கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, November 11, 2018

துரு துரு, திரு திரு

துரு துரு, திரு திரு 

"காலணிகள் வாங்கும் பொழுது அளவெடுத்துதானே வாங்குவோம், பிறகு எப்படி சிண்ட்ரெல்லாவின் ஒரு கால் ஷூ மட்டும் நழுவி விழும்?" என்று ஒரு வாண்டு கேட்டதாக ஏஞ்சல் கேட்டிருந்தார். இதைப் போல பல துரு துரு வாண்டுகள் நம்மிடம் கேள்வி கேட்டு நம்மை திரு திருவென்று முழிக்க வைக்கும். அப்படிப்பட்ட சில துரு துரு, திரு திரு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் பெரிய அக்காவின் பெண் சிறு குழந்தையாக இருந்த பொழுது அவளுக்கு ராமாயணம் கதை சொல்ல ஆரம்பித்தேன். அதில் ராம ஜனன கட்டம். தசரத மகாராஜா புத்திர காமேஷ்டி யாகம் செய்த ஹோம குண்டத்திலிருந்து ஒரு யக்ஷன் கொண்டு வந்த பாயசத்தை தசரதனின் மூன்று மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்த பிறகு மிச்சமிருந்த பாயசத்தை சுமித்திராவிற்கு இரண்டாவது தடவை கொடுத்து விட, கௌசல்யாவிற்கும், கைகேயிக்கும்  ராமனும், பரதனும் பிறந்தார்கள். சுமித்ரா மட்டும் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு லக்ஷ்மணன், சத்ருஹனன் என இரண்டு குழந்தைகள் பிறந்தன என்று நான் கூறியதும், என் அக்கா பெண், "மறுபடியும் சொல்லுங்கோ" என்றாள். நான் மறுபடியும் கூற, ஏன் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒரு குழந்தை, இவளுக்கு மட்டும் இரண்டு குழந்தைகள்?" என்று கேட்டாள். நான்," அதுதான் சொன்னேனே, பாயசம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, அதை சுமித்ராவிற்கு கொடுத்தார்கள், அவள் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு இரட்டை குழந்தைகள்." என்றேன். உடனே என் அக்கா மகள்," ஏன் மிச்சமிருந்த பாயசத்தை ஒருத்திக்கு மட்டும் கொடுத்தார்கள்? மூன்று பேருக்கும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்திருந்தால் மூன்று பேருக்குமே இரட்டை குழந்தைகள் பிறந்திருக்குமே? என்றாள் நான் என்ன பதில் சொல்ல முடியும்?  திரு திருதான். அப்புறம் மூன்று பேருக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாத அளவிற்கு குறைச்சலாக இருந்திருக்கும் என்று சமாளித்தேன்.

Image

Image

இன்னொரு முறை, என் அக்காக்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் தோழர்களுக்கு  தெனாலி ராமன் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். தெனாலி ராமனுக்கு முன் பிரசன்னமான காளி தன் இரு கைகளில் ஒன்றில் ஒரு கிண்ணத்தில் பால் சாதமும், இன்னொன்றில் தயிர் சாதமும் வைத்துக் கொண்டு அவனிடம், " இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் நீ தேர்ந்தெடுக்க வேண்டும். பால் சாதத்தை சாப்பிட்டால் நீ சிறந்த அறிவாளியாக விளங்குவாய், தயிர் சாதத்தை சாப்பிட்டால் பெரிய செல்வந்தனாக விளங்குவாய், இந்த இரண்டில் எது உன் விருப்பம்?" என்று கேட்கிறாள்,என்று கூறி இந்த இடத்தில் கதையை கொஞ்சம் நிறுத்தி விட்டு, "உங்களுக்கு எதிரில் சாமி வந்து இப்படி கேட்டால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்று கேட்டதும்,  சிலர் தயிர் சாதம் என்றும், சிலர் பால் சாதம் என்றும் கூறினர்.  என் பெரிய அக்காவின் மகன் மட்டும் எதுவும் சொல்லாமல் பேசாமல் இருந்தான். அவனிடம், "என்னடா, நீ எதுவும் கேட்க மாட்டாயா?" என்றதும் அவன், "நான் சாமிட்ட கொழம்பு சாதம்" கேட்பேன் என்றான். அவன் தயிர், மோர் வகையறாக்களை தொட மாட்டான். பால் சாதமும் பிடிக்காது. காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவான், அதனால்தான் இப்படி ஒரு பதில். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதோடு அவன் சாதுர்யத்தையும் பாராட்டினேன்.

முன்பெல்லாம்அதாவது எழுபதுகளின் இறுதி வரை ஸ்ரீரெங்கத்தில் ஸ்ரீஜெயந்தியின் பொழுது சிறுவர்கள் சப்பரம் செய்து அதில் கிருஷ்ணன் படத்தை வைத்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதற்கு எல்லா வீடுகளிலும் வந்து "ஸ்ரீஜெயந்திக்கு காசு" என்று கேட்பார்கள். எல்லோரும் அதிகபட்சமாக நாலணா கொடுப்பார்கள். அதைப்போன்ற ஒரு ஸ்ரீஜெயந்தியில் குரூப் குரூப்பாக சிறுவர்கள் வந்து காசு வாங்கி சென்றனர். சிறுமிகள் மட்டும் ஒரு க்ரூப்பாக வந்து ஸ்ரீஜெயந்திக்கு காசு என்று கேட்டபொழுது, நான் சற்று கேலியாக, " இது எந்த கிருஷ்ணருக்கு?" என்றதும் அதிலிருந்த ஒரு பொடிப் பெண், வெடுக்கென்று " எத்தனை கிருஷ்ணர் இருக்கார்? ஒரு கிருஷ்ணர்தானே உண்டு?" என்றதும் நான் விக்கித்துப் போனேன். ஒரு சிறு குழந்தை எத்தனை பெரிய விஷயத்தை அனாயாசமாக  சொல்லி விட்டது!  

என் அண்ணா கூறிய சம்பவம் இது, அவர் ஒரு பள்ளியில் மோட்டிவேஷனல் வகுப்பு எடுக்க சென்ற பொழுது, தன் உரையை முடித்து விட்டு, "உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றதும்,ஒரு பெண் குழந்தை,"அங்கிள் வொய் தி பம்ப்கின்ஸ் ஆர் ஸோ பிக்?" என்று கேட்டதாம். 

Image

வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் பேத்தி சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்த பொழுது, தொலை காட்சியில் திருவிளையாடல் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் பார்வதியாக நடித்த சாவித்திரியின் உடல்முழுவதும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்ததை பார்த்து, " ஏன் இவள் பாடி க்ரீன் கலராக இருக்கிறது?" என்று கேட்டாள்? அவள் பர்வத ராஜாவின் மகள், அதாவது மலை மகள். ஒரு மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மலை எப்படி தெரியும்? மரங்கள் அடர்ந்து பசுமையாகத்தானே? அதனால்தான் பார்வதியை பச்சை நிறமாக காண்பித்திருக்கிறார்கள்" என்றேன். சரிதானே?

படங்கள் நன்றி கூகுள்.



35 comments:

  1. Image

    பானுக்கா இப்படியான அனுபவங்கள் எனக்கும் உண்டு. நிறைய அசடு வழிஞ்சுருக்கேன். அதுக்கு அப்புறம் வாண்டுகளுக்குச் சொல்லும் போது ரொம்ப யோசித்து அவர்கள் கேள்வி கேட்காத வகையில் சொல்ல முயற்சித்து...இல்லை என்றால் அப்படி கேட்டால் என்ன பதில் சொன்னால் அவர்கள் அதை ஏற்பார்கள், இப்படிச் சொன்னால் அவர்கள் ஏற்பார்களா என்று கன்வின்சிங்க் ஆனா உண்மையான விளக்கமான காரணங்களைக் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுவேன். குறிப்பா அந்தக் கூட்டத்துல என் பையன் இருந்தா அம்புட்டுத்தான். கேள்வி கேட்டே என்னை ஒரு வழி ஆக்கிடுவான்...எல்லாத்துக்கும் லாஜிக்கல் அல்லது அறிவியல் ரீசன் என்பான்..ஹா ஹா ஹா...அவன் பேச்சு வந்தது லேட்டு ஆனா வந்தப்புறம் கேள்விக் கணைகள்..ஹா ஹா ஹா

    பச்சைமா மேனிக்கான விளக்கம் சூப்பர் அக்கா!!! வாண்டு என்ன சொல்லியது?

    குழம்பு சாதம், சமயோஜிதம்...அப்புறம் பகிர்ந்து கொடுத்திருக்கலாமேனு சொன்னது செம செம அறிவு!! அக்குழந்தைக்கு..அசாத்தியமான கேள்வி. எனக்கும் ஒரு வாண்டுவிடம் இருந்து கேள்வி வந்தது. என்னால் கன்வின்சிங்க் ஆன்ஸர் கொடுக்க முடியலை. ஏன்னா சுமித்ரையை பிடிக்கும் அதனால கொடுத்தார் என்றால், நோ பார்ஷியாலிட்டினு சொல்லும் அளவுக்கான அறிவுக் குழந்தை...ஹா ஹா ஹா...

    ரசித்தேன் அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Image

      ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பிட்டிருப்பதிலேயே நீங்கள் மிகவும் ரசித்திருக்கிரீர்கள் என்பது புரிகிறது. சந்தோஷம். நன்றி.

      Delete
  2. Image

    அதானே பூஷணிக்காய் ஏன் அவ்ளோ பெரிசா இருக்கு?

    நம்மள்ல ஒரு சில சின்னதாவும் ஒரு சிலர் பெரிசாவும் இருக்காங்கல்ல அப்படி காயிலும் உண்டு..பூஷணியிலும் சின்னது பெரிசுனு உண்டு...என்று படம் காட்டிடலாம்....ஹா ஹா ஹா...அறிவியல் புரியும் வயசுனா ஸ்பீஷிஸ், ஃபேமிலுனு சொல்லிக் கொடுத்துடலாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Image

      தரையில் படரும் கொடிகளின் காய்கள் பெரிதாகவே இருக்கும். இயற்கையின் நியதி. அதுவே மரங்களில் அவ்வளவு பெரிதாக இருந்தால் கீழே விழுந்தால் நம்மால் தாங்க முடியுமா? முதலில் காய் தெறித்துப் போய் வீணாகும் அல்லவா? இங்கே கொடிகளிலிருந்து தானே கழன்று கொள்ளும் காய்கள்! இது ஒரு வகையில் நம் வாழ்க்கைத் தத்துவத்தையும் நினைவூட்டும். பக்குவப்பட்ட மனது ஆசாபாசங்களிலிருந்து விலகி நிற்கும் என்பதையும் சுட்டிக் காட்டும் அல்லவா? ஒவ்வொரு செடி, கொடி, மரங்கள் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் நிறையவே!

      Delete
    2. Image

      குழந்தைக்குத் தத்துவ விளக்கம் சொல்லிப் புரிய வைப்பது கஷ்டம் தான்! ஆனால் எளிமையாக நம் பாதுகாப்புக்காகக் கடவுள் இப்படிச் செய்திருக்கார்னு சொல்லலாம். பெரிய ஆலமரத்தின் விதை சின்னதாக இருக்கு பாருனு சொல்லிக் காட்டலாம். அதுவே பெரிதாக இருந்தால் நம்மால் தாங்க முடியாது அல்லவா! இத்தனை பெரிய பூஷணிக்காய் தரையோடு தரையாக இருப்பதால் தானே நம்மால் தாங்க முடிகிறது. பறிக்கவும் சிரமம் இல்லை. தென்னை மரம் உயர்ந்து வளர்ந்தாலும் தேங்காய்களோ மட்டைகளோ பொதுவாக யார் மேலும் விழுவதில்லை. அது விழும் நேரம் அநேகமாக இரவு நேரமாகவோ அல்லது அதிகாலை நேரமாகவோ தான் இருக்கும். அபூர்வமாக ஒன்றிரண்டு நடக்கலாம். தென்னை மரம் பழிவாங்காது என்றும் சொல்வார்கள்.

      Delete
    3. Image

      //ஒவ்வொரு செடி, கொடி, மரங்கள் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் நிறையவே!// 100% சரி. தாவரங்கள் மட்டுமல்ல, பறவைகள்,விலங்குகள் எல்லாமே நமக்கு நிறைய செய்திகளை சொல்கின்றன, நாம்தான் கவனிக்க வேண்டும்.

      Delete
  3. Image

    தலைப்பு அருமை பானுக்கா....

    திரு திரு அனுபவம் எக்கச்சக்கம்...ஹா அஹ

    ஆனா ஒன்னு அக்கா அப்படி அவங்க கேள்வி கேக்கறதுனால நாம நிறைய கத்துக்கறோம் இல்லையா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Image

      நிச்சயமாக கற்றுக்கொள்கிரோம். சில சமயம், குழந்தைகளை வளர்ப்பது எங்கிறார்களே, நாம் எங்கு வளர்க்கிறோம்? அவர்கள் அல்லவா நம்மை வளர்க்கிர்றார்கள் என்று எனக்குத் தோணும்

      Delete
  4. Image

    குழந்தைகளின் சில கேள்விகள் நம்மை திருதிருவென முழிக்க வைக்கும். உங்கள் அனுபவங்கள் நன்று.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்...

    ReplyDelete
  5. Image

    அனுஒபவங்கள் அருமை.. நானும் சின்ன வயதில் இதைவிட ஏடாகூடமான கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேன்:) இப்போ நினைக்க சிரிப்பாக இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. Image

      நன்றி அதிரா.
      //நானும் சின்ன வயதில் இதைவிட ஏடாகூடமான கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேன்:)// சின்ன வயதில் மட்டுமா? ஹாஹா!.

      Delete
  6. Image

    ஹாஹா :) இந்த அரைடிக்கட்டுகளின் கேள்விகள் வில்லங்கமாவே இருக்கும் :) என் பொண்ணு பேச ஆரம்பிச்சதில் இருந்து ஓயவில்லை தினமும் கேள்விதான் .
    குழம்பு சாதம் கேட்ட வாண்டும் ,பார்வதியின் நிறம் பற்றி டவுட் கேட்ட வாண்டும் கிரேட் ..ஆனா பாயசத்தில் டவுட் கேட்ட வாண்டுக்கு பதில் சொல்றதுதான் பெரிய விஷயம் :) இவங்களை சமாளிக்கவே நாம் தனி கோர்ஸ் படிக்கணும் .
    இங்கே வெளிநாட்டில் திருமணம் குழந்தை பிறந்து அந்த குழந்தைகளுக்கே 5-6 வயதிருக்கும்போதுதான் நடக்கும் .நாமெல்லாம் சின்னத்தில் அப்பா அம்மா கல்யாண ஆல்பத்தில் நாம் காணோம்னு அழுதிருப்போம் ஆனா இங்கே வெஸ்டர்ன் கல்ச்சர் பார்த்து பொண்ணு கேட்டா அம்ம்மா கல்யாணத்துக்கு முன்னாடிதானே நானா பிறந்திருப்பேன் எங்கே உங்க வெட்டிங் ஆல்பத்தில் நான் காணோம்னு :) இதெல்லாம் 7 /8 வயசு வரை அப்புறம் தெளிவாகிட்டா :)
    கியூட் துறு துறு கேள்வி அனுபவங்கள் தொடரட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. Image

      ரசித்தமைக்கும், பின்னூட்டமிட்டதிர்க்கும் நன்றி ஏஞ்சல்.
      //இங்கே வெஸ்டர்ன் கல்ச்சர் பார்த்து பொண்ணு கேட்டா அம்ம்மா கல்யாணத்துக்கு முன்னாடிதானே நானா பிறந்திருப்பேன் எங்கே உங்க வெட்டிங் ஆல்பத்தில் நான் காணோம்னு :)// ஹாஹா!

      Delete
  7. Image

    குழந்தைகளின் கேள்விகள் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  8. Image

    குழந்தைகள் மூளையில் எப்போதும் ஏதேனும் விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நாம் தர்க்க ரீதியாக அவங்க ஒப்புக்கும்படி பதில் சொல்லணும். இல்லைனா கஷ்டம் தான்.

    ReplyDelete
    Replies
    1. Image

      திறந்த மனதோடு கேட்கப்படும் குழந்தைகளின் கேள்விகள் மூலம் நாமும் கற்றுக்கொள்கிறோம்.

      Delete
  9. Image

    இன்றைய குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. Image

      இவர்கள் நேற்றய குழந்தைகள். நன்றி டி.டி.சார்.

      Delete
  10. Image

    திருமதி கீதா மதிவாணன் அவர்கள் மகள் நிலா பற்றி எழுதியது ஒருகோவிலில் பாட்டியுட நிலா பிரதட்சிணம் செய்துகொண்டிருந்தாள் மூன்று சுற்றுக்குமேல் ஆகிவிட்டது என்றதும் அப்பிரதட்சிண்மாக சுற்றி அதிகசுற்றைக்கழிக்கலாமா என்றாளாம்

    ReplyDelete
    Replies
    1. Image

      சுயமாக சிந்திக்கும் திறனுடைய குழந்தைகளை நம் கல்வி முறை மழுங்கிப் போக செய்து விடுகிறது. வருகைக்கு நன்றி.

      Delete
  11. Image

    வாண்டுகளின் கேள்விகள் அசத்தல்...

    என் பேத்தியிடமிருந்து என்னென்ன கேள்விகள் வர இருக்கின்றனவோ!...

    ReplyDelete
    Replies
    1. Image

      பதில் சொல்லத் தயாராகுங்கள்.

      Delete
  12. Image

    எத்தனை கிருஷ்ணர் இருக்கிறார்!..
    ஒரு கிருஷ்ணர் தானே!... - என்று வினா தொடுக்கும் குழந்தையின் அறிவை யோசித்துக் கொண்டிருந்தபோது -

    ஒவ்வொரு படைவீட்டு முருகனும்
    ஒவ்வொரு மாதிரி அருளக்கூடியவர்!.. என்று ஆன்மீகப் பேச்சாளர் ஒருவரின் உரையினை சற்று முன் கேடக நேர்ந்தது..

    இந்த உரையினை
    அந்தக் குழந்தை கேட்க நேர்ந்தால் என்ன நினைக்கும்?....

    ஆன்மீக வியாபார ஊடகங்கள் தான் இப்படி என்றால் -

    இவர்களும் ஆரம்பித்து விட்டார்கள்...

    (அந்தக் காணொளியை பதிவு செய்து வைத்துள்ளேன்..)

    ReplyDelete
    Replies
    1. Image

      //ஒவ்வொரு படைவீட்டு முருகனும்
      ஒவ்வொரு மாதிரி அருளக்கூடியவர்!.. என்று ஆன்மீகப் பேச்சாளர் ஒருவரின் உரையினை சற்று முன் கேடக நேர்ந்தது..// தப்பே இல்லை துரை! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தேவை! ஒவ்வொரு பிரார்த்தனை! அதற்கேற்றாற்போல் படைவீடுகள் அமைந்துள்ளன எனக் கொள்ளலாமா? லௌகிக வாழ்க்கையில் அனைவரும் சரவணபவ வின் தத்துவத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள், அதற்காகவே முருகனை வணங்குவார்கள் எனச் சொல்ல முடியாதே! குன்றுதோறும் குமரன் குடி கொண்டிருப்பதன் தத்துவ ரீதியிலான பொருளும் எல்லோருக்கும் புரியும்னு சொல்லவும் முடியாதே!

      Delete
    2. Image

      நான் துரை சார் பக்கம் அக்கா. ஒவ்வொரு படை வீட்டிலும் ஒவ்வொரு வடிவில்,அல்லது கோலத்தில் குடி கொண்டிருக்கிறான் என்று கூறலாமே தவிர, ஒவ்வொரு படை வீட்டிலும் ஒரு முருகன் என்று கூறுவது சரி இல்லையே.

      Delete
    3. Image

      @ Geetha Sambasivam..

      >>> ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தேவை! ஒவ்வொரு பிரார்த்தனை! அதற்கேற்றாற்போல் படைவீடுகள் அமைந்துள்ளன எனக் கொள்ளலாமா?.. <<<

      கொள்ளலாம்.. தவறில்லை!..
      படைவீடுகள் பலவாக இருந்தாலும் முருகன் ஒருவன் தானே!...

      தங்களது கருத்துரைக்கு நன்றி அக்கா!..

      Delete
    4. Image

      முருகன் பலர் எனச் சொல்லவில்லையே? ஒரே முருகன் பல கோலங்களில் காட்சி அளிக்கிறான். அதற்கேற்ப அருள் புரிகிறான். வீரம் தேவைப்படுபவர்களுக்கு வீரத்தை அளிப்பவனாகவும், ஞானம் தேவைப்படுபவர்களுக்கு ஞானத்தை அளிப்பவனாகவும் இருக்கிறான். என்னோட கருத்து அதுவே. சரியாச் சொல்லலை. ஒரே பானுமதி உங்க பெற்றோருக்குப் பெண், உடன் பிறந்தோருக்கு சகோதரி, கணவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குத் தாய், மாமியார், மாமனாருக்கு மருமகள்!வீடும் நீங்க பல வீடு மாறுவீங்க. பல ஊர் போவீங்க இல்லையா? அதனால் உங்கள் அடிப்படைக்குணம் மாறுவதில்லையே! அது போலத்தான். துரை புரிந்து கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். காலையிலிருந்து மின்சாரம் இல்லை. இப்போத் தான் வந்தது.

      Delete
  13. Image

    நாம் அப்போது சீரியசாக ரசித்து பார்த்த படங்களை இப்போதைய பிள்ளைகள் பார்க்கும்போது கிண்டலடிப்பதைக் காணமுடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. Image

      This comment has been removed by the author.

      Delete
    2. Image

      அதுதான் தலைமுறை இடைவெளி. வருகைக்கும், பின்னூட்டதிற்க்கும் நன்றி சார்.

      Delete
    3. Image

      அதுதான் தலைமுறை இடைவெளி. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  14. Image

    >>> ஒவ்வொரு படை வீட்டிலும் ஒவ்வொரு வடிவில்,அல்லது கோலத்தில் குடி கொண்டிருக்கிறான் என்று கூறலாமே தவிர... <<<

    இது நியாயமான பேச்சு...

    இதை விடுத்து ஒவ்வொரு தலத்தின் முருகனும் ஒவ்வொருவிதமாக
    அருளக்கூடியவன் என்பது பொறுப்பற்ற பேச்சல்லவா!..

    தங்களது கருத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Image

      அதே தான். ஒரே முருகன் ஒவ்வொரு படைவீட்டிலும் ஒவ்வொரு கோலத்தில் இருக்கான். உண்மையும் அது தானே! ஸ்வாமிமலையில் தான் தகப்பன்சாமி! மற்றப்படைவீடுகளில் இல்லையே! ஆகவே இங்கே ஞானம் வேண்டுவோர்க்கு அல்லது படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்போருக்கு அவற்றை வேண்டிப் பிரார்த்தனைகள் செய்யத் தோன்றும். திருச்செந்தூரில் எதிரியை அழிக்கிறான். நீங்களே கொஞ்சம் யோசிச்சால் உங்களுக்கே புரியும்.

      Delete