Blog Archive

Showing posts with label May 2020. Show all posts
Showing posts with label May 2020. Show all posts

Friday, May 29, 2020

தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4

வல்லிசிம்ஹன்

தேவகியின் விடுதலை  மகிழ்ச்சியின் எல்லை. 4

"I have CHOSEN to be happy because it is good for my health."- Voltaire  When you have been seriously ill to the point of not knowing if you will be here tomorrow, you fully understand and grasp what is important in life. There is joy in the journey.

 சேகர் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றான்.
அவனால் டாக்டரின்  குறிப்புகளை ஜீரணிக்க முடியவில்லை.
என்ன செய்வது.
அம்மாவைத் தனியே விடக்கூடாது என்றால் எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தமா.
அம்மாவைக் கவனித்துக் கொள்வதில் நான் அல்லவா இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

மனைவிக்கோ நேரம் இருப்பதில்லை.
முன்பாவது அம்மா சமையல் செய்து வைத்துவிடுவார்.
இருவரும் அந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவரவர் வழியில் சென்று விட்டு வீடு திரும்புவர்.

மாலுவின் பெற்றோரும் சென்னையில் இருப்பதால், சனி ஞாயிறு 
அவர்களைச் சந்தித்துத் திரும்புவாள்.
அப்போதெல்லாம் அம்மாவுடன் இருந்துவிடுவான் சேகர்.
அம்மா எத்தனை வற்புறுத்தினாலும் 
வெளியே செல்ல மாட்டான்.

சிந்தித்துக் கொண்டே அலுவலகம் வந்து விட்டான்.
உடனே ஏதோ ஒரு வழக்கு விஷயமாக வேலூர் வரை போக வேண்டி இருந்தது.

இரவு முழுவதும் காத்திருந்து ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆளைப்
பிடிக்க வேண்டும்.
சேகருக்கு முன்பே அவனது குழுவினர் சென்று விட்டிருந்தனர்.

தானும் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு,
விரைந்து சென்றான்.
வேலூரில் ஒரு குறிப்பிட்ட தெருவில்  அவனது குழுவினர் மஃப்டியில் 
இருந்தனர். அங்கிருந்த டீக்கடை ஒன்றில் 
சாதாரண உடை,லுங்கி, டி ஷர்ட் என்று உடுத்திக் கொண்டு
இவன் வருகைக்காகக் காத்திருந்தனர்.

தன் நண்பன் கதிர்வேலுவை மட்டும் அழைத்துச் சென்று

நிலைமையை விசாரித்துத் தெரிந்து கொண்ட சேகர்,
குற்றவாளி தங்கியிருந்த வீட்டுக்குப் பின்புறம் 
ஐந்து காவல்காரர்களைத் துப்பாக்கியுடன் அனுப்பிவிட்டு,
தானும் மற்ற இன்ஸ்பெக்டர்களுல் எதிரெதிரே இருந்த வீட்டு
தாழ்வரையிலோ ,திண்ணையிலோ, வாசலிலோ 
உலவியவாறு இருக்கும்மாறு கவனித்துக் கொண்டான்.

ஒரி துளி சந்தேகம் வந்தாலும் அந்தக் குற்றவாளி நொடியில் தப்பி
விடுவான்.
அடக்க முடியாமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போதுதான்,
தன்னையே பார்த்த வண்ணம், ஒரு உருவம் எதிர்வீட்டு மாடியில்
தெரிவதைக் கண்டு, 
அலட்சியமாகத் திரும்புவது போல தான் இருந்த வீட்டுக்குள் நுழைந்தான்.
 இருட்டுக்குள் சென்றதும்,  மொபைல் ஃபோனில்
தன் குழுவை உசார் செய்ய,
அடுத்து வந்த நிமிடங்கள் அங்கே கலவரம் பற்றியது.
சேகர் முதல் நாளே திட்டமிட்டுக் கொடுத்திருந்தபடி
அவன் குழுவினர், தங்கள் வேலையைக் கத்தியின்றி ரத்தமின்றி செய்து முடித்தனர்.

என் தம்பி சொல்வதுபோல ''கோழியை அமுக்கிப்'' பிடித்துவிட்டனர்:)

வேலை முடிந்து திரும்பும்போது அதுவரை பட்ட இறுக்கம் 
முதுகுவலியாக உருவெடுக்க
சேகரின் இதயத் துடிப்பு இமயத்தை எட்டியது வலியின் பரிணாமத்தால்.

தன் வீட்டுக்குச் சென்று இறங்காமல் அக்கா, லேகா வீட்டுக்கு வந்துவிட்டான்.
நல்ல வேளையாக அம்மா அங்கே இல்லை.

Wednesday, May 27, 2020

தேவகிக்கு விடுதலை எது.3

வல்லிசிம்ஹன் .

வளமுள்ள வாழ்வு இறைவன் தருவான்.
Image

தேவகிக்கு விடுதலை எது.

  ஒரு அன்னைக்கு  வேண்டியது அவள் பெற்ற செல்வங்களின் நலம் மட்டுமே.
அந்த வகையில்
அவள் இழப்பை சந்திக்க நேரிட்டது முதல் மகன்
தவறிய போது.
எத்தனையோ பாடுபட்டு மேல் படிப்பெல்லாம் படித்து  ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல விதமாகத் தன் உழைப்பை
20 வருடங்கள் தந்த நிலைமை. திடீரென்று வந்த அதிர்ச்சி இதய நோய்.
அன்று கூட அவன் வெளி நாட்டுக்குப் பயணமாகிக் கொண்டு இருந்தான்.

இடது கை விபரீதமாக வலிப்பதை ,சட்டை செய்யாமல்
நீவி விட்டுக் கொண்டே கிளம்பிய மகனை,
வைத்தியரை அணுகச் சொன்னது அம்மா தான்.
42   வயதில் நோயை நினைக்க அப்போது நேரம்  எங்கே இருந்தது.?
அம்மா, தன் வைத்தியரை வீட்டுக்கே வரவழைத்துவிட்டார்.

அவர் சொன்னதும் செய்ததும் அதிர்ச்சி கொடுத்தன.
சந்திரனை உடனே மருத்துவமனையி சேர்க்க வேண்டும்.
இரவு முழுக்க அவனுக்கு வலி இருந்திருக்கிறது.
என்று சொல்லித் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
அலுவலகத்துக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தம்பி சேகருக்கு வந்தது.
விஷயத்தைத் தெரிவித்து விட்டு
அண்ணன் இருந்த மருத்துவமனைக்கு  மற்றவர்களொடு
சென்றபோது,
அவன் உடனடி அறுவை சிகித்சைக்கு அழைத்துப் போகப்பட்டிருப்பது தெரிந்தது.

அதிர்ச்சியில் குடும்பமே மூழ்கியது.
சந்திரனும் மீண்டு வந்தான். எண்ணிப் பத்துவருடங்கள்
இருந்துவிட்டு இறைவனடி சேர்ந்தான்.

வைத்தியரின் எச்சரிக்கைப்படி அனைவரும்
உடல் நலம் பேணவேண்டிய அவசியம் தெரியவந்தது.
அம்மா நொடித்துப் போனாள்.
தன் மற்ற இரு செல்வங்களையும்  காக்க
அவள் தினமும் கடவுளிடமே சரண்., காலை மாலை,இரவு
எல்லா நேரமும் இறைத்துதிதான்.

தனக்கும் நோய் வந்த போது,
மேற்கொண்டு அதிர்ச்சிகளை எதிர்னோக்கும் சக்தி இல்லை
அவளிடம். அவள் நினைத்தபடி விடுதலை கிடைக்கவில்லை.
அந்தப் பூட்டுக்குத் தப்பும் பொழுது 72 வயதாகிவிட்டது அவளுக்கு.
இதோ இன்று தன்னைக் காக்கும் உத்தேசத்தில்

டாக்டர் செரியன் அனுப்பி இருக்கும் 35 வயது மதிக்கத்தகுந்த தாதியர்.
தான் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வருவதை அவளால்
உணர முடிந்தது.

முதல் நாள் ,இரவு சேகர் முதுகு வலியில் தவித்த போது
அவனருகே உட்கார்ந்து தனக்குத் தெரிந்த
வகையில் அவனுக்கு ஆறுதலாக இருந்தாள்.
தூங்கிவிட்ட மகனின் அருகில் விழித்திருந்து,
மருமகள் மனோவை எழுப்பிப் பார்த்துக் கொள்ளச் சொல்லித் தான் துயிலச் சென்றாள்.

''பயந்துட்டியாமா"" என்ற மகன் குரல் கேட்டே விழித்தாள்.
சிரித்த முகத்துடன் தன்னை எழுப்பிய மகனிடம்
இல்லையேப்பா, உன் வலிக்கு என்ன மருத்துவம் பார்ப்பது
என்றே யோசித்தேன். என்றாள்.
பிறகுதான் மகள் வந்து தன்னைப் பரிசோதனைக்கு
அழைத்துப் போக இருப்பது நினைவுக்கு வந்தது .

அதற்குப் பிறகு நடந்ததை நாம் பார்த்தோம்.

வந்திருக்கும் இரு பெண்களும்  கச்சிதமாக உடை அணிந்திருந்தார்கள்.

லேகாவின் மாமியார், மங்கிய கண்பார்வையில் அவர்களை  பார்த்தார்.
பக்கத்திலிருந்த தேவகி அம்மாவின் கரங்களை பற்றி,
''எல்லாம் நல்லதுக்கு கென்றே நினையுங்கள்.
யாரும் இல்லாத வீட்டில் உங்களுக்குத் பேச்சுத் துணைக்கு இப்போது ஆள் வந்தாச்சு'' என்று புன்னகைத்தார்.

தேவகிக்கு இந்த ஏற்பாடு உகப்பாக இல்லை.
''செரியன் என்ன சொன்னார் , எதற்கு இப்போது எனக்கு காவல்?''
என்று வினவினார்.

அம்மா முதலில் சாப்பிடலாம். உங்கள் மருமகன் கூட 
இதோ வந்துவிட்டார்' என்று வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டு சொன்னாள் .
'நினைத்த பொது நீ வரவேண்டும்...
நீல  எழில் மயில்  மேல் அமர்  வேலா..'
என்று நல்ல குரலில் பாடியபடி  வரும் மாப்பிள்ளையைக் கண்டு எழுந்து நின்றார்   தேவகி.

அட! அத்தை, சேகர்  ! எங்கடா இந்தப் பக்கம்.

என்ன இங்க ஒரு மாநாடு நடக்கிறதா என்று சிரித்தபடி அமர்ந்தான் 

சரவணன்.
சாப்பிட்டுக் கொண்டே பேசலாம், நீங்களும் 
வாங்க என்றதும்.
இதோ வந்தேன் என்று கைகால் கழுவப்  போனான் அவன்.


Image








.




Monday, May 25, 2020

தேவகியின் விடுதலை

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளம்  பெற வேண்டும்.
Image
தேவகியின்  விடுதலை 

அந்த மருத்துவமனையின்  படிகளில் ஏறிய 
லேகாவின் ஒரே  எண்ணம்  டாக்டர் செரியனின்  அலுவலகத்தை எட்டிப் பிடிக்க வேண்டும்  ,அனைவரையும் தாண்டி முதலில் அவரைப் பார்த்து விடவேண்டும்  என்கிற நினைப்புதான்.

ஒரு வினாடி அம்மாவும் தம்பியும் வருகிறார்களா என்று கவனித்தாள் .
ஆமாம் அம்மாவுக்கு சக்கிர நாற்காலி வந்துவிட்டது.

மிக அன்புடன் ஒரு நர்ஸ் அம்மாவை அதில் உட்கார வசதி செய்து கொடுத்தாள் .

தானே அம்மாவுடன் வந்திருக்கலாம். தம்பி அளவு பொறுமை கூடத்  தனக்கு இல்லையே   என்று  ஒரு க்ஷணம்  தோன்றியது.

தம்பி வைத்தியரைப் பார்க்கும் போது பயப்படுவான்.
லேக் , நீ  போடி, நான் அம்மாவுடன் வருகிறேன் என்பான்.
அதனால் தான் அவள் முந் திக் கொண்டாள் .

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இந்த டாக்டருடன் பழக்கம்.

சென்ற வருடம் அம்மாவுக்கு   முதல் இதய அதிர்ச்சி ஏற்பட்ட போதும் 
இவர்தான் மீட்டு வந்தார்.

அம்மாவின் மேல அவருக்கு அதீத பாசம்.  

ஒரு நொடி கூடத்தன்   நோயைப் பற்றி 
வருந்த மாட்டாள் . அவர் சொன்ன பத்தியம் மருந்து எல்லாம் ஒழுங்காக 

சாப்பிடுவாள்.

தான் இருந்த வீட்டைச் சுற்றி  தினம் 20 நிமிடமாவது நடப்பாள்.

ஒவ்வொரு மாத செக் அப் போதும்  டாக்டரின் நன் மதிப்பைப் பெற்றுப் பாராட்டப் படுவாள்.

சிந்தித்துக் கொண்டே   டாக்டரின்  அறைக்கு வந்துவிட்டால். 
வெளியே நோயாளிகளும் 
அவர்களுடன்  வந்திருக்கும்   மகனோ, மக்களோ,கணவனோ 
மனைவியோ   இவர்களால்  நிறைந்திருந்தது  அந்த பெரிய வராந்தா,.


இவள் தலையைக் கண்டதும் நர்ஸ்  சாரதா  சிரித்த முகத்துடன் தேவகி 
அம்மா வந்திருக்கிறார்களா?
அதிகம் காக்க வைக்காமல் டாக்டர் அவர்களைப் 
பார்க்க விரும்புகிறார் என்றாள் .

அதற்காகத்தான்  முன் கூட்டியே  அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டேன்  சாரதா. அம்மாவால் முன் போல உட்கார முடிவதில்லை என்று கவலையுடன் சொன்னாள்  லேகா.


இதற்குள் தம்பி  சேகரும்   அம்மாவுடன் வந்துவிட்டான்.

நீயும் டாக்டரிடம் சோதனை செய்து கொள்கிறாயா.
முதுகு வலி நேற்று அதிகம் இருந்ததே 
என்று வினவினாள்.

சேகர் முகம் சுளித்தான்.
அம்மாதான் முக்கியம்.  என் வலி ரெண்டு ப்ரூபென்  எடுத்துக் கொண்டால்  போய்விடும் நீ பெரிசு பண்ணாதே,.
நான் வெளியே போய்க் காத்திருக்கிறேன்.

கைப்பையில் இருந்த சிகரெட்  பெட்டியைத்  தேடியபடி 
அவன் வெளியே  நடப்பதை வேதனையுடன் பார்த்தவள்.

அம்மாவை டாக்டரின்  அறைக்குள் அழைத்துச் சென்றாள் .

முகமெல்லாம் புன்னகையாக   அம்மாவை வரவேற்ற டாக்டர்,
கொஞ்ச நேரம் அவளை சோதித்த பின்,

நல்லா இருக்கீங்கமா.  மகளை   என்ஷுர்   எனர்ஜி   பானம் வாங்கி கொடுக்கச் சொல்லுங்கள்.

அடுத்த மாதம் பார்க்கலாம்  என்றவருக்கு நன்றி சொல்லி விட்டு 
வெளியே வந்த  லேகாவிடம் , அவசரமாக வெளியே வந்த சாரதா,
டாக்டர் இன்னொரு மருந்து கொடுத்திருக்கிறார்,
நீங்கள் போய் அவரைப்  பாருங்கள் என்றதும்,
அம்மாவுடன் அவளை இருக்கச் சொல்லிவிட்டு அறைக்குள் 

நுழைந்த லேகா வைக் கடுமையாக   நோக்கினார் டாக்டர்.


அம்மாவை நீங்கள் சரியாக்க கவனிக்கவில்லை. அவள் இதய நிலைமை 
எனக்கு கவலையாக இருக்கிறது.

அவள் இருதய சிகித்சையை மறுத்துவிட்டாள்.
இப்போது 40 சதவிகிதம் அவள் இதயம் இயங்குகிறது.
மூச்சு  விடுவதில் சிரமம்  இருக்கிறது.

அவள் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள 
ஒரு   உதவியாளர் தேவை.
நம் மருத்துவமனையிலேயே     தாதிகள் இருப்பார்கள்.

நான் அனுப்பும் இருவரை   பகலுக்கு ஒருவர் ,இரவுக்கு ஒருவர் என்று 
வைத்துக் கொள்ளுங்கள்''
என்றதும் திகைத்துப் போனாள்   லேகா.

குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  வெளியே வந்து அம்மாவின் கைகளைப்  பற்றிக் கொண்டு 

வெளிவந்து அவளைத் தன்  வண்டியில் உட்கார வைத்துத் தம்பியைத் தேட , அவனும் வந்தான்.  எல்லோரும் கிளம்பினர் .

சி.பி.ராமசாமி சாலையின் நெரிசலில் வண்டியைத் திருப்பியபடி 

சேகரைப் பார்த்தவள். , டாக்டர் புது மருந்து சொல்லி இருக்கிறாரடா ,

அம்மா என் வீட்டில்   சாப்பிட்டுவிட்டு   
ஓய்வெடுக்கட்டும்,
நானும் நீயும் வாங்கி வந்துவிடலாம் 
என்றாள் .

கேசவப்பெருமாள்புரம் வந்ததும்    வீட்டு முன் வண்டியை நிறுத்தி அம்மாவை மெதுவாக அழைத்துச் சென்று, சோபாவில் உட்கார வைத்துவிட்டு,
காம்பிளான் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் .

அம்மா இதோ போய் வந்து விடுகிறோம். யசோதா உன்னுடன் இருப்பாள்.

இந்தா   இந்த வாரக்  கல்கி என்று  அம்மா கையில் கொடுத்துவிட்டு,
தம்பியை நோக்கினாள் .

நீ   மருந்து சீட்டைக்  கொடு நான் போய் வருகிறேன் என்றவனை இல்லப்பா,
எனக்கும் மருந்து வாங்கணும் நானும் வருகிறேன் என்று கிளம்பினாள். 

Image

தேவகி 

அம்மா தனக்குள் புன்னகைத்துக்  கொண்டாள் .
தன மகளுக்கு  சரியாக    நடிக்க வரவில்லை என்று 
நினைத்தபடியே  புத்தகத்தைப் புரட்டினாள் . 

நாளை பார்க்கலாம்.