ஏப்ரல் 19, 2012.
நாட்குறிப்பு எழுதி ஒரு வாரம் தாண்டி விட்டிருக்கிறது. போன வாரம் புதன் கிழமை எழுதியது. வியாழக்கிழமை காலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டதால் எழுதவில்லை. வியாழக்கிழமை இரவே சென்னையிலிருந்து திரும்பி வெள்ளியன்று தாமதமாக எழுந்தது. சனிக்கிழமை மீண்டும் காலையில் எழுந்து சென்னைக்கு. ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் புறப்பட எழுதவில்லை. திங்கள் கிழமை ஞாயிற்றுக் கிழமை களைப்பை போக்க தாமதமாக எழுந்திருந்தேன். திங்களன்று ராணிப்பேட்டை போய் விட்டு வந்த களைப்பு செவ்வாய் கிழமை காலையை சோம்பலாக்கியது. புதன் கிழமை, அதாவது நேற்றும் சோர்வான காலையாக ஆரம்பித்தது. இன்று சரியாக எழுந்து உட்கார்ந்து விட்டிருக்கிறேன்.
நேற்று காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி. திராட்சை பழங்களில் மீதியிருந்தவற்றை உதிர்த்து கிண்ணத்தில் எடுத்துக் கொண்டேன். தண்ணீரை கொதிக்க வைத்து காப்பித் தூளைப் போட்டு, சர்க்கரையும் சேர்த்துக் கொண்டேன். நிறைய வேலைகள் மீதியிருந்தன. முதலில் மொழிபயர்ப்புகளை திருத்த ஆரம்பித்தேன். அனுப்பிய கட்டுரையையும் தரவிறக்கி திருத்த ஆரம்பித்தேன். இந்த வேலைகளிலேயே நேரம் போனது. 8 மணிக்கெல்லாம் வந்து பாத்திரங்கள் கழுவ ஆரம்பிக்க, அவருடன் பேசிக் கொண்டே உணவுக்கான தயாரிப்புகள் செய்ய ஆரம்பித்தேன்.
முந்தைய நாளின் பழையது இருந்தது. நல்ல வேளையாக சாம்பார், மாங்காய் ஊறுகாய் எல்லாம் தீர்ந்து விட்டிருந்தன. ஓட்ஸ் பொதியுடன் கிடைத்த சமையல் பக்குவங்களுக்கான புத்தகத்தை புரட்டினால் ஓட்ஸ் பட்டாணி தோசை என்று போட்டிருந்தது. ஓட்சையும் உளுந்தையும் பொடித்து கலந்து, உப்பு சேர்த்து கரைத்துக் கொண்டு தோசை. பட்டாணியை வேக வைத்து வாசனை பொருட்களுடன் தோசையில் மடித்து பட்டாணி தோசை. முதல் பகுதியை மட்டும் செய்ய முடிவு செய்தேன். உளுந்தை கழுவி மிக்சியில் அரைக்கப் போட்டால் ஈரப் பதத்தில் பக்கத்தில் ஒட்டிக் கொண்டது. இப்படி உளுந்தை ஊற வைக்காமல், அல்லது வறுக்காமல் பொடித்து பயன்படுத்துவது செரிமான கோளாறை உருவாக்கும், உருவாக்கியது.
அதனுடனேயே ஒரு கப் ஓட்சை போட்டு பொடித்தேன். ஓட்ஸ் நல்ல மாவாக ஆனது. மூசிலியில் பயன்படுத்தப்படும் ஓட்ஸ் பெரியதாக துகள்களாக இல்லாமல் இருக்கிறது. திங்கள் கிழமை ஓட்சில், பழங்கள் சேர்த்து பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் என்று சிறிதளவு வறுத்தால் பொடிப்பொடியாக கரிந்து போக ஆரம்பித்தது.
ஓட்சுடன் சேர்ந்து உளுந்தும் பொடிந்து விட்டது. கொஞ்சம் குருணையாக இருந்தது. மொத்தத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி, உப்பு சேர்த்து கரைத்தேன். கொஞ்சம் சீரகமும்.
'என்ன புதுசு புதுசா செய்கிறேயே' என்று ஆச்சரியப்பட்டார். 'கொடுத்து வைக்கல, இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு செய்பவனோட' என்று அலுத்துக் கொண்டாள். 'இதையெல்லாம் மனுசன், மனுசி திம்பானா' என்று பாதி நகைச்சுவையாக சொன்னேன்.
டெக்கான் குரோனிக்கிளில் ஒரு 11 வயது சிறுமியைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆப்கனில் தற்கொலை தாக்குதலில் மாட்டிக் கொண்ட அந்த சிறுமியின் குடும்பத்தில் பலர் இறந்து விட்டிருக்கின்றன. அந்த பெண்ணின் வயதுதான். ஒரு நாளில் பல முறை அவர்களை நினைக்க வேண்டிய வந்து விடுகிறது. இன்னும் வயதாக வயதாக தேடுதல் அதிகமாகுமோ என்னவோ.
தோசை சுடுவதற்கு தோசை கல்லையும் அகப்பையும் கழுவி நீட்ட, அதை விட்டு விட்டு மூடி வைத்தேன். இப்போதைக்கு பழையது குடித்து விட்டு, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஊறிய பிறகு தோசை சுட்டுக் கொள்வேன். எப்படி வருகிறது என்று பார்க்க ஆர்வமாக இருந்திருக்கலாம். அவர் போன பிறகு பழையது அனைத்தையும் தட்டில் ஊற்றி உப்பு போட்டு, தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி வைத்துக் கொண்டேன். நன்றாகவே இருந்தது. மோரோ எந்த ஒரு குழம்போ சேர்க்காமல் கூட அரிசிச் சோற்றுக்கான மணத்தோடு தண்ணீர் ஊற்றி வைத்த பழையதின் ருசி தனிதான். இதை சாப்பிட்டால் இதையெல்லாம் தின்பதா என்று சிலருக்கு உண்டு. அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாதது.
சாப்பிட்டு விட்டு முடி வெட்டப் போனேன். ஒவ்வொரு வேலை செய்து முடித்த பிறகும் சில நிமிடங்கள் இணையத்தில் இணைந்து மேய்தல். இதற்குள் மொழிபெயர்த்த இரண்டு கட்டுரைகளையும், சரி பார்த்த கட்டுரையையும் அனுப்பி விட்டேன். இன்னும் மீதி இரண்டையும் இன்று முடித்து விட முடியுமா என்று கேட்டால், மனிதன் நினைத்தால் முடியாதது எதவும் இல்லை என்று தத்துவம் சொன்னார்.
இறுக்கமான பேன்டையும் பிங்க் கோடு போட்ட டி-சட்டையையும் போட்டுக் கொண்டு போனேன். முடி வெட்டும் கடைக்கு அருகில் போனால் அங்கு கரண்ட் இல்லை, கடைக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நாற்காலியில் ஒருவர் காத்திருந்தார். பக்கத்து பத்திரிகை கடைக்குப் போய் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டிருக்கிறார்கள். சென்னையை போல செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.
கடைக்குள் புழுக்கம், வேர்வை ஆறாக கொட்டியது. எனக்குத்தான் அதிகமாக வேர்த்தது. பழையது குடித்து விட்டு வந்ததால் அந்த ஈரம் எல்லாம் வெளியில் போக முடிகிறது போலிருக்கிறது.
உதவிக்கு வந்த பையன் ஷேவிங் மட்டும்தான் செய்வான் போலிருக்கிறது. எனக்குப் பிறகு வந்தவரை இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்து ஷேவ் செய்ய ஆரம்பித்தான். முதலில் முடி வெட்ட ஆரம்பித்தவரை சீக்கிரம் முடித்து விட்டு என்னை கூப்பிட்டார். வெயிலும், மின் வெட்டும் இரு முனை தாக்குதல்களாக வாட்டி எடுக்கிறது. 'தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது, உற்பத்தி அதே நிலையில் வைத்திருந்தார்கள், அதுதான் மின் வெட்டுக்கு காரணம்' என்று விளக்கினார் முடி வெட்டுபவர். அவருக்கும் வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்து கொஞ்சம் சமாதானம். தலை, கழுத்து எல்லாம் வேர்த்து வடியும் போது முடி வெட்டுவது கூடுதல் சிரமமாக இருக்கும்.
ஒரு வயதான, சிகப்பான ஒருவர் வந்து உட்கார்ந்தார். ஷேவிங் எவ்வளவு என்று கேட்டார். 20 ரூபாய் என்று சொன்னதும், 10 ரூபாய் இல்லையா என்றார். அவரிடம் கொஞ்ச நேரம் வாக்குவாதம் செய்து விட்டு, 'இந்த இந்தி காரனுங்களே இப்படித்தான், அவங்க ஊரில் இருப்பது போலவே இங்கேயும் எதிர்பார்க்கிறான்' என்று அலுத்துக் கொண்டார் கடைக்காரர். 'பேசாம கடையை மூடி விட்டு வாட்ச் மேன் வேலைக்கு போகலாமான்னு நினைக்கிறேன். எங்க அப்பா அப்படித்தான் போகிறார், மாதம் 12,000 ரூபாய் கிடைக்கிறது. மெட்ராசில, குடும்பத்தோட மெட்ராசுக்குப் போய் விட்டா நல்ல காசு' என்றார்.
'இது உங்க சொந்த தொழில், உழைச்சு மதிப்பா சம்பாதிக்கிறீங்க, மெட்ராசுக்குப் போய் யாருக்கோ கும்பிடு போட்டு வாழ்வது இதற்கு ஈடாகுமா. அது உங்க மனதுக்கு திருப்தியை தராது, பணம் வேணும்ணா கூடுதல் இருக்கலாம்' என்றேன். அவர் மனதில் சந்தோஷ புன்னகை. 'ஆமாமா' என்று ஒத்துக் கொண்டார்.
இப்போது, காலையில் சரியாக 4 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. அதற்குள் துணியை ஊற வைத்து விட்டு, பல் தேய்க்க எடுத்திருந்தேன். கரண்ட் கட்டானதும் நாற்காலியை வெளியில் போட்டு, ஸ்டூல் ஒன்றையும் வெளியில் எடுத்து மடிக்கணினியை இயக்கினேன். கையில் எடுத்திருந்த பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்து பல் தேய்த்து முடித்து விட்டு வெளியில் வந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் கொசு பட்டாளம் படை எடுக்கிறது. சட்டை போடாமல் உட்கார்ந்திருந்ததால் உடம்பையும் தோளையும் மொய்க்கின்றன. போய் சட்டையை, முழுக்கைச் சட்டையை போட்டுக் கொண்டேன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சத்துவாச்சாரியில் ஒரு கடையில் வாங்கிய சட்டை. சென்னையிலிருந்து வந்து மாற்றுச் சட்டை இல்லாததால் வாங்கிய சட்டை. வெள்ளை பருத்தி சட்டை. முஸ்லீம் திருமணத்தின் போது மாப்பிள்ளை போட்டுக் கொள்ளும் சட்டையாம். எனக்கு இடுப்பை சிறிதளவுதான் தொடும் அளவுக்குத்தான் நீளம். இப்போது கொசு. வெளியில் தெரியும் காலின் பாதங்கள், சாரத்தின் ஊடாக தொடை என்று கடிக்கின்றன. பேன்ட் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் அதையும் கொஞ்சம் தவிர்க்கலாம். எப்படியும் பாதங்கள், கழுத்து, முகம் திறந்துதான் இருக்கும். ஓடோமாஸ் போன்று கொசு எதிர்ப்பு களிம்பு வாங்கி பூசிக் கொள்ளலாம்.
வெளியில் மாடிப்பகுதியில் எதோ கருப்பாக தெரிகிறதே என்று வெளிச்சம் அடித்துப் பார்த்தால் தலையோடு மூடிக் கொண்டு யாரோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் ஒருவராயிருக்கலாம்.
மீண்டும் நேற்றைய நிகழ்வுகளுக்கு. அவ்வளவு புழுக்கம், வேர்வைக்கு மத்தியிலும் முடி வெட்டும் முறையில் எதையும் குறைத்துக் கொள்ள வில்லை. கத்திரி வைத்து வெட்டுவது, பக்க வாட்டில் வெட்டுவது, கத்தியால் ஓரங்களை சரி செய்வது என்று முழுவதும் செய்து முடித்தார். ஷேவிங் வேண்டாம் என்று சொல்லி விட்டதில் அவருக்கு ஒவ்வொரு முறையையும் போலவே வருத்தம்தான். 40 ரூபாய் வாங்கிக் கொண்டார். தொலைபேசியையும், பேனாவையும், வீட்டிலேயே விட்டு விட்டு வந்திருந்தேன்.
வீட்டுக்கு வந்து குளிக்க வேண்டும். குளித்து விட்டு தோசை சுட்டேன். நன்றாகவே வந்திருந்தது. உளுந்து அடை போல வந்தது. சீனியுடன் சாப்பிட்டேன்.
அதன் பிறகு வழக்கம் போல இணையம். ஜாவாஸ்கிரிப்டு பைபிள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன். அறிமுகம், பயிற்சி, மொழி விபரங்கள் முடிந்து இப்போது ஒவ்வொரு பொருளாக விளக்கும் பகுதி வந்திருக்கிறது. அதுவும் நாள் முழுவதும் ஓடியது. நேற்று ஜேகொரி பற்றிய புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஜாவா ஸ்கிரிப்டை கற்றுக் கொண்டு அதன் பிறகு ஜேகோரியை பயன்படுத்த ஆரம்பித்தால் உதவியாக இருக்கும்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சட்டை, பேன்ட் மாட்டி விட்டு புறப்பட்டேன். பிஎஸ்என்எல் டேட்டா கார்டுக்கான எண் குறிக்கப்பட்ட நாளேடு எடுத்துக் கொண்டு அதனுள், காசோலைகளை சொருகிக் கொண்டேன். வாலாஜாவில் டெப்பாசிட் செய்த காசோலை இன்னும் கணக்கில் சேர்ந்திருக்கவில்லை. இன்று போய் பார்க்க வேண்டும். முதலில் ரீசார்ஜ் செய்யும் கடை. கடைப்பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டே எண்ணை குறித்துக் கொண்டாள். சில நொடிகளில் தகவல் வந்து விட்டது. 750 ரூபாய் ரீசார்ஜ் ஆகியிருந்தது. 5 GB பயன்பாடு அடுத்த 18ம் தேதி வரையில். முன்பே மீதியிருந்த 50 MBயையும் சேர்த்து காட்டியது.
சாலையைக் கடந்து வங்கிக்கு போனேன். நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள். முதல் டெல்லரிடம் படிவம் வாங்கிக் கொண்டு அவர் முன்பிருந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் படிவங்களை நிரப்பி கொடுத்து விட்டேன்.
அப்படியே கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வரலாம் என்று நினைத்திருந்தேன். வெயிலில் போக மனம் வரவில்லை. வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.
தொலைபேசியவரிடம் நிலைமையைச் சொன்னால் வெள்ளிக் கிழமை மதியத்துக்குள் முடித்து விட்டால் கூட போதும் என்றார். கொஞ்சம் கண்ணயர்ந்து எழுந்து கடைக்குப் போனேன். ஒரு மேகி நூடுல் பொதியும், 1 ரூபாய் காபி பொடி 5 பொதிகளும் வாங்கிக் கொண்டேன். கடைப் பையனோடு இன்னொருவர் உட்கார்ந்திருந்தார், அவர்தான் உரிமையாளர் என்று தோன்றியது.
தொலைபேசி வெள்ளிக்கிழமை, அதாவது நாளை மாலை உரைக்கு புரஜெக்டர் தயார் செய்து விடுவதாகச் சொன்னார். இணையம் பற்றி பேசும் போது காட்சியாக காட்டினால்தான் புரியும் என்பதால் ஏற்பாடு செய்து விட்டார்களாம். இணையத்தில் தேடி பழங்கால வாடிக்கையாளர் உதவி பற்றிய வீடியோவை எடுத்துக் கொண்டேன். மெடிவல் சப்போர்ட் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை படிப்பதற்கு உதவி கேட்கும் காட்சி. அந்தக் காட்சி நமக்கு சிரிப்பாக தோன்றினாலும் அப்படித்தான் நடந்திருக்க முடியும். இன்றும் ஒரு சிறு குழந்தை புத்தகத்தை புரட்டவும், படிக்கவும் கற்றுக் கொள்வது அது போன்ற தடுமாற்றத்துக்குப் பிறகுதான். என்ன, பெரியவர்கள் படிப்பதை பார்த்து தெரிந்து கொள்வதும், பெரியவர்கள் இயல்பாக கற்றுக் கொடுப்பதும் நடந்து விடுகிறது.
அதே போல மின்னணு படிப்பான்களும் இப்போதைக்கு புதுமையாக தெரிந்தாலும் இன்னும் சில தலைமுறைகளில் இயல்பான படிக்கும் கருவிகளாக மாறியிருக்கும். காகிதங்கள் செய்ய மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், புத்தக தொகுப்புக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளலாம். கருவிக்கு மின்ஊட்டம் தேவைப்படுவது, அச்சிட்ட எழுத்துக்கு இணையான துல்லியம் இல்லாமல் இருப்பது இரண்டும்தான் இப்போதைய குறைபாடுகள். இரண்டுமே எதிர்கால தொழில் நுட்ப வளர்ச்சியில் சரிசெய்யப்படக் கூடியவைதான்.
கூடவே, வணிக நோக்கில் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பெரிய தொல்லையாக இருக்கின்றன. கிண்டில், நூக், ஆப்பிள் ஐ-பேட், டேப்லட் கணினிகள், பெரிய திரை தொலைபேசிகள் என்று படிப்பதற்கு பல கருவிகள் இருக்கின்றன. படிப்பதற்கான புத்தகங்கள் மொபி வடிவத்தில் கிடைக்கின்றன. பிடிஎப் வடிவமும் அனைத்து கருவிகளிலும் படிக்க முடியும். இதுதான் இன்றைய நிலைமை. இன்னும் சில ஆண்டுகளில்
1. ஒரு பேப்பர் பேக் அளவில், கனத்தில் கருவி
2. சூரிய ஒளியிலிருந்து ரீசார்ஜ் செய்யும் மின்கலன்
3. உயர் துல்லிய எழுத்துக்கள்
4. திறந்த வகை வடிவங்கள்.
இப்படி வந்து விட்டால் படைப்புகள் வாசகர்களை வேகமாக நேரடியாக போய்ச் சேர்ந்து விட முடியும். இப்போதும், படைப்புகளை மின் புத்தகங்களாக மாற்றித் தரும் இணைய தளங்கள் இயங்குகின்றன.
அடுத்த சில நிமிடங்களில் அழைத்தார். அவர் வேறு ஒரு டேனரியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாராம். அவர்களுக்கு மென்பொருள் வேண்டுமாம். வந்து பேச முடியுமா என்று கேட்டார். இன்று போக வேண்டும். 11 மணிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.
மாலையில் அழைத்து அடுத்த மாதம் ஒரு பயிற்சி வகுப்பு நடக்க இருப்பதாகச் சொன்னார். மலை ஏற்றம், வகுப்பு நடக்குமாம்.
மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு காபியும் குடித்துக் கொண்டிருந்தேன். 8 மணிக்கு மின்சாரம் தடைப்பட்ட போது வெளியில் வந்து உட்கார்ந்து ஜாவாஸ்கிரிப்டு பைபிள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகும் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்து விட்டு தியானம். 10 மணிக்கு தூங்கப் போகும் போது மின்சாரம் தடைப்பட்டது. அறைக்கதவை மூடி விட்டு, கொசு விரட்டியை பொருத்திக் கொண்டு, மின்விசிறியை வேகமாக ஓட விட்டிருந்ததால் மின்சாரம் தடைப்பட்டும் கொசு கடிக்காமல் தூங்கி விட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மின்சாரம் வந்தது என்று நினைக்கிறேன்.
காலையில் 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 மணி வரை. இரவு 8 முதல் 9 வரை மீண்டும் நள்ளிரவு 1 மணி நேரம், அதிகாலை 1 மணி நேரம் என்று 9 மணி நேரம் மின்சாரத்தை வெட்டி விடுகிறார்கள். சொல்வது போல பாதிக்குப் பாதி நேரம்தான் மின்சாரம் வருகிறது. இரவு போவது 1 மணி நேரத்துக்கா ஒன்றரை மணி நேரத்துக்கா என்று பார்க்க வேண்டும். 4 மணிக்கு போனது இன்னும் வரவில்லை.
மின்சாரம் வந்து விட்டது. இதை முடிக்கும் போது 5.05 ஆகியிருக்கும். அதன் பிறகு கட்டுரையை தொடர 1 மணி நேரம். 6 மணிக்கு அது முடித்து விட்டு வீட்டை கொஞ்சம் ஒதுங்க வைக்க வேண்டும்.
ஆறரை மணிக்கு உலாவப் போய் பால், நாளிதழ் வாங்கி வர வேண்டும். காலை உணவுக்கு ஓட்ஸ் காய்ச்சி பால் சேர்த்து குடித்துக் கொள்ள வேண்டியதுதான். பிரெட் கிடைத்தால் வாங்க வேண்டும்.
திரும்பி வந்து துணி துவைத்து, முகம் மழித்து, குளியல். இன்று, நாளை, சனிக்கிழமை போட வேண்டிய உடைகளை தேய்த்து கொள்ள வேண்டும், 9 மணிக்கு. 10 மணிக்கு ராணிப்பேட்டை புறப்பட வேண்டும். 11 மணிக்கு சந்தித்து விட்டு அப்படியே வங்கிக்குப் போய் கேட்டு விட்டு திரும்பி வர வேண்டும்.
அதன் பிறகு நாளைய உரைக்கான தயாரிப்பு. நாளைக்கு உரைக்கான தயாரிப்பு, மொழி பெயர்ப்பு முடித்து, மதியம் 12 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டும். 4 மணிக்கு கூட்டம், 7 மணிக்கு கூட்டம். சனிக்கிழமை கல்லூரி. சனி மாலை திரும்பி விட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை இங்கு ஜாவாஸ்கிரிப்டு தொடரலாம். இன்னும் 1 நிமிடம் இருக்கிறது. எத்தனை சொற்கள் என்று பார்த்துக் கொள்ளலாம். 1824 சொற்கள்.