நல்வரவு_()_


Thursday, 31 December 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Image


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
தன் உயிர் விட்டதாம் தீக்குச்சி
அதை நினைத்து நினைத்து
உருகியதாம் மெழுகுவர்த்தி

That is LOVE.....

Image

Saturday, 26 December 2009

என்னத்தைக் கண்டேன்???:)

Image
என்னத்தைக் கண்டேன்???:)
(சிலவேளை இதுதான் வாழ்க்கையோ??:):))


ல்லூரிக் காலத்தில்
என் கண்ணசைவுகள்கூட
உனக்குக் கவிதை சொல்லியிருக்கும்

தனால் தானே
என் கண்ணசைவுகளை நீ
அதிகபட்சம் நேசித்தாய்

ப்போது எனக்கு
மீசை கூட
முளைத்திருக்கவில்லை!
இருந்தும் நீ எனக்குப்
பச்சைக்கொடி காட்டினாயே...
எதனால்?

காதல் கடிதம்...
ஓ.....
அது என் மாமாவின்
பழைய கடிதத்தைப்
பார்த்து எழுதியது...
அப்போது எனக்குச்
சுயமாக கடிதம் கூட
எழுதத் தெரியாது!

சும்மா
பரீட்சார்த்த முயற்சியாய்
உனக்குக் கொடுத்தேன்
இப்படியாகுமென்று
யார் கண்டது?...

தன் பின்
நான் என்ன செய்தேன்
எல்லாமே நீதானே!

ப்போதெல்லாம்
உனக்கு என்னைப் பிடிக்கும்!
என் புலம்பல் பிடிக்கும்!
புரியாமல் நான் பேசும்
வசனம் பிடிக்கும்!
நண்பர்கள் உபயத்தில்
நான் சொல்லும்
கவிதைகள்கூட உனக்குப் பிடிக்கும்!

ப்போது மட்டும்
உனக்கு என்ன நடந்தது?

த்தனை தடவை
என் 'செந்தில்' முகத்தைத் தடவி
'கமல்' என்று புகழ்ந்திருக்கிறாய்..?
எத்தனை தடவை
'நீங்கள் இல்லாவிடால்
வாழ்க்கையே இல்லை'
என்று புலம்பியிருக்கிறாய்..?

ப்போது உண்மையில்
'வாழ்க்கை' என்றால் என்னவென்று
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது!

ருப்பினும் வாழ்க்கைபற்றி - நீ
நிறையப் பேசுவாய்!
நான் சொல்லும்
அர்த்தமற்ற தத்துவங்களை
அப்படியே நம்புவாய்!
அதிகமேன்....
தொடர்ச்சியாய் ஆறு வருடம்
"நீ குஷ்பூ மாதிரி இருக்கிறாய்"
என்று நான் சொன்ன பொய்யை
நீ கடைசிவரை நம்பினாயே!
அப்போதெல்லாம் எனக்குள்
எதைக் கண்டாய்?

சொர்க்கத்திற்கான விசா
என்னிடம் இருப்பதாக
யார் உனக்குச் சொன்னது?

ப்பொழுது
கொஞ்ச நாட்களாகத்தான்
உன்னிடம் இந்த மாற்றம்!

"உங்களைக் கட்டிக்கிட்டு - நான்
என்ன சுகத்தைக் கண்டேன்?" என
நீ அடிக்கடி புலம்புவதின்
அர்த்தம் எனக்குப் புரியவில்லை!

சிலவேளை
இதுதான் வாழ்க்கையோ?


ன்னது?
நான் பேசுவது
கழுதை கத்துவதுபோல்
இருக்கிறதா?

யோ!! பிளீஸ்!!
தயவுசெய்து மெதுவாகக் கத்து
நமது மூன்றாவது மகன்
நம்மை முறைத்துப் பார்க்கிறான்!!!

(கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, இலங்கைப் பேப்பரில் வெளியானது இது).

இத்துடன் கிறிஸ்மஸ் இலவச இணைப்பு "மொப்பி"..
http://picasaweb.google.com/athiramiya/Moppy

Wednesday, 16 December 2009

பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மடல்.....

Image
அம்மா!!!
என்னை ஆசீர்வதித்துப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய நீ, ஏன் அழுதழுது அஞ்சல் அனுப்புகிறாய்?

பட்டம் பெறுவதற்காக, உன் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளிருந்து நான் வெளியே வந்துவிட்டது உண்மைதான், அதற்காக நீ அஞ்சாதே!!. புத்தகப் படிப்பைவிட உன் புத்திமதிகள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன.

அம்மா!! உன் கண்காணிப்பின் கீழ் இருந்தபோது, நான் கண்ணை மூடிக்கொண்டும் நடந்திருக்கிறேன், விழுந்தாலும் உன் மடியில்தான் விழுவேன் என்று எனக்கு நிட்சயமாகத் தெரிந்திருந்தது.

சின்னச் சின்ன ஷேஷ்டைகள் செய்து உன்னிடம் திட்டுவாங்குவது அப்போது என் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இப்போது நான், பொழுதைப்போக்கும் போக்கிரிப் பெண்ணாக இல்லைத்தாயே. ஏனெனில் நான் விழுந்தால் தாங்க இங்கே மடியில்லை இடிதான் உண்டு.

அதனால்தானம்மா, அக்கரைப் பச்சைகளிடமிருந்து அழைப்புக்கள் வந்தபோதெல்லாம் அவற்றை நான் கிழித்துப் போட்டேன். என்னைக் கைது செய்ய வந்தவர்களிடமெல்லாம், நான் ஏற்கனவே சிறையில் இருப்பதாகச் சொல்லி அனுப்பினேன். நீயே சொல்லம்மா, "காவல்காரன் இல்லையென்பதற்காக, நிலா பகலெல்லாம் உலாப் போகுமோ?".

எனக்கு நினைவிருக்கிறது, பல்கலைக்கழகத்தை முட்கள் நிறைந்த காடு என்றும், அதற்குள் நுழைந்தால் பழுதில்லாமல் திரும்புவது அபூர்வம் என்றும் நம் கிராமத்தவர்கள் பலவாறாகப் பேசியபோது, நீ என்ன சொன்னாய்? "என் மகள் அன்னம் போன்றவள், பாலையும் நீரையும் பிரித்துண்பதற்கு அவளுக்குத் தெரியும்" என அடித்துச் சொன்னாயே.

உனது அந்த அபார நம்பிக்கையை வாழவைப்பதற்காக, எனது அற்ப ஆசைகளை நான் சாகடித்துவிட்டேனம்மா.......

என்னைப் பொறுத்தவரை கலாசாலையும் வயலும் ஒன்றுதான், சேறும் உண்டு சோறும் உண்டு. சேற்றுத் தண்ணீரில் தவழ்ந்து விழையாடுவதற்குத் தவளைகள் வேண்டுமானால் ஆசைப்படலாம், நான் தாமரை அல்லவா?.

ராக்கிங்கின்போது கூட அழாதவள் நான், உன்னை அழ வைக்கவேண்டுமென்பதே என் ஆசை...... ஆமாம்!! வெற்றிகளோடு நான் வீடு திரும்புகையில், என்னைப் பார்த்து நீ, ஆனந்தக் கண்ணீர் வடிக்கவேண்டும். உன் கனவுகளின் மொத்த உருவமாய் நான் மாறிவருவேனம்மா கொஞ்சம் அவகாசம் கொடு, அவசரப்படாதே...

வளாகத்துக்குள்ளும் வம்புதும்புகள் நடக்கலாம்தான், ஆனால் நடவடிக்கைகளால் என் நாமம் நாறிப்போக விடமாட்டேன். சந்தனக் காட்டிலிருந்து வந்தவளுக்கு சாக்கடையைக் கண்டால் ஒதுங்கிக்கொள்ளத் தெரியும்.

கடைசியாகச் சொல்கிறேன், வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருக்கிறதே எனக் கண்ணீர் வடிக்காதே..... "இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது".

இப்படிக்கு உன்
அன்பு மகள்.

Monday, 14 December 2009

படித்ததில் பிடித்த கவிதைகள்(தொ- 1)

Image
நூலகம்
எப்பவுமே
அமைதியாக இரு
எல்லாம் இருந்தும்
அமைதியாக இருக்கும்
நூலகத்தைப்போல

குப்பை
கறுத்த வளையல்களோடு
குனிந்து நிமிர்ந்து
குப்பை பெருக்கிச்
சென்றாள் ஒருத்தி
நிலமோ சுத்தமானது
என் மனமோ
குப்பையானது!!!

விழுது
ஆலமரமே
நீயும் தாடி
வளர்க்கிறாயே
உனக்கும் காதலில்
தோல்வியோ?

சீதனம்
மணமகளே
நீ ஏன் தலை
குனிந்து இருக்கிறாய்?
பணம் கொடுத்து
வாங்கியிருக்கிறாய்
மணமகனை
நீ நிமிர்ந்திரு
அவர் குனியட்டும்!!!

ஒட்டகம்
நீ சற்று உயரமாக
இருந்ததனால்
உன்னை ஒட்டகத்துக்கு
ஒப்பிட்டேன்
பலைவனத்தில்
என்னைத் தவிக்க
விட்டுப் போனவனே
ஒட்டகமேதான் நீ
தவறில்லை ஒப்புக்கொள்!!!

பல்லக்கு
இத்தனை ஆண்டுகளாய்
நான் சுமந்து வந்த
பல்லக்கை இடையில்
இறக்கி வைத்து
சற்று இளைப்பாறுகையில்
திரை கொஞ்சம் விலகியது
அப்போதுதான் தெரிந்தது
உள்ளே நீ இல்லை
என்ற உண்மை!!!

வாக்கு
அம்மாவின்
வார்த்தைகளே
வேதவாக்கானால்
நீ தொட்டிலிலே
கிடந்திருக்கலாம்
கட்டிலுக்கு வந்திருக்க
வேண்டியதில்லை!!!

கொடி
கொடி கட்டிக்
காயப்போட்டிருப்பது
குழந்தைகளின்
ஆடைகளும் கொடிகட்டிப்
பறந்த அவளின்
குதூகலங்களும்தான்

அழகு
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும்வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்குமென்று!!!

காந்தம்
பெண்ணே!
நீ உன் இதயத்தை
இரும்பாக்கினாய்
நான்
காந்தமானேன்!!!

(இன்று இது போதுமல்லவோ....? தொடரும்...)

Tuesday, 20 October 2009

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -2

1)நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?, நினைப்பவ்ந்தான் நீ, முடிப்பவன் அவன்(இறைவன்).

2)நித்திரை கொள்பவனை எழுப்பலாம், ஆனால் நித்திரை போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

3)மல்லிகை புதரில் பூத்தாலும், அதன் மணம் வெளியே பரவாது விட்டுவிடுமா?

4)சுட்டுவிரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்களும் உங்கள் மார்பினைத்தான் காட்டுகிறது.

5)விளக்கு எரிவதற்காக வெந்து கருகிப்போகிற திரிமாதிரி, சிலர் தங்கள் வாழ்க்கையைத் திரியாக்கிக் கொள்கிறார்கள், "திரி இல்லாதுவிட்டால் தீபம் ஏது?".

6)ஆடையைப் பார்த்து எடை போடாதீர்கள், சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது.

7)ஆலயமுன்றலில் பாடக்கூடாத பாடல்கள், யார் அதைக் கவனிக்கிறார்கள்?, கடவுளை வணங்க வைப்பதற்குக்கூட, எதையாவது காட்டித்தானே மக்களை அழைக்க வேண்டி இருக்கிறது.

8)பாலைப்போல கள்ளும் உண்டு, நிறத்தாலே இரண்டும் ஒன்று.

9)குப்பைகளை நாடிச் செல்லும் கோழிகளை எத்தனை நாள் கூட்டில் வைத்துக் காக்க முடியும்?

10)முகத்தில் சுருக்கங்கள் விழலாம், ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

Friday, 3 April 2009

தத்துவ முத்துக்கள் தொகுப்பு-1

Image
1)வாழ்க்கையிலே அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்,
விரும்புகிறமாதிரி சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் வேணும் என்பது.

2)தியால் விதியை ஆராட்சி செய்யலாம்,
ஆனால் ஆட்சி செய்ய முடியாது.

3)ன்பற்ற இடத்திலிருந்து வரும்,
மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்துவரும்,
கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே.

4)விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக,
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.

5)கையாளியின் கடிதத்தைக் கொண்டுவந்து சேர்த்ததற்காக,
தபாற்காரனைத் தண்டிக்கலாமா?

6)உற்சாகமான ஒவ்வொரு "ஹலோ" விற்கும்
சோகமான ஒவ்வொரு "good bye" உண்டு.

7)உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம்,
அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.

8)பாரிய மரத்தின், ஆணிவேரே தகர்ந்தால்,
புயலில் ஆடும் சிறு கொடியா அதனைத் தாங்க முடியும்?.

9)ஆறுதல் அளிக்க இன்னொருவரின் அன்பு இல்லாதபோது,
கண்ணீரின் ஈரம்தான் ஆறுதால் அளிக்கிறது.

10)நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பவன் எவன்?
நினைப்பவன்தான் நீ முடிப்பவன் அவன்(இறைவன்).


Tuesday, 17 February 2009

இயற்கைக் காட்சிகள்

Image
Image
Image
பார்ப்பவரைக் கொள்ளைகொள்ளும், என் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இயற்கைக் காட்சி - 1

Monday, 16 February 2009

இறைவா!!

Image


வெறுப்பு இருக்கின்ற இடத்திலெல்லாம் அன்பை விதைக்க வேண்டும். நான் ஆறுதலோடு இருக்கின்றேனா என்பதல்ல முக்கியம், அடுத்தவர்களுக்கு நான் ஆறுதல் தருகிறேனா என்பதே முக்கியமாகும். என்னை அடுத்தவர்கள் நேசிக்கிறார்களா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை, அடுத்தவரை நான் நேசிக்க வேண்டும். இவை நான் அறிந்த தத்துவங்களாக இருப்பதால், என்னுடைய கோரிக்கைகளை நீ ஏற்றுக்கொள்வாயாக.

இறைவா இனிமேலாவது தொட்டுக்கெடுக்கும் உறவுகளைத் தராதே, விட்டுக்கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு.

--------------------------------------------------------------------------------------------------------

Image

“நான் உயிருடன் இருக்கின்றபொழுது என்னை நேசிப்பவர்களே!!!
என் மரணத்திலும் என்னை மறவாதீர்கள்!!!”


--------------------------------------------------------------------------------------------------------