கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label Resolution. Show all posts
Showing posts with label Resolution. Show all posts

Tuesday, August 16, 2016

இரண்டு உறுதி மொழிகள்!!

இரண்டு உறுதி மொழிகள்!!

உறுதி மொழிகளை புத்தாண்டு அன்றுதான் எடுக்க வேண்டுமா என்ன? எல்லா நல்ல நாட்களிலும் எடுத்துக் கொள்ளலாம். அதன்படி நான் சுதந்திர தினத்தன்று இரண்டு உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

ஆகஸ்ட் 1-15 மங்கையர் மலரில் பத்மவாசன் என்பவர் தண்ணீர் சிக்கனத்தை பற்றி எழுதியிருந்த கட்டுரையில் ஷவரில் குளிப்பதை விட, பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் குளிப்பது தண்ணீர் சிக்கனத்திற்கு உதவும். ஷவரில் குளிக்கும் பொழுது நம்மை அறியாமல் அதிக நேரம் குளிக்கும் அபாயம் உள்ளது என்றும், சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு பக்கெட் நீரில் குளிப்பதாக உறுதி எடுத்திருப்பதாகவும், அவர் குடும்பத்தினரையும் அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பதாகவும் படித்த பிறகு, நானும் ஒரு பக்கெட் நீரில் குளிப்பது என்று உறுதி எடுத்திருக்கிறேன். பல நாட்கள் ஷவரில் குளித்து பழகி விட்டதால் இப்போது ஒண்ணேகால் பக்கெட் தண்ணீர் தேவைப் படுகிறது. கூடிய விரைவில் ஒரு பக்கெட் நீரில் குளிக்க பழகி விடுவேன்.

இதை என் மகளிடம் சொன்னேன், "வாட் இஸ் த சைஸ் ஆப் த பக்கெட்? வேரியஸ் சைசெஸ் ஆர் அவைலபில்" என்கிறாள். என்ன செய்ய? 

அடுத்த உறுதிக்கு காரணம் நேற்று(15.8.2016), விஜய் டீ.வி.யில் ஒளிபரப்பான  சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம். திரு.சுகி.சிவம் தலைமையில் இன்று மக்களிடையே மேலோங்கி இருப்பது வீட்டு நலமா? நாட்டு நலமா? என்னும் தலைப்பில் வாதிட்டார்கள். வீட்டு நலமே என்னும் கட்சிக்காக பேசிய முனைவர் ராமலிங்கம், நாம் எல்லோரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது நான் நன்றக இருக்க வேண்டும், என் குழந்தைகள் நன்றக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டுகிறோம், யாராவது என் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறோமா? என்றார். நியாயமான கேள்விதான். 

சாதாரணமாக என் தினசரி பிரார்த்தனை
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல், வேந்தனும் ஒங்குக 
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க 
வையகமும் துயர் தீர்க்கவே 

என்னும் தேவாரப் பதிகம்  சொல்லி, "லோகா சமஸ்தா சுகினோ பவந்து", "சர்வ ஜனோ சுகினோ பவந்து" என்று கூறி நமஸ்கரிப்பதோடுதான் முடியும். ஆனால் குறிப்பிட்டு, என் தேசம் நலமாக  இருக்க வேண்டும் என்று வேண்டியதில்லை. இனிமேல் எங்கள் நாட்டிற்கு சுய நலம் அற்ற திறமையான தலைவர்களை கொடு, என் தேசம் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளப் போகிறேன், என் பிரார்த்தனையில் என்னோடு இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் இணைந்து கொள்ளலாம். கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிவு அதிகம்!