Showing posts with label Ghazal. Show all posts
Showing posts with label Ghazal. Show all posts

ஜாவேத் அக்தர் கவிதைகள்

>> Tuesday, May 4, 2010

Image
எனது முற்றமும், எனது மரமும்


விரிந்து பரந்திருந்தது
முற்றம்

அதில்தான் அத்தனை
விளையாட்டுகளும்

முற்றத்தின் முன்னேயிருந்தது
அந்த மரம்
என்னைவிட உயரமாயிருந்தது

நான் பெரியவனானதும்
அதன் உச்சியை தொடுவேன்
என்ற நம்பிக்கையிருந்தது

வருடங்கள் கழிந்து
வீடு திரும்பினேன்

முற்றம் சின்னதாயிருந்தது
மரம் முன்னைவிட உயரமாயிருந்தது



கஜல் - 1 -

நம் விருப்பத்தின் சோதனை தானிது
அடி எடுத்தோம் இலக்கு பாதையானது

பிரிவின் அச்சில் சர-சரவென சுழன்றவன்
மானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது

ஆசையாயிருந்தது கை கூடியது-ஆனால்
தொலைந்து போனதே அது என்னவாயிருந்தது

மழலையில் பொம்மைகளை உடைத்திருக்கிறேன்
துயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது

காதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும்
அதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது

தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றிருந்தேன்
உன்னைப் பார்த்தப்பின்னதை சாபமாக உணர்ந்தேன்

கனவெனும் நோய்க்கினி விடுதலை தான்
உலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது.



கஜல் - 2 -


மழலைப் பருவத்தில் நாளும் தனித்திருந்தேன்
மனதின் முடுக்கில் மட்டுமே விளையாடித் திரிந்தேன்

ஒருபுறம் இமைகளின் பாதுகாப்பு போராட்டம்
மறுபுறம் வழியும் கண்ணீரின் நீரோட்டம்

வாழ்க்கை சந்தை மாறுபட்ட மருட்கையானது
அங்காடியில் ஆசைகள் அடுக்கப்பட்ட அலங்காரமானது

வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது தற்கொலையாகுமா
மரணத்தின் பேரிடரும் பெருங்குழப்பமும் நீங்குமா

வலியையும் பிணியையும் உணர்ந்திருக்கிறோம்
மனமும் இதயமும் சாகிறது இன்று பசியால்



குழப்பம்

கோடி முகங்கள்
அதன் பின்னே
கோடி முகங்கள்
இவை பாதையா
முட்களின் கூடா
பூமி மூடப் பட்டிருக்கிறது
உடல்களால்
எள் வைக்கவே இடமில்லை
எங்கே வைப்பது காலை
இதைப் பார்க்கும் போது
நிற்குமிடத்திலேயே
வேரூன்றி விடலாமென
எண்ணுகிறேன்
என்ன செய்ய முடியும்?
எனக்குத் தெரியும்
இங்கேயே நின்று விட்டாலும்
பின்னாலிருக்கும் பெருங்கூட்டம்
பாய்ந்து வந்து, அதன் பாதங்களால்
என்னை பசையாக்கிவிடுமென்று
அதனால், நடக்கிறேன்
என் பாதத்தின் அடியிலிருக்கும்
பரப்பில் மட்டும்

யாரோ ஒருவரின் மார்பில்
யாரோ ஒருவரின் புஜத்தில்
யாரோ ஒருவரின் முகத்தில்
நடந்தால் பிறரை
மிதிக்கிறேன்
நின்றால்
மிதிக்கப் படுகிறேன்

ஏ மனமே,
பெருமைப்பட்டுக் கொள்வாயே
உன் முடிவுகளுக்காய்
அப்படியானால் சொல்:
என்ன முடிவெடுத்துள்ளாய் இன்று


- ஜாவேத் அக்தர்


தமிழில் : மதியழகன் சுப்பையா
தொகுப்பு : அம்பறாத்தூணி
 நன்றி : வார்ப்பு

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP