Fiction லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Fiction லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 03, 2008

எழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி? - டிப்ஸ்

சர்வேசன் போட்டிக்கு வந்த நச்னு சில கதைகளைப் படித்தபோது பா. ராகவன் முன்பு பகிர்ந்ததை மீள்பதிவாக இட்டால், சிலருக்கு உபயோகம் ஆகலாம் என்னும் உரிமைதுறப்பு பணிவன்போடு:

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.


1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

(திண்ணை-யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 1 : ஆதவன் | 2 | 3)


13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.



எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:

நல்ல எழுத்துக்கு வேண்டியது - முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.

எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.

நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.

கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.

- சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' (சில பகுதிகள்)


Thinnai: "ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை :: சுந்தர ராமசாமி"

என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்...எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் -
அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.


முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.



கடைசியாக விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கும் சர்வேசன் வாக்கெடுப்புக்கு விளம்பரம்: சிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்

பழைய இடுகைகள் முகப்பு