறங்குவபர்கள் யாரிடமாவது கேட்பதும் நடக்கவில்லை. அவ்வளவு வேகமாகவும் இறங்கி விட முடியவில்லை. அலிப்பிரி வந்து சேரும் போது இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது.

திருப்பதி பேருந்து நிலையம் வரை ஏற்றிச் செல்லும் நடைபாதை யாத்திரிகர்களுக்கான இலவச பேருந்து வந்தது. அதில் ஏறி பேருந்து நிலையத்துக்கு முன்பு இறங்கிக் கொண்டேன்.