ஏப்ரல் 10, 2012 - நேரம் 4.24.
ஞாயிற்றுக் கிழமை காலையில் 2 மணிக்கு எழுந்து எழுத ஆரம்பித்தேன். எழுதி முடித்து விட்டு இரண்டு வகுப்புகளுக்கும் இன்டெர்னல் மதிப்பெண்களை சரி பார்த்து இறுதி செய்தேன். இன்னும் சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களுக்காக கூடுதல் வேலை கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன் பிறகு கொடுத்திருந்த வீட்டு பணியை சரி பார்த்து மதிப்பெண் கொடுத்தேன். சோர்வாக இருக்கவே படுத்து தூங்கினேன். இப்படி அதிகாலையில் எழுந்து விட்டு அதன் பிறகு தூங்குவதை உறுதியாக நிறுத்த வேண்டும். பகலில் தூங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தொலைபேசி அழைப்பில் எழுந்திருந்தேன். என்னுடைய கடவுச் சீட்டு எண் வேண்டுமாம். 'என்னிடம் கைவசம் இல்லை, நான் வெளியில் இருக்கிறேன்' என்று சொன்னேன். 'என்ன காலையில் ஆறரை மணிக்கு வெளியிலா' என்று கடிந்து சொல்ல, நான் வேலூரில் வசிப்பதையும் இப்போது சென்னையில் இருப்பதையும் சொன்னேன். 'அப்போ உன் சகோதரியின் வீட்டில் இல்லையா' என்று கேட்டதும் விபரம் சொன்னேன். அத்தோடு எழுந்து வெளியில் போனேன்.
இந்தப் பக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் கேட்டால் அதில் ஞாயிறு இணைப்பு மட்டும்தான் இருந்தது. செய்தி பகுதிக்குப் பதிலாகவும் இணைப்பு. அதை சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டு சாலையைக் கடந்து எதிர் புறம் போனேன். அங்கு டெக்கான் வாங்கி விட்டுத் திரும்பி வந்தேன். அறைக்கு வந்து துணிகளை அடுக்கி வைத்து விட்டு குளிக்க, முகம் மழிக்க போனேன். இன்னொரு முறை அழைப்பு. எடுத்தால் குரல். 'மாம்மியின் பிளட் குரூப்' என்ன என்று கேட்டாள். 'எனக்கு நினைவில்லை, மறந்து விட்டது, ஏதோ ஆர்எச் பாசிட்டிவ்' என்று மட்டும் நினைவிருக்கிறது. அதற்குப் பிறகும் பல முறை எடுத்திருப்பாளே' என்று அவளிடம் கொடுக்கச் சொன்னேன்.
அவளுக்கும் நினைவில்லையாம். 'ஆர்எச் +வ் என்று எழுதவா' என்று கேட்டாள். '+வ் தான் என்று உறுதியாகத் தெரியுமா' என்றாள். 'ஆமாமா, நீ எப்போதுமே பாசிட்டிவ்தான்' என்றேன். 'பேசாமல் ஏதாவது சோதனை லேபுக்குப் போனால் 5 நிமிடங்களில் பிளட் குரூப் சொல்லி விடுவார்கள்' என்றால், 'ஒண்ணும் வேண்டாம்' என்று சொல்லி விட்டு வைத்தாள். இரண்டு நிமிடங்களில் மீண்டும் அழைத்து 'உன் எண்ணைக் கொடுத்திருக்கிறேன். அழைத்து ஏன் வரவில்லை என்று கேட்டால், வெளியூரில் வேலையாக போயிருப்பதாகவும் இன்னொரு சமயம் வருவதாகவும்' சொல்லச் சொன்னாள். இப்போது குரலில் சங்கடம். ஒருவனிடம் போய் உதவி கேட்கிறோமே என்று சங்கடம்.
குளித்து விட்டு தியானம். அதன் பிறகு எதிரில் போய் சரவணபவனில் காலை உணவு. சிரித்த முகத்துடன் ஒருவர் ஆர்டர் எடுக்க வந்தார். 4 இட்லிகள் சொன்னேன். அடுத்தது அப்புறம். 4 இட்லி ஒரே பிளேட்டில் வந்தன. அதைத் தொடர்ந்து பூரி சொன்னேன். பிறகு காபி, சர்க்கரை போடாமல். சுகர் ப்ரீ வேண்டுமா என்று கேட்க, இனிப்பே வேண்டாம் என்று சொன்னேன். சர்வர் சுகர் ப்ரீ பாக்கெட்டுகளை எடுத்து வந்திருந்தார். திருப்பிக் கொடுத்து விட்டேன். காபியில் இனிப்பில்லாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது, அவ்வளவுதான்.
அறைக்கு வந்து பார்த்தால் 8 மணி ஆகி விட்டிருந்து. எந்த வேலையையும் ஆரம்பிக்க போவதில்லை என்று முடிவு செய்து விட்டு கிளம்பினேன். பைகளை அறையிலேயே வைத்து பூட்டிச் செல்லுமாறு சொன்னார். பூட்டி விட்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கிண்டி போகும் பேருந்தில் ஏறினேன். ஓட்டுனர் நடத்துனர் மட்டும்தான் இருந்தார்கள். 8 ரூபாய் சீட்டு. சில பேருந்துகளை போக விட்டு ஒரு 88 தடத்தில் ஏறினேன்.
சின்னமலை அருகில் ஏதோ கூட்டம். ஹால்டியா சந்திப்பிலிருந்தே வண்டிகள் வரிசை கட்டியிருந்தன. அந்த இடத்தைத் தாண்டும் வரை ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து அதன் பிறகு இயல்பு நிலை இருந்தது. பெரிய கூட்டம், ஏதோ திருவிழா போல. நிறைய பெண்களும். கிருத்துவ அமைப்பு ஒன்றின் கூட்டம் போல் தோன்றியது. எக்ஸ்பிரஸ் அவென்யூ போவதற்கு டிவிஎஸ் என்று சீட்டு கொடுத்திருந்தார்.
தொலைபேசி அழைப்பு வந்தது. இடிந்தகரை போயிருந்தாராம். இப்போது காவல் துறை குவிப்பை நீக்கி விட்டாலும், ஊர் மக்கள் ஆள் பார்த்துதான் அனுமதிக்கிறார்களாம். கூடி இருக்கும் மக்கள் கடைசி வரை போராடுவதாக உறுதியாக இருக்கிறார்களாம். அவர் குறும்பனை போய் சந்திக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு உடன் வர அழைத்திருக்கிறார். நான் ஊரில் இல்லை, சென்னையில் என்று சொன்னேன். அவர் சென்னை வந்த பிறகு சந்திக்கலாம் என்று பேசிக் கொண்டோம்.
இதற்குள் டிவிஎஸ் நிறுத்தத்தை தவற விட்டு எல்ஐசியில் இறங்கினேன். அது வரை ஒரு வழிப்பாதை. சாலையைக் கடந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த காவல் துறை குடிநீர் பந்தலில் தண்ணீர் குடித்துக் கொண்டேன். அருகில் நின்ற காவலருக்கு நன்றி சொல்லி விட்டு நடந்தேன். பேருந்து நிறுத்தம் அருகில் விசாரிக்க நேராக நடக்கச் சொன்னார்கள். நடந்தே வந்து சேர்ந்து விட்டேன்.
பெரிய கடைத்தெரு கட்டிடம். கார்கள் நிறுத்த பெரிய வளாகம். பல அடுக்க மாடிகள். உள்ளே நுழைந்து நகரும் படிக்கட்டுகள் மூலமாக ஒவ்வொரு மாடியாக ஏறினேன். கடைசி தளத்தில்தான் திரைப்பட அரங்கு இருக்க வேண்டும். துடைத்துக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டு போய்ச் சேர்ந்தேன். உள்ளே டிக்கெட் கொடுக்க கவுண்டர், தானாகவே டிக்கெட் அச்செடுத்துக் கொள்ள திரைகள், சாப்பாட்டுக் கடைகள் பளபளக்கும் விளக்குகளுடன் உயரமான கூரையினுள் இருந்தன. போய் சுற்றிப் பார்த்துக் கொண்டே அடுத்த வாசல் அருகில் வந்தேன்.
தொலைபேசி அடித்தது. வெளியில் போக முயற்சித்து கதவில் முட்டிக் கொண்டேன். வெளியில் போனால் தொலைபேசி நின்று விட்டது. திரும்ப அழைத்தால் பிசி என்று வந்தது. உள்ளேயே நின்று கொண்டிருக்கிறார். எஸ்கேப் என்று பெயர். பெரிய அரங்குதான். அகலமான இருக்கைகள், அகலமான கைப்பிடிகள். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்டிருந்தது. திரைக்கு அருகிலான இருக்கைகள்.
உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். திரைப்படம் ஆரம்பிக்கும் வரை பேச்சு. திரைப்படம் கஹானி என்ற இந்தி திரைப்படம். சோதனைச் சாலையில் எலிகள் இருக்கும் கூண்டினுள் சிறு கண்ணாடி குமிழ்களை உள்ளே போட்டு உடைக்க, அதிலிருந்து வெளிப்படும் திரவம் ஆவியாகி எலிகள் இறக்கின்றன. அடுத்த காட்சியில் கொல்கத்தா மெட்ரோவில் பால் புட்டியில் இருந்து திரவம் வெளி வந்து நூற்றுக் கணக்கான பேர் இறந்து போகிறார்கள்.
கொல்கத்தா விமான நிலையத்தில் ஏழெட்டு மாத கர்ப்பிணியாக வித்யா பாட்சி வந்து இறங்குகிறார். டாக்சியில் ஏறி பார்க் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேசன் போகிறார். தனது கணவரை காணவில்லை புகார் கொடுக்கிறார். கணவர் பெயர் அர்னாப். கொல்கத்தாவுக்கு புராஜெக்டுக்காக வந்தவர் திடீரென்று காணவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும், வேலை பார்த்த இடத்திலும் விசாரித்தால் அப்படி யாரும் இல்லை என்கிறார்கள் என்று சொல்கிறார். புகார் பதிவு செய்து கொள்கிறார்கள். அவரை கொண்டு விட நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர், கணினியில் வேலை செய்பவர், ராணா என்பவர் வருகிறார். ஒரு கெஸ்ட் ஹவுசுக்குப் போகிறார்கள். அங்கு தனது கணவர் தங்கிய பதிவேடுகளை கேட்டால் அதில் அவர் பெயர் இல்லை.
தான் அங்குதான் தங்கப் போவதாகச் சொல்லி விட்டு தங்குகிறார். அடுத்த நாள் நகரத்தின் பிணவறையில் பிணம் அடையாளம் காட்ட அழைத்துப் போகிறார்கள். அர்னாபின் உறவினர்கள் என்று ஏதோ ஒரு இடத்துக்குப் போகிறார்கள். அர்னாப் படித்த பள்ளிக்குப் போய் விசாரித்தால் அங்கும் தகவல் இல்லை. நிறுவனத்துக்குப் போய்க் கேட்டால் மனித வள மேலாளர் அப்படி யாருமே வேலை செய்யவில்லை என்கிறார். ஆனால் மாலையில் அழைத்து அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்த ஒரு ஊழியரைப் போல இருக்கிறது என்று சொல்லி சந்திக்க அழைக்கிறார்.
அந்த மனித வள மேலாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அடுத்து ஒரு போலீஸ் தகவல் சொல்பவரை சந்திக்கிறார்கள். அவர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி சொல்கிறார். அதில் 2 பேர் கொல்லப்பட்டார்கள், மூன்றாமவர் காயமடைந்தார், காயமடைந்தவருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார். அங்கு போய் விசாரித்தால் அந்த மருத்துவர் அடுத்த நாள் வரச் சொல்கிறார். அந்த மருத்துவரும் சுட்டுக் கொல்லப்படுகிறார். டில்லியில் ஐபி அலுவலகத்தில் இதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஒரு அதிகாரி இதை கையாள கொல்கத்தா வருகிறார்.
இடைவேளையின் போது வித்யாவை மெட்ரோ ரயில் முன்பு தள்ளிக் கொலை செய்யப் பார்க்கிறார் முந்தைய கொலைகளை செய்த அதே கொலையாளி.
இடைவேளையின் போது வெளியில் போய் இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்தேன். ஒன்று 20 ரூபாய். அதற்குள் புதிய ஜனநாயகம் படித்திருக்கிறார். அதில் வந்திருந்த மின்சாரம் கட்டுரை பற்றி கேட்டார். அதை விளக்கிக் கொண்டிருக்கும் போது திரைப்படம் மீண்டும் ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் வித்யாவையும் கொல்லும்படி உத்தரவு வருகிறது. கொலையாளி வித்யாவை துரத்த, அவரை ராணா துரத்த, ஒரு கட்டத்தில் கை கலப்பு ஏற்பட, துப்பாக்கி வித்யா கையில் வர, ஆளைச் சுட்டுக் கொன்று விடுகிறார். கொலையாளியின் தொலைபேசியில் இருக்கும் குறுஞ்செய்திகளைப் பார்த்து அவை எங்கிருந்து வருகின்றன என்று கண்டுபிடிக்கிறார். அது அந்த ஐடி நிறுவனத்தின் பாதுகாவலர் கணினியிலிருந்து வருகின்றது. அங்கு போய் கணினியிலிருந்து தகவல்களை நோண்டுகிறார். அவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகிறார்கள்.
இப்போது ஐபியும் ராணாவும் ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இன்னும் ஒரு முறை கணினியை அணுகி விபரங்களை தேடச் சொல்கிறார்கள். ஒரு தொலைபேசி எண் கிடைக்கிறது. அதை அழைத்தால் ஐபியின் தலைவருக்கு போகிறது. தலைவரை அழைத்து தான் கணினியை நோண்டியதையும் இன்னும் பல தகவல்கள் கிடைத்ததாகவும் சொல்கிறாள். உள்ளூர் அலுவலரை அனுப்புவதாக சொல்கிறார். அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்ட இடத்தில் கோப்புகளைக் கொண்டு வரும்படி உத்தரவு வருகிறது.
அங்கு போகும் போது துர்கா பூஜையின் 10ம் நாள் உற்சவம். வெள்ளை/சிவப்பு உடை உடுத்து போகிறாள். கொலையாளியை சந்தித்து அவன் சுட முயற்சிக்கும் போது வயிற்றிலிருந்து தோல் பொம்மையை உருவி அவனை அடிக்கிறாள். அவனுடன் சண்டை போட்டு வீழ்த்துகிறாள். சுட்டு கொன்று விடுகிறாள். ஐபி அதிகாரியும் ராணாவும் வந்ததும் அவர்களை சந்திக்காமல் தப்பி ஓடி விடுகிறாள்.
தனது கணவனை கொன்றவனை பழி வாங்க முன்னாள் ஐபி அதிகாரியுடன் இப்படி வேடம் போட்டுக் கொண்டு வந்தார் என்று தெரிகிறது. அமிதாப் பச்சன் இறுதியில் மா, அசுரர்கள், வதம் என்று புராணம் சொல்லி முடிக்கிறார். படம் முடிந்து பெயர்கள் முடிவது வரை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். வெளியில் வந்து அருங்காட்சியகம் போகலாம் என்று முடிவு.
படிகளில் இறங்குவதால் பாதிக்கப்படுகிறார் என்பதும், அருங்காட்சியகம் போகலாம் என்று சொல்லியிருந்ததும் மறந்து போயிருந்தது. அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எழும்பூரில் போய் காரை அருங்காட்சியகத்தில் நிறுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால் எதிர் பக்கம் ஒரு அசைவ ஹோட்டல், மேசைக்குப் போனால் ஈ மொய்த்துக் கொண்டிருந்த ஒரு பாத்திரம் இருந்தது. வெளியில் வரும் போது முறைத்தார்கள். பக்கவாட்டு சாலையில் போய் ஹாட்பிரட்ஸ் பார்த்தோம், இந்தப் பக்கம் ஒரு அசைவ உணவகம், அதன் அருகில் சென்னை ராவுத்தர் பிரியாணி.
அங்கு போய் மீன் பிரியாணி, பிரியாணியில் முட்டை வறுத்து போட்டு, மீன் வறுத்ததை வைத்திருப்பார்களாம். கடைசியில் சாத்துக்குடி ஜூஸ் சொல்லியிருந்தேன். அதையும் மறந்து விட்டிருந்தேன்.
சாப்பிடும் போதும் பேசிக் கொண்டே இருந்தார். சாப்பிட்ட பிறகு மியூசியம் போய் ஓவியங்களை பார்க்கப் போனோம். நவீன கலைக் கூடத்தில் மூன்றாவது மாடியில். ரவிவர்மா ஓவியங்கள் பற்றி குறிப்பாக சொல்லியிருந்தார். ஓவியங்களை பார்ப்பதற்கான கலைக்கண்களை பெற வேண்டும். இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று சொன்னேன். சரியாக முடித்து விட்டு வெளியில் வந்து உட்கார்ந்தோம். பேச்சு தொடர்ந்தது. காரிலும் தொடர்ந்தது. ஸ்டெர்லிங் சாலை, ஆற்காடு சாலை வழியாக, அசோக் பில்லர் வந்து சரவண பவனில் காபி சாப்பிடப் போனோம். அதே சிரித்த முக ஆர்டர் எடுப்பவர். பேச்சு தொடர்ந்தது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கப் போய் விட்டு தவறான நடைபாதையில் வேலூர் பேருந்துகளை தேடிக் கொண்டிருந்தேன். நாளின் இன்னொரு பெரிய சொதப்பல். காலையில் மீண்டும் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடைசியில் 102B non-stop திருப்பத்தூர் பேருந்து. மூவர் இருக்கையில் நடைபாதை ஓர இருக்கையில் உட்கார்ந்தேன். பூந்தமல்லியில் மூன்றாமவரும் வந்து நடுவில் உட்கார்ந்து கொண்டார். நீண்ட வார இறுதி முடிந்து வரும் மாணவர்கள் நிறைய பேர். தூங்கிக் கொண்டே வந்தேன். 12 மணிக்கு வேலூர். வெளியில் வந்து பகிர்வூர்தி. குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்கு பதில் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து பாஸ்போர்ட் விபரங்களை அனுப்பி விட்டு தூங்கினேன்.
நேற்றுக் காலையில் எழுந்திருக்கவில்லை. 7 மணி வரை தூங்கிக் கொண்டேன். எழுந்து பார்த்தால் தண்ணீர் இல்லை. பல் தேய்த்து சட்டை மாட்டிக் கொண்டு கீழே தண்ணீர் பிடிக்கப் போனால் 2 நாட்களுக்குப் பிறகுதான் வருமாம். முன்பு ஒரு நாள் எப்போது வேண்டுமானாலும் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று போன வாரம் சொல்லியிருந்தார்கள். கரண்ட் கூட இல்லை என்பதையும் கவனிக்கவில்லை. குடத்தை வைத்து விட்டால் வரும் போது பிடித்து வைப்பதாகச் சொன்னார்.
வைத்து விட்டு மேலை வந்தேன். தண்ணீர் இல்லாமல் வேலை ஆகாது என்று உணர்ந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நடந்தேன். கடையில் வாங்க வேண்டும். வீட்டுக் காரர் கனிவமுது கல்யாண மண்டபத்தில் போய் பிடித்தால் 10 ரூபாய் என்று சொன்னார். அங்கு போய் காவல்காரரை கேட்டால் பக்கவாட்டில் போய் பிடிக்கச் சொன்னார். வெளிப்புற குழாயில் பிடித்து வந்தால் அது இல்லையாம். அதைக் கொட்டி விட்டு மண்டபத்தின் உள்ளே அறையில் பிடித்துக் கொடுத்தார்.
தோளில் சுமந்து கொண்டு வந்து சேர்த்தேன். திரும்பவும் கடைக்குப் போய், சாம்பார் பொடி, உளுந்து, துவரம் பருப்பு, ரவை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், தயிர், ஓட்ஸ் வாங்கினேன். வீட்டுக்கு வந்து ஓட்ஸ் காய்ச்சி வைத்து விட்டு குடிக்கும் போது போய் பால் வாங்கி வந்து காய்ச்சி சேர்த்துக் கொண்டேன். மீதிப் பாலை டம்ளரில் ஊற்றி வைத்தேன்.
கொஞ்சம் கண்ணயர படுத்தால் தொலைபேசி அழைப்பு. 2 மணி நேரத்தில் வருகிறார். இணைய வியாபாரத்துக்கு என்ன செலவாகும் என்பது குறித்து விசாரித்தார். தகவல்களைச் சொன்னேன். அதன் பிறகு துணி துவைப்பதும் சமையலும். தக்காளி ரசம், மோர் தாளிப்பு, கத்திரிக்காய் பொரியல், மாங்காய் ஊறுகாய் என்று திட்டம். குக்கரில் சோறு வைத்து விட்டு துணிக்கு சோப்பு போட்டேன். துணி துவைத்துப் போட்டு விட்டு குக்கரை இறக்கி ரசம், மோர் தாளிப்பு, பொரியல். இடையில் உப்பு தீர்ந்திருக்க போய் வாங்கி வந்தேன். இனிமேல் சிறுபயறு, அரிசி, கோதுமை மாவு வாங்க வேண்டும். துணி துவைக்கும் பிரஷ், காபி குடிக்கும் பீங்கான் மக் வாங்க வேண்டும்.
சமைத்து விட்டுக் குளியல், தியானம். அதன் பிறகு சாப்பாடு. சொன்னது போல 1.45க்கு வந்தார். ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் இறங்கி நின்றதாக அழைத்தவரை வழி சொல்லி வரச் சொன்னேன். இடையில் திசை திரும்பி விட கீழே இறங்கிப் போய் அழைத்து வந்தேன். மே 6ம் தேதி அவருக்குத் திருமணம். ஞாயிற்றுக் கிழமை. ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து திரும்பி வருவதாகச் சொன்னேன். அப்படித் திட்டமிட்டுக் கொள்வேன். பார்க்கலாம். வெள்ளிக் கிழமை ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மே 4ம் தேதி திருமணம் முடிந்த உடன் ரயிலை பிடிப்பதாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நாகர் கோவில் விரைவு வண்டி, காட்பாடியில் இறங்கிக் கொள்ளலாம்.
மீதி மதிய உணவை முடித்துக் கொண்டு அவருக்கு சேர வேண்டிய காசோலையை கொடுத்தேன்.
அவர் போன பிறகு கரண்ட் வந்த பிறகு தோசை மாவு அரைத்தேன். மீதி இருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு தூங்கப் படுத்தவன் 8 மணிக்கு அழைத்த போதுதான் எழுந்தேன். அவருக்கு செய்ய வேண்டிய பணியின் விபரங்களை விளக்கினார். ஓடெஸ்கில் 12 மணி வரை உட்கார்ந்திருந்தேன். அதன் பிறகு தியானம். தொலைபேசி நிலைமையை விளக்கி விட்டுத் தூங்கினேன்.
காலையில் 2 மணிக்கு ஒரு முறை விழிப்பு, மின்சாரம் தடைப்பட்டிருந்தது, 4 மணிக்கு எழுந்து விட்டேன். இதை முடிக்கும் போது 5.25 ஆகியிருக்கும்.
தேங்காய் திருவி துவையல் அரைத்துக் கொள்ள வேண்டும். 6 மணிக்கு கரென்ட் போவதற்கு முன்னால் அதைச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஓடெஸ்க் ஜாவாஸ்கிரிப்ட் டெஸ்ட் எடுக்க வேண்டும். 7 மணி. அதன் பிறகு குளித்து காலை உணவு. காபி போட்டுக் கொள்ளலாம் ஓடெஸ்க் டெஸ்டுக்கு முன்பாகவே.
12 மணிக்கு கடைக்குப் போய் அரிசி, பயறு வாங்கிக் கொள்ள வேண்டும். சமையல். 1 மணிக்கு சாப்பாடு.
தொலைபேசி காசு பற்றிக் கேட்க வேண்டும். அது உறுதி செய்தால் மட்டும்தான் நாளைக்குப் போக வேண்டும். html, css, javscript, php5 படிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக