வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கந்தர்வகானம்...

ராகம்
********
இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை.
ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்.

புதிதாய் எதுவும் சிந்திக்கக்கூட தேவையில்லை..சந்தித்த சக மனிதர்களைப்பற்றி கற்பனை இல்லாமல் எழுதினாலே போதும் காவியமாகிவிடும்.

எனக்கும் அதைப்போலவே சந்தித்த மனிதர்களைப்பற்றி எழுதிவிடவேண்டும் என்ற அவா அதிகம்.
பள்ளி நாள்களில் பாடங்களை படித்ததை விட மனிதர்களைப்பற்றி படித்ததே அதிகமாய் இருந்தது.

காலம் வளைந்து நெளிந்து ஓடி காட்டாற்று வெள்ளமாய் நெஞ்ச அணைகளை உடைத்துவிடுமளவுக்கு வந்து விடும்போது ஒன்றிரண்டு மனிதர்களின் முகங்களை நினைப்பதன் மூலம் வடிந்து போவதுண்டு.

அருவருக்கத்தக்க மனிதர்கள் அதிகமாய் தட்டுப்படும் நினைவின் குளத்தில் அபூர்வமாய் சில அற்புதமானவர்களும் இருக்கிறார்கள்..வாத்துகள் நிறைந்த தடாகத்தில் அன்னப்பறவைகளைப்போல..

காலம் இன்னும் எனக்கு புதுப்புது மனிதர்களை அதிமுகப்படுத்திக்கொண்டே இருப்பதால் அந்த மனிதர்களைப்பற்றிய என் எழுத்துகளை தள்ளி வைத்திருக்கிறேன்...ஆகவே என் இனியவர்களே,மற்றும் இன்னல் கொடுப்பவர்களே உங்கள் அனைவர் பற்றியும் எழுத்துகள் இதயத்துள் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறது.



தாளம்
**********
நேற்றைய வீதி இலக்கியக்களத்தின் சிறப்புக்கூட்டத்தில் வட அமெரிக்க நண்பர் அகத்தியன் அவர்களின் வருகை நிகழ்ந்தது.
மிகச்சரியாக ஐந்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது... வழக்கம் போலவே ஆரம்பித்தாலும்..நேரடியாக நிகழ்ச்சிக்குப்போகாமல் கவிதைகள் வாசிப்பு,பாடல் என நடக்க ஆரம்பித்தது.
முப்பதுக்குள் இருக்கும் சொற்ப கூட்டமே என்றாலும் எனக்குப் பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்களை நான் கவனித்திருக்கவில்லை..

பல்லவி
********
உயர்நிலைப்பள்ளி நாள்களில் தான் எனக்கு தமிழின் மேல் ஈடுபாடு வந்தது.
அதற்கு பள்ளியின் தமிழாசிரியர்களாய் இருந்த திருநாவுக்கரசு அய்யா,கரு.சண்முகம் அய்யா போன்றவர்கள்.

கரு.சண்முகம் அய்யா அவர்களின் வகுப்புகள் அலாதியானதாய் இருக்கும். கட்டையும் அல்லாமல் மெல்லிதாயும் இல்லாத ஒரு ஸ்தாயி.

விழுந்து கொண்டிருக்கும் வழுக்கையை மிக லாவகமாக விழாத முடிகளைக்கொண்டே மூடியிருக்கும் சிரசு.
கம்பீரமான மீசை.
அது வகுப்பறையோ அல்லது பள்ளியின் ஏதோ ஒரு கூட்டமோ அவரின் பாடல் இல்லாமல் போனால் உப்பிலாமல் சமைத்தது போலிருக்கும்.

தமிழார்வம் கொண்ட ஒரு ஆசிரியர் பாடுவதென்பதெல்லாம் அப்போது ஆச்சர்யமில்லைதான் என்றாலும் அந்தப் பாட்டின் உணர்ச்சியை அப்படியே மனசுக்குள் கடத்திவிடும் கந்தர்வ கானம் அவருக்கு.

அரசுப்பள்ளியின் ஆசிரியர் என்பதைத்தாண்டி நாங்கள் இருந்த ஆலைக்குடியிருப்பின் காலனி வீடுகளில் ஒன்றிலேயே அவரும் அவரது மனைவியார் திருமதி  மல்லிகா அம்மா அவர்களும் குடியிருந்தார்கள்.

பள்ளி விட்டு வெளியே வந்ததும் அவர்து செயல்களே என்னை அவர்பால் கவரச்செய்தது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்ப மரத்தின் ஒற்றை இலையையும் எவரையும் பறிக்க விட்டுவிட மாட்டார்...
இலைகள் மரத்தின் குழந்தைகள் என்பார்.

தீவிரமான இறை மறுப்பாளராய் இருந்தவர் உள்ளூர் ஆலய திருவிழாவுக்கு வரி மறுத்திருக்கிறார்.

தன் உடல் மேல் அத்தனை அக்கறை.. சைக்கிளை அவர் ஓட்டும் அழகு..கண்ணுக்குள் இருக்கும்.

பள்ளியின் மைதானத்தின் மாலைகளில் நடந்த தனியார் கராத்தே வகுப்புகளில் சின்ன பையன்களுடன் ஆ..ஊ...என பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்.

வகுப்புகளில் எனக்கும் அவருக்குமான ஒட்டுறவெல்லாம் அத்தனை கிடையாது.இன்ன பிற புத்திசாலி பிள்ளைகள் மேல் காட்டும் அக்கறையில் குறிப்பிட்ட சதவீதமும் என் மேல் காட்டியதுமில்லை.
ஆனால் நான் ஏகலைவனாய்  அவரை குருவாய் ஏற்றேன்.

என் இளமைக்கால கனவுகளின் லட்சியங்களில் அவரைப்போல்.பேசவும் பாடவும் வேண்டுமென்பதும் ஒன்று.

உயர் நிலைப்பள்ளி வகுப்புவரை எடுத்த அவர் மேல்நிலை வகுப்புகளுக்கு எடுக்கவில்லை.

துல்லியமாக அவர் எனக்குப் பாடமெடுத்து முப்பது வருடங்களைக்கடந்துவிட்டது.

எங்கேனும் யாரேனும் பட்டிமன்றங்களில் அல்லது விழாக்களில் பாடுவதைக்கேட்கும் போது நான் அவர்களின் குரலை கரு.சண்முகம் அய்யாவின் குரலோடு ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டிருப்பேன்.


அனுபல்லவி
***************
ஒரு பாடல்,ஒரு கவிதை முடிந்து முத்துநிலவன் அய்யா எனக்குப்பின்னால் இருக்கும் ஒருவரை அழைத்து ஒரு பாடல் பாடுங்களேன் என்கிறார்.
ஜெயகாந்தனை நினைவூட்டும் மீசையுடன் மிகப்பணிவாக வந்து அனுமதியுடன் பாட ஆரம்பிக்கிறார்.

புரட்சிக்கவிஞரின் பாடல் ..
ஆ...இந்தக்குரல்...இந்த முகம்..
கரு.சண்முகம் அய்யாவுடையதாயிற்றே...
அடடா...அய்யாவே தான்.

குரலின் வழி என்னை இழுத்துக்கொண்டு பறந்த நினைவுகளை கீழிறக்க அத்தனை பாடு...
பாடி முடித்த பின்னே... அவரிடம் அய்யா நான் உங்கள் மாணவன் என என் பெயரைச்சொன்னேன்...
இறுகப்பற்றிய அவர் கரங்களில் நான் மீண்டும் சிறு பிள்ளையானேன்.

சரணம்
*********
மரத்தின் இலைகளை எல்லாம் பிள்ளைகள் என்பவருக்குத்தான் காலம் அத்தனை மாணவப்பிள்ளைகளை கொடுத்திருக்கிறது..
அவருக்குக்குழந்தைகள் இல்லை என்பது குறையே இல்லை.















11 கருத்துகள்:

  1. Image

    கரு.சண்முகம் ஐயா அவர்களின் நிகழ்வு நெகிழ வைத்தது....

    நீங்கள் நினைத்தை செயல்படுத்துங்கள்...

    பதிலளிநீக்கு
  2. Image

    ஆஹா மிக மிக அற்புதமான அறிமுகம்.பதிவு மன ஆழத்தில் இருந்தால் ஒழிய இத்தகைய முத்துக்கள் விளைய வாய்ப்பே இல்லை.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  3. Image

    ஆஹா மிக மிக அற்புதமான அறிமுகம்.பதிவு மன ஆழத்தில் இருந்தால் ஒழிய இத்தகைய முத்துக்கள் விளைய வாய்ப்பே இல்லை.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  4. Image

    நாம் பல நாட்களாக பார்க்க ஆசைப்பட்டவரை அவ்வாறு காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிற்கும்.

    பதிலளிநீக்கு
  5. Image

    ஆஹா.... அற்புதமான பகிர்வு நண்பரே... நமக்கு மிகவும் பிடித்த ஆசிரியரை இப்படி எதிர்பாராமல் சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம்.

    தொடரட்டும் உங்கள் தரமான பகிர்வுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. Image

    அருமையான ஒருத் தகவல்!!!
    ஐயாவோடுப் பேசவேண்டும் என மிக ஆவலாய் இருக்கிறேன்!

    அவரின் தொலைப்பேசி எண்ணை எனக்கு கிடைக்கச் செய்வாயானால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்!!!

    திருமதி கரு.ச-வின் பெயர் மல்லிகா என்பதாக மாற்றம் செய்து விடு பதிவில்.

    பள்ளிப் பருவத்தின் பரவசத்தில் நானுமிப்போது!!!

    பதிலளிநீக்கு
  7. Image

    தங்கள் ஆசிரியரின் நினைவலைகள் நெகிழ வைக்கின்றன நண்பரே
    இதுபோன்ற அனுபவம் எனக்கும் உண்டு
    பல்லாண்டுகள் கடந்த நிலையில் தங்களின் ஆசிரியரைச் சந்தித்ததை எண்ணி மகிழ்கின்றேன்

    பதிலளிநீக்கு
  8. Image

    உணர்ச்சிப் பூர்வமான
    நினைவலைகளுடன் நல்ல பதிவு.
    வாழ்த்துகள் செல்வா.

    பதிலளிநீக்கு
  9. Image

    உங்களுக்கு நெகிழ்வு எனக்கு மிக மகிழ்வு! பாடத்தெரிந்த பகுத்தறிவாளரான தமிழாசிரியர் அண்ணன் கரு.ச.அவர்களை நான் நீண்ட நாள்களாக நமது கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறேன்.
    மாணவர்கள் மீதும் நண்பர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். என்னை எனது ஒவ்வொரு செயலையும் வியந்து வியந்து பாராட்டிக்கொண்டே இருப்பார்! அவரது இசைக்கும் பண்புக்கும் நான் ரசிகன்!
    என்ன நினைத்தாரோ.. இந்தக் கூட்டத்திற்குத்தான் முதன்முதலாக வந்திருக்கிறார்! அவரது எண்ணை அனுப்புகிறேன் பேசுங்கள். மகிழ்வார்!
    (அவருக்கு நீங்க மாணவர்னா எனக்கும் மாணவர்தான்பு!)

    பதிலளிநீக்கு
  10. Image

    பாடல் ஒளிப்பதிவை இணைத்தது மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் நேராகத் திருப்பிப் போடக் கூடாதா? கழுத்த வலிக்குதுல்ல.?

    பதிலளிநீக்கு
  11. Image

    Planet Win 365 Review: Is it a scam or a good bet?
    Find out everything you need to planet win 365 know about Planet Win 365 from its usability, features, payouts, betway security クイーンカジノ and much more.

    பதிலளிநீக்கு