vydheesw.blogspot.com

Monday, December 17, 2018




பஞ்சான பாறாங்கல்


Image



கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரே கும்மிருட்டு. வெளி முழுதும் என்னை சுற்றி இருட்டு அப்பிக் கிடந்தது. ஏதோ பாதாள குகைக்குள் நான் சிக்கிக் கொண்டது போல் இருட்டுக்கு இரையாகிக் கிடந்த உயிராக உட்கார்ந்திருந்தேன். சில வினாடிகள் கூட சில யுகமாகத் தெரிந்த உணர்வு. இந்த குருட்டுச் சிறையிலிருந்து தப்பிக்க முயலும் முயற்சியையும் கை விட்டேன். அர்த்தமற்றுப் போன என் விழிகளை அகல விழித்தவாறு அமைதியை என் போர்வையாக்கி அமர்ந்திருந்தேன். உலகம் நிச்சயமாக சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. எல்லாமே எல்லாக் கணமும் மாறிக் கொண்டே தான் இருந்தாக வேண்டும்.


என் கண்களின் மேல் திரையை மெல்ல அசைத்தது போல் ஒரு அசைவு. இருட்டு இப்போது அத்தனை அடர்த்தியாக இல்லையோ! ஏதோ ஒரு சின்ன மென்மையான மாற்றம். என்னை சுற்றி இருந்த அறைச் சுவர்கள் மிதக்கும் துணிகளைப் போல் லேசான ஒரு பிரமை. மூலையில் இருந்த நாற்காலியில் இரண்டு கால்கள் மெதுவாக தோற்றம். உயரே மூடிய ஜன்னல் துளையிலிருந்து ஆடும் அகல் ஒளி போல் ஒரு படரும் வெளிச்சம் கீழே பார்த்தேன். தரையின் மொசெய்க் கோடுகள் தானாக தெரிய ஆரம்பித்தன. இப்போது கிழே வைத்திருந்த கூஜாவும் கிண்ணமும் என் அம்மாவின் சின்ன உருவப் படமும் ….நிலைக் கதவும் செல்லும் வழியும் இப்போது என் கை ரேகையும் படுக்கையில் இரைந்திருந்த புத்தகங்களும் இப்போது எல்லாமே எப்போதும் போல் தெரிய ஆரம்பித்து விட்டன.
அந்த இருண்ட பாறாங்கல் என்னவாயிற்று? யார் அதை உடைத்து பஞ்சாக்கி ஒன்றுமில்லாமலாக்கி அப்புறப் படுத்தினார்கள்? அமைதியாய் இருந்ததைத் தவிர என்னால் என்ன செய்ய முடிந்தது? ஒரு வேளை நம்மை சுற்றி இறுக்கும் இருட்டு விலக இது தான் நமக்கு தரப்பட்ட ஒரே மனவிழிப்போ?


வாழ்க்கையில் துன்பங்களும் அப்படிப்பட்ட இருட்டு தான்..என்று தோன்றியது. . தானாக நம்மை சூழ்ந்து கொண்டு தானாக நம்மை விட்டு விலகக் கூடியது தான்.என்று மனம் உணர ஆரம்பித்தது.


அமைதியாக விழிப்புடன் சலனமற்று சும்மா இருப்பது தான் அதற்கு தீர்வு என்று எனக்குள் ஒரு வெளிச்சம் நேர்ந்ததை இன்று விடியலில் கண்டுணர்ந்தேன்.. எல்லா இருட்டுக்குள்ளும் நிச்சயம் ஏதோ ஒரு சூரியன் மறைந்து கொண்டிருக்கிறான்!


கவிஞர்   வைதீஸ்வரன்,
18 டிஸம்பர் 2018   


__________________________________________________________________________________________

Thursday, December 13, 2018



முரளீதரனின் கதை சொல்லும் 

உன்னத ஓவியங்கள்



Image



பல ஆண்டுகளுக்குப் பிறகு இளைய நண்பர் ஓவியர் முரளீதரன் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்கிறேன், சந்தோஷமாக இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தோம். அவருடைய அருமையான ஓவியக் கண்காட்சி இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நிறைய வளர்ந்திருக்கிறார். அவர் ஓவியங்கள் விசேஷ அனுபவத்தைக் தரக் கூடியவை.

புறக்கண்கள் பார்க்கும் காட்சியை அச்சு அசலாக வரைபவன் திறமையை பாராட்டினாலும் அவன் மகா கலைஞனல்ல!

சிறந்த ஓவியங்கள் காலத்தின் நுண்ணுர்வை மீட்டிப் பார்க்க வேண்டும். முரளியின் ஓவியங்கள் அப்படிப்பட்டவை.

. நீங்கள் செவிகளால் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது ஒரு Zen கவிதை!! . முரளியின் ஓவியங்கள் உங்கள் காதிலும் ஒலிக்கக் கூடும்.!

தொன்மையான வரலாற்று ஞாபகங்கள் நினைவில் நிழலாடக் கூடும்.

அறையிருட்டில் பாட்டியின் அரவணைப்பில் கேட்ட புராணக் கதைகளின் மாயாஜாலங்களின் சிலிர்ப்பு உங்கள் மனதில் நிகழக் கூடும்.. அதே சமயம் ஓவியங்கள் தற்கால வெளிப்படையான சகஜத் தன்மை மாறாமல் இருப்பதைக் கண்டறிந்து வியக்கக் கூடும்.


முரளி தனக்குள் தோய்ந்து கண்டறிந்த ஆழ்மன காட்சி அனுபவத்தை நேர்மையுடன் துணிச்சலுடன் நேர்த்தியான ஓவியங்களாக படைத்திருக்கிறார்.. மிகவும் வித்யாசமான படைப்புகள். மேலும் சிறப்பான அங்கீகாரங்களைப் பெற நண்பர் முரளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


- கவிஞர்   வைதீஸ்வரன்




Image



Image

_________________________________________