நல்வரவு

வணக்கம் !

Wednesday, 1 April 2015

சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்?

Image
கூடு தயார்!
(நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரை)

1.   மரம், மூங்கில், அல்லது  மண் கலயம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாலான கூடு செய்து வாயில் முகப்பிலோ  (Portico), ஜன்னல் பக்கத்திலோ தொங்க விடுங்கள்;  காலணி, காம்பளான் அட்டைப் பெட்டிகளின் நடுவில் 32 மி.மீ அளவு ஓட்டை போடுங்கள்;  பெரிய ஓட்டையாக இருந்தால் காகம் போன்ற பெரிய பறவைகள், அதன் வழியே அலகை விட்டுக் குஞ்சுகளைத் தின்றுவிடக்கூடும். 
 
Image
கூட்டுக்குள் குருவி! 
(நான் ‘சர்ப் எக்செல்’ பெட்டிகளைப் பயன்படுத்துகிறேன்.  நன்கு திறந்து வைத்து சோப் வாசனை முற்றிலும் நீங்கிய பிறகு பயன்படுத்தவும்.)
குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறந்த பிறகு, பழைய அட்டைப் பெட்டியைக் கழற்றிவிட்டுப் புதிதாக மாட்டவும்.   ஓரிரு நாட்களில் அடுத்த ஜோடி வந்துவிடும் குடித்தனம் நடத்த!  கூட்டுக்கு அவ்வளவு கிராக்கி!
வைக்கோல் இருந்தால் அட்டைப் பெட்டியில் கொஞ்சம் போட்டுவைக்கலாம்; இல்லையேல் வெறுமனே வைத்தால் போதும்.
பழைய பூந்துடைப்பான்களைத் தூக்கிக் குப்பையில் எறியாமல்  ஏதாவது ஓர் இடத்தில் போட்டு வைக்கவும்; அவற்றிலிருந்து மிருதுவான பஞ்சு போன்ற நார்களை உருவி எடுப்பதில் சிட்டுக்குருவி கெட்டி!
 
Image
அடை காக்கும் குருவி
2.   கூட்டுக்கு அடுத்துத் தேவை உணவு.  கம்பு, கேழ்வரகு, அரிசி நொய், போன்ற தானியங்களை உணவளிப்பான் (Bird Feeder) மூலம் போடலாம்.   தட்டில் போட்டும் வைக்கலாம்.  குஞ்சு பொரித்திருக்கும் போது சுடு சாதத்தை மோரோ, பாலோ ஊற்றிக் குழைவாகப் பிசைந்து வைக்கலாம். 
    

3.   மூன்றாவது மிக முக்கியம் தண்ணீர்.  இரண்டு அதிக ஆழமில்லாத மண்சட்டிகளை வாங்கித் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.  ஒன்று குடிப்பதற்கு; இன்னொன்று குளிப்பதற்கு.  தினமும் நீரை மாற்றுவது அவசியம்.

4.   இப்போது எங்குப்பார்த்தாலும் புல்தரை (LAWN) வளர்ப்பது நாகரிகமாயிருக்கிறது.  பறவைகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ  அண்டாத இந்தப் புல்தரைக்குப் பதில் வீட்டைச் சுற்றிச் சிறிதளவே மண் இருந்தாலும் முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, இட்லிப்பூ, அரளி போன்ற செடி, கொடி வகைகளை வளருங்கள்.  பெரிய தோட்டமாயிருந்தால் பழ மரங்களை வளர்க்கலாம்.  சிட்டுக்குருவிக்கு மட்டுமின்றி, மற்ற சிறு பறவைகளுக்கும் புதர்ச்செடிகள் அவசியம். 

5.   தோட்டத்தில் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தவே கூடாது.

6.   கல் மாவுக்குப் பதில் அரிசிமாவைக் கோலத்துக்குப் பயன்படுத்துங்கள்.

7.   கூட்டுக்கு அருகிலோ, கீழேயோ நின்று சத்தம் போடக்கூடாது. பட்டாசு வெடிச்சத்தம் கூடவே கூடாது.
 
Image
காலியான கூடு!
குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச் சுற்றியவுடன், அடி வயிற்றைத்  தொட்டுப் பார்த்த கதையாகக் கூட்டைக் கட்டியவுடனே, குருவி வந்து கூடு கட்டும் என எதிர்பார்க்கக் கூடாது.  சில நாட்கள் ஆகலாம்; மாதங்களும் ஆகலாம்.
ஆனால் ஒரு முறை சிட்டுக்குருவி கூடு கட்டத் துவங்கிவிட்டால், அதற்குப் பிறகு வரிசையாக அடுத்தடுத்த ஜோடி வந்து கொண்டே இருக்கும்.

எங்கள் தெருவில் முதலில் நான்கு சிட்டுக்குருவிகள் மட்டுமே இருந்தன.  இப்போது இருபதுக்கும் மேற்பட்ட குருவிகள் உள்ளன.  எனவே நாம் மனது வைத்தால் கண்டிப்பாக குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்க முடியும் என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. 

தெருத்தெருவாகச் சுற்றியலைந்து கூடு கட்டத் தோதான இடத்தைக் கண்டுபிடிப்பது ஆண்குருவியின் வேலை.  இடம் கிடைத்தவுடன் இது என் இடம்; இங்கு வேறு யாரும் வரக்கூடாது என்று நான்கெல்லை வகுத்துக்கொண்டு பெண்குருவியைக் கவர அதிகச் சத்தத்துடன் ஒலியெழுப்புமாம். 

பெண்ணுக்கு ஆண் பார்த்த இடம் பிடித்திருந்தால், ஜோடி சேரும்.  தம்பதி சமேதரராக இரண்டும் சேர்ந்து கூட்டுக்கான பொருட்களைச் சேகரம் செய்யும்.  ‘இது என் வேலையில்லை;  நீதான் செய்யணும்,’ என்ற போட்டாப் போட்டி இக்குருவி இனத்தில் இல்லை!     

“க்கும்! ரொம்ப யச்சனமா இடம் பார்த்திருக்கு பாரு!” என்று பெண்குருவி  ஆணின் முகத்தில் காறித் துப்பிவிட்டுப் போய் விட்டால், அதனைக் கவர ஆண் வேறு இடம் தேட வேண்டும்!  இல்லாவிட்டால் இந்தக் கூட்டுக்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண் கிடைக்கும் வரைப் பொறுத்திருக்க வேண்டும்! 

ஆனால் இக்காலத்தில் கூடு கட்ட ஏதாவது இடம் கிடைத்தால் போதும் என்ற பரிதாபமான சூழ்நிலையில், பெண்குருவி ஆண் தேர்ந்தெடுக்கும் இடத்தை நிராகரிக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு தான்.   
 
Image
கூட்டினுள் இருந்தவை
சிட்டுக்குருவி தினம் பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய ‘நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,’ (SAVE OUR SPARROWS)  (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.  புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:-  http://www.natureforever.org/  

வேளாண்மை விளைச்சலுக்குச் சிட்டுக்குருவி எவ்வளவு தூரம் உதவுகிறது  என்பதை இவர் சொல்லும் சீனாவின் வரலாற்று நிகழ்விலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்:- 

1957 ஆம் ஆண்டு வேளாண் அறுவடை மோசமாகப் பாதிக்கப்பட்டதற்கு  எலி, சிட்டுக்குருவி, ஈ, கொசு ஆகியவற்றைக் காரணம் காட்டிய சீன அதிபர் மாசே துங்,  1.96 பில்லியன் குருவிகளைக் கொல்லுமாறு உத்தரவிட்டார். 

சிட்டுக்குருவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, விளைச்சலுக்கு உதவி செய்கிறது என்று பறவையியலார் கடுமையாக  எச்சரித்தும், அவர் கேட்கவில்லை.   இவர் ஆணைப்படி 1958 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அநியாயமாக 194,432 அப்பாவிக் குருவிகள்  கொல்லப்பட்டன.
ஆனால் அதற்கடுத்த ஆண்டு பூச்சிகளின் கடுமையான தாக்குதலால் விளைச்சல் படு மோசமாகப்  பாதிக்கப்பட்டதோடு, 1960 -62 ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்துக்கு 40000 சீனர்கள் பலியாயினர்.

சரி, நண்பர்களே!  உங்களுக்குக் கடைசியாக ஒரு வேண்டுகோள்!
சிட்டுக்குருவிகளைப்  பாதுகாக்க வேண்டிய  அவசியத்தைக் குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும்  எடுத்துக் கூறி,  இயற்கையை  நேசிக்கக் கற்றுக் கொடுங்கள்.
இக்கட்டுரையை வாசித்த ஒவ்வொருவரும் இன்று முதல் சிட்டுக்குருவியைக் காக்கும் நடவடிக்கையில் இறங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.  கட்டுரையைப் பொறுமையாக வாசித்தமைக்கு என் நன்றி.

45 comments:

  1. Image

    சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற தங்களின் இந்தக்கட்டுரை மிகவும் அழகாகவும் அருமையாகவும் யோசித்து எழுதப்பட்டுள்ளது. மனம் இருந்தால் + கொஞ்சம் பொறுமை இருந்தால் போதும் இதனைச் செய்வதும் மிகவும் எளிமையாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. Image

      தங்களின் முதல் பின்னூட்டத்துக்கும், செய்வது எளிமையாகத் தான் உள்ளது என்ற கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  2. Image

    காட்டியுள்ள மாதிரிப் படங்களும், பாதுகாப்பு கருதி எழுதியுள்ள விபரங்களும் மிகவும் பயனுள்ளவைகளே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. Image

      விபரங்கள் மிகவும் பயனுள்ளவைகளாக இருக்கின்றன என்பதறிய மிகவும் மகிழ்ச்சி சார்!

      Delete
  3. Image

    ஆண்குருவி பெண் குருவியை அழைத்தல் ..... அது ”இது என்ன வீடா” என பிகு செய்துண்டு பறந்து விடுவது என நடுவில் நகைச்சுவையைக் கலந்துள்ளது ரஸிக்கும்படியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. Image

      ரசிக்கும் படியாக உள்ளது என்ற உங்களது கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  4. Image

    நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் எடுத்துக் கூறி, இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுங்கள். இக்கட்டுரையை வாசித்த ஒவ்வொருவரும் இன்று முதல் சிட்டுக்குருவியைக் காக்கும் நடவடிக்கையில் இறங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//

    கட்டாயமாக முயற்சிக்கிறோம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. Image

      கட்டாயமாக முயல்கிறோம் என்ற உங்களது பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் எழுதியதை வாசித்து ஓரிருவர் முயன்றாலே அது என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக மகிழ்வேன். மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  5. Image

    வணக்கம் சகோ!

    மனதில் ஆழமான நம்பிக்கையையும் சக உயிர்கள் மேலான பரிவையும் விதைத்திருக்கிறது உங்கள் கட்டுரை.
    இயற்கையில் எதுவுமே பயனற்றது என்பதில்லை. ஒவ்வொன்றிற்கும் மற்றவற்றினோடு பிணைப்பு உண்டு. மனிதன் தன் சுயநலத்தினால் தனக்கு வேண்டியன வேண்டாதன என எல்லை வகுக்கிறான். இயற்கையின் சமநிலையைச் சீர் கெடுக்கிறான். இயற்கை தன்னால் ஆன மட்டும் அதனைச் சரிசெய்து கொண்டு இருக்கிறது.
    ஆனால் அது தன்னைத்தான் காத்துக்கொண்டு தகவமைத்துக் கொள்ள முடியாத கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

    ஒரு சிறிய குருவிதானே என்ற அலட்சியம் இல்லாமல் ( ஏனோ.. குருவிய சுடுறமாதிரி உன்னைச் சுட்டுப் பொசுக்கிவிடுவேன் “ என்ற மக்கள் மனதில் பதிந்து போன வரிகள் நினைவுக்கு வருகின்றன) அது தன் பங்கிற்கு இயற்கையில் பங்காற்றுகிறது என்பதை அறிய உதவி உள்ளது உங்கள் கட்டுரை.

    திருமந்திரம் ஒன்றுண்டு,

    யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

    உங்கள் கட்டுரையை நோக்கத் தோன்றுகிறது,

    “யாவர்க்குமாம் குருவிக்கொரு சிறுகூடு“

    என்று.

    த ம கூடுதல் 1.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Image

      அன்புச் சகோதரி,

      வணக்கம்.

      இம்முறை தங்கள் பதிவிற்குதவும் சில தகவல்களோடு வந்திருக்கிறேன்.
      தாராளமாய் நீங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
      உங்கள் பதிவில் நீ்ங்கள் குறிப்பிட்டுள்ள குருவியின் இந்தக் கூடு கட்டும் பாங்கினை,
      குறுந்தொகையின் 85 ஆம் பாடல்,

      “யாரினு மினியன் பேரன் பினனே
      உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
      சூன்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
      தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
      நாறா வெண்பூக் கொழுதும்
      யாண ரூரன் பாணன் வாயே.“

      எனக் குறிப்பிடுகிறது. சூலுற்ற தன் பெண்ணைக் கண்டு ( பேடையைக் ) கண்டு மகிழச்சித் துள்ளலில் ஆண்குருவி ( சேவல் ), அது ஈனுகின்ற இடத்தைக் கட்டமைக்கக் கரும்பின் பூவை எடுத்துச் செல்கிறது. நாம் கூடு என்கிறோம். புலவன் “ஈன் இல்“ ( பேற்றிற்கான இடம் ) என்கிறான்.

      புறநானூற்றின், 318 ஆம் பாடலும் வீட்டின் தாழ்வாரத்தில் கூடு கட்டும் இந்தக் குருவிகளின் கூடு கட்டும் திறத்தையே காட்டுகின்றது.

      “மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
      பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
      குரற்செய் பீலியி னிழைத்த குடம்பைப்
      பெருஞ்செய் நெல்லி னரிசி யார்ந்துதன்
      புன்புறப் பெடையொடு வதியும்“

      இங்கு வீட்டில் கூடு கட்டும் இந்தக் குருவியின் ஆண் தன் பெடைக்குக் கூடொன்றைக் கட்டித்தந்திருக்கிறது.
      மனையில் வசிப்பதை இயல்பாகக் கொண்டச் சிட்டுக் குருவிகளின் ஆண் குருவி ( சேவல் ) , ( ஆண் என்பதை எப்படி அறிவது என்பதற்கும் புலவன் விளக்கம் சொல்கிறான். அதற்குக் கறை அணல்.. அதாவது கருப்பு நிறமுள்ள(கறை) கழுத்து(அணல்) ) தன் கூட்டினைக் கட்டுகிறது.

      அக்கூடு வலிமையாகவும் அதே நேரம் மென்மையாகவும் இருக்க வேண்டும்.
      பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளுக்குச் சீவும் (சுகிர்தல்) நரம்புகளைக் கொத்திக் கொண்டுவந்து முதலில் அது சேர்க்கிறது

      வலிமைமிக்கக் குதிரையின் ( வயமான் ) பிடறி மயிர்களால் (குரல்) அதனை இணைக்கிறது. கூட்டை வலிமை செய்தாயிற்று.

      அடுத்ததாய், மயிற்பீலிகளைக் கொண்டுவந்து அதில் பரப்புகிறது. பின் தன் பெடையை அழைத்துக் கொண்டு வந்து வசிக்கிறது.

      அப்படித் தேர்ந்த இடமும் வறண்ட நிலமல்ல.

      பெரிய நெல்வயல்கள் ( பெருஞ் செய் ) சூழந்த இடம். எனவே உணவிற்கும் கவலை இல்லை அல்லவா?


      நற்றிணையின் 181 ஆம் பாடல், குஞ்சுகளுடன் இருக்கும் பேடைக் குருவியைக் காட்டுகிறது.


      “உள்ளிறைப் குரீஇக் காரணல் சேவல்
      பிறபுலத் துணையோடு உறைபுலத் தல்கி
      வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை
      நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன
      சிறுபல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்
      துவலையின் நனைந்த புறத்த தயலது
      கூர லிருக்கை அருளி நெடிதுநினைந்து
      ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக்
      கையற வந்த மையல் மாலை“

      இங்குக் குஞ்சுகளுடன் இருக்கும் ஈன்ற இல் “குடம்பை“ எனப்படுகிறது. பொருளாழமுள்ள சொல் இது.

      மழைபெய்யும் மாலை நேரத்தில், வீட்டினுள் தாழ்வாரத்தில் ( இதுவே இங்கு இறை எனப்படுகிறது. தற்போது பேச்சு வழக்கில் எரவானம் என்பர்) பல குஞ்சுகளுடன் குடம்பையில் இருக்கும் அந்தப் பேடை ஏனோ கூட்டிற்கு வரும் தன் சேவலைத் தன் கூட்டில் சேர்க்காமல் கொத்திவிரட்டுகிறது. அக் கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் தோற்றத்திற்குப் புலவன் ஈங்கைப் பூவை உவமை சொல்கிறான். மஞ்சள் நிறமுள்ளதும் மையம் செம்மைகலந்த கருநிறமுடையதுமான இந்தப் பூ, கூட்டில் இருக்கும் விரிந்து அதிகம் நாளாகாத மஞ்சள் நிறமாய் அலகுகள் உயர்த்தும் சின்னஞ்சிறு குஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டது எவ்வளவு சிறப்பு.
      ஈங்கைப் பூவைக் காணச் சுட்டி http://koomagan.blogspot.in/2013/01/02_26.html.
      பேடை கொத்தி விரட்டக் காரணம் ஆண் குருவியில் உடலில் இருந்த வேற்று வாசனையால் அது மற்றொரு குருவியைச் சேர்ந்துள்ளது என அப் பேடை அறிந்தது என்று கருதுகிறாள் தலைவி. இது நோக்குவற்றின் மேல் எல்லாம் தன் மனநிலையை ஏற்றிப் பார்க்கும் அவள் அவல மனநிலை அன்றி வேறென்ன?

      மழையில் நடுங்கி உடல் சிலிர்த்துத் தோற்றமளிக்கும் அந்த ஆண் குருவியை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. தன் இணையை ஏன் அந்தப் பெண்குருவி தன் கூட்டில் சேர்க்க வில்லை. என்ன காரணமாய் இருக்கும்? பின் அதுவே பரிதாபப்பட்டுத் தன் சேவலை அனுமதிக்கிறது ( ஈர நெஞ்சின் விளிப்ப ). பெண் மனம் என்பது உலகப் பொதுவில் எல்லா உயிர்க்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல:)

      குஞ்சுகளைக் காத்துச் சிறகசைத்து அவை பறந்தாயிற்று. பார்த்துப் பார்த்துச் சேர்த்துச் செய்த கூடு பயனற்றதாயிற்று. இனிக் கூடெதற்கு..?

      விட்டுப் பறக்கின்றன சிட்டுக்குருவிகள்.

      பார்த்தான் நம் வள்ளுவன். சும்மாவா இருப்பான்…?!!

      வேலை முடிந்ததும் கூட்டைப் பற்றிக் கவலையில்லாமல் அதை அப்படியே விட்டுப் போகின்றன பார் இந்தப் பறவைகள்....அது போன்றதுதான் உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்று சொல்லிவிட்டான்.

      “குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
      உடம்பொடு உயிரிடை நட்பு. “

      அவரவர் பார்வையில் அவரவர் அனுபவத்தில் ஒரே காட்சிகள் எவ்வாறெல்லாம் விரிகின்றன என்பதற்கு இக்குருவிக்கூடே சாட்சி.

      நன்றி.

      Delete
    2. Image

      This comment has been removed by the author.

      Delete
    3. Image

      ஈங்கைப் பூ பின்வரும் இணைப்பில் 12 ஆவதாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

      http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21363

      முன்னுள்ள பின்னூட்டத்தில் காட்டிய சுட்டி இதனைக் காட்டவில்லை.

      Delete
    4. Image

      பதிவினுக்கான கருத்துரை மிகவும் அருமை!...

      நிறைந்த செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சி!..

      Delete
    5. Image

      ஆகா! குருவியைப் பற்றி இலக்கியத்தில் இடம் பெற்ற பாடல்களைத் திரட்டிக் கொடுத்து என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். நம் கூடவே வாழும் சிட்டுக்குருவியைப் பற்றி நம் இலக்கியத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நீண்ட நாட்களாக ஆசை. அவற்றைத் தொகுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை போன பதிவில் உங்களிடம் வெளியிட்டிருந்தேன். என் ஆசை உங்களால் இன்று நிறைவேறியிருக்கிறது. மெனக்கெட்டு என் பதிவுக்காக இத்தனை பாடல்களைத் தேடித்தேடிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இவை ஒவ்வொன்றையும் பொறுமையாக வாசித்து மகிழ்ந்து நான் சிட்டுக்குருவி பற்றி இதுவரையில் அவதானித்த செய்திகளை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு என் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன். குஞ்சு பொரித்தவுடன் மழலைகளின் சப்தம் ஓயாமல் ஓரு வாரம் கேட்டுக்கொண்டிருக்கும். பின் அவற்றைப் பறக்க வைக்கத் தாயும் தந்தையும் மாற்றி மாற்றி வெளியில் இருந்து கொண்டு குரல் கொடுத்து பறந்து காட்டும் . நான் இவற்றையெல்லாம் நேரம் போவது தெரியாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன். குஞ்சுகள் பறந்து கூடு வெறுமையான பிறகு வீடே நிசப்தத்தில் மூழ்கும். என் பிள்ளைகள் ஊரிலிருந்து வந்து விட்டு ஊருக்குத் திரும்பியவுடன் வீடு வெறுமையாகுமே அது போல் குருவி கூடு காலியாகும் போதும் ஒரு வெறுமையுணர்வு என்னை ஆக்ரமிக்கும். நான் ஒரு சிறந்த கவிஞராக இருந்திருந்தால் என் சோகத்தைக் கொட்டி ஒரு கவிதை இயற்றியிருப்பேன். எனக்குக் கவிதை வராது. உங்கள் பின்னூட்டம் எப்போதுமே கருத்துக் கருவூலமாக இருக்கிறது என்பதை மீண்டும் மெய்ப்பித்து இருக்கிறீர்கள். என் பதிவுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி இவ்வளவு தகவல்கள் சேகரித்துக் கொடுத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோ! வாக்குக்கும் என் நன்றி.

      Delete
  6. Image

    அருமையான பதிவு. முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Image

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! முயல்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது காதில் தேனை வார்க்கிறது! மிக்க நன்றி! சிறுகுருவியை வாழ வைக்க நம்மால் முடிந்த ஒரு சிறு உதவி! கூடு கட்ட இடமில்லை என்றாலும் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் தினமும் வைத்தால் கூட பறவைகளுக்கு அது பெரிய உதவி! மீண்டும் நன்றி ஐயா!

      Delete
  7. Image

    வணக்கம்
    கட்டுரையை படித்த போது பல தகவலை அறிந்தேன்.. அதனால் ஏற்படும் நண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி எங்கள் வீட்டில் சிட்டுக்குருவி அதிகம்... த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. Image

      கேட்கவே ஆனந்தமாயிருக்கிறது ரூபன்! உங்கள் வீடு அவை கூடுகட்ட வசதியாயிருக்கிறது என்று அர்த்தம். கீச் கீச் என்று கத்திக்கொண்டு ஒரு நிமிடம் ஓரிடத்தில் நில்லாமல் இங்கும் அங்கும் அவை பறந்து கொண்டிருப்பது உங்கள் வீட்டுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது அல்லவா? கருத்துக்கும் வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்!

      Delete
  8. Image

    அருமையான யோசனை... நன்றி...

    அழகான கட்டுரை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Image

      அருமையான யோசனை என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  9. Image

    மிகவும் பயனுள்ள பதிவு. நானும் மொட்டை மாடியில் கூடு வைக்கப் போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Image

      மிகவும் நன்றி ஸ்ரீராம்! பின்னூட்டத்தில் ஒவ்வொருவரும் முயல்கிறேன் என்று எழுதியிருப்பதை வாசிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. மொட்டை மாடியில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் அட்டை பெட்டிகளைத் தொங்கவிடுங்கள். முக்கியமாக சுவர் மூலைகளில். அவை எல்லாவற்றையும் பரிசீலித்து அவற்றுக்குப் பாதுகாப்பு என்று கருதுவதைத் தேர்ந்து எடுக்கும். பெட்டியின் ஓட்டை வெளியே தெரியுமாறு இல்லாமல் மறைவாகச் சுவரைப் பார்த்தது போல் இருக்கட்டும். இல்லாவிட்டால் காக்கா வந்து மூக்கை விட்டு முட்டையைத் தின்றுவிடும். தினமும் தண்ணீர் வைத்து நொய் தூவி வையுங்கள். சீக்கிரமே சிட்டுக்குருவி அல்லது வேறு ஏதாவது ஒரு பறவை வந்து கூடு கட்டும். முதல் அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதன் ஒவ்வொரு செயலும் நமக்கு பரவசமூட்டும். நம்பிக்கையோடு காத்திருங்கள். குருவி கூடு கட்டிய அனுபவத்தைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  10. Image

    குருவி குடித்தனம் நடத்தும் கூட்டினைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    குருவிகளும் வாழ்க.. குருவிகள் கூடிவாழ கூடு அமைத்துத் தந்த தாங்களும் வாழ்க!..

    ReplyDelete
    Replies
    1. Image

      நீங்கள் துபாயில் இல்லாமல் தஞ்சையில் இருந்திருந்தால் கண்டிப்பாக நீங்களும் முயன்றிருப்பீர்கள். கரிச்சான் பதிவை வாசித்த போது பறவைகளை, இயற்கையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டேன். இயற்கையை உண்மையிலேயே நேசிக்கும் ஒருவரால் தான் அப்படி எழுத முடியும். குருவிகளையும் என்னையும் வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி துரை சார்!

      Delete
  11. Image

    சிற்றுயிர்களை அழித்த மாபாதகத்திற்கான தண்டனையை -
    இயற்கை சரியாகத் தான் வழங்கியிருக்கின்றது..

    மனிதர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்!..

    ReplyDelete
    Replies
    1. Image

      சரியாகச் சொன்னீர்கள். வரலாறு இத்தனை பாடங்கள் சொன்னபோதும் இன்னும் நாம் விழித்துக்கொள்ளவில்லையே என்பதை நினைத்துத் தான் வருத்தமாயுள்ளது. கருத்துக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  12. Image

    நல்ல ஆலோசனை. கொஞ்சம் பசுமையும் இடமும் இருப்பதால் எங்கள் வீட்டில் இப்போதும் அணில்களும் பறவைகளும் வந்து விளையாடிக் கொண்டிருகின்றன. மாமரத்தில் கூடும் கட்டியுள்ளது

    ReplyDelete
    Replies
    1. Image

      கேட்க மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது முரளிதரன்! பசுமையைத் தொடர்ந்து காப்பாற்றிக் குருவிகளுக்கும் மற்ற பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுங்கள். ஏதோ உங்களைப் போல் சிலராவது இருப்பதால் தான் பறவைகள் இன்னும் உயிர் பிழைத்திருக்கின்றன. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. Image

    நல்ல, பயனுள்ள யோசனை. பட விளக்கங்கள் நன்று. கடைபிடிக்க முயற்சிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Image

      முயற்சிக்கிறோம் என்று சொன்னதற்கும் பயனுள்ள யோசனை என்ற கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  14. Image

    அனுபவ பூர்வமான யோசனைகள் ! அவரவரும் சிறு முயற்சியைத் தொடர்ந்து செய்து பறவைகளை அழிவிலிருந்து காப்பது கடமை .

    ReplyDelete
    Replies
    1. Image

      அனுபவ பூர்வமான யோசனைகள் என்ற பாராட்டுக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி!

      Delete
  15. Image

    சிட்டுக்குருவியின் இனம் தழைக்க செய்யவேண்டியவை குறித்த பகிர்தல் பலருக்கும் பயன்படும் என்பது இக்கட்டுரையின் பின்னூட்டத்தில் அனைவரும் செயல்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளதைக் கொண்டு உணர்ந்துகொள்ள முடிகிறது. மிகவும் எளிமையான வழிமுறைகள்தாம்... செயல்படுத்த மனம் வேண்டும் அவ்வளவுதான்.

    சோப்பு டப்பாவாக இருக்கும்பட்சத்தில் அதன் சோப்புவாடை போகவிட்டு பிறகு பயன்படுத்துவது, பூந்துடைப்பங்களை குப்பையில் எறியாமல் ஓரமாய் போட்டுவைப்பது, கல் கோலமாவுக்கு பதில் அரிசிமாவு பயன்படுத்துவது போன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் வைத்து குருவிகளுக்கு உதவும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

    சிட்டுக்குருவி கூடுகட்ட இடம் தேர்ந்தெடுக்கும் அழகை நகைச்சுவையோடு குறிப்பிட்டதை ரசித்தேன். சீனாவில் நடைபெற்ற துயரநிகழ்வு மனம் தொட்டது. சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் அருமையானதொரு கட்டுரை.

    பின்னூட்டங்கள் பதிவுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன. முக்கியமாய் விஜி சாரின் சங்ககால இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றிய பதிவுகள் இதுவரை அறியாதவை. அவர்க்கும் அகமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Image

      நீண்டதொரு பின்னூட்டத்துக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி கீதா!

      Delete
  16. Image

    //பழைய பூந்துடைப்பான்களைத் தூக்கிக் குப்பையில் எறியாமல் ஏதாவது ஓர் இடத்தில் போட்டு வைக்கவும்; அவற்றிலிருந்து மிருதுவான பஞ்சு போன்ற நார்களை உருவி எடுப்பதில் சிட்டுக்குருவி கெட்டி!//

    ஆம். இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

    2011ம் ஆண்டு மே/ஜூன் மாதம் என்ற ஞாபகம். புதிதாகப் பிறந்திருந்த எங்கள் பேரனுக்கு தூளி கட்டுவதற்காக வெள்ளை நிறத்தில் கெட்டியான தூளிக்கயிறும், காற்றோட்டமுள்ள வெள்ளைக்காடாத்துணியும், மேலே தொங்கவிட ஓர் அழகிய சுழலும் பொம்மையுடன் கூடிய தூளியை அகலச்செய்யும் மரக்கட்டையும் பஜாருக்குச்சென்று வாங்கி வந்தேன்.

    அதில் தூளிக்கயிறு சற்றே நீளமாக நான் வாங்கி வந்துவிட்டதால், அதனை கொஞ்சமாக ஓரிரு மீட்டருக்கு நறுக்கி, கயிற்றின் இருபக்கமும் முடிச்சுப்போட்டு, வாசலில் உள்ள கிரில் கேட்டில் துணி உலர்த்தும் கொடிபோல கட்டிவிட்டேன்.

    இருபக்கமும் முடிச்சுக்குப் பிறகு உள்ள இடத்தில் சற்றே திரிபோல அந்தக்கயிறு பிரிந்திருந்தது.

    அதில் ஒரு குருவி வந்து அமர்ந்து அந்தத்திரிபோல உள்ள பகுதியை தன் அலகால் குடைந்து குடைந்து பஞ்சு நூல் போன்ற ஒன்றை அதிலிருந்து உருவிக் கவ்விச்சென்றது.

    ஒருமுறை இருமுறை மட்டுமல்ல. அடுத்தடுத்து 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வீதம் பறந்து பறந்து வந்து, அதே இடத்தில் அமர்ந்து, சுமார் 10-15 தடவைகள் இதுபோல எதையோ உருவிக்கொண்டு, தன் அலகால் கொத்திக்கொண்டு எங்கேயோ பறந்து செல்வதை கவனித்தேன்.

    அது வந்து செல்லும் இடத்துக்கு அருகிலேயே நான் என் வீட்டில் உள்ள சின்னச்சின்ன பஞ்சு உருண்டைகள், நூல்கள் போன்றவற்றை அதன் பார்வையில் படும்படியாக அதே இடத்தினில் வைத்தும் கூட அவற்றையெல்லாம் ’தனக்கு வேண்டவே வேண்டாம்’ என்பதுபோல நிராகரித்துவிட்டு, அந்தத்தூளிக்கயிற்றின் [கொடிக்கயிற்றின்] நுனியில் குடைந்து குடைந்து ஏதோ ஒரு நூல் இழையை மட்டும் கவ்விச்சென்றது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

    ஏனோ அன்று அந்தக்காட்சியை அதன் அருகே சென்று என்னால் வீடியோ எடுக்க முடியாமல் போய் விட்டது. அது அங்கு வரும்போது நாம் போட்டோ/வீடியோ எடுக்கச் சென்றால் அது பயத்தில் பறந்து சென்று கொண்டே இருந்தது. அதனால் நானும் வெகு நேரம் தூரத்தில் நின்று அதன் செயல்களைக் கூர்நோக்கல் மட்டும் செய்துகொண்டிருந்தேன்.

    இப்போது தங்களின் மேற்கண்ட வரிகளைப்படித்ததும்தான் //அவற்றிலிருந்து மிருதுவான பஞ்சு போன்ற நார்களை உருவி எடுப்பதில் சிட்டுக்குருவி கெட்டி!// என்பதை என்னாலும் புரிந்துகொள்ள முடிந்தது. :)

    ReplyDelete
  17. Image

    சிட்டுக்குருவியைப் பற்றிய தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! நாம் என்ன தான் பஞ்சு, நூல் போன்ற பொருட்களை அதன் கண்ணெதிரேப் போட்டுவைத்தாலும், துடைப்பத்திலிருந்து, கயிற்றிலிருந்து மெல்லிய நார்களை உருவி எடுப்பதில் அதற்கு அலாதி மகிழ்ச்சி போலும். கூட்டைக் கட்டுவதற்கு தன் அலகே தனக்குதவி என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது. மீள்வருகைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மீண்டும் என் நன்றி கோபு சார்!

    ReplyDelete
  18. Image

    //நாம் என்ன தான் பஞ்சு, நூல் போன்ற பொருட்களை அதன் கண்ணெதிரேப் போட்டுவைத்தாலும், துடைப்பத்திலிருந்து, கயிற்றிலிருந்து மெல்லிய நார்களை உருவி எடுப்பதில் அதற்கு அலாதி மகிழ்ச்சி போலும்.//

    ஆமாம். நானும் விளக்கேற்றும் பஞ்சுத்திரி, மருத்துவ முதலுதவிப்பெட்டியில் உள்ள பஞ்சு உருண்டைகள், சில திரி நூல்கள் என என்னென்னவோ அன்று போட்டுப்பார்த்து விட்டேன். அவற்றையெல்லாம் அது லட்சியமே செய்யவிலைதான்.

    //கூட்டைக் கட்டுவதற்கு தன் அலகே தனக்குதவி என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.//

    //தன் அலகே தனக்குதவி//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிக்க மகிழ்ச்சி. :)))))

    ReplyDelete
    Replies
    1. Image

      //அவற்றையெல்லாம் அது லட்சியமே செய்யவிலைதான்.//

      செய்யவிலைதான் = செய்யவில்லைதான்.

      Delete
  19. Image

    அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/4.html#comment-form
    திருமதி. கலையரசி அவர்கள்
    வலைத்தளம்: ஊஞ்சல்





    http://unjal.blogspot.com/2011/12/blog-post_27.html
    ஐரோப்பா பயண அனுபவங்கள்

    ’மூன்றாம் கோணம்’ மின் இதழ் போட்டியில்
    பரிசுபெற்ற மிக அருமையான கட்டுரை




    http://unjal.blogspot.com/2015/04/blog-post.html
    சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க
    நாம் என்ன செய்ய வேண்டும்?


    http://unjal.blogspot.com/2014/02/blog-post_9.html
    எதிர் வீட்டுத் தோட்டத்தில்


    http://unjal.blogspot.com/2014/01/blog-post_14.html
    http://unjal.blogspot.com/2014/01/ii_5057.html
    http://unjal.blogspot.com/2014/01/iii.html
    கோலங்கள்


    http://unjal.blogspot.com/2012/03/blog-post_12.html
    பெண் என்னும் இயந்திரம்




    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
    Replies
    1. Image

      வலைச்சர அறிமுகம் பற்றி வந்து தகவல் சொன்ன தங்களுக்கு என் நன்றி வேலு சார்!

      Delete
  20. Image

    அழகிய அருமை பதிவு.
    72
    நாட்டகள மருத்துவ மனையில் என்னவரின் அறுவை சிகிச்சை காக இருந்துவிட்டு
    வீடு திரும்பியதும் என் BALCONYIL அழகான குருவி கூடு கட்டி இர்ருந்தது.
    எல்லா வலிகளையும் மறந்து ஜோடிகளின் கூட்டை ரசித்திருக்கிறேன்.
    கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலை தளம் மூலமாக இங்கு வந்தேன்.
    இயல்பான உங்கள் எழுத்து என்னை ரசிக்கவைகிறது கலை.
    விஜி

    ReplyDelete
    Replies
    1. Image

      தங்கள் வருகைக்கு என் முதல் நன்றி விஜி! கோபு சார் மூலம் உங்கள் அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவருக்கும் என் நன்றி உரித்தாகுக! உங்கள் அனு பவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் என் எழுத்தை ரசித்ததிற்கும் என் மனமார்ந்த நன்றி விஜி! தொடர்ந்து வாருங்கள்!

      Delete
    2. Image

      உங்கள் கணவரின் அறுவை சிகிச்சைக்காக 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாகச் சொல்லியுள்ளீர்கள். அவர் இப்போது நலந்தானே? மருத்துவமனை வாசத்தினால் ஏற்படும் மனவலியை நான் நன்கு அறிவேன். எனக்கும் ஆறு மாதங்கள் அங்கிருந்த வேதனையான அனுபவம் உண்டு. என்னைப் போலவே குருவிக் கூட்டைப் பார்த்தவுடன் வலிகளை மறந்து ரசிக்கும் மனநிலை உங்களுக்கும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியாயிருக்கிறது விஜி!

      Delete
  21. Image

    ஆகா!... ஆகா!... மிக மிக அருமையான கட்டுரை!

    இப்படி ஊட்டப் பானங்களின் பெட்டிகள் போன்ற வீட்டிலிருக்கும் பெட்டிகளிலேயே கூடு செய்வது பற்றியும் இன்ன பிற விவரங்களையும் இதற்கு முன்பும் நான் படித்திருக்கிறேன். ஆனால், இப்படி இத்தனை படங்களுடன் விளக்கியது மட்டுமின்றி இதனால் உங்கள் பகுதியிலிருந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் நீங்கள் கூறியிருப்பது இந்த முயற்சி மீதான நம்பகத்தன்மையைக் கூட்டி, நாமும் கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் எனத் தூண்டுகிறது. கண்டிப்பாக எங்கள் வீட்டில் முயன்று பார்க்கிறோம். கூடவே இதுவரை அறியாத அந்தச் சீன வேளாண்மைத்துறையுடைய தவற்றைப் பற்றிய தகவலும் அளித்திருந்தீர்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Image

      வணக்கம் சகோ! அருமையான கட்டுரை என்ற உங்கள் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். உங்கள் வீட்டில் முயன்று பார்க்கிறோம் என்று எழுதியிருப்பது கண்டு அளவிலா மகிழ்ச்சி! எப்படியாவது நம் தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அந்தச் சின்னஞ்சிறு உயிரை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதே என் கவலை! இணைப்புக் கொடுத்தவுடன் படித்து கருத்திட்டமைக்கு மீண்டும் என் நன்றி!

      Delete