கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி
பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப்போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத்திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டுவிட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்தது. இதனைச் செயல்வடிவம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆசிரியர்களிடமிருந்தே உருவானது என்பது தனிக்கதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்காக இதனைத் தருகிறேன்.
*******
எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழுதுபோக்கு, வேளாண்மை என எல்லாமே சந்தையின் தேவைக்கானதாக மாறிவிட்டன. கல்வியும் இப்போது கல்விச் சந்தை என்ற சொல்லோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகின்றது.
எப்போதும் தொழில் படிப்புகளான மருத்துவம், பொறியியல் படிப்புகள் முன்னுரிமைப் படிப்புகளாகவே இருக்கின்றன. அதற்கடுத்து முதன்மை முன்னுரிமைப் படிப்பாக வணிகவியல் மாறியிருக்கிறது. எனது பட்டப்படிப்புக் காலத்திலும் வணிகவியல் அதிகம் விருப்பத்திற்குரிய படிப்பாகவே இருந்தது. அதன் பின்னணியில் இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கியதும் புதிதுபுதிதாக வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டதும் இருந்தன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிப்பணியையும் அரசுப்பணியாகவே கருதிய பலரும் வணிகவியல் படிப்பை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால் வங்கிப் பணியில் சேர வணிகவியல் கட்டாயம் இல்லை. ஏதாவதொரு பட்டம் என்றே விளம்பரங்கள் வரும். பட்டப்படிப்பில் தமிழ் படித்த நானே ஒரு தடவை எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்று நேர்காணலில் தோற்றவன்தான்.இப்போது திரும்பவும் வணிகவியல் கல்வி மாணவர்களின் விருப்பத்திற்குரிய பாடமாகியிருக்கிறது. அதன் பின்னணியில் புதிய வரிவிதிப்புக் கொள்கையான ஜிஎஸ்டி முறையும் புதிய தொழில்வாய்ப்புகளை ஊக்குவிக்கும் தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகிய இருக்கின்றன. அதனால் வணிகவியலின் அடிப்படைத்தாள்களோடு சிறப்புப்பாடங்களாகப் பொது& தனிநபர் தணிக்கை, நிதி மேலாண்மை, வரி நிர்வாகம், குழும நிர்வாகம், குழுமச் செயல்பாடு எனப் பலவிதமான படிப்புகள் கண்டறியப்பட்டுத் தனித்தனி வணிகவியல் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.
ஒரே கல்லூரியில் வணிகவியல் படிப்பில் மட்டுமே 1500 மாணவர்கள் சேரும் அளவிற்கு வணிகவியல் படிப்புகள் உள்ளன. குறிப்பாகக் கோவை போன்ற தொழில் நகரங்களில் இயங்கும் கல்லூரிகளில் வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் படிப்புகளுக்கே போட்டிகள் அதிகம் உள்ளன. தென்மாவட்டக் கல்லூரிகளில் இந்தப்போக்கு குறைவு. அங்கெல்லாம் இன்னும்கூட. அடிப்படை அறிவியல் படிப்புகளான கணிதம், இயல்பியல், உயிரியல், விலங்கியல் போன்றனவற்றைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொங்கு பகுதியில் அதன்மீதான ஆர்வமே இல்லை. சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றில் அறிவியல் துறைகளே இல்லாமல் கணினி சார்ந்த பாடங்கள், வணிகம் சார்ந்த பாடங்கள் மட்டுமே கற்பிக்கும் துறைகளே இருக்கின்றன. தகவல் தொடர்பியல், தகவல் அறிவியல், செயற்கை நுண்ணறிவியல், சூழல் அறிவியல், சுற்றுலாப் பண்பாட்டியல், பண்பாட்டுத் தொகையியல், தொல்லியல் தரவுகள் எனப் புதிய துறைகள் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. காலச்சூழலையும் அடுத்துவரும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு படிப்புகளை உருவாக்கும் கல்லூரிகள், கல்விச்சந்தையில் முதலிடம் பிடிக்கின்றன. அதனைப் பெற்றோர்களும் புரிந்துகொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டவேண்டும்.
இந்த நிலையில் மொழி, இலக்கியக் கல்வி ஒருவிதச் சேவைப் படிப்பாகக் கருதப்படுகின்றன. அடிப்படை அறிவுத்துறைகள் மீது விருப்பமும் தொண்டு மனப்பான்மையும் உள்ள கல்லூரிகள் மட்டுமே இவற்றைத் தொடங்கி நடத்துகின்றன. அண்மையில் தமிழக அரசு, அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் கட்டாயம் என்று அறிவிப்புச் செய்துள்ளதால் தமிழின் பக்கம் சிறிய அளவு ஆர்வம் காட்டும் மாணாக்கர்களைப் பார்க்க முடிகிறது. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வும் நேர்காணலும் நடத்திச் சிறப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகத் தமிழ்க் கல்வியை வழங்கும் திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்தால் கலை, இலக்கியப் படிப்புக்கு உதவிய அரசாக இருக்கும். அரசோடும் அமைச்சர்களோடும் தொடர்புடைய வல்லுநர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்க்கல்வி பாய்ச்சலாக மாறவேண்டும்
“பொதுப்பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் அனைத்துக்கும் இரண்டு ஆண்டுகளிலும் எந்தவித வேறுபாடுமின்றித் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது தொழிற்கல்வி படிப்புகளான “பொறியியல் பட்டங்களுக்கும் தமிழ் இரண்டு ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படும்” என்று அறிவிப்பு வந்துள்ளது. உயர்கல்வியில் தமிழின் இடம் பெரிய கேள்விக்குறியாக இருந்ததை இந்த அறிவிப்பு திசைமாற்றப்போகிறது. வரவேற்றுக் கொண்டாட வேண்டிய ஓர் அறிவிப்பு. நிகழ்காலத் தேவைக்கான மொழியாகத் தமிழை மாற்றுவதற்குப் பல்கலைக்கழக அளவில் செய்யக் கூடிய மாற்றங்கள் மொழிப்பாடத்திலேயே செய்யப்படவேண்டும். ஏனென்றால் இதனைக் கற்றவர்களே பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலைகளிலும் மொழியைப் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பிக்கவேண்டும். இப்போதுள்ள பாடத்திட்டங்களில் அந்த நோக்கம் இல்லை.
இருக்கும் நிலைமைகள்
இதுவரையிலும் பட்டப்படிப்புகளுக்கான மொழிப்பாடம்- பகுதி ஒன்று (தமிழ்) இரண்டு விதமான நிலையில், இரண்டுவிதமான அளவில் கற்பிக்கப்படுகின்றது. மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அறிவியல், சமூக அறிவியல்,கலையியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு நான்கு பருவங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதே நேரம் கணினி அறிவியல், வணிகவியல், வணிக மேலாண்மை, சிறப்புக் கணிதம், தகவல் தொழில் நுட்பம் போன்ற பட்ட வகுப்புகளுக்கு இரண்டு பருவத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. ஏனென்றால் அவை தொழிற்வாய்ப்புப் படிப்புகள் என வகைப்படுத்தப்பட்டு மொழிப்பாடங்கள் முக்கியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. முக்கியமில்லாத மொழிப்பாடமாகத் தமிழ் மட்டுமே உள்ளது; ஆங்கிலம் அப்படி ஆக்கப் படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் பொறியியல் படிப்புகளுக்கும் தமிழகக் கல்லூரிகளில் ஆங்கிலம் முதல் வருடத்தில் ஒரு பாடமாக – பொறியியல் ஆங்கிலமாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழ்மொழி எந்தப் பாடமாகவும் இல்லை. மருத்துவக் கல்வியில் மொழிப்பாடங்களே இல்லை.
உள்ளடக்கங்கள் மாற வேண்டும்.
தமிழ்மொழிக்கல்வியில் பாய்ச்சலை உண்டாக்கும் அறிவிப்பு இது என வரவேற்கும் அதே நேரம் செய்யவேண்டிய சில மாற்றங்களைக் குறித்தும் சொல்லவேண்டியதுள்ளது. பல்கலைக்கழகங்களில் தமிழ்பாடங்கள் இரண்டு நிலையில் உள்ளன. பட்டப் படிப்புகளுக்குப் பகுதி ஒன்றைத் தவிர, இளநிலைத் தமிழ் இலக்கியப்படிப்பிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இவ்விரண்டு படிப்புகளுக்கும் தயாரிக்கப்படும் தாள்களின் அமைப்பும் உள்ளடக்கமும் வேறுபாடு இல்லாமல் நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதன்மைப்பாடமாகப் படிக்கும் தமிழுக்கும், பகுதி ஒன்று பாடமாகப் படிக்கும் தமிழுக்கும் ஒரே நோக்கம் ஏற்கமுடியாத ஒன்று. இதனை மாற்றுவது அவசியமானது.
பகுதி ஒன்றின் நோக்கம் இலக்கிய அறிமுகம் மற்றும் ரசனை உருவாக்கம் என்பதாக இப்போது இருக்கிறது. அத்தோடு தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை அதிமாக்குதல், ஒன்றிய அரசு நடத்தும் குடிமைத்தேர்வில் தமிழைச் சிறப்புப்பாடமாக எடுப்பவர்களுக்கு உதவுதல் போன்றன காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இதற்கு மாறாக இந்தத் தாள்களை மொழிவளம் உருவாக்குதல், அவர்களின் துறைசார்ந்த பயன்பாட்டில் பயன்படுத்துமாறு கற்பித்தல் என்பதாகப் அமைக்க வேண்டும். இலக்கியப்பகுதிகளைக் குறைத்துக் கொண்டு மொழிக்கூறுகளை அதிகப்படுத்தித் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்பிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் துறை சார்ந்த எடுத்துரைப்புகளைப் பேச்சு வழியாகவும் எழுத்து வழியாகவும் நிகழ்த்தவும் தூண்டும் விதமாகப் பாடத்திட்டத்தை மாற்றியாக வேண்டும். உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றம் இது. அதன் வழியாகவே தமிழ்மொழியை அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் மொழியாக மாற்ற முடியும்.
தமிழின் வாழ்வுக்கான தேவையாகக் கருதி இந்த மாற்றத்தைச் செய்தாக வேண்டும். எப்போதோ செய்திருக்க வேண்டிய இம்மாற்றத்தை உடனடியாகச் செய்ய வேண்டும். இப்போதும் செய்யவில்லை என்றால் தமிழ்மொழியின் இருப்பும் எதிர்காலமும் வாழ்வும் பெரும் கேள்விக்குரியாக மாறி விடும். தமிழ்ப் பாடங்கள் பயனுடையதாக மாற்றப்படவில்லை என்றால் தமிழ் மொழியின் எதிர்காலம் மட்டுமல்ல; தமிழாசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியதே.
மாற்றங்கள் செய்வதெப்படி?
இதுவரையிலான தமிழ்ப்பாடத்திட்டங்களைப் பெரும்பாலும் தமிழ்ப் பேராசிரியர்களே உருவாக்கி வந்துள்ளனர். அதன் காரணமாகத் தமிழ் ஆசிரியர்களின் அறிவெல்லைக்குள் இருக்கும் இலக்கிய ரசனை, பண்பாட்டுப் பெருமிதம் போன்றவைகளைக் கற்பிப்பதே போதும் என்ற நிலை இருக்கிறது. தமிழை முதன்மைப்பாடமாகத் தங்களிடம் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக நினைக்கிறார்கள். அத்தோடு அவர்களின் எல்லைக்குள் மொழிப் பயன்பாடு இருப்பதாக நம்பிக்கொண்டு மரபான கற்பித்தல் முறைகளையே பின்பற்றுகின்றனர். இந்த எண்ணங்கள் மாற்றப்படவேண்டும். மொழி கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.
நவீன அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்குப் பின்னால் மொழிப்பயன்பாடு மொழி ஆசிரியர்களின் கையைவிட்டு நழுவி அந்தத்துறைகளின் ஆசிரியர்களிடமும், துறைசார் வல்லுநர்களிடமும் சென்று விட்டது. இதனை உணர்ந்தே பாடத் திட்டக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். வெகுமக்கள் தளத்தில் மேலாண்மையியல், ஊடகவியல், கணினி அறிவியல், மருத்துவம் போன்றவற்றைத் தமிழில் பேசும்/ எழுதும் துறை வல்லுநர்கள் இப்போது அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற துறைகளிலும் தேடினால் கிடைக்கக்கூடும். அவர்களைப் பெரும்பான்மையானவர்களாகவும் மொழித்துறையினரைச் சிறுபான்மை எண்ணிக்கையிலும் கொண்ட பாடத் திட்டக்குழுக்களை உருவாக்குவதின் வழியாகத் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஆக்கும் நோக்கத்தை உருவாக்கவேண்டும். அந்நோக்கத்திற்கேற்ப பாடத்திட்டங்களையும் கற்பித்தல் வழிமுறைகளையும் உருவாக்க முடியும்.
ஒருசில பாடத்திட்டங்கள் என்பதற்குப் பதிலாகச் சில பத்து மொழிப்பாடத் தாள்களை உருவாக்கவேண்டும். என்னைக்கேட்டால் இப்போது இருப்பதுபோல் தாள் ஒன்று என்பது பொதுவான தாளாக இருக்கக்கூடாது என்றே சொல்வேன். சில பொதுக்கூறுகளோடு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.பொதுவான கேள்வித்தாள் என்ற முறையை மாற்றிப் பொதுவான எழுத்துத்தேர்வோடு ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான செய்முறை மற்றும் வாய்மொழித் தேர்வுகளைச் சோதனை செய்யவேண்டும். தீவிரமான மாற்றங்கள் வழியாகவே தமிழை அனைத்துத்துறைக்குமான மொழியாக மாற்ற முடியும். அப்படிச் செய்யாமல் எல்லாப் பட்டப் படிப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதால் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
“தமிழ் இலக்கியம்- படைப்பாக்கம்” என்ற பட்டப்படிப்பு புதியது. முன்னடுக்கில் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் எழுத்தின் ஆழத்திற்குச் செல்லவும் தேவையான விதத்தில் சமூகவியல், மானிடவியல், வரலாறு, உளவியல், மொழியியல் போன்ற பாடங்களில் அறிமுகக்கல்வி (Fundamentals) வழங்கப்படும். இவ்வறிமுகக் கல்வியை மேலும் தொடர்பவர்கள் அரசு நட த்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வாய்ப்புகளில் பயணிக்கலாம். அப்பயணம் இந்திய அரசின் குடிமைப்பணித்தேர்வு வரையிலான அறிமுகத்தையும் வழிகாட்டுதலையும் கொண்டதாக இருக்கும்.இது ஒரு கல்லூரி இணைந்துள்ள பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புப் பாடத் திட்டம் இடையடுக்கு.ஒவ்வொரு பாடத்திலும் அடிப்படைகளைக் கற்றுத்தரும் பாடங்கள் முதல் அடுக்கில் இடம் பெறும்.பின்னடுக்கில் வேலை வாய்ப்புகளை வழங்கும் படிப்புகளைக் கல்லூரி வளாகத்திலும், வளாகத்திற்கு வெளியே தொழில் நிறுவனங்களோடு செய்துகொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கற்பிக்க வேண்டும்.
தமிழ் இளங்கலைப் பாடத் திட்டத்தோடு ஒவ்வொரு பருவத்திலும் படைப்பாக்க நோக்கம் கொண்ட தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகப் பாடங்களும் இணைப்புப் பாடங்களும் வரம்புகள் (Edge) அல்லது எல்லைகளாக இருக்கும். இத்தாள்களைக் கல்லூரியின் ஆசிரியர்களோடு கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புனைவுத்தளங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ள எழுத்தாளர்களை அழைத்துத் தொடர் பயிலரங்குகள் வழியாகப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புனைவிலக்கியம் அல்லாது அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கட்டுரைகள், நிகழ்ச்சிதயாரிப்புகள், வர்ணனைகள், செய்திக்கட்டுரைகள் எழுதும் பயிற்சிகளுக்காகவும் உரிய தொழில் நிறுவனங்களோடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும். பதிப்புத்துறையிலும் இதழாக்கத்துறையிலும் வலைப் பின்னல் வெளியிலும் செயல்படப் போதிய பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்
மூன்றாவது , பின்னடுக்கு வரம்புகளைத் தாண்டி (Edge +) என அழைக்கப்படும். இதில் தமிழோடு தொடர்புடைய பின்வரும் திறன் வளர்ப்புப் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன
1. நடிப்புக்கலையின் அடிப்படைகள் - Basics of Acting
2. நடனக்கோர்வைப் பயிற்சிகள் -choreography
3. மேடை நடிப்பும் காமிரா நடிப்பும் – Stage Acting and Camera Acting
4. மரபுக்கலைப் பயிற்சி - Practices in Traditional theatres
5. மேடை நிர்வாகமும் நிகழ்வு மேலாண்மையும் – Stage managements and Event managements
6. வண்ணம் தீட்டலும் கலைப்பொருள் உருவாக்கலும் -Colours and Crafts
7. அச்சிதழ்களுக்குச் செய்திக்கட்டுரை எழுதுதல் – Writing to Print media
8. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுதுதல் – Writing to Television
9. குறும்படங்கள் உருவாக்குதல் பட்டறை – Short film workshop
10. விளம்பரப் படங்கள் தயாரிப்பு – Ad film making
11. நெடுந்தொடர் எழுத்தாக்கப்பயிற்சி – Serial Writings
12. சினிமாவுக்கு வசனம் எழுதுதல் பயிற்சி -dialogue writing
13. இதழ் உருவாக்கம், புத்தகமாக்கம் -Journal and Book editing
14. இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு – Tamil in web world
15. வலைப்பூ உருவாக்கப் பயிற்சி – Blogger making
16. நிழற்படமெடுத்தலும் காமிரா இயக்கமும் –Experience to Still and movie camera
17. பேச்சுக்கலை, விவாதக்கலை (Art of delivery)
18. களப்பணிகள் - (Field work methodology)
19. தொல்லியல் வாசிப்புகள் (Reading Archaeology materials)
20. ஆளுமைத் திறன் வளர்ச்சி (Personality development)
· பயிற்சி வகுப்புகள் கல்லூரி வளாகத்தில் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களில் இணைந்தும் அளிக்கப்படும். · கூட்டுப்பயிற்சிக்காகப் புகழ்பெற்ற நிறுவனங்களோடும் ஆளுமைகளோடும் ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும்.

கருத்துகள்